கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 32,861 
 
 

முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்….

அது ஒரு சனிக்கிழமை….

கண்டிப்பாக பள்ளி விடுமுறை… அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்… அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்…ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி “இந்த மாதிரி …..இந்த மாதிரி…….” என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்… “உன்னவன்” என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்.. அவள் படிப்பாள்.. படிக்கும்போது எவ்வாறு எதிர்வினை புரிகிறாள் என்பதனைப் பார்க்கும் ஆவலில் நான் சற்று தள்ளி கிரிக்கெட் விளையாடுவது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

நேரம் ஓடிக் கொண்டிருந்தது…. 9…..10…..11…. 11.30…..

நானே பந்து வீசிக் கொண்டிருந்தேன்….. பந்து வீசும் இடத்தில் இருந்தால்தான் அவளை நன்றாக நேருக்கு நேர் பார்க்க முடியும்… அவளும் வெளியே நின்று அவளின் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தாள்… அதே குட்டைப் பாவாடை.. எனக்கு பிடித்த அதே சிவப்பு பனியனில் நேற்று தான் இந்தியா வந்த பிரெஞ்ச்காரி மாதிரி இருந்தாள்…

“முதல் முதல் திருடியதால்…. என்னை முழுசாய் திருடவில்லை…………………..” என்று சுப்ரமணி வீட்டு ரேடியோ… எனக்காகவே பாடுவது போல பாடிக் கொண்டிருந்தது……. நேரம் ஆக, ஆக… எனக்குள் கொப்பளிக்கத் தொடங்கியது, டோபாமைனின் வீரியமா… பயங்களின் அமிலமா…? என்று புரியவில்லை.. புரியாத புள்ளியில்தான் அவளின் அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்….

நன்றாக கேட்டது……..”போ.. அம்மா கூப்டறா….நான் கழுவறேன்” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளைக் கழுவத் தொடங்கினார்..

எனக்கு வியர்த்து விட்டது…. போடுகிற பந்து எல்லாம் நோ பால் ஆகவே போய்க் கொண்டிருக்க……..

பாலு….. என்னிடம் வந்து “இன்னைக்கு அடி கண்டிப்பாக உண்டு.. பேசாம இங்க இருந்து போய்டு…..”- என்று காதுக்குள் கிசுகிசுத்தான்….

கையை பிசைய கூட மறந்த விட்ட படபடப்பில்… “என்ன செய்யலாம்”- என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மகராஜன் போல போஸ்ட்மேன் வந்தார்… நேராக அவரிடமே சென்று …..”உங்க பொண்ணுக்கு போஸ்ட் வந்தருக்கு… குடுத்ருங்க…….” என்று கொடுத்து விட்டு போய் விட்டார்… எனக்கு அழுகையே வந்து விடுவது போல இருந்து… அவர் அங்கேயே பிரித்தார்.. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் …… எங்கள் குழுவில் உள்ள 6 பேருமே அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்……திக் திக் நொடிகளில்… எங்கள் விளையாட்டு ஆங்காங்கே காலத்தை நிறுத்துவது போல.. நிறுத்தி ஒரே புள்ளியில் குவிந்த வண்ணம் நடுங்கிக் கொண்டிருக்க……..

“எமி……………………லீ………………………………..” என்று அழைத்தார்.

அவளும் விரிந்த கூந்தலோடு டீ குடித்துக் கொண்டே வெளியே வந்தாள்.. ‘என்னப்பா’ என்பது போல…

கிரீட்டிங்கை நீட்டினார்.. அவள் வாங்கிப் பார்த்த மறுகணம் பட்டென்று என்னைப் பார்த்தாள்…… நான் அதற்கு முந்தைய கணமே சட்டென திரும்பிக் கொண்டேன்… அவளின் அப்பா அவள் பார்த்த பார்வையை நூல் பிடித்தது போல சட்டென திரும்பினார்.. அதற்குள் அவள் கப்பென்று குனிந்து கொண்டு “தெரிலப்பா… யார்னு”- என்றபடியே வீட்டுக்குள் வேகமாக சென்று விட்டாள்…நான் கண்களை எதுவரை முடியுமோ அது வரை நீட்டித்தேன்….

“அப்பறம் என்னதான் ஆச்சு.. சொல்லு………”- என்றேன்…. சைக்கிளை மிதித்துக் கொண்டே….

“அதை அனுப்பினது நீ தான்னு ஒத்துக்கோ அப்புறம் ஏன்னாச்சுனு நான் சொல்றேன்…”- என்றாள் எமிலி.. என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு…

“அயோ இல்லடி.. நான் அனுப்பல…”-என்று சொல்லி மெல்ல சிரித்தேன்….

“பொய் சொல்லாதடா………….” என்றபடியே என் வயிற்றைப் பிடித்து கிள்ளினாள்…..

“எனக்கு தெரியும்.. அவளோ தைரியமா உன்ன தவிர எவனும் அந்த வேலையை பண்ணிருக்க மாட்டான்….” என்று என் முதுகில் சாய்ந்து கொண்டாள், செல்லமாய் முகத்தை முதுகினில் உரசிக் கொண்டே…..

நாங்கள் பயணித்த மழைப் பிரதேசத்தில் சனிக்கிழமை என்பது அத்தனை அழகா என்பது போல இருந்தது… எங்கள் பார்வைக்குள் கிடந்து உருளும் பொன்னிற கூந்தலென மேகங்களும், பனி சாரலும்….வந்து போகும் காற்றெல்லாம் வாடைக் காற்றா என்பது போல… ஓடை நீரில் முகம் தெரியும் சூட்சுமமாக நீர் தெளித்து விளையாடும்…..இயல்புகளில் இன்னிசை சுமக்கும் இயற்கையோடு நான் அவளாக, அவள் நானாக… நாங்கள் நாங்களாக… அல்லது வேறு யாரோவாக…மாறிக் கொண்டிருந்தோம்… இல்லாத தேசத்தில் இருப்பது போல ஒரு கனவுலகைக் கட்டிக் கொண்டே………

“உனக்கு ஞபாகம் இருக்கா… நாம எப்டி முதல்ல பார்த்தோம்னு”- கேட்டேன்…..

அவள்…”ம்ம்ம்………….. இருக்கு………………… ஒரு வெங்காயக்காரன்தானே நம்மல சேத்து விட்டான்……….” என்று சொல்லி சிரித்தாள்…

உருண்டைக் கண்கள்.. கனத்த உதட்டில்… கேரளக்காரி என்பதை அவ்வப்போது.. கண்கள் சுருக்கி….”அய்ய்யே…….” என்று சொல்வதில் காட்டிக் கொண்டே இருப்பாள்…இருந்தாள்…. அவளோடு இருப்பது போல ஒரு வித பரவச நிலை… வேறெங்கும் நான் கண்டதில்லை… ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொண்ட கணம் அவளின் அருகாமை… அவளுக்கும் அப்படித்தானாம்.. சொல்லுவாள்.. சில போது வார்த்தைகளை மெல்லுவாள்…

“எங்கப்பா யார் தெரியுமா… மிலிட்டரி…” என்ற ஒரு நாளில்தான் முதல் முத்தத்தை எதிர் பார்க்காத கணத்தில் கொடுத்து விட்டு ஓடி வந்தேன்… அடுத்த நாள்… காலையில் கல்லூரி செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் என் அருகே கோபமாக வந்து என் தலையில் நங் என்று கொட்டி விட்டு ஓடிப் போனாள்… என் நண்பர்கள் மத்தியில் சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் பேருந்தில் ஏறி போனது ஞாபகங்களின் கவிதை….

“ஆங்….. தள்ளுவண்டி வெங்காயக்காரன்…….. இன்றும் எப்போதாவது பார்ப்பேன்…அதே புன்னை கையோடு கடந்து செல்வார்….

அன்று ஒரு திங்கள் கிழமை…

நான் தலைக்கு குளித்து விட்டு வாசலில் நின்று தலையைக் காய வைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண்…………. ம்ம்ம்… ஒரு 11வது படிப்பாள் என்று நினைக்க கூடிய உடல்வாகில்…… துணியை அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டு நின்றாள்… நான் தலையைத் துவட்டுவதற்கு தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினேன்… அவளும் எதற்கோ சரி என்பது போல தலையை ஆட்டினாள்… இடையில் வெங்காயக்காரன், என்னையும் பார்த்து விட்டு அவளையும் பார்த்து விட்டு.. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………. “- என்பது போல தலையை ஆட்டினான்… எனக்கு ஒன்றும் புரியவில்லை… நான் வெங்காயக்காரனையும் பார்க்கிறேன்… அவளையும் பார்க்கிறேன்.. அவளும் அப்படியே பார்த்தாள்….. நான் திரும்பி வீட்டுக்குள் வந்து விட்டேன்…

ஆனால் அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை…என்னமோ செய்தது… யோசிக்க யோசிக்கும், யோசிக்கும் அத்தனை யோசனையும்…ஒரு யோசனையில்தான் போய் நின்றது.. அது அவளின் முகம்..

“என்னடா இது வம்பா இருக்கு.. நான் ஏன் இப்போ அந்த புள்ளைய நினைக்கறேன்…”- என்று என்னென்னமோ ஓடுகிறது…. காலையில் மந்திரித்து விட்டது போல அதே நேரம் அதே இடத்தில் தலை துவட்டிக் கொண்டு நின்றேன்.. அவளும் அதே இடத்தில் துணி அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருந்தாள்… இன்று வெங்காயக்காரன் இல்லை…. ஆனால் நான் உரிந்து கொண்டு நின்றேன்…எங்கேயோ பார்ப்பது போல பார்த்தேன்.. அவளும் அதே போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்…..

“பேர் என்னவாக இருக்கும்.. என்ன படிப்பாள்…?…”

அப்போதுதான் கவனித்தேன்… குட்டைப் பாவாடை.. குட்டியூண்டு சட்டை… பொட்டில்லாத முகம்… அழுத்தமான பார்வை… நான் பார்க்க பார்க்கவே துணியை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்… அழுத்தமான நடை… அத்தனை அழகான கச்சிதமான… கம்பீரமான நடை… நேர் கொண்ட பார்வையில் வேகமாய் போய்க் கொண்டிருந்தாள்….அந்த வீதியே அதிர்வது போல உணர்ந்தேன்… இன்னும் வேறு வகையான மாய சுழலுக்குள் சூழலுக்குள் நான் போவதும் வருவதும் போல கிறு கிறுத்து நின்றேன்.. நிற்பது நானாக இருப்பினும்… நின்றது காதல்தான் என்று உணர்ந்தேன்…

“நானும் உன்ன பார்த்தேன்… ஆனா… இப்டி உன்னையே பார்ப்பேன்னு யோசிக்கல…”- நாங்கள் மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இலை உதிரும் சிறு துளிகளில் சில்லிட்டபடியே கண்களும் கண்களும் நோக்க.. நொடிகளைக் கவிதையாக்கி கற்பனைக்குள் நீராடும் மீனாகும் துடிப்போடு… கொஞ்சம் நெருக்கிக் கொண்டே… நெருங்கினோம்… நெருங்கிய பொழுதெல்லாம் நொருங்கினோம்….

“ம்ம்ம்… நீயே சொல்லு… நீ தான் கதை சொல்லி ஆச்சே……” என்றாள்… நெற்றி பார்த்த முத்தம் பதித்தபடியே…நான் யுத்தம் கண்ட வாளினையப் போல.. சீறிட்டு கூர்மையானேன்…

அதன் பிறகு…. அவள் போகும் இடம், வரும் இடம் எல்லாம்… பின் தொடர்ந்து…… அதை அவளும் உணர்ந்து……. ஒரு நாள்.. மொட்டை மாடியில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…….

நன்றாக தெரியும்…. நான் நிற்பது தெரிந்துதான்.. சைக்கிளில் அந்த வீதி முழுக்க சுற்றிக் கொண்டேயிருந்தாள்….அவள் சைக்கிளில் சுற்றினாள்… நான் நின்று கொண்டே சுற்றினேன்….

“சரி.. இன்று கேட்டு விடுவதுதான் சரி”- என்று நம்பி… காற்றினில் வரைந்து கொண்டே மௌன பாஷையில் “-உன் பேர் என்ன…?” என்றேன்..

அவளுக்கு புரிந்து விட்டது.. போய் விட்டாள்..

அடுத்த முறை வரும்போது இடது கையை கேண்டில் பாரில் இருந்து எடுத்து ‘படித்துக் கொள்’ என்பது போல சற்று மேல் நோக்கிக் காட்டினாள்.. உள்ளங்கையில் ஏதோ எழுதி இருந்தது… கண்களை சுருக்கி குனிந்து நன்றாக உற்றுப் பார்த்தேன்.. E- இல் தொடங்கி ஏதோ புரியாத மொழி போல இருந்தது பெயர்…. . சத்தியமாக புரியவில்லை… புரியாத போது இருக்கும் அதீத ஆர்வம் புரிந்த பின் இருப்பது இல்லை… ஆனால் எனக்கு புரிந்த இன்னும் இருந்தது…. புரியாத போது இருந்ததைப் போலவே…

“என்னடா இது……!!!!!”- என்று தலையைப் பியித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு காகிதத்தை சுருட்டி மேலே வீசினாள்.. ஓடிப் போய் பிரித்தேன்.. சுருக்கம் நிறைந்த இதயம் சீராக துடிப்பது போல இருந்தது, தீராத வேகம் கொண்ட ரத்தத்தில் புது சக்தி பிறந்ததைப் போல…..

“எமிலி மெடில்டா”- “என்னால் இந்தப் பெயரைப் படிக்க கூட முடியவில்லை….. என்ன மாதிரி பேர் இது.. இதுவரை கேட்டதே இல்லையே….”- மனம் சுருக்கெழுத்து போட்டிக்குள் தடுமாறுவது போல இருந்தது…

“இது இங்லீஷ் பேர் மாமா…. உனக்குதான் தெர்ல…”-என்று சொல்லி சத்தமாக சிரித்தாள்.. அவள் இப்படி சிரிப்பதற்காகவே இன்னும் ஒரு முறை தெரியல என்று சொல்லலாம் போல……

“என் பேர் கூட சொல்ல தெரியல… இதுல என் மேல லவ் வேற…..”- என்றபடியே இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்ட ஒரு நாள் மதியத்தில் அவளின் சட்டையை நான் அணிந்திருந்தேன்…….. என் சட்டையை அவள் அணிந்திருந்தேன்……. அவளின் வீடு பட்டாம் பூச்சிகளால் நிரப்பப்பட்டது போல காணப்பட்டது…….. அன்று, அப்படி ஒரு மழை… நாங்கள் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி மழையை பார்த்துக் கொண்டிருந்தோம். மழையும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது…. காலங்கள் நின்று போன காலம் அது… ஒரு வித இளம் சூட்டில் இருவருமே… மெல்ல புன்னகைத்துக் கொண்டோம்… பின்மதிய நேரம் கூட இருள்மாலை போல கவிழ்ந்திருந்தது… அவள் கழுத்தின் வாசத்தில் மெய்ம் மறந்த காலம் அது… என் கழுத்துக்குள் முகம் முயங்கிக் கொண்டிந்த காலத்தை யாரோ தடுத்து நிறுத்தியது போல… எங்கள் பின்னால் யாரோ நிற்பது தெரிந்தது…..திரும்பினோம்.. பயந்து கொண்டே…

அவளின் அம்மா..

நான் எதுவுமே சொல்லாமல் சட்டையை கழற்றினேன்.. அவளும் நடுங்கிக் கொண்டே பயந்தபடியே… சட்டையை அங்கேயே கழற்றினாள்…

“அப்புறம் என்னாச்சுடி……” என்று பல முறை கேட்ட பிறகும்.. எமிலி ஒன்றுமே சொல்லாமல்…….” உங்க அத்தைகிட்ட ஓகே வாங்கவேண்டியது என் பொறுப்பு …..” என்று என் தலையைக் கலைத்து விட்டாள்….

இன்றும் கூட கலைத்து விட்டாள்… நானும் அவள் கூந்தலை கழற்றி விட்டேன்… மலை உச்சி காற்றுக்கு அது குடையாக நீண்டு கொண்டே இருந்தது….. “குடை வேண்டுமா… மழை வேண்டுமா…” என்று முனங்கும் இதழில் “இதழ் வேண்டுமே…இனி மீண்டுமே…” என்று கொஞ்சினேன்…கண்கள் கொண்டு கவிதை செய்தாள்…. படிக்க முடியவில்லை……தொடர்ந்தேன்….

அவளின் கழுத்தினோரம் நான் முயங்கி சரிந்து கொண்டேன்….

“ரசனைக்கார மாமா டா நீ ……” என்று செல்லமாக கன்னத்தில் கடித்து வைத்தாள்…

“உனக்கொரு பேர் வைக்கட்டா…?”- என்றாள் ஒரு கிறிஸ்மஸ் நாள் அன்று…

“ம்ம்.. வையேன்…” என்றேன்…

ம்ம்ம்……என்று ….. யோசித்தபடியே… “பிரான்சிஸ் எடின் பாரோ” என்றாள்…

‘என்னடி பேர் இது….. உன் பேர் மாதிரியே வாய்க்குள்ள நுழையவே மாட்டேங்குது”- என்றேன்……

சிரித்துக் கொண்டே …” செம பேர் மாமா…… நம்ம கல்யாண பத்திரிகையில இந்தப் பேர்தான் இருக்கணும் சரியா……?” என்றாள்..

“எப்படியோ என்னை மதம் மாற சொல்ற.. இல்லியா…”

“ஏன் மாமா…. மாற மாட்டியா”..

“உனக்காக மதம் என்ன….. மதத்தையே கூட மாத்துவேன்……..”

‘அப்போ நானும் மாறிக்குவேன்…. எனக்கொரு பேர் வையேன்…”

“ம்ம்ம்….. ரத்னா…. எங்க பாட்டி பேர்…”

அத்தனை கூட்டத்திலும் கை கோர்த்துக் கொண்டாள்….

“என்னது ஒன்பதுதான் படிக்கறயா… ஓகாட்……”- என்று புலம்பிய ஒரு டியூசன் நாளில்தான்… நீ லவ் கன்பாம் பண்ணின……. ஞாபகம் இருக்கா..?”-
அதற்கும் சிரித்தாள்….

“11வது படிக்க வேண்டிய வயசு… 3வதுல ஒரு தடவை… 7வதுல ஒரு தடவை பெயில்னு சிரிச்சுட்டே சொன்ன பாரு… நான் முடிவே பண்ணிட்டேன்.. கட்டினா உன்னதான்டின்னு…”-
அதற்கும் சிரித்தாள்….

அவள் சிரிப்போடு நான் என் அழுகையை மறந்த காலங்கள்தான் பொற்காலம்… மழை ரசிக்கத் தொடங்கிய காலம் அது… மறுகன்னம் காட்டத் துவங்கிய காலம் அது..காலங்களின் காலம் அது…. அது முழுக்க நாங்கள் மட்டுமே…

அதன் பிறகு… மலை ரசித்தோம்… மௌனம் புசித்தோம்… முத்தங்களில் இதழ்கள் புதுமைகள் படைத்தன… நாட்கள்….. வருடங்கள்……. நகர…… நகர……. நான் முதுகலைப் பட்டம் வாங்க போய் விட, அவள் இளங்கலை பட்டத்துக்குள் நுழைந்தாள்… வயதும் ஆனது… ஒரு நாள், அந்த ஒரு நாள், நான் மீண்டும் தூக்கம் இல்லாமல் போன அந்த நாள்.. அதை நன்றாக ரீவைண்டிங் செய்து பார்க்க முடிகிறது……

ஆம்….அவள் என்னை விட கொஞ்சம் உயரமாகியிருந்தாள்… இல்லையே……… நன்றாகத் தெரியும்.. நாங்கள் பழக ஆரம்பிக்கும் போது, அவள் என்னை விட உயரம் குறைவு.. ஆனால் இப்போது எப்படி உயரமாகியிருக்கிறாள்…?…

“ஹீல்சா”- என்று பார்த்தேன்…. இல்லை…

அதன் பிறகான நாட்களில்…… அவள் நன்றாக என்னை விட வளர்ந்து விட்டிருந்தாள்… இப்போது அவள் நிஜமாலுமே ஒரு பிரெஞ்சுக்காரியைப் போல தான் இருந்தாள்…இன்னும் இன்னும் அழகாக ஆகி இருந்தாள்….. என்னால் சைக்கிளில் அமர்ந்து கொண்டுதான் அவளிடம் பேச முடிந்தது..

“ஏன் மாமா.. கிட்ட வரவே மாட்டேங்கற”- என்று ஒரு நாள் கேட்டாள்…வழக்கம் போல ஒரு பார்வை கொண்டு…

நான் தடுமாறி எக்கி… ஹீல்ஸ் வைத்த ஷூவுடன்….. அருகில் சென்று நின்றும், என்னால் பேச முடியவில்லை…. என் கவனம் முழுக்க உயரத்தில் நின்று விட… அவள் பேசிய வார்த்தைகள் உள்ளுக்குள் போக மறுத்தது… இனம் புரியாத தவிப்புக்குள் நான் கரை புரளத் தொடங்கினேன்…பின் சின்ன
சின்ன சண்டைகளை நானே முளைக்க வைத்தேன்…. காரணம் அறியேன் என்று கூறினாலும்… கனன்று கொண்டிருந்த உயரம் என்னை இன்னும் இன்னும் தாழ்த்திக் கொண்டே இருந்தது……நான் அவளைத் தவிர்க்கத் தொடங்கினேன்….தவிர்த்தலின் ஊடாக ஒரு மெல்லிய கோடு.. ரத்தம் கசிவதைக் கண்டேன்…

“உயரம் ஒரு பொருட்டா.. காதலில்..”- என்று இன்று என்னால் வாய் கிழிய பேச முடியும்.. ஆனால் அன்று பேசவும் முடியவில்லை.. யாரிடமும் பகிரவும் முடியவில்லை…முடியாதவைக்குள்… முயங்கி சரிந்து கொண்டேன்…

“ஏன் மாமா என்னை பிடிக்கலையா…..?” என்று ஒரு நாள் அழுது கொண்டே கேட்டாள்……

நான் பதிலே பேசாமல்… கடந்து விட்டேன்… காரணமே இல்லாமல் ஏன் பிரிய வேண்டும் என்று நண்பர்கள் கூட கேட்டார்கள்… ஆனால் யாரிடமும் எதுவும் பேச இயலவில்லை…. இயலாமையின் உச்சம் கூட கீழே எங்கேயோ இருந்தது போலதான் இருந்தது…

என் ரசனைகள் உடைந்து சுக்கு நூறாகின… நான் நிறைய பயந்து நடுங்கிய நாட்கள் அவை… அவளும் நானும் நாளை ஒன்றாக நடந்து சென்றால் ஊர் பேசும் கேலியை என்ன செய்வது என்று உள்ளுக்குள் புழுங்கிய நாட்கள் அவை…..வேண்டும் என்றே சைக்கிளைக் கழுவியபடி கிரிக்கெட் விளையாடும் என்னை பார்த்து அழுது கொண்டே நிற்பாள்.. நான் அவள் பக்கம் திரும்பவே மாட்டேன்…திரும்ப திரும்ப திரும்பிய காலங்கள் திரும்பாலே திரும்பிக் கொண்டது போல அவள் திரும்பாமலே என் திரும்பதலுக்கு நிற்பாள்… நான் அப்போதும் திரும்ப மாட்டேன்…. திரும்புதலில் நேர்கோடு புரிய மறுக்கின்றன.. எனக்கும் அன்று புரியவில்லை… இரவினில் அவள் வாசலைக் கடப்பதை தவிர்க்கத் தொடங்கினேன்… அவள் பெயர் எழுதிய என் புத்தக பக்கங்களைக் கிழித்தெறிந்தேன்… என்னால் பழையபடி யாரிடமும் சிரிக்க முடியவில்லை….. சிரிப்பது போல கூட இருக்க முடியவில்லை…. மொத்தத்தில் இருக்கவே முடியவில்லை……… ஒரு ஓட்டம் துரத்திய மலை உச்சியில் கால் வலிக்க நின்ற காலங்களை நினைக்காத போதும் நான் மலை உச்சியில் தனியாக சுற்றி..நகர்ந்து நகர்ந்து… ஒரு குட்டைப் பாவாடையைக் கடந்து வர எனக்கு அத்தனை சுலபமாகவும் இருந்து…. ஒரு சிவப்பு பனியனை நான் சுத்தமாக மறந்து போனேன்… மறப்பது ஒன்றுமே இல்லை…… மண்ணாங்கட்டி மனம்.. அதையும் சேர்த்து தான் சொல்கிறேன்……

நாட்கள்….. மாதங்கள்.. வருடங்கள்… கடந்த ஒரு பத்தாண்டுக்கு பின்னால் ஒரு நண்பனின் திருமணத்திற்கு கோவையில் உள்ள பிரபலமான ஒரு ஆலயத்க்கு சென்றிருந்தேன்..

அங்கே ஒரு சிஸ்டர்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது…… திருமணம் முடிந்து சாப்பிட ஹாலுக்குள் செல்லும் போது நிதானமாக என் அருகே வந்து நின்றார் அந்த சிஸ்டர்…

நான் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்……. மனதுக்குள் கிழிந்து பறந்த ஒரு கோடி விவிலியங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்…….

“என்னை தெரியுதா?….. என்றார்…….

நான் தலையை பிடித்து கொண்டு சரிந்தேன்… எனக்கு அருகே அத்தனை உயரத்தில் ஒரு ஏசுவைப் போல நின்று கொண்டிருந்தாள் எமிலி மெடில்டா….

அவள் எனக்கு எழுதிய கடைசி கடிதத்தின் கடைசி வரிகள் அங்கே மீண்டும் ஒலிப்பதாக தோன்றியது…………

“என் ஆதியும் நீயே என் அந்தமும் நீயே…”

Print Friendly, PDF & Email

4 thoughts on “எமிலி மெடில்டா

  1. Eppadi mudigiradhu ungalal mattum…. ovvoru padaippum arpudham… kadhal vazhindhodugiradhu ungal varthaigalil. …

  2. படிப்பவா் அனைவருக்குள்ளும் ஒரு எமிலி மெடில்டா,பிரான்ஸிஸ் எடின் பெரா ஔிந்து கொண்டுதான் இருக்கிறாா்கள் ஏனெனில் எனக்குள்ளும் ஒரு எமிலி மெடில்டா.வாழ்கையில் எந்த ஒரு தோல்வியும் கோபத்தை வரவழைக்கும்,காதலில் மட்டும் தான் அழுகையும் நினைவையும் பெற முடிகிறது அருமை கவிதை தொடரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *