ஒற்றைத் தென்னை மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 3,052 
 
 

காதலனால் கைவிடப்பட்ட காதலி; காதலுக்காக சிறைவாசலில் உண்ணாவிரதம் இருந்த காதலி; காதலனால் உயிர் நீத்த காதலி; இப்படித்தான் காதல் விவகாரங்கள் நடந்துவருகின்றன.

இருக்கும் வரை அனுபவி; கிடைக்கவில்லையெனில் விட்டுவிடு என்பது பலரின் கருத்து.

இந்தக் கருத்துக்கு முரணான காதலிது!

சென்னையில் அது ஒரு பிரபலமான மருத்துவமனை. 27 வயது இளைஞனை படுக்கையில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். நண்பர்களின் கதறல் ஒலி மருத்துவமனையையும் தாண்டி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தலையில் பலத்த அடி, ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அடையாறு மேம்பாலத்தில் தான் இந்தக் கார்விபத்து நடந்தது.

“டாக்டர்..டாக்டர்” நண்பர்களின் அலறல் சத்தம்.

விபத்து நடந்த இடத்தை காவலர்கள் சோதனை செய்துகொண்டு இருந்தனர்.

“டாக்டர்! இந்தக் கடிதத்தப் பாருங்க” சிகிச்சையளித்ததும் காவலர் ஒருவர் காண்பித்தார்.

இது…

விபத்து நடந்த இடத்துல கிடந்துச்சு.

“எனக்கு ஏதாவது என்றால் என் காதலிக்கு முதலில் தெரியப்படுத்துங்கள்” அவளின் முகவரி அந்த வாசகத்தின் கீழே அச்சடிக்கப்பட்டிருந்தது.

யார் அந்த காதலி?

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் அரசு மருத்துவமனையில் நர்ஸ் ட்ரைனிங் ஆக இருந்தவள் தான் கற்பகம். உடல்நிலை சரியில்லாமல் திருமேனி அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனை அக்கரையோடு கவனித்தாள். நட்பும் அதிகமானது.

ஏழுநாள் பழக்கம். குணமாகி வீட்டுக்கு வந்தவன்; குமரியின் நினைவால் வாடினான், வதங்கினான்.

“கற்பகம்… கற்பகம்…” இவனது உதடுகள் அவளின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தன.

கடிதங்கள் மூலம் நட்பு தொடர்ந்தது. காணாமலேயே கடிதங்கள் மூலம் பேசிக்கொண்டனர். திருமேனியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறான். அவளும் பயிற்சி முடித்து தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறாள்.

நட்பு காதலானது. ஆசைகள் ஆசைகள் அதிகமானால் முடிவுகள்…எதிர்பாராதவை தானே!

இருவராலும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தை வழிகாட்ட வேண்டியவன் மங்கைக்காக காத்துக்கொண்டிருந்தான்.

ஆண்டுகள் ஐந்தைக் கடந்தது. கடிதமூலம் பேசிக் கொண்டவர்களுக்கு கண்களால் பேசிக்கொள்ள முடியவில்லை.

இவளும் அவனை வரச்சொல்லவில்லை. அவன் வரச் சொல்லியும் இவளுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. நாட்கள் ஒவ்வொன்றும் முட்களை தூவிக்ககொண்டு இருந்தன.

அவனது கண்கள் வீட்டுச்சுவரை நோட்டமிட்டன. அந்தச் சுவரின் மையத்தில் கடிதத்தில் எழுதப்பட்ட வாசகத்தை முகவரியையும் அவனது கைகள் வரைந்தன.

கடிதம் பரிமாறி பிறகு தொலைபேசிமூலம் பேசிக் கொண்டனர். தீவிரமான அன்பினால் இவன் நொந்து போயிருந்தான்.

“என் தம்பி எங்களுக்கு இல்லை. உயிர் உன்கிட்டதான். சாவு மணி ஓசை எங்கள் நெஞ்சில் வார்த்தைகளை உதிர்க்க முடியாமல் திருமேனியின் அண்ணன் அவளிடம் தொலைபேசி மூலம் பேசினார்.”

புலம்பினாள்; வாடினாள்; வதங்கினாள்!

சந்திக்க வேண்டாம் என எண்ணிய அந்த சலங்கை அவசரமாக புறப்பட்டாள். திருமேனியின் கண்கள் பேருந்து நிலையத்தை சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. பேருந்தை விட்டு இறங்கிய பெண்ணவளின் கண்கள் ஆவலோடு சுழன்று கொண்டிருந்தன.

அடையாளம் தெரியாமலேயே விழிகளின் மொழிகள் பேசிக்கொண்டன. “திருமேனியவளா” தெருக்களைக் கடந்த பொழுது ஊர் மக்களின் உதடுகள் வாழ்த்திக் கொண்டிருந்தன.

வீட்டுக்குள் நுழைந்தவள் சுவற்றில் வரையப்பட்ட எழுத்து சித்திரத்தால் அதிர்ச்சியுற்றாள். அதே கணம் மகிழ்ச்சியுற்றாள்.

“இணைவோமா” அவளுக்குள் சந்தேகம். அழத் தொடங்கினாள். அவனோ கண்களால் ஆரத் தழுவினான். ஏன் இணைய முடியாது?

சாதி அவர்களுக்கு சதி செய்கிறது. சுதி சேரவிடாமல் தடுப்பது அவளின் பாட்டியும் சித்தியும் தான்.

மன்னவன் வீட்டில் சம்மதம். பெண்ணவள் வீட்டில் தான் மவுனம்.

“இரந்து கிடந்தாலும் இனத்தானுக்குள் தான் இரந்து கிடக்கனும்”

பாட்டியும் சித்தியும் அவளுக்கு சொல்வது இது தான். அவளின் தாய் ஏற்றுக்கொண்டு என்ன பயன்?

பிறகு என்ன?

அவளை வளர்த்து ஆளாக்கியதே அவர்கள் இருவரும் தானே.

அவர்களை விட்டுப் பிரிய மனமில்ல. இவனையும்…. “ஓடிப்போய் மணந்து கொள்ள இருவருக்கும் மனமில்லை”

“என்னை மறந்துவிடு….” மனசக்குள் மறக்காதே என்று மறைமுகமாக பெண்ணவளின் உதடுகள் உச்சரித்தன.

உதட்டின் உச்சரிப்பை இவனது இமைகள் நிராகரித்துக் கொண்டு இருந்தன.

கண்கள் யுத்தம் புரிந்து விட்டு முகவரியை மாற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றவள். ஆண்டுகள் இரண்டு ஆகியும் கடிதத் தொடர்பும் இல்லை.

“டாக்டர்! அந்தக் கடிதத்தைக் கொடுங்க” நர்ஸ் ஒருவரின் உதடுகள் உச்சரித்தன.

கடிதத்தைப் படித்தவள் திருமேனியின் திருமுகத்தை உற்று நோக்கினாள். அந்த வாசகத்தின் கீழே இவளது பெயரும், பழைய முகவரியும் எழுதப்பட்டிருந்தது.

“மணந்திருந்தால் ஓராண்டுக்குள் பிரச்சினையெல்லாம் சகசநிலைக்கு வந்திருக்குமே!” உள்ளம் எண்ணுவதற்குள் கன்னம் சிவந்தது. கண்கள் மழையாக பொழிந்தன. அவனது உடலை இறுகப்பிடித்துக்கொண்டு கதறினாள். ஆம். இவள்தான் அவன் காதலி கற்பகம். கதறி என்ன பயன்?

அவளின் கதறல் ஒலியை கேட்கும் முன்னரே அவன் கால உறக்கத்திற்கு சென்றுவிட்டானே.

அப்போது புயல்காற்று வீசியதில் மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த இரட்டை தென்னை மரத்தில் ஒன்று தானாகவே ஒடிந்து விழுந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *