என் பெயரும் கிருஷ்ணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 19,490 
 
 

இன்று அம்மாவிடமிருந்து தப்பிக்க முடியாது என்று என் வார்ட்ரோப் துணியை எடுத்து துவைக்கப் போடக் கிளம்பினேன். ஒரு சோம்பேறி ஞாயிற்றுக் கிழமையில் என்னுடைய உடுப்புகளை அலசிப் பிழிந்து உலர்த்தும் ஒரு எந்திரத்தின் வாயில் பத்து நாட்களாக தேங்கிப் போன துணிகளைப் போட எனக்கு அப்படி ஓர் அலுப்பு. உனக்குன்னு ஒருத்தி வந்தா தெரியும் என்ற தனது பாடல் வரிகளை அம்மா இப்போது குறைத்துக் கொண்டு வருகிறாள். நானும் அம்மாவுமான உலகில் சுருங்கி விடுவோமோ என்ற பயம் அவள் மேல் படர்ந்து பல நாட்களாகிவிட்டன. எனக்கு அலுவலகம் என் கீழ் வேலை செய்ய பத்து பேர் என்று வேறு ஓர் உலகம் இருந்தாலும் கணவனும் இழந்த என் அம்மாவின் உலகத்தில் நான் மட்டும்தான். இனிமேலும் அம்மாவை அலைய வைக்க வேண்டாம் என்ற தீர்மானத்தோடு என்னிடம் தேங்கியிருந்த பல அழுக்குத் துணிகளை என் வார்ட்ரோப் , பீரோ என்று தோண்டி எடுத்துப் போடும்போதுதான் ஸ்வேதாயின் இலை பச்சை ஃபுல்வாயில் புடவையும் ஏதோ பல அடுக்குகளின் அடியில் மறைந்து கிடந்த இரகசியம் ஒன்று காற்றில் பறந்து விரிந்து படர்ந்ததைப் போலக் கிடந்தது.

வெளிர் பச்சை நிறம் ஸ்வேதாக்கு மிகவும் பிடிக்கும். ஸ்வேதாவே கூட அப்படி ஒரு வெளிர் பச்சை நிறப் புடவையுடன்தான் அறிமுகமானாள். அதை அவள் மீண்டும் ஒருமுறை எனக்கு ஞாபகபடுத்தியபோது எனக்கு அந்த நிகழ்ச்சியுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய இந்த வங்கி வேலை என் தந்தையின் இறப்பினால் கிடைத்த வேலை என்பதால் எப்போதும் தனியே வந்து பழகியிராத என் அம்மாவிற்காக நான் ஒரு வாலிபனின் வயதோடு ஒரு வயதான குடும்பத் தலைவருக்கு உண்டான வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன். அப்பா இறந்த பின்பு அம்மா தனியாக தன் ஆசைகள் எதையும் வெளியில் சொல்லாமல் பூட்டி வைத்த வண்ணம் இருந்தாள். ஓர் எல்லைக்கு மேல் அவளை வற்புறுத்த முடியாததால் வெளி வேலை முழுவதையும் நான்தான் செய்தேன். அப்படி ஒரு வேலையாக அவளுக்குச் சில நேரங்களில் புடவை எடுத்துக் கொடுக்க புடவைக் கடைக்கு போவேன். அந்தக் கடையில் ஸ்வேதா அன்று புடைவைப் பிரிவில் இருந்ததாக அவள் சொல்லுவாளே தவிர எனக்கு அதனை என் நினைவில் மீட்டுக் கொண்டு வரவே முடியவில்லை.

“ நீங்க ஒரு மோடிவ் இல்லாம புடவைகளைப் புரட்டிக் கிட்டு இருந்தீங்க. உங்க கலர் சாய்ஸ் இருக்கே கடவுளே உங்களுக்கு மனைவியா வரப் போறவ பாவம்னு நினைச்சேன் அன்னிக்கு. நான்தான் ஒரு வெளிர் பச்சை புடவையை எடுத்து இதைக் கொண்டு அம்மாகிட்ட கொடுங்க அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னேன்.” என்று அவள் அன்று நடந்ததை ஏதோ முந்தையநாள் நடந்தது போல விவரிக்கக் கேட்கும்போது நான் அவளிடம் அது எப்படி சாத்தியம் என்று கேட்டேன்.

“ அன்னிக்கு நீங்க உங்க வாலட்டை மறந்து வச்சிட்டு போயிட்டீங்க. வாலட்டில் நிறைய பணம் கார்ட் எல்லாம் இருந்தது. நான்தான் எடுத்து வெச்சேன் . நீங்க வேர்க்க விறுவிறுக்க வந்து வாலட்டை மறந்து வச்சுட்டு போயிட்டதா வந்து சொன்னப்ப எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருந்தது. எந்த விகல்பமும் இல்லாத ஒரு குழந்தை முகம். ஒருவேளை அந்தக் குழந்தைமையைத்தான் நான் காதலிச்சேனோ என்னவோ “ என்று மீண்டும் ஒரு நீண்ட பிரசங்கம் கொடுத்தாள்.

அவளுக்கு முதன் முதலாக ஒரு பரிசு கொடுக்கலாம் என்று தோன்றி பல பொருட்களை யோசித்து முடிவாக இந்த வெளிர் பச்சை வண்ண புடவையைத்தான் பரிசாக அளித்தேன். அப்போது அவள் எங்கள் அலுவலகத்தில் வேலையில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தன.

எனக்குப் பூர்வீகம் இந்த ஊர் கிடையாது. திருநெல்வேலியில் ஒரு குக்கிராமம். அப்பா ஆரம்பத்திலிருந்து படிப்பு வெளியூர் வேலை என்று அலைந்து இறுதியாக இந்த ஊரில் மூச்சை விட்டதால் எனக்கு இங்கே வீடு வேலை எல்லாம். ஆனால் ஸ்வேதாவுக்கு இதுதான் பூர்வீகம். அவளுடைய அப்பா ஒரு குடியிருப்புப் பகுதியில் ராமர் கோவிலில் குருக்களாக பணி. சொற்ப வருமானம். நான்கைந்து பேர் கொண்ட குடும்பத்தின் கௌரவமான ஜீவிதத்திற்காக ஒரு நிலையான வேலைக்காக ஸ்வேதா அலைந்து கொண்டே இது போன்ற கடைகளிலும் விற்பனைப் பெண்ணாக வேலை பார்த்தபோதுதான் நான் அவளைச் சந்தித்திருக்கிறேன்.

எனக்கும் அவளுக்கும் நடுவில் நட்பைத் தாண்டிய ஈர்ப்பு எதனால் வந்தது என்பதை ஆராயும் நிலையைக் கடந்திருந்தோம்.

“ வண்ணங்கள் எனக்கு உவப்பானவை அல்ல” என்றேன் ஒருநாள்.

“ ஏன் ? “ என்றாள்.

“ நிறங்கள் மனிதரைப் பிரிக்கின்றன.” என்றேன். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.

“ நிறம் அடையாளமாக இருக்கக் கூடாதா? “ என்றாள்.

“ அடையாளம் என்பது மனிதர்களைத் தனிமைப்படுத்தி விடாதா? “ என்றேன்.

“ எங்கள் பெருமாளையும் கருநீல நிறத்தையும் பிரிக்க முடியாது “ என்றாள்.

“ அது என்ன உங்கள் பெருமாள் ? அவர் எல்லோருக்கும் பெருமாள் இல்லையா? “

“ எங்கள் பெருமாள் என்றால் ஒரு நெருக்கம் பிறக்கிறது இல்லையா? “

“ நம்புகிறாயா ஸ்வேதா ? “

“ சில விஷயங்களை மறுப்பு எதுவுமின்றி நம்பித்தான் ஆகணும் “

“ நீலம் கடவுளின் நிறம் என்பது மாதிரியா? “

அவள் பதில் சொல்லவில்லை.அல்லது நான் பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.

“ நீலம் ஒரு பெரிய புரிதலின் தொடக்கம் ஸ்வேதா . கடல், வானம் இவை யாவும் நீலமாக இருப்பது அதன் பரந்துபட்ட தன்மையைக் குறிக்க. எதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லையோ அதனை நீலமாகக் காண்கின்றனர், பெருமாளைப் போல. ஆனால் எனக்கு நீலம் என்றுமே கொதிப்பையும் ஆவேசத்தையும்தான் ஏற்படுத்தும். திரும்பியும் ஒரே பதில்தான் நிறம் அடையாளம் என்றால் அது திருப்பி திருப்பி மனிதர்களைப் பிரிச்சுகிட்டே இருக்கு.”

ஸ்வேதாவையும் என்னையும் நிறங்கள்தான் சேர்த்தன. அவள் ஒவ்வொரு நாளும் பல பாசுரங்களை மேற்கோள் காட்டுவாள்.

“ எங்க அம்மாவும் எனக்கு பிரபந்தம் சொல்லிக் கொடுத்திருக்காங்க “ என்றேன் நானும் விடாமல்.

“ சொல்லுங்கோ பார்ப்போம்”

“கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.”

“ இது யார் பாடினது தெரியுமா? “

“ தெரியும்.” என்றேன்.

“ பத்து பாசுரம்தான் இவர் பாடியிருக்கார்””

“தெரியும். இந்தப் பாசுரம் முடியறப்போ அவர் உயிரோட இல்லை என்பதும் தெரியும். இந்தப் பத்து பாசுரங்களிலும் நுட்பமா ஒண்ணு பண்ணியிருப்பார். கவனிச்சிருக்கியா? “

“ என்ன சொல்லுங்கோ “

“ அவரைத் தூக்கிட்டு லோகசாரங்கர் திருவரங்கத்திற்குள் பிரவேசிக்கிறார். ஆனால் அவர் அரங்கனைப் பாடுவதற்குப் பதில் வேங்கடநாதனைப் பாடுவார். உவந்த உள்ளத்தன்ஆய் உலகம் அளந்து அண்டம் உற நிவந்த நீள்முடியன் அப்படின்னு ரெண்டாவது பாசுரத்தில் சொல்லுவார். உயரம் என்பது திருப்பாணாழ்வார் போன்றவர்களுக்கு ஒரு குறியீடு ஸ்வேதா . இது அவரையும் மீறி வந்த வார்த்தை. உசத்தி தாழ்த்தி இதெல்லாம் எதுக்கு?” என்றேன் .

“ இதெல்லாம் கூடாதுன்னுதானே இராமானுஜர் மதில் மேல அத்தனை உசரத்தில் உக்காந்துண்டு எட்டெழுத்து மந்திரத்தைச் சொன்னார்?”

“ பலன் ? “ என்று கேட்டேன்.

அந்தச் சின்னஞ்சிறு கேள்விக்கு பதில் அவள் சொல்லவில்லை. அவள் தந்தை இராமர் கோவில் பட்டர் ரங்காச்சாரி பதில் சொன்னார்.

இந்த இடைப்பட்டக் காலத்தில் எங்கள் நடுவில் பறந்து விரிந்த நட்பின் சிறகுகள் வேறு ஒரு எல்லையைத் தொட்டபோதுதான் நான் அந்த வெளிர் பச்சை நிற புடவையை வாங்கி ஸ்வேதாவிற்கு அவளுடைய பிறந்தநாள் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று வைத்திருந்தேன்.

“ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிண்டு வந்து நிப்பா என் பொண்ணுன்னு நான் நினைக்கலை. எனக்கு வியாக்கியானமாகச் சொல்ல வார்த்தை வரலை. இவளுக்குக் கீழே ஒரு தம்பி ஒரு தங்கை இருக்கா. நான் ராமர் கோவில் பட்டர். தெனம் நாலுபேருக்குப் பதில் சொல்றா மாதிரி பண்ணிடாதீங்கோ. இது சரிப்பட்டு வராது. நான் யாரையும் துணைக்கு அழைச்சிண்டு பஞ்சாயத்து பண்ண வரலை. எங்களுக்கு யாரையும் எதிர்க்கும் திராணி இல்லை. எதுக்கெடுத்தாலும் பயம் தயக்கம் உள்ளவா நாங்க. உங்களை அந்தத் தாயாரா நினைச்சிண்டு கேக்கறேன் என் பொண்ணு ஸ்வேதாவிற்கு எங்க மனுஷாளுக்கு நடுவிலேயே மாப்பிள்ளை பார்த்துக்கறேன். விட்டுடுங்கோ “ என்று என் அம்மாவின் கால்களில் பணிய இருந்தவரை அம்மாதான் பதறிப்போய்த் தடுத்து நிறுத்தினாள்.

“ போங்க சாமி. நான் சொல்லிக்கிறேன். சின்னஞ்சிறுசுங்க ஆசை பட்டுடுச்சுங்க. பெரியவங்க அதுக்காக என் காலில் விழுந்து எனக்கு கெட்ட பேரு வாங்கித் தந்திடாதீங்க. நான் என் பையனிடம் சொல்லிக்கிறேன். பள்ளிக்கூடம் படிக்கிற வரையில் பசங்க எவ்வித பிரிவினையும் பார்க்காமத்தான் படிக்கிறாங்க. பழகுறாங்க. எல்லாத்துலயும் சலுகையை எதிர்பார்க்க முடியுமா சாமி? இன்னும் புரிஞ்சுக்க எவ்வளவு இருக்கு இதுங்களுக்கு? நான் சொல்லிக்கிறேன். நீங்க பயப்படாம போயிட்டு வாங்க” என்று என் அம்மா அவரை வழியனுப்பி வைத்தாள்.

அதன் பிறகு நானும் அவளும் நேருக்கு நேர் பார்க்கும் பார்வையைத் தவிர்த்து விட்டோம். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு குறுக்குச் சுவர் போல ஏதோ ஒன்று எழும்பியதில் சந்தோஷப்பட்டவர்கள் சிலர் ; வருத்தப்பட்டவர்களும் சிலர். நான் மேற்கொண்டு என் வங்கியில் உயர் பதவிக்கு உண்டான தேர்வுகளுக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன்.

ஒருநாள் ஸ்வேதா கையில் இனிப்புகள் அடங்கிய பெட்டியை அனைவர் முன்பும் நீட்டியபடி வந்தாள்.

என் அருகில் வந்ததும் ஆவலை அடக்க முடியாமல் “ என்ன மேரேஜ் ஃ பிக்ஸ் ஆயிடுச்சா ? என்று கேட்டேன். ஸ்வேதாவின் முகம் ஒரு வினாடி வலித்து உயிர்த்தது.

“ சி.ஏ.ஐ.ஐ.பி தேர்வை முடிச்சிட்டேன்.” என்றாள்.

நான் கேட்ட கேள்விக்கு அவளே மாலையில் ஒய்வு நேரத்தில் என் இருக்கைக்கு முன்பு வந்து அமர்ந்து மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

“ நீங்களும் சி.ஏ.ஐ.ஐ.பி பாஸ் பண்ணலாம். நல்ல இன்க்ரிமென்ட் .”

“ நீயும் ப்ரமோஷன் ஆப்ட் பண்ணலாமே ஸ்வேதா “ என்றேன்.

“ ப்ரமோஷன் என்றால் ட்ரான்ஸ்ஃபரும் சேர்ந்து வருமே அதனால இன்க்ரிமென்ட் மட்டும்தான். அப்பாவையும் தம்பி தங்கையையும் விட்டுட்டு வெளியூரில் என்னால் போய் இருக்க முடியாது. அப்பா எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டார் “ என்று சொல்லும்போது அவள் தலை குனிந்திருந்தது.

“ இதை உங்ககிட்ட சொல்லவே கூடாதுன்னுதான் இருந்தேன். உள்ளூரிலேயே மாப்பிள்ளை கிடைச்சா நல்லதுன்னு அப்பா சொன்னார். அவர் இங்கேதான் ஸ்டீல் ப்ளாண்டில் என்ஜினியரா இருக்கார். நம்ம கஸ்டமர்தான். சுரேஷ்னு ஒரு பார்மாசுடிகல் கஸ்டமர் வருவாரே தெரியுமா ? கரண்ட் அக்கவுண்ட் பார்ட்டி. அவரோட சிநேகிதர் . ரெண்டு மூணு தடவை என்னைப் பார்த்துட்டு விசாரிச்சிருக்கார். அப்பா மாதிரியே அவருக்கும் பூர்வீகம் காஞ்சிபுரம்தான். கோத்ரமும் வேற வேற “ என்றாள்.

அதன்பிறகு ஒருநாள் அவனைப் பார்த்தேன். ஒற்றைநாடி தேகம். நல்ல உயரம். மீசையை மழித்திருந்தான். சிவப்பு கூட இல்லை ரோஸ் நிறம். ஒருமுறை அவனை அறிமுகபடுத்திவைக்கும்போது “ ஐ யாம் சுந்தரராமன் “ என்று அவன் கைகளைக் குலுக்கும்போது பஞ்சுகட்டி போல அவன் உள்ளங்கை அத்தனை மிருதுவாக இருந்தது. என்னவோ ஒன்று எனக்கு அவனைக் கண்டால் பிடிக்காமல் போனது. எதுவென்று தெரியவில்லை. என்னுடைய பொறாமையாக இருக்கலாம்; என்னுடைய ஆற்றாமையாகக் கூட இருக்கலாம்.

“ நாம் பழகியவிதம் இந்தக் கிளையில் எல்லோருக்கும் தெரியும் ஸ்வேதா” என்றேன் ஒருநாள் அவளிடம்.

“ அதனால்? “ என்று திருப்பிக் கேட்டாள்.

“ அவன் காதுகளுக்குப் போனால் அது நல்லா இருக்குமா ? “ என்றேன்.

“ நானே சொல்லிட்டேன். முழுக்க. “ என்றாள்.

அவள் என்னை மிகவும் அவமானபடுத்தியது போல இருந்தது. அந்த இரவு நான் சுத்தமாக கண் உறக்கம் கொள்ளவில்லை. அதன் பிறகு சுந்தரராமன் என்னைப் பார்த்துச் சிரிக்கும்போதும், எனக்கு ஹாயோ பையோ சொல்லும்போது சீண்டுவது போலவே இருக்கும். நான் என்னுடைய உயர் பதவி தேர்விற்கான ஆயத்தங்களில் இறங்கி மூன்று மாதத்தில் ஸ்கேல்-ஓன் அதிகாரியாக மூன்று வருடங்கள் மும்பை அந்தேரி கிளையில் பணிமாற்றம் பெற்று , அதன் பிறகு ஸ்கேல் –டூ, ஸ்கேல்-த்ரீ என்று என் பதவி உயர்விலேயே கவனமாகி இதோ மீண்டும் இந்த ஊர்க் கிளைக்கு மேலாளராக வந்து விட்டேன்.

இந்தப் பத்து வருடங்களில் உலகம் இணையம் வழியாக மிகவும் சுருங்கி விட்டாலும் நான் ஸ்வேதாவைப் பற்றி எவ்வித தகவலையும் சேகரிக்க முயலவில்லை. நான் மும்பை போன இரண்டு மாதத்தில் அவளுக்குத் திருமணம் என்ற செவிவழிச் செய்தி மட்டும் கிடைத்தது. கிளம்பும்போது திருமணப் பத்திரிகையை எனக்கு அனுப்ப வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லி விட்டுக் கிளம்பியிருந்ததால் அவள் பத்திரிகையை அனுப்பவில்லை. நான் சொல்லியிருக்காவிட்டாலும் அவள் அனுப்பியிருக்க மாட்டாள். எனவே என் நினைவின் சுழலில் அவள் மூழ்குவதும் மீண்டு வருவதுமாக இருந்தாளே தவிர நிரந்தரமாக மிதந்து கொண்டிருக்கவில்லை.

இன்று மீண்டும் என்னுடைய பழைய கிளையில் மேலாளராக நான் பொறுப்பேற்று அங்கே பணியில் இருக்கும்- இதை மட்டும் நான் என் கணினி மூலம் உறுதி செய்து கொண்டேன்- ஸ்வேதாவைச் சந்தித்து, “ உனக்கு பரிசளிக்க வேண்டும் என்று வாங்கிய வெளிர் பச்சை புடவை ஒன்று என்னிடம் இருக்கிறது “ என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. ச்சை இது என்ன ஈன புத்தி என்று மற்றொரு நினைப்பு முதல் நினைப்பை அழுத்தியது.

கிளை மேலாளராகப் பதவி பொறுப்பு எடுத்துக் கொள்ளும் பூர்வாங்க வேலைகள் முடிவதற்கு மதியம் ஒருமணி ஆனது. நடுவில் நானே வலியச் சென்று ஊழியர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். கடைநிலை ஊழியர்களிலிருந்து உயர் அதிகாரிகள் வரை நான் வேலை பார்த்தபோது என்னுடன் இருந்த ஊழியர்கள் யாருமில்லை. ஓரிருவரைத் தவிர. அந்த ஒரிருவரில் ஸ்வேதாவும் ஒருத்தி. எப்படி இருக்கீங்க என்ற அறிமுகக் கேள்வியுடன் எங்கள் அறிமுகம் முடிந்தது.

மதியம் மூன்று மணி சுமாருக்கு அவள் துறை சார்ந்த பிரச்சினை ஒன்றுடன் ஸ்வேதா உள்ளே நுழைந்தாள்.

“ உட்காருங்க ஸ்வேதா “ என்றேன்.

என் முன்னால் அமர்ந்தாள்.

எங்கள் நடுவில் ஒரு பெரும் சங்கடத்தின் மௌனமும் சேர்ந்து அமர்ந்தது.

“ அப்பா எப்படி இருக்கார் ?” என்றேன்.

“ சௌக்கியமா இருக்கார். தம்பிக்கு வேலை கிடைச்சு பெங்களுர் போயிட்டான். அவனோட போய் இருக்கார். இப்போ கோவிலுக்கு பட்டரா போறதை விட்டுட்டார். உங்க அம்மா எப்படி இருக்காங்க ?” என்றாள்.

“ இருக்காங்க. எப்படா கலியாணம் பண்ணிக்கப் போற அப்படிங்கற கேள்வியை தினம் கேட்டுகிட்டு நல்லா இருக்காங்க”

இதற்கு ஸ்வேதா பதில் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று எதிர்பார்த்தேன். பதில் சொல்லாததோடு மட்டுமில்லை ஸ்வேதா தனது கண்களைத் தாழ்த்திக் கொண்டது வலித்தது.

“ சுந்தர்ராமன் எப்படி இருக்கார் ? “ என்றேன்.

ஸ்வேதா “ யார் சுந்தர் ராமன்? “ என்றதும் எனக்குத் தூக்கிவாரி போட்டது.

“ ஸ்டீல் ப்ளான்ட்டில் வேலை நம்ம வாடிக்கையாளருக்குத் தெரிந்தவர்..” என்று நான் இழுத்தேன்.

“ ஓ ! உங்களுக்கு விவரம் தெரியாது இல்லியா? நீங்கதான் பத்திரிக்கை அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேளே “ என்றாள்.

எனக்கு ஒரு நிமிடம் திக் என்றது.

“ சுந்தர்ராமனுக்கு சொல்லத் தெரியாத ஊமைகோபம் என் மேல் இருந்திருக்கும் போல. நிச்சயம் ஆனப்பறம் கூட குத்தி குத்தி காண்பிச்சார். நம்ம ரெண்டு பேருக்கு இடையில் இருந்த உறவைக் கொச்சை படுத்திக்க நான் விரும்பலை. வேண்டாம்னுட்டேன். பழி அவமானம், குற்றச்சாட்டு வேலை பார்க்கும் திமிர் இப்படி நிறைய பேச்சு எல்லாத்தையும் தாங்கிண்டேன். அப்பா அவசர அவசரமா வேற ஒரு வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணிட்டார். அவருக்கு இந்த ஊரில்தான் ஒரு மெட்ரிக் பள்ளிகூடத்தில் கணக்கு டீச்சரா உத்தியோகம். நான் மெடர்னிடி லீவு முடிஞ்சு போன வாரம்தான் ஜாயின் பண்ணியிருக்கேன். “ என்றாள்.

அவள் கூறிய விதம் பல விஷயங்களைத் தாண்டி வந்துவிட்டவள் போலவே தோன்றியது. ஒவ்வொரு தாண்டலையும் எத்தனை வலியுடன் வேதனையுடன் கடந்திருப்பாள் என்பதை முகத்தில் காட்டவே இல்லை.

“ சாயங்காலம் என்னை பிக்-அப் பண்ணிக்க வருவார் இன்ட்ரடியூஸ் பண்றேன் “ என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.

வெளிர்பச்சை நிறப் புடவை குறித்துப் பேசவேண்டும் என்று எண்ணி வைத்திருந்த நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று நினைத்துக் கொண்டேன். சினிமாத்தனமான நினைவுகள் அவை நினைவுகளுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும் போல.

மாலை வரை மணித்துளிகள் எப்படி சென்றன என்றே தெரியவில்லை. கிளையின் பெரிய பெரிய வாடிக்கையாளர்கள் நட்பு ரீதியாக என்னைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். மாலை ஐந்து மணியானது தெரியவில்லை.

மாலை ஐந்தரை மணியிருக்கும் என் கேபின் கதவு திறக்கும் அசைவின் ஒலி கேட்டு நிமிர்ந்தேன். ஸ்வேதா வேறு ஒரு ஆடவனுடன் நிற்பது தெரிந்தது. அவள் மதியம் என்னிடம் கூறிய அவளுடைய கணவனாக இருக்க வேண்டும்.

உள்ளே அழைத்து இருவரையும் அமர வைத்தேன். அவனுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். சுந்தரராமனைப் போல சிவந்த மேனி இல்லை. மாநிறம். மேனி கொஞ்சம் முரடு என்று கூட சொல்லலாம். அவனுடைய கணக்கு ஆசிரியர் உத்யோகம் காரணமாக அவன் சற்று இறுக்கமாக இருப்பான் போல. நெற்றியில் ஒற்றை வரியாக ஸ்ரீ சூர்ணம் தீட்டிக் கொண்டிருந்தான். இவனுக்கு மீசை இருந்தது. .

“ உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார். நான் இந்த ஊரில்தான் மாத்ஸ் டீச்சரா இருக்கேன் . என் பெயர் கிருஷ்ணன். “ என்றான்.

நான் ஆச்சரிய மேலிட “ அட என் பெயரும் கிருஷ்ணன்தான் “ என்றேன்.

– சொல்வனம் இணைய 157-வது இதழில் வெளிவந்துள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *