சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே இருந்த கல்லூரி கேண்டான் சுவரில் மோதியது படுவேகமாக…. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷ்-ம், பின்னால் அமர்ந்திருந்த விக்கியும். காண்டான் முன்னால் கட்டிட வேலைக்காக மணலும், கருங்கற்களும் கொட்டப்பட்டிருந்தது. பின்னால் இருந்த விக்கி மணல் மீது விழுந்து சிறிய காயங்களோடு தப்பிக்க, ராஜேஷ் குவித்து வைக்கப்பட்டிருந்த கருங்கற்கள் மீது தலைகுப்புற விழுந்தான்…
கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியின் விளிம்புக்குப் போக, கல்லூரி மாணவிகளின் அலறல் சத்தம் காதில் விழுமுன் இரத்தச்சிதறல்களுடன் மயக்க நிலைக்குப் போனான் ராஜேஷ்.
இரண்டு நிமிடம் தான்… யாருக்கும் எதுவும் புரிவதற்குள் நடந்துவிட்டது அந்த விபரீதம். என்ன அலறல் என்று புரியாமல் மொத்த ஆசிரியர்களும் ஓய்வு அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். மாணவர் கும்பல் அதற்குள் சுதாரித்து இருவரையும் தூக்கி கிடைத்த வாகனத்தில் ஏறி மருத்துவமனை நோக்கிப் பறந்தது.
என்னப்பா என்ன ஆச்சு ? எப்படி நடந்தது ? ஆளாளுக்கு விசாரணைகள் செய்து கொண்டிருந்தார்கள்… மாணவிகள் அழுகையும் படபடப்பும் விலகாத கண்களுடன் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
ராஜேஷ், பாரதி பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவன். எந்த குறிப்பேட்டிலும் தன்னைப்பற்றி கறுப்புப் புள்ளி வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் இருப்பவன். கல்லூரியின் எல்லா மட்டங்களிலும் அவனுக்கு நண்பர்கள், காரணம் அவனுடைய மனசை மயக்கும் நகைச்சுவைப் பேச்சும், மனசை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் அழகான கவிதைகளும் தான். போதாக்குறைக்கு பாலசுப்ரமணியத்தின் குரலில் பாதி அளவு வசீகரம் அவன் குரலுக்கு.. அது போதாதா நண்பர்கள் கூட்டம் சேர்வதற்கு ? கல்லூரியின் விழாக்களில் அவன் கவிதைகள் எப்போதும் பரிசு வாங்கத் தவறியதில்லை. காண்டான் மேஜைகளில் தாளமிட்டு கல்லூரி துவங்கும் வரை நண்பர்களோடு பாட்டுப்பாடி, டீ குடித்து கதை பேசி … இப்படியே கலகலப்பாகிப் போன நாட்களில் தான் இப்படி ஒரு விபரிதம் நடந்தது. இதுவரை பைக் ஓட்டாத ராஜேஷ் ஏன் இன்றைக்கு மட்டும் ஓட்டினான் என்பது மட்டும் யாருக்கும் புரியவே இல்லை. அடிபடணும்னு விதி.. இல்லேன்னா ஏன் இண்ணிக்கு மட்டும் பைக் ஓட்டறான்.. பாவம் டா அவன்… மொத்த மாணவர்களுக்கும் விஷயம் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருந்தது.
கல்லூரி துவங்குவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் தான் பாக்கி…
கல்லூரியின் கடைசிக் கட்டிடத்தின் ஓரத்தில் இருந்த லைப்ரரியில் ராஜேஷ’க்காகக் காத்திருந்தாள் ராகவி. கூடவே அவள் தோழிகள் பிரியாவும், வித்யாவும். ராகவி, ராஜேஷான் காதலி. காதல் என்றால் கொஞ்ச நஞ்சக் காதலல்ல. கல்லூரியின் அத்தனை பேருக்கும் தெரிந்திருந்த காதல்..கல்லூரியில் மூன்றாமாண்டு, அதே ராஜேஷான் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பவள். கொஞ்சம் ரசிக்குமளவுக்கு அழகு, பளீரென்று விழுந்துவிடுமளவுக்கு மிக மிக… என்று எத்தனை மிக போட்டாலும் மிகையாகாத அழகான சிரிப்பு. இன்னும் ராகவிக்கு விஷயம் தெரியவில்லை. கல்லூரி லைப்ரரியில் எப்போதுமே மூன்று அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள், இன்றைக்கும் அப்படித்தான் ராகவி, பிரியா, வித்யா தவிர யாருமே இல்லை…
வகுப்புக்கு நேரமாகி விட்டது. இந்த மடையன் எங்கே போனான் ? வகுப்பு துவங்குவதற்கு 15 நிமிடம் முன்னதாக காத்திருக்கச் சொன்னான்… எங்கே போய் தொலைந்தானோ.. சரி வா உன்னை கவனிச்சுக்கறேன். எங்கே போயிடப் போறே… ஏதாவது கேட்டா காத்திருப்பது தான் காதலுக்கு அழகேன்னுா டயலாக் வேற.. இதை கேட்டுக் கேட்டே காது வலிக்குது. மனசுக்குள் செல்லமாய் திட்டிக்கொண்டே எழுந்தாள் ராகவி. நூலகம் விட்டு வெளியே வந்த போது தான் கல்லூரி கொஞ்சம் வித்யாசமாய் தோன்றியது அவளுக்கு… கூட்டம் கூட்டமாய் மாணவர்கள், மாணவிகள்… ம்…ஏதோ போராட்டம் போல இருக்கு… இன்னிக்கு வகுப்பு இருக்காது… இந்த மடையனைக் கூட்டிக்கொண்டு ஏதாவது படத்துக்குப் போக வேண்டியது தான் … நினைத்துக் கொண்டே நடந்தவளை எதிர்ப்பட்டு நிறுத்தினாள் ரெஷ்மி.
‘நீ போகலயா ராகவி.. ஆஸ்பத்திரிக்கு ? ‘
ஆஸ்பத்திரிக்கா ? ? எதுக்கு ? – புரியாமல் பார்த்தாள் ராகவி…
ஐயய்யோ..உனக்கு விஷயமே தெரியாதா ? ராஜேஷ்க்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சாம்…. அப்பல்லோ- க்கு எடுத்துட்டுப் போயிருக்கிறாங்க….
சட்டென்று கரங்களிலிருந்த புத்தகங்கள் நழுவ… அலறினாள் ராகவி ..
‘எப்போ… ? என்ன ஆச்சு அவனுக்கு ? ‘
தெரியலடி… ஒண்ணும் பெருசா இருக்காது கவலைப் படாதே… நீ போய் பாரு…
… சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரெஷ்மி…
ராகவி ஓடினாள்… கீழே கிடந்த புத்தகங்களை அவசர அவசரமாய்ப் பொறுக்கி எடுத்துக் கொண்டே அவளைத்தொடர்ந்து ஓடினாள் பிரியா. கூட்டம் கூட்டமாய் நின்றிருந்த மாணவ, மாணவியர் கொஞ்சம் பரிதாபம் கலந்து அவளைப்பார்த்தார்கள். ராகவிக்கு கண்முன்னால் எதுவும் தெரியவில்லை… ராஜேஷ் மட்டும் தான் தெரிந்தான். ஐயோ ராஜேஷ்.. எப்படி கஷ்டப்படுகிறாயோ… நான் நகம் வெட்டித் தரும்போதே வலிக்கிறது என்பாயே… இப்போது எப்படி இந்த வலி தாங்குகிறாயோ..கண்ணீர் பொல பொலவென்று கண்ணீர் வழிய… கல்லூரி வாசலுக்கு வந்த ராகவியை தடுத்து நிறுத்தினான் சரவணன்.
ராகவி… இப்போ நான் ஆஸ்பத்திரில இருந்து தான் வரேன்… நீ போகவேண்டாம்.. பிளீஸ்…
‘ஏன் என்ன ஆச்சு .. என் ராஜேஷ்க்கு ? ‘ வார்த்தைகள் கண்ணீரோடு வந்தன…
அவசர சிகிட்சைப்பிரிவுல சேத்திருக்கோம்….
அவசர சிகிட்சைப்பிரிவா ? ? ? – ராகவியின் குரல் மேலும் உச்சஸ்தாயிக்குப் போயிற்று…
நோ… நான் அவனை உடனே பாக்கணும்…
பிளீஸ் ராகவி.. நான் சொல்றதைக் கேளு… அவனைப்பார்க்க முடியாது… கொஞ்சம் பொறு… போகலாம்….
சரவணன் பேசப் பேச அதைக் காதில் வாங்காமல் வேகவேகமாய் ஓட ஆரம்பித்தாள் ராகவி…
எதிரே வந்த ஆட்டோவை நிறுத்தினாள்…
‘அப்பல்லோ போகணும்… ‘
நிலமையின் வீரியம் புரியாத டிரைவர் பீடிக் கறைபடிந்த பற்களைக்காட்டி கேட்டான்… மீட்டர் மேல அஞ்சு ரூபா குடும்மா….
ஆயிரம் ரூபாய் தாரேன்பா.. நீ போ… என்றவளின் அழுகையில் அடங்கிப்போன டிரைவர்… மறுவார்த்தை பேசாமல் ஆட்டோவைக் கிளப்பினார்…
கல்லூரியின் முதல் ஆண்டில் வேறு வேறு பிரிவில் படித்துடிட்டு, இரண்டாம் ஆண்டுதான் ஒரே வகுப்பில் சேர்ந்தார்கள் ராஜேஷ்-ம், ராகவியும்… முதல் பார்வையில் காதல் வரவே வராது என்று வாதிடும் ரகம் ராஜேஷ்… அவளைப்பார்த்தபின்… முதல் சிரிப்பில் காதல் வரலாம் என்று தெரிந்து கொண்டான். ஆசிரியர் ஏதேதோ விளக்கமளித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் எதிர் புற இருக்கையில் இருக்கும் ராகவியை ரகசியமாய் படித்துக்கொண்டிருப்பான்…
‘என்ன நீ.. எப்பவும் பொண்ணுங்க பக்கமாவே பாத்திட்டு இருக்கே ? ‘ – ஒரு காலைப்பொழுதில் கேட்டாள் ராகவி.
இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ராகேஷ்.. ஆனாலும் மனசுக்கு மிக இதமாய் இருந்தது…
பேசுகிறாள்… ராகவி என்னுடன் பேசுகிறாள்…. ஆஹா…. மனசு சந்தோஷத்தில் மிதந்தது.
என்ன பண்றது ராகவி… ஒரு சிரிப்பு என்னை கொஞ்சம் கொஞ்சமா சிதைக்குது… அதான் அந்தபக்கம் பாத்திட்டு இருக்கேன்.
ம்…ம்.. சிதைக்கும் சிதைக்கும்… என்ன லவ்வா ? – மறுபடியும் அதே சிரிப்பு… யாரு பொண்ணு ?
சொல்ல மாட்டேன்… வீட்ல போய் உன்னோட கண்ணாடி கிட்டே போய் பாரு…. சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க….
எங்க வீட்டுக்கண்ணாடில எங்க பாட்டி போட்டோ ஒண்ணு ஒட்டிவெச்சிருக்கேன்… சிரித்துவிட்டு நகர்ந்தாள் ராகவி
ராகவிக்கு கொஞ்சம் கவிதை, கதை என்று ரசனைகள் உண்டு.. அது அவர்களுடைய பழக்கத்தை கொஞ்சம் இலகுவாக்கியது.. அவனுடைய காதலை ஆழப்படுத்தியது.
பொதுவாகவே, பாராட்டுக்கு மயங்காத மனிதர் மிகவும் குறைவு. அதிலும் பெண்கள், அதிலும் இளைஞாகள்… நீ அழகு …என்றால் மிகவும் அன்புடன் பழகுவார்கள்… இவனோ நீ ரோஜாக்கள் தோய்த்து எடுத்த ஒரு படிக ஓவியம் என்றான்… தென்றலை உறையவைத்து உருவாக்கிய சின்னச் சிற்பம் என்றான்… பூமி முதல் வியாழன் வரை அறிவுக்கு எட்டிய அனைத்திலும் அழகானது நீயே என்றான்… கவிதை விதைத்த பூமியில் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் விளைய ஆரம்பித்தது…
இன்னும் கொஞ்சம் வேகமா போங்க…. பிளீஸ்…ஆட்டோ டிரைவர் திரும்பினான்…. டிராபிக் ம்மா… உள்ளார பூந்து போக முடியாது… அந்த சிக்னலாண்ட போயிட்டா சந்து வழியா போயிடலாம்மா…தோ அஞ்சு நிமிசத்துல போயிடலாம்….
ஆட்டோ டிரைவர் பேச்சு மீண்டும் அவளை நினைவுகளுக்குள் தள்ளியது… ராஜேஷ் நன்றாக பல குரலில் பேசுவான்… சென்னை பாஷை எல்லாம் அவனுக்கு சரளம்…. அவனோடு நடந்து, அவனோடு பேசி அவளோடு அவனில்லாத மணித்துளிகளை எண்ணி விடலாம். எல்லா காதலர்களுக்குமே தன் காதல் தான் புனிதமானது என்னும் எண்ணம் இருக்கும்… ராஜேஷ் க்கும் இருந்தது. நம்ம பெயர்ல கூட எவ்ளோ ஒற்றுமை என்று அடிக்கடி பூரித்துப் போவாள் ராகவி. காதலிக்கத் துவங்கும் வரை காதலர்களின் சம்மதம் மட்டுமே மிகப் பிரதானமாய் தெரியும்.. ஆனால் காதலில் மூழ்கியபின்புதான் காதலுக்கு காதலர்கள் தவிர எல்லாமே எதிர்ப்பாய்த் தெரியும்.
ஆனால்…. இவர்கள் காதலுக்கு மட்டும் எதிர்ப்பு வரவில்லை….
‘ எதிர்ப்பே இல்லாத காதல் போரடிக்குது ராஜேஷ் ‘- கொஞ்சலாய் பேசுவாள் ராகவி…
நீ..வேணும்னா வேற யாரையாவது லவ் பண்ணு.. அப்போ காதலுக்கு நீயே எதிரியாயிடுவே… என்ன சொல்றே…
சீரியஸ் குரலில் சீண்டுவான் ராஜேஷ்…
பத்து மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதாவது இருக்குமா… காதலித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்.
பல மணி நேரம் மெளனமாய் இருக்க முடியுமா ? முடியும் என்கிறது காதல்…
ஆட்டோவும், அவள் நினைவுகளும் ராஜேஷை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.
அதே நேரம் கல்லூரியின் வராண்டாவில் வேகமாய் நடந்து கொண்டிருந்தான் சரவணன்…
கண்கள் கலங்கிப் போயிருந்தது, கல்லூரி முதல்வரின் அறை நோக்கி நடந்துகொண்டிருந்தான். அந்த நீளமான வராண்டாவின் கடைசி வரை போகவேண்டும் முதல்வரின் அறைக்கு… வராண்டா நீண்டு கொண்டே போவதாய் தோன்றியது அவனுக்கு…
‘ எக்ஸ்கியூஸ் மி சார் ‘…
‘ வா.. சரவணன்… வா… ராஜேஷ்க்கு எப்படி இருக்கு… அப்பல்லோ தானே போயிருக்கீங்க ? ‘ முதல்வர் கேட்டார். அவருக்கு ராஜேஷை நன்றாகத் தெரியும். ஒரு முறை கல்லூரியில் அதிக பரிசு வாங்கியதற்காகவே இன்னொரு பரிசு வாங்கியவன் தான் ராஜேஷ்…
சொல்லு சரவணன் …. மீண்டும் முதல்வர் குரல்…
ராஜேஷ்… ராஜேஷ்… இறந்துட்டான் சார்… சரவணன் குரல் சிதறியது….
வாட் ? ? ? அமைதியாய் இருந்த கல்லூரி முதல்வர் பரபரப்புக்குள் விழ…
பரபரப்புக்குள் இருந்த கல்லூரி ஒரு பெரிய நிசப்தத்துக்குள் விழுந்தது…
ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது….
ஆண்டவனே.. ராஜேஷ்க்கு எதுவும் ஆகிவிடக் கூடாது… இதயம் விடாமல் அழுது கொண்டிருந்தது.
‘ எப்படி ராகவி… வாழறதக்காக காதலிக்கறவங்க, காதலுக்காக செத்துப்போறாங்க ? லாஜாக் உதைக்கல ? ‘
ஒரு நாள் கேட்டான் ராஜேஷ்….
நான் சாக மாட்டேன்பா.. நீ போனா எனக்கு இன்னொரு ராஜேஷ்…பொய்யாகச் சொல்லி நிஜமாகக் கிள்ளுவாள்…. தற்கொலைங்கிறது கோழைங்க எடுக்கிற தைரியமான முடிவுன்னு எங்கயோ படிச்சிருக்கிறேன். ஆனா அது தைரியமானவங்க எடுக்கிற கோழைத்தனமான முடிவுன்னு தான் தோணுது… சொல்லி விட்டுச் சிரிப்பாள்… அவள் சிரிக்க ஆரம்பித்தால் பிறகு வாக்குவாதம் இருக்காது அவனிடம் மெளனம் மட்டுமே நிலைக்கும். அவள் சிரிப்பதற்காகவே நிறைய ஜோக்ஸ் படிப்பான்…. நிறைய ஜோக்ஸ் அடிப்பான்….
சரக்க்க்… என்று அஷ்டகோணலால் வளைந்து ஆட்டோ ஆஸ்பத்திரி முன் நின்றது…
ராஜேஷ்.. ராஜேஷ்… நீ எப்படி இருக்கே… உனக்கு வலிக்குதாடா… ஏண்டா நீ பைக் எல்லாம் ஓட்டினே… மனசு அரற்றியபடி ஒட்டமும் நடையுமாய் விரைந்தாள் ராகவி. ஆஸ்பத்திரி வாசல் முன் மாணவர் கூட்டம்… கூட்டம் கூட்டமாய்…. அவசரமாய் அவர்களை அடைந்தவள் கேட்டாள்…
‘ ஐ.சி.யூ ‘ எங்க இருக்கு ?
ராகவி… அது… வந்து… ஐ.சி.யூ எல்லாம் போகவேண்டாம்… நில்லு….
ராஜேஷ் எப்படி இருக்கான்.. சொல்லுங்க பிளீஸ்… ராகவி கெஞ்சினாள்….
மொத்த மாணவர்களும் சொல்வதறியாது திகைத்து நின்றார்கள்….
‘ எப்படி சொல்றதுன்ன்னு தெரியல ராகவி… ஹா..ஈஸ் நோ மோர் ‘ … யாரோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே
‘ராஜேஷ்………. ‘ என்று மொத்த ஆஸ்பத்திரியும் திரும்பிப்பார்க்குமளவுக்கு வீறிட்டபடி மயக்கமானாள் ராகவி….
நாட்கள் மெது மெதுவாய் நகர்ந்தது…. இன்னொரு பக்கம் உரசியபடி வரும் இப்போது ராஜேஷ் இல்லை…
சண்டையிட்டபடியே புல்வெளியில் தள்ளிவிடும் ராஜேஷ் …. சிரித்துவிட்டால் சொக்கிப்போகும் ராஜேஷ்… மாலையில் யாரும் பார்க்காதபோது சட்டென்று முத்தமிடும் ராஜேஷ்…. நினைவுகள் ஒவ்வொன்றாய் உருக உருக கண்கள் கசிந்து கொண்டிருந்தது ராகவிக்கு….
‘ராகவி… என்ன நடந்தாலும், நீ என்ன முடிவு எடுக்கணும்னாலும் உணர்ச்சிமயமா இருக்கும்போ எடுக்கக் கூடாது… கொஞ்சம் ஆறப்போடு.. அப்போதான் உன்னால சிந்திக்க முடியும். நீ அவசரப்பட்டு எடுக்க இருந்த முடிவு மிகவும் தப்பானதுண்ணு புரியும் ‘ .. அவ்வப்போது ராஜேஷ் சொல்லும் வார்த்தைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல எழுந்து அடங்கியது….
நீ என்ன கஷ்டத்துல, இல்ல வருத்தத்துல இருந்தாலும் பகவத் கீதைல வர ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்…. ‘ இந்த பகுதியை மனசுக்குள்ள இரண்டு தடவை சொல்லு…. எப்போதாவது சின்னச் சின்ன சோகங்கள் வரும்போதெல்லாம் சொட்டுச் சொட்டாய் நம்பிக்கை ஊற்றுவான் ராஜேஷ்….
வாரம் ஒன்று ஓடி விட்டது… கல்லூரியில் கலாட்டாக்கள் மீண்டும் துவங்கிவிட்டன… ராஜேஷான் இழப்பு எல்லோருக்கும் ஒரு செய்தியாக மாறி மறைந்துவிட்டது. ராகவிக்கு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது….
கல்லூரி வகுப்புகளை பாதிநேரம் புறக்கணித்தாள்… நூலகம், கல்லூரிப் பூங்கா என்று தனிமைகளில் காலம் கடத்தினாள். அதற்குக் காரணமும் இருந்தது, மாணவிகளின் பரிதாபப் பார்வையும், மாணவர்களின் ஆறுதல் பேச்சுக்களும் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக்கொண்டே இருந்தது.
ராஜேஷ் நடந்த இடம், ராஜேஷ் உட்கார்ந்த இடம் என்று கல்லூரி முழுதும் நடந்து கொண்டிருந்தவள் கல்லூரி காண்டின் முன்புறம் வந்ததும் நின்றாள்… காண்டான் முன்புறம் கிடந்த கற்களின் மேல் சிவப்பாய் உறைந்து போன ராஜேஷான் இரத்தத்தைப் பார்த்ததும் மீண்டும் உடைந்து போனாள்….
இரவு எத்தனை மணி என்று தெரியவில்லை…
எழுதிக் கொண்டிருந்தாள் ராகவி….
என்னை மன்னித்து விடு ராஜேஷ்… நீ இல்லாத வாழ்க்கையை ஒருவாரம் வாழ்ந்து பார்த்துவிட்டேன்….
உன்னை சந்திக்கும் முன் ஆண்டு காலம் வாழ்ந்தேன்… ஆனால் உன்னைப் பிரிந்தபின் இரண்டு வாரங்கள் கூட என்னால் வாழமுடியவில்லை…. நீ ரசிக்கும் சிலிர்ப்பு மரத்துப் போய்விட்டது… ஏழுநாட்கள் , ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்கள்… என்னை ஆறுதல் படுத்திப்பார்த்தேன்… முடியவில்லை…நீ இல்லாமல் எனக்கு ஆறுதல் தோள்கள் கிடைக்கவில்லை…. நீ இறந்தபோதே நானும் இறந்துவிட்டேன்… இனிமேல் என்னால் வாழமுடியாது…இன்று எனக்கு இரண்டாவது சாவுதான்… சொர்க்கமோ நரகமோ.. நீ எங்கே இருக்கிறாயோ அங்கே வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்…கண்ணீர் கன்னங்களில் வடிய கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் ராகவி… ‘
நாளை இன்னொரு துயரச் செய்தி வரப்போகிறது என்பதை அறியாத அந்தக் கல்லூரி இருளுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தது
– ஏப்ரல் 2001