பெயர்ப் பலகையில் புலியூர் என்று இருந்தது.. அங்கு, ” முத்து இருடா நானும் வரேன் என்ன விட்டு போகாதா நில்லு டா ” என்று எட்டு வயது சிறுமி தொரத்திக் கொண்டு ஓடினாள்….
“ஹா ஹா ஹா! உன்னால என்ன பிடிக்க முடியாது மீனு” என்று பத்து வயது நிரம்பிய சிறுவன் சிரித்துக் கொண்டு ஓடினான்..
“அஹ அம்ம்ம்ம்மா..”
“ஹே என்னாச்சு மீனு பார்த்து வர மாட்டியா நீ??? எங்க அடிபட்டிச்சு மா?? “முத்து மீனுவின் கால்களை பதறிக் கொண்டு பார்த்தான்..
“ஹே நல்லா மாட்டிகிட்டியா நீ” என்று மீனு, முத்துவின் கைகளை பிடித்தாள்.. முத்து சிரித்துக் கொண்டே மீனுவின் முகத்தை பார்க்கும் போது அவள் தலையில் யாரோ அடித்து இரத்தம் வடிந்துக் கொண்டு இருந்தது, அவள் அப்படியே மயங்கி சரிந்தாள்..
அவளை யார் அடித்தார்கள் என்று பார்க்கும் போது மங்கலான ஓர் உருவம் அவன் தலையில் தாக்கியது… “மீனுனுனுனுனு.. “என்று கத்திக்கொண்டே மீனுவின் கைகளை பிடித்துக் கொண்டே மயங்கி சரிந்தான் கண்களை மூடும் போது அவளின் வலது கை மணிக்கட்டில் நட்சத்திர வடிவில் உள்ள மச்சத்தை பார்த்துக் கொண்டே கண்களை மூடினான்..
இவை அனைத்து ஒரு நிழலாக தன் கண்கள் முன் ஓடியது… அலறிக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்தான் ஆதி என்கிற ஆதிரன்.. “ச்ச கனவா?” என்று தன்னையே திட்டிக் கொண்டான், ஆனா கனவு மாதிரி தெரியவில்லையே மீனு இந்த பெயர எங்கோ கேட்டா மாதிரியே இருக்கே என்று யோசித்தான்..
இவன் அலறலில் பக்கத்து அறையில் நித்திரையில் இருந்த அவன் பெற்றோர்கள் வந்து அவனின் அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தனர்..
“என்னடா ஆச்சு உனக்கு, ஏன் இப்படி அலறுன??” என்று கேட்டார் அவனின் தாய் மல்லிகா.
“ஒண்ணும் இல்லமா” என்று மழுப்பினான்.
“டேய் என்னடா விளையாடுறியா?? நடு ராத்திரியில பேய் மாதிரி கத்தி எங்களை எழுப்பி விட்டுட்டு இப்போ ஒண்ணும் இல்லனு சொல்ற” என்று கடிந்து கொண்டார் ஆதியின் தந்தை ராமன்..
“அது வந்து அப்பா” கொஞ்சம் திணறினான், தன் தாயைப் பார்த்து அம்மா யாராவது மீனு என்ற பெயரில் நமக்கு தெரிஞ்ச பொண்ணு இருக்கா என்று கேட்டான். அந்தப் பெயரை கேட்டவுடன் இருவரும் ஒரு நொடி அதிர்ந்தனர் பின்பு அதை சமாளிக்கும் பொருட்டு, “அப்படி யாரும் இல்லடா ஏன் இப்படி கேட்குற” என மல்லிகா கேட்டார்..
அவர்களின் அதிர்வை கண்ட ஆதி அதைப் பற்றி எதுவும் கேட்காமல் தான் கண்ட கனவை சொல்லிக் கொண்டே அவர்களை கவனித்தான்…. அவன் கூற கூற இவர்களின் முகத்தில் பல மாறுதல்களை கண்டான்.. பின்பு இவனே அவர்களிடம் “இது வெறும் கனவு தான் எதுவும் யோசிக்க வேணாம் நான் தூங்கப் போறேன் குட் நைட்” என்று சொல்லிக் கொண்டே படுத்தான்..
அவன் கூறிய நிகழ்வுகளை கேட்ட இருவருமே அதிர்ந்தனர்.. முதலில் நினைவிற்கு வந்த ராமன் “வா மல்லிகா நம்ம ரூமுக்கு செல்லலாம்” என்றார்.
இவர்கள் அறைக்குள் வந்தவுடன் மல்லிகா,”ஏங்க இவனுக்கு பழசு எல்லாம் நியாபகம் வந்துடுமா? நியாபகம் வந்தா அவன் ஊருக்கு போக வேண்டும், அப்புறம் அவனுங்களால ஆபத்து வந்துடுமோனு பயமா இருக்குங்க” என்று கூறினாள்..
“ஒண்ணும் பயம் வேண்டாம் அவனுக்கு எதுவும் ஆகாது நீ கவலைப்படாதே மா மல்லி” என்று ஆறுதல் படுத்தினார்… இவை அனைத்தும் வெளியே நின்று கொண்டு ஆதி கேட்டுக் கொண்டு இருந்தான்..
அவன் அறைக்குள் நுழைந்தான் ‘அப்போ நம்ம லைஃப்ல ஏதோ நடந்து இருக்கு.. நமக்கேன் எதுவும் நியாபகம் இல்ல’ என்று அவன் தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்தான் படுக்கையில் ஆனால் தூக்கம் தான் வந்தபாடு இல்லை நம் ஆதிரன் எங்கிற முத்து.
அதற்கு முன்பு நம் ஆதியை பற்றிய சிறு தகவல், ராமன் மற்றும் மல்லிகாவின் ஒரே புதல்வன். இருபத்தி ஐந்து வயது நிரம்பிய இளைஞன். கருமை நிற கண்ணன், பெண்களை கவரும் கள்வன்.. தன் படிப்பை வெளிநாட்டில் முடித்துக் கொண்டு, இப்பொழுது சென்னையில் தன் தந்தையின் கார்மெண்ட்ஸ் கம்பெனியை கவனித்து வருகிறான்..
***
பெங்களூரில் :
இங்கு அதேப் போல் கனவை கண்டு அலறினாள் ஆராதனா எங்கிற மீனாட்சி.. அவளின் அறைக்குள் வந்த அவள் பெற்றோர்கள் ரகுபதி, கமலா அவள் கூறிய அனைத்தையும் கேட்டு அதிர்ந்தனர்.. அவளை சமாதானம் செய்து தூங்க வைத்தனர்..
ராமன் மற்றும் மல்லிகா நினைத்ததை இவர்களும் அதையே பேசிக் கொண்டனர்..
எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று இரு பெற்றோர்களும் கடவுளை வேண்டிக் கொண்டனர்..
ஆராதனா, ரகுபதி மற்றும் கமலாவின் ஒரே தவப்புதல்வி. ரொம்ப சுட்டிப்பெண்.. கியூட் அமுல் பேபி… தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு இப்போது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள்.. அவளின் உயிர் தோழி ருக்கு என்கிற ருக்குமணி இவள் கூடவே பத்தாவது வகுப்பில் இருந்து ஒன்றாக நகமும் சதையுமாக சேர்ந்து இருக்கிறார்கள்.. இப்போதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்..
அப்படி என்ன தான் இவர்கள் வாழ்வில் நடந்தது என்று நாமும் பார்ப்போம்..
சென்னையில் :
ஆதி இரவு சரியாக தூங்காமல் இருந்ததால் விடியற்காலை பொழுது தான் தூங்க ஆரம்பித்தான்.
ஹாலில் ராமனும், மல்லிகாவும் காபி குடித்துக் கொண்டிருந்தார்.
“என்னங்க மணி 8 ஆகியும் இன்னும் அவன் எழுந்துக்கல? ஏதாவது பிரச்சனைய இருக்குமோ “என்று மல்லிகா கொஞ்சம் பதற்றமானாள்.
ராமன்,” அப்படி எதுவும் இருக்காது அவன் தூங்க நேரம் ஆயிருக்கும் அதுக்கு ஏன் தேவைலாம யோசிக்குற..”
இவர்கள் இங்கு பேசிக் கொண்டு இருக்கும் போதே மாடியில் இருந்து ஆதி இறங்கி கொண்டே “குட் மார்னிங் டாட் அண்ட் மாம்” என்று சிரித்து கொண்டு அவர்கள் அருகில் அமர்ந்தான்…
“டேய் கண்ணா காபி குடிக்கிறியா” என்று மல்லிகா கேட்க, சரி மா என்றான்..
காபி கொண்டு வருவதற்குள் இங்கு தந்தை மகன் இருவரும் தங்கள் கம்பெனி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
“இந்தாடா கண்ணா காபி குடி, நைட் சரியா தூங்கலயா ஏன் கண்ணு சிவந்திருக்கு” என்று கேட்டார் மல்லிகா.
“ஒண்ணுமில்ல அம்மா நல்லா தான் தூங்குனேன்.. அம்மா இன்னைக்கு கார்த்தி கூட வெளியே போக போறேன் எனக்கு டிஃபன் வேணாம்.. நாங்க வெளியே சாப்பிடுறோம் ” என்றான்.
“சரி கண்ணா பார்த்து போயிட்டு வா” என்றார் மல்லிகா..
“அப்பா நான் இன்னைக்கு ஆபீஸ்க்கு முடிஞ்சா தான் வருவேன்” என்றான் ஆதி.
“சரிடா நான் பார்த்துக்கிறேன். இன்னைக்கு மதியம் 2 மணிக்கு அந்த SB கம்பெனி கூட மீட்டிங் இருக்கு.. அது நான் பார்த்துக்கிறேன் ஆதி” என்றார்.
“சரி அப்பா நீங்க பார்த்துக்குங்க” என்று கூறிக் கொண்டு தன் அறையில் சென்று கார்த்திக்கை காண்பதற்காக கிளம்பிச் செல்ல ஆயத்தமானான்..
இங்கு கார்த்தி அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறை எடுத்துக் கொண்டு ஆதியின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான். இது இவர்களின் ஒரு வழக்கம் ஏதாவது முக்கியமான விஷயங்களை பற்றி பேச வேண்டும் என்றால் இவர்கள் பொது இடங்களில் பேச மாட்டார்கள்.. இங்கு அறை எடுத்துக் கொண்டு அவர்கள் செய்ய வேண்டிய திட்டங்களை பற்றி பேசுவார்கள்.. (இது தான் ரூம் போட்டு யோசிக்குறது போல)
***
பெங்களூரில் :
“என்னடி ருக்கு ஆபீஸ் இன்னைக்கு கொஞ்சம் பர பரப்பா இருக்குது என்ன விசேஷம் இன்னைக்கு “என்று ஆரா வினவினாள்..
“தெரிலடி.. வா நாம போய் பார்க்கலாம்” என்று இருவரும் தங்கள் டிபார்ட்மெண்ட்க்குள் நுழைந்தனர். அவர்கள் கூட வேலைப்பார்க்கும் கதிர் இவர்களை நோக்கி வந்தான் கைகளில் சில பத்திரிகைகளுடன்..
“ஹாய் கேர்ள்ஸ் இந்தாங்க என் மேரேஜ் இன்விடேஷன், கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் என் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்து சேரனும்” என்றான் புன்னகை முகத்துடன்.. இரு பெண்களும் சந்தோஷ பட்டனர். “கண்டிப்பா நாங்க வரோம் டா “என்றாள் ஆரா…
“மேடம் கொஞ்சம் பத்திரிக்கையை பிரிச்சு பார்த்து சொல்லுங்க” என்றான்,
“அப்படி என்ன தான்டா இருக்கு “என்று விரித்து பார்க்கும் போது தான் தெரிந்தது கல்யாணம் மதுரையை ஒட்டி உள்ள புலியூர் என்னும் கிராமத்தில்..
அதை படித்தவுடன் ருக்கு “அப்போ தமிழ்நாட்டுலய கல்யாணம்” என்றாள்.. ஆமாம் என்று கதிர் தலை அசைத்தான்..
“இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வந்தது இல்லை.. கண்டிப்பா நாங்க வருவோம் டா” என்று ஆராவை சேர்த்து சொன்னாள். ஆனால் ஆராவோ இதில் எதிலுமே ஈடுபாடின்றி புலியூர் என்று அந்த ஊரின் பெயரை உச்சரித்து கொண்டு இருந்தாள்.. இந்த பெயரை எங்கேயோ கேட்டு இருக்கோமே என்று யோசிக்க ஆரம்பித்தாள்..
ருக்கு அவளை உலுக்கியுடன் தன் சுயநினைவிற்கு வந்தாள் ஆரா. “என்னடி” என்று ருக்குவை பார்த்துக் கேட்டாள்,
“என்னடி நாம கல்யாணத்துக்குப் போறோம் தானே” என்று கேட்டாள் ருக்கு.
“ஆ… ஆமாடி கண்டிப்பா போறோம்” என்றாள் ஆரா..
“சரி கேர்ள்ஸ் கண்டிப்பா நெக்ஸ்ட் வீக் என் மேரேஜ்க்கு வந்துடுங்க “என்று சொல்லிவிட்டுச் சென்றான் கதிர்..
அவன் சென்றவுடன் ருக்கு ஆராவைப் பார்த்து “என்னடி ஆச்சு உனக்கு, காலைல இருந்து உன் முகமே சரியா இல்ல என்ன பிரச்சனை?” என்று கேட்டாள் ருக்கு.
“கெட்டக்கனவு கண்டேன் அத நினைச்சேன் “அவ்வளவு தான் என்றாள் ஆரா.
“அப்படி என்ன கனவு கண்ட சொல்லுடி” என்றாள் ருக்கு.
தான் கண்ட கனவு காட்சிகளை ஆரா சொன்னாள். அத்தனையும் கண்கள் விரிய கேட்டா ருக்குவிற்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது…
ருக்குவைப் பார்த்த ஆரா “என்னடி இப்போ நீ ரொம்ப யோசிக்குற ?”என்று கேட்டாள்.
“இல்லடி எனக்கு என்னமோ இது கனவு மாதிரி தெரியல” என்று தன் சந்தேகத்தை சொன்னாள்..
“என்னடி நீ வேற புதுசா குழப்புற “அதிர்ச்சியில் கேட்டாள் ஆரா.
“இல்லடி கொஞ்சம் யோசிச்சு பாரு கனவுகள் எப்பவுமே நம்ம வாழ்க்கையில சம்மந்தம் பட்டது மட்டும் தான் வரும் அப்படி இருக்கும் போது இது கூட உன் வாழ்க்கையில நடந்த விஷயமா ஏன் இருக்கக் கூடாது”என்று கேட்டாள் ருக்கு…
“ஆமாடி எனக்கும் அப்படி தான் தோணுது என் கனவுல வந்த அந்த ஊர் பெயரும் இப்போ கதிர் சொன்னா ஊர் பெயரும் ஒண்ணு தான். அதான் கொஞ்சம் யோசனையா இருந்தது” என்றாள் ஆரா..
“ஏன்டி பேசாம உன் அப்பா, அம்மா கிட்ட இத பத்தி கேட்டுப் பார்க்கலாமா” என்றாள் ருக்கு.
“இல்லடி எனக்கு என்னமோ அவங்ககிட்ட கேட்டா சொல்ல மாட்டாங்க தோணுது, நேத்து நைட்டே நான் இந்த கனவு பத்தி சொல்லும் போது அவங்க முகம் போன போக்கு சரியில்ல அவங்க நான் கவனிக்கலனு நினைச்சாங்க.. ஆனா நான் அத பார்த்துட்டேன் டி, அது மட்டும் இல்ல என்னைக்கும் இல்லாம இன்னைக்கு பார்த்து பத்திரமா போயிட்டுவா என்று அத்தனை வாட்டிச் சொன்னாங்க. இப்போ போய் இதெல்லாம் கேட்டா அவங்க பயத்துல என்னை எங்குமே அனுப்ப மாட்டாங்க அதான் இப்போ எதுவும் கேட்க வேணாம்” என்றாள் ஆரா..
“சரிடி அந்த கனவுல ஒரு பையன் பெயர சொன்னியே அது என்ன பெயர் டி”..
“அஹ அது அவன் பெயர் முத்து” என்று சொல்லிட்டு தன் மனதிற்குள் ஒரு முறை சொல்லி பார்த்தாள் அவளையும் அறியாமல் அவள் புன்னகைத்தாள்…
***
சென்னையில் :
இங்கு ஆதி அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு வந்தான்..தாங்கள் எப்பவும் உபயோகப்படுத்தும் அறைக்கு வந்து சேர்ந்தான்..
“ஹாய் டா கார்த்தி எப்படி இருக்க?” என்று கேட்டான் ஆதி.
“ஆமாண்டா உன்ன மாதிரி ஒரு ஃபிரண்ட் கூட இருந்தா எப்படி நல்லா இருக்க முடியும்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு இருந்தான் கார்த்தி.
“என்னடா சொன்னா? கொஞ்சம் சத்தமா சொல்லு கேட்கல” என்று தன் கைகளை தேய்த்துக் கொண்டே கேட்டான் ஆதி..
“ஐயோ! சொந்த செலவுல சூனியம் வைக்க பார்த்தேனே” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே,
“மச்சி உன்ன மாதிரி ஒரு நல்ல நண்பன் இருக்கும் போதே எனக்கு என்னடா குறைச்சல் நான் நல்லா இருக்கேன் டா” என்று பல்லை இளித்தான் கார்த்தி..
“சரிடா நடு ராத்திரி அஞ்சு மணிக்கு ஏன் கால் பண்ணி பேசணும் நம்ம எடத்துக்கு வர சொன்னா.” கார்த்தி
“என்னது நடு ராத்திரியா??? டேய் எரும அது விடியல கால் பண்ணது. “‘ஆதி
“எனக்கு அது தான் ராத்திரி உன்னால சன்னி லியான் கிட்ட இருந்து ஒரு உம்மா போச்சு” என்று கடு கடுத்தான். கார்த்தி
“என்னடா சொல்ற”? – ஆதி
“ஒண்ணும் இல்ல மச்சி, அதவிடு இப்போ எதுக்கு வர சொன்ன அத சொல்லு -” கார்த்தி
பின் தான் கண்ட கனவு மற்றும் தன் பெற்றோர் பேசிய அனைத்தையும் கூறினான். “இதுல ஏதோ விஷயம் இருக்குடா அது என்னனு கண்டு பிடிக்கணும் “- ஆதி
“அந்த ஊரு பேரு புலியூர் தானா சொன்ன.. நாம பேசாம கூகிள்ல அந்த ஊர் மற்றும் அது பற்றி தெரிஞ்சிட்டு நெக்ஸ்ட் வீக் நாம அங்க போய் விசாரிக்கலாம் அதுக்குள்ள நம்ம வேலையெல்லாம் முடிச்சிடலாம்” – கார்த்தி
“ஆமாடா நானும் அது சொல்ல தான் வந்தேன் அதுக்குள்ள நம்ம பாலாஜி துப்பறியும் நிறுவனம் வெச்சிருக்கான் அவன் கிட்ட சொல்லி அந்த ஊர பத்தி விசாரிக்கச் சொல்லலாம். அது மட்டும் இல்ல வீட்டுல நாம உண்மைய சொல்லிட்டு வர முடியாது, ஃபிரண்ட் மேரேஜ்னு பொய் சொல்லி நாம கிளம்பலாம் -” ஆதி
ஆமாடா நீ சொல்றது சரி என்றான் கார்த்தி பின் இருவரும் தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்..
இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் பொய்களை சொல்லி புலியூர்க்கு பயணம் தொடங்கினர்…
இங்கு நம் ஆரா மற்றும் ருக்கு தன் நண்பனின் திருமணம் அதனால் மதுரைக்கு போக வேண்டும் என்று போக போகும் ஊரின் பெயரை மறைத்து இவர்களும் தத்தம் பயணத்தை தொடங்கினர்…
இனி இவர்கள் இருவரும் தங்கள் வாழ்வில் மறந்த அத்தியாயத்தை அறிய போகிறார்கள்…
இனி :
பெயர்ப் பலகையில் புலியூர் என்று இருந்தது… சுற்றி வயல் வெளிகள் எங்கும் பூத்து குலுங்கும் மலர்கள்.. சுத்தமானக் காற்று,..தண்ணீர், இப்படிப்பட்ட ஊரில் நல்லவர்களும், சில தீயவர்களும் வாழும் இடம்..
இங்கு காரில் பயணம் பண்ணி ஆதி மற்றும் கார்த்தி புலியூர் கிராமத்தை வந்து சேர்ந்தனர்..
“டேய் மச்சான் காருல வரும் போது பார்த்தியா இந்த ஊரு எவ்வளவு அழகா இருக்கு, அப்படியே பாரதிராஜா படத்துல பாக்குறா மாதிரி இருக்கு” – கார்த்தி
“ஹம் ஆமாம் டா “சொல்லிட்டு சற்று யோசனையில் இருந்தான் – ஆதி
“என்னடா ஒரே யோசனையா இருக்க??” – கார்த்தி
“வண்டில வரும் போது இந்த ஊருக்கு முதல் தடவையா இங்க வந்தா மாதிரி தெரியலடா, இங்க ஏற்க்கனவே இருந்தா மாதிரி இருக்குடா” – ஆதி
“என்னடா சொல்ற? ஏற்கனவே இருந்திருக்கியா இங்க? எத வெச்சு சொல்லுற” – கார்த்தி
“நாம வர வழில ஆத்தை ஒட்டி ஒரு ஆல மரம் இருந்ததுல, அந்த ஆல மரத்துல ஊஞ்சல் கட்டி விளையாடுன நியாபகம், எனக்கு எதோ காட்சி மாதிரி தெரிஞ்சது விஷுவல் எல்லாம் புகை மாதிரி தெரிஞ்சது.. ஆனா எனக்கு சரியா தெரியல தல ரொம்ப வலிக்குது” என்று தலையை பிடித்துக் கொண்டே கார் சீட்டில் தலை சாய்ந்தான் ஆதி..
“டேய் ரொம்ப யோசிக்காத ஒண்ணும் இல்ல விடு.. என்ன விஷயம்னு நாம கண்டு பிடிச்சிடுவோம். சரிடா நாம இப்போ எங்க தங்கப் போறோம்?? – கார்த்தி
“நேத்து நைட் பாலாஜி கிட்ட பேசிட்டேன் டா.. அவன் தங்கி இருக்குற ரூம் பெருசு நாமளும் அவன் கூடவே தங்கப் போறோம், அதுலாமா நாம தனியா தங்க வேணாம் சொல்லிட்டான்” – ஆதி
“ஏன்டா அப்படி “- கார்த்தி
“இங்க ஏதோ ஆபத்து இருக்கு, அதப் பத்தி நேர்ல சொல்றேன் சொன்னான். அதான் நாம மூணு பேரும் ஒண்ணா இருக்குறது தான் பாதுகாப்பு” – ஆதி
“ஹம் அப்போ சரிடா” – கார்த்தி
இவர்கள் பாலாஜி இருக்கும் இடத்திற்குச்சென்றனர். இவர்களை ரெண்டு ஜோடி கண்கள் பின் தொடர்ந்தனர்.
***
இங்கு ஆரா மற்றும் ருக்கு, கதிரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
“ஹாய் கதிர்” என்று இருவரும் அவனைப் பார்த்து சொன்னார்கள்..
“ஹே ஹாய் வாங்க, உங்க பயணம் எப்படி இருந்துச்சு? “- கதிர்
“ஹே நாங்க ஜாலியா என்ஜாய் பண்ணோம்” என்று இருவரும் சேர்ந்து ராகம் வாசித்தார்கள்..
“ஹம் சரி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப டயர்டா இருப்பிங்க போய் குளிச்சிட்டு வாங்க, நாம சாப்பிடலாம்” – கதிர்
“ஆமாடா ரொம்ப பசிக்குது” – ருக்கு
“சரி நீங்க ரெண்டு பேரும் அந்த ரூம் யூஸ் பண்ணிக்குங்க, உங்க லக்கேஜ்ஸ் வேலையாட்கள் கொண்டு வருவாங்க” – கதிர்
அவர்கள் சென்றவுடன் கதிர் யாருக்கோ ஃபோன் செய்து, அவர்கள் வந்ததை தெரிவித்தான். எதிர்முனையில் சொன்னா பதிலைக் கேட்டு ஃபோன் அணைத்து வைத்து அவர்கள் சென்ற பாதையை பார்த்துக் கொண்டு மர்மமாக சிரித்தான்..
இருவரும் அறைக்குள் நுழைந்தனர் அவர்கள் பின்னே வந்த வேலையாட்கள் அவர்கள் லக்கேஜை வைத்துவிட்டு அறை கதவை மூடி விட்டு சென்றனர்..
ஆரா மெத்தையில் அமர்ந்தாள்.
“இப்போ சொல்லு என்னடி உன் பிரச்சனை ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து பாக்குறேன் உன் முகமே சரியில்லை என்னாச்சு உனக்கு?”- ருக்கு
“நாம ட்ரைன்ல வரும்போது வர வழியில் ஒரு ஆல மரம் பார்த்தேன். அது என்று ஆரம்பித்து ஆதி சொன்னதையே சொன்னாள். அது மட்டும் இல்லடி இங்க வந்ததுல இருந்து மனசுக்கு எதோ சரியாப் படல.. தப்பு நடக்கப் போகுதுனு தோணுதுடி” சற்றுக் கலக்கலாக சொன்னாள் ஆரா
“என்னடி இப்படி சொல்ற, வா பேசாம நாம ஊருக்கே போலாம்.. நீ சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்குடி. நாம வேற வீட்டுல உண்மைய சொல்லாம வந்துருக்கோம் அப்புறம் இங்க ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சுனா உன் வீட்டுக்கு என்ன சொல்றது” என பயந்தாள் ருக்கு.
இங்கு இவர்கள் இப்படியென்றால் அவர்களோ..
இருவரும் பாலாஜி இருக்கும் இடத்திற்கு வந்தனர்.. அவர்கள் பின்னாடியே அந்த இரு ஜோடி கண்களும் ஃபாலோ பண்ணினார்கள்..
“வாடா எப்படி இருந்துச்சு உங்க பிரயாணம்?” – பாலாஜி
“ஹம் நல்லா இருந்துச்சு டா, ஆனா ஆதிதிதி” என்று ஆதியை பார்த்துக் கொண்டு இழுத்தான் கார்த்தி..
“டேய் ச்சும்மா இருடா.. ஒன்னும் இல்லடா பாலாஜி” – ஆதி
“டேய் என்னடா மறைக்கிற அவன் ஏதோ சொல்ல வரா..ன் நீ ஒண்ணும் இல்லைனு சொல்ற என்ன நடக்குது?” – பாலாஜி
“ஐயோ அது ஒண்ணும் இல்லடா” என்று அந்த ஆல மரக் கதையை பற்றி கூறினான் ஆதி
ஆதி சொல்ல சொல்ல இங்கு பாலாஜியின் முகம் மாறியது, அதைப் பார்த்த ஆதி என்னடா உன் மூஞ்சி சரியில்ல..
“சொல்றேன்டா ஃபர்ஸ்ட் நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு சாப்பிட வாங்க அப்புறம் இதைப் பத்தி பேசலாம்” – பாலாஜி
“இல்லடா நீ இப்பவே சொல்லு தெரிஞ்சிக்கலனா எனக்கு தலையே வெடிச்சிடும் ” – கார்த்தி
“அப்படியாடா செல்லம், டேய் பாலா நாங்க குளிச்சிட்டு வந்து இத கேட்குறோம்.. எப்படி அவன் தலை வெடிக்குது நானும் பார்க்கனும். இதுவரைக்கும் தல வெடிச்சு பார்த்தது இல்லடா கார்த்தியை கலாய்த்தான் “- ஆதி
“டேய் மச்சான் நான் உன் நண்பன்டா, என்ன விஷயம் தெரியாம என் உயிர பணயம் வெச்சு வந்திருக்கேன் நீ இப்படி சொல்லிட்ட..துரோகி” என்று சொல்லிக் கொண்டு கண்களை உருட்டினான் கார்த்தி..
“ஹா ஹா ஹா! அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் “- பாலா
“யூ டூ ப்ரூடஸ் “- கார்த்தி
“சரிடா ஜோக்ஸ் அபார்ட், நீங்க சாப்பிட்டு முடிங்க இந்த விஷயத்தப்பத்தி நான் சொல்றது விட ஒருத்தர வரச் சொல்லிருக்கேன்..அவர் வந்ததும் சொல்லுவாரு அப்போ தான் உனக்கு தெளிவா புரியும். அதுக்குள்ள குளிச்சிட்டு வாங்க” – பாலா
சரிடா என்றனர் இருவரும்..
ரூமிற்குள் வந்ததும் ஆதி தன் தொலைபேசி எடுத்து யாருக்கோ கால் செய்து சில கட்டளைகளை பிறப்பித்தான், மற்றொரு எண்ணிற்கு கால் செய்து சில தகவல்களை சொல்லி முடித்தான்..
இருவரும் அர்த்தம் கொண்டு சிரித்தனர்..
சிறுது நேரத்தில் இருவரும் ரெடி ஆகி சாப்பிட்டு வந்தனர். அவர்கள் வருவதற்குள் பாலா சொன்னவர் வந்து சேர்ந்தார். அவருக்கு வயது ஐம்பது இருக்கும்.அவர் பெயர் குருபரன்..அந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்..
அவரைக் கண்டதும் ஆதி தன் நெற்றியை தொட்டு யோசிக்க ஆரம்பித்தான் ..இவர பார்த்த மாதிரி இருக்கே.
“என்ன ஆதி என்னை எங்கையோ பார்த்தா மாதிரி இருக்கா ?”என்று சிரித்துக் கொண்டே கேட்டார் – குரு
ஆம் என்பது போல் தலை அசைத்தான்..
“நீ ஆறாவது படிக்கும் போது உனக்கு நான் கிளாஸ் டீச்சர் பா “- குரு
சிறிது அதிர்ச்சி அடைந்தான்., “சாரி சார் எனக்கு எதுவும் நியாபகம் இல்ல.. அத தெரிஞ்சிக்க தான் இங்க வந்தேன்” – ஆதி
“ஹம் தெரியும் ஆதி.. பாலா தம்பி எல்லாத்தையும் சொன்னார், உன்னப்பத்தி எல்லாம் தெரியும் உனக்கு என்ன ஆச்சு கூட தெரியும் பா” – குரு
“சார் பிளீஸ் என் வாழ்க்கைல என்னாச்சு சொல்லுங்க” – ஆதி
குருபரன் ஆதியின் கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தார்..
***
இங்கு ஆரா மற்றும் ருக்கு சாப்பிட அமர்ந்தனர் உணவு மேஜையில்..
கதிர் தன் தாய் சரஸ்வதியை இவர்களுக்கு அறிமுகம் படுத்தி வைத்தான், கடமைக்கு என்று சிரித்து வைத்தார். சரசு இவர்களுக்கு உணவு பறி மாறினார். அவர் முகத்தில் எள்ளளவும் மகிழ்ச்சி இல்லை. இதை ஆரா கவனித்தாள், ருக்குவோ சோறு தான் முக்கியம் என்று தன் கடமையை சரிவர செய்தாள் இதை கவனிக்கும் நிலையில் இல்லை. ஆராவிற்கு இங்கு ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டாள்..
இருவரும் கதிருடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து அமர்ந்தனர்..
“கதிர் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் சொன்னா ஆனா இங்க அதற்கான எந்த ஏற்பாடும் இல்லையே” – ஆரா
“கல்யாணம்னு ச்சும்மா சொன்னேன் ஆரா” என்று ஆணவமாக சிரித்தான்..
அவன் சிரிப்பை பார்த்து கோவத்துடன், “என்ன சொல்ற கதிர் அப்போ எங்களை எதுக்கு வர சொன்ன? எனக்கு அப்பவே இங்க ஏதோ தப்பா இருக்கு தோணுச்சு” – ஆரா
சபாஷ் என்று கைதட்டலுடன் உள்ளே நுழைந்தார் லிங்கேஸ்வரன். கதிரின் தந்தை.
“சின்ன வயசுலயே நீ ரொம்ப புத்திசாலி.. பழைசு மறந்து போச்சே எல்லாமே மறந்து போயிருக்கும் நினைச்சேன் ஆனா அது தப்பா ஆயிடுச்சு” – லிங்கம்
“டேய் கடன்காரா என்னடா கேடு உனக்கு .. ஆபீஸ்ல அம்பி மாதிரி இருந்த, இப்போ அந்நியன் ரேஞ்சுக்கு பேசுற, தேங்கா தலையா. இந்த ஆளு யாரு மங்கூஸ் தலையன் மாதிரி இருக்கான்.. பாக்க காமெடி பீஸ் மாதிரி தெரிது.. கண்டிப்பா உன் சொந்தமா தான் இருக்கும்” – ருக்கு
“ஹே அடிச்சன பல்லு ஒடையும் மரியாதையா பேசு அவர் என் அப்பா” – கதிர்
“உங்க ரெண்டு பேரு மூஞ்ச பார்த்தாலே தெரியுதுடா டுபுக்கு” என்று முணுமுணுத்தாள் – ருக்கு
“என்னடி சொன்ன “?என்று அடிக்க வந்தான் கதிர்..
“ரெண்டு பேரும் கொஞ்சம் ச்சும்மா இருங்க, இப்போ எங்கள எதுக்கு கடத்திட்டு வந்த கதிர் அத முதல சொல்லு” – ஆரா
அதை நான் சொல்றேன் என்று லிங்கம் தன் பேச்சை ஆரம்பித்தான்..
அங்கு குரு சொல்ல ஆரம்பித்தார்..
வாங்க நாமும் பதினைந்து வருஷம் பின்னாடி, ஃபிளாஷ் பேக் உள்ள போவோம்…
ஃபிளாஷ் பேக் :
ஆதி மற்றும் ஆரா இருவரின் சொந்த ஊர் புலியூர் தான் அவங்க தாத்தா காலத்துல இருந்தது. ரெண்டு குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடு தான் அது மட்டும் இல்லாமல் தூரத்து உறவு. இருவரின் அப்பாகளும் ஒண்ணாக விவசாயம் செய்து வருகின்றனர்..
இருவரின் அம்மாக்களும் வழக்கம் போல் டிவி சீரியல்களை பார்த்துக் கொண்டும்.. குழம்பு, பொரியல்களை பரிமாறிக் கொண்டும் இருந்தனர்.., அதாவது ரெண்டு ஃபேமிலியும் ரொம்ப ஒற்றுமையா இருக்காங்க அதான் அப்படி சொன்னேன் . அது மட்டும் இல்ல எதிர்காலத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெக்கணும் பிளான் எல்லாம் போட்டு இருக்காங்க.
(ஃபிளாஷ் பேக், கொஞ்சம் சீக்கிரம் முடிக்கலாம் தான், நிகழ் காலத்துல ஹீரோ ஹீரோயின் வேற மீட் பண்ணல)
இந்த முத்து மற்றும் மீனு (ஃபிளாஷ் பேக்ல, ஆதி, ஆரா பேரு இதான் சோ இது முடியற வரைக்கும் நாம இந்த நேம் ஃபாலோ பண்ணலாம் ஓகேவா!)
ஹம்..எங்க விட்டோம்,..ஹான் இந்த முத்து, மீனு ரெண்டும் அருந்த வாலுங்க.. ஊர் வம்பு அத்தனையும் கொண்டு வருவாங்க. இவங்கள யாராலையும் சமாளிக்கவே முடியாது.. டெய்லி ஒரு பஞ்சாயத்து கொண்டு வருவாங்க. அந்த பஞ்சாயத்த தீர்க்குற வேலை தான் இவங்க ரெண்டு பேரு அப்பா, அம்மக்களுக்கும்.
விடுமுறை நாட்கள்ல ரெண்டு பேரும் காலைல ஊரு சுத்த கிளம்புன ராத்திரி தான் வீட்டுக்கு வருவாங்க. வயல் வெளி, வாய்க்கால் வரப்பு, காடுகள் இப்படி எங்கையாவது சுத்திட்டு தான் வருவாங்க..
ஆனா ரெண்டு பேருமே ரொம்ப புத்திசாலி.. படிப்பு, விளையாட்டு எல்லாத்திலும். அந்த ஊருல பாதி மரங்கள் இவங்க நட்டு வெச்சது தான். தப்புன்னு தெரிஞ்ச தைரியமா தட்டிக் கேட்பாங்க இந்த வயசுலயே. தப்ப தட்டிக் கேட்க வயசு முக்கியம் இல்ல நல்ல மனசும், தைரியமும் இருந்தா போதுங்க..
ஊருனு சொன்னாலே அங்க பண்ணையாருனு இருப்பாங்கள அவரு தான் லிங்கேஸ்வரன், சுயநலவாதி, ஊர அடிச்சு உலைல போடுறதுக்காக தான் ஊர் சொத்த ஏமாத்தி வாங்கி வெச்சிப்பாரு. மாந்தீரிகத்துல ரொம்ப நம்பிக்கை..
இவரு சம்சாரம் சரஸ்வதி தங்கமான குணம் உள்ளவங்க.. புருஷன் பண்ணற பாவத்தை சரி செய்ய அந்த ஆளுக்கு தெரியாம எல்லாருக்கும் பண உதவி செய்வாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே பையன் தான் கதிர் எங்கிற கதிரேசன். அப்பனுக்கு தப்பாம பொறந்துருக்கான். ஊர்ல எல்லா கேடி தனமும் பண்ணுவான்..
முத்துவும், கதிரும் ஒரே வகுப்பு தான் ரெண்டு பேருக்குமே ஒத்து வராது எப்பவுமே சண்டை தான். பண்ணையார் மகனு யாரும் தட்டிக் கேட்க மாட்டாங்க. ஆனா குருபரன் ஆசிரியர் மட்டும் இவன் செய்ற தப்புக்கு தண்டன தருவார்..
இப்படி போயிட்டு இருந்த இவங்க வாழ்க்கையில அந்த ஒரு நாள் வந்தது..
லிங்கேஸ்வரனுக்கு பணத்தாசை கூட அரசியல் ஆசையும் வந்தது.. அதனால அந்த மந்திரவாதிய பார்க்க காட்டுக்குள்ள போய் பார்த்தான். அவன் தன்னோட ஆசைய பத்தி சொன்னான். அதுக்கு அந்த மந்திரவாதி பரிகாரமா நாளை அமாவாசை நடு ஜாமத்துல ரெண்டு பச்ச குழந்தைகளை காளிக்கு நரபலி குடுத்தா, அரசியல கொடிக்கட்டி பறக்கலாம்னு சொன்னான்..
அந்த மந்திரவாதி பேச்ச கேட்டு தன்னோட அடியாட்கள் கிட்ட அதற்கான ஏற்பாடுகள் பண்ண சொன்னான் அந்த லிங்கம்.. இத எல்லாத்தையும் முத்துவும், மீனுவும் மறைஞ்சிருந்து கேட்டாங்க.
இத எப்படியாவது தடுக்கணும் சொல்லி மறுநாள் ராத்திரி வீட்டுல யாருக்கும் தெரியாம வீட்ட விட்டு வெளியே வந்தாங்க. போற வழில ரோந்துக்காக ரெண்டு போலீஸ்காரங்க இவங்க எதிர்க்க வந்துட்டு இருந்தாங்க.
இவங்கள பார்த்து “பசங்களா இந்த நடு ராத்திரி எங்க போயிட்டு இருக்கிங்க?” என்று கேட்டனர்.
முத்துவும், மீனுவும் லிங்கேஸ்வரன் செய்ய போகும் செய்யலை பற்றி சொன்னார்கள் பதட்டம் குறையாமல்..
இவர்களின் சுட்டி தனம் தெரிந்தாலும் இவங்க ரெண்டு பேரு சொல்றதுல எதோ உண்மை இருக்கு ..ஏன் லிங்கம் எப்பொழுதும் மந்திரவாதிய நாடிச் செல்வான். எதுக்கும் கூட இன்னும் ரெண்டு காவலாளிகள கூட்டிட்டு போணும் சொல்லி ரோந்துக்கு எதிரே வந்த மற்ற ரெண்டு பேரையும் கூட்டிட்டு அந்த நரபலி நடக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர்..
அங்கு குழந்தைகளை நரபலிக்கு கொடுக்க தயாராக இருக்கும் போது இவர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்..
எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் அவங்க மேல கேஸ் ஃபைல் பண்ணி, கோர்ட்ல நிக்க வெச்சு அதுக்கான தண்டனையா பத்து வருஷம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி, அது மட்டும் இல்லாமல் முத்து மற்றும் மீனுவை பாராட்டினர்..
லிங்கத்துக்கு இவங்க ரெண்டு பேரு மேலையும் தீராத பகை வந்துச்சு அதனால வெளில இருக்குற அடியாளுங்க கிட்ட சொல்லி இவங்க ரெண்டு பேரையும் கொல்ல சொன்னான்..
அவன் ஆளுங்களும் இவங்க ரெண்டு பேரும் விளையாடி கொண்டு இருந்தப்ப ரெண்டு பேரு தலையில பலமா தாக்கினாங்க. அங்க எதோ கார் வர சத்தம் கேட்டு அந்த அடியாட்கள் அங்க இருந்து தப்பிச்சு போயிட்டாங்க..
அந்த பக்கம் ஊருக்கு போயிட்டு காருல வந்துட்டு இருந்த குருபரன், இவங்க ரெண்டு பேரும் இரத்த வெள்ளத்துல இருந்தத பார்த்து ஹாஸ்பிடல அட்மிட் பண்ணி அவங்க அப்பா அம்மாவுக்கும் செய்தி அனுப்பினார்..
அவர்களும் அந்த ஹாஸ்பிடலுக்கு கதறிக் கொண்டு வந்து சேர்ந்தனர்..
குரு அங்கு நடந்த எல்லாத்தையும் சொன்னார், இவங்களுக்கு யாரு எதிரி இப்படி கொலை பண்ண அளவுக்கு என்று கேட்டார். அவர் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த அத்தனையும் சொன்னாங்க. இது எல்லாம் அந்த லிங்கத்தோட வேலை என்று சொல்லி அழுதனர்..
கண்டிப்பா லிங்கம் இவங்க ரெண்டு பேரையும் உயிரோட விட மாட்டான் தெரிஞ்சு போச்சு இவர்கள் அனைவருக்கும்.. அடுத்து என்ன பண்ணலாம் யோசிக்கும் போது தான், அந்த ஹாஸ்பிடல் டாக்டர்கள் இவங்கள கூப்பிட்டாங்க..
“பசங்க ரெண்டு பேரு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல.. ஆனா” என்று சற்று தயங்கிக் கொண்டு இருந்தார் அந்த டாக்டர்..
“பிளீஸ் டாக்டர் என்ன பிரச்சனை மறைக்காம சொல்லுங்க” என்றார்கள் இரு பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து..
“அவங்க ரெண்டு பேருக்குமே மெமரி லாஸ் ஆயிடுச்சு பழைய விஷயங்கள் எதுவும் நியாபகத்துல இல்ல அவங்களுக்கு” – டாக்டர்
இருவரின் பெற்றோர்களுக்கும் இது பெரிய அதிர்ச்சி ஆனா குருபரன் இது தான் நல்ல சந்தர்ப்பம் நீங்க ரெண்டு பேரும் பசங்கள வேற தனி தனி ஊருக்கு கூட்டிட்டு போயிடுங்க.., அது மட்டும் இல்லாமல் அவங்க அடையாளத்தையும் மாற்றுங்க. ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா தான் இவங்களுக்கு ஆபத்து வரும் அதுக்கு தான் இப்படி சொல்றேன்” என்றார்..
அவர்களுக்கும் இது தான் சரினு ராத்திரியோட ராத்திரியா வீட்டை காலி செய்து விட்டு அந்த ஊர விட்டு போனார்கள்..
இதோட ஃபிளாஷ் பேக் முடிந்து விட்டது
இனி –
லிங்கத்தின் வீட்டில் :
“உன்னால தான் என் அப்பா ஜெயிலுக்கு போனார். அதுக்கு பழி வாங்க தான் உன்ன இங்க வர வெச்சேன்” – கதிர்
“அட லூசு பயலே இவ்வளவு பெரிய உலகத்துல இவ தான் மீனு எப்படி சொல்ற? ஏன் நான் கூட மீனுவா இருக்கலாம் தானா?” – ருக்கு
“ஹம் நல்ல கேள்வி. ஏழு மாசத்துக்கு முன்னாடி உங்க ஆபீஸ்ல எல்லோரும் சேர்ந்து டூர் போனீங்க.. அப்போ நீங்க எல்லாரும் சேர்ந்து செல்ஃபி பேருல கைய கால ஆட்டி போட்டோஸ் எடுத்தீங்க தெரியுமா,.. அந்த போட்டோவ உங்க கூட வோர்க் பண்ண தினேஷ் என் ஃபிரண்ட் அவன் ஃபேஸ் புக்ல போட்டான் அதுல தான் இவள கண்டு பிடிக்க முடிஞ்சது.
புரியலையா மீனுவோட வலது கை மணிக்கட்டுல நட்சத்திர மச்சம் இருக்கும் அது இவ கைலயும் இருக்கு பாரு” என்று ஆராவின் கையை காண்பித்தான்..
“இத வெச்சு தான் அங்க வந்து ஜாப் ஜாயின் பண்ணி உன் ஃபேமிலி பத்தி முழு விவரமும் தெரிஞ்சிக்க முடிஞ்சிது.. நாங்க தேடுன பொண்ணு நீ தான் கண்டுபிடிக்க முடிஞ்சது”- கதிர்
“இன்னொரு விஷயம் நான் சொல்லப் போறேன் ஆரா.. உன் சின்ன வயசுக் கூட்டாளி, அவனும் இப்போ இதே ஊருக்கு தான் வந்திருக்கான் தெரியுமா? “- கதிர்
அதை கேட்டு ஆரா அதிர்ச்சி ஆனாள்.. அவளுக்கு அவன் முகம் தெரியலன கூட அவன் பெயரை கேட்டவுடன் மனதில் இனம் புரியாத ஒரு எண்ணம் எழுந்தது ஆராவிற்கு..
“உன் கூட்டாளி ஏதோ புத்திசாலி நினைச்சா ரொம்ப மொக்கைய வந்து மாட்டிகிட்டான் எங்ககிட்ட” – லிங்கம்
“எதோ துப்பறியும் நிறுவனம் நடத்துறான் அவன் பேரு கூட பாலா.. ஊருக்குள்ள எங்கள விசாரிச்சுட்டு இருந்தான்.. என்னனு பார்த்தா முத்துவையும் எங்களை பத்தி கேட்டுட்டு இருந்தான். அதுவும் அந்த குரு வாத்தியார் கிட்ட. அவனும் எங்கள பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டான். இவனுங்கள வெச்சு தான் அவன புடிக்கணும்னு பொறி வெச்சு புடிச்சிட்டோம் அந்த முத்து பயல. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன எங்க ஆளுங்க இங்க கூட்டிட்டு வந்துருவாங்க. உங்க ரெண்டு பேரையும் உயிரோட சமாதி ஆக்கப் போறோம்.. அது தான் நான் ஜெயில்ல அனுபவிச்ச வலிக்கான மருந்து” என்று கொடூரமா சொல்லி சிரிச்சான் – லிங்கம்
தன் அப்பா கூட சேர்ந்து கதிரும் வில்லத்தனமா சிரிச்சான்.. பின் ஆராவிடம் துப்பாக்கிய காட்டி..
“அப்போ அவன் பேரு முத்து இப்போ அவன் பேரு என்ன தெரியுமா?” என்று வாய் திறக்கும் போது வெளியில் இருந்து
“ஆதிரன்” என்றான் கர்வமாக..
அனைவரும் வீட்டு வாசலை திரும்பி பார்த்தனர்..
“நான் தான் ஆதிரன்.. உங்களுக்கு இப்படி சொன்னா புரியாதுல.. என் பேரு முத்து இப்போ தெரியுதா?” என்று கூறிக் கொண்டே ஆராவ பார்த்தான்..
அவள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. இவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..
இவனுக்கும் அதே நிலைமை தான் பார்த்த ஒரே பார்வையில் அவன் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டாள்..
இவர்களின் சில நிமிட பார்வை பரிமாற்றங்களை பார்த்து கடுப்பான கார்த்தி, “டேய் மச்சான் என்னடா நடக்குது இங்க? அந்த பொண்ண அப்படி பாக்குற??
சத்தியமா சொல்றேன்டா மச்சான் சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது உன்ன. வந்தவடனே ஒரே பார்வையிலேயே அந்த பொண்ண கரெக்ட் பண்ணிட்டா” கடுப்புடன் சொன்னான் கார்த்தி..
“ச்சு என்னடா பிரச்சனை உனக்கு இவ்வளவு வருஷமா ஒரு பொண்ண கூட பார்க்க விடாம குரங்கு மாதிரி என் பின்னாடியே சுத்துற… இன்னைக்கு தான் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கா அத ஏன்டா கெடுக்குற” என்று சற்று சலிப்புடன் – ஆதி
“அது எப்படிடா என்ன விட்டுட்டு நீ மட்டும் பாக்கலாம்??” – கார்த்தி
“உனக்கு என்னடா பிரச்சனை வேணா அவ பக்கத்துல ஒரு பொண்ணு இருக்கா அவள வேணா நீ பாருடா” – ஆதி
“என்னது பொண்ணா” என்று வாய்ய பிளந்து கொண்டு ருக்குவை வெச்ச கண்ணு வாங்காம பார்த்தான்.. அது வரைக்கும் அவ அங்க இருந்தத கார்த்தி சார் பாக்கல அதான்..
“டேய் மச்சி !என் செல்லம் நயன்தாரா மாதிரி இல்லனா கூட நாயகி சீரியல வர ஆனந்தி மாதிரி இருக்கா எனக்கு ஓகேடா இவ” என்று வழிஞ்சிட்டு சொன்னான் கார்த்தி..
“முதல அவ உன்ன ஓகே சொல்லனும்” என்று முணுமுணுத்தான் ஆதி..
“என்னடா சொன்னா ஒண்ணும் புரியல” – கார்த்தி
“புரியாத வரைக்கும் நல்லது” – ஆதி
“சரிடா ” சொல்லிட்டு திரும்ப ருக்குவ பார்க்க சாரி சாரி வழிய ஆரம்பிச்சுட்டான் கார்த்தி..
இங்க தப்பிக்க ஏதாவது வழி இருக்கானு சுத்தி சுத்தி வீட்ட பார்த்துட்து இருந்த ருக்குவுக்கு கார்த்தி சைட் அடிக்குற பேருல அவன் விடுற வாட்டர் ஃபால்ஸ பார்த்ததும் டென்ஷன் ஆனாள்..
பக்கத்துல ஆரா கிட்ட சொல்லலாம் என்று திரும்பினாள் ருக்கு அவளோ எதையும் கேட்கும் நிலமையில் இல்லாமல் ஆதியை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
இது வேலைக்கு ஆகாது என்று பொறுமை இழந்து கார்த்தியை பார்த்து.. “டேய் மாங்கா மண்டையா இப்போ எதுக்கு வந்திங்களோ அந்த வேலைய முதல கவனி . அங்கப் பாரு அந்த மங்கூஸ் தலையன் வேற இன்னும் கடுப்புல இருக்கான்” – ருக்கு
ருக்குவின் கத்தலில் அனைவரும் சுயநினைவுக்கு வந்தனர்..
லிங்கத்தை பார்த்து “என்ன சொன்னிங்க? நீங்க ஒண்ணும் என்ன பொறிப் போட்டு சிக்க வைக்கல.. நான் தான் உங்க வலையில விழுந்த மாதிரி நடிச்சேன்” என்றான் திமிருடன் ஆதி ..
“என்ன புரியலையா இப்போ என் மச்சான் சொல்லுவான் கேளுங்க “- ஆதி
“என்னனா மிஸ்டர் லிங்கு ரெண்டே நாளுல ஆதி அதாவது முத்து பத்தின விவரங்கள் எங்களுக்கு கிடைச்சிருச்சி. சட்டத்துக்கு புறம்பாக நீங்களும் உங்க செல்ல பிள்ளையும் செய்யுற வேலைகளுக்கு ஆதாரங்கள் ரெடி பண்ண தான் நாலு நாள் தேவை பட்டுச்சு.. சாமி சிலைகள் , தேக்கு மரம், யானை தந்தம் கடத்தல் , கஞ்சா செடி வளர்த்தது இப்படி உங்க எல்லா பிசினஸ் அதுக்கான டாக்குமெண்டஸ் எல்லா இப்போ எங்க கைல இருக்கு லிங்கு..
நாங்க பண்ணற வேலைய நீங்க கவனிக்க கூடாதுன்னு தான் பாலாவ உங்க கண்ல படுற மாதிரி அனுப்பி வெச்சோம். அதுக்கு ஏத்தா மாதிரி நீங்க அவன மட்டும் தான் கவனிச்சிங்க..
இதுக்கு எல்லாம் கணக்குப் போட்டு பார்த்தா உங்களுக்கு எத்தன வருஷம் ஜெயில் தண்டனைன என்று யோசித்துக் கொண்டு காற்றில் கணக்கைப் போட்டான் 2*4*5*6, அய்யையோ லிங்கு நீங்களும் உங்க பையனும் ஆயுசுக்கும் களி தின்ன வேண்டியது தான் என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பரிதாப பட்டான்” – கார்த்தி
இதைக் கேட்ட ஆராவும், ருக்குவும் கைத் தட்டி ரசித்தார்கள்..
“அது மட்டும் இல்ல ஆரா இங்க வர விஷயம் எங்களுக்கு நியூஸ் வந்திருச்சு.. என்ன எப்படின்னு பாக்குறியா உங்க மொபைல்ஸ நாங்க ஹக் பண்ணிட்டோம்.. அதுல தான் ஆல் டீடைல்ஸ் வீ காட் இட்.
இன்னும் அஞ்சு நிமிசத்துல உங்க மாமனார் வீட்டுல இருந்து உங்களை கூட்டிட்டு போக ஆள் வராங்க” – கார்த்தி
“சென்னைல இருந்து புலியூர் வரை எங்கள ஃபாலோ பண்ண அனுப்பின உன் ஆளுங்க இப்போ லாக்-அப்ல தான் இருக்காங்க போய் அவங்களுக்கு கம்பெனி குடுங்க என்று நக்கலாக சொன்னான்” – ஆதி
“டேய் எங்களை என்னடா நினைச்சிங்க..? ஒழுங்கு மரியாதையா அந்த ஆதாரங்களை எங்ககிட்ட கொடுத்துட்டுங்க இல்லன, டேய் கபாலி இங்க வாடா” – லிங்கம்
“சொல்லுங்க எஜமான்” என்று கைக் கட்டிக் கொண்டு வந்து நின்னான் கபாலி..
“ஆமா இவரு கபாலி படத்துல வர ரஜினி மாதிரி ரொம்ப பவ்வியமா வந்து நிக்கிறாரு. கபாலி அங்கிள் இதுல்லாம் நாங்க எங்க தலைவர் படத்துல பார்த்தாச்சு.. உங்க பர்ஃமன்ஸ் பத்தல” என்று கிண்டல் அடித்தான் – கார்த்தி
“டேய் என்னடா அவன் வாய பார்த்துத்து இருக்க.. இவங்க ரெண்டு பேரோட பெத்தவங்கள இங்க கூட்டிட்டு வா இவங்க கண்ணு முன்னாடியே அவங்கள கொண்ணு போடலாம்” என்று ஆவேசமாக கத்தினான் லிங்கம் ..
ஐயா என்று தலையை சொறிந்தான் கபாலி..
“என்னடா?” – லிங்கம்
“அவங்க நாலு பேரையும் கட்டி தான் வெச்சோம் ஆனா இப்போ வரும் போது தான் பார்த்தேன் அவங்கள ஆள காணும் ஐயா” – கபாலி
“டேய் என்னடா சொல்ற, எப்படி அவங்க காணாம போவாங்”க சொல்லி கொண்டே கபாலியை அறைந்தார் லிங்கம்..
“அத நான் சொல்றேன், பத்து வயசுலேயே உங்கள உள்ள தள்ளுனவன் நான் இப்போ உங்க முன்னாடி இருபத்தி ஐந்து வயது பிசினஸ் மேனா வந்து நிக்கறேன், உங்களால என்ன பிரச்சனை எல்லாம் வரும் தெரிஞ்சி தான் எல்லாத்தையும் முன் ஏற்பாடா பண்ணிட்டேன்.இப்போ அவங்க எங்ககிட்ட தான் பாதுகாப்பா இருக்காங்க” – ஆதி
ஆதி பேசிக் கொண்டு இருக்கும் போதே, வீட்டினுள் காவல் துறையினர் வந்து அனைவரையும் வெளியில் செல்ல முடியாத படி மறைத்துக் கொண்டனர் இவர்கள் கூடவே பாலாவும் வந்தான் ..
“டேய் ஆதி இப்போ உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாதுடா” என்று அருகில் இருந்த ஆராவை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தான் – கதிர்
“ஒழுங்கா அந்த போலீஸ்காரங்கள போக சொல்லிடு இல்லனா இவ உயிரோட இருக்க மாட்டா” என்று அவள் கழுத்தில் கத்தியை வைத்தான் – கதிர்
அவன் அழுத்தியதும்,” ஆதி பிளீஸ் என்ன காப்பாத்து” என்றாள் ஆரா..
அவளின் அழுகையை பார்த்த ஆதி தன்னவளின் வலியை உணர்ந்தான். சிறுவயதில் பேசியது தான் அவளிடம் அதுவும் நினைவில் இல்லை, இங்க வந்தது இருந்து அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. வெறும் பார்வை மட்டும் தான்.. அதிலே ஆயிரம் வார்த்தைகள் பேசிய உணர்வு, இவள் தன்னவள் என்ற உணர்வு ஆட்கொண்டது..
ஆராவிற்கும் அதே நிலை தான்.. இத்தனை வருஷத்தில் எத்தனை ஆண்களை பார்த்தாலும் அவளுக்கு அவர்கள் மேல் எந்த விருப்பமும் வந்தது இல்லை. இன்று பார்த்த முதல் வேளையில் அவன் மீ்து விருப்பம் கொண்டது. அதனால் தான் தனக்கு ஆபத்து வந்தவுடன் தன்னவனை முதலில் அழைத்தாள்..
சொன்னால் தான் காதலா என்ன???
ஆராவின் கதறலில் அடுத்த நொடியே ஆதி தன் பாதுகாப்புக்கு வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து கதிரை சுட்டு வீழ்த்தினான்..
அந்த இடத்திலேயே கதிர் உயிர் இழந்தான்..
லிங்கம் தன் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்ததை பார்த்து கதறி அழுதான்..
காவலர்கள் கதிரின் சடலத்தை கைப்பற்றி, லிங்கம் மற்றும் அடியாட்களை கைதுசெய்தனர்..
இந்த கலவரத்தை கண்டு பயந்த ஆரா, ஆதியை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்..
அவள் நடுக்கத்தை உணர்ந்த ஆதி அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்..
பின்பு அனைவரும் ஆதி மற்றும் ஆரா பெற்றோர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்..
இருவரின் பெற்றவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் ஒன்றாக இருப்பதை கண்டு மகிழ்ந்தனர்..
இவர்கள் இருவரையும் கல்யாண பந்தத்தில் இணைத்து வைக்க விரும்பினார்கள் இவர்களின் பெற்றவர்கள்..
ஆனால் ஆதியும், ஆராவும் “இன்னும் நாங்க பேசிக்கவே ஆரம்பிக்கல வெறும் லவ் மட்டும் தான் ஆரம்பிச்சு இருக்கோம், அதுக்குள்ளே கல்யாணமா???
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நாங்க நிறையா பேசணும்.. லவ் பண்ணனும் அதுக்கு அப்புறம் தான் எங்க மேரேஜ் இப்போதைக்கு இல்லை” இருவரும் ஒன்று சேர்ந்து சொன்னார்கள்..
இவர்களுக்கு பழைய ஞாபகங்கள் மறந்தாலும் கூட, இவர்களின் பழைய உணர்வுகளை மறக்கவில்லை..
இவர்களின் காதல் பயணம் தொடர்ந்து பயணிக்கட்டும்…