ஒரு வட்டத்திற்குள் சுழலும் பல கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,095 
 
 

நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேனா நீ என்னை வரவழைத்திருக்கிறாயா? இப்போதும்கூட இக்கேள்வியின் புதிர் அவிழ்க்க முடியாத முடிச்சைப் போலிருக்கிறது. உன்னருகில் நிற்பதும் உனது வீட்டு வாசற்கதவை உரிமைப்பட்டவனைப் போலத் திறந்து வருவதும் வெளியேறுவதும் எதன் பொருட்டு? எந்தப் புதிரின் சூட்சுமம் எனத் தெரியவில்லை. கேள்விகள் தாம் எத்தனை விதமானவையாக இருக்கின்றன. நமக்கான பதில்கள் யாவையும் ஒன்று தானே? உனது நொம்பலத்தின் புரிதலற்றவனாக வாசற்கதவை மூடி வந்திருப்பதாக நீ நினைத்துக்கொண்டிருக்¢கிறாயா? நூறு பேரின் கண்கள் உன்னைத் தொடர்வதுபோலத்தான் என்னையும் துரத்துகின்றன. எனது வழியாக உன்னைப் பற்றிய கேள்விகளுக்கான, ஐயங்களுக்கான பதிலை அடையவும் இல்லை. எனது வழியாக உன் இருப்பிடம் வந்தடையவும் துரத்துகின்றன. எதற்காக எனக்கு இந்த அடையாளம்? என்னை நீ நிராகரித்துப் புறந்தள்ளும்போதெல்லாம் எத்தனையெத்தனை கட்டுக் கதைகளைப் பிறப்பித்து அவிழ்த்து விட்டிருக்கிறேன். ஒரு வட்டத்திற்குள் உன்னைப் பற்றிய பல கதைகளைச் சுழலவிடுகிறேன். கதைகளும் தெருவில் நடமாடும் மனிதர்களைப் போலத் திரிகின்றன. துரதிருஷ்டவசமாக அக்கதைகள் என்னையும் சுழலில் சிக்கவைத்துவிட்டன.

உனது கண்ணீர் நிஜமானதுதானா? எனது கேள்விகளுக்கும் உனது கேள்விக்கும் பதில் சொல்வதற்குத்தானா இந்தக் கண்ணீர். இல்லை உனது கண்ணீர் பொய்யா? எனக்குத் தெரியவில்லை. ஸ்படிக உருண்டை ஒளியென உனது கண்ணீர்ச் சொட்டு இமை முடியின் கீழ்த் திரண்டு நிற்கிறது. அத்துளியை முத்தங்களால் ஒற்றியெடுத்துக் கொள்ள நீ அனுமதிக்க வேண்டும். உனது சருமத்தின் நறுமணம். உனது அடர்கூந்தலின் கறுப்பான திரவ வாசனை. அவ்வாசனை எதுவென்று தெரியவில்லை. உன்னில் அறிய முடியாதவற்றில் அதுவும் ஒன்றாகவுள்ளது. தொட முடியாத வகையில் உனது சருமத்தைப் போலத் தூரத்திலிருக்கிறது அந்தக் கண்ணீர்.

குக்கலின் லொள்லொள் கதவை உடைத்து அறையுள் புகுகிறது. தெரு கடக்கும் வாகன ஒலி கதவு இடை வழிவரை வந்துகிடக்கிறது. நீ எப் போதும்போல அமைதியாக இருக்கிறாய். எனது அவசரத்தை வேடிக்கை பார்க்கிறாய். என்னை நீ புரிந்து வைத்திருப்பதுபோல உன்னைப் புரிந்துகொள்ள முடியாதது எனது துரதிருஷ்டங்களில் ஒன்றாக இருக்கிறது. வழக்கம்போல உனது கவன மின்மை போன்ற பாவனையும் என்னைக் கண்டுகொள்ளாதது போன்ற நடிப்பும் என்னைத் துரிதப் படுத்துகின்றன. என்னைப் பதற்றத்திற்கு ஆளாக்குகின்றன. நீ எனக்கு மறைமுகமாகக் காட்டிச்செல்வது எனது பார்வைக்குத்தானா என்பது தெரியவில்லை. நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். உனது பாவனைகளையும் நடிப்பையும் புரிந்துகொண்டு உன்னைப் பின்தொடர்கிறேன்.

இமைக்காமல் மேகங்களின் நகர்தலையும் கண் நட்சத்திரங்களின் மினுக்கலையும் வேடிக்கை பார்க்கிற தெரு நண்பர்களுக்கு மத்தியில் என்னை எதற்காக அன்று அழைத்தாய். அன்றிலிருந்து சூன்யம் கொண்டவனைப் போல உன்னைப் பின் தொடர்கிறேன். எதற்கு இந்த அலைச்சல்? எதற்காக இந்த வேட்கை? உனது நோய்களையும் நொம்பலங்களையும் எனக்குப் பரிமாற்றம் செய்வதற்காக அன்று அழைத்தாய். குளிரூட்டப்பட்ட இந்த அறையில் கண்ணாடி டம்ளரில் நிரப்பித் தந்த பழச்சாறின் ருசி குடிக்காமலேயே எனது நாவில் ஊறுகிறது.

எனது துரிதம் எனது வயது எனது ஆவேசம் எனது பதற்றம் எனது புரியாமை எனது பொறுப்பற்ற தன்மை இன்னும் எனது எனது உனக்குள் நுழைந்து வெளியேறிவிடவும் உனக்குள் அமிழ்ந்துவிடவுமாகப் பெருக்கெடுக்கின்றன. நீயும் உனது செயலும் என்னைக் கண்காணிப்புக்கு உள்ளாக்குவதாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். கண் காணிப்பின் இரகசியக் கண்கள் கூர்மையான ஆயுதம்போல எனது அந்தரங்கத்தைத் துளைக்கின்றன. துளைப்பதில் சுகங்காணுகின்றன எனது உடலும் மனமும். தீர்வுகாண இயலாத கணக்கின் படிநிலைகளைக் கொண்டதாக மாறுகிற விளையாட்டுதானா இது? யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாத சமநிலையில் தயக்கம் எதுவும் இல்லை. பிடிவாதமான இரண்டு முரட்டுக் குதிரைகளை ஒரே வண்டியில் பூட்டிப் பயணிப்பது போன்ற கிலி. வெவ்வேறு பயணங்கள். வெவ்வேறு திசைகள்.

உன்னை எதிலிருந்து தொடங்க வேண்டுமென்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீ என்னைத் தொடங்குகிறாய். உன்னால் மட்டுமே முடிக்கக்கூடிய விளையாட்டை என்னிடம் தொடங்குகிறாய். நான் அந்த விளையாட்டின் பார்வையாளனைப் போலப் பரிதாபமாக மைதானத்தினுள் நின்றிருக்கிறேன். நாம் அந்தக் கணத்திலிருந்து ஒரு விளையாட்டைத் தொடங்குகிறோம். ஆரம்பத்தில் இரவுகள் பயங்கள் நிறைந்தவையாக இருந்திருக்கின்றன. அவை துரதிருஷ்டங்களாக இருந்திருக்கின்றன. சிலவேளைகளில் எனக்கு இரவுகள் அதிர்ஷ்டங்களாக இருந்திருக்கின்றன.

“உனக்கு வயது எவ்வளவு?” இது தானே நீ என்னிடம் கேட்ட முதல் கேள்வி. அன்று நீதான் முதலில் என்னிடம் பேசினாய். நண்பர்களுடன் தெருவில் கோடைக்கால மேகங்களையும் நட்சத்திரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் நீ என்னை அழைத்தாய். பெயர் சொல்லி அழைத்த விதமோ உனது அழைப்பிற்குக் காத்திருந்த ஏக்கமோ உடனே வந்துவிட்டேன். உனது வீட்டின் மாடியில் விழுந்து கிடந்த தேங்காய்களையும் தென்னையோலைகளையும் அகற்றுவதற்காக வந்திருந்த பணிப்பெண்கள் கூடை நிறையக் குப்பைகளை அள்ளிக் கொண்டுபோனார்கள். வீட்டின் பின்பக்கமாக இருந்த மாடிப்படியை ஒட்டி சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கிணற்றுப்பக்கமாக எனது பார்வைக்கு மூன்றோ நான்கோ தென்னை மரங்கள் தெரிகின்றன. கிணற்றைக்கூட நான் எட்டிப்பார்க்கிறேன். நீ என்னிடம் வந்து, “ஜாக்கிரதை. தவறிவிழப் போகிறாய். கீழே கிணறு இருக்கிறது. கைப்பிடிச் சுவரை நம்பி எட்டிப் பார்க்காதே. ஜாக்கிரதையாக நில்” என்று சொல்லியது எனது ஞாபகத்தில் இருக்கிறது.

குப்பையைக் கொட்டிவிட்டு வந்த பெண்கள் திரும்பவும் மாடிப் படியேறுகிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கிறேன். உடம்பைப் பார்க்கிறேன். செருகி முடிந்திருந்த சேலையையும் இடுப்பையும் வயிறு தெரிகிறதையும் பார்க்கிறேன். ஆனால் உன்னைப் பார்க்க முடியவில்லை. உன் பின்பாக நடந்து வருகிறேன். உனது கண்களோ உனது முகமோ உனது சொல்லோ உனது ஆகிருதியான திரேகமோ என்னைப் பயமுறுத்துகிறது. ஆனால் மனம் ஆர்வத்தில் அலைவதையும் தவிக்கிறதையும் நீ புரிந்துகொண்டவளைப் போல என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறாய். நாம் மாடிப்படியேறுகிறோம். நாம் இருவரும் அப்போது வானத்தின் கீழ் நின்றிருப்பது போன்ற உணர்வில் நான் பறந்துகொண்டிருக்கிறேன். மாடியில் சுத்தம்செய்யப்பட்ட ஒரு பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் மாடியின் தளத்தில் விழுந்துகிடக்கும் தென்னோலைகளையும் தேங்காய்களையும் கூடையில் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். வளைந்த தென்னைகள் மாடியின் கைப்பிடிச் சுவரையும் மாடியின் தரைத்தளத்தையும் உரசிக் கொண்டிருக்கின்றன. எதற்காக அழைத்தாய்? நான் என்னசெய்ய வேண்டும். இப்போது என்னசெய்து கொண்டிருக்கிறோம் என்று எதுவும் தெரியவில்லை. புதிரான விளையாட்டின் தொடக்கம்போலிருந்தது அப்போது. இறுதியில் கண்களில் கட்டிவிட்டிருந்த துணியை விலக்கிவிட்டதுபோல இரண்டு மூன்று தேங்காய்களை எடுத்து என்னிடம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ என்று சொன்னதும் என்னால் சுவாசத்தின் சீரான இயக்¢கத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆர்வம் வடிந்து பலவீனமான உடலோடு திரும்பினேன். என் நண்பர்கள் மத்தியில் அன்று செயற்கையான அந்தஸ்து தரப்பட்டதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உன்னைப் பற்றிய கதைகளை வீதிகளில் அதற்குப் பிறகுதான் உலாவவிட்டேன். சின்னஞ்சிறிய கதைகளைத் தொடர்ந்து பெரிய கதைகளைப் பின்னியெடுத்து உலவவிடுவதற்கு உனது வீட்டு மாடிப்படியும் மாடியும் அதைவிட என்னை நீ பெயர் சொல்லி அழைத்ததும் கூடுதலாக எனக்குத் தேங்காய்கள் தந்ததும் போதுமானவையாக இருந்தன.

எனக்குத் தந்த குளிர்ந்த பழச்சாறைக் குடிக்கிறேன். நீ உனது கையால் இதே கண்ணாடி டம்ளரில் இதே பழச்சாறை எத்தனைமுறை எனக்குத் தந்திருக்கிறாய். என்னை ஆசுவாசப்படுத்தியிருக்கிறாய். சற்றும் எதிர்பாராமல் உனது கரங்களால் என்னை அடித்திருக்கிறாய். அடி வாங்கிய பின்பு ஒரு நோயைப் போலத் திரும்பவும் அடிப்பதற்கு எனது உடலை உனக்குக் காட்டுகிறேன். பழக்கப்பட்ட சாந்த சுபாவம் கொண்ட விலங்கைப் போல உன்னைத் தொடர்கிறேன். நீ புறக் கணிக்கிறாய். இந்தப் புறக்கணிப்பு நிரந்தரமல்ல என்பதாகக் கற்பனை செய்துகொள்கிறேன். தற்காலிகமாக நீ என்னை வெறுக்கிறாய். நான் உனது வீட்டின் பின்பகுதியிலுள்ள மாடிப் படியில் ஏறி அங்கு விழுந்து கிடக்கும் தேங்காய்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன். யாரிடமும் அனுமதி பொறாமல் வாசற்கதவைச் சத்தத்துடன் இழுத்து மூடிவிட்டுத் தெருவில் நடக்கிறேன். தெருமுனை திரும்பி மிகவும் தைரியமாகப் பார்க்கிறேன். மாடியில் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்¢கிறாய். நான் அதைப் பார்த்தும் பார்க்காமல் தெருவைக் கடந்து நடந்துகொண்டிருக்கிறேன்.

மற்றொருமுறை என்னுடன் பேசுவதற்காக நீ தயாராக இருந்து கொண்டு என்னை அழைத்தாய். நானும் படியேறி வந்தேன். ஒரு பூனையைப் போல எனது மனம் பதற்றத்துடன் இருந்தது. உனது திரேகத்தின் சொரூபத்தால் மயக்கமுற்று மிதந்தலையும் இறகாக இருந்த சமயம் அது. என்ன செய்வது என்ற புரியாமை. அவிழ்த்துவிட்டதும் பறந்தோடுகிற பறவையைப் போன்று உன்னருகில் நிற்கிறேன். நீயோ நடந்து முடிந்துவிட்ட பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அதற்கான பொறுப்புகளை என்மீது சுமத்துவது போன்ற பாவனையில் பேசிக்கொண்டிருக்கிறாய். உனது வீட்டைப் பற்றியும் உன்னைப் பற்றியும் எனது கதைகள் வீதிவிட்டு வீதி பரவாமல் தடுப்பதற்கு என்னை வசியம்செய்து வாயை அடைத்துவைத்திருக்கிறாய் என்ற எனது நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. ஆனாலும் சிறிய விளக்கின் மினுக்கம்போல நம்புகிறேன். உண்மையிலேயே உனது அழைப்பும் உனது செயலும் உனது பேச்சும் ஆண்கள் யாருமற்ற உனது வீட்டின் குளிரூட்டப்பட்ட படுக்கையறைவரை அழைத்துச் சென்றுவிடுமென்று நம்பினேன். நம்புவது தவறல்ல. நம்பாமல் இருப்பதும் தவறுதான்.

“ஏன் என்னைப் பற்றி இப்படியாக எல்லாரிடமும் பேசுகிறாய்”

நான் அமைதியாக இருக்கிறேன். ஆசிரியரின் முன்பாக நிற்கும் மாணவனைப் போல இல்லை. திரை விலகியதும் தெரியும் காட்சிக்குக் காத்திருக்கும் பார்வையாளனைப் போல தவிப்புடன் நிற்கிறேன். சற்று நேரத்தில் தொடங்கிவிடும் விளையாட்டைக் காணக் காத்திருக்கும் பார்வையாளனைப் போலக் காத்திருக்கிறேன். நீ எப்போது பேச்சை முடித்து என்னைத் தழுவிக் கொள்வாய் என்ற ஆர்வம் நடுங்கச் செய்கிறது. நான் உனது கன்னங்களில் முத்தமிடுவேனா? நான் உனது உதட்டிலிருந்து முத்தங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா? உனது மார்புகளில் புதைந்து அப்படியே அமிழ்ந்துவிட முடியுமா? நீ எனக்குள் முடிந்திருக்கும் எண்ணற்ற புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பதற்குக் கைநீட்டி அழைப்பாயா?

“ஏன் நீ என்னைப் பற்றி இல்லாதைச் சொல்லி என்னை அசிங்கப்படுத்துகிறாய். நான் உனக்குச் சகோதரிபோல அல்லவா? உனக்கு ஏதாவது பணம் வேண்டுமா? உனக்கு ஏதாவது புத்தகங்கள் வேண்டுமா? என்னைப் பற்றித் தயவுசெய்து மேற்கொண்டு எதையும் சொல்லாதே. நீ சொல்வது பொய் என்பது உனக்கே தெரியும்.”

நான் அமைதியாக இருக்கிறேன். ஏதோ கற்பிதம் என்னை நெருங்கச் செய்கிறது. நீ என்னைத் தொட்டுக் கொள்ளப்போகிறாய் என்றும் அதற்கு முன் நான் முந்திக்கொள்ள வேண்டுமென்றும் உனது கரங்களைப் பற்றிக்கொள்கிறேன். எனது கன்னங்களில் அறைந்துவிடுகிறாய். அதை எதிர்பாராமலும் அதற்குப் பிறகு என்னமோ நடக்கப்போகும் பயத்திலும் வீட்டிலிருந்து வெளியேறுகிறேன். அதற்குப் பிறகு எனது கதைகளை நான் என் நண்பர்களுக்கு முன்னைக்காட்டிலும் கூடுதலான விவரிப்புகளுடன் சொல்லத் தொடங்குகிறேன். நான் உன்னைப் பற்றிய கதைகளை ஒரு வட்டத்திற்குள் நிறுத்திச் சுழலவிடுவதும் சுழலும் கதைகள் தம்மை உருப் பெருக்கிக்கொள்வதும் உனக்கு எப்படித் தெரியும்? யார் மூலமாக நீ தெரிந்துகொள்கிறாய். யார் நான் சொல்லாத வார்த்தைகளையெல்லாம் சொல்லியதாகச் சொல்லுவது? இதுவும் எனது வட்டத்திற்குள் சுழலும் கதையின் உருப்பெருக்கம் தானா? எனக்கு உன்முன்னால் நிற்கப் பயமாகவும் இருக்கிறது. பழி வாங்கியதற்காக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மகிழ்ச்சியுடனே நான் வீதிகளில் இருந்துவிட விரும்புகிறேன். ஆனால் உனது அழைப்பிற்கு உடனே பில்லிசூன்யம் வைத்தவனைப் போல ஓடோடி வர வேண்டியதாகிறது. இந்தமுறை நீ அழைத்தவுடன் நான் வரப்போவதில்லையென்ற வீம்பில் நண்பர்களுடன் இருக்கிறேன்.

கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டது. இப்போது நட்சத்திரங்களையும் மேகங்களையும் பார்க்க முடியவில்லை. இருந்தபோதிலும் விழும் சாரலில் உலாவுகிறோம். வீதி விளக்கினடியில் அமர்ந்து கத கதப்பாகக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம். நடிகைகளின் புகைப்படங்கள், அவர்களைப் பற்றிய கிசுகிசுப்புகள், அவர்களது திரண்ட மார்புகள் என்று அவரவர்களுக்குத் தெரிந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். நினைத்ததுபோல நீ எனது பெயரைச் சொல்லி அழைக்கிறாய். நான் வரவில்லையென்றால் நீ வேறு யாரையாவது அழைத்து விடுவாய் என்ற பயமும் பொறாமையும் என்னை மனத்தளவில் துரிதப்படுத்துகின்றன. முன்ஜாக்கிரதையாகச் செவிகோளாதவன்போல நடிக்கிறேன். உன் முன்னால் நடிக்க முடியாதுதான். இருந்தாலும் நடிக்க முயல்கிறேன். நீ திரும்பத் திரும்ப அழைக்கிறாய். நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

“டேய் அந்தக்கா உன்னையே கூப்பிடுறாங்கடா. டேய் அந்தக்கா உன்னைக் கூப்பிடுறாங்கடா.”

“நான் வேணா போய் என்னான்னு கேட்டுட்டு வரவா?” யார் சொல்லியது எனத் தெரியவில்லை. சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஓடுகிறேன். வாசலுக்குள் நுழைந்ததும் எனது மூச்சுவாங்கலைக்கூடப் பொருட்படுத்தவில்லை.

“நான் வீட்டுக்குள்ளே உட்கார்ந்து செக்ஸ் படம் பார்க்கிறேன்னு ஏன்டா டீக்கடையில் உட்கார்ந்து பேசினே?” நான் ஓடிவந்த வேகத்தில் நின்றிருக்கிறேன். எப்படியாவது உனது கன்னத்தில் முத்தமிட்டுவிடுவதென்ற வேகம் மட்டுமே என்னை அங்கிருந்து ஓடிவரச்செய்திருந்தது. உனது பேச்சை நான் பொருட்படுத்தவில்லை. நீ பேசியது என்னவென்றுகூடக் கேட்க மனமில்லை. நடிகைகளின் மார்புகளைப் பற்றிய வர்ணனையின் நினைவாக உன் முன் நின்றிருக்கிறேன். உனது இரவு உடையில் உள்ளாடையற்ற மார்புகள் என்னைப் பார்க்கச்செய்கின்றன. நான் பார்த்தபடியிருக்கிறேன்.

“யார்கிட்டே சொன்னா நீ அடங்குவேன்னு எனக்குத் தெரியும். போடா நாயே” என்று நீ விரட்டியும் எனக்குப் பொருட்படுத்திக்கொள்ள முடியவில்லை. முத்தமிடுவதற்கு உனது கன்னத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற உணர்ச்சி. இல்லை முத்தமிட்டு முடித்துவிட்ட கிறக்கத்தில் இருப்பது போன்ற உணர்ச்சி. வாசலைத் தாண்டி வந்து தெருவில் நின்றுகொண்டிருக்கிறேன். எனது சுயநினைவும் உனது சொற்களும் எதுவும் என்னிடம் இல்லை. உனது உதடும் உனது கன்னங்களும் உனது திரேகமும் என்னைக் காரணமின்றித் தொடர்கின்றன. நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. நீயாவது சொல்லித்தாயேன் என்று கரங்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சத் தோன்றுகிறது.

பிறகு வேறுவழியின்றி நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தேன். அவர்களுடன் சினிமாவிற்குச் சென்று வந்தேன். நினைவிலெல்லாம் அவள்தான். தொண்டையைப் பிடித்து நெறுக்குவது போன்ற வலி. தெருவிலும் பேருந்து நிலையத்திலும் சினிமா தியேட்டரிலும் யாரைப் பார்த்தாலும் அவளது முகமும் உடலும் ஞாபகத்திற்கு வருகின்றன. அந்த முகப் பவுடரின் வாசனை. கரிய கூந்தலின் அடர்கருப்பாகச் சுவாசிக்க முடியும் ஒரு வாசனை. எல்லாம் நினைவுகளில் வட்டமடிக்கின்றன. எனது வட்டத்தினுள் சுழலும் உன்னைப் பற்றிய கதைகள்யாவும் தீர்ந்துபோயின. எதற்கென்று தெரியவில்லை. புதிய கதைகள் எதுவும் சொல்லத் தெரியவில்லை. வெறுமையும் உடல்நோவும் கண் எரிச்சலும் அலைச்சலும் மிஞ்சிய ஒரு நாளில் டீக்கடையின் பெஞ்சில் அமர்ந்திருந்தேன்.

டீக்கடைக்காரன் என்னிடம், “மாடியிலிருந்து கிணற்றில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னயாமே? உன்னுடைய நண்பர்களிடம் பந்தயம் கட்டியிருக்கிறாயமே?” என்று சொன்னான். இது வட்டவடிவச் சுழற்சியில் சுழலாத ஒரு கதை. யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. நான் பேசியது டீக்கடைக்காரன் மூலமாக உன்னிடம் வருகிறதென்றால் அவன் மூலமாக எனக்கு நீதான் இக் கதையைச் சொல்லியனுப்புகிறாய் என்று நம்புகிறேன். எனது நம்பிக்கை பொய்க்கவில்லை. தினமும் அவன் என்னை இக்கேள்வியின் மூலமாகப் பயமுறுத்தத் தொடங்குகிறான். அவனிடமிருந்து நான் தப்பிக்கப் புதிய கதையை உருவாக்க வேண்டும் இல்லையென்றால் டீக்கடைப் பக்கமே வராமல் இருக்க வேண்டும். முடியவில்லை.

என்னைப் பற்றிய கிணற்றில் விழுகும் கதையிலிருந்து முதலில் தப்பிக்க வேண்டுமென்ற ஆவேசம் உண்டானது. உன்னைப் பற்றியும் டீக்கடைக்காரனைப் பற்றியும் மேற்கொண்டு புதிய கதையை எனது வட்டத்திற்குள் சுழலவிட முடியுமா என்று ராவும் பகலுமாக யோசிக்கிறேன். தூங்குவதற்கு நேரமேயில்லை. தூக்கம் வருவதில்லை. கனவில் கிணறு உனக்குப் பதிலான மாற்றமாக உருவாகிவிட்டது. இத்தனை நாட்களும் எனது கதைக்குள்ளிருந்த அத்தனை பொய்களும் இப்போது என்னைப் பழிவாங்குவதுபோல முன்நிற்கின்றன. இதிலிருந்து நான் எப்படித் தப்பிப்பது. பொய்க்குப் பதிலியாக மற்றொரு பொய்யா? இல்லை இன்னொரு கதையா? எனது வட்டத்தின் சுற்றளவு முடிந்துவிட்டது போன்ற பிரமை. இனி என்னால் எந்தக் கதையையும் உனக்கெதிராக உருமாற்றம் செய்ய முடியாது எனத் தோன்றுகிறது. என்ன செய்ய வேண்டும்?

எனது கதைகளுக்கு எதிராக நீயும் இப்படித்தான் தப்பித்துக்கொள்வதற்குத் தவித்திருக்கிறாயா? கதைகளுக்கு எதிராக நீயும் ஒரு கதையை உருவாக்கி எனது வட்டத்திற்குள்ளாகவே என்னை மாட்டிவிட முயல்கிறாயா? கிணற்றில் விழப்போவதாக நான் என் நண்பர்களிடம் பந்தயம் கட்டியதான உனது கற்பனை உண்மையிலேயே யாருடைய துரதிருஷ்டம் என்று தெரியவில்லை. ஏனென்று தெரியாத வகையில் என்னைப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. உன்னைப் பற்றிய நினைவுகளிலிருந்து திசை திருப்புகிறது.

“எப்போ நீ மாடியிலிருந்து கிணத்துல விழுந்து நீந்தப் போறே?” என்ற டீக்கடைக்காரனின் கேள்வி தினமும் என்னை இந்தத் தெருவிலிருந்து விரட்டுகிறது. மழைக்காலம் நீடித்த படியிருக்கிறது. மழைக்கு ஒதுங்கி வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வீடும் தெருவும் பெண்களும் சதா விரட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். எங்காவது சென்றுவிட வேண்டுமென்று தோன்றுகிறது. புகைப் படங்களிலிருக்கும் கவர்ச்சியைவிடச் சற்றுக் கூடுதலாக நிஜத்தில் தெரிகிற பெண்களின் அழகு இந்த மழைக் காலத்தில் கூடுகிறது. ஊருக்கு வெளியே சென்று மேலும் சில புகைப்படங்களைப் பார்க்கிறோம். மரப் பொந்துகளில் ஒளித்துவைத்திருந்த அப்புகைப்படங்கள் மழைக்குத் தம்மை உருமாற்றியிருந்தன. தெளிவற்று நனைந்த புகைப்படங்களைப் புகைபிடித்தபடி பார்க்கிறோம். எங்களில் ஒருவன் ஆர்வத்தில் அப்புகைப் படத்தைத் தனது உடலில் தேய்த்துக் கொள்கிறான். ஒவ்வொருவரும் அப்படியாக அதைச் செய்கிறோம். எனது முறை வந்தபோது புகைப் படத்திலிருந்த உடலை எனது உடலில் தடவிக்கொண்டேன். நிஜத்திலேயே யாரோ ஒரு பெண்ணின் உடல் என்னை உரசுவதுபோல உணர முடிகிறது. ஒரு வாசனை. உஷ்ணம். உள்ளங்கை எனது முதுகை அழுத்தி அவ்வுடலின் மார்புகளில் என்னைப் பொதிந்துக்கொள்கிறது. நான் எனது உடலால் அவ்வுடலை அணைத்துக்கொண்டிருக்கிறேன். அடுத்தமுறைக்காகக் காத்திருக்கும் நண்பன் என்னைத் துரிதப்படுத்துகிறான். நான் எனது உடலை அவ்வுடலிலிருந்து மீட்டுக்கொள்ள முடியாமல் இருக்கிறேன். பசைபோல ஒட்டிக்கொண்ட புகைப்படத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள நண்பன் தயவுதாட்சன்யமின்றி முன்வருகிறான். அவ்வுடல் என்னிடமிருந்து பரிதாபமாகப் பிரிகிறது. பிரியும்போது புகைப்படத்தைப் பார்க்கிறேன். அவள் என்னை பதற்றப்படுத்துவதுபோலச் சிரிக்கிறாள். பிரிவின் துயரத்தில் நான் அங்கிருந்து வெளியேறுகிறேன்.

மழையில் நனைந்தபடி தெருவுக்குள் வருகிறேன். டீக்கடையில் அமர்ந்துகொள்கிறேன். அங்கிருந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். சிலர் எனது நனைந்த உடையையும் என்னையும் வேடிக்கை பார்க்கிறார்கள். என் நண்பர்கள் தொலைவில் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் கடைக்குள் வந்து அமர்ந்துகொண்டு தங்களது சட்டையைக் கழற்றிப் பிழிகிறார்கள். அப்புகைப்படப் பெண் வெற்றுடலில் தெரிகிறாள். அவளது சருமத்தின் வண்ணமும் பழுப்புநிறக் கூந்தலின் வாசனையும் என்னைச் சூழ்கின்றன. வாசனையை மிக நெருக்கத்தில் உணர்கிறேன். கடையிலிருந்தபடி உனது வீட்டை எட்டிப் பார்க்கிறேன். தூரத்தில் ஜன்னல்களில் தெரிகிற விளக்கின் வெளிச்சம் என்னை உனது வீட்டிற்கு நடந்து போகச் சொல்கிறது. நான் அமைதியாக அமர்ந்திருக்கிறேன். டீக்கடைக்காரன் என் நண்பர்களில் ஒருவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் என்னைப் பார்த்தும் பார்க்காததுமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களைக் கவனியாதவன்போல மழையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மழையால் தெரு நிறைந்து இருந்தது. தெருவில் நடமாட்டமில்லாமல் இருப்பது ஏதோ விபரீதத்தின் தோற்றமாகத் தெரிந்தது. கோழிகளும் நாய்களும் வீட்டின் கதவோரத்தில் முடங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது. கடையில் இருந்தவர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. அடுப்பின் உஷ்ணமும் அங்கிருந்தவர்களின் அமைதியும் மாயத்தன்மையுடன் இருப்பதாகத் தோன்றியது. கடையின் மேலிருந்து மழைநீர் வடிந்துகொண்டிருந்தது. மழைநீர் தரையில் விழுந்து அகன்ற கோடுபோலக் கடையை விட்டுக் கடந்துகொண்டிருந்தது. நான் எழுந்து வெளியே எட்டிப் பார்த்தேன். என் நண்பர்களில் ஒருவன் என்னைத் தள்ளிவிட்டுக் கடையிலிருந்து தெருவிற்கு நடந்தான். அவன் நேராக அவளது வீட்டிற்குச் சென்றதை நான் பார்த்தேன். ஏன் அவளது வீட்டிற்குச் சென்றான் என்று புரியவில்லை. அவன் திரும்பி வரும்வரை கடையின் வாசலிலேயே காத்திருந்தேன்.

மழையின் வேகம் குறையத் தொடங்கியது. வெள்ளம் வடியவில்லை. தெரு நிறைந்து சென்ற நீரில் சிவப்பு நிறத்திலான பந்து ஒன்று மிதந்து வந்துகொண்டிருந்தது. அதைப் பிடித்துவிட வேண்டுமென்ற வேகத்தில் தண்ணீரில் சிறுவர்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களது தெருவிலிருந்து பந்தைத் துரத்தி வருகிறார்கள்போல. பந்து நீரின் வேகத்திற்கு ஓடிக்கொண்டிருந்தது. கடைக்குள்ளிருந்த என் நண்பர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டார்கள். பந்தை என் நண்பன் பிடித்து அவர்களிடம் தந்தான். சிறுவர்கள் பிடித்துக் கொண்டார்கள். காற்றில்லாத பந்தில் நீர் நிறைந்திருந்தது. அவர்களது தெருவிற்குத் திரும்பி நடந்தார்கள். சிறுவர்கள் அவளது வீட்டைக் கடந்த போது என் நண்பன் வீட்டின் வாசற்கதவைத் திறந்து தெருவிற்கு வந்தான். அவனது கையில் பிளாஸ்டிக் கவர் ஒன்றிருந்தது. அவன் அதைத் தனது சட்டைக்குள் திணித்துக் கொண்டதை என்னால் பார்க்க முடிந்தது. நண்பர்கள் பந்து விளையாடிவிட்டுக் கடைக்குள் வந்து அமர்ந்துகொண்டார்கள்.

அவளது வீட்டிலிருந்து வந்தவன் கடைக்குள் வந்து அமர்ந்துகொண்டான். தனது சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்து எங்கள் ஐவருக்கும் டீ போட்டுக்கொடுக்கச் சொன்னான். டீக்கடைக்காரன் சிரித்தபடி டம்ளர்களைக் கழுவத் தொடங்கினான். எனக்குத் தவிப்பாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. டீயைக் குடித்தபடி அவன் பேசுவதற்காகக் காத்திருந்ததேன். முந்தைய கோடைக் காலத்தில் நானும் இதே போலதான் அவளது வீட்டிற்குச் சென்று திரும்பியிருந்தபோது என் நண்பர்கள் காத்திருந்திருந்தார்கள் என்பதை நினைத்தபோது என்னால் அமைதி கொள்ள முடிந்தது. அவன் தனது சட்டையிலிருந்த சி. டிகளை வெளியே எடுத்து மற்றவர்களிடம் தந்தான். புதிதாக வந்திருந்த படங்கள். இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்யப்பட்டதாக அவன் தனது உரையாடலைத் தொடங்கினான். எனக்குத் தெரிந்துவிட்டது. அவனும் என்னைப் போல ஒரு வட்டத்திற்குள் கதைகளைச் சுழலவிடுகிறான். இல்லை அவள் வரைந்த வட்டத்திற்குள் கதைகளை உருவாக்கத் தொடங்குகிறான். மழையில் நனைந்தபடி வீட்டிற்குச் செல்லக் கடையை விட்டு வெளியேறினேன். எனது முதுகிற்குப் பின்பாகச் சிரிப்பு சத்தம் கேட்கிறது. எனது கழுத்தில் கத்தியால் அறுப்பதுபோல வலி.

மழைக்காலம் முடிந்துவிட்ட நாளில் என் நண்பர்கள் என்னைத் தேடிவரத் தொடங்கினார்கள். அவர்களது வருகை எனக்குப் புரியாமல் இல்லை. அவர்களை இப்போது யார் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த இடைப்பட்ட நாட்களில் கண்டு பிடித்திருந்தேன். அவளது வீட்டிற்குச் சென்று சி. டிகள் வாங்கிக்கொண்டு வந்திருந்தவனின் பேச்சை என் பிற நண்பர்கள் கேட்கத் தொடங்கியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை வரவழைக்கவில்லை. விளையாட்டின் திருப்பம் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னால் அவனுடனும் அவளுடனும் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. எப்படி விளையாட்டைத் திசை திருப்புவது. எப்படி விளையாட்டை முடிவுக்குக் கொண்டு வருவது என்று யோசிக்கிறேன். யோசிக்க மட்டுமே முடிகிறது. எதையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. நேரிடையாக அவளிடம் கேட்டுவிடலாமா, புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருப்பவனை எனது வட்டத்தினுள் சுழலும் கதைகளில் சுழல விட்டுவிடலாமா என்று யோசிக்கிறேன்.

என் நண்பர்களில் ஒருவன், “நீ கிணத்துல விழுந்து நீந்தப்போறயாமே? உனக்கு நீச்சல் தெரியுமா? எப்போடா கத்துக்கிட்டே?” என்னிடம் கேட்டான். எனக்கு அவளுடைய விளையாட்டின் இறுதி எல்லை அல்லது முடிவு தெரிந்துவிட்டது. அவள் என்னையும் கிணற்றையும் இணைத்துச் சதிவலையைப் பின்னிவிட்டாள். இனி அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று அவர்களுடன் நடந்தேன். அவர்கள் என்னை அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். என்னை அவர்கள் முழுமையாக நம்பியிருந்தனர். நான் யாரிடேமோ அவர்களுக்குத் தெரியாமல் நீச்சல் கற்று வந்திருக்கிறன் என்பதை அவர்களது உரையாடலிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. என்னை அவளது வீட்டிற்குள் அழைத்துச் சென்றது கனவுபோலிருந்தது.

என்னையுமறியாமல் எனது கால்கள் மாடிப் படி ஏறின. மதியவேளையில் பனி கொட்டத் தொடங்கியிருந்தது. மாடியில் தரை ஈரமாக இருந்தது. நான் கனவில் நடந்து கொண்டிருந்தேனா நிஜத்தில் நடந்துகொண்டிருக்கிறேனா எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நடந்துகொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் அவர்கள் நிற்கத் தொடங்கினார்கள். என்னை உற்சாகமூட்டும் படியாக அவர்கள் கைதட்டத் தொடங்கினார்கள். நான் உண்மையிலேயே நீச்சல் கற்றுத்தேறியவனைப் போல மேலிருந்து கீழே குதிக்கிறேன். இல்லை அவன் என்னைப் பிடித்துத் தள்ளுகிறான். விழுகிறேன். இருளை நோக்கிச் செல்வதுபோலிருக்கிறது. நீரினுள் அமிழ்ந்துவிட்டது போன்றோ தலை பாறையில் மோதியது போலவே உணர முடிந்தது. சப்தம் அடங்கிவிட்டது. நிசப்தமாக இருக்கிறது. கிணறு இப்போது வட்ட நீரலைகளை உருவாக்கிக்கொண்டி ருந்தது. அது கதையா நீரலையா என்பது புதிரானதாக மாறப்போகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *