எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 6,153 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 12-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16ஆம் அத்தியாயம் 

மறதி என்ற ஒன்றை இறைவன் படைத்திராவிட்டால் மனித சமுதாயம் எப்போதே சாம்பராகியிருக்கும். அப்படி யான மறதியைக் கொண்டு எதையோ தன் மனதைவிட்டு அகற்றிவிடத்தான் ரகுவும் முயற்சிக்கிறான். ஆனால் சில நினைவுகளுக்கு மரணம் என்ற ஒன்று ஏற்படுவதேயில்லை. சில சந்தர்ப்பங்களில் சில மனிதர்கள்கூட இந்த நினைவு தரும் நிம்மதியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உமா என்னும் ஓவியம் அவன் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தது. இனிமேல் அந்த ஓவியத்தை அவன் இதயத்தில் இருந்து அழிக்கவே முடியாது. அது அழிபட முடியாத மையால் வரையப்பட்டுவிட்டது. அவன் எங்குச் சென்றாலும் என்னத்தைச் செய்தாலும் உமா அவனைத் தொடர்ந்து கொண்டே இருப்பாள். 

அதன் பின் அவன் அந்தப் பக்கந் திரும்பவேயில்லை. நேராக நடந்து பஸ்ஸில் ஏறி வீட்டையடைந்தான். அன்று இரவு அவன் சாப்பிடவில்லை. நிர்மலா அவனிடம் கொடுத்த மாத்திரைகள் பத்திரமாக அவன் மடியில் இருந் தன அதைக் குடிப்பதா விடுவதா என்ற நீண்ட நேர சிந்தனைக்குப் பின் ஒரு அன்புள்ளத்தின் ஆத்ம திருப்திக் காக அவள் சொன்னபடி இரண்டு மாத்திரைகளை விழுங்கினான். அதற்கு மேல் இலட்சுமி கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டான். அன்று இரவு முழுவதும் அவனுக்கு அமைதியாக நித்திரை கொள்ள முடிந்தது. 

அடுத்த நாள் வழக்கத்திற்கு விரோதமாக அவன் இரண்டு மூன்று மணி நேரம் பிந்தித்தான் எழுந்தான். அவனுக்கு உடல்நிலை பூரண குணமாகிவிட்டது போன்ற தோர் உணர்ச்சி ஏற்பட்டது. காலையில் மிஸி கொடுத்த மருந்தைவிட நிர்மலா கொடுத்தது சிறந்ததாக இருக்கவேண் டும் என நினைத்துக்கொண்டான். அன்று பவானியைக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்றது மறக்கவில்லை. ஆனால் சாவகாசமாக சாயந்தரம் போய்க் கூட்டி வந்தால் போதும் என்ற எண்ணத்தில் முகங்கழுவிப் போட்டு வந்து படுத்துக் கொண்டான். 

சிலநிமிட நேரத்தின் பின் அவனது அறைக் கதவு தட்டப்படும் சத்தங் கேட்டு எழுந்து சென்று கதவைத் திறந் தவன் திடுக்கிட்டு அப்படியே நின்றான். அங்கே மூட்டை முடிச்சுகளுடன் பவானி நின்றாள். ‘நீயா தங்கச்சி தனி யாகவா வந்தாய் சாயந்தரம் நான் வருவன் என்று தெரியு மல்லவா ? என்று அப்படியிருக்க நீ ஏன் தனியாக வந்தாய்? டாக்டருக்கு நீ வந்தது தெரியுமா ? என்று அதிர்ச்சி யடைந்த நிலையில் கேள்விக்குமேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டு சென்ற ரகுவைப் பார்த்துக் கபடமற்ற குழந்தை போல் சிரித்தாள் பவானி. அவள் சிரிப்பு ரகுவுக்கு எரிகிற அடுப்பில் எண்ணெய் வளர்ப்பது போன்றதோர் நிலையை உண்டாக்கியது. 

எனக்கு ஒரு கணவன் இருந்தால் அல்லது இரத்தத் தொடர்பு உடைய சகோதரனாவது இருந்திருந்தால் எப் போது விடிகிறது என்று காத்திருந்து அதிகாலையில் என்னை வந்து அழைத்துக்கொண்டு போயிருப்பார்கள். 
என்ன இருந்தாலும் நீங்கள் உறவில்லாதவர்தானே. அதனால் அந்த அன்பும் பாசமும்கூட உங்களைவிட்டு அகன்று விட் டது. ஆயிரமிருந்தாலும் நான் உங்களுக்கு ஒரு சுமைதான். அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் பிறத்தி பிறத்திதானே என்று சொல்லாமல் சொல்லிச் சிரிக்கிறாளோ என்று மேற் கொண்டு எதுவும் பேசமுடியாமல் அவன் நின்றபோது ‘என்னண்ணா இது, நான்தான் தனியாக வெளிக் கிட்டாலும் டாக்டர் என்னைத் தனிய போகவிட அனுமதித் திருப்பார் என்று நினைக்கிறீர்களா ……? நீங்கள் கேட் கும் கேள்விகளைப் பார்க்கும்போது நீங்கள் அதிர்ச்சி யடைந்திருப்பதாகத் தெரிகிறது. போன வருத்தம் எங்கே உங்களுக்குத் திரும்பி வந்துவிடுமோ என்று பயப்படுகிறேன் அண்ணா. என் அன்புத்தெய்வம் போன்ற அண்ணன் விடிந்ததும் விடியாததுமாக எங்கே என்னிடம் ஓடிவந்து விடுவாரோ என்று பயந்துதான் நிர்மலா மிஸியைக் கூட்டிக் கொண்டு வந்தன். அவர்கள் ‘டியூட்டி’ முடிந்து போகும் போது எனக்குத் துணையாக வருவதாகக் கூறினார். டாக் டரும் காய்ச்சலோடு நீங்களும் அலையாமல் இருப்பதற்கு. அதுதான் நல்ல யோசனை என்றார். அவருடைய அனுமதி” யின் பேரில்தான் இருவரும் புறப்பட்டு வந்தோம். டாக்சிக்குக் கூட மிஸிதான் பணங் கொடுத்தாங்க’, என்று பவானி தான் வந்த விவரத்தைக் கூறியபோது ரகுவுக்கு ஒரு சொட்டு நிம்மதி யேற்பட்டதாயினும் நிர்மலாவோடு அவள் வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. நிர்மலாவோடு அவள் வந்தது தவறென்றோ அல்லது தன் கெளரவம் குறைந்துவிடு மென்றோ அவன் எண்ணவில்லை. அதற்கு மாறாகத் தன்னைப்பற்றி ஒரு தாழ்ந்த அபிப்பிராயம் அவள் மனதில் பதிந்து விடுமென்றே அவன் அஞ்சினான். அவளிடம் பவானி தன்னைப்பற்றி அவ்வளவு உயர்வாகக் கூறியிருக்கும் போது அவள் கேவலமாக நினைப்பதற்குத்தான் மளித்துவிட்டாளே என வருந்தினான். 

ஆயினும் தன் உள்ளக்கிடக்கையை வெளியே காட்டாமல் இரவு முழுவதும் கண்விழித்து வேலை செய்தவர் களுக்கு நீ வேறு தொல்லை கொடுத்து விட்டாய். எங்கே அவர்கள் போய்விட்டார்களா என்று நிர்மலாவுக்காகப் பரிந்து பேசினான். இல்லையண்ணா . … மிஸி வெளியே தான் இருக்கிறாங்க. உங்கள் சுகத்தையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்றுதான் இருக்கிறா. ஆமாம் நீங்கள் IR தந்த மருந்து குடித்தீர்களா….? என்று தொடர்ந்து கேட்டாள் பவானி. 

‘குடித்தேன்’ என்று பவானியின் கேள்விக்குப் பதில் அளித்த ரகு அவள் கையிலிருந்த பொருட்களை எல்லாம் வாங்கி அறைக்குள் ஒரு பக்கமாக வைத்துவிட்டு முன் நோக்கி நடந்தான். அங்கே நிர்மலா ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதோ ஒரு பத்திரிக்கையில் ஆழ்ந்திருந்தாள். “பவானி உங்களை அதிகம் சிரமப்படுத்தி விட்டாள் என நினைக்கிறேன். அவள் சார்பில் உங்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன். அவள் எப்போதும் இப்படித்தான் ஒரு சின்னக்குழந்தை மாதிரி. யாராவது அன்பு காட்டினால் தானும் அளவுகடந்த உரிமையோடு பழகிவிடுவாள். 

அப்போது தான் நிர்மலா அவனை நிமிர்ந்து பார்த் திருக்க வேண்டும். ‘பரவாயில்லை’ அவள் என்னிடம் கேட்காமல் அவளுக்கு உதவி செய்யவேண்டும் என என் உள்ளந் துடித்துக்கொள்கிறது. எனக்குக் கூட அவள் மேல் அப்படி ஒரு பாசம் ஏற்பட்டுவிட்டது. இதற்காக யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உள்ளங்கள் ஒன்று சேரும்போது உணர்ச்சிகள்கூடச் சில வேளைகளில் ஒன்றிவிடுகின்றன. ஆமாம், உங்கள் சுகம் எப்படி? நான் கொடுத்த மாத்திரை சாப்பிட்டீர்களா.. அதன் பின் எப்படியிருக்கு என்று அவள் அவனைப் பரிவுடன் வினவியபோது அவள் உள்ளத்தை என்னவோ செய் தது. உமாவுக்குப் பின் தன்னிடம் சுயநலமற்ற முறையில் அன்புகாட்டும் இரண்டாவது ஜீவன் என நினைத்துக் கொண்டான். 

‘ரொம்ப நன்றி… உங்கள் மருந்து என்னை மிகவும் விரைவில் குணப்படுத்திவிட்டது. நாங்கள் இரு வருமே உங்களை அதிகஞ் சிரமப்படுத்தி விட்டோம் என நினைக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவங்களைப் போல இருக்கிறது. நல்லவங்களைக் கடவுள் எப்போதும் ஆசீர் வதிப்பார். அதனால் நீங்களும் நன்றாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. கூடிய விரைவில் மாங்க கல்யப் பாக்கியம் பெற்றுப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என ஆசீர்வதிக்கிறேன்’ என்றான். அப்போது நிர்மலா பலமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

உங்கள் வாழ்த்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள் ளேன். பவானி எங்கே…. சொல்லிவிட்டுப் புறப்படலாம் என நினைக்கிறேன் என்று கூறிவிட்டு அவள் எழுந்து கொள்ள முயன்ற போது இருங்கள் போகலாம் அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள். எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் ஒரு கோப்பை தேநீராவது அருந்தக்கூடாதா நாங்கள் ஏழைகள். அதைவிட வேறு எதைத்தான் உங் களுக்கு நாங்கள் செய்யமுடியும் என்றான் ரகு. அவன் விகடமானபேச்சைக் கேட்டு அவள் அடக்கமாகச் சிரித்தாள். இந்த வீட்டில் உள்ளவர்களே இருவர்தான். தாதியாகக் கடமையாற்றும் நான் உங்களை அப்படியெல்லாம் சிரமப் படுத்தக் கூடாது. உங்கள் விருப்பப்படி வேண்டுமானால் இன்னும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தேநீர் வேண்டாம். டிஸ்பென்சரியில் இருந்து புறப்படும் போதுதான் நான் குடித்தேன். உங்கள் வீட்டில் இன்னுமொரு நாளைக்குக் குடிக்கிறேன்’ என்றாள் நிர்மலா. 

அதற்கு மேல் ரகுவும் அவளை வற்புறுத்தவில்லை. சிறிது நேரத்தில் பவானியும் அங்கே வந்து அமர்ந்துகொள்ள மூவருமாகச் சிலநிமிட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப் போதுதான் நிர்மலாவும், ரகுவும் முதன் முதலாக மனம் விட்டுப் பேசிக்கொண்டனர். நிர்மலா அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றதும் ரகுவும் பவானியும் பலநாள்கள் பிரிந்திருந்த துயர்தீரப் பேசிக்கொண்டிருந்தனர். 

பவானிக்குப் பூரணமாக உடல்நிலை தேறி வாரங்கள் இரண்டுக்கு மேல் சென்றுவிட்டன. ரகுவும் பழையபடி ஒழுங்காக வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தான். அவ னது தற்போதைய கவலையெல்லாம் பவானியைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. எப்படியாவது பவானி சுகமாகப் பெற்றுப் பிழைத்து விடவேண்டும் என உள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டான். அவன் ஒருநாள் கதையோடு கதையாக விளையாட்டுப்போல ரகு பவானியிடம் அவள் கணவன் பெயர் கேட்டுவிட்டான். அந்த வினா அவள் கண்களில் நீரைச் சொரிந்தபோது அவன் திடுக்கிட்டான். என்னை மன்னித்து விடு தங்கச்சி உன் மனதைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கமே எனக்கு அடியோடு இருக்கவில்லை. ஆயினும் நாளைக்கு உனக்கு ஒரு மகன் பிறந்தால் அந்தச் சுபசெய்தியை அவருக்கு அறிவிப்பது என் கடமையாக இருக்கும் என்றுதான் கேட் டேன். சரி, அது உனக்குப் பிடிக்காவிட்டால் உனக்கு வேண்டிய உறவினர்களின் பெயரையும், முகவரியையு மாவது கூறு. தற்செயலாக நாளைக்கு எனக்கு ஏதாவது நல்லது கெட்டது நடைபெற்றால் நீ நடுத்தெருவில் நிற்கக் கூடாது என்று விளக்கங்கொடுத்து அவளைச் சமாதானப் படுத்த முயன்றான் ரகு. 

பவானியும் பிள்ளைப்பேறடையும் நாள்களை அணுகி விட்டாள். இன்னும் பதினைந்து நாள்களில் அவளுக்குச் சுகப்பிரசவமாய் விடுமென டாக்டர் கூறியிருந்தார். ரகு அவளை மிகவும் கண்ணுங் கருத்துமாகப் பேணிக் காத்து வந்தான். டாக்டர் கட்டளையிட்டபின் அவரது புத்தி மதியை யேற்று வேலைக்குப் போவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாள் பவானி. ஆனால் அவளது வீட்டு எஜமானி அவளை எப்போதும் திருப்பி ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருந்தாள். தன் மகப்பேற்றின் பின் மீண்டும் வேலைக்குச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்தாள்.. ரகுவைப்போல அவளும் குழந்தையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். 

தன் தாய்மைப்பேற்றை நினைத்து அவள் பூரிப் படைந்த போதும் அந்தப் பூரிப்பு அவளிடம் நிரந்தரமாக நிலை கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தன் வயிற்றில் கடந்த பத்துத் திங்களாக எத்தனையோ கஸ்டங்களின் மத்தி யில் வளர்ச்சி பெற்றுவந்திருக்கும் சிசு நேர்மையான முறை யில் பெறப்பட்டதாக இருந்திருந்தால் அவளது மகிழ்ச்சி எல்லை கடந்ததாக இருந்திருக்கும். ஆனால் அவள் வயிற்றில் இருப்பது ஒரு அவமானச்சின்னம் என்பது அவளறிந்த உண்மை. அவள் உயிர் உள்ளவரைக்கும் அவளுக்கு ஒரு பாவச்சின்னமாக அது அமைந்துவிடப் போகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிதாகியதும் தன் தகப்பனைக் காட் டச் சொல்லிக் கேட்டால் அவள் என்ன பதில் கூறமுடியும்? 

தந்தை பெயர் தெரியாத குழந்தை என்று ஊரும் உலகமும் பேசிக் கொள்ளும் போது அவர்கள் வாயை அவள் எப்படி அடக்க முடியும் ? அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தையாகிப் பெண்மையின் பெருமையைப் போற்றக் கூடிய தன்மையும் உடையதாக வளர்ந்துவிட்டால் தன்னைப் பெற்ற தாயைப்பற்றி அது எவ்வளவு கேவலமாக நினைத்துக்கொள்ளும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்த அவளுக்கு அழவேண்டும் போல இருந்தது. 

வருங்காலத்தை நினைத்துப் பார்த்தபோது அந்தக் குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டால் தேவலை போல இருந்தது பாவனிக்கு. ஆயினும் அவளது தாய்மை குமுறியது. குழந்தை எப்படிப் பிறந்தாலும் தாயாகி விட் டாள். அந்தத் தாய்மையை அழித்துவிட முடியாமல் அவள் குழம்பினாள். ராமு அண்ணா இருக்கும்வரை நான் எதற் கும் பயப்படத் தேவையில்லை, என்று தனக்குள்ளாகவே பேசி மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டாள். பேறு காலம் நெருங்கி பவானிக்கு வயிற்றில் வலி உண்டாகியதும் அவளை டாக்டர் ராஜனின் டிஸ்பென்சரியில் அனுமதித் தான் ரகு. அவனுக்கு ஒத்தாசையாக நிர்மலா சகல தையும் செய்து கொடுத்தாள். இந்தக் குறுகிய காலத்துக் குள் ரகுவும் நிர்மலாவும் மனந்திறந்து பேசிப் பழகிக் கொண்டனர். ரகுவுக்கு வேண்டிய சகலதையும் நிர்மலா உரிமையோடு செய்து கொடுத்தாள். அவன் சாப்பிட வேண்டிய நேரத்தில் அன்புடன் கண்டித்தும் பழகிக் கொண்டவிதம் ரகுவிற்குச் சிறிது இதமாக இருந்த போதும் அதை அவன் முற்றாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிய வில்லை. அந்த டிஸ்பென்சரியில் அவன் ஓர் புறத்தொழி லாளியாகக் கடமையாற்றிய போதும் நிர்மலா தான் ஒரு படித்த தாதி என்ற கர்வம் ஒரு சிறிதுமின்றி அவன் மனதுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடந்துகொண்டாள். 

சென்றமுறை பவானி உடல்நிலை சுகமில்லாத காரணத்தால் டிஸ்பென்சரியில் அனுமதிக்கப்பட்ட போது ரகு அடைந்த தனிமையும் குழப்பமும் இம்முறை அவனுக்குத் தோன்றவில்லை. பவானி இல்லை என்கிற உணர்ச்சி தோன்றாமல் நிர்மலா அவனைக் கண்காணித்துக்கொண் டாள். ஆயினும் ரகு அவளோடு மனம்விட்டுப் பழகப் பயப்பட்டான். அவள் காட்டும் அன்பை ஏற்றுக்கொள்ள அவன் மனந்துடித்த போதும் அந்தத் தகுதி தனக்கில்லை என அவன் மனம் அவனைச் சாடிற்று. பவானியை டிஸ்பென்சரியில் சேர்த்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டன. மூன்றாம் நாள் காலை பவானிக்குச் சாடையாகப் பிரசவ நோய் ஆரம்பமாகி இருந்தது. அவள்படும் வேதனையைத் தூரத்திலிருந்து பார்த்த ரகுவின் மனந் துடித்தது. அவள் படும் பாட்டைப் பார்த்தபின் அவ்விடத்தில் நிற்க விரும் பாதவனாய் அவன் முன்பக்கஞ் சென்று இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினான். அன்று அவன் அதிர்ஷ் டமோ அல்லது பவானியின் பிரார்த்தனையோ நிர்மலா தான் பகல் வேலைக்குத் தலைமையாகப் போடப்பட்டிருந் தாள். அதனால் ரகு சிறிது அமைதியடைந்தான். 

அரைமணி நேரத்தின் பின் ரகு துடிக்கும் இதயத் துடன் மீண்டும் பவானியின் அறைப்பக்கஞ் சென்றான். அங்கே பவானியைக் காணவில்லை. அவள் பிரசவ அறைக்குக் கொண்டு போயிருப்பதாக அறிந்தான். அவன்கால்கள் அவனையுமறியாமல் அவனை அந்த அறைக்கு இட்டுச் சென்றன. அந்த அறைக்கதவோடு பதுங்கிக் கொண்டு அவன் வெளியே நின்ற போது பவானி போடும் சத்தம் அவன் இதயத்தைப் பிளந்தது. 

அப்பப்பா பிரசவம் எவ்வளவு வேதனையானது. ஒரு. குழந்தையைப் பெறுவதற்குத் தாய் தன் உயிரையே பணயம் வைக்கும்போது குழந்தைகள் மட்டும் பெரியவர்களாகி யதும் அதையேன் உணரமாட்டேன் என்கிறார்கள். ஒரு தாய்படும் பிரசவ வேதனையைப் பார்க்கும் எந்தக் குழந்தை யும் தன் தாய்க்கு ஏழேழு ஜன்மங்களிலும் துரோகஞ். செய்ய மாட்டாது என்று நினைத்துக் கொண்டு அந்த அவலச் சத்தத்தைக் கேட்க விரும்பாமல் திரும்பிச் சென்றான். 

நிர்மலாதான் அன்று பிரசவ அறையில் டியூட்டி எனக் கேள்விப் பட்டிருந்ததால் பவானிக்குச் சிறிது ஆறுத லாக இருக்கும் என எண்ணித் தன் மனதையுஞ் சமாதானப் படுத்திக் கொண்டான். அவன் திண்ணையில் குட்டிப் போட்ட பூனை போலக் குறுக்கு மறுக்கும் நடந்துகொண் டிருந்தபோது அவ்வழியாக நிர்மலா மிகவும் அவசரமாக வியர்க்க விறுக்க நடந்து கொண்டிருந்தாள். அவள். தன்னிடந்தான் வருகிறாள் என்று நம்பிக்கொண்டிருந்த வனுக்கு அவள் தன்னைத் தாண்டிச் சென்றது கலக் கத்தைக் கொடுத்தது. 

ஒரு வேலை பவானிக்குத்தான் ஏதாவது ஆபத்தோ என்று மனம் துடியாய்த் துடித்தது. நிர்மலா திரும்பி வரும்போது அவளிடம் இதுபற்றிக் கேட்கலாம் என அவன் ஏங்கியிருந்தபோது நிர்மலா திரும்பி வராமல் குறுக்குப் பாதையில் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந் தாள். அவள் மேல் ரகுவுக்கு அப்போதுதான் முதன் முத. லாகக் கோபம் வந்தது. தன் பொறுமையைச் சோதிக்கத்தான் நிர்மலா இப்படி நடந்து கொள்கிறாளோ என்று ஆத்திரமடைந்தவனாய் அங்கு நின்றபடியே நிர்மலா என்று’ அழைத்தான். 

அத்தனை அவசரத்திலும் நிர்மலா அவன் குரல் கேட்டு அப்படியே நின்றாள். ரகு அவளை நோக்கி ஓடினான். ராமு கொஞ்சம் பொறுமையாக இருங்கள். -உங்கள் தங்கச்சிக்கு இன்னும் இரண்டொரு நிமிடத்தில் குழந்தை பிறந்துவிடும். அந்த நல்ல செய்தியை நானே அறிவிப்பேன் அதுவரை கவலைப்படாமல் இருங்கள்’ என்று கூறிவிட்டு அவள் ஓட்டமும் நடையுமாகச் சென்று பிரசவ அறையைச் சேர்ந்தாள். ஐந்து நிமிடத்தின் பின் அவள் வெளியே வந்த போது ரகு அவளை ஆவலோடு பார்த்து நின்றான். 

17ஆம் அத்தியாயம் 

பெண்ணாகப் பிறப்பது பாவம். பெண்ணோடு கூடிப் பிறப்பதும் பாவம் என ரகு கேள்விப்பட்டிருந்தான். அது எதற்காகக் கூறப்பட்டதென அவன் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை. ஆனால் நிர்மலாவைக் காத்துக்கொண்டு நின்ற இந்தச் சொற்ப நேரத்திற்குள் அப்படியொரு ஆராய்ச்சி அவன் மனதில் எழுந்து அதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கப் பட்டது. இந்தப் பெண்கள் படும் பிரசவ வேதனையைப் பார்த்த ஒருவன்தான் இப்படி ஒரு பழமொழியை உண் டாக்கியிருக்கவேண்டும் என அவன் மனந் துணிந்தது. அவ னுக்கு இடையில் கிடைத்த ஒரு பெண் சகோதரத்தின் பிரசவவேதனையே இவ்வளவு கவலையைத் தருவதாக இருந் தால் பவானியின் கணவன் மட்டும் அங்கு நின்றிருந்தால் அவன் மனம் இந்த மூன்று மணி நேரமும் என்ன பாடு பட்டிருக்கும் எனச் சிந்தித்தான். இதுவரை பவானிக்கு ஆண்பிள்ளைதான் பிறக்கவேண்டும் என்ற இறுமாப் போடிருந்தவன் இப்போது என்ன குழந்தை பிறந்தாலுஞ் சரி என்ற நிலைக்கும் வந்துவிட்டான். பெண்குழந்தை என்றால் பரவாயில்லை என்றுகூட நினைத்தான். ஆண் பிள்ளையாக இருந்தால்தான் கடந்த மூன்று மணி நேரமும் பட்ட சித்திரவதையை அந்தக் குழந்தையும் படவேண்டி. வருமே என்ற வேதனை அவனுக்கு. 

“உங்கள் தங்கச்சிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந் திருக்கு. சீக்கிரம் சென்று கற்கண்டு வாங்கி வாருங்கள் என்று நிர்மலா கூறிய பின்புதான் ரகு இந்த உலகத்திற்கு வந்தான். நிர்மலா கூறிய செய்தி அவனுக்குக் கற்கண்டை விடக் கூடுதலாக இனித்தது. ஒரு கணப்பொழுது அவன் தன்னையே மறந்தான். முன்கூட்டியே இடதுகைப் பக்கச் சட்டைப் வைத்திருந்த கற்கண்டில் சிறு துண்டை எடுத்து நிர்மலாவின் வாய்க்குள் திணித்துவிட்டான். அதன் பின்புதான் அவனுக்குத் தான் செய்தது தவறு என்று புரிந்திருக்கவேண்டும். 

‘என்னை மன்னித்துவிடுங்கள் அளவுகடந்த மகிழ்ச்சி யில் தெரியாத்தனமாக ஏதோ நடந்துவிட்டது என்று கூறிய பின்புதான் நிர்மலாவிற்கும் அது தவறு என்பது புரிந்திருக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும்கூட அந்தச் செய்கை அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் கூட எதிர் பாராத வகையில் நடைபெற்ற ஒன்றுதானாயினும் அவள் உள்ளத்துக்கு இதமாக இருந்த செய்கையது. ‘பரவாயில்லை’ என்றுதான் கூறிவிட நினைத்தாள். ஆனால் தன் பலயீனத்தை அவன் அறிந்து விடக்கூடாது என்ற ஒரு ஆதங்கத்தில் ‘நல்ல காலம் அக்கம் பக்கம் யாரும் நம்மை அவதானிக்கவில்லை ‘ என்று பட்டும் படாமலும் கூறிவிட்டு அப்பால் சென்றாள் அவள். 

ரகு சில நிமிடநேரம் தன் எண்சாண் உடம்பும் கூனிக் குறுக எதுவும் செய்யுந் திராணியற்று வெட்கிப்போய் நின் றான். பெண்களையே ஏறிட்டு நோக்க வெட்கப்படும் அவன் இவ்வளவு துணிகரமான செயலை எப்படிச் செய்தான் என்று அவனுக்கே புரியவில்லை. அவனைப் பொறுத்த வரையில் நிர்மலா மீது தான் வைத்த அன்பினாலோ ஆசை யினாலோ அவன் அப்படியொரு அருவருக்குஞ் செயலைச் செய்யவில்லை. தன் வாழ்க்கையில் அவன் ஒருபோதும் நல்லவற்றை எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதைவிட எதிர்பாராமல் எது வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வது சுலபம் என்ற கொள்கையுடைய வன் அவன். அதனால் பவானிக்கு முதற் குழந்தை ஆண் குழந்தையாகவே பிறக்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு நிறைய இருந்தபோதும் பெண் குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பிக்கையோ டிருந்தான். எதிர்பாராத விதமாகத் திடீரென நிர்மலா வந்து பவானிக்கு ஆண்குழந்தை பிறந் திருக்கு என்று கூறியதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு சொற்ப நேர உணர்ச்சி அவனைப் பல படிகள் தள்ளிவிட்டிருந்தது. 

நிர்மலா தன்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பாளோ என நினைத்து அவன் நெஞ்சம் ஏங்கி யது. தான் அடைந்த மகிழ்ச்சி அத்தனையும் இந்த அற்பச் செயலால் அற்றுப்போக நிர்மலாவின் முகத்தில் எப்படி விழிப்பது என்று அவன் சிந்தித்துக்கொண்டு நின்றபோது ‘கொன்கிறஜுவேஷன்ஸ் ராமு…. உன் தங்கைக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருக்கு. இன்னும் சிறிது நேரத்தில் நீ சென்று பார்க்கலாம்’ என்று அவ்வழியாக வந்த டாக்டர் ராஜன் கூறிக்கொண்டே அவனைத் தாண்டிச் சென்றார். 

அதன் பின்புகூட ரகுவுக்கு அந்த இடத்தை விட்டு அசையமுடியவில்லை. ஒரு பெண்ணின் வெறுப்புக்குத்தான் ஆளாகிவிட நேருமோ என்ற பயம் அவனை வாட்டியது. ஆயினும் நிர்மலா தன்னை மன்னிப்பாள் என்றவன் அந்தராத்மா கூறிக்கொள்ள பவானியின் குழந்தையைப் யார்த்துவிட வேண்டும் என்ற ஆசை துடிதுடிக்க அவன் அமைதியற்று நின்றான். அப்போது உங்கள் மருமகனை நீங்கள் சென்று பார்வையிடலாம் என அவனிடம் வந்து கூறிவிட்டு அப்பால் நகர்ந்தாள் நிர்மலா. 

அவள் போகும்வரை மௌனமாக நின்ற ரகு ‘ச்சா வந்தவளிடம் இன்னுமொருமுறை மன்னிப்புக் கோரியிருக்கலாம். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்ட மாதிரி’ என்று மனதுக்குள்ளாகவே பேசிக்கொண்டு பல நாள்கள் காத்திருந்த புதையலை எடுக்கப்போகும் ஒருவனின் மன நிலையில் பவானியின் அறையை நோக்கி நடந்தான். வாசல் வரை வேகமாக நடந்தவன் அறைக்குள் காலை வைக்கத் தயங்கினான். பிள்ளைப் பேற்றின் பின் முதல் முதல் பவானியைச் சென்று பார்க்க அவனுக்குச் சங்கோசமாக இருந் தது. இருந்தும் குழந்தையைப் பார்க்கும் துடிப்பு அதிகரிக் கவே அவன் கால்களைப் பின்னிப் பின்னி வைத்து ஒருபடி யாக அறைக்குட் பிரவேசித்து விட்டான். பவானி கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஒரு வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டுத் தலையும் முகமும் மட்டுந் தெரியக்கூடியதாகக் குழந்தை வளர்த்தப் பட்டிருந்தது. 

அவன் கட்டிலின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று பவானியைப் பார்த்தான். அவன் பக்கத்தில் நிற்பதுகூடத் தெரியாமல் அவள் களைத்து அயர்ந்த நிலையில் கிடந்தாள். பக்கத்தில் கண் மூடிப் படுத்திருந்த குழந்தையைச் சில நிமிட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் ரகு. அந்தக் குழந்தையை அப்படியே வாரித் தூக்கிக்கொள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் அது பச்சைக் குழந்தை யாக இருந்ததாலும் இதற்குமுன் அப்படியான குழந்தை களைத் தூக்கிப் பழக்கமில்லாததாலும் அவன் அதைத் தூக்கப் பயப்பட்டான். ஆயினும் அதன் பட்டு மேனியைத் தன் கைகளால் தடவிக்கொடுத்தான். அந்த ஸ்பரிசம் அவனுக்கு இன்பத்தைக் கொடுக்க அவன் அங்கமெல்லாம் பூரித்தது. 

அந்தக் குழந்தையை மூடியிருந்த வெள்ளைத் துணியை விலக்கிவிட்டு அவன் அந்தக் குழந்தையைத் தலையிலிருந்து கால்வரை பார்க்கிறான். அதன் உடலை அலங்கரித்திருந்த அழகிய வெள்ளைநிற மஸ்லின் சட்டை அதன் அழகுக் கழகு கூட்டுகிறது. இறுகப் பொத்திப் பிடித்திருந்த பயத்தம் பிஞ்சு போன்ற அதன் தளிர் விரல்களை அவன் விரிக்கும் போது அந்தக் குழந்தை விம்மிக்கொள்கிறது. அப்போது தக்காளிப்பழம் போன்றிருந்த அதன் கன்னங்கள் சிவப்பு ரோஜாவாக மாறிக்கொள்கின்றன. அதைப் பார்த்து அவன் இதழ்கள் மலர்கின்றன. இப்படியே அவன் தன்னை மறந்த நிலையில் அந்தக் குழந்தையோடு ஒன்றிவிட்டிருக்கும் போது அந்த அறைக்குள் சப்பாத்துச் சத்தங் கேட்டு நிமிர்கிறான். அவன் பக்கத்தில் நிர்மலா நிற்கிறாள். ஓ….பவானிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லையாக்கும்… எழுப். . பட்டுமா…. என்று அவள் அவனைப் பார்த்துக் கேட்கும் போது வேண்டாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்துக்கொள்கிறான் அவன். 

எப்படியிருக்கிறான் எங்கள் மருமகன்…? என்று அவளே மீண்டும் பேச்சைத் தொடங்கிவிட்டுக் குழந்தையை இரண்டு கைகளிலும் எடுத்து அவனிடம் நீட்டுகிறாள். அவன் குழந்தையை வாங்கிக்கொள்ளத் தயங்கியபடி பின் னோக்கி அடியெடுத்து வைக்கும்போது…. பரவா யில்லை. பிடித்துக்கொள்ளுங்கள். ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள். நாளைக்கு உங்களுக்கு ஒரு பையன் பிறந்தால் இப்படித்தான் பயப்படப் போகிறீர்கள். அதனால் தங்கச்சியின் பிள்ளையிலேயே பழகிக்கொள்ளுங்கள்’, என அவள் கூறும்போது அவன் சங்கோசத்துடன் அவளைப் பார்க்காமலே தன் கைகளை நீட்டிக்கொள்கிறான். ‘கவனம் மெதுவாக…. உம் தலையிலே ஒரு கையைப் பிடியுங்க..’ அவள் கற்பித்துக்கொண்டே அவனிடம் குழந்தையைக் கொடுத்துவிடுகிறாள். இவ்வளவு பயமும் சங் கோசமும் உள்ள ஒருவர்தானா எனக்குச் சற்று முன்பு கற்கண்டு ஊட்டினார் என நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது அவளுக்கு. 

நிர்மலா ஏதாவது நினைத்துவிடப் போகிறாளே என்ற பயத்தில் குழந்தையை வாங்கிக் கொண்ட ரகுவுக்குக் கையுங் காலும் நடுங்கிக் கொண்டன. அவன் பிறந்து வளர்ந்த இத்தனை நாளைக்கும் எந்தக் குழந்தையையும் தூக்கிப் பழக்கமேயில்லை. அதனால் திரும்பவும் குழந்தையை வளர்த்திவிட அவன் துடித்தான். அதை எப்படியோ அவதானித்துக் கொண்ட நிர்மலா அவனிடம் இருந்து குழந் தையைப் பெற்றுக் கொண்டாள். அவள் கண்கள் அந்தக் குழந்தையின் மேலேயே பதிந்திருந்தன. சிறிது நேர நிமிடத் தின் பின் கன்னத்தோடு பதியவைத்துக் கொஞ்சிவிட்டு மீண்டும் பவானியின் அருகில் வளர்த்திவிட்டுப் பவானி என்றழைத்தான். அந்தக் குரலைப் பவானி கேட்டதாகத் தெரியவில்லை. ஆகவே அவள் மீண்டும் ‘பவானி’ என் றழைத்தாள். இம்முறை அவள் சற்றுப் பலமாக அழைத்த தால் பவானி மிகுந்த சிரமத்துடன் கண்களைத் திறந்தாள். அதுவரை நிர்மலாவின் பக்கத்தில் நின்ற ரகு ‘தங்கச்சி’ என அழைத்தான். இம்முறை பவானி சற்று விழிப்புடன் அசைந்து கொண்ட போது அவள் முகத்தில் ஒரு ஒளி வீசியது. 

‘தங்கச்சி’ என்று இரண்டாம் முறையாகப் பவானி யின் காதருகில் குனிந்து அழைத்தான் ரகு. அப்போது தான் பவானி அவனை நன்றாகப் பார்த்தான்.. அவள் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்ந்தது. அந்தப் புன்னகை நான் என் கடமையைச் சரியாகச் செய்துவிட்டேன் என்று கூறாமற் கூறியது. தங்கச்சி உனக்குப் பையன் பிறந்திருக் கிறான்…. உன்னையே உரித்து வைத்திருக்கு…. ரகு தன் மகிழ்ச்சியை அடக்கமுடியாமல் கூறியதைக் கேட்டுப் பவானி அடக்கமாகச் சிரித்தாள். அவர்கள் இருவர் மகிழ்ச்சிக் கிடையிலும் குறுக்கே நிற்கக்கூடாது என்ற பெருந் தன்மையோடு நிர்மலா அவ்விடத்தைவிட்டு அகன்றாள். தங்கச்சி உன் பையனுக்குப் பெயர் வைக்கவேணும்; என்ன- பெயர் வைக்கலாம் என்று யோசித்து இருக்கிறாயா அல்லது நானே வைத்துவிடட்டுமா? நீ மட்டும் இரண்டு நாள் களுக்கு முன்பு உன் கணவன் பெயரைக் கூறாது விட்டிருந் தால் இப்பொடிப்பயல் அப்பன் பெயர் தெரியாத குழந்தை யாகவே இருந்திருப்பான். அந்த வகையில் நான் மட்டுமல்ல உன் பையன் கூட உனக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டும். ஆமாம் உன் பயலுக்கு என்ன பெயர் வைக்கட்டும்.? 

பவானி மீண்டும் அதே தோரணையிற் சிரித்துக்கொண்டாள். அந்தச் சிரிப்பின் அர்த்தம் அவளுக்கே புரியாமல் இருந்தது. சட்டத்திற்கு விரோதமாக ஒரு உயிரைப் படைக்க அவளுக்கு எந்த உரிமையும் இல்லாத போது நன்றி வேறு கூறவேண்டுமா என்ற விரக்தி மனப்பான்மை யாகவுமிருக்கலாம். அதுவரை மௌனமாக இருந்த அவன் உலர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டிப்போயிருந்த தன் உதடு களைத் திறந்து உங்கள் வேண்டுகோட்படி ‘ உங்களுக்கு ஒரு மருமகனைப் பெற்றுத் தந்துவிட்டேன். இனி அவனை வளர்த்து, அவனது நன்மை, தீமையாவற்றிலும் பங்கெடுக்க வேண்டிய பொறுப்பு தங்களைச் சார்ந்ததாகும். ஆகவே அவனுக்கு நீங்களாகவே பொருத்தமான பெயரைச் சூட்டுங்கள் அண்ணா என்று அந்தச் சிரிப்பினூடே கூறிய போது அவள் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக. வழிந்தது. 

அவள் அழுகை ரகுவுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.. அவன் பவானியைப் பார்க்க வரும்போதே அந்த அழுகையை எதிர்பார்த்தான். ஆனால் அவள் அழவில்லை. ஆயினும் அவள் எந்நேரத்திலும் அழலாம் என அவன் எதிர்பார்த்தான். அது இப்போது நடந்து கொண்டிருந்தது. அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்தபடி மௌன மாக நின்றான். எந்த ஒரு பெண்ணும் தனது முதற் குழந்தையை, தங்கள் அன்பின் சின்னத்தைக் கணவன் கண்டு களிக்க வேண்டுமென்றுதான் விரும்புவாள். அந்தப் பாக்கியம் கிடைக்காத போது அழவேண்டாம் என்று கூறுவது தவறு என நினைத்து அவன் சிறிது நேரம் அவள் சோகம் தீரும் வரை அழவிட்டான். 

அவள் அழுகை ஓரளவு ஓய்ந்ததும் தங்கச்சி என்றழைத் தான். அவள் அவனைப் பார்த்தாள். ‘உன் குழந்தைக்கு உமா சுதன் என்ற பெயரைச் சூட்ட ஆசைப்படுகிறேன். அந்தப் பெயர் உனக்குப் பிடிக்குமா?’ என்று கேட்ட போதே அவன் சிந்தனை எத்தனையோ மைல்களைக் கடந்து உமா விடம் விரைந்து கொண்டிருந்தது. ‘எங்கே நீயோ நானும் அங்கே ‘ என்ற பாட்டை அவன் பாடும்படி அவளைக். கேட்பதோர் பிரமை ! உமா நான் எங்கிருந்தாலும் நீ என்னுடனேயே இருப்பாய். இனி இந்த உமாப் பயலில் உன்னைக் காணப்போகிறேன். உன்னிடம் பேசப் போகிறேன். உமா ! உமா ! என ஆயிரம் முறை அன்பொழுக அழைக்கப்போகிறேன். இந்த அழைப்புக்கு இனி யாருமே தடைபோட முடியாது. யாரும் என்னைப் பைத்தியம் என்று எள்ளி நகையாட முடியாது. இனி உமா என் மடியிலும், தோளிலும் அணைந்து விளையாடப் போகிறாள் என்று அவன் தனக்குத்தானே கூறிக்கொண்ட “போது அண்ணா’ என்றழைத்தாள் பவானி. 

குழந்தையே உங்களுக்கு உரிமையாக்கி விட்ட பின் இதென்ன கேள்வி. இவனை உமா சுதன் என்றே அழையுங்கள். நிர்மலா மிஸி கூட இவனுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய். பவானி என்று சிறிது நேரத்திற்கு முன்புதான் கேட்டாள். அண்ணாவின் விருப்பம் போல வைக்கட்டும் என்றேன். அண்ணா என்ன பெயர் வைக்கப் போகிறார் என்று பார்ப்போமே என்று கேலி செய்தா மிஸி. குழந்தைக்கு உடைகள் எல்லாம் தைத்து வைத்திருக்கிறா அண்ணா. உமாவுக்கு இப்போ போட் டிருப்பது கூட மிஸி கொண்டு வந்தது தான் என்று அவள் கூறியபோது ரகுவால் எதுவுமே பேசமுடியவில்லை. 

நிர்மலா எதற்காக இப்படியெல்லாம் செய்கிறாள் என்று அவன் சிந்தித்தான். வேறு எந்த ஆஸ்பத்திரி ஊழியருக்குமில்லாத அக்கறை இவளுக்கு மட்டும் எதற்காக வரவேண்டும் என்பது இன்னும் அவனுக்கு மர்மமாகவே இருந்தது. நிர்மலா ஏதோ நோக்கத்தோடுதான் இதை யெல்லாம் செய்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந் தது. அந்த நோக்கங்கூட அவனுக்குச் சாடையாகத் தெரியத் தான் செய்தது. வீணாக ஒரு அபலைப் பெண்ணின் மனதில் அளவற்ற ஆசைகளை வளர்க்க அவன் இடங்கொடுக்க விரும்பவில்லை. அவளது ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடத்தான் அவன் துடித்தான். ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. எது வந்தாலும் இன்னும் இரண்டொரு நாள்களில் நிர்மலா விடம் மனம்விட்டுப் பேச வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டான். 

‘என்னண்ணா அப்படியே நிற்கிறீர்கள். IR உடைகள் கொண்டு வந்தது உங்களுக்குப் பிடிக்க. வில்லையா….? எனப் பவானி தொடர்ந்து கேட்டபோது ரகு ‘இல்லை தங்கச்சி அவர்களுக்கு எதற்காக வீண் சிரமம் என்று தான் சிந்தித்தேன். ஆமாம்! உன்ர மிஸி இன்னுந் திருமணம் செய்யவில்லையா ……..?’ என்று” கேட்டுவிட்டு அவள் என்ன சொல்லப் போகிறாளோ என எதிர்பார்த்தான். 

அவனைப் பார்த்துப் பவானி சிரித்தாள். சில நாள் களுக்கு முன்பு என்னிடங் கேட்டவ அண்ணா திருமணஞ் செய்து கொள்ள உங்களுக்குப் பிரியமில்லை என்றேன் -சுருக்கமாக. 

‘தங்கச்சி உன் குழந்தைக்கு ஏன் உமா சுதன் என்று பெயர் வைத்தார் உன் அண்ணா என்று திரும்பவும் மிஸி கேட்டால் நான் ஆரம்பத்தில் ஒரு பெண்ணைக் காதலித்துத் தோல்வி கண்டதாகவும் அதனாலேயே அவளுடைய பெயரை அவள் ஞாபகமாக உன் குழந்தைக்கு வைத்ததாகக் கூறு…’ என்று ரகு கூறி முடித்தபோது நிர்மலா உள்ளே வந்துகொண்டிருந்தாள். 

என்ன பவானி.. உன் குழந்தைக்குப் பெயர் வைத்து விட்டாச்சா. நான் பெயர் பதிய வேண்டும். உன் அண்ணா விற்கு என்ன பெயர் பிடித்திருக்காம்…

‘உமாசுதன்’ என அவள் கேள்விக்குப் பவானி பதில் கூறியபோது சுருக்கமாக உமா’ என்றே அழைப்பதாக உத்தேசம் என்றான் ரகு. அதன் பொருளை உணராதவள் போல் ரகுவைப் பார்த்தாள் அவள். 

18ஆம் அத்தியாயம் 

ஆசைதான் துன்பத்திற்கெல்லாங் காரணமென புத்தர் போதித்ததாக ரகு படித்திருந்தான். அது உ ண்மையென் பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான். ஆனால் அந்த ஆசையைத் துறக்க அவனுக்கு வழி தெரியவில்லை. புத்தர் கூட வாழ்க்கையில் பல ஆசைகளை அனுபவித்த பின்பு தான் ஆசை துன்பத்திற்குக் காரணம் என்கிற தத்துவத்தை உணர்ந்தார் என்பது அவன் வாதம். மகாத்மா காந்தியும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனு பவித்துக் களைத்த பின்பு தான் காந்தியத் தத்துவங்களைப் போதிக்கத் தொடங்கினார் என்று உமாவுடன் ஒரு நாள் வாதாடியிருக்கின்றான். அது ஒரு பழைய ஞாபகம். 

ஆமாம்! உமா ஒரு புத்தகப் பிரியை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவளிடம் ஒருமுறை அவன் ஒரு புத்தகங் கேட்டிருந்தான். அதற்கு அவள் அவனிடம் காந்தியின் சுயசரிதையாகிய சத்திய சோதனையைக் கொடுத்து இது தான் உங்களுக்கு ஏற்ற புத்தகம் படியுங்கள் என்று குறும்பாகக் கூற இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு இதைப் படிக்கிறேன். இப்போது வேறு நல்ல புத்தகமாகக் கொண்டு வா என்றான். அவளும் விட்டுக் கொடுக்காமல் அப்படி எதற்காகக் கூறினீர்கள் என்று கேட்க ‘ காந்திக்கு இந்தத் தத்துவங்கள் உதித்த வயது எனக்கு வருவதற்கு இன்னும் இருபது வருடங்கள் இருக்கின்றன. எனது வயதில் காந்தி கூட என்னைவிட மோசமாகத்தான் இருந்திருப்பார் என்று அவன் விளையாட்டாகக் கூறினான். அதை வைத்துக் கொண்டு உமா அவனிடம் வாதாடத் தொடங்கியபோது ஈற்றில் அவன் அவளுக்குப் பணிந்து போக வேண்டியதாயிற்று. அவ்வளவு தூரத்திற்கு அவள் மகாத்மாவைப் பற்றி அறிந்து வைத்திருந்தாள். 

ஆமாம் இப்போ அதற்கும் இதற்கும் என்ன சம்பந் தம். எதையோ நினைத்து எங்கோ போய்விட்டான் அவன். துன்பத்திற்குக் காரணமான ஆசையை நிர்மலாவின் மனதில் வளர்க்கக்கூடாது என்றுதான் அவன் நினைத்தான். 

அதனால் அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்பதே அவன் குறிக்கோளாக இருந்தது. அதற்கு ஏற்றதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந் தான் அவன். 

பவானிக்கும் குழந்தை பிறந்து ஐந்து நாள்களாகி விட்டன. டாக்டரின் உத்தரவின் பேரில் அவள் வீட்டுக் கும் வந்தாயிற்று. பவானிக்குக் குழந்தை பிறந்த விடயத்தை ரகு அவர்கள் கொழும்பு வந்த அந்நிய நாள் களில் தங்கியிருந்த வீட்டுக்காரியான புனிதத்திற்கு மட்டும் தான் அறிவித்திருந்தான். அவனைப் பொறுத்தவரை அவர்கள் மட்டுந்தான் அவனுக்கும் பவானிக்கும் உறவின ராயிருந்தனர். நிர்மலா தானாக ஆக்கிக் கொண்ட உறவினால் நாள்தோறும் வந்து குழந்தைக்கு வேண்டிய சகல காரியங்களையும் செய்துவிட்டுப் போவாள். ரகுவுக்கு அவள் உதவி எவ்வளவோ ஒத்தாசையாக இருந்தது. 

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணையெனக் கேள்விப்பட்டிருந்தான் ரகு. யாரோ ஒரு பெண்ணுக்கு அவள் தாய் கோயிலுக்குச் சென்று திரும்பிவரத் தாமதித்த போது பிள்ளைப்பேறு கூட சிவபெருமான் தாய்வடிவில் வந்து பார்த்து விட்டதாகச் சமய பாடத்திற் படித்திருக் கிறான். அப்படி நடக்குமா என அப்போது அவன் -ஆராய்ச்சி செய்தது உண்மை. ஆனால் இன்று நடப்பவற்றைப் பார்க்கும் போது அவையெல்லாம் உண்மை யாகத்தான் இருந்திருக்கவேண்டும். என்று நம்பத் தோன்றியது. ஆமாம்! நிர்மலா இறை வடிவத்தில் வந்த ஒரு பேருதவி என அவன் கருதினான். அதனால் அவள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் அவள் உள்ளத்தில் ஒரு போலியான ஆசையை வளர்த்துக் கொள்ள இடமளிக்கவும் அவன் விரும்பவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எழுந்துள்ள ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவன் பட்ட பாடு…! 

ஒரு நாள் காலை. பவானியின் குழந்தையை நிர்மலா நீராட்டிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பவானி உள்ளே ஏதோ அலுவலாக இருந்திருக்க வேண்டும். அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதிய ரகு அவள் பக்கத்திற் சென்று அவள் பிள்ளைக்கு நீராட்டும் விதத்தைப் பார்ப்பது போல ரஸித்துவிட்டு…! நீங்க ஊரார் குழந்தைக்கே இவ்வளவு அழகாக நீராட்டினால் நாளைக்கு – உங்களுக்கென ஒரு குழந்தை பிறந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன் என்றான். நிர்மலா அவனைப் பார்த்த பார்வை என்னை இப்படி மரியாதை யாக அழைக்கவேண்டாம் என எத்தனைதரம் கூறிவிட் டேன் என்று கேட்பது போல் இருந்தது. 

‘உங்களைவிட நான் ஆறு வயதுக் கிளமையாக்கும். .! அவள் பார்த்ததின் அர்த்தம் இப்போது ரகுவுக்குப் புரிந்தது. 

‘உண்மைதான் ஆயினும் அந்தஸ்தில் நீங்கள் என்னை விட உயர்வல்லவா . . . . அதனால்தான் உங்களை ஒருமையில் பெயர் சொல்லி அழைக்க எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. 

‘நீங்கள் என்னை மரியாதையில் அழைப்பதைக் கேட்கும் போது எனக்கு அதைவிடச் சிரமமாக இருக்கு என்று நிர்மலா கூறியபோது ரகுவுக்குச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆண்கள் பெண்களை அடிமையாக்கு. கிறார்கள் என்று சமூகத்தின் ஒருபகுதியினர் குறைபட்டுக் கொள்ளும்போது இந்தப் பெண்கள் தாங்களாக ஆண் களுக்கு அடிமையாக விரும்புகிறார்களே, இந்தப் பெரும் குறையை யாருக்கு எடுத்துக் கூறுவது என்று சிரித்தான் அவன். நிர்மலா இதற்கு முன்புகூடப் பலமுறை வேண்டு கோளை விடுத்திருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் அவள் கூற்றுக்கு அவன் செவிசாய்க்கவில்லை. 

ஆனால் இன்று அவள் வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுக்க அவன் விரும்பினான். தன்னைப் பற்றி ஒளிவு மறைவின்றி முழு வரலாற்றையும் அவளிடங் கூறிவிடத் துடித் தான் அவன். அதனால் வருவது வரட்டும் என்று அசட்டு மனப்பான்மையில் நிர்மலா உங்களை மனைவியாக அடை யப்போகுங் கணவன் உண்மையிலே பாக்கியசாலியாக இருப் பான். கூடிய விரைவில் உங்கள் திருமணத்தைப் பார்க்கும் பேற்றை எங்களுத்குத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஆமாம் நீங்கள் ஏன் இன்னுந் திருமணஞ் செய்து கொள்ள வில்லை என்று கேள்வியோடு நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். 

அந்தக் கேள்வியால் அவள் சிறிதுகூடப் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் கேட்டது நியாயமான கேள்விதான். ஆனால் நானும் இதே கேள்வியை உங் களிடம் திருப்பிக் கேட்கலாமல்லவா ….? என்று அவள் கேட்டபோது அவன் சற்றுத் திகைத்துத்தான் போனான். அதே கேள்வியை அவள் தன்னிடம் திருப்பிக் கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. இதனால்தான் கண்ணாடி மாளிகையில் சீவிப்பவர்கள் கல்லெறியக் கூடாது என்று கூறுகிறார்கள் போலும் என்று நினைத்தவனாய் அதை ஒரு தக்க சந்தர்ப்பமாக நினைத்து நான் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்துத் தோல்வியடைந்துவிட்டேன். அதனால் திருமணஞ் செய்து கொள்வதில்லை என்றொரு பிடிவாதம் என்றான். 

அவள் சிரித்தாள். பரவாயில்லையே. . காதலில் மட் டும்தான் நீங்கள் தோல்வி வாழ்க்கையில் இல்லையே’ அதனால் வேறு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணஞ்செய்து கொண்டிருக்கலாம் அல்லவா. ஆண்கள் என்றால் பெண்களுக்குத் தானா பஞ்சம். தொடர்ந்து ஏதோ அர்த்தத்துடன் பேசினாள் அவள். 

‘உண்மைதான்…ஆனால் ஏழைப் பெண்கள் என்றால் தான் திருமண விடயத்தில் சிறிது சிந்திக்க வேண்டும். உங்களைப் போன்ற வசதிபடைத்த பெண்களுக்கு அந்தக் கவலையுமில்லையல்லவா..? அதனால் நீங்கள் திருமணஞ் செய்து கொள்ளலாம்…. கொள்ளவேண் டும் என்பது என் விருப்பம் என் ஆசை என்றுகூடச் சொல்லலாம். 

‘நீங்கள் கூறுவதுகூட நியாயமானதுதான்.. ஆனால் எல்லா ஆண்களுமே உங்களைப்போல நல்லவர் களாக இருந்தால் உங்கள் பேச்சு நியாயமானதாக இருக்கும். உங்களைப் போன்ற நல்லவர்கள் இப்படிக் காதலுக்காகத் தங்கள் வாழ்நாளையே தியாகஞ் செய்யும் போது என் போன்ற பெண்களை யார் மனமுவந்து திருமணஞ் செய்து கொள்ள இருக்கிறார்கள்…?. இருந்தாலும் உங்கள் ஆசையை நான் எதற்காகக் கெடுக்கவேண்டும். நீங்களாகவே எனக்குகந்த ஒருவரைப் பாருங்கள். என் மனதுக்குப் பிடித்த மாய் இருந்தால் மறுபேச்சின்றித் தங்கள் ஆசையை நிறை வேற்றி வைக்கிறேன். கூறிவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிர்மலா அவன் பேச்சுக்குக் காத்திராமல் அப்பாற் சென்ற போது ரகு தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான். 

இப்போது அவனுக்கு ஒரு சிறு நிம்மதி ஏற்பட்டது. தனது குறையை நிர்மலாவுக்கு எடுத்துக் கூறக்கூடியபடியால் இனிமேல் அவள் தன்னைப்பற்றி அவ்வளவு அக்கறை எடுத் துக்கொள்ளமாட்டாள் என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டான். ஆயினும் நிர்மலா மீது அவனுக்கு ஒரு பரிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. இதுவரை பவானிக் காக மட்டும் வாழ எண்ணி இருந்த அவன் உள்ளத்தில் நிர்மலாவுக்காகவும் ஒரு துளி இடம் ஒதுக்கப்பட்டது. அவள் கூறியதுபோல அவளுக்கேற்ற மணவாளன் ஒருவனைத் தேடி அவளுக்குத் திருமணஞ் செய்து வைக்க வேண்டியது தனது பொறுப்பு எனக் கருதிக் கொண்டு அவ னும் அவ்விடத்தை விட்டகன்றான். 

குழந்தை உமாவும் பிறந்து இரண்டு மாதங்கள் உருண் டோடிவிட்டன. பவானி வேலைக்குச் சென்று திரும்பும் வரை குழந்தையைப் பார்ப்பதற்காக ஒரு பெண்ணை ஒழுங்கு செய்திருந்தான் ரகு. அநேகமாகப் பின்நேரங் களில் ரகுவின் பொழுது முழுவதும் குழந்தை உமா வுடனேயே கழிந்துவிடும் …. குழந்தைகூடத் தன் தாயை விட ரகுவின் மேல்தான் அதிகப் பிரியமாக இருந்தான். ரகு வேலை விட்டு வந்ததும் குழந்தையைத் தூக்காமல் உடை களைய மாட்டான். அப்படியொரு பாசம் அவனை அந்தக் குழந்தையுடன் இணைத்திருந்தது. பவானிகூட அந்தக் குழந்தையின் சிரிப்பில் தன் கவலைகளையெல்லாம் ஓரளவிற்கு மறந்திருந்தாள் என்றுதான் கூறவேண்டும். 

வழக்கம் போல ஒரு சாயந்தரம் வேலைவிட்டு வீடு திரும்பிய ரகு அன்று பவானியின் தோளில் இருந்தபடி தன்னை வரவேற்கும் குழந்தையைக் காணாமல் திடுக்கிட் டான். குழந்தையின் முகத்தையோ சத்தத்தையோ காணாத அந்த இடமே அவனுக்குச் சூனியமாக இருந்தது. ஒரு வேளை குழந்தைக்குத்தான் ஏதாவது சுகயீனமோ என்று பயந்தவனாய்த் துடிக்கும் இதயத்துடன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தபோது யாரோ விக்கி விக்கியழும் சத்தங் கேட்டு ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கவேண் டும் என்று தீர்மானித்து அமைதியாகச் சத்தம் வந்த திசை யில் நடந்தான். 

அங்கே வெறும் சீமேந்துத் தரையில் குழந்தையைக் கிடத்திவிட்டுப் பவானி பக்கத்தில் இருந்து கேவி கேவியழுது கொண்டிருந்தாள். இலட்சுமியின் வீட்டுப் பக்கம் சந்தடி யற்று இருந்ததால் அவர்கள் எங்கோ போயிருக்கவேண்டும்.. என்பது சொல்லாமலே ரகுவுக்குப் புரிந்தது. அதனால் சற்றுத் தைரியம் வரப்பெற்றவனாய்க் குழந்தையின் அருகிற் சென்று குழந்தையை அப்படியே தூக்கியெடுத்துத் தன் ஆசை தீரும்வரை கொஞ்சிவிட்டுத் தோளில் போட்டுக் கொண்டான். குழந்தையின் உடல் நிலையில் ஒருவித வித்தியாசமுந் தெரியாமல் போகவே ‘என்ன பவானி என்ன நடந்தது…. எதுக்கு நீ இப்படி விக்கிவிக்கி அழுகிறாய் …. குழந்தை நல்லாத்தானே இருக்கிறான்…’ என்று கேட்க பவானியின் அழுகை இன்னும் கூடிக்கொண்டே வந்தது. 

அவள் அழுகிற விதத்தைப் பார்த்துவிட்டுப் பவானிக்கு ஏதோ நடந்து இருக்கு என்பதை ஊகித்துக்கொண்டவனாய்க் குழந்தையைத் தன் மார்போடு கெட்டியாக அணைத்தபடி அவள் பக்கத்தில் அமர்ந்து மறு கையால் அவள் தலையை வருடியபடி ‘தங்கச்சி’ என்றழைத்தான். அந்த அழைப்பு பவானியின் சோகத்தை இன்னும் கூட்டியிருக்க வேண்டும். அவள் தன் முகத்தை அவன் தோள் மேற் புதைத்து மறு கையால் குழந்தையை அணைத்தபடி விக்கிவிக்கி அழு தாள். கடைசியாக ரகு எவ்வளவோ வேண்டிக் கொண் டதன் பேரில் தன் அழுகையைச் சற்றுக் குறைத்துக் கொண் டாளே தவிர, அழுத காரணத்தை மட்டுங் கூறவில்லை. அவளிடம் காரணங் கேட்டுக் களைத்த ரகுவுக்கு முதல்முத லாக அவள் மேல் ஆத்திரம் வந்தது. 

தன் உயிரையே அவளுக்காக அர்ப்பணித்தபின் அவள் ஏன் தன்னை இப்படி வேற்று மனுசனாக நினைத்து விட்டாள் எனச் சிந்தித்தபோது அவன் ஆத்திரம் எல்லை கடந்தது. பவானியே தன்னை நிராகரிக்கும்போது தான் யாருக்காக வாழவேண்டும் என்ற வரட்டுக்கௌரவத்தில் அவள் மடிமீது குழந்தையை வளர்த்தி ‘தங்கச்சி இந்தா உன் குழந்தை. எனக்குத் தெரியக்கூடாத ஒரு இரகசியம் உன் மனதில் இருக்குமானால் எம்மிடையே இன்னும் உண்மை யான சகோதரபாவம் நிலவவேண்டும். இப்படியான மன வேற்றுமையில் நாம் தொடர்ந்து ஒற்றுமையாக வாழலாம் என்பது என்னைப் பொறுத்தவரை முடியாத காரியம் ‘ என்றே நினைக்க வேண்டியுள்ளது. அதனால் நான் உங் களைவிட்டுப் பிரிந்துபோக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் எனக் கூறி முடித்த போது அவன் நாக்கு குளறிற்று. 

அவன் பேச்சைத் தொடர்ந்து அங்கே நிலவிய மௌனத் தினிடையே ரகு தெருவாயிலை நோக்கி நடந்தான். திடீர் என அங்கு நிலவிய மெளனத்தைக் கிழித்துக் கொண்டு புறப் பட்ட குழந்தையின் அழுகுரல் அவன் நடையைத் தளரப் பண்ணியது. அவன் வாயில்வரை சென்றுவிட்டுத் திரும்பிப் பார்த்தான். 

‘அண்ணா’ என்று அழைத்துக்கொண்டே அவனைப் பின் தொடர்ந்து ஓடிவந்தாள் பவானி. அவனிடம் அவள் குழந்தை உமாவை நீட்டிய போது அவனால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தன் இருகரத்தாலும் குழந்தையைப் பெற்றுக்கொண்டு பவானியைப் பார்த்தான். 

‘அண்ணா….என்னை இப்படி அணு அணுவாகச் சித்திரவதைப் படுத்தாமல் நீங்கள் கொன்றே இருக்கலாம். அது எனக்கு எவ்வளவோ நிம்மதியைத் தேடித் தந்திருக் கும். என் மனதில் எண்ணிக்கூடப் பார்க்க முடியாதவற்றை யெல்லாம் நீங்கள் உங்கள் கற்பனையில் வடித்து என்னை வதைத்து விட்டீர்கள். உங்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் நான் எதையும் உங்களிடம் இருந்து மறைக்க வில்லை. மறைக்கப்போவதுமில்லை. ஆனால் நீங்கள் இதுவரை எனக்காகப் பட்ட கஷ்டம் போதும் என்ற நல் லெண்ணந்தான் என் வாய்க்குப் பூட்டுப்போட்டு வைத்தது. உங்களிடம் என் மனதில் உள்ளதைக் கூறியிருந்தால் இன்று நான் இவ்வளவு தூரங் கண்ணீர் வடித்திருக்கமாட்டேன். ‘கொஞ்சம் பொறுங்கள் இன்று நடந்ததை விவரமாகக் கூறுகிறேன். 

அதன்பின்பு நீங்கள் எங்களைவிட்டுப் போய்த் தான் ஆகவேண்டுமென்றால் உங்களைத் தடுக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று அவள் விம்மலுக் கிடையே கூறியபோது ரகு சிந்திக்கத் தொடங்கினான். 

தான் ஆத்திரத்தில் அறிவையிழந்து விட்டதாக நினைக்கத் தோன்றியது. அவனுக்கு அப்போதுதான் அன்றொருநாள் பவானி யழுததும் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அவன் ஞாபகசக்திக்கு வந்தன. வைத்திய சாலையில் இருந்து அவள் வீடு திரும்பியதும் முதல் வேலை யாக அவளிடமிருந்து மிகவும் சாதுரியமாக அழுத கார ணத்தை அவன் அறிந்து கொண்டான். பவானி வேலை பார்த்த வீட்டில் ஒரு நாள் மதியம் யாரோ அந்த வீட்டு எஜமானியைக் காண மோட்டாரில் வந்ததாகவும் அவரைத் தற்செயலாகப் பின்புறமாகப் பார்க்க நேரிட்டபோது அவர் தான் தனது காதலனாக இருக்கவேண்டும் எனத் தான் திட்ட வட்டமாக நம்பியதாகவும் பழைய நினைவுகள் தன்னைப் பீடிக்கவே அந்தத் துக்கத்தைத் தாள மாட்டாமல் தான் அழுதுவிட்டதாகவும் பவானி கூறியிருந்தாள். அதுகூட நன்மைக்கென்றுதான் அவன் நினைத்தான். அல்லது” குழந்தை உமாவுக்கும் பெயர் பதிவுவைக்க அவன் சிரமப் பட்டிருப்பான். கதையோடு கதையாக அந்தக் குழந்தைக்குத் தகப்பனாக வேண்டியவனின் பெயர் ஜெகந்நாதன் என்று அறிந்து கொண்டான். ஆகவே இன்றும் ஒருவேளை அவனைக் கண்டிருக்கலாம் என நினைக்கத் தோன்றியது. 

‘அண்ணா’ எனப் பவானி திரும்பவும் அவனை அழைத்து இன்று காலையில் நான் மீண்டும் அவரைக் காண நேர்ந்தது. அன்று பின்புறத்தை மட்டும் கண்டதால் ஏற்பட்ட சந்தேகம் இன்று நிவர்த்தியாகிவிட்டது. நான் கண்டது அவரேதான். உமாவின் அப்பாவே தான். அண்ணா… அவர் அன்று நான் பார்த்தது போலவே யிருக்கிறார். ஆனால். ஆமாம் அண்ணா ஆனால் அவ ருக்குத் திருமணம் ஆகிவிட்டதாம் ” என்று கூறியபோது மயங்கி விழப்போன அவளைத் தன்னுடன் அணைத்துத் தாங்கிக் கொண்டான் ரகு.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *