ஒரு காதலின் கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,576 
 
 

மணி இரண்டுக்கும் மேலிருக்கும். ஊரே உறங்கிக் கொண்டிருக்க அவள் – அபர்ணா மட்டும் தூக்கமின்றித் தவித்தாள். அன்று நடந்ததொரு சம்பவம் அவள் அமைதியை அழித்துத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது.

தூங்காமல் புரண்டு புரண்டு படுத்ததால் ஏற்பட்ட அசதி, கண் எரிச்சல் புறரீதியாகவும், அதற்குக் காரணமான சம்பவம் அகரீதியாகவும் அலைக்கழிப்பைத் தர அதிகம் சோர்ந்திருந்தாள்.

ஒரு காதலின் கதைமனதைச் சமன்படுத்தி தூங்கிவிடலாம் என்று தூங்க முற்பட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவிதமான எண்ணமும், அதுசார்ந்த காட்சிகளும் விரிய தூக்கம் தொலைந்து போனது. இரண்டு தடவை எழுந்து தண்ணீர் குடித்து சுவாமி படத்தின் முன் நின்று திருநீறு இட்டுவந்தும் எந்த மாற்றமுமில்லை.

வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது என்று நினைக்கின்றபோது எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு பிரச்னை உருவாகி எதிர்பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் பெண்ணாய்ப் பிறந்தவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சொல்லவே வேண்டாம். வயதுக்கேற்ற பருவம், பருவத்துக்கேற்ற பிரச்னை என்பது எழுதப்படாத விதி போலும்.

சற்று நேரம் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தால் மாற்றம் ஏற்பட்டு தூக்கம் வருமோ என்றெண்ணி கதவைத் திறக்க, கூடத்தில் படுத்திருந்த அப்பா குரல் கொடுத்தார்.

“”ஏம்மா அடிக்கடி எழுந்து வர்றே உடம்பு சரியில்லையா?”

“”இல்லப்பா”

“”அப்ப சரி, பார்த்து போயிட்டு வாம்மா”

அப்பா விழித்துக் கொண்டிருக்கையில் தோட்டத்தில் உட்கார்ந்திருக்க முடியாது என்பது புரிய, அவர் சொன்னது போல பார்த்துப் போய்விட்டு வந்து மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.

அப்பாவிடமும் அண்ணனிடமும் சொன்னால் மனப்பாரம் இறங்குமோ என நினைத்தவள் அடுத்த கணமே பயந்தாள். அண்ணன் புரிந்து கொண்டு விடுவான், ஆனால் அப்பா… அம்மா உயிருடன் இல்லாத நிலையில் எக்குதப்பாய் நடந்துவிட்டதாய் என்றெண்ணி டென்ஷனாகி விடலாம், வேண்டாம் இந்த நடுநிசியில் அவர்களுடைய தூக்கத்தையும் கெடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தவள் அந்த தீர்மானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“”….. உன்னை இரண்டு வருடமாய் பார்க்கிறேன். ஆரம்பத்தில் உன்னைப் பார்க்கும்போது எனக்குள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த எட்டு மாதங்களாக உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏதேதோ சிந்தனைகள் ஆட்கொள்கின்றன. உன்னைப் பற்றி நினைப்பதும் உன் வருகைக்காகக் காத்திருப்பதும் சுகமளிக்கிறது. ஏன் இப்படிப்பட்ட மாற்றம் என யோசித்தபோதுதான், உன்மீது காதல் வயப்பட்டிருப்பது புரிய வந்தது. இதைத் தெரிவிக்கவே இக்கடிதம்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கடமையும் பொறுப்பும் உள்ளது. அவற்றை தனித்துச் செய்யமுடியாது. ஆண் பெண்ணின் துணையுடனும், பெண் ஆணின் துணையுடனுமே செய்ய முடியும். யாரோ ஒருத்தி எனக்கும், யாரோ ஒருவன் உனக்கும் வாழ்க்கைத் துணையாக வரவிருக்கின்றனர். அது ஏன் நமக்கு நாமாகவே இருக்கக் கூடாது?இது என் விருப்பம் மட்டுமே. உன் விருப்பமும் இதுவாக இருப்பின் மகிழ்ச்சியடைவேன். உன்னை வாழ்க்கைத் துணையாக அடைவதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். உன் முடிவுக்கும் வருகைக்கும் காத்திருக்கிறேன்…”

– படிப்பையும் அதன் மூலம் நல்லதொரு எதிர்காலத்தையும் உருவாக்கும் நினைப்பையும் தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடமளிக்காதவளிடம் திடுதிப்பென்று இப்படியொரு காதல் கடிதத்தை ஒருவன் நீட்டினால் எப்படி இருக்கும்?

அவனிடமிருந்து அப்படியொரு செயலை எதிர்பார்த்திராத நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென எதிரில் தோன்றி, அவன் கடிதத்தைத் தர, அது காதல் கடிதம்தான் என்று புரிய வர படபடத்தாள். சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் அதை வாங்குவதா வேண்டாமா எனத் தவித்துக் கொண்டிருக்க, அவனோ கைகளில் திணித்துவிட்டு விலகினான்.

ஒரு கணம் கடிதத்தைத் தூக்கி எறிந்தவள் யாரிடமாவது கிடைத்து அவர்கள் பார்த்து டிபார்ட்மென்ட் பூராவும் பரப்பிவிட்டால்… என்ற பயத்தில் மீண்டும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு விலகி பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். கடிதத்தைப் படித்தவுடன் தலை சுற்ற, பாத்ரூம் கதவைப் பிடித்துக் கொண்டாள்.

காதல் தவறில்லை. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை இல்லாதவளிடம் அதை வெளிப்படுத்தியதுதான் தவறு. விஜய் அழகானவன். எம்பிஏ பைனல் இயர் படிக்கிறான். நடராஜர் கோயிலின் சன்னதி தெருவில் அவனது வீடு உள்ளது. வீட்டின் முன்புறத்தில் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரை அவனது தந்தை நடத்தி வருகிறார். கோயிலுக்குப் போகும்போதெல்லாம் விஜய் தரப்பினரை பார்த்ததுண்டு. ஆனால் பார்த்ததை மட்டும் வைத்துக் கொண்டு காதலித்துவிட முடியாது.

வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தவள், தனக்குத் தெரிந்த விரிவுரையாளரிடம் கூறலாமா என நினைத்தாள். அவர் கூப்பிட்டு விசாரித்து விஷயத்தைப் பெரிதாக்கிவிட்டால், முள் மீது சேலை விழுந்தாலும் சேலை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான். பெண்ணாய்ப் பிறந்தது பெரும் தவறு; அதிலும் சற்று அழகானவளாய்ப் பிறந்தது அதைவிடப் பெருந்தவறு.

மனதுக்குப் பிடித்த ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் அதை வெளிப்படுத்தும் விதமுமே காதல். கம்பீரமான அந்த விஷயம் சமீபகாலமாக தள்ளாட்டம் கண்டுவருகிறது. காதலைப் பற்றிய வரையறை காலத்திற்கு காலம் மாறிவிடுகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் சினிமாவும் பத்திரிகைகளும் போட்டிபோட்டுச் செயல்படுகின்றன.

இப்பொழுது யாரும் யார் மீதும் காதல் கொள்ளலாம். அதற்கு ஜாதி மதம் கிடையாது. ஏன் வயது கூட

கிடையாது. பார்த்தும் காதலிக்கலாம். பார்க்காமலும் காதலிக்கலாம். காதல் கொள்ள ஒரு தகுதி, காதலிக்கும் எண்ணம் வேண்டும்… அவ்வளவுதான். இன்றைய இளைஞர்கள், தான் ஒருத்தியை அல்லது தன்னை ஒருத்தி காதலிக்கவேண்டும். அதைச் சொல்லி கர்வப்படவேண்டும் என்று கருதுகின்றனர். இளைஞர்கள் இப்படியெனில், யுவதிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன்னை காதலிப்பவன் தான் எதிர்பார்க்கும் தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு. யாரோ சிலருக்கு மட்டும் அடித்த காதல் வைரஸ் இன்று பெரும்பாலானவர்களைப் பிடித்துக் கொண்டுவிட்டது.

இத்தகைய காதலுக்கு முதலில் வயப்படுவதும் வெளிப்படுத்துவதும் ஆண்கள்தாம், பத்து சதவீத பெண்கள் மட்டுமே காதலை துணிந்து வெளிப்படுத்துகின்றனர். அதிலும் மூன்று சதவீத பேர் மட்டுமே காலித்தவனோடு மணமேடை ஏறுகிறார்கள். மற்றவர்கள் அவன் மனதில் இடம்பிடித்ததோடும் அதற்கு விலையாய் தன்னை தருவதோடும் நின்றுவிடுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை காதல் பருவம் ஒரு மின்னும் நட்சத்திரத்தைப் போன்றது. மின்னுவதும் மறைவதும் அவள் விதி என்று கூறினால் அது மிகையில்லை.

பெண்கள் விஷயம் இப்படியென்றால் ஆண்கள் விஷயம் நேர்மாறானது. அவன் யாரையும் சம்மதம் பெற்றுதான் காதலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவன் காதலுக்கு அவள் சம்மதிக்காவிட்டால் அவளை குத்திக் கொள்ளலாம் அல்லது தனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்காமல் ஆசிட் ஊற்றி அவள் முகத்தை சிதைக்கலாம். காதலை எதிர்க்கும் சமுதாயம் காதலை புரியவைக்க தயாராக இல்லாததாலும் காதல் வயப்பட்டோர் காதலின் மேன்மையை அறிந்துகொள்ள முன்வராததாலும் அறியாமலும் புரியாமலுமே காதல் கனிந்து கசந்து கொண்டிருக்கிறது.

திடீரென அவளுக்கு அம்மாவின் நினைவு வந்தது.

“சாகப்போகிறோம் என்று தெரிந்தும் அதை எண்ணிக் கலங்காது அதுபற்றிய விஷயத்தை யாரிடமும் சொல்லாது மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்து மருகிவிடாது கடுமையாக உழைத்து, தனது கடமையை செய்து பொறுப்பை உணர்த்தி சாகும் தருவாயில் தன்னிலை பற்றியும் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் கூறி என் வாழ்க்கையை மூலமாகக் கொண்டு வாழுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றாளே அந்த புண்ணியவதி அவள் இருந்தால் பயமின்றி நடந்ததைக் கூறி என்ன செய்யலாம்?’ என்ற தீர்வு கேட்கலாம். ஆனால் அம்மா உயிருடன் இல்லையே!

அம்மா பற்றி நினைத்தவளுக்கு கண்கள் கலங்கின. சாகும் தருவாயில் அம்மா பேசிய ஒவ்வொன்றும் நினைவுக்கு வந்தன. மரண செய்தி தெரிந்தும் பயமின்றி அமைதியாகவும் உறுதியாகவும் செயல்பட்ட அந்த தெய்வத்தின் மகளான நானா இப்படி ஒரு சின்ன விஷயத்திற்கு முடிவெடுக்கமுடியாமல் திணறுகிறேன். இது சின்ன பிரச்னைதான். காதல் சம்பந்தமானது என்றாலும் தீர்வு காணமுடியாத விஷயமல்லவே!

“காதலிக்கிறேன்… உன் சம்மதம் சொல்’ என்கிறான். இதில் தவறில்லை அவன் விருப்பத்தை அவன் வெளியிட்டது போல் என் விருப்பத்தை நான் வெளியிடலாமே! என்னால் உன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் காதலுக்கு எதிரியல்ல, எனக்கு காதலிக்கும் எண்ணம் ஏற்படவில்லை. என்னைவிட்டுவிடு என்று கூறலாமே.. இப்படி நான் ஏன் யோசிக்கவில்லை.

அவளுக்கு பலம் கூடியது.

ஒருவேளை இந்த பதிலை அவன் ஏற்றுக் கொள்ளாது வேறு விதமான செயலில் ஈடுபட்டால்… ஈடுபட்டால்…

மீண்டும் குழப்பம் குடிகொள்ள தலையை சிலும்பி எழுந்தாள்.

பதிலை அவனிடம் சொல்லாமல் அவன் பெற்றோர்களிடம் பக்குவமாக சொல்லி இப்படி சொன்னால் அந்த பயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கமாட்டான்.

இவ்வளவு நேரமாய் அலைகழியவைத்த பிரச்னைக்கு தீர்வு கண்டது அமைதியைத்தர அடுத்தகட்டமாக அதை எப்படி? எப்பொழுது? செயல்படுத்துவது என ஒத்திகை பார்த்தவாறே மெல்ல தூங்கிப்போனாள்.

மறுநாள் மாலை வகுப்பு முடிந்து வெளியே வந்தவள் அண்ணன் கோபிக்கு போன் செய்தாள்.

“”எனக்காக ஒருமணிநேரம் ஒதுக்கமுடியுமா?”

“”என்ன செய்யணும்?”

“”எதுவும் செய்யாம என்கூட வந்தா போதும்..”

“”புரியல…”

“”நேரா வந்து பேசறேன்… இன்னும் அரைமணி நேரத்துக்கு வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்திடுறேன். லைப்ரரியில வெயிட் பண்ணு…”

சரியாக ஆறுமணிக்கு அவர்கள் விஜய் வீட்டுக்குப் போனபோது, அவனது அம்மா மாடப்பிறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள். அபர்ணா குரல் கொடுக்க திரும்பினாள்.

“”நீங்க விஜய்யோட அம்மானு நினைக்கிறேன். உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்..”

ஒரு பெண் அதுவும் இளம் பெண், தன் வீடு தேடிவந்து தன் மகனின் பெயரைக் கூறி, தன்னிடம் பேசவேண்டும் என்கிற போது எந்தத் தாயால் படபடப்பின்றி இருக்கமுடியும்?

“”உள்ளே வா…”

அவர்கள் உள்ளே செல்ல, டைனிங் டேபிளில் விஜய்யும் அவனது அப்பாவும் காபி குடித்துக்கொண்டிருந்தனர். அவளை எதிர்பாராத விஜய் தடுமாறினான்.

அபர்ணா விஜய்யின் அப்பாவை வணங்கிவிட்டு யாரும் கேட்கட்டும் என்று காத்திராமல் பேசத் துவங்கினாள்.

“”என்னோட பெயர் அபர்ணா பி.பி.ஏ., ரெண்டாம் வருடம் ரெகுலர் கோர்ஸ் படிக்கிறேன். இது என்னோட அண்ணன் பிசிக்ஸ் டிபார்ட்மென்டில் லேப் டெக்னீஷியனாக இருக்கார். உங்க பையன் ஒரு லவ் லெட்டர் கொடுத்து என்னோட ஒபினியன் கேட்டிருக்கார்…”

அடுத்த நிமிடம் அனைவருக்குள்ளும் பரபரப்பு கூடியது. கோபி சூடானான்.

“”என்ன சொல்ற நீ!”

“”அண்ணா ப்ளீஸ்.. சப்தம் போடாத. தப்பா எதுவும் நடந்துடலே, ஜஸ்ட் ஒப்பினியன் கேட்டிருக்கிறார். அதுக்கான பதிலை அவருக்கிட்டேயே சொல்லியிருக்கலாம். அதை ஏற்கமுடியாது, வற்புறுத்துவாரோன்னு பயந்துதான் வீட்டுக்கு வந்தேன். சாதாரண விஷயம். சாதாரணமாகவே முடிச்சுட்டு போகலாம். நான் உன் தங்கச்சிங்கறதை மறந்துடாத..”

கோபி அமைதியானான். மாறாக விஜய்யின் அப்பா கத்தத் தொடங்கினார். எதிர்பாராத தாக்குதலால் நொறுங்கிய விஜய், ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.

“”பிடிச்சிருந்தது கேட்டேன். எட்டுமாதமா யோசனை பண்ணித்தான் கேட்டேன்…”

“”படிக்கப்போனா படிப்பை மட்டும்தான் பார்க்கணும்.. அதை விட்டுட்டு…”

அபர்ணா குறுக்கிட்டாள்.

“”அவரு தப்பா நடந்துக்கலே.. நாகரிகமாகத்தான் தன் விருப்பத்தை சொன்னார். லவ் பண்றது தப்பில்லே, நான் வேற கம்யூனிட்டி பெண்ணும் இல்லை, அவருக்கு என்மேல லவ் வந்ததுக்கு சந்தோஷப்படுறேன். ஆனா அதை ஏத்துக்க முடியாத சூழ்நிலையிலே இருக்கிறேன். இதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்…”

அவள் பேச்சு விஜய்யின் அம்மாவை ஆச்சரியப்படுத்தியது.

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா?

“”ஏம்மா லவ்வுன்னா உனக்கு அவ்வளவு பயமா?”

“”பயமெல்லாம் கிடையாது. லவ் பண்ணிதான் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை உருவாக்க முடியங்கறதிலே எனக்கு உடன்பாடுல்ல..”

“”அப்ப தப்புங்கறியா…?”

“”மண்ணாங்கட்டி..”

விஜய்யின் அப்பா குறுக்கிட அவரைத் தடுத்தாள் விஜய்யின் அம்மா.

“”கொஞ்சம் பேசாம இருங்க… நீ சொல்லும்மா…”

“”தப்புன்னு சொல்ல வரல அவரு பார்வையில அது அவசியமா இருக்கலாம். எனக்கு அது அவசியமா தோணலே, அவ்வளவுதான். நம்மை எல்லாவிதத்திலும் தகுதிபடுத்திக்கிட்டு நமக்கு கிடைத்ததை முழுமையாக ஏத்திட்டு யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எந்த வீ’ட்டுக்குப் போனாலும் தனித்தன்மையோட வாழ்ந்து காட்ட முடியும்னு நான் நினைக்கிறேன்…”

“”சபாஷ் உன்னை நினைச்சா எனக்கு பெருமையாக இருக்கும். உனக்கு இப்படியொரு நம்பிக்கை எப்படி உருவாச்சு?”

“”என்னோட அம்மா, அவுங்களோட வாழ்வும் வாக்கும்தான் என் வாழ்க்கைக்கான மூலம்…”

“”அம்மா உயிரோட இல்லை. புற்றுநோய் வந்து இறந்துட்டாங்க…”

“”நினைச்சேன் சொல்லு…”

“”தனக்கிருந்த நோயை மறைச்சு, வலியைப் பொறுத்து வாழ்ந்து காட்டினாங்க. எப்படியெல்லாம் வாழணும்னு சொல்லித்தந்தாங்க. வீடு பொம்பளையோட இடம். அங்கே நிர்வாகம் பண்றவ தன்னலத்தை மட்டும் பார்க்காமல் மத்தவங்க நலனையும் பார்க்கணும். நல்ல விஷயங்களை சொல்லித்தரணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும். அளவோட பேசணும். அடக்கமா வாழணும். நம்ம கலாசாரத்துக்கு இழுக்கு ஏற்படுத்தாம பெருமையைச் சேர்க்கணும்னு சொல்லித்தந்தாங்க…”

“”கிரேட்…”

விஜய்யின் அம்மா அவளுக்குக் கை கொடுத்தாள்.

“”வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிட்டு பக்குவப்பட்டிருக்க. என் பையன் உன்னைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்காம லெட்டர் கொடுத்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்..”

பாராட்டி தட்டிக் கொடுத்தவள் திடீரென மன்னிப்பையும் கோருவாள் என எதிர்பார்த்திராத அபர்ணா சங்கடத்தில் தெரிந்தாள்.

“”அதெல்லாம் வேண்டாம்… நான் புறப்படுறேன்… அண்ணா போகலாம் வா…”

பட்டென கத்தரித்துக்கொண்டு புறப்பட்டவள் விஜய் பக்கம் திரும்பினாள்.

“”ஸôரி, விஜய் உங்க கோரிக்கையை

ஏற்க முடியலே.. வெரி ஸôரி…”

விஜய் கஷ்டப்பட்டு இயல்பு நிலைக்கு வந்து தலையை மட்டும் ஆட்டினான்.

முகபாவனையிலேயே கோபத்தை வெளிப்படுத்தியவாறு விஜய்யின் அப்பா கடைக்குப் போனார்.

“”கை கொடுடா கங்கிராஜுலேஷன்ஸ்…”

“”எதுக்கும்மா என் காதல் ஊத்திக்கிட்டதுக்கா…”

“”நல்ல பொண்ணுக்கு தான் லெட்டர் கொடுத்திருக்கே…”

“”வெறுப்பேத்தாத…”

“”விஜய், அவள் காதலைத்தான் வேணாங்கிறா. கல்யாணம் வேண்டாங்கலையே. காத்திருந்து கல்யாணம் பண்ணுடா. உன் காதல் கலைந்துபோகக்கூடாது. அவள் எதிர்பார்ப்பும் பொய்யாகக் கூடாது. அதுமட்டுமில்ல, அவளும் வேற வீட்டுக்குப் போகக்கூடாது…”

“”அம்மா… நீயா இப்படி…”

“”ஆமாண்டா எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. அவதான் என் மருமகள்னு தீர்மானம் பண்ணிட்டேன். எனக்கு வேலையில்லாம பண்ணிட்டே. அவ பொன்னோட பொருளோட வரவேண்டாம். அவளுக்கிருக்கிற தகுதி போதும். இப்போ இருக்கிற வசதிபோல பல மடங்கு உருவாக்குவா. இப்படிப்பட்ட பெண்கள் இன்னைக்கு இருக்கிறது ரொம்ப அபூர்வ விஷயம்டா…”

“”தேங்க்ஸ்மா.. தேங்க்ஸ்…”

விஜய் அம்மாவை கட்டிக் கொண்டான்.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *