ஒரு காதல் கடிதம்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 10,099 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆடை அலங்காரத்தின் உச்சக்கட்டமாக இரண்டாவது மாடியில் ஒண்டி’ போர்ஷனில் தெற்குப் பக்கம் உள்ள ஜன்னலுக்கு வகிடெடுத்ததுபோல் தோன்றிய இரண்டு செங்குத்தான கம்பிகளுக்கு இடையே, கட்டங்ககட்டமாக முடிந்த நடுப்பகுதியில், நடுப்பக்கத்துக் கட்டத்தில் சதுரக் கண்ணாடியை சாத்தி வைத்துவிட்டு, சிவராசன், முகத்திற்குப் பவுடர் தடவும் சாக்கில் முதல் மாடியில் இரண்டாவது போர்ஷனில் இருக்கும் ஓர் இளசைப் பார்த்தான். அதே அறையில் அதே சமயம் கிழக்குப் பக்கம் இருந்த குறுகலான ஜன்னலில் கையளவு கண்ணாடியை பிரித்தபடியே கிரவுண்ட் போர்ஷனில் வாழும் அல்லது காதலில் வாடும் ஒருகடலளவு கண்ணினாளை, வரதன் கையில் எடுத்தஸ்னோவைக் காதில் தேய்த்தபடி பார்த்தான்.

“டேய், கண்ணாடியை பார்க்கிறியா இல்ல கண்ணாடியை பாக்கிறியா? எவ்வளவு நேரண்டா? நானும் இவளைப் பார்க்கப்படாதா? புறப்படுடா?” என்று சிவராசனை, வரதன் சாடினான்.”

“ஒன்னால அவளைப் பாக்க முடியலன்னா நானும் இவளப் பார்க்கப்டாதா? ஏண்டா இந்தப் பொறாமை புத்தி?”

அந்த அறைக்குள், மூன்றாவது இளைஞனான ரங்கன் சிவராசனை ஏறிட்டுப் பார்க்காம தனக்குள்ளேய பேசியபடி தனக்குள்ளேயே சிரித்தான்.

வரதன் அதட்டினான்.

“ஏண்டா, நீ வார துவரைக்கும் காத்திருந்து ஒனக்கு ஸ்பெஷல் ஷோ காட்டப் போறதாய் நினைப்பா? புறப்படுடா! டேய், ஒன்னைத்தான்… ஒனக்குக் காதலிக்கத்தான் தெரியாது. எங்களோட காதலை ரசிக்கவும் பிடிக்காது. நிழல் காதலையாவது வந்து பாருடா. எழுந்திருடா சண்டி மாடு”

ரங்கன் மெல்லச் சிரித்தபடி நண்பர்களைப் பார்க்காமலே நாவசைத்தான். “நான் சினிமாவுக்கு வர்ல.”

“என்ன… வர்லியா? உனக்கும் சேர்த்து என் கையிலே இருந்து காசைக் கொட்டி ரிசர்வ் பண்ணியிருக்கேன், ஒப்பன் வீட்டுப் பணமுன்னா இப்படிச் சொல்வியா?”

“எப்பன் வீட்டு காகன்னாலும் வரமாட்டேன்.”

“சிவராக! வாடா போகலாம். டேய் ரங்கா, ஒன்னை வந்து கவனிச்சுக்கிறோம்.”

நண்பர்கள் போய்விட்டார்கள்.

ரங்கன் அறைக்குள் வந்தான். கதவைத் தாளிட்டான். எவராவது உள்ளே வரலாம் என்பதுபோல், அனுமானித்து வாசலுக்கு கதவால், தடைப் போட்டான்.

அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்து, மீட்டு வந்த காகித உறைக்குள் கையை விட்டான். கறுப்புமை பூசிய காகிதத்தை எடுத்தான். மார்புக்கு நேராக அதை வைத்துக் கொண்டு படிக்கப் போனான். மின் விசிறியால் அது பரபரப்படைந்தது. உடனே அது கிழிந்து விடக் கூடாதே என்று பயந்து ஸ்விட்ச் போர்ட் பக்கம் போனான். இந்த இடைக்காலத்தில் காகிதம் பறந்துவிடக் கூடாதே என்று மீண்டும் மேஜைக்கருகே தாவினான்.

கடிதத்தின் வாசகம் மனப்பாடந்தான். அதற்காகக் கடிதத்தை விட்டுவிட முடியுமா? அது வெறும் கடிதம் அல்ல…. அவன் காதல் சாம்ராஜ்யத்தின் பவளக்கொடி. ஒரு வருட காலமாக வயல் வெளியிலும் கிணற்றடியிலும் கோவில் முனையிலும் உண்ணா விரதம் இருந்து பெற்ற காதல் கொடி, தேசியக் கொடியைப் போல் மாலையில் இறங்காமல், உயரத்தில் பறக்கவிடப்படும் அன்புக் கொடி.

எங்கள் மீண்டும் கடிதத்தை மார்புக்கு நேராகப் பிரித்தான். காகிதம் கசங்குவது போலிருந்தது. உடனே சிறிது மென்மையாக விட்டுப் பிடித்தான்.

“அன்புள்ள அத்தானுக்கு, நலம். நலம் அறிய அவா.

என்னடா, இந்த விஜயா எடுத்த எடுப்பிலேயே அத்தான் என்கிறாளே என்று யோசிக்கிறீர்களா? யோசியுங்கள். உங்களைக் காதலிக்கிறவள் என்ற வகையில் மட்டும், நீங்கள் எனக்கு அத்தானில்லை. உங்கள் அம்மாவோட பாட்டியின் பெரியத்தான் மனைவி, எங்கள் குடும்பத்தில் பிறந்தவளாம். ஆக, சுற்றி வளைத்துப் பார்த்தாலும் நீங்கள் எனக்கு அத்தான் தான். ‘சுற்றி வளைத்து’ என்ற வார்த்தையின் பொருள் புரிகிறதா? எனக்கு, அது புரியப் புரிய, மனம் அல்லாடுகிறது. வெட்கம் வெட்கமாய் வருகிறது.’

இதோ வெட்கம் போய் இப்போது பயம் வருகிறது. ஒருவேளை நான் எதிர்பார்ப்பதுபோல் நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருந்தாலும் இருக்கலாமோ என்ற பயம்.!’

ஆமாம் அத்தான் தெரியாமல் தான்… கேட்கிறேன். விரும்பிய பெண்ணிடம் ஓர் ஆடவன்தான், தன் விருப்பத்தை முதலில் தெரிவிக்க வேண்டும் என்பது உலகரகசியம். ஆனால் காத்திருந்து, காத்திருந்து கண்ணெல்லாம் நீர்நிறைந்து, இப்போது நானே நாணத்தை விட்டு ஆசையைத் தெரிவிக்க வேண்டியது இருக்கிறதே என்பதை உணரும்போது, என் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. அதே சமயம், ஆசையை, அதற்கு உரியவரிடம்தானே தெரிவிக்கிறோம் என்று தெளியும்போது சிரிப்பு வருகிறது.

உங்களுக்கு ஞாபகம் வருகிறதா அத்தான்? கல்லூரிகளில் வெவ்வேறு சமயங்களில் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விடப்பட்ட விடுமுறைகளால், மூன்று வருடங்களாகச் சந்திக்காத நாம், கிராமத்து கரும்புத் தோட்டத்திற்கு அருகே சந்தித்தோம். உங்களோடு ஒட்டிக் கொண்ட ஒங்களின் பத்து வயது அக்கா மகனைப் பார்த்து நான், என்னடா ஆளே அடையாளம் தெரியல? என்றேன். நீங்கள் என்னை உற்றுப் பார்த்தது உண்மைதான். ஆனால் ஒரு வார்த்தை ‘நீயுந்தான்’ என்று சொன்னீர்களா?

இன்னொரு நாள்… நீங்கள் டவுனுக்கு பிரமாதமாய்ப் போய்க் கொண்டிருந்தீர்கள். குளத்தில் குளித்துவிட்டு, கமதியோடும் வளர்மதியோடும் வந்த நான், மஞ்சள் சட்டையும் சிமெண்ட் கலர் பேண்டும் பளபளக்க, வார்த்தெடுத்த இரும்புபோல் கருட்டைத் தலையோடும் சொக்க வைக்கும் முகத்தோடும் போன உங்களிடம் கிறங்கிப் போய், யாராவது அழகாய் மாறணுமுன்னால் இந்த ஊர்ல நாலுவருடம் இருக்கப்படாது. அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அடிக்கடி குற்றாலத்தில் போய் குளிக்கணும்’ என்றேன். நான் எதிர்பார்த்தது போலவே நீங்கள் திரும்பிப் பார்த்தீர்கள். யாரை? வளர்மதியை! நல்லவேளை அவள் உங்களுக்கு சொந்த சித்தி மகள் என்பதால் எனக்கு நிம்மதியாயிற்று.

இன்னொரு முக்கியமான இடத்திற்கு வருவோம்.

அந்தி சாய்ந்த வேளை. எங்கள் புளியந்தோப்பில் இருந்து நான் மேற்கு நோக்கியும், நீங்கள் கிழக்கு நோக்கியும் நடக்கிறோம். நான் உங்களைக் கண்டவுடனேயே, கைகளைப் பிசைந்தபடி தவழ்வது போல் நடக்கிறேன். நீங்களோ ஊரைத் திரும்பித்திரும்பி பார்த்தப்படியே வருகிறீர்கள். இருவரும் சந்தித்தபோது, நீங்கள் கடிகார கையை ஆட்டியபடியே , இப்போ மணி என்ன இருக்கும்’ என்று அழாக் குறையாகக் கேட்டு முகத்தைத் துடைத்துக் கொள்கிறீர்கள். நான் சீக்கிரமாய் வந்த சிரிப்பை அடக்கியபடியே, ‘நேரம் தெரியலியா? இல்ல, ஒரு வேளை நேரம் சரியில்லையா? என்றேன். நீங்கள் விழுந்தடித்து மீண்டும் மீண்டும் ஊரைத் திரும்பிப் பார்த்தபடியே ஓடினீர்கள். காதலர்களுக்கு, வார்த்தைகள் ஸ்வீட் நத்திங்ஸ்தான்… இருந்தாலும் நீங்கள் கொடுத்த ஸ்வீட்டுக்குப் பிறகு காரம் வேணுமென்று நான் சமையல்காரி மாதிரி நடந்து கொண்டது தப்புத்தான்.

இதற்குப் பிராயச்சித்தம் செய்வதுபோல் உங்கள் வீட்டுக்குப் பக்கமாக நடமாடினேன். அழுமூஞ்சியிலும் சிடுஞ்சியான உங்கள் தங்கையிடம், ‘குமுதம் இருக்குதா’ என்று உங்கள் வீட்டுக்கு வந்தே கேட்டேன். அவளோ, வாங்கிப் படியேன்’ என்றாள். நான் சிரித்து மழுப்பினேன். ‘உங்க அண்ணாவுக்கு வேலை கிடைக்கலையா? என்றேன். அவளோ, உங்க அண்ணணுக்கு கிடைக்குதான்னு பாரு முதல்ல. அவருக்கே கிடைக்காதபோது எங்கண்ணாவையா இளக்காரமாய் பேசறே?’ என்று சண்டைக்கு வந்தாள். அவள் குட்டக் குட்டக் குனிந்தேன். யாருக்காக…. எதற்காக? உங்கள் தலையில் செல்லமாகக் குட்டவேண்டு என்ற லட்சியம்தானே?

அப்புறம் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது சென்னைக்குப் புறப்படுகிறீர்கள். உங்கள் தெருவிற்கு குழாய்த் தண்ணீர் பிடிக்கும் சாக்கில் வருகிறேன். நீங்கள் சாளரம் வழியாய் என்னையே பார்க்கிறீர்கள். வரிசையின் முன்னணிப் பானையா இருந்த என் பாத்திரத்தை இதர பானைகளுக்காக விலக்கி வழிவிட்டு அரைமணி நேரம் உங்களையேப பருகுகிறேன். ஞாபகம் இருக்கிறதா அத்தான்!

சென்னைக்குப் புறப்படுகிறீர்கள். ரயில் நிலையத்தை நோக்கி நடக்கும் உங்கள் பின்னால், ஏதோ ஒரு சாக்கில் நானும் நடக்கிறேன். வழியில் போன காமாட்சிப் பாட்டியைப் பார்த்து, ‘பாட்டி, மெட்ராஸுக்கு மகள் வீட்டுக்குப் போறீங்களாமே? என்னை மறந்துடாதீங்க. நான் எப்பவும் உங்க பேத்திதான்.’ என்கிறேன். புரிந்து கொண்டவர்போல், அப்பாவுடன் சென்ற நீங்கள், என்னைத் திரும்பிப் பார்க்கிறீர்கள். எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை .

உங்கள் கம்பெனி முகவரியைக் கண்டுபிடிக்க நான் பட்டபாடு! இதற்கே எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுக்கலாம்.

‘காதல் திலகி’ என்று நீங்களே கொடுத்துவிடுங்களேன்.

நமது ஊர்க்காரர்களான வரதனும், சிவராசனும் நீங்களும் ஊரில் ஒன்றாகச் சுற்றியதுபோல் ஒரே அறையில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஒரு சின்ன வேண்டுகோள். சிகரெட் அதிகம் பிடிக்காதீர்கள்.

முடிவாக –

என்னை நீங்கள் காதலிக்கவில்லை என்றால், என்னை இந்தக் காகிதமாக பாவித்துக் கிழித்துவிடுங்கள். நீங்களும் காதலிப்பதாக இருந்தால், அடுத்த சனிக்கிழமை என் கைக்குக் கிடைக்கும்படி கடிதம் எழுதுங்கள். அன்று அப்பா வெளியூர் கலயாணத்திற்குப் போகிறார். அண்ணா எட்டாவது தடவையாக இண்டர்வியூவிற்குப் போவான். எனக்குக் கல்லூரித் தோழிகள் கடிதம் எழுதுவதுண்டு, ஆகையால் அம்மா சந்தேகப்பட மாட்டாள்.

இது ஒத்திகை பார்த்து எழுதிய கடிதமல்ல. கண்ணில் ஒற்றி எழுதிய கடிதம்.

முத்தங்களுடன் முடிக்கும்,
அன்பு விஜயா.

ரங்கன் கடிதத்தை மார்புடன் அணைத்தபடி மெய்மறந்து நாற்காலியில் சாய்ந்தான். பிறகுதான் அவனுக்கு அன்றைக்கு பதில் எழுத வேண்டிய நாள் என்பது ஞாபகம் வந்தது. வாசல் கதவை இன்னொரு தடவை செக்கப் செய்துவிட்டு பேனாவைத் தூக்கினான்.

நிஜமான காதலைக் காட்டிய அவனுக்கு, எழுத்தில் தடை வரவில்லை. கால் மணி நேரத்தில் இரண்டு பக்கங்களை காதல் விழுங்கிவிட்டது. அவள் விட்டு வைத்திருந்த இன்னும் சில காதல் சமிக்ஞைகளை நினைவுப்படுத்தி எழுதினான். இறுதியாக, ‘உன்னை நான் நினைக்கவில்லை என்று கூடச் சொல்வேன். மூச்சு விடுவதையும் இதயத் துடிப்பையும் நினைத்துக் கொண்டா இருக்கிறோம்? என்று முத்தாய்ப்போடு முடித்தான்.

அப்படியும் இப்படியுமாய் மணிமாலை நாலரையாகிவிட்டது. இப்போது போஸ்ட் செய்தாக வேண்டும். கடிதத்தை வைத்தபடி அறையைப் பூட்டப் போனான். நண்பர்கள் தத்தம் நகல் சாவிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்லாமல் அவசரத்தில் அறையிலேயே வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன செய்யலாம்? பரவாயில்லை. ஒரு லெட்டர் போஸ்ட் செய்துவிட்டுத் திரும்ப எவ்வளவு நேரம் ஆகும்?

அறையைப் பூட்டிவிட்டு, தெருவாசியான ரங்கனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். இன்று வியாழக்கிழமைதான். வழக்கமாய் இரண்டு நாளாகும் தபால் போக. ஆனால் தப்பித் தவறி, இது மறுநாளைக்கே அங்கே போய்ச் சேர்ந்து விடுமோ? நாளை போஸ்ட் பண்ணினால்? தாமதமாகி விடவும் கூடும். ‘அக்ஸப்ட் யுவர் லவ்-ஸெயிலிங் இன் தி சேம் போட்’ என்று சனிக்கிழமை காலையில் தந்தி கொடுத்துவிட்டால் என்ன? நோ, நோ… தந்தி என்றால் கிழவிகள் ஒப்பாரி வைப்பார்கள். அதுவே அவர்கள் காதலுக்கும் கடுகாடாகும்.

ஒரு மணி நேரயோசனைக்குப் பிறகு, அன்றைக்கே போஸ்ட் செய்வது என்று முடிவு செய்து சிறிது தூரம் நடந்து தபால் பெட்டியைத் தொட்டுவிட்டான். அதன் வாய்க்குள் கடிதத்பை போடப் போனவன், திடீரென்று கையை வெளியே எடுத்தான். இந்த ஒதுக்குப் புறப்பகுதியில் கடிதங்களை எப்போது வந்து எடுப்பார்கள் என்பதே தெரியாது . ரிஸ்க் எதற்கு? காதலில் ரிஸ்க் எடுத்தாலும் கடிதத்தில் கூடாது. அடையாறுக்குப் போய் போடலாம்.

அடையாறு வந்தான். அதற்குள் போஸ்ட் ஆபீஸ் மூடியாகிவிட்டது.

மொபைல் வண்டி ஆறு பத்துக்கு வரும் என்றார்கள். மொபைலை எதிர்பார்த்து இம்மொபைலாக நின்ற கூட்டத்தில் கலந்தான். ஒரு சின்னச் சந்தேகம். இந்த லெட்டர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்ஸில் தான் போகணும். அது ஏழே காலுக்குப் புறப்படு கிறது. ஆறு பத்துக்கு வந்து ஆறு நாற்பதுக்கு புறப்படும் மொபைல் வண்டியில் போட்டால் எக்ஸ்பிரசுக்கு எப்படிப் போய்ச் சேரும்? பேசாமல் ரயில்வே ஸ்டேஷனுக்கே போய்ப் போட்டுவிடலாம்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி எழும்பூர் என்றான்.

அவன், தன் அறைக்குத் திரும்பும்போது மணி இரவு பத்துக்கு மேலாகிவிட்டது. அறைக்கு வெளியே முழங்காலில் தலை வைத்து அசல் ஓணான்கள் மாதிரி உட்கார்ந்திருந்த வரதனும், சிவராசனும் அவன் கைகளைப் பிடித்து ஆளுக்கு ஒன்றாகத் திருகினார்கள். ரங்கன் சிரித்தான். வலிக்கவில்லை. விஜயாதான் அவன் கரத்தைத் தடவி விடுகிறாளே!

ரங்கன் மதர்ப்பாகப் படுத்தான். அதிசயமான சாதனையைச் செய்துவிட்ட அளவிட முடியாத திருப்தி. அவள் காதலுக்கு, தான் தகுதியுள்ளவனாகிவிட்ட தன்னம்பிக்கை… அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்ட பெருமிதம். அதேசமயம், லெட்டர் அவள் கையில் கிடைக்காமல் போனால்?’ என்று அப்பப்போ உதறல்கள்.

ரங்கன், சிகரெட்டை அடியோடு அல்ல, அடி முதல் நுனிவரை விட்டு விட்டான். போதாக்குறைக்கு, புகைத்த நண்பர்களை, “வெளியில் போய்ப் பிடிங்கடா ஒரே வாடை” என்று பகைத்தான். படியாத தலை முடி படிந்தது. ஏறாத பவுடர் ஏறியது. தலை முழுக்கப் போர்வையை மூடிக்கொண்டு காலையில் ஏழு மணி வரைக்கும் கிடந்து வெயில் உறைப்பில் எழுபவன், பக்கத்துத் தெருவில் இன்னும் பிரியாணி போடும் பருவத்திறகு வராத இளஞ்சேவலின் கூவலில் எழுந்தான். எங்கேயும் எப்போதும் எதிலும் ஒன்றே ஒன்று: விஜயா… விஜயா… விஜயா… அவளைக் கட்டிப் பிடிக்க வேண்டும் என்ற கற்பனை வரவில்லை. முத்தமிட வேண்டும் என்று உதடுகள் முனங்கவில்லை. இனந்தெரியாத உணர்வு. உண்ணும்போதும் உறங்கும்போதும், எண்ணும்போதும், எழுதும்போதும், எப்போதும் விஜயாவோடு இருக்கவேண்டும் என்ற அவா. பௌதிக விதிகளுக்குக் கட்டுப்படாத ரசாயன விதி.

ஒரு வாரம் ஓடியது. மறுவாரம் பிறந்தது.

ரங்கன், விஜயாவிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தான். திங்களில் அவா, செவ்வாயில் எதிர்பார்ப்பு, புதனில் ஏமாற்றம், வியாழனில் கலக்கம், வெள்ளியில் நடுக்கம், சனியில் வேதனை. விஜயா ஏன் கடிதம் எழுதவில்லை ? ஒருவேளை கடிதம் விஜயாவிடம் போகாமல், அவள் தந்தையிடம் போயிருக்குமோ? தபால்காரர் கடிதத்தைத் தாமதமாய்க் கொடுத்திருப்பாரோ? அப்படியே இருந்தாலும் விஜயா விவரமாய் எழுதி இருக்கலாமே…. எப்படிச் சொல்ல முடியும்? மானத்தை வேல் கம்பாலும் வெட்டரிவாளாலும் எடைபோடும் அவள் தந்தை, அவளை வீட்டோடு சிறை வைத்திருந்தால்? என்னால் தானே இந்தச் சிரமம்….

‘என்ன ஆனாலும் சரி, ஊருக்குப் போய் அவளைப் பார்த்தாகணும்’ என்று தீர்மானித்தான்.

ரங்கன் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு சம்பளம் இல்லாத விடுமுறை போட்டுவிட்டு, கிளம்பினான். வரதனும் சிவராசனும் லெதர் பேக்கை தூக்கியபடியே நின்ற ரங்கனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். சிவராக அதட்டிக் கேட்டான்.

“எங்கேடா போற?”

“ஊருக்கு”

“ஊருக்கா? ஊர்ல் என்னடா இருக்கு?”

“ஏதோ இருக்கு. எனக்குப் பிடிச்சது பிடிபட்டு இருக்கு…”

“என்னடா மூடு மந்திரம்? எதுக்காக இப்போ ஊருக்கு?” வரதன், சிவராசன் விட்ட இடத்தைத் தொடர்ந்தான்:

“விஜயவாபைப் பார்க்கவா? அவள் எழுதிய காதல் கடிதத்திற்கு நேரில் பதில் சொல்லவா?”

ரங்கன், ஆச்சரியப்பட்டான். நண்பர்களிடம் தானும் விஜயாவும் நடந்து கொண்ட விதத்தை பல தடவைச் சொல்லி இருக்கிறான். ஆனால் கடிதம் வந்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்?

வரதன் அட்டகாசமாய்ச் சிரித்தபடி பேசினான்.

“மடையா! ஊர்ல உதை வாங்கவா போறே? நீ விஜயாவுக்கு எழுதின லட்டர், அவள் அப்பன் கிட்ட சிக்கியிருக்கு. அவள், தனக்கு எதுவும் தெரியாதுன்னு அழுதிருக்காள் அப்பனக்காரர் மீனை எதிர்பார்த்து இருக்கிற கொக்கு மாதிரி வேல்கம்போடு, ஒனக்காகக் காத்திருக்கான்”.

சிவராக, தன் பங்குக்கு சிரிக்காமல் கோபமாகவே கேட்டான்.

“மூளை இருக்காடா ஒனக்கு? வந்த தபால் உறையில் முதல்ல தபால் முத்திரையைப் பார்த்தாயா? எங்க கிட்ட நீ அப்பப்போ புலம்பனதை நோட் பண்ணி நாங்கதான் அந்த லெட்டரை எழுதினோம்! நீ எங்ககிட்டே கேட்காமல் ஏண்டா அவளுக்கு எழுதின? அப்படி அவள் என்ன கிளியோபாட்ராவா? இந்நேரம் எவன் கிட்ட பல்லைக் காட்டிச் சிரிச்சிட்டிருக்கிறாளோ”

சிரித்த நண்பர்கள், திடீரென்று பிரமித்துப் பின்வாங்கினார்கள்.

ரங்கன், ஆவேசியானான். திடீரென்று அவர்களை தாக்கினான். வரதனின் வயிற்றில் விட்டான் ஓர் உதை. சிவராசனின் தலைமுடியைப் பிடித்துச் சுவரில் மோதவைத்தான். அவர்கள் இருவரும் என்னடா , என்னடா, என்று சொல்லிவிட்டு பின்னர் தற்காப்பிற்காக அவனைத் திரும்பித் தாக்கப் போனபோது…

ரங்கன் பொத்தென்று தரையில் உட்கார்ந்து, தன் தலையிலேயே மாறி மாறி அடித்துக் கொண்டான். தலையை கட்டில் சட்டத்தில் மோதிக் கொண்டான். சட்டைப் பையில் போற்றிப் பாதுகாத்து வந்த கடிதத்தை எடுத்துச் சுக்கு நூறாகக் கிழித்து அங்குமிங்குமாகச் சிதறடித்தான். பிறகு தன் பாட்டுக்குப் புலம்பினான்.

“ஆசை காட்டி மோசம் செய்திட்டிங்களேடா பாவிங்களா! நான் கட்டின கோட்டையே, எனக்கு சாமாதியாயிட்டதே. ஒரு வருட கணக்கில இதயத்தில் இருந்தவளை, ஒரு வாரமாய் என் உடம்புல ஒவ்வொரு அணுவிலேலயும் வியாபிக்க வச்சிட்டு, இப்போ என்னை அணு அணுவாய்க் கொன்னுட்டிகளே! கண்ட கண்ட பெண்களைக் கண்ணால மேயுற உங்களுக்கு காதலப் பற்றி என்னடா தெரியும்? நடக்கிறது நடக்கட்டும். இப்பவே ஊருக்கு போய் உண்மையை சொல்ல போறேன். என்னை அடித்துக் கொன்றால், அவள் விடும் ஒரு சொட்டுக் கண்ணீர் எனக்கு பால் வார்க்கிறது மாதிரி அப்படியே அவள் கண்ணீர் விடாட்டாலும், அவளால் சாகிறதாக நினைக்க மாட்டேன். அவளுக்காகச் சாகிறதாக நினைப்பேன். இதுக்கு பேருதான்டா காதல். வழிவிடுங்கடா”

பையைத் தூக்கியபடி முண்டியடித்த ரங்கனை நண்பர்கள் முதலில் தட்டிக் கொடுத்து கட்டிலில் உட்கார வைத்தார்கள். அவர்களால் வியப்பிலிருந்து விடுபட முடியவில்லை. விவகாரம் இப்படி ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை. அவனைத் தொடத் தொடத் துக்கம் வந்தது. அவனைக் கட்டி பிடித்து கதறவேண்டும் போல் தோன்றியது.

ரங்கன் பெட்டியை விழப்போட்டு கட்டிலில் கிடந்த சிகரெட்டையும் வத்திப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தான். சுவர் மூலையில் சாய்ந்தான். தன்னையறியாமலேயே சிகரெட்டைப் பற்றவைத்தான். ஊதினான். அவன் தலைக்குமேல் புகை வட்ட வட்டமாய்ச் சுழன்று கோடு கோடாய்ப் பிரிந்து அரும்பரும்பாக அற்றுக் கொண்டிருக்க –

ரங்கன், ஒரேயடியாய் புகைந்துக் கொண்டிருந்தான்.

– குமுதம் 1982

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *