ஒரு இருப்பிழந்த மனிதனின் இறை நிலை தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 16,509 
 
 

வாழ்க்கையின் போக்கிலேயே, துளசி வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அப்படி நிறைய அனுபவகள் வந்து போனாலும் இன்ப லாகிரியில் அவள் முற்று முழுதாக மூழ்கிப் போக நேர்ந்த அபூர்வமான ஒரு புது அனுபவம் அது அவளுக்கு. ஆண் பெண் என்ற பாலின ஈர்ப்புச் சங்கதி அவளையும் விட்டு வைக்கவில்லை. உடல் ரீதியாக வருகின்ற வெறும் காதல் மயக்கம் தான் அது. உடலாக வந்ததா உணர்வு பூர்வமான ஒரு தெய்வீகச் சங்கதியா என்று அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவளும் காதலித்தாள். கண் முன்னால் காட்சி அழகாகத் தோன்றுகின்ற எத்தனையோ வசீகரமான ஆண்மைக் களை கொண்ட கம்பீர புருஷர்களையே கனவு மயமாகக் காண்கையில், போயும் போயும் சமூக கடைக் கோடியில் செல்லாக் காசாகமட்டுமல்ல, மறை பொருளாகவும் இருக்க நேர்ந்த வசீகரனையா அவள் காதலித் தொடங்கியிருகிறாள்?ஆனால் அவன் ஓர் இலட்சிய இளைஞனாக தன்னைக் கட்டிக் கொண்டிருப்பவன். படிக்காத ஒரு மேதை. கொஞ்ச நாள் மலைநாட்டில் ஒரு கங்காணி வேலை பார்த்து விட்டு, ஈகோ குறுக்கிட்டதால் அதைத் தூக்கி எறிந்து விட்டு ஊரோடு வந்து சங்கமாகியிருக்கிறான். அவன் அவளுக்குத் தூரத்து உறவு. மச்சான் முறை என்றும் சொலலாம்.. மச்சானாவது, மண்ணாவது. கட்டையிலே போனால் எல்லாம் காற்றோடு தான். இதிலே கட்டை எங்கே வந்தது? பித்துப் பிடித்து அலைகிற ஆண்களுக்கு, வெறும் பெணுடம்பு தான் வேண்டும்,

அவளுக்கு அன்றே தெரியும். தான் வெறும் உடம்பு மட்டுமல்ல அதையும் தாண்டி உள்ளே உயிராக ஒரு பிரகாசமான ஆத்மாவாகத் தான் ஒளிர்ந்து கொண்டிருப்பதாக அடிக்கடி அப்பா சொல்லிக் காட்டுகிற வேதாந்தக் கருத்துகளைக் கேட்டதன் விளைவாக,அவள் அதை அறிவூர்வமாகவே, அறிந்திருந்தாள்.

அவளுக்கு ஏதோ அப்படிக் கொஞ்சம் ஞானம் இருந்ததால், எத்தனையோ சவால்களையெல்லாம் தீக்குளித்தே புடம் போடப்பட்டு மீண்டு எழுந்த ஒரு தபஸ்வினி போலானவள் அவள். .அவள் காதலிக்கதொடங்கிய அந்த வசீகரன் மலை நாட்டில் பணிபுரிந்த காலத்தில், ஊருக்கு வரும் போதெல்லாம் தவறாமல் அப்பாவை வந்து சந்தித்து விட்டும் போவான். அவளைப் போல வேதந்தக் கருத்துக்களும் அது சார்ந்த ஆன்மீக உலகமும் அவனுக்கும் ஓரளவு பிடிக்கும். அப்பாவின் சலிப்புத் தட்டாத வேதாந்தக் கருத்துகளைக் கேட்டு மகிழவே அவனின் வருகை இருக்கும். அப்படி அவன் வந்து போகிற தருணங்களெல்லாம், அவளும் அவள் சகோதரிகளும் வீட்டுக்கு வெளியே தலை காட்டாமல் திரை மறைவில் தான் இருக்க நேரிடும்.

இது ஒரு யுகத்துக்கு முன்னால் நடந்த கதை அது யுகமோ இல்லையோ? அவளைப் பொறுத்த வரை ஒவ்வொரு காலகட்டமும் யுகம் தான் அவளுக்கு. உண்மையில் வளர்ந்த பிறகு அவன் முகத்தைக் கூட அவள் பார்த்தறியாள் சின்ன வயதிலே பழகிய ஞாபகம். அவனுக்கென்று சொந்த இருப்பிடம் கூட இல்லை. சிறு வயதிலிருந்தே அவன் அனாதை தான் முறையாக மணமுடித்துக் குடும்பம். நடத்திய பெற்றொருக்கு அவன் பிறக்காமல் போனது அவன் செய்த குற்றமா?

இதனால் அவனுக்கு ஊருக்குள் நல்ல பெயருமில்லை அவனை ஆதரித்துச் சோறு போட ஒரேயொரு அக்கா மட்டுமே இருந்தாள் அவளும் முறை தவறி அவனைப் பெற்றெடுத்த அதே தந்தைக்குப் பிறந்தவள் தான் அவளும் அது ஒரு தனிக்க் கதை அதைச் சொல்லப் போனாக் விஸ்தாரமாகக் கதை நீளும். அவள் கணவன் எஸ்டேட்டில் வேலையாக இருந்ததால் இவனுக்கொரு புக்லிடம் கிடைத்த போதிலும் அதையும் கோட்டை விட்டு விட்டு இப்போது ஓரு தேனீர்க் கடையில் எடுபிடி வேலை பார்க்கிறான்.

சுன்னாகத்திலே தான் வேல அவனுகு. அவர்கள் வீட்டுக்கு முன்னால் நீண்டு வளைந்து செல்லும் குச்சொழுகை வழியாகத் தான், அவன் சுன்னாகத்திலுள்ள கடைக்குச் சைக்கிளில் போய் வருவான். அதிகாலை ஏழு மணிக்கே அவன் தரிசனம் கிடைக்கும். அப்படி அவனை க் காணும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் அவள் அவனைப் பொருளாகக் கொள்ளாமல் அசட்டையாகவே இருந்திருக்கிறாள். பின்னர் அவளின் சின்னக்கா கல்யாணம் நடந்தேறிய போது தான் அவர்களின் இலட்சியக் காதல் அரங்கேறியது. அதை அவன் அவ்வாறு தான் கூறுவான். அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன். ஊரில் அவன் அப்படிப் பேசுவதை ஒலிபெருக்கி வாயிலாக அவள் பலமுறை கேட்டதுண்டு. ஆனால் ரசித்ததில்லை. அவன் வெறும் மேடைப் பேச்சாளன் மட்டுமல்ல, சிறந்த நடிகனும் கூட. நகைச்சுவை பாத்திரத்தில் கொஞ்சமும் சோடை போகாமல், நன்றாகவே அபிநய பாவங்களுடன் அவன் நடிப்பது பற்றிப், பிறர் புகழ்ந்து சொல்ல, அவள் கேட்டிருக்கிறாள்..அப்போதும் அவனிடத்தில் மயங்காத மனம், சின்னக்கா கல்யாணத்தின் போது மட்டும் எப்படி அவனிடம் வசமாகச் சிக்கியது என்று அவளுக்குப் புரியவில்லை.

அது உடல் ரீதியாக வரும் வெறும் மயக்கம் தான் என்பது காலம் கடந்த ஞானமாகவே, அவளுக்கு உறைத்தது. .அவனுக்கு வேறு சிந்தனைக் களம் சராசரி வாழ்க்கையி,ன் ஓட்டத்தோடு கலக்காமல்,, அபூர்வமான அவனின் போக்கு தனித்துவக் களை கொண்டு பிரகாசிப்பதாய், அவளுக்கு உணர்வு. தட்டிற்று. ஆனால் அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதற்கான தகுதிகள் என்பது புறம் போக்கு வாழ்க்கை மயமான சிந்தனை காரணமாகவே வருவது..

அந்தக் காலத்திலேயே அக விழிப்பு நிலை கொண்ட உள்ளுலகம் பற்றி எவருக்குமே சிந்தனை இருந்ததில்லை. எல்லாத் தேடல்களும் வெறும் உடல் வாழ்க்கையை மையமாக வைத்து எழுவது தான். உயிரின் கதி மோட்சம் பற்றி அவளின் பெற்றோர் நினைத்திருந்தால் நிச்சயமாக வசீகரனே அவளை நல்லபடி வாழ வைக்கும் ஒரு தெய்வீக, புருஷனாக, அவளுக்கு வந்து வாய்த்திருப்பான்

அவர்களுடைய காதல் அரங்கேற்றம், உண்மையில் உடல் ரீதியாக மட்டும் நிகழ்தேறிய ஒன்றல்ல. அவனைப் போல் அவளிடமும் சிறந்த சில தெய்வீகப் பண்புகள் இருந்தன, அவள் தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற. ஒரு கவியரசியாகவும் விளங்கினாள். அபூர்வமாக அவளின் கவிதைகள் பத்திரிகையில் பிரசுரமாகும். .அதனால் வருகின்ற புகழ் மயக்கம் அவளுக்கு இருந்ததில்லை.உள்ளூற்றான ஓர் ஒளியுலகம் மட்டுமே உண்மையான அவளின் இருப்பாக இருந்தது. அந்த இருப்புக்கு மாறுபட்ட மறுதுருவமாக என்றைக்குமே அவன் இருந்ததில்லை.. உண் மையில் பாச வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஓர் இலட்சியவாதியாகவே அவன் விளங்கினான்.

அன்று சின்னக்கா கல்யாணம் வெகு ஆடம்பரமாகத் தான் நடந்தேறியது. அந்தக் காலத்தில் ஹால் கல்யாண்மெல்லாம் கிடையாது. வீட்டிலே நடக்கிற கல்யாணம். வெகு நேர்த்தியாக பந்தலை அலங்கரிக்கவே ஒரு கிழமை பிடிக்கும். பெரியக்கா கல்யாணத்தின் போது, இன்னும் களை கட்டின அலங்காரப் பந்தல். ஏதோ வில்லுப் பந்தலாம். கட்டி வைத்த தூண்களை அலங்கரிக்க நுவரெலியாவிலிருந்து மலர்க் கூடை வேறு வந்திறங்கியது. எல்லாம் கனவு மயமான வாழ்க்கையில் பொருட்டே நிகழ்வதாக, அவளுக்குத் தோன்றும்.

இப்போது அவள் வேறு கனவு காணத் தொடங்கியிருக்கிறாள். வசீகரனை மனதில் இருத்தி, அது ஒரு தவம் போல் நிகழத் தொடங்கியிருந்தது. சின்னக்காவின் கல்யாணத்திற்கு வந்தவன், அப்படியே போயிருக்கலாம். அதுவும் அன்று ஞாயிறு, விடுமுறை நாள் வேறு. அத் தினங்களில் துளசியின் பக்கத்து வீட்டில் இருக்கிற சுவேதா விட்டிலேயே பெரும்பாலும் அவன் மாலைப் பொழுது கழியும். சுவேதா அவனின் ஒன்ற விட்ட தங்கை.. வேலைநாட்களில் கூட இரவு வீடு திரும்பும் போது சுவேதா வீட்டிற்குத் தவறாமல் வந்து போவான், ஞாயிறு மாலை வேளைகளில் ஊரில் எங்காவது விழா நடந்தால் அதில் ஒரு பேச்சாளனாகக் கலந்து கொள்ள அவனும் போய் விடுவான்

இன்று மாறுதலாக துளசியைக் காதல் வலை போட்டு இருப்பதற்காவே முக்கியமாக அவனின் வருகை உற்சாக கதியில் அங்கு நிகழ்ந்ததுஅவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் மறக்க முடியாத அது ஒரு இன்ப அனுபவம்

வீட்டிற்கு முன்னால் அகன்று விரிந்திருக்கும் பெரிய முற்றத்தில், மணி மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் ஓரமாக அப்போது அவன் வந்து நின்று கொண்டிருந்தான். கல்யாண விழா களை கட்டிக் கொண்டிருந்த நேரமது. அதை மனம் கொள்ளாமல் அவன் உள்ளே அடுக்களை நிலை வாசல் கதவருகே, எதையோ வேடிக்கை பார்த்தபடி தன்னை மறந்து நின்றிருந்தான். முகம் கொஞ்சம் விகாரப்பட்டிருந்தாலும் வட்டமாகச் சுழன்றடிக்கும் அவனது விழிகளில் பிறர் மனதை ஈர்க்கும் ஒரு காந்தசக்தி இருப்பதாக,அதை உணர்ந்தவர்கள் நம்புவார்கள். அப்போது அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெறும் ஜடத்தையல்ல

உயிருள்ள ஒரு பெண்ணை. அதுவும் துளசியை. சொந்த அக்கா கல்யாணத்தைக் கூடப் பார்க்க விடாமல் அவளும் அவள் போன்ற கன்னிப் பெண்களும் முடு திரைக்குள் முகம் மறைந்தே இக் காட்சி விழாவை வெறும் புறக் கண்ணாலல்ல மானஸீக வழிபாடாகவே அதையெல்லாம் கண்டு களிக்க வேண்டியிருந்தது

அதையெல்லாம் நினைத்து அவள் வருத்தப்பட்டதாகவே தெரியவில்லை அவன் பார்க்கின்ற அவ், வேளை அவள் ஒரு தேவதை போலவே தோன்றினாள். அது வெறும் தோற்றம் தான் என்று ஏனோ அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. தோற்றதைக் கண்டு மயங்குகிற ஆளும் அவனில்லை

எனினும் மயங்கினான். கண்ணோடு கண் கலந்து, வெறும் காட்சி மயக்கமாக அதை அவன் உண்ர்கிற சமயம், அவளும் அவளின் பார்வைக்கு எட்டியவரை அவனே முழு உலகிலும் நிறைந்த ஒரு பேரொளியாக அவளை ஆட் கொண்ட அந்தச் சமயம், அவள் அடியோடு வேர் கழன்று வீழ்ந்து விட்ட ஒரு நிலைக்கே தள்ளப்பட்டிருந்தாள். பிறகு தான் யார் என்பதையே அடியோடு அவள்மறந்து போனாள். இந்த மறத்தலைத் தளமாக வைத்தே அவர்களின் காதல் நாடகம், சுவேதா வீட்டுத் திண்ணை வழியகவும் வேலி மறைப்புத் திரையையும் தாண்டி நீண்ட நாட்களாக அரங்கேறி வந்தது.

அவனும் அவளும் வாழ்க்கையளவில் ஒன்றுபடவே, முடியாத இரு துருவங்கள் போலவே அவர்கள் நிலைமை. உண்மையில் துளசி பெயருக்கேற்ற துளசி தான். அவள் எங்கிருந்தாலும் அவளைச் சுற்றி ஓர் ஒளி வட்டம் இயல்பாகவே தோன்றும் அது அவ ள் உயிர்பிரகாசமான உள் மையத்திலிருந்தே வருவதாக உணர்வு தட்டும். இதை யார் தான் கண்டார்கள்

சமூகம் அவளை எவ்வாறு கணித்து வைத்திருக்கிறது என்பதெல்லாம் வெறும் புறம் போக்கு சங்கதிகள் தாம். அவனைப் பொறுத்த வரை பூரண நிறையொளி தேவதை தான் அவள். அவளின் வளர்ப்பு முறை அப்படி தெய்வீகமான வாழ்க்கை சூழலில் புடம் கொண்டு எழுந்த ஓரு ஆதர்ஸ தேவதை போல, அவள் அப்போதெல்லாம் இருந்திக்கிறாள். அவனை உடல் ரீதியாகப் பார்க்கையில் நிறைய முரண்பாடுகள் தெரியும்..கருமை நிறத்துடன் நெடுதுயர்ந்த ஒல்லியான தோற்றம் அவனுடையது. முகம் வசீகரமற்று, சற்று நீளமாகவும் இருக்கும். அவனிடம் போய் துளசி எப்படித் தான் மயங்கினாளோ தெரியவில்லை. எல்லாம் வயசுக் கோளாறு தான். காதல் வசப்படும் போது, உருவம் எடுபவதில்லையென்பதே நிதர்ஸ்னமான உண்மை. அதிலும் அவன் கூறுவது போல் அவர்களுடையது உணர்வு நிலையைக் கடந்த,மோட்டசத்தையே கொண்டு வரும் தெய்வீகக் காதல். அதில் வேறுபாடான கருத்தின்றி, உடல் கூடி மகிழ்கின்ற ஸ்பரிச உணர்ச்சி மயக்கம் எந்த வேளையும் அவர்களிடம். வந்ததாகத் தெரியவில்லை. அவன் ஒரு விதமான சாமிப் போக்குத் தான். காவி தரிக்காத குறையாக துறவு நிலைக்காளாகி, உடலை வென்று வாழ்கிற ஒரு ஞானி கணக்கிலேயே பெரும்பாலான நேரங்களில் அவன் பேச்சு இருக்கும்.

அவள் ஒருநாளும் அவனை நேர் முகமாகப் பார்த்துப் பேசியதில்லை. அநேகமாக அவர்கள் பேசுவதெல்லம் கடித பரிமாற்றம் மூலம் தான். அதற்குச் சுவேதாவே ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் துணையாக இருந்திருக்கிற்றாள். தன்னிச்சையாக அவள் எழுதும் கவிதைகளையெல்லாம் பத்திரிகையில் போடவென அவன் உதவிக் கரம் நீட்டுவச்தாகச் சொல்லியே, சுவேதா மூலம் அந்தரங்கமாக அவர்களின் தெய்வீகக் காதல் வளர்ந்து வரும் வேளையில் தான், அந்த விபரீதம் நடந்தேறியது. எப்படியோ துளசியின் தங்கை மூலம் அந்தச் செய்தி வீட்டாருக்குத் தெரிந்து விட்டது.

அப்பா அடிக்காத குறையாகக் கடுஞ்சினம் மூண்டு பற்றியெரிய, துளசியை அழைத்துப் பக்கத்தில் இருத்தி வைத்துக் கொண்டு, சொன்னார்.

அவர் கூறுவதை மெளனம் வெறிக்கக் கலங்கிய முகத்தோடு அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் கேட்ட முதற்கேள்வியே அவளைத் திடுக்கிட வைத்தது

விதை ஊன்றாமலே மரம் முளைக்கிற காலம் இது என்று உனக்குத் தெரியாதா?

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஓர் ஊகமாகவே அவளுக்குப் பிடிபட்டது. .கன்னி கழியாமலே கருத்தரிக்கிற அசம்பாவித நிகழ்ச்சி பற்றி அவள் ஒன்றும் அறியாத பாப்பவல்ல. வசீகரனையும் அந்தத் தராசில் வைத்தே அவர் எடை போட்டுப் பேசியது, அவளுக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. அப்படியான கெட்ட சிந்தனையோடு அவன் கடிதம் ஒரு போதும் வந்ததில்லை. குறிஞ்சி மலர் நாவலின் கதாநாயகன், அரவிந்தன் என்றே தன்னை அவன் உருவகப் படுத்தி, அவன் எழுதும் உணர்வு பூர்வமான தெய்வீக வாசகங்கள் குறித்து, அவள் பெருமிதம் கூடக் கொண்டிருகிறாள். அது மட்டுமல்ல தனக்கு இணையாக வர இருக்கிற அவளை அந் நாவலில் வரும் பூரணி என்றே மிகைப்படுத்திக் கூறுவதை ஏனோ அப்போது அவள் மனம் ஏற்க மறுத்தது.

இதையெல்லாம் போய் அப்பாவிடம் கூறினால் கசையடி தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று, அவள் பரிபூரணமாக நம்பினாள். எனினும் பேச வரவில்லை. அவரே தொடர்ந்தார்.

அவன்ரை பிறப்பும் சரியில்லை. அனாதைப் பயல். உது நடக்காது, என்றார் இன்னும் கோபத்துடன்.

அவள் அப்போது ஏதோ கேட்க விரும்பி நெஞ்சம் துடித்தது. ஒரேயொரு கேள்வி கேட்க வேண்டும் அப்பாவை. குணம் மேலோங்கிச் சிறப்பதற்கு நல்ல குடும்பத்தில் தான் பிறக்க வேண்டுமா? முறை தவறிப் பிறக்கிற ஒருவன், தெய்வீக புருஷனாக வரக் கூடாதா? மனம் வாடுகிறதே! இதை சான்றுகளோடு நிரூபித்துக் காட்ட, என்ன ஆதாரம் இருக்கு என்னட்டை?

என்று நினைக்கும் போது அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு..வேதம் சொல்லியே வாழ்க்கையை விளங்க வைக்கிற என் அப்பாவிடமே வசீகரன் குறித்த இந்தச் சத்தியம் எடுபடாமல் காற்றில் பறக்கிறதென்றால், வேறு யார் தான் நம்புவர்,வசீகரன் குணக் கோளாறு நடத்தைகளற்ற ஒரு தெய்வீக புருஷன் என்பதை.

அப்பா நிலைமை இவ்வாறிருக்க, அம்மா இன்னும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டிருந்தாள். தாறுமாறாக வரும் சூடேறிய அவளின் அந்த வார்த்தைப் பிரகடனம் அவளுக்குப் பழகிய பாஷை தான்.

மூக்கிக்கு எப்படி இந்தக் குணம் வந்தது? அதைக் கேட்டுத் துளசிக்குத் துக்கம் மறந்து, சிரிப்புத் தான் வந்தது. .அவள் தன் மூக்கைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அவள் முகத்தைப் பார்த்தால் நீண்டு வளைந்திருக்கும் அவளின் மூக்குத் தான் முதலில் தெரியும். அதை வைத்தே, அவளுக்கு மூக்கி என்ற பட்டப் பெயர் வேறு..அந்த மூக்கே அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. .இந்த மூக்கைக் கண்டு தான், வசீகரன் அவளிடம் மயங்கினானா? இதை அவனிடம் தான் கேட்க வேண்டும்..இப்போது தேவை அதுவல்ல.அவனின் புனித இருப்பை நிரூபிக்க ஒரு சான்று கிடைத் தால் போதும்.. அதை எங்கே என்று தேடுவது? இதற்கான பதிலைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

அந்தக் காலம் மிக விரைவிலேயே, அவளின் காலடிக்கே வந்து சேர்ந்தது. சுவேதா அவளிடம் கொண்டு வந்து சேர்த்த வேதம், வேறு எதுவுமில்லை. வசீகரன் நடந்ததை அறிந்து,அவளிடமே உறுதிபடச் சொல்லி அனுப்பியிருந்தான்.. தன்னை மறந்து விடும்படி, ஒரேயொரு வாசகம் தான். வாலிபக் கோளாறு தலை தூக்கக் காதலில் மயங்கி வீழ்கிற ஓர் ஆண் அதற்கு மறுப்பு வரும் போது, வேதமா சொல்லிக் கொண்டிருப்பான்?தான் விரும்பும் பெண்ணைத் திசை திருப்பி வழி தவறி, அவன் போகவும் கூடும். ஆனால் வசீகரன் கொண்ட காதலை முன் வைத்து, வாழ்க்கையோடும் மனிதர்களோடும் போராடித் தீக்குளித்தே செத்து மடிய முன் வராமல் என்னவொரு கம்பீரத் தொனி அவனிடம்? அவன் வெறும் நல்லவன் மட்டுமல்ல. அதையும் தாண்டி உண்மையான புருஷ லட்சணத்துடன் களை கட்டி நிற்கிற அவனின் அன்புமயமான ஆன்ம சொரூபம். இதுவே அவனின் மகத்தான உள்ளுலக வெற்றியாய் அதைக் கொண்டாடி மகிழ அவள் மனம் துடித்தாலும் சமூக லட்சணங்களையே தேடி அலையும் அப்பா போன்றோரின் வெறும் கண்களுக்கு அவன் கூட இருப்பிழந்த ஒரு வெறும் மனிதன் தான் என்று, மிகவும் துயரத்துடன், அவள் நினைவு கூர்ந்தாள். இருப்புள்ள ஒரு சிறந்த மனிதனை அப்பாவே தேடிக் கண்டி பிடிக்கட்டும். இந்தக் கண்டு பிடிப்பில் அவள் வாழ்வின் உச்சத்தைத் தொடுவாளா மாட்டாளா என்பதைக் காலமே கூறட்டும். என்று அவள் காத்திருக்கிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *