எங்கே அவள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 9,224 
 
 

கதை ஆசிரியர்: பவள சங்கரி.

நான் உன்னைக் காதலிப்பேன்.

மரணமற்ற நித்ய காதலாகும் அது.

கதிரவன் குளிர்ந்துபோகும் வரை

நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை

நான் நித்தம் உன்னைக் காதலிப்பேன்

–ஷேக்ஸ்பியர்

அற்றைத் திங்களில், நிலவொளியில்நீயிருந்தாய் என்னோடு இற்றைத் திங்களில்நிலவு மட்டுமே என்னோடு… எங்கே சென்றாய் என் இனிய இதயமே என்று தொலைந்த தன் உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்த மூன்று ஆண்டு காலமும் தோல்வி மட்டுமே மிஞ்சிய சூழலில் தேடலையும் நிறுத்தாமல், என்றோ ஓர் நாள் தன் அழகு தேவதையைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ஆதித்யா நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான். இந்த மூன்று வருடங்களில் அவள் வீட்டை நூறு முறையாவது வட்டமிட்டு வந்திருப்பான். பூட்டு மட்டுமே கண்ணில் பட தவித்துப் போய் திரும்புவான்.  இறுதியாக அவளைச் சந்தித்தது தங்கள் கல்லூரியின் இறுதி நாள் பிரிவு உபசார விழாவில். கல்லூரி முழுவதும் இவர்களின் நெருக்கம் தெரிந்த விசயம் என்றாலும், அன்று இருவரும் சேர்ந்து மேடையில் ஒரு நடன நிகழ்ச்சி கொடுத்து அனவருக்கும் அதனை பறைசாற்றியது இன்றும் பசுமையாக இருந்தது அவன் மனதில். மும்பையில் தன் சகோதரியுடன் சில நாட்கள் தங்கி வருவதாகச் சொல்லிச் சென்றவள், ஆறு மாதம் ஆகியும் திரும்ப வரவில்லை. இடையில் அவ்வப்போது தொலைபேசித் தொடர்போ மின்னஞ்சல் தொடர்போ இருந்தது. திடீரென அதுவும் நின்று போனது. எவ்வளவு முயன்றும் அவளுடைய தொடர்பை எட்ட முடியாமல், அன்றிலிருந்து பூட்டிய அவள் வீட்டை அவ்வப்போது சென்று பார்த்து விட்டு வருவதை வழமையாகக் கொண்டிருந்தான் நம் நாயகன் ஆதித்யா.

வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் இன்று பூட்டு இல்லாமல் இருந்தது அவன் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தாலும், அவள் இருக்க வேண்டுமே என்று இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. நொடியில் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது மனது. கை தானாக
அழைப்பு மணியை அழுத்தியது…….

யார் அந்த அழகு தேவதை? அனிச்சா.. பெயருக்கேற்றாற் போல அனிச்ச மலர் போன்று மென்மையான இதயம் கொண்ட தன் இதய ராணியை தான் முதன் முதல் சந்தித்த அந்த நாளை மறக்க இயலுமா என்ன? பொறியியல் கல்லூரியின் இலக்கிய விவாத மேடை. கல்லூரியில் தாமதமாக வந்து சேர்ந்த அந்த முதல் நாளே , மேடையில் அழகு தேவதையாய் , தன் மென் மொழியால் அனைவரையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தவள்.

மங்கல மங்கையராய்

மன்னவர் கன்னியராய்

வாழ்வினராய் அதிலே

திங்கள் நிறைந்து வரும்

சேயிழையார் நடை போல்

தென்றல் நடந்துவரும்

தென்தமிழ் நாடுடையாய்!

நிறைமாதக் கர்பிணிப் பெண்ணின் நடைக்கு ஒப்ப, தென்றல் மெல்ல,மெல்லத் தவழ்ந்து வருகிறதாம். அந்த மென்மையான தென்றலும் கூட, பாண்டியன் மீது காதல் கொண்ட அந்த மெல்லிடை மங்கையவளுக்குத் துன்பம் தருகிறதாம்……….

இலக்கிய மேடை விவாத அரங்கில் பெண்மையின் மென்மையைப் பற்றி அழகாகத் தன் தேனினும் இனிய குரலில் அவள் எடுத்துரைத்த பாங்கு சபையிலுள்ள மாணவர்களைச் சற்று நேரம் ,மகுடியின் நாதத்திற்கு மயங்கும் நாகமாக கட்டி வைத்திருந்தது என்றால் அது மிகையாகாது. அத்தகைய
மென்மையான பெண்டிருக்கு பல்வேறு உரிமைகள் எந்தெந்த வகையில் மறுக்கப்பட்டு மனம் நோகடிக்கப்படுகிறாள் என்று அனிச்சா பட்டியலிட ஆரம்பித்த போதும், அதற்கான தீர்வு ஆண்களின் மனப்போக்கில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும் என்றும் வெகு ஆழ்ந்து பேச்சு தொடர, பெண்கள் மட்டுமன்றி ஆண் மாணவர்களும் விடாது கைதட்ட, இறுதியில் ’ பெண் விடுதலை ’ என்ற தலைப்பிலான அந்த விவாத மேடை நன்கு சூடு பிடித்தது. அவள் வாதத்திறனின் காரணமாக அடுத்து வந்த மாணவர்களின் சுருதியும் சற்று குறைந்துதான் போனது.

இறுதியில் வந்த ஆதித்யா மட்டும் ஆரம்பத்திலேயே நறுக்கென்று, “ உரிமை என்பது கேட்டுப் பெற வேண்டிய ஒன்று அல்ல. சுதந்திர உணர்வு என்பது அவரவர் இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். பெண் சுதந்திரம் என்பது ஆத்ம ஞானத்தை ஆதாரமாகக் கொண்டது. ஆத்மாங்கிறது ஆணுக்கும்
பெண்ணிற்கும் சமமானதுதானே ! எந்தப் பிரச்சனைக்கும் ஆணுக்கொரு நியாயம், பெண்ணிற்கொரு நியாயம் என்பது அநீதி அல்லவா. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, தன் சுய உரிமையை வேறு ஒருவர் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே தன்னம்பிக்கையற்ற செயலாக
அல்லவா உள்ளது “ என்று மெல்ல,மெல்ல அனிச்சாவின் ஒவ்வொரு பேச்சிற்கும் பதிலடி கொடுத்தவனுக்கு கரவொலியும் கூடிக் கொண்டே போக, ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தாலும், அவனுடைய கம்பீரமான பேச்சும் ஆண்மைக்கே உரிய அந்த ஆணவமும், வார்த்தைக்கு வார்த்த அவன் வெளிப்படுத்திய ஆதிக்கமும், அவளையும் கவர்ந்ததென்னவோ உண்மைதான்.

அதற்குப் பிறகு எத்தனையோ பட்டி மன்றங்கள், விவாத மேடைகள் , கவியரங்கம் என்று இருவரும் எதிர் எதிர் அணியில் மோதிக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய நட்பு மட்டும் நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டேதான் வந்தது. அனி என்று செல்லமாக பெயரைச் சுருக்கிக் கூப்பிடும் அளவிற்கு நெருக்கம் அதிகரித்து விட்டது. அதற்குப் பிறகு காலம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, மிக இன்பமாக ஓடிக் கொண்டிருந்தது. கல்வியுடன் சேர்த்து காதலும் செம்மையாகவே வளர்ந்தது. …..

அழைப்பு மணி அடித்து வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாதது உணர்த்த, திரும்பவும் அழைப்பு மணியை அடித்தும் எந்த சலனமும் இல்லை.அடுத்த வீட்டில் சென்று விசாரிக்கச் சென்றவனுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வெளியே வருவதே இல்லை என்ற பதில்தான் கிடைத்தது. பொறுத்துப் பார்த்து விட்டு, நேரமாகி விட்டபடியால் அதற்கு மேல் அங்கு நின்று பயனில்லை என்று கிளம்பினாலும், அடுத்து வந்த ஐந்தாறு நாட்களும் விடாமல் தொடர்ந்து வந்து அழைப்பு மணியை அடித்துக் கொண்டேயிருந்தான். அன்று சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறையாதலால், காலையிலேயே கிளம்பி அனிச்சாவின் வீடு நோக்கி கிளம்பி விட்டான். அழைப்பு மணி அடித்தவன், எதிர்பாராத நேரத்தில் கதவு திறக்கவும், இன்ப அதிர்ச்சியாக ஒரு சின்ன பெண் வந்து யார் வேண்டும் என்று கேட்டாள். அவனும்

,”அனிச்சா என்று யாராவது இங்கு இருக்கிறார்களா ”

என்று கேட்கவும் , அந்தப்பெண் புரியாமல் விழித்து, “ அம்மா.. யாரோ வந்திருக்காங்க, என்னமோ பேர் சொல்லி கேக்கறாங்க, வாங்க “ , என்றாள்.

உள்ளேயிருந்து யார் வரப்போகிறார்கள் என்று ஆவலாக கண்கள் அலைபாய, அங்கிருந்து ஒரு மூதாட்டி முக்காடிட்டுக் கொண்டு , கதவினருகில் நின்று கையை ஆட்டி அப்படி ஒருவரும் இல்லை என்று சைகை செய்தார். இருப்பினும் அவன் விடாமல் திரும்பவும்,

“ இது அனிச்சாவின் வீடு தானே. வீட்டில் அவளில்லையா. வேறு யாரும் இல்லையா”  என்று கேட்டுக் கொண்டே நின்றிருந்தான்அந்த மூதாட்டி சின்னப் பெண்ணை சாடை காட்டி கூப்பிட்டு ஏதோ சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும் வந்து சர்வ சாதாரணமாக , அனிச்சாவும் அவள் பெற்றோரும் ஒரு இரயில் விபத்தில் இறந்து போய்விட்டதாகச் சொல்லி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். பூமி இரண்டாகப் பிளந்து தான் அப்படியே உள்ளே இறங்குவது போன்று இருந்தது ஆதித்யாவிற்கு. அதிர்ச்சியில் நா எழவில்லை. ஏதும் பேச முடியாமல் வீடு வந்து சேர்ந்தவன், அந்த அதிர்ச்சியில் இருந்து சற்றே மீண்டவனாக திரும்ப சென்று ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசி வர வேண்டுமென்று ஒரு நாள் சென்று கதவைத் தட்டிய போது அதே சிறுமி வந்து கதவைத் திறந்தாள்.

அந்த அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறினான். அவளும், அம்மா தியானத்தில் இருக்கிறார்கள், இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் என்று சொன்னாள். இருந்தாலும் காத்திருந்தாவது அவரைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும், திரும்ப இவ்வளவு தொலைவு வர வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு காத்திருந்தான்……

அவர்கள் வீட்டின் அறைகள் அவனுக்கு ஏற்கனவே பழக்கமானதால், அனிச்சாவின் நூலக அறையைப் பார்க்கலாமே என்று தன்னிச்சையாக உள்ளே சென்றவன், அந்த அறையில் நல்ல புழக்கம் இருப்பது புரிந்து ஆச்சரியமாக இருந்தது. பரவாயில்லையே, இந்த அம்மாவும் அனிச்சா போன்று புத்தகப்
பிரியர் போல் உள்ளதே என்று நினைத்துக் கொண்டே, அருகில் சென்றவன், அங்கு புத்தக மேசையில் படித்துவிட்டு போடப்பட்டிருந்த புத்தகங்கள் அனைத்தையும் நோட்டம் விட்டவன் மனதில் ஏதோ பொறி தட்டியது. அத்தனையும் அனிச்சாவின் மிக விருப்பத் தெரிவுகள்…. செல்லி, கீட்ஸ்  கவிதைகளில் ஆரம்பித்து, வாசந்தி நாவல்கள் வரை அத்தனையும் அவளுடைய விருப்ப இலக்கியங்களாகவே இருந்தது ஆச்சரியம் ஏற்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் அதில் பாதி புத்தகங்கள் தான் அவளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரிசாக வழங்கியது… இது எப்படி சாத்தியம் என்றஆச்சரியம்
வந்தது. அது அத்தனைக்கும் பதிலாக அங்கு கண்ட அவளுடைய நாட்குறிப்பு இருந்தது. அதனை எடுத்து வாசிக்க ஆரம்பித்தவன் மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனவனாக ஒன்றுமே பேசாமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

சில நாட்கள் ஆனது. சென்றவன் திரும்பவே மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு நாள் வந்தான். அவசரமாக தன்னோடு ஒரு இடத்திற்கு வர வேண்டுமென்று அழைத்தான். அவர் மறுக்கும் நேரம் கூடக் கொடுக்காமல் தன் காரில் உடனே தன்னுடன் வர வேண்டும் , ஒரு அவசர வேலை என்றும் அடம் பிடித்தான். அந்த அம்மாவும் மறுப்பு சொல்ல முடியாமல் காரில் ஏறி அமர்ந்தார். கார் சென்று நின்றதோ ஒரு மருத்துவமனையின் முன்பு… ஒன்றுமே புரியாமல் திருதிருவென விழித்தவள் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒன்றுமே பேசாமல் மருதுவ மனையினுள் சென்றவள் ,
பரிசோதனை அறை தாளிடப்படும் வரை ஏதும் பேசாதவள் அத்தனை பேச்சையும் ஒரே பார்வையில் வீசிவிட்டுச் சென்றாள்.

வெளியில் காத்துக் கிடந்த ஆதித்யாவின் கைகளில் அனிச்சாவின் டைரி. அவளை அழைத்து வரும் போது அதையும் எடுத்து வந்திருந்தான் திரும்ப படிக்கும் ஆவலில்…. அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் பல முறை படித்தவன் கண்களில் கண்ணீர் மாலையாக வழிந்தோடியது கூட உணராமல்
நிலைகுத்திய பார்வையோடு அவன்……. அனிச்சாவின் அந்த டைரி சொன்ன சேதி இதுதான்!

“ நான் அக்கா வீட்டில் மும்பையில் மிக உற்சாகமாக வலம் வந்த நேரம். நாட்கள் எவ்வளவு இன்பமாக கழிந்து கொண்டிருந்தது. பணிக்குச் செல்ல அவ்வப்போது நேர்முகத் தேர்வுகளுக்கு சென்று வந்து கொண்டிருந்ததோடு, அக்கா குழந்தைகளோடு ஊர் சுற்றிக் கொண்டு பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த வேளையில் திடீரென சுனாமி எப்படி வந்தது……

முதல் முறையாக அம்மா, என் முகத்தை அப்படி உற்றுப் பார்த்து, அனி, என்னடா இது உன் வாயைச் சுற்றி மடிப்பு, திடீரென்று.. நீ கவனிக்கவில்லையா? நிறைய ஊர் சுற்றுகிறாய் என்று நினைக்கிறேன் என்ற போது கூட அதன் அர்த்தம் புரியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொருவராக கேட்கும்படி வெளிப்படையாக வறண்ட தோலும், அதிகமான முகச் சுருக்கங்களும் அதிர்ச்சி ஏற்படுத்த, வீட்டில் கை வைத்தியமாக அம்மா செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தபோதுதான் அதன் அபாயம் புரிய ஆரம்பித்தது.

மருத்துவரிடம் சென்ற போது பல சோதனைகளின் முடிவாக அவர்கள் சொன்ன விசயம் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடியதாகவன்றோ ஆகிவிட்டது.

மருத்துவர் சொன்ன அந்த புது வியாதியின் பெயரும், தன்மையும் கேட்டு குடும்பமே நிலை குலைந்து போனதும் உண்மை. வெர்னர் சிண்ட்ரோம் (werner syndrome)  சுருங்கச் சொன்னால் இந்த 21 வயதில் நான் பாட்டி ஆகப்போகிறேனாம். என் ஆயுளும் 40 வயதில் முடிந்தே விடுமாம்…….

http://ghr.nlm.nih.gov/condition/werner-syndrome

கனவிலும் எதிர்பார்க்காத , கற்பனைக்கும் எட்டாத நிகழ்வு. அதைவிடக் கொடுமை, என் பெற்றோரின் மரணம். ஆம், விதி வாழ்க்கையில் ஒருவரை வீழ்த்த குறி வைத்து விட்டால் அது சுழற்றி அடிக்கும் அடியில் நாம் தப்புவது எளிதல்லவே. மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் இரயில் தடம் புரண்ட விபத்தில் பல மரணங்களின் ஓலத்தில் என்னையும் இணைத்துக் கொண்டு, இன்று நடைப்பிணமாக தனியே வாழ்ந்து கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலை விரைவில் முடிவிற்கு வர ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அபலை….” என்று முடித்திருந்தாள்.

கண்ணீர் குளமாக பார்வையை அணை போட்டாலும், எப்படியும் தன் இதய தேவதையை காப்பாற்றியேத் தீருவது என்ற மன உறுதி மட்டும் துணை நிற்க பல இடங்களில், விசாரித்து இன்று அவளை ஸ்டெம்செல் மருத்துவத்திற்கு அழைத்து வந்திருக்கிறான். முதலில் அவளுக்கு வேண்டியது தன்னம்பிக்கை . அதை அவளுடைய ஓரளவிலான பழைய முக மாற்றம் மட்டுமே தர முடியும். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறான்.

http://www.celltherapyprogram.com/

மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கட்டாயம் நல்லதொரு தீர்வும், அவளுடைய நிறைந்த ஆயுளுக்கு உத்திரவாதமும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் காத்திருக்கிறான் இந்த உண்மைக் காதலன்.

நன்றி: வல்லமை.காம் (சிறுகதைத் தொகுப்பு), நவம்பர் 2011, பவள சங்கரி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *