ஓரு முற்போக்குவாதி காதலிக்கிறான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 26,070 
 
 

டெலிபோன் மணியடிக்கிறது.

நித்தியா நேரத்தைப் பார்த்தாள்.

இரவு பத்து மணியைத் தாண்டிக்கொண்டிருக்கிறது.

அது ‘அவனாகத்தான’; இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். ‘குட் நைட் சொல்ல எடுத்தன்’ என்று அன்பு வழியச் சொல்வான்.

அவள் டெலிபோனை எடுக்காமற் படுத்திருந்தாள். டெலிபோன் ஆறுதரம் அடித்தபின் ஆன்;ஸர் மெசினுக்குப்போகும்.

அவன்- குமார்-ஒருகாலத்தில் அவளது அன்புக்கும் காதலுக்கும் உரித்தாகவிருந்தவன்,இன்று அந்தப் பழைய உறவை வைத்துக்கொண்டு அவளுடன் தொடர்பை நீடிக்க யோசிப்பது அவளுக்குத் தெரியும்.

டெலிபோனில் என்ன சொல்லப்போகிறான்? ஆன்;சர்போனைப் போடுகிறாள்.

‘என்ன இரணடு மூணு நாளாக ஒரு மூச்சையும் பேச்சையும் காணல்ல,என்னில ஏதும் கோபமா? அல்லது நான் கேட்டது பிடிக்காட்டா அதை நேரே சொலல்லாம்தானே ஏன் டெலிபோனை எடுக்காமல் பிடிவாதம் பிடிக்கவேணும்?’

அவன் குரலில் ஆத்திரமா அல்லது,ஒரு நிமிடத்துக்குக் கொஞ்சம் கூடுதலான அந்த சம்பாஷணையில்,அவளுடன் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை வைக்கமுடியாத அவனின் ஆதங்கம் தொனிக்கிறதா?

அவளுக்குச் சாடையான எரிச்சல்; வருகிறது.

அதே நேரம், கீழ்வீட்டில் ஏதோ ஒரு பொருள் பட்டென்று விழுந்த சத்தத்தில் அவள் மட்டுமல்ல அடுத்த பிளாட்சில் இருப்பவர்களும் நித்திரை குழம்பி எழுந்திருக்கலாம்.

நித்தியா திடுக்கிட்டு எழுந்தாள்.என்ன நடந்திருக்கும்? யாரும் காயப் பட்டிருப்பார்களா?

மேல் வீட்டிலுள்ளவர்கள், கீழ்வீட்டில் உள்ளவர்களெல்லாம் அடுத்த பிளாட்டில் நடக்கும் பார்ட்டிக்குப் போயிருப்பார்கள் என்று நினைத்தால்,கீழ்வீட்;டில் இருப்பவர்கள் பார்ட்டிக்குப் போகவில்லையா? அல்லது யாரும் திருடனா?

நித்தியாவக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில்; ஒட்டிக்கொண்டது. காதை;தீட்டிக்கொண்டு கூர்ந்து மேலதிக சத்தம் வருகிறதா என்று கேட்டாள். கீழ் வீட்டில் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. அது கட்டாயம் திருடனாக இருக்க முடியாது,ஏனென்றால்,அந்த வீட்டுப் பூனையின் பெயரைச் சொல்லி யாரோ அழைப்பது கேட்டது.

ஏதும் கீழேவிழுந்துடைந்து யாருக்கும் காயம் வந்திருக்குமா?

அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.அவள் மாடிப்படியால் இறங்கவும் கீழ் வீட்டுக்காரன் தனது கதவைத் திறக்கவும் சரியாகவிருந்தது.

‘ஐயாம் சாரி, உனது நித்திரையைக் குழப்பியதற்கு மன்னித்துக்கொள்.’கதவைத் திறந்த கீழ்வீட்டுக்காரன், மிகவும் தாழ்மையுடன் சொல்லிக் கொண்டான்.

அந்த விடயம் நடந்து,மூன்று மாதங்களின் பின்:

‘அன்றைக்கு நான் தவறுதலாக வைன் போத்தலை உடைத்துக்கொண்டது மிகவும் அதிர்ஷ்டமான விடயம் என்று நினைக்கிறேன்.’மார்ட்டின் தனக்கு முன்னால் தர்மசங்கடத்துடன் அங்குமிங்கும் பார்த்தபடியிருக்கும் நித்தியாவிடம் சொன்னான்.

வாட்டர்லு பாலத்தருகேயுள்ள,தேம்ஸ்நதியை ஒட்டியிருந்த றெஸ்ட்ரோடன்ட் ஒன்றில் நித்தியாவும் மார்ட்டினும் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். நித்தியாவின் சினேகிதி எலிசபெத்தையுத் நித்தியாவையும் டின்னருக்கு வரச் சொல்லி மார்ட்டின் அழைத்திருந்தான்.எலிசபெத் கடைசி நேரத்தில் அவளுக்கு ஏதொ அவசர வேலையிருப்பதால்,தன்னால் இந்த டின்னருக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாள். நித்தியா. தங்கள் பிளாட்டின் இன்னொரு பகுதியில் குடியிருக்கும் மார்ட்டினுடன் வந்திருக்கிறாள்.

ஆவர்கள் அருகில் தேம்ஸ்நதி அமைதியாகத் தவழ்ந்துகொண்டிருந்தது.அந்த நதியில் பல தரப்பட்ட உல்லாசப் படகுகள் மட்டுமல்லாது. போலிசாரின் ரோந்துப் படகுகளும் போய்க்கொண்டிருந்தன. றெஸ்ட்ரோரன்ட்டில் மோஷார்ட்டின் பியானோ இசை காதுக்கு இனிமையாக இருந்தது.தேம்ஸ்நதியில் தெறிந்து விழுந்த நிலவு வெளிச்சம் ரம்மியமாகவிருந்தது.அவள் பார்வை தூரத்தில்- பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கும் பிரித்தானிய பாராளுமன்றக்கட்டத்தில் பதிந்திருந்தது.

‘எலிசபெத்துக்கு நீ என்னுடன் சாப்பிட வந்தது மிகவும் ஆச்சரியம் போலிருக்கிறது’ மார்ட்டின் நித்தியாவை உற்றுப் பார்த்தபடி சொன்னான்.

அவள் பதில் சொல்லவில்லை. மெல்லிய புன்முறுவல் அவள் முகத்திற் சாடையாக வந்து மறைந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்,அவன் லண்டனுக்கு வர முதல்,குமாருக்குக் கல்யாணம் ஆகமுதல்,கொழும்பில், கோட்டைப் பக்கமுள்ள ஒரு சாப்பாட்டுக்கடையில் குமாரைக் கடைசியாகச் சந்தித்தது ஏனோ ஞாபகம் வந்தது.

குமாரைச் சந்தித்த அன்று அவள் அழுதுவடிந்து மூக்கைச் சீறிக் கொண்டிருந்தாள்.அத இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன் நடந்தது. நித்தியாவுக்கு அப்போது இருபத்தைந்து வயது.

‘நான் யாரையோ கல்யாணம் செய்யுறது உனக்குப் பிடிக்காட்டா நான்,அந்தக் கல்யாணம்; வேண்டாம் என்று சொல்றன்’ குமார்; முணுமுணுத்தான்.

‘அப்படியெ செய்யுங்கள்’ என்று அலறவேண்டும்போலிருந்தாலும் அவள் தனது மனத் துயரை அடக்கிக்கொண்டு,’ ஐயையோ அப்படி எல்லாம் செய்யவேண்டாம். உங்கட தங்கச்சியின்ர எதிர்காலம் முக்கியமானது.என்னால அவளின்ர வாழ்க்கையில பிரச்சினை வரவேண்டாம்’ அவள் அவசரமாகச் சொன்னாள். அது பாதிப் பொய்,பாதிதான் உண்மை என்பது இருவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் இருவரும் கவுரமாக நடித்துக் கொண்டார்கள்.

‘ஆழ்கடல் வற்றினாலும் எனது அன்புக்கடன் வற்றாது,யார் தடுத்தாலும்,எங்கள் புனித காதல் அழியாது’ என்று ஆத்மீpகரீதியாகச் சபதம் செய்துகொண்டவர்கள், உலகம் பரந்த கோடிக்கணக்கான காதலர்கள்போல் பல காதற் பிதற்றல்களைக் கடந்த ஐந்து வருடமாக எழுதியம் பேசியும் பகிர்ந்துகொண்டவர்கள், அன்று அந்த சாப்பாட்டுக் கடையில், அவன் யாரோ இன்னொரு பெண்ணுடன் நடக்கும் அவனின் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘யார் தடுத்தாலும் உன்னை நான் கைவிடேன்’ என்று அவளுக்கு வாக்குறுதி கொடுத்தவன்,அன்று,’தயவு செய்து என்னை மன்னித்துவிடு.தங்கச்சிக்கும் எனக்கும் மாற்றுக்கல்யாணம் செய்ய பேசி வருகிறார்கள்.நான் இந்தக் கல்யாணத்தை மறுத்தால் எனது தங்கை தான் விரும்பும் கணவனைக் கை பிடிக்க முடியாது’ நித்தியாவின் அன்புக் காதலனான குமார் நித்தியாவுக்குத் தங்கையின் எதிர்காலம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

‘அப்படியானால் எனது கதி என்ன?’ என்று அலற நினைத்த நித்தியா அவன் தனது தங்கையின் பெயரை அழுத்தம் திருத்தமாக அடிக்கடி சொன்னபோது தனது தங்கைக்காக,நித்தியாவுக்குக் குமாரிலுள்ள காதலைத் தியாகம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்று அப்பட்டமாக விளங்கியது.

‘ நித்தியா,நிலவுத்துண்டுகளும்,லைட்டின் பிப்பங்களும்,அந்த தேம்ஸ்நதியின் நீரோட்டத்தில் எத்தனை மாயா ஜாலங்களைக் காட்டுகிறது என்று அவதானித்தாயா?இயற்கையின் அழகும் செயற்கையின் கலவையும் எப்படி ஒன்றாக இணைந்து அளவிடமுடியாத பிரமைகளையுண்டாக்குகிறது?’ மார்ட்டின் நித்தியாவுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவள் நினைவு பல வருடங்களைத் தாண்டி இலங்கையிலிருந்து லண்டன் சவுத்பாங் பிரதேசத்துக்குத் திரும்புகிறது.

‘நித்தியா உன்னை நான் முதற்தரம் எலிசபெத்துடன் பார்த்தபோது….’ மார்ட்டின் நித்தியாவுக்குச் சொல்ல வந்தததைச் சொல்லாமல் அவளின் முகத்தைக் கவனமாகப் பார்த்தான்.அவள் அவனின் நேரடிப் பார்வையை முகம் கொடுக்கச் சங்கடப் பட்டாள்.

;’சார், சாப்பாடு ஓர்டர் பண்ண ரெடியா?’றெஸ்ட்ரோரன்ட் வெயிட்டர் பணிவுடன் மார்ட்டினைக் கேட்டான்.

‘ஆமாம்..’ மார்ட்டின் மெனுவைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

‘எனக்கு வெஜிடேரியன் சாப்பாடு பிளிஸ்’நித்தியா மெனுவைப் புரட்டியபடி சொன்னாள்.

வெயிட்டர் பொறுமையுடன் அவர்கள் தரும் ஓர்டருக்காக் காத்திருந்தான்.

நித்தியாவின் சினேகிதன் மார்ட்டின் வதக்கிய மாட்டிறைச்சி,;,பொரித்த உருளைக் கிழங்கு, வெந்த மரக்கறிகள் என்று தனக்கு ஓர்டர் பண்ணினான்.

அவள் தனக்குக் கத்தரிக்காயும் சீசும் போட்டுச் செய்த கத்தரிக்காய் முஸாக்கா ஓர்டர் பண்ணிக் கொண்டாள்.

‘நித்தியா, நீ எப்போதும் வெஜிடேரியனா?’ மார்ட்டின் நித்தியாவைக் கேட்டான்.

‘என்னுடைய அன்பனாக இருந்த குமார் ஒரு பிறவிச் சைவம், அவனுக்காகத்தான் நானும் சைவமானேன்’ என்ற உண்மையை இந்த வெள்ளைக் காரனுக்குச் சொல்வதா?

அவள் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள். அது பொய் என்பது அவளுக்குத் தெரியம். அப்படிச் சொல்லாவிட்டால் ஏன் எதற்காகச் சைவம் ஆனாய் என்ற கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லம் மனநிலையில் அவள் இல்லை.

சைவ நிலை அவளின் சாப்பாட்டில் மட்டுமா?

குமார் இப்போது இரு குழந்தைகளுக்குத் தந்தை,அவள் அவன் நினைவில் இன்னும் கத்தரிக்காய் முஸாக்கா சாப்பிடும் வெஜிடேரியன்!.

குமார் இன்னும் இவளை ஏதோ ஒரு வித்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பது அவளுக்குத் தெரியாததல்ல.

‘என்னை ஏன் உன்னால் அடிக்கடி சந்திக்க முடியாதிருக்கிறது?’ என்று அவளிடம் அதிகாரமாகக் கேள்வி கேட்கிறான்.

பல வருடங்களுக்குப்பின் லண்டனிற் சந்தித்துக்கொண்டபோது,பழைய ஞாபகங்கள் முள்ளாய்க் குத்தின.

இலங்கை ஜனாதிபதி,சந்திரிகா குமாரதுங்காவின் தளபதிகள் தங்கள் பீரங்கிகளாலும்,ஷெல்களாலும் தமிழ்ப்பகுதிகளைத் துளைத்தெடுத்தபோது உயிரைக் கையிற் பிடித்துக்கொண்டு பல நாடுகளுக்கும் ஓடிய தமிழ் அகதிகளில் அவர்களும் சிலர்.

அவன்தான் முதலிற் தன் குடும்பத்துடன் லண்டனுக்கு ஒடிவந்தான். அவள் இலங்கையிலிருந்தகொண்டு, காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி என்று மனதுக்குகள் அழுத வடிந்து வருடங்கள் சில.

‘எப்படி முஸாக்கா..’ மார்ட்டின் அவளைக் கேட்கிறான்.அவள் நினைவு இன்னொரு தரம் நிகழ்காலத்துக்குத் தாவி வருகிறது.

சாதாரணமாக, கத்தரிக்காய்க் குழம்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும்.மேலை நாட்டச் சாப்பாடான கத்தரிக்காய் முஸாக்கா இவ்வளவு ருசியாகவிருக்கும் என்று அவளுக்கு இன்றுதான் தெரியும்.

‘மிகவும் நன்றாக இருக்கிறது’ அவள் உண்மையாகச் சொன்னாள்.

‘எதையும் ஒருதரம் அனுபவித்துப் பார்த்தாற்தான் தனிப்பட்ட அனுபவம் வரும்’ ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக மார்ட்டின் அதைச் சொன்னாலும் அதில் பெரிய கருத்து இருப்பது அவளுக்குத் தெரியும்.

இன்று மார்ட்டினுடன் சாப்பிட வந்தது குமாரின் பிடியில் தான் அடங்கி வாழப்போவதில்லை என்று அவனுக்குக் காட்டவா அல்லது அவள் தனக்குத் தன் வாழ்க்கையை எப்படிக் கொண்டு நடத்தவேண்டும் என்று தன்னைத்தானே திருப்தி செய்து கொள்ளவா?

மார்ட்டின் ஒரு ஆங்கிலேயன்,நேரடியாக எதையும் பேசுபவன். நேர்மையுடன் பழகுபவன்.

எலிசபெத் என்ற பெண்ணின் சினேகிதியாக நித்தியா அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து நித்தியா எலிசபெத்தின் வீட்டில் குடியிருக்க வந்தபோது,அவர்களுக்கு மேல் மாடியிலிருக்கும் இருஆண்களையும் அறிமுகம் செய்து வைத்த எலிசபெத், அவர்கள் ஹோமோசெக்சுவல்ஸ் என்று சொன்னாள்.அவர்கள் இருவரும் வயலின் வாசிப்பவர்கள் அடிக்கடி கச்சேரிகளுக்குச் செல்வார்கள்.

கீழ் வீட்டில் இருப்பவன் ஒரு சர்வகலாசாலை விரிவுரையாளன் என்றும் திருமணமாகாதவன் என்றும் எலிசபெத் சொன்னாள்.

எலிசபெத்தும், நித்தியாவும் ஒரு சிறிய கொம்பனியில் வேலை செய்கிறார்கள்.எலிசபெத் நீண்டநாட்களாக அந்தக் கொம்பனியில்,டைபிஸ்ட், நிர்வாகி, கணக்காளர் என்று பன்முகப் பொறுப்புக்களுடன் வேலை செய்கிறாள். எப்படியும் தான் ஒரு தனிக் கொம்பனி தொடங்கவேண்டும் என்ற சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

நித்தியா அந்த ஆபிசில் றிஸப்சனிஸ்டாக வேலை செய்கிறாள்.ஆரம்பத்தில் கொஞ்சம் தூரமான சினேகிதமாகவிருந்தவர்கள், ஒரு பிளாட்டில் சோர்ந்து வசிக்கும் அளவுக்கு நெருங்கிய சினேகிதமாகிவிட்டார்கள்.

நித்தியா,எலிசபெத்துடன் வந்து வாழும் வரைக்கும், நித்தியாவின் மாமாவீட்டிலிருந்து வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். அவரின் வீடு லண்டனுக்குத் தூரத்திலிருந்ததால்,நித்தியா ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்களுக்குமேல் பிராயணத்திற் செலவளித்தாள்.

‘எனது பிளாட்டில் ஒரு அறை காலியாகவிருக்கிறது வேண்டுமானால் வந்துபார்,பிடித்தால் நீ என்னுடைய பிளாட்டிலேயே தங்கலாம்’ எலிசபெத் சொன்னாள்.

வெள்ளைக்காரர்களுடன் வாழ்வதை நித்தியா தர்ம சங்கடத்துடன் முகம் கொடுத்தாள். ஆனால், எலிசபெத்துடன் வாழ்வது எத்தனையோ விடயங்களை அறிய உதவி செய்ததுடன் பலருடன் பழகவும் உதவியது.

கீழ் வீட்டிலிருக்கும் மார்ட்டினை,எலிசபெத் நித்தியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, ‘ஹலோ ஹவ் டு யு டு’ என்று ஒருத்தொருக்கொருத்தர் சொல்லிக் கொண்டார்களே தவிரப் பெரிதாக எந்த விதமான சம்பாஷணையும் அவர்களுக்குள் தொடரவில்லை.

தற்செயலாகக் கண்டால் குட்மோர்னிங், அல்லது குட் ஈவினிங் அவ்வளவுதான் அவர்களுக்கள் தொடர்ந்த சம்பாஷணை.

மூன்று மாதத்திற்கு முன், அந்த பிளாட்டிலுள்ள பலர், அடுத்த பிளாட்டில் நடக்கும் பார்ட்டிக்குப் போயிருந்தபோது, மார்ட்டின் அவனுடைய வைன் போத்தலையடைத்தபடியால் அவர்கள் தொடர்பு கொஞ்சம் நீண்டு, இன்று ஒன்றாகச் சாப்பிட வரும்வரை வளர்ந்திருக்கிறது.

அவள் நினைவுகள் எங்கேயெல்லாமோ அலைய, அவன் கத்தரிக்காய் முஸாக்கா எப்படி என்று கேடடவன்,இப்போது வேறு எதையோ கேட்கிறான்.

அடுத்த கிழமை,மார்ட்டின், எலிசபெத் ,மற்றும் சில நண்பர்கள் வாரவிடுமுறையில் லேக் டிஸ்ட்றிக் என்ற இயற்கைவளப் பிரதேசத்துக்குப் போகிறார்களாம். நித்தியாவும் வந்தால் அந்தப் பிரயாணம் சந்தோசமாக இருக்குமென்று சொல்கிறான் மார்ட்டின். அவர்கள் அத்தனைபேரும் ஒரு பிளாட்டில் வாழ்பவர்கள் ஒருத்தரை ஒருத்தர் தெரிந்தவர்கள். இயற்கைவளம் பார்க்கப் போகும் லேக் டிஸ்ட்றிக் என்ற இடத்தில் வசதியாக,சந்தோசமாக இருநாட்களைச் செலவளிக்கலாம். கலைஞர்களும் காதலர்களும் தேடிப்போகும் சொப்பனதேசம் அது.

‘உயர்ந்த மலையடுககுகளுக்கிடையில், மெல்லிய புகார் நடுவில் நெளிந்தோடும் சிறு ஆறுகளும் ஓடைகளும் கவிஞர்களின், ஓவியர்களின் கற்பனையில் புத்துயிர் பெறும் அழகிய காட்சிகள். மாணவனாய் இருந்தகாலத்தில் நாங்கள் அடிக்கடி அங்கே போயிருக்கிறோம்’ மார்ட்டின் ஏதோவெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

நித்தியா அப்படி ஒரு இடம்,இங்கிலாந்தில் வடமேற்குப் பிரதேசத்தில் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால் லண்டனுக்கு வந்து இத்தனை வருடமும் அவள் எந்தப் பகுதிக்கும் போனது கிடையாது. எலிசபெத்தின் தொடர்பும் அதைத் தொடர்ந்த வரும் புதிய அனுபவங்களும் நித்தியாவை ஒரு புது உலகுக்கு எடுத்துச் செல்கிறது.

சட்டென்று வந்த அப்படியான ஒரு புதிய வாழ்க்கைத் திருப்பத்திற்தான் அவள் குமாரைச் சந்தித்தாள். 1983ம் ஆண்டில் இலங்கையில், தமிழருக்கெதிராக, அன்றிருந்த அரசு ஏவிவிட்ட இனக்கலவரத்தால், நித்தியா தான் பிறந்து தவழ்ந்த கொழும்பு மாநகரை விட்டு ‘அகதி;யாக’ யாழ்ப்பாணம் போய் அங்கு ஒரு டியுட்டரிக்குப் படிக்கப் போயிருந்தபோது குமாரைச் சந்தித்தாள்.

அந்த இளம் வயதில்,தங்களை தாங்கள் பிறந்த நாட்டிலேயே அகதிகளாக்கிய சிங்கள இனவாத ஆட்சியில் பல்லாயிரம் தமிழ் இளம் வயதினர் மிகவும் ஆத்திரமாகவிருந்தனர்.

‘தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேராவிட்டால்,எங்களுக்கு விடிவுகாலம் கிடையாது’ குமார் மாணவர் கூட்டத்தில் ஆவேசமாக முழங்கினான்.அவன் பேச்சில், ‘தமிழர்கள் என்பதை விட எங்களுக்குள் எந்தவித பேதமும் கிடையாது.ஆண் பெண்,சாதி,சமயம்,படித்தோர்,படியாதார்,இளைஞோர்,முதியோர் என்ற எந்த Nவுறுபாடுமின்றி எங்கள் எதிரியான சிங்களவரை எதிர்க்க ஒன்றுபடுவோம்’ என்ற தீவிரம் கொழுந்து விட்டெரியும். அந்த ஆவேச நெருப்பில் விழுந்தவர்களில் நித்தியாவும் ஒருத்தி.

அவன் பேச்சில்,அவனுக்குத் தமிழில் உள்ள ஆர்வத்தில், அவள் அவனில் மதிப்பு வைத்தாள். அவன் தங்களை (பெண்களை) சமமாக நடத்துவது,தங்களுடன் அரசியல்பேசுவது எல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது.

அவள் குமாருடன் தமிழர் விடுதலை பற்றிய பல கூட்டங்களுக்குச் சென்றாள். இனவிடுதலையடைய முதல் எங்களுக்குள் நாங்கள் போட்டிருக்கும் பல அடிமைத் தளைகளையுடைத்தெறியவேண்டும் என்று அவன் முழங்கினான்.

அவனின் ஆவேசப்பேச்சில் அவள் பரவசப் பட்டாள்.அவனின் பேச்சில் யதார்த்மும் நியாயமும் இருப்பதாக அவள் நம்பினாள்.

அந்தக் கால கட்டத்தில் தமிழரின் விடுதலைக்காக முப்பத்தியாறு (??) இயக்கங்கள் தோன்றின.

பெண்களும் தாராளமாகக் கலந்துகொண்டார்கள்.

நித்தியா கூட்டங்களுக்குப் போவதை அவள் தாயார் விரும்பவில்லை. அதுவும் குமார் வந்து கூப்பிட்டதும் நித்தியா, ஆர்ப்பாட்டம் என்றும் பகிஸ்கரிப்புக்கள் என்றும் அலைவதை அந்தத் தாய் வெறுத்தாள்.

அவன் நித்தியாவைக் கூட்டத்து அழைத்துச் செல்ல வந்தபோது, நித்தியாவின் தாய்,’தம்பி, எப்பிடி இருந்தாலும் ஒரு குமர்ப்பிள்ளை கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு இளைஞனுடன் திரிவதை நாலு பேர் நாலுவிதமாகச் சொல்லுவினம்’ என்று முறைப் பட்டாள்.

குமார் நித்தியாவின் தாயின் மனக் கவலையைப் புரிந்துகொண்டான்.’ எங்கள் இருவருக்குமிடையில் தமிழர் விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி எத்தனையோ முற்போக்கான விடயங்களில் ஒற்றுமையிருக்கிறது. அதனால் நாங்கள் ஒன்றாகத் திரிகிறோம். அதேமாதிரி, எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய் இணைந்து வாழ முடிந்தால் அது எனது பாக்கியம் என்று நினைப்பேன்’ என்ற உணர்ச்சி ததும்பச் சொன்னான்.

அவன் அதை நித்தியாவுக்கும் சொன்னான்.

பண்ணைக் கடற்கரையிற் தவழ்ந்து,முனியப்பர் கோயிலில் முடங்கிப் பதுங்கிய இளம் தென்றல்,நித்தியாவைத் தடவி ‘உனது அன்பன் சொல்வதைக் கேட்க இன்மையாயிருக்கிறதா?’ என்ற ரகசியம் பேசியது. ஓரு சில வருடங்களாக ஒன்றாகப் பழகி அவளைப் புரிந்துகொண்டவன் அவளைத் தன் வாழ்க்கைத் துணைவியாக்க நினைப்பதை அவள் உணர்ந்து மிக மகிழ்ந்தாள்.

தனது ஆசையைத் தனது தாயிடமும் சொன்னான் குமார்.

நித்தியாவின் தாய் குமாரின் தாயைக் கண்டு மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்தபோது,’என்ன அவிழ்த்து விட்டமாடு மாதிரி ஊர்மேயுற உனது மகளுக்கு என் மகனை வளைத்துப்போடப் பார்க்கிறியளோ,’ ஒரு பொது இடத்தில் வைத்து,குமாரின் தாய் நாக்கில்லா நரம்பால் நிர்த்தாட்சண்யமின்றிக் கேட்ட கேள்வியால் நித்தியாவின் தாய் கூனிக்; குறுகிப் போனாள்.

‘குமார் உங்கட தாய் இப்படிப் பேசியிருக்கக்கூடாது. நாங்க யாரையும் வளைத்துப் பிடிக்க நினைக்கல்ல’ தனது கோபத்தைக் குமாரிடம் காட்டினாள் நித்தியாவின் தாய்.

குமார் தலையைக் குனிந்து கொண்டான். தனது தங்கைக்காகத் தன்னையொரு மாற்றுச் சடங்குக்குச் சரியென்று சொல்லச் சொல்லித் தனது தாய் கேட்பதாகக் குமார் தயக்கத்துடன் சொன்னான்.

அவனின் பேச்சு நித்தியாவைத் திடுக்கிடப் பண்ணியது. தங்கள் எதிர்காலம் பற்றி எத்தனையோ உறுதி மொழிகள் சொன்னவன் இப்படி நடந்துகொள்வதை அவளால் நம்ப முடியவில்லை. முற்போக்கான ஆவேசப் பேச்சக்கள் மேடைக்கு மட்டுமா, தனிப் பட்ட வாழ்க்கையில் அதெல்லாம் நடைமுறைக்கு அப்பாற்பட்டதா?

தனது வாழ்க்கையில் நடந்த திடீர்த்திருப்பத்தையுணர்ந்த அவள், அவனைப் புரிந்து கொண்ட தாக்கத்தால், அவனைக் காதலித்து அந்தக் காதல் தோல்வியானதுக்கு அழுவது கூட வெட்கமான விடயமென்று நினைத்தாள்.

அவள் கொஞ்ச காலம், தனது அறைக்குள் குறுகிப் போய்,நாட்களைக் கழித்தகால கட்டத்தில் அவன் புது மனைவியுடன் லண்டனுக்கு வந்து விட்டான்.

அவளும், அவளின் உயிரைப் பாதுகாக்க ஊரை விட்டு ஓடவேண்டிய நிலை வந்ததும் அவளின் மாமா ஒருத்தரின் உதவியுடன் லண்டன் வந்து சேர்ந்தாள்.

அப்போது அவன் இருகுழந்தைகளுக்குத் தந்தை என்று கேள்விப் பட்டாள்.

இருவரும் தற்செயலாக ஒரு நண்பனின் திருமண வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.

அவளுக்கு என்ன செய்வது என்ற தெரியவில்லை.அவனை ஒரு பாம்பு என்று விலகுவதா, அல்லது பழுதை என்று மிதிப்பதா? அவள் திக்கு முக்காடியபோது அவன் தானாக வந்து ஹலோ சொன்னான்

இரு நண்பர்கள் நீண்ட காலத்தின்பின் கணடுகொண்டமாதிரிச் சகஜமாகப் பேசினான்.

கல்யாண வீட்டைக் களேபரப்படுத்தி விளையாடிக்கொண்டிருந்த இருகுழந்தைகளையும் காட்டி, அவர்கள் எனது குழந்தைகள் என்றான்.குமாரையே உரித்து வைத்தமாதிரியான குழந்தைகள். அவர்கள் தனக்கும் அவனுக்கும் பிறந்திருக்கவேண்டிய குழந்தைகள் என்ற அவள் ஒருகணம் நினைத்து அந்தத் தாக்கத்தால் தர்மசங்கடப்பட்டாள்.

‘உங்கள் மனைவி யார் என்று அவள் கேட்கவில்லை. பட்டுச்சேலை மூட்டைகளாக, அளவுக்கு மீறிய தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு. அலங்கரிக்கப் பட்ட நத்தார் மரங்களாகக் கல்யாண வீட்டில்ப் பவனி வரும் பல பெண்களில் அவன் மனைவியும் ஒருத்தியாக இருக்கலாம் என்று அவள் நினைத்துக்கொண்டாள்.

எங்கேயிருக்கிறாய்?எப்படி இருக்கிறாய், ஏதும் படிக்கிறாயா அல்லது வேலை செய்கிறாயா என்று அவன் கேட்டபோது அவள் அவன் குரலிலிருந்த அன்பில் ஒருகணம் தடுமாறி முட்டாள்த்தனமாக அவளின் டெலிபோன் நம்பர், இருக்குமிடம் வேலைசெய்யுமிடம் என்ற பல விடயங்களைக் கபடமின்றி அவனுக்குச் சொல்லி விட்டாள்.

மார்ட்டினினுடன் வெளியிற் போய்ச் சாப்பிடப்போய்வந்த பின் நித்தியாவுக்குப் பல யோசனைகளால் நித்திரை வரவில்லை.

‘ஆண்களெல்லாம் பெண்பொறுக்கிகள் அல்லர், அவர்களிற் பலர் மிகவும் கவுரவமானவர்கள். மார்ட்டின் எங்களைச் சாப்பிடக் கூப்பிடுகிறான், நீயும் வரலாம்’ என்று எலிசபெத் சொன்னாள். ஆனால் கடைசி நேரத்தில் எலிசபெத் வரமுடியாதபடியால் நித்தியா மட்டும் சாப்பிடப் போனாள். மார்ட்டின் அவளின் பழைய வாழ்க்கையை ஞாபகப் படுத்தி விட்டான். அவள் நினைவில் குமார் வந்து அவள் தூக்கத்தைக் குழப்பிக் கொண்டிருந்தான்.

‘என்ன லைட்டைப் போட்டுக்கொண்டு கனவு காண்கிறாயா, அல்லது இரவிரவாகக் கண்விழித்திருப்பதாக யோசனையா?’ எலிசபெத் கேட்டாள்.நித்தியாவின் சிந்தனை அத்துடன் கலைந்தது.

நித்தியாவின் தமக்கை இரண்டு குழந்தைகளுடன் சுமாராக வாழ்கிறாள்.அவளின் தம்பி கொம்பியுட்டர் விடயங்களில் மகா சமத்து.அவனின் எதிர்காலம் பிரகாசமாகவிருக்கும் என்று அவள் நினைக்கிறாள்.

நித்தியாவின் எதிர்காலம்?

அவள் குமாருடன் அடிக்கடி பேசுகிறாள். அவளிடம் அவன் தனது குடும்பக் கஷ்டங்களையெல்லாம் சொல்லும்போது அவளுக்குத் தாங்காத சோகம் வந்தது. அவள் சேமித்திருந்த பணத்தில் கணிசமான தொகை அவனின் குடும்ப கஷ்டங்களுக்காக அவளாற் கொடுக்கப் பட்டது.

‘நான் எப்படியும் திருப்பித் தந்து விடுவேன்’ என்று அவளிடம் பணம் வாங்கும் ஒவ்வொரு தடவையும்; குமார் சொல்லவுமில்லை.

‘எப்படியும் எனது பணத்தைத் திருப்பித் தரப் பாருங்கள்’ என்று நித்தியா சொல்லவுமில்லை.

இப்போதெல்லாம், நித்தியாவின் மாத வருவாயில் ஒருபகுதியை அவன் எதிர்பார்ப்பது அவளுக்குத் தெரிகிறது.அவளுக்கு அப்படிக் கொடுத்துக் கொண்டிருக்க விருப்பமில்லை. தரமாட்டேன் என்று சொல்லத் தர்மசங்கடமாகவிருந்தது.

நித்தியாவின் நித்திரையின்மைக்குக் காரணத்தைக் கண்டு பிடித்த எலிசபெத்,’யார் இந்த மனிதன்’ என்று குடைய ஆரம்பித்தாள். நித்தியாவுக்குப் பொய் சொல்ல விருப்பமில்லை. எலிசபெத் நித்தியாவின் சினேகிதி. நேர்மையானவள்.

நித்தியா தனது பழைய கதையைப் புதிய சோகத்துடன் இணைத்துச் சொல்லி முடித்தாள்.

;

‘குமார் உன்னை வைப்பாட்டியாக வைத்திருக்கு யோசிக்கிறான் என்று நினைக்கிறாயா?’ ஒளிவு மறைவின்றிக் கேட்டாள் எலிசபெத்.

அந்தக் கேள்வியின் தாக்கத்தால் வெலவெலத்துப்போனாள் நித்தியா. தன்னை அந்த நிலைக்குக்கொண்டு வந்ததற்குத் தன்னைத் தானே மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

‘சில ஆண்கள்,தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக் கொள்வதும், பெண் உரிமை, சமத்துவம் என்றெல்லாம் முழங்குவது, பெண்களைக் கட்டிலுக்கு இழுத்துப் பாவித்து முடிப்பதற்கான சில தந்திரங்களில் ஒன்று என்று உனக்குத் தெரியாதா நித்தியா?’ எலிசபெத் நித்தியாவை நேரடியாகப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.

நித்தியாவுக்கு,இரண்டாவது தடவையாகக் குமார் தனக்கு வலை விரிப்பது ஆத்திரத்தையுண்டாக்கியது.

‘குமார் உண்மையானவனான, நேர்மையுள்ளவனாக இருந்தால் உன்னை எப்போதோ கல்யாணம் செய்திருப்பான் என்பதைப் புரிய முடியாமல், அவனிலுள்ள காதல் இன்னும் உன் கண்களை மறைக்கிறதா? அல்லது, உலகத்தைப் புரியாத முட்டாளப் பெண்ணா நீ நித்தியா?’ எலிசபெத் வெடித்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன செய்வது எங்கள் சூழ்நிலையும் கலாச்சாரமும் அப்படியாக்கி விட்டது.’ நித்தியா முணுமுணுத்தாள்.

‘ நித்தியா, உன்னில் உனக்கு மதிப்பு இருந்தால், உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கவனமாகப் பார்’

எலிசபெத் தனது சினேகிதிக்கு ஆலோசனை சொன்னாள்.

எலிசபெத் தனது எதிர்காலக் கணவன் எப்படியிருக்கவேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை நித்தியாவுக்புச் சொன்னாள்.

‘ மார்ட்டின் உனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவனாக இருப்பான எலிஸபெத்;’ நித்தியா சினேகிதியைக் குறும்புடன் சீண்டினாள்.

‘மார்ட்டினும் நானும் சனேகிதர்கள்…அவன் உன்னைப் பார்த்து மலர்வது தொயாத மாதிரி விளையாடாதே நித்தியா’எலிசபெத் அப்படிச் சொன்னதும் நித்தியா சற்று ஆச்சரியப்பட்டாள்.

மூன்று மாதங்களுக்கு முன் அவன் வைன் போத்தலையுடைத்த சத்தத்தால் கீழ் மாடிக்கு அதைப் பற்றியறிய வெளிக்கிட்டது அவளுக்கு ஞாபகம் வருகிறது.அதன் பின் பல சாட்டுக்களை வைத்துக் கொண்டு இவர்களின் பிளாட்டுக்கு மார்ட்டின் ஏறியிறங்கியதை நித்தியா அவதானிக்காமலில்லை.

எலிசபெத்தையம் நித்தியாவையும் தனது கல்லூரிக் கலைவிழாவுக்கு அழைத்தான். பின்னர் இருவரையும் தன்னுடன் டின்னருக்கு வரச் சொல்லியழைத்தான். எலிசபெத் ஏதோ காரணத்தால் வரமுடியாததால் நித்தியா தனியாகப் போகவெண்டிய சந்தர்ப்பம் வந்தது.

அதன் பின் அவன் நித்தியாவைக் கண்டதும் மலர்ச்சியாகப் பேசுவதும் பழகுவதும் நித்தியாவுக்குத் தெரியும்.

ஓருசில வாரங்களுக்கப் பின் நித்தியாவைக் குமார் சந்தித்தான்.’ஏன் பழையபடி இல்லை?’ என்று குறுக்கு விசாரணை செய்தான்.

‘இங்கிலிஸ்காரர்களுடன் சேர்ந்துகொண்டு கிளப் பார் என்று கூத்தடிக்கிறாயா?’ குமாரின் குரலில் ஏளனம்.

‘எங்கள் கீழ் வீட்டில் குடியிருக்கும் விரிவுரையாளருடன் அவரின் கல்லுர்ரி விழாவுக்குப்போனோம். நவீன நாடகம் பார்க்கப் போனோம்… டின்னருக்கும் போனேம்’

குமாரின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் அடுக்கிக் கொண்டு போனாள் நித்தியா.

‘நாங்கள் தமிழர்கள் கண்ணியமாப் பழக வேணும்’குமார் வெடித்தான்.

எது கண்ணியம்?

காதலக்கிறேன்,கல்யாணம் செய்வேன் என்ற உறுதிகளைக் காற்றில் விடுவதா?

வீட்டுக்கு வெளியே வரும் பெண்களை விளக்கேற்ற உதவாதவர்கள் என்று விலக்கி வைப்பதா?

சுவையற்ற அவனின் கல்யாண வாழ்க்கையில் சுவை கூட்ட,அவளின் உடலையும் உடம்பையும் தனதாக்கிக் கொள்ள அவன் நினைப்பதா?

அவளுக்கு ஆயிரமாயிரம் கேள்விகளை அவனிடம் கேட்கவேண்டும்போலிருந்தது. ஆனாலும் அவனுடன் தேவையில்லாமல் மோத விரும்பவில்லை. அவன் அவளின் முகபாவத்தை அளவிட்டதும் பேச்சை மாற்றினான்.

தான் படித்த படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால், குடும்பத்திற்காகத் தனக்குப் பிடிக்காத வேலையில் மாரடிப்பதாகச் சொன்னான்.

அவள் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனின் ‘குடும்ப கஷ்டத்திற்கு’ அவள் ஒன்றும் கொடுக்கவில்லை.

அடுத்த கிழமை நித்தியா தனது சினேகிதர்களுடன் லேக் டிஸ்ட்றிக் போவதாக இருந்தது.

அப்போது குமார் போன் பண்ணினான்.

ஆங்கிலேயர்களுடன் அடிக்கடி வெளியிற் திரிவது தெரிந்தால் பலர் கண்டபாடடுக்குப் பேசுவார்கள். அதனால் நித்தியாவுககுக் கல்யாணம் நடப்பது கஷ்டமாகவிருக்கலாம் என்று அனுதாபத்துடன் குமார் சொன்னான்.

அவள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

எலிசபெத்தின் வீட்டிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கினால், நித்தியாவை வந்து பார்க்க வசதியாகவிருக்கம் என்று குமார் குழைந்தான்.

குமார் என்ன சொல்கிறான் என்று நித்தியாவுக்க அப்படமாக விளங்கியது. பதில் சொல்லாமல் மழுப்பி விட்டாள்.

;மார்ட்டின் உன்னில் விருப்பமாக இருக்கிறான். தன்னைத் திருமணம் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டால் என்ன பதில் சொல்வாய்’ எலிசபெத் நித்தியாவைக் கேட்டாள்.

‘குமாரின் தாய் மாதிரி மார்ட்டினின் தாயும் இருக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம்?’ நித்தியா குழப்பத்துடன் கேட்டாள். எலிசபெத் தனது சனேகிதியை அணைத்துக் கொண்டு சொன்னாள்,’ ஆங்கிலேயர்கள் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையில்,தனிப்பட்ட விடயங்களில் தலையிடுவது கிடையாது என்று உனக்குப் புரிந்தால் உனது குழப்பம் போய்விடு;ம்’.

அன்றிரவு குமார் போன் பண்ணினான்.நித்தியா தனி வீடு எப்போது எடுக்கிறாள் என்று கேட்டான்.அவன் நித்தியாவுடன் ‘பழகுவதைத்’ தன் மனைவி தடுக்கமாட்டாள் என்று சொன்னான். நித்தியா தனது ‘பழைய சினேகிதி’ என்று மனைவிக்குச் சொன்னதாகப் புழகினான்.;

எலிசபெத் சொன்னது சரி, குமார்,நித்தியாவுக்கும் அவனுக்குமுள்ள பழைய உறவை முதலாக வைத்து அவளை வைப்பாட்டியாக்கி அவளின் உடலையும் உழைப்பையும் உறிஞ்சப் போகிறான்.!

நித்தியா குமாருக்குப் பதில் சொல்லாமல் ஆத்திரத்துடன் போனை வைத்தாள்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *