ஒரு தலைக்காதலும் ஒரு வழிப்பாதையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 10,553 
 

நான் பிரபு,படிப்பு முடிந்து கடந்த இரண்டு வருடங்களாக தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீடு திரும்பிவிடுவேன்.

அதே நேரம் வீட்டிலிருந்து வாழைப்பழத் தார்களை வியாபாரத்துக்காக என் அப்பா தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வார்.அவர் வீட்டிலிருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் நானும் புறப்பட்டு என் அப்பாவின் கடைக்குச் செல்வேன்.கடையானது என் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்.எங்கள் தெருவை கடந்ததும் வீடுகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும்.சற்று தூரத்தில் ஒரு வழிப்பாதை ஒன்று உள்ளது.எப்போதும் அப்பாதை ஆள் நடமாட்டமின்றியே காணப்படும்.

பேருக்கென்று அங்கொன்றும்,இங்கொன்றுமாய் தெரு விளக்குகள் ஒளிமங்கி பளிச்சிடும்.அப்பாதையை கடந்து சிறிது தூரத்தில் தான் எங்கள் கடை உள்ளது.

அதற்கு சற்று முன்னதாக இருப்பது தான் அவள் வீடு. அவள் பெயர் செல்வி,தன் தந்தை இறந்ததற்கு பின் தாய் மற்றும் தங்கை தனத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இங்கு குடியேறினாள்.

நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது என் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியாக சேர்ந்தாள் செல்வி.என் வீட்டை அடுத்து இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் தான் காலையில் இருவரும் கல்லூரிக்கு பேருந்து ஏறுவது வழக்கம்.அதைத்தவிர எங்களுக்குள் அப்போது வேறு அறிமுகம் கிடையாது.

ஆரம்பத்தில் அவள் மீது எனக்கு இருந்த மரியாதை காலப்போக்கில் காதலாக மாறிவிட்டது.

வானத்து நிலவு கூட தன் முகத்தை வெட்கத்தினால் மேகக்கூட்டங்களுக்கிடையில் புதைத்துக் கொள்ளும், அந்த அளவிற்கு இலட்சணமான முகம்.அதுமட்டுமின்றி பெரியவர்களை மதிக்கும் பண்பு,பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்ற ஆபரணங்களையும் அணிந்து கொண்டதனால் என்னவோ அவள் எப்போதும் மிளிர்ந்தே காணப்படுவாள்.

தினமும் அவள் வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம் சூரியனை நோக்கித் திரும்பும் மலர் போல என் தலை அவள் வீட்டை நோக்கித் திரும்பும்.

என் கண்களோ அங்கும் இங்கும் அலைந்து அவளைத் தேடித்திரியும்.ஆனால் அவள் அருகில் நெருங்கி என் விருப்பத்தை சொல்ல நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு வித பயமும்,படபடப்பும் தொற்றிக் கொள்ளும்.

அவள் என்ன நினைப்பாலோ என்றும்,அவ்வப்போது பேசிக்கொள்ளும் வாய்ப்பும் பறிபோய் விடுமோ என்றும், அதனால் தான் இவ்வளவு நாள் அவளிடம் சொல்லாமலே விட்டுவிட்டேன்.கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக என் எண்ணத்தை அவளிடம் வெளிப்படுத்த முயன்றும் முடியாமல் போனது.

எப்படியும் இன்று அவளிடம் என் விருப்பத்தை சொல்லி விட வேண்டும் என்று தான் இந்த ஒருவழிப்பாதையில் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சிறிது நேரத்தில் அவள் இந்த வழியாகத் தான் வீட்டிற்கு செல்வாள்.அவள் வரும் வரை அவளுக்காக எழுதிய கவிதையை சரிபார்க்கலாம் என்று வாசிக்க ஆரம்பித்தேன்.

உலகிலுள்ள அனைத்து அழகுகளையும் சேர்த்து ஒரு ஓவியம் வரைந்தேன் அதில் உருவானது உன் முகம்.

பேசுகின்ற வெண்ணிலவை- என் கண்கள் கண்டதில்லை என்றிருந்தேன் உன்னை காண்பதற்கு முன்பு வரை…..

அதற்குள் இருள் கிழித்து ஒளிக்கதிர்களை பரவச் செய்யும் சூரியனைப் போல இருள்படர்ந்த அந்த பாதையிலிருந்து சற்று தொலைவிலே அவள் வந்து கொண்டிருந்தாள்.

சொல்லலாமா இல்லை வேண்டாமா? எப்படியும் நாம் தான் சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அருகில் வந்த அவளிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்,உங்கள் விருப்பம் என்னவென்று கேட்டுவிட்டேன்.சில விநாடிகள் அவள் மௌனமாக நின்றிருந்தாள்.சற்றும் இதை என்னிடம் எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் மௌனத்திலிருந்தே புரிந்து கொண்டேன்.

இருந்தும் அவள் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

மன்னிச்சுடுங்க,எனக்கு எல்லாமே என் அம்மாவும், தங்கச்சியும் தான்.அப்பா இறந்த பிறகு அம்மா கஷ்டப்பட்டு தான் என்னையும் ,தங்கச்சியையும் படிக்க வைக்கிறாங்க.

அவங்க மனசை கஷ்டப்படுத்துற எந்த விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன் என அவள் சொல்லி முடிக்கும் முன்பே,உங்கம்மாவை நான் நல்லா பாத்துக்குறேன்.

தங்கச்சியையும் நல்லா படிக்க வைக்கிறேன்.யோசிச்சு சொல்லுனு சொன்னேன்.யோசிச்சாலும் இதையே தான் சொல்லுவேன்,இனி என்னை இந்த மாதிரி பேசி தொந்தரவு செய்யாதீங்கனு சொல்லிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டா.

உள்ளத்தில் வைத்திருந்தால் அழித்திருப்பேன் அவள் நினைவுகளை உயிரோடல்லவா வைத்திருக்கிறேன்

எப்படி அழிப்பது?

சற்று கனத்த இதயத்தோடு நானும் வீடு திரும்பிவிட்டேன் இரண்டு,மூன்று நாட்கள்கழிந்தன.அப்பாவின் கடைக்கும் நான் செல்லவில்லை.இன்றைக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வர சற்று தாமதம் ஆகிவிட்டது என்று நினைத்தவாறே வீட்டை திறந்து உள்ளே சென்றேன்.

மணி 6.30ஐ நெருங்கி கொண்டிருந்தது.

மேஜையின் மீது இருந்த பளபளப்பான கத்தியை அப்போது தான் பார்த்தேன்.அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன்.

செல்வியும் சரியாக என் வீட்டை கடந்து சென்று கொண்டிருந்தாள்.வீட்டிலிருந்து நானும் அவளுக்கு பின் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.என்னை திரும்பி பார்த்த அவள் முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு வழிப்பாதையை நெருங்கியதும் நான் பின்னால் வருவதை மீண்டும் திரும்பி பார்த்தாள்.சுற்றிலும் ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவள் சாலையின் ஓரத்தில் நின்று அழத் தொடங்கி விட்டாள்.

சற்று நடுக்கத்துடனும் காணப்பட்டாள்.நானும் அவள் நின்று கொண்டிருக்கும் இடத்தருகில் சென்றேன்.

அவள் அழுவதைக் கண்டவுடன் எனக்கும் கண்களின் விளிம்பில் கண்ணீர் ததும்பி நின்றது.

என்னை கொன்று விடாதீர்கள் என்று அவள் என்னை கையெடுத்து கும்பிட்டவுடன்,அணையை உடைத்துக் கொண்டு செல்லும் ஆறு போல என் கண்களில் நீர் வழிந்தோடியது.வார்த்தை சற்றே வெளிவர மறுத்தது.

சற்று கனத்த குரலில் ,என் விருப்பத்தை நான் சொன்னேன்.உங்க விருப்பத்தை நீங்க சொன்னீங்க.

அதுக்கு எதுக்கு நான் உங்களை கொல்லப்போறேன்.

நான் மட்டுமில்லைங்க எந்தப் பையனும் தான் உண்மையா நேசிச்ச பொண்ண காயப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ மாட்டாங்க.நீங்க நெனக்கிறது பொண்ணுங்கள வெறும் உடம்பா மட்டும் நெனைக்கிற ஒரு சில பசங்களத்தான்னு சொன்னேன்.

அப்புறம் எதுக்கு கத்தியை எடுத்துட்டு என் பின்னால வர்றீங்கனு பயத்தோடவே கேட்டா.

இது கடையில பழம் வெட்டுற கத்திங்க,அப்பா வீட்டில மறந்து வைச்சுட்டு போயிட்டாரு அதான் கடைக்கு எடுத்துட்டுப்போறேன்னு சொன்னேன்.

உங்களை தப்பா நெனச்சுட்டேன் என்னை மன்னிச்சுடுங்கனு சொன்னா.

இல்லைங்க ,என் ஆசையை நெனச்சு பாக்கத் தெரிஞ்ச எனக்கு உங்களுக்குனு ஒரு ஆசை ,விருப்பம் இருக்கும்கிறதை நெனச்சு பாக்கணும்னு தோணல.

தெரிஞ்சோ,தெரியாமலோ உங்க பயத்துக்கும் நான் காரணமாயிட்டேன்.என்னை மன்னிச்சுடுங்கனு அவள் காலை தொட்டு மன்னிப்பு கேட்டுட்டு மீண்டும் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *