இன்னுமொரு காதல்?

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 24,026 
 
 

லண்டன்-2015

பாதாள ட்ரெயினில்,தன் அருகில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்;. முரளி வெவெலத்துப் போனான். அவள் பெயர் சமந்தா ஸிம்ஸன்.கடைசியாக அவளைச் சந்தித்தபோது,’ நீ நல்ல இருப்பியா? என்னை இவ்வளவு தூரம் அவமதித்து விட்டாயே, இருபது வருடங்களுக்கு மேலாக நாங்கள் எவ்வளவு நெருக்கமாகப் பழகினோம் அதற்கெல்லாம் அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டாயே. நீP மற்ற ஆண்களை விட ஒரு படி உயர்ந்தவன் என்று நினைத்த என்னைச் செருப்பால் அடிக்கவேண்டும்.’ என்று தொடங்கியவள் அதற்கு மேலும் அவள் கண்டபடி,மிகவும் கண்டபடி திட்டினாள்.

அப்படித் திட்டியவள் ,இன்று இருவருடங்களுக்கப் பின் அவன் அருகில்,;வந்து நிற்கிறாள்.

இன்று தனது உறவினர் ஒருத்தர்,லண்டன் மத்தியிலுள்ள ஹாஸ்பிட்டல் ஒன்றில் நோயாளியாக இருக்கிறார். அவரைப் பார்க்க வந்தவன் இன்று இவளைச் சந்தித்தது அவனுக்குத் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் அவசரத்தில் ஓடிவந்து ஏறியதால் இவனைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். இன்னும் சில வினாடிகளில் அவளின் கண்களில் அவன் படுவது மிக மிக நிச்சயம். அப்புறம் என்ன நடக்கும்?

அவள் இன்னுமொருதரம் அவனைக் கண்டபாட்டுக்குத் திட்டுவாளா?

பழைய விடயங்களை ஞாபகப்படுத்தி அவனைக் குற்றவாளியாக்குவாளா? தனது வாழ்க்கையைச் சீரழிக்க நினைத்தவன்; என்று கண்ணீர் வடிப்பாளா? அவனால் அவளுடன் சம்பந்தப்பட்ட பழைய விடயங்களை நினைக்கப் பயம் வந்தது.

அவன் இறங்கவேண்டிய ஸ்டாப் இன்னும் கொஞ்சநேரத்தில் வரும். அதற்கிடையில் அவள் அவனைக் கண்டு திடுக்கிடும்போது அவன் என்ன சொல்லப் போகிறான்? .

அடுத்த ஸ்டாப்பில் பலர் இறங்கப் பலர் ஏறும்போது அவள் கொஞ்சம் நகர்ந்தபோது அவளின் பார்வை அவன் முகத்தில் அப்படியே நிலைத்து நின்றது.

‘ஹலோ சமந்தா..வாட் எ சர்ப்பிறைஸ்?’அவன் தன்னால் முடியுமட்டும் தன் முகத்தில் ஒரு புன்னகையைச் சுமக்கப் பிரயத்தனம் செய்தான்.

அவள் அவனை மேலும் கீழும் ஏற இறங்கப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு சில வினாடிகள் குறிப்பிடத் தக்கதான எந்த உணர்ச்சியையும் அவனால் கணிப்பிடமுடியாதிருந்தது. அதைத் தொடர்ந்து,அவனைத் தற்செயலாகக் கண்ட ஆச்சரியம், தவிப்பு,அதையும் கடந்த ஒரு சந்தோசம் அவள் முகத்தில் சிலவினாடிகளில் வந்துபோனதை அவன் கண்டு பிடிக்கத் தவறவில்லை.

சட்டென்று அவள் பார்வை அவன் கையில் போட்டிருந்த மோதிரத்தில் நிலைத்து நின்றது.அதைத் தொடர்ந்து ஒரு சிறிய புன்முறவல். அது அவனுக்குப் புரியவில்லை. அந்த நிமிடமும் அவளும் தனது வாழ்க்கையில் வந்திருக்காமலே போயிருக்கலாம் என்ற அவனின் தாங்க முடியாத தவிப்பை அவளின் அழகிய புன்முறவல் சாந்தப் படுத்தியது.

அப்போது அவள் ,’ஹலோ முரளி ஹவ் ஆர் யு?’ என்றாள்.

‘ஓகே…ஓகே…’அவன் தடுமாறினான்.

‘ ஓ, ஜஸ்ட் ஓகே?’அவள் குரலில் தொனித்த கரிசனம் அவனைத் தர்ம சங்கடப் படுத்தியது..

அவள் தன்னைக் கண்டதும் அவனைத் தெரியாதவள் மாதிரி நடந்து கொள்வாள் அல்லது கடைசியாகச் சந்தித்தபோது நடந்த நாடகத்தைத் தொடர்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் அப்படி சாதாரணமான சம்பாஷணையைத் தொடங்கியது எதிர்பாராத விடயமாகவிருந்தது.

இன்னும் சொற்ப நிமிடங்களில் அவன் இறங்கவேண்டிய இடம் வந்து விடும். அவளிடமிருந்து,அல்லது அந்தச் சூழ்நிலையிலிருந்து எப்படித் தப்பலாம் என்ற மனம் தவித்தது.

‘நீ லண்டனுக்கு வெளியில் வாழ்வது தெரியும்;. உனக்குத் திருமண நிச்சயார்தம் நடந்தது எனக்குத் தெரியாது. என்னை அழைத்திருக்கக் கூடாதா? ஐ விஷ் யு ஆல் த பெஸ்ட்’அவள் அப்படிச் சொல்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

இப்போது,அவள் குரலில் சோகம் இருந்ததையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை. ஏழு வயது முரளி,; சுகமில்லாமல் ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தபோது அவனைப் பார்க்கவந்த அவனது சினேகிதி சமந்தா அவனின் கோலத்தைக் கண்டு கேவியழுதது ஞாபகம் வந்தது.எத்தனையழகான உறவு அவர்களுடையது. அது பலகாலங்களுக்குப் பின் சட்டென்று உடைந்தபோது அவள் சூறாவளியாக மாறினாள்.அவனில் உள்ள கோபத்தில் உலகத்து ஆண்களையெல்லாம் திட்டித் தீர்த்தாள்.

அந்தக் கோபம் அவளுக்கு இருக்கும்தானே. ஐந்து வயது தொடக்கம் ஒன்றாகப்படித்த பழகிய தொடர்பு சட்டென்று முறிந்தபோது அவனும்தான் கவலைப் பட்டான்.

ட்;ரெயின் அடுத்த ஸ்ரேசனில் நிற்பதற்கு அடையாளமாத் தன் வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது. அவன் இறங்க ஆயத்தம் செய்தான்.

‘இறங்கப்போகிறாயா முரளி?’ அவள் குரலில் தெரிந்த துயர் அவனை நெகிழப் பண்ணியது.

அவள் அவசரமாகத் தனது கைப்பையைத் திறந்து அவனிடம் அவளின் கையிற் விசிட்டிங்கார்ட்டைத் திணித்தாள்.

ட்;ரெயின் நின்றது.

அவனின் இறங்கும் அவசரத்தைக் கண்டதும் அவள்; அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதையும் முரளி எதிர்பார்க்கவில்லை.

‘நாங்கள் கட்டாயம் சந்திக்கவேண்டும்…தயவு செய்து போன் பண்ணு’ அவள் குரலில் குழந்தைத்தனமான சந்தோசம்.

அவர்களின் இருபது வருடங்களுக்கு மேலான உறவைக் கடந்த இருவருடப் பிரிவு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று அவள் முத்தத்தின் மூலம் அப்பட்டமாகத் தெரிந்தது.

சமந்தா ட்ரெயினோடு போய்விட்டாள். அவன் இறங்கிய கையோடு அவள் சென்ற பாதாள ட்ரெயினைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.அவனைப் பலவருடங்களுக்கு முன் நகர்த்தி விட்டு அவள் போய்விட்டாள்.

அவர்களின் ஐந்தாவது வயதில் பாடசாலையில் ஒன்றாகச் சேர்ந்த அந்த நேரம் மிகவும் புனிதமான நேரம் என்று அவன் தனது இளமைக்காலத்தில் நினைத்தான். முரளி அவனின் குடும்பத்தில் மூத்த பையன். இரண்டு தம்பிகளும் அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கத் தாய் தகப்பனுடன் வந்திருந்தார்கள் கடைசித் தம்பி ரவிக்கு ஒரு வயது. முரளிக்கு அடுத்த தம்பி கேசவனுக்கு மூன்று வயது.

1993ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் முதற்கிழமையில் அவர்களின் தொடர்பு அப்படித்தான் ஆரம்பித்தது.

பாடசாலைக் கதவு திறக்க இருநிமிடங்களுக்கு முன் ஐந்து வயது சமந்தாவும் தாயும் அவசரமாக ஓடிவந்து சேர்ந்தார்கள். சமந்தா தாயின் ஓவர்கோர்ட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். தாயைப் பிரிந்து பாடசாலை வாழ்க்கையில் காலடி எடுத்து வைப்பது அவளுக்கு வேதனையாக இருந்திருக்கலாம்.

முரளியின் தாய் அழுதுகொண்டிருக்கும் சமந்தாவை பாசத்துடன் பார்த்தாள் அதைப் புரிந்து கொண்ட சமந்தாவின் தாய், முரளியின் தாயிடம், ‘ஹலோ..ஐ ஆம் செலினா சிம்ஸன் இது எனது மகள் சமந்தா..’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

‘ஹலோ நான் சரளா, இவர் என் கணவர் மாதவன், இது எனது மகன் முரளி மற்றவன் கேசவன்.தள்ளு வண்டியிலிருக்கும் குழந்தைக்கு ஒருவயதாகிறது பெயர் ரவி’ என்று தனது குடும்பத்தை அறிமுகம் செய்து கொண்டாள்.

‘மூன்றும் பையன்கள்’ மூவரையும் தனது பார்வையால் அளந்தபடி செலினா சொன்னாள். சரளா மெல்லமாகப் புன்னகை செய்துகொண்டாள். அவளுக்குப் பெண்குழந்தைகள் பிறக்காதபடியால் எங்கே என்றாலும் பெண் குழந்தைகளைக் கண்டால் பாசத்துடன் பார்ப்பாள்.

சமந்தாவின் தாய் சமந்தாவின் தந்தையுடன் வராமல் தனியாக வந்திருந்தாள். புதிதாகத் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் பெற்றோர் தம்பதி சமேதரராக வருவது வழக்கம் ஆனால் முப்பத்து மூன்று விகித திருமணங்கள் விவாகரத்தில் முடியும் இங்கிலாந்தில் சில குழந்தைகள் தாயுடன் அல்லது தகப்பனுடன் மட்டும் வருவது தவிர்க்கமுடியாது.

சரளா அதுபற்றி யோசித்தாலும் செலினாவிடம் சமந்தாவின் தகப்பனைப் பற்றி விசாரிக்கவில்லை. குழந்தைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்தபடியால் இன்று குழந்தைகள் பாடசாலைக் கதவு திறந்ததும் அவர்களது வகுப்ப ஆசிரியையால் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப் படுவார்கள்.

கதவு திறந்தது.

சமந்தா ஓவென்று அழத்மொடங்கி விட்டாள்.’சமந்தா டோன்ட் கிரை,இங்கேபார் முரளி எவ்வளவு சமர்த்தாக இருக்கிறான்’ செலினா முரளியைக் காட்டித் தன் மகளைத் தேற்றினாள்.

முரளி அழுது ஒப்பாரி வைக்காதது சரளாவுக்குப் பெருமையாயிருந்தது.

‘ ‘ஆமாம் சமந்தா, முரளி உன்னைப் பார்த்துக் கொள்வான்’ சரளா மகனிடம் சமந்தாவின் எதிர்காலத்தின் முக்கிய பகுதியை ஒப்படைப்பதை அப்பாது தெரிந்து கொள்ளவில்லை.

சமந்தா முரளியை ஏறிட்டுப்பார்த்தாள். பளிங்கால் செய்த பாவை மாதிரியான ஒரு அப்பழுக்கற்ற அழகுடன் தன்னையேறிட்டுப்பார்க்கும் சமந்தாவை அன்புடன் நோக்கினான் முரளி. அழுது வடிந்ததால் அவள் முகம் சிவந்து போயிருந்தது.

அவள் மிகவும் ஸ்மார்ட்டாக நிற்கும் முரளியை ஏறிட்டுப் பார்த்தாள். ‘தயவு செய்து எனது ப்ரண்டாக இரு’ என்ற வேண்டுகொளைத் தாங்கிய குழந்தை முகத்தைக் கண்டதும் அவளில் பரிவு வந்தது..

கள்ளங்கடமற்ற ஐந்து வயது ஆண்மை தன் கையை சமந்தாவிடம் நீட்டியது. தம்பிகள் அழும்போது கொடுக்கும் அன்புக்கரமது.

அவள் கேவிக் கேவியழுதபடி அவன் கைகைளைப் பிடித்துக்கொண்டாள்.அவள் பார்வை அவன் முகத்தில் இறுகிப்போய் நின்றது

.’ஐ வில் டுக் ஆவ்டர் யு சமந்தா’ ஐந்து வயது ஆண்மை தர்ம சத்தியம் செய்து கொண்டது.அது அவனின் தாய் சொல்லிக் கொடுத்த மந்திரம் ‘முரளி, நீ மூத்த பிள்ளை, தம்பிகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேணும்’ சரளாவின் தாரக மந்திரம். தனது மகனுக்கு அடிக்கடி சொல்லும் புத்திமதி.

இன்று சின்ன முரளியின் தம்பிகளுடன் ஆங்கில அந்நியப் பெண் சமந்தாவையும் அவன் இணைத்துக்கொண்டான்.

‘தாங்க் யு முரலி’ ஐந்து வயதுப் பெண்மை அந்த சத்தியத்தை மனதில் ஏற்றுக்கொண்டது.

இணைந்த கைகளைக் கோர்த்துக்கொண்டு வரும் இவர்களைக்கண்ட வகுப்பு ஆசிரியை,’ நல்லது, ஆரம்பத்திலேயே சினேகிதங்களை உருவாக்குவது மிக மிக நல்லது’ என்று பெரிய முன்முறுவலுடன் சொன்னாள்.வகுப்பு ஆசிரியை மிஸஸ் ஹரிங்டன் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி. பாசமும் அன்பும் அவள் குரலில் இணைந்தொலித்தன.

அவர்கள் வகுப்புக்குள் சென்றதும், பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்குத் திரும்பத் தொடங்கினார்கள்.

‘ உங்களுக்கு நேரமிருந்தால் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட்டு விட்டுப் போகலாம்..எங்கள் வீடு பக்கத்திற்தானிருக்கிறது’ சரளா தமிழர்களுக்குள்ள தாராள மனப்பான்மையுடன் சொன்னதை செலினா மிகச் சந்தோசத்துடன் ஏற்றுக் கொண்டாள்.

அந்த நேரம் என்ன நேரமோ. அதன் பின் எத்தனையோ மாற்றங்கள்.

செலினாவின் குடும்பம் பாடசாலையிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கின்றது. செலினாவின் கணவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் உயர்நிலையிலிருக்கும் ஒரு பிரித்தானிய ஆபிசர் என்பதும், அவர் ஐரோப்பாவிலிருந்து வாரவிடுமுறைகளில் மட்டும் வீட்டுக்கு வருபவர் என்றும் செலினா சொன்னாள். செலினா வேலைக்கு வெளியில் செல்வது கிடையாது. விளம்பரக் கம்பனிகளுக்குத் தேவையான விளம்பரங்களை எழுதிக்கொடுத்து வீட்டிலிருந்தபடியே உழைக்கிறாளாம்!

சரளா இலங்கையில் பட்டப்படிப்பு படித்தாலும் மூன்று குழந்தைகளுக்காக முழுநேர’அம்மாவாக’ வீட்டோடு இருக்கிறாள். மாதவன் ஒரு ஏஞ்சினியர். சரளாவின் உழைப்பு தேவையற்ற வசதியான வாழ்க்கை.

இவர்கள் எல்லாம் லண்டனையண்டிய ஹட்பீல்ட் ஒரு சிறு நகரில் வாழ்கிறார்கள். பிரித்தானிய மத்தியதரத்தினர் வாழும் பிரதேசம். அமைதியான சூழ்நிலையும் அழகான இயற்கையமைப்பையும் கொண்ட இடமானபடியால் வாழ்க்கை பிரச்சினையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

மத்தியதரப் பெண்களின் வாழ்க்கையில் ‘காலைக் காப்பி சந்திப்பு’, பின்னேரம் குழந்தைகளுடன் ‘பிக்னிக்’;, சிலவேளைகளில் அவரவர் வீட்டுத் தோட்டத்தில் ‘ஒரு சின்னப் பார்ட்டி’,குழந்தைகளுடன் ‘ஸ்விமிங்’ போவது அத்துடன் ஒரு சிலர் சேர்ந்து ஷாப்பிங் செய்வது, என்பன சாதாரணமாக நடக்கும் விடயங்கள.;

செலினாவும் சரளாவும் அன்னியோன்னியமாகப் பழகத் தொடங்கினார்கள். சரளாவுக்குச் செலினாவை மிகவும் பிடித்துக் கொண்டதற்கான காரணங்கள், செலினா, மரக்கறிச் சைவம், யோகாசனப் பயிற்சியில் ஈடுபாடுள்ளவள். இந்தியக் கலாச்சாரத்தில் உள்ள நல்ல அம்சங்களை மதிப்பவள்.

அவர்களின் குழந்தைகள் ஒன்றாக வளர்ந்தார்கள். வீட்டில் தனிக்குழந்தையான சமந்தாவுக்குப் பாடசாலையில் சில சினேகிதிகள் இருந்தாலும் நேரம் கிடைத்தால் முரளி வீட்டுக்கு ஓடிவந்து விடுவாள். பெற்றோர்களுக்கு ஒரேயொரு குழந்தையாகப் பிறந்து வாழும் சமந்தாவுக்கு முரளியுடனும் மற்றத் தம்பிகளுடனும் சேர்ந்து விளையாடுவது பிடித்திருந்தது. குழந்தை ரவியைத் தூக்கிவைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். பையன்களுடன் சேர்ந்து பக்கத்து மரங்களில் ஏறி விளையாடுவார்கள். ஓரு கொஞ்ச தூரத்திலிருந்த சின்ன ஓடையில் பாலம் கட்டி மகிழ்வார்கள்.

முரளியுடன் சேர்ந்து குழந்தைகளின் டி..வி. புhர்ப்பதிலிருந்த தோட்டத்தில் சரளாவின் மூன்று பையன்களுடனும் சேர்ந்து கூத்தடிப்பது எல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது. பாடசாலையில் சின்னக் குழந்தைகள் முரளியையும் சமந்தாவையும் கேர்ள் பிரண்ட் -போய் பிரண்ட் என்று கிண்டலடிப்பது அடிக்கடி நடந்தது. சமந்தாவுக்கு அது பிடிக்காது. அப்படிச் சொல்பவர்களைச் சிலவேளை தனது நகத்தால் காயப்படுத்தி விட்டாள். அதனால் பாடசாலை அவளுக்குக் கடினமான எச்சரிக்கை கொடுத்திருந்தது.

‘நீ என்னுடைய ஸ்பெசியல் சினேகிதன் அவர்கள் என்ன சதாரணமாக போய் ப்ரண்ட கேர்ள் பிரண்ட் சொல்வதாம்?’ அவள் அப்படிக் கேள்வி கேட்டபோது அவளுக்குப் பத்து வயது.

பதினொருவயதில் குழந்தைகளின் இரண்டாம் கட்டப்படிப்பு தொடங்குகிறத். சமந்தாவின் தகப்பன் அவளைப் பணக்காரர்கள் அனுப்பும் பிரசித்த பெற்ற பாடசாலையொன்றுக்கு அனுப்பும் யோசனையை முன்வைத்தபோது செலினா அதை விரும்பவில்லை. கணவனுடன் ஒரேயடியாகச் சேர்ந்து வாழாமல் வாரவிடுமுறைகளில் மட்டும் குடும்பவாழ்க்கை நடத்தும் செலினா மகளையும் ‘போர்டிங்’ பாடசாலைக்கு அனுப்பு விரும்பவில்லை.

‘எங்கள் குழந்தை, பெரும்பாலான குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கவேண்டும்…அவர்கள் தங்களை ஒரு வித்தியாசமானவர்களாக நினைக்கக் கூடாது..அது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல”செலினாவின் வாதம் இது.

மிஸ்டர் ஸிம்ஸன் மனைவியுடன் பெரிய தர்க்கம் செய்தும் அவள் சமந்தாவைப் பிரைவேட் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவதை விரும்பவில்லை. கடைசியாக அவளைப் பெண்கள் பாடசாலைக்கு அனுப்பச் சம்மதித்தாள். முரளியுடனான மிக நெருங்கிய உறவு அவர்களின் பதினொரு வயதில் கொஞ்சம் பிரிவு கண்டது.

வயது வளர்ந்தது. வாழ்க்கை பரந்தது. வசந்தகால விடுமுறையில் வரும் ஆறுகிழமை விடுமுறையில் மூன்று கிழமைகளைச் சமந்தாவின் குடும்பம், உலகின் பலநாடுகளுக்கும் தன் குடும்பத்துடன் சென்று விடுதலை கொண்டாடுவார்கள்;. அவர்கள் முரளியின் குடும்பத்தைவிட எத்தனையோ வசதியானவர்கள், ஐரோப்பிய, மத்தியதரைக்கடல் நாடுகள், அமெரிக்கா,அவுஸ்திரேலியா என்று பல இடங்களுக்கும் சென்று வந்தார்கள் முரளியின் குடும்பம் பாரிசிலிருக்கும் சொந்தக்காரர்களைப் போய்ப் பார்ப்பார்கள்.அல்லது சிலவருடங்களுக்கொருதரம் இலங்கை இந்தியா என்று போய்வருவார்கள்.

வசந்தகால விடுமுறை போய்வந்ததும் முரளியும் சமந்தாவும் நீண்ட நேரம் தாங்கள் கண்ட அனுபவங்களைச் சொல்லி மகிழ்வார்கள். வாழ்க்கை ஏதோ பல காரணங்களால் இணைக்கப் பட்டிருந்தது. அதற்குக் காரணம் அவள் ஒரு தனிப்பிள்ளை என்பது மட்டுமல்ல.அவள் தாய்; செலினா அவளின் கணவரை விட வித்தியாசமானவள். அவளின் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் இந்தியா, தென்னாபிரிக்கா,தென்னமெரிக்கா என்று பல இடங்களுக்குச் சென்று பன்முக மக்களின் வாழ்க்கை நிலையை உணர்ந்தவள்.

செலினா இளம் வயதிலிருந்து உலக விடயங்களில் அக்கறையுள்ளவள்.அவளின் தாய் அறுபதாம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த அமெரிக்கரின் வியட்நாம் யுத்தத்திற்கெதிராகக் கலகம் செய்த லண்டன் பல்கலைக்கழக மாணவிகளில் ஒருத்தி என்று செலினா பெருமையுடன் சொன்னாள் தனது மகளையும் ஒரு பரந்த கண்ணோட்டமுள்ள மகளாக வளர்க்க ஆசைப்படுகிறாள் என்று சரளாவுக்குத் தெரியும். செலினா சரளாவுடன் பேசும்போது, இந்திய கலாச்சாரம் பற்றிக் கேட்பாள். சாதி முறை, பெண்ணடிமைத்தனம் என்பதுபோன்ற பல கேள்விகள் பேசப்படும்.

அவர்கள் தங்கள்; மகன்களை வளர்க்கும் விதம் செலினாவுக்குப் பிடித்துக்கொண்டது.மாதவன் ஒரு நாஸ்திகன் சரளா, கடவுள் வணக்கம் செய்யாமல் எதையும் தொடங்காதவள். ஆனால் இருவரும் தங்கள் நம்பிக்கைகளைத் தங்கள் குழந்தைகளிடம் திணிக்கவில்லை.

‘அவர்களுக்கு முக்கியமாகச் சொல்லிக் கொடுக்கவேண்டியது.அன்புதான் கடவுள் என்பதுதான். அத்துடன் மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது மிக முக்கியம். சுயநலத்துக்காக மற்றர்களுடன் பழகாமலிருப்புது மிகச் சிறந்த பண்பாடு. வாழ்க்கையின் தத்துவத்தைப் பணத்தின் அடிப்படையில் அமைக்காமலிருப்பது என்பனவை ஒரு நல்ல மனிதனின் நடைமுறைப் பழக்கவழக்கமாக இருந்தால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்’; இந்திய கலாச்சாரம் பற்றிக் கேள்வி கேட்ட செலினாவுக்கு மாதவன் மறுமொழி சொன்னார்.

முரளி தாய்தகப்பன் சொற்படி சமந்தாவை அன்புடன் நடத்தினான். வயதும் அதைத் தொடர்ந்து உருவங்களும் பருவ உணர்ச்சிகளும் மாறத் தொடங்கின.

வாரவிடுமுறையில் அவள் ஓடிவந்து இறுக்கிக் கட்டிப் பிடிக்கும்போது முரளி படும் தர்மசங்கடத்தை அவள் புரிந்துகொள்ளவில்லை என்பது அவனுக்குப் பிரச்சினையாகவிருந்து. வயதின் மாற்றங்களும், சுரப்பிகளின் ஆளுமையும் இளமையைச் சித்திரவதை செய்வதை அவள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அவன் ஆண்-பெண் ஒன்றாகப்படிக்கும் பாடசாலையில் படிக்கிறான். அவள் பெண்களுக்குமட்டுமான பாடசாலையில் படிக்கிறாள். அவனுடன் படிக்கும் பெண்கள் ஒருத்தரும் சமந்தா மாதிரி ஆண்களுடன் நெருங்கிப்பழகுவார்களா? அது அவனுக்குத் தெரியாது. அவர்களுக்கு அவர்களின் தாய் தகப்பன் ஆண்களுடன் கவனமாகப் பழகவேணடுடம் எனறு சொல்லியிருப்பார்களா?

அவளுக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது,அவளின் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. வாரவிடுமுறையில் வந்தபோது மிகவும் அமைதியாக இருந்தாள். முரளியைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சித் தள்ளவில்லை.அவள் முகத்தில் ஒரு கலக்கம். பார்வையில் ஒரு கேள்வி.

‘இப்போதாவது உலகத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டாள்’ என்று அவன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான்.

‘முரளி..பெரும்பாலான ஆண்கள் பொல்லாதவர்களா?’ அவள் ஒருநாள் சட்டென்று அவனைக் கேட்டாள். அவள் குரலில் இருந்த கலக்கம் அவனைத் திடுக்கிட வைத்தது.

‘அட கடவுளே என்ன நடந்தது?’

யாரும் அப்பாவி சமந்தாவிடம் அத்துமீறி நடந்து விட்டார்களா?

அவன் பதறி விட்டான்.

‘என்ன சமந்தா என்ன நடந்தது?’

அவள் கேவிக் கேவியழத் தொடங்கி விட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளை முதல் நாள் அவன் கண்டபோது அவள் அப்படித்தான் அழுதாள்.

அவன் அணைத்துக்கொண்டான். அந்தப் பாதுகாப்பான அணைப்பு இன்னும் அவளைக் குலுங்கியழப் பண்ணியது.

அவளிடமிருந்து விடயத்தை வெளிக் கொண்டு வர பிரமப் பிரயத்தனம் செய்யவேண்டிக் கிடந்தது.

அவளுடன் படிக்கும் ஒரு பதினைந்து வயதுப்பெண்ணை அவளுடன் சினேகிதமாக் பழகியவன் கெடுத்து விட்டானாம். அவள் கர்ப்பமாகி விட்டாளாம்.

அந்த அவமானம் தாங்காமல் பாடசாலைக்கு வரவில்லையாம். பாடசாலை ஆசிரியைகள்,ஆண்களுடன் பழகும்போது பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னார்களாம்.நெருங்கிப் பழகவேண்டாம் என்ற சொன்னார்களாம்!

தொட்டுப் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது என்ற சொன்னார்களாம்.

‘நீ மிகவும் நல்லவன் முரளி’ அவள் ஐந்து வயதுப் பெண்மாதிரியழுதாள்.

செலினா வந்தாள். அவள் சரளாவுக்குப் பாடசாலையில் நடந்த விடயத்தைச்சொன்னாள்.

‘சமந்தா..பெண்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்…ஆண்களையுணர்ந்து நடந்து கொள்ளவேண்டு;ம்…பெரும்பாலான ஆண்கள் காமவெறிபிடித்தவர்கள் அதிலும் அப்பாவித்தனமான பெண்ணாகத் தெரிந்தால் அவர்கள் அதைத் தங்களுக்குத் தேவையான விதத்தில் பாவித்து விடுவார்கள்’ சரளா சமந்தாவை அணைத்தபடி புத்தி சொன்னாள்.

‘முரளி நீ என்னுடைய ஸ்பெசியல் ப்ரண்ட்தானே’? பதினைந்து வயதில் அவள் திரும்பவும் அவனிடம் கேள்வி கேட்டாள்.

‘சமந்தா உனது மனம் புண்படும்படி ஒருநாளும் நடந்துகொள்ளமாட்டேன்’ அவன் இன்னொருதரம் தனது சத்தியவார்த்தையை அவளுக்குக் கொடுத்தான்.

காலம் பறந்தது. சமந்தாவின் போக்கில் எத்தனையோ மாற்றம். அதற்கு முக்கிய காரணம்,அவள் வாழ்க்கையில் பேரிடியாக அவளின் தாயும் தகப்பனும் பிரிந்து விட்டார்கள்.அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைமை ஆபிசில் பெல்ஜிய நாட்டில்; வேலை செய்பவர். வாரவிடுமறைகளில் மட்டும் லண்டன் வருபவர். பல்லாண்டுகளாகத் தன்னுடன் வேலைசெய்யும் பிரன்ஞ்சுப் பெண்ணுடன் தனக்குள்ள தொடர்பைத் தன் மனைவி செலினாவுக்குச் சொல்லி விவாகரத்துக் கேட்டார்.

செலினா ஒன்றும் பெரிதாக அழவில்லை. அவளுக்கு இப்போது நாற்பத்தியிரண்டுவயது. நீண்ட காலமாக ஒரு ‘பார்ட்ரைம்’ தம்பதிகளாக வாழ்வது ஆண்களால் முடியாத காரியம் என்பதையுணர்ந்து கொண்டவள். அத்துடன் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை ஏனோ தானோ என்று சுவையற்றபோது தனது கணவனைப் பற்றிச் சந்தேகித்தாள். ஆனால் நேரடியாகக் கேட்கவில்லை. அவன் பொய் சொன்னால் அதை அவளாற் தாங்கமுடியாது என்று தெரியும். கடைசியாக் அவன் உண்மையைச் சொன்னபோது அவள் ஒன்றும் ஆரவாரம் செய்து கொள்ளவில்லை.

அவள்,அழகான, அறிவான, நன்றாக உழைக்கும் பெண்மணி. லண்டனுக்குத் திரும்பிப்போய்த் தனது மேற்படிப்பைத் தொடரயோசிப்பதாகச் சரளாவுக்குச் சொன்னாள்.

அவளுக்காகச் சரளா அழுது தீர்த்தாள்.

‘சரளா, நாங்கள் கடந்த பல வருடங்களாக ஒரு பார்ட் டைம் கணவன் மனைவியாகத்தானிருக்கிறோம். அவருக்குப் பெல்ஜியத்தில் வேலை கிடைத்ததும் சமந்தாவைப் இங்கிலாந்தில் ஒரு பிரைவேட் பள்ளிக் கூடத்தில் சோர்த்துவிட்டுத் தன்னுடன் வரச் சொன்னார் நான் மறுத்துவிட்டேன். அவர் போய்விட்டார். மிகவும் நெருக்கமான லண்டனில் வாழ எனக்கு விருப்பமில்லை.நான் லண்டனுக்கு வெளியில் வீடு வாங்கிக்கொண்டு உங்கள் பக்கம் வந்து விட்டேன். அவர் இன்னொருத்தியுடன் தொடர்பாக இருப்பதைப் பற்றி நான் ஆச்சரியப்படவில்லை. ஆண்களுக்குச் செக்ஸ் இல்லாமல் வாழமுடியாது. வாரவிடுமறையில் கிடைக்கும் குடும்ப வாழக்கைக்காக மற்ற நாட்களில் ஆண்கள் செக்ஸ் இல்லாமல் விரதமிருப்பார்கள் என்ற நினைப்பது முட்டாள்த்தனம்’

அவளின் விளக்கம் சரளாவுக்கு ஆச்சரியமாகவிருந்தது. கணவர் இன்னொருத்தியுடன் போய்விட்டார்.அதுபற்றித் திட்டாமல் யதார்த்தம் பற்றிப் பேசும் செலினாவை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சரளா, தன் குடும்பத்துடனிருந்து சாப்பிடும்போது அவள் இதுபற்றிப் பேசும்போது,’ பெரும்பாலான ஆங்கிலேயர்கள் மிகவும் நேர்மையானவர்கள்.போலியாக வாழ விரும்பாதவர்கள். அரச குடும்பத்தைப்பார். இளவரசி டையானா, கமிலா என்றொரு பெண்ணை நீண்ட காலமாக வைப்பாட்டியாக வைத்திருக்கும் இளவரசர் சார்ள்சைப்; பிரிந்து போகவில்லையா? ஏனோ தானோ என்ற போலித்தனமான வாழ்க்கை குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும். எங்கள் நாடுகளில் பொருளாதார வசதியிருந்தால் கணவரின் தொல்லை தாங்காமல் பல பெண்கள் பிரிந்து போவார்கள்’ என்றார்.

‘இதிலென்ன நேர்மையிருக்கிறது..பாவம் சமந்தா. என்னவென்று தாங்கப்போகிறாள்?’ சரளா சமந்தாவுக்காகத் துக்கப் பட்டாள்.

முரளி தகப்பனின் விளக்கத்தை உள்வாங்கினான். ‘நேர்மையற்ற குடும்ப உறவு குழந்தைகளைப் பாதிக்கும்’; என்ற தகப்பனின் வார்த்தைகள் அவன் மனதில் நிலைத்து விட்டன.

சமந்தாவுக்குத் தாய்தகப்பனின் பிரிவு பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கவேண்டும். மிகவும் கலங்கி விட்டாள். முரளியைப் பார்க்கவந்தாள்.

‘ஆண்கள் சுயநலவாதிகளா?’ என்றொரு பெரிய கேளிவியைக் கேட்டாள்.

‘பெரும்பாலான மனிதர்களே சுயநலவாதிகள் என்று அப்பா அடிக்கடி சொல்வார்’ பதினாறு வயதுப் பையன் தன்னை விட இரண்டுமாதம் வயது குறைந்த தனது சினேகிதிக்கு விளக்கம் சொன்னான்.

‘அம்மாவும் இன்னொருத்தரைத் திருமணம் செய்வாளா?’ சமந்தாவின் அடுத்த கேள்வி. ‘ எனக்குத் தெரியாது சமந்தா..வளர்ந்தவர்களின் உலகத்தைப் பெரிதாக எங்களுக்குப் புரியாது’ அவன் தனக்குத் தெரிந்த மறுமொழியைச் சொன்னான்.

அவள் பெருமூச்சு விட்டாள்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பதினாறுவயதுப் பெண்மை, தனக்கு முன்னால் நிற்கும் இளமீசை அரும்பும் முரளியை நோட்டம் விட்டது.அவள் அவளை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தாள்.

‘ முரளி நீ என்னுடைய ஸ்பெசியல் சினேகிதன்தானே?’

‘சமந்தா நீ என்னோடு உறவாக இருக்கும்வரை உன்னைத் துக்கப் படுத்த மாட்டேன்;’ அவன் அவனது தகப்பன் மாதிரி நேர்மையான மறுமொழி சொன்னான்.

‘உன்னை முத்தமிட எரிச்சலாகவிருக்கிறது’ ஒருநாள் அவள் சட்டென்று குறும்புத் தனமாகச் சிரிpத்தாள் அவன் அவள் என்ன பேசுகிறாள் எனபதுபோல் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

‘உனது மீசை எனது மூக்கில் உரஞ்சுகிறது’

அவள் குழந்தை மாதிரிச் சிரித்தாள். ‘மீசையில்லதா சினேகிதனைப் பார்க்கும் உத்தேசமா?’ அவன் வேடிக்கையாகக் கேட்டான் அவள் அவனை விளையாட்டுத்தனமாக அடித்தாள்.

தகப்பன் அவளை அடிக்கடி ஐரோப்பாவுக்கு அழைத்தார். அவர் இப்போது பாரிசில் வாழ்கிறார்.அவளின் சனேகிதி சினேகிதர்களையும் அழைத்துக் கொண்டுவரலாம் என்று சொன்னதாகச் சொன்னாள். அவள் ஒருநாளும் முரளியை அழைத்துச் செல்லவில்லை.

காலம் சிறகு கட்டிக்கொண்டமாதிரிப் பறந்தது.

சிட்டுக் குருவிமாதிர்யிருந்தவள் இப்போது மிகவும் சீரியஸான பெண்ணாக மாறிவிட்டாள்.

பெண்ணியம் பற்றி நிறைய வாசிக்கத் தொடங்கினாள்.

‘என்ன சட்டென்று இந்தப் போக்கு? முரளி வேடிக்கையாக் கேட்டான்.

‘உலகத்திலிருக்கும் தொண்ணுற்றி ஒன்பது விகிதமான புத்தகங்கள் ஆண்களால் எழுதப்பட்டவை…பெண்கள் கண்ட உலகத்தையும் நான் படிக்கவிரும்புவது உனக்கு ஏன் வேடிக்கையாக இருக்கிறது?’ அவள் கோபத்துடன் கேட்டாள். பெண்களின் கண்ணோட்டத்தில் ஆண்களின் உலகை ஆராயமுற்படும் அவள் போக்கு அவனுக்குப் புரிந்தது.

முரளியும் சமந்தாவும் இருவேறு யுனிவர்சிட்டிக்குப் போனார்கள். சுமந்தா ஸ்காட்லாந்துக்குப் போனாள்.அவளது தாய்,செலினா பழையபடி லண்டனுக்குப் போய்விட்டாள்.முரளி லண்டனிற் படிப்பதால்,தாயைப் பார்க்கவரும் நேரங்களில்,சமந்தாவுக்கு நேரம் கிடைக்கும்போது முரளியிடம் ஓடிவருவாள்.

‘யுனிவர்சிட்டியில் உனக்குக் கேர்ள் பிரண்ட் இருக்கிறாளா?’ சமந்தா ஒருநாள் அவனைக் கேட்டாள்..

‘உனக்கு போய்பிரண்ட இருக்கிறானா? அவன் திருப்பிக் கேட்டான்;.

இருவரும் முறைத்தப் பார்த்துக் கொண்டார்கள்.

அவள் கண்களில் நீர் துளித்தது.

அவர்களுக்குள் அவர்கள் எவ்வளவு தூரம் இனைந்திருக்கிறார்கள் எனபதன் அர்த்தம் இருவருக்கும் தெரியும்..

ஆனால் அதை நேரடியாகச் சொல்லும் முதிர்ச்சி அவர்களிடமில்லை.அப்போது அவர்களுக்கு இருபது வயது. யுனிவாசிட்டியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் இல்லை. லண்டன் சர்வகலாசாலைகள் என்பன பன்முகமான இளம் தலைமுறையை உலகத்தின் பலபாகங்களிலுமிருந்து ஒன்றாக இணைக்கும் ஒரு மேடை. உலகத்திலேயே மிகவும் பணக்காரர்கள், எப்படியும் லண்டனிற் படித்து ஒரு பட்டம் எடுக்கவேண்டும் என்ற கஷ்டப்பட்டு வரும் ஏழை மாணவர்கள் என்று பலரை முரளி போனற மாணவர்கள் சந்திக்கும் ஒரு சிறப்பான இடம்.

முரளி அங்கு படிக்கிறான் பல தரப்பட்ட பெண்களைக் காண்கிறான். சமந்தாவின் பிரிவின் துயரைத் தனக்குள் மறைத்துக் கொள்கிறான்..

‘யுனி முடிய அப்பா என்னைச் சிலவருடங்கள் வேலை செய்யச் சொல்கிறார்.அந்தக் கட்டளையை நிறைவேற்றி விட்டு அதற்கப்புறம் ஒருவருடம் இந்தியாவுக்குப் போகப்போகிறேன்’ அவள் அவனை நேரிற்; பார்க்காமல் ஒருநாள் சொன்னாள்.

‘ஏன் யோகாசனம் படிக்கப் போகிறாயா?’அவன் கிண்டலாகக் கேட்டான்.

அவள் மறுமொழி சொல்லவில்லை.

என்ன தேடுகிறாள்?

முரளி அதுபற்றி அம்மாவிடம் சொன்னான்.

‘மகனே…எனது தகப்பன் அடிக்கடி இந்தியா சென்றவர்..வாழ்க்கையின் தத்துவங்களில்; ஒரு துளியையவது புரிந்துகொள்ளவேண்டும என்றால் ஒருதரம் இந்தியாவைச் சுற்றிப்பார்க்கவேண்டும் எனறு சொல்வார். சமந்தா தனியாகப்பிறந்து வளர்ந்த வசதியான பெண். வசதியானவானவர்கள் படிக்கும் பெண்கள் பள்ளியில் படித்தவள். இப்போது யுனிவர்சிட்டியில் உலகத்தின் நாலாபக்கத்திலுமிருந்து வரும் பல தரப்பட்ட மாணவர்களுடனும் படிக்கிறாள். அவளின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதானே’ சரளா மகன் ஏன் சமந்தாபற்றி யோசிக்கிறான் என்பது தெரிந்தபடியால் தனது விளக்கத்தைச் சொன்னாள்.

சமந்தா அவள் சொன்னபடி தனது படிப்பு முடிய,தகப்பனுடன் ஐரோப்பாவிற் சிலவருடங்கள்; வேலை செய்தாள்.ஒன்றிரண்டு வருடங்கள் பறந்தன. இருவரும் தங்கள் வாழ்க்கைiயில் இருதிசைகளில் போய்க்கொண்டிருந்தார்கள்.லண்டன் வரும்போது வழக்கம்போல் அவனிடம் ஓடிவருவாள்.

புதிய சூழ்நிலை, ஐரோப்பியவாழ்க்கை அவளை எந்த விதத்திலும் மாற்றவில்லை.

அதன்பின் அவள் சொல்லிக்கொண்டிருந்ததுபோல் சமந்தா இந்தியா போய்விட்டாள்.வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்துகொள்ள அவள் எடுத்து தலயாத்திரையா அது? அவன் அவளிடம் அவளின் இந்திய பிரயாணத்தின் காரணத்தைக் கேட்கவில்லை.

அவளிடமிருந்து வரும் இந்தியா பற்றி ஒவ்வொருநாளும் இமெயிலும் படங்களும் அவனைத் திணறப் பண்ணியது.

அவன் தனது இரண்டாவது பட்டத்திற்கான மேற்படிப்புபடிப்பு முடிய லண்டனில் அவனுடன் வேலைசெய்யும் சித்தாhத் என்ற இந்திய வாலிபனுடனும், ஜேம்ஸ் மாஸ்டன் என்ற ஆங்கில வாலிபனுடனும் ஒரு பிளாட்டில் வாழ்கிறான். சித்தார்த் மேற்படிப்புக்காக லண்டன் வந்த ஒரு இந்திய (பணக்கார)வாலிபன். அவனுடன் படித்த அவனது சினேகிதனான ஜேம்ஸ் மார்ஸ்டன் ஒரு கலகலப்பான பேர்வளி.அவர்களுக்கு சமந்தாவின் இமெயில்கள் பல தர்க்கங்களையுண்டாக்கும் கருப்பொருளாள அமைவதுண்டு.

சமந்தாவின் இமெயில்களிகளில் அவள் இந்தியாவைப் பற்றி எழுதும் விடயங்கள் சித்தார்த்துக்கு வியப்பாக இருக்கும்.

‘நேற்று கன்னியா குமாரி போயிருந்தோம். காலைச் சூரியனின் வரவு அற்புதமாக இருந்தது.

அந்த. சூரிய உதயம்,இந்தியத்தாயின் கால்களில் அக்கினி பகவான் அஞ்சலி செய்து விட்டு உலகத்தைப் பவனி செய்ய வெளிவருவது போலிருந்தது’ என்று அவள் எழுதியதும், அவள் அனுப்பிய சூரிய உதயப் படங்களும் சித்தார்தை வியக்கப் பண்ணியது.

‘என்னவென்று ஒரு ஆங்கிலப் பெண் இப்படிச் சிந்திக்கிறாள்?

சித்தார்த் குழப்பத்துடன் கேட்டான்.

ஆங்கிலேயர்கள் பலர் இந்திய வாழ்க்கையின் தத்துவார்த்தத்தைப்புரிய எடுக்கும் முயற்சிகளை சமந்தாவின் தொடர்பை வைத்துக்கோண்டு முரளியால் விளங்கப் படுத்திச் சொல்ல முடியவில்லை.

‘அவள் லண்டனுக்கு வந்ததும் அவளை அறிமுகம் செய்த வைக்கிறேன் அப்போது புரிந்து கொள்’ என்றான் முரளி.

‘ ஏழ்மை,செல்வம், புனிதம், அசிங்கம்,காதல்,கொடுரம் என்று எத்தனையோ பன்முகத் தோற்றத்தைக் காட்டும் உலகத்தைப் புரியவேண்டுமென்றால் இந்தியாவுக்கு ஒருதரம் வந்து போ,நீ என்னுடன் வந்திருந்தால் எவ்வளவோ சந்தோசப் பட்டிருப்பேன்’ அவள் பட்டென்று ஒருநாள் சொன்னாள். அன்று தாய்மஹால் அருகில் இருந்து பல கோணங்களிலும் எடுத்த படங்களையனுப்பிருந்தாள்.அவன் இருதயத்தை என்னவோ செய்தது.

அவள் இந்தியா போகமுதல் தன்னுடன் வரச் சொல்லிஅவனைக் கேட்டிருந்தால் போயிருப்பானா? அவனுக்கு மறுமொழி தெரியாது. அவள் உலகம் சுற்றும் வசதி படைத்தவள். அவளது தகப்பன் அவளின் சந்தோசமான வாழ்க்கைக்கு எவ்வளவும் செலவளிக்கத் தயாராக இருப்பவர்.

அவன் சமந்தாவின் வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருப்பதையுணர்ந்தான்..

முரளி தனது படிப்பு முடிய வேலையில் சேர்ந்ததும், அவனின் அம்மா அவனுக்குக் கெதியில்; திருமணம் அமையவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.

.’நீ சமந்தாவை விரும்புகிறாயா?’ என்று அம்மா கேட்கவில்லை. அவனுக்கு அப்படியான உணர்வு இருந்தால் அதன் வெளிப்பாடுகளை அவள் புரிந்து கொண்டிருப்பாளா?

. சரளா,சமந்தாவைத் தன் குழந்தைகளில் ஒன்றாகப் பார்ப்பது முரளிக்குத் தெரியும். அதற்கப்பால் அம்மா சமந்தாவையும் முரளியையும் பற்றி ஒன்றுமே யோசிக்கவில்லையா? அல்லது அம்மா, ஆங்கிலேயரின் வாழ்க்கைமுறைபற்றிப் பயப்படுகிறாளா? செலினாவின் விவாகரத்து சரளாவை மிகவும் துக்கப்படுத்தியிருந்தது.

அவன் அதுபற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவன் யாரையும் செய்து கொள்ளப் போவதில்லை என்று அவனுக்குத் தெரியும்.அது அவனது பெற்றோருக்கும் தெரியும்.

அவன் இப்போது தாய் தகப்பனைப் பிரிந்து வாழ்கிறான். ஒவ்வொருதரமும் சமந்தாவின் இ மெயில் பார்த்து முரளி சிரித்துக்கொள்ளும்போதும் ஜேம்ஸ் கிண்டலடிக்கிறார்கள்;

. ‘அவள் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறாள் போலகிடக்கு” என்று ஜேம்ஸ் ஓயாமற் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

;உனக்கு சமந்தாவைத் தெரியாது. பேசாமல் என் வேலையைப் பார்த்துக் கொள்’ முரளி எவ்வளவோ சொல்லியும் அவன் விட்டபாடாயில்லை.

செலினாவுக்கு நடந்த ஒரு விபத்து காரணமாக சமந்தா தனது ஒருவருட இந்திய யாத்திரையை இடையில் முறித்துக்கொண்டு லண்டன் வந்திருந்தாள்.

அவளை நேரிற் கண்ட ஜேம்ஸ் திடுக்கிட்டு விட்டான். முரளி,அவளைச் சித்தார்துக்கும் ஜேம்சுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.அவளுடன் சில நிமிடங்கள் பேசியதும், ‘ஓ மை காட் ஓ மை காட், ஷி இஸ் பியுட்டிபுல,வெரி பியுட்டிபுல்;’ என்று ஜேம்ஸ் மாஸ்டன் முனகிக்கொண்டான்.

முரளி வெறும் உம் கொட்டி வைத்தான்.

ஹாஸ்பிட்டலில் இருக்கும் செலினாவைப் பார்க்க சமந்தா லண்டனிற் தங்கவேண்டி வந்தது. அடிக்கடி முரளியைப் பார்க்க வந்தாள். ஜேம்ஸ் அந்த நேரம் வீட்டிலிருந்தால் அவனுடனும் பழகினாள்.

ஒருநாள், மூவரும் பாருக்குப் போயிருந்தபோது,’ நீ சமந்தாவைக் காதலிக்கிறாயா’ ஜேம்ஸ் கேட்டான்.

முரளி சமந்தாவைக் காதலிக்கிறானா?

‘அப்படி ஒன்றும் இல்லை’; என்று சட்டென்று மறுமொழி சொன்னான்.

‘நீண்ட நாளாகத் தெரியுமென்று சொன்னாய்” ஜேம்ஸ் தொடர்ந்தான். ‘

ஓரே பாடசாலையிற் படித்தோம் ஒரே இடத்தில் வளர்ந்தோம்.’அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அதன்பிறகு நடந்த மாற்றங்கள் முரளியால்ச் சரியாகக் கிரகிக்கமுடியாமல் மிகவேகமாக நடந்தவை.

முரளியைக்காணவந்த சமந்தா ஜேம்ஸ_டன் நீண்ட நேரங்களைச் செலவளிக்கத் தொடங்கினாள்.தனது தாயைப் பார்க்கப்போனபோது ஜேம்ஸையும் அழைத்தக்கொண்டு போனதாகச் சொன்னாள்.

செலினா அதுபற்றி சரளாவுக்குச் சொல்லியிருக்கவேண்டும். முரளி வீட்டுக்குப் போயிருந்தபோது அம்மா ஜேம்ஸ் பற்றி விசாரித்தாள்.’ சமந்தாவுக்க ஏற்ற பையனா?’ என்ற கேட்டாள்.

ஜேம்சுக்கும் சமந்தாவுக்குமிடையில் அந்த அளவு நெருக்கமா?

தனது மனதில் சட்டென்று தை;த முள்ளை எடுக்கும் வழியில்லாமல் ‘அதுபற்றி தனக்குத் தெரியாது’ என்று எடுத்தெறிந்து பேசினான்.

காலம் ஓடியது.

ஒருநாள் ஜேம்ஸ் முரளியிடம் சமந்தாவைப்பற்றிச் சொல்லச் சொன்னான்.

‘ என்ன சொல்லவேணும்?’

‘சமந்தாவுக்க செக்ஸ் பிடிக்காதா?’ஜேம்ஸ் தயங்கியபடி முரளியைக்கேட்டான்.

முரளிக்கு வந்த ஆத்திரத்தில் ஜேம்ஸைப் பிடித்துக் கண்டபாட்டுக்க உதைக்க வேணடும்போலிருந்தது.

‘இந்த மடையன் என்ன நினைக்கிறான்? நாங்கள் செக்ஸ் செமினார் வைத்துப் பேசுவதாக நினைக்கிறானா?’

‘என்னிடம் ஏன் இந்த அசிங்கமான கேள்வியைக் கேட்கிறாய்?’முரளி பாய்ந்து விழுந்தான்.

‘தயவு செய்து கோபிக்காதே. உன்னிடம் பழகுவதுபோல் நெருக்கமாக என்னிடம் பழகமாட்டேன் என்கிறாள்’ ஜேம்ஸ் அழுது விடுவான் போலிருந்தது.

‘என்ன உழறுகிறாய். அவளும் நானும் பலகாலம் பழகியவர்கள்.ஆனால் ஒன்றாகப் படுத்தும் கொள்ளுமளவுக்கு அத்துமீறிப் பழகவில்லை.; ..’

முரளி தன் ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு சொன்னான்.

அது நடந்து சில மாதங்களுக்குப்பின்;, முரளி வீட்டில் இல்லாத நேரம் அவன் வீட்டுக்கு சமந்தா வந்ததும், அந்த நேரம் ஜேம்ஸ் இன்னொரு பெண்ணுடன் தனது படுக்கை அறையிலிருந்தததைக் கண்டதும் அவளுக்கு வந்த ஆத்திரத்தில் பைத்தியக்காரி மாதிரி கத்தியதாகவும் சித்தார்த் சொன்னான்.

‘ஜேம்ஸின் அறையில் இன்னொரு பெண்ணா? அதைச் சமந்தா கண்டாளா?

தனது சினேகிதிக்கு நடந்த கொடுமையாலும், தகப்பன் தாயை விட்டுப் பிரிந்ததாலும், அவள் ஏற்கனவே ஆண்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை. இப்போது?

தனது நெருங்கிய’சினேகிதனை’ இன்னொருத்தியுடன் தனியறையிற் கண்ட ஆத்திரத்தில் ஜேம்சைத் திட்டிய சமந்தா,வேலையிடம் தேடிவந்து, அவள் ஜேம்ஸைத் திட்டுவதற்கு மேலாக முரளியைக் கண்டபாட்டுக்குத் திட்டினாள். ஜேம்ஸ் முரளியின் சினேகிதன் என்ற ஒரே ஒரு காரணம்தான் தன்னை ஜேம்ஸ_டன் பழகப் பண்ணியது என்று குற்றம் சாட்டினாள்;.

‘அவன் எப்படியானவன் என்பதை எனக்குச் சொல்லாமல் அவனுடன் நாள் பழகுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாயே நீ ஒரு நல்லவனா? அவள் அப்படிக் கேட்டது அவனாற் தாங்க முடியாதிருந்தது. அவள் வாய்க்கு வந்தபடி திட்டியதை அவனாற் தாங்க முடியவில்லை.அவள் பேசிய அசிங்கமான வார்த்தைகள் அவனைத் திகைக்கப் பண்ணின.

நம்பிக்கைத் துரோகம் செய்தவனைக் கண்டதால் வந்த அவள் கோபத்தை அவள் கொட்டியதை அவன் புரிந்தாலும் முரளி அவளுக்கு ஜேம்ஸ் பற்றிய உண்மைகளைச் சொல்லவில்லை என்ற அவள் குற்றம் சாட்டுவதை அவனாற் தாங்கமுடியவில்லை.

முரளிக்கு ஜேம்ஸ் சினேகிதன் என்பதை விட அவனை ஓரளவுக்குத் தெரிந்தவன் என்பதுதான் சரி. அதற்கப்பால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவனாற் பதில் சொல்ல முடியவில்லை.

‘ எனது துக்கங்களைத் தீர்க்க உன்னை ஒரு ஸ்பெசியல் ப்ரண்ட் என்று ஓடிவந்ததெல்லாம் உனக்கு ஞாபகமில்லையா? இது எவ்வளவு பாரதூரமான விடயம். உனது சினேகிதனைப் பற்றி எனக்குச் சொல்லாமல் விட்டது எங்கள் புனிதமான சினேகிததற்குச் செய்த பெரிய துரோகம்’ அவள் வாய்க்கு வந்தபடி திட்டினாள்.

அவனால் மேற் கொண்டு பேசப் பிடிக்கவில்லை. வீட்டில் என்ன நடந்தது என்ற தெரியாத தன்னைக்கண்டபாட்டுக்கு வையும் சமந்தாவிற் கோபம் வந்தது.

தன்னை இந்த நிலைக்குள் தள்ளி விட்ட ஜேம்ஸைப் பிடித்துக் கொலை செய்யவேண்டும் என்ற ஆத்திரத்தில் வீட்டுக்குப் போனபோது அவன் அறையைக்; காலி செய்து விட்டுப் போய்விட்டான் என்ற சித்தார்த் சொன்னான்.

ஒருகாலத்தில் ஜேம்சுடன் வேலைசெய்த அவனுடைய பழைய காதலி, ஒரு அமெரிக்கப் பெண் சொல்லாமற் கொள்ளாமல் லண்டனுக்கு வந்ததாகவும் அதன்பின் நடந்ததெல்லாம் அவனாலேயே நம்பமுடியாதவை என்று ஜேம்ஸ் அழுததாகச் சித்தார்த் சொன்னான்.

சமந்தா திட்டியபடி ஜேம்ஸ் ஒன்றும் சமந்தாவுக்குத் துரோகம் செய்யவில்லை என்றும், நீண்ட காலத்துக்குப்பின் கண்ட தனது பழைய ‘காதலியுடன்'(அவள் இப்போது திருமணமானவள்) அவன் அறையில் தனியாக இருந்து பேசிக்கொண்டிருந்ததற்கப்பால் வேறு ஒன்றம் நடக்கவில்லை என்றும், சமந்தா அளவுக்கு மீறிய ஆத்திரத்தில் ஜேம்சைத் திட்டிய அவமானத்தை அவனாற் பொறுத்துக்கொள்ளாமலும் இப்படியான சந்தேகப் பேர்வளியான சமந்தாவை இனிமேல் தான் பார்க்க விரும்பவில்லை என்று உடனடியாக ஜேம்ஸ் வெளியேறியதாக சித்தார்த் சொன்னான்.

‘அவள் முரளியுடன் எவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறாள்,நான் சந்தேகப்பட்டேனா,அவள் முரளி மட்டும் ஒரு புனிதமான பிறவி ,மற்ற ஆண்கள் எல்லாம் பெண் பொறுக்கிகள் என்று நினைக்கிறாள் போலிருக்கிறது’ என்று ஜேம்ஸ் மாஸ்டன்; சத்தம் போட்டதாக சித்தார்த் சொன்னான்.

முரளியை அவள் திட்டியபோது அதைத்தான் மனதில் வைத்திருருந்தாளா?

‘சமந்தா உனக்கு ஒரு டெஸ்ட் வைத்தாள் என்று நினைக்கிறாயா?’ சித்தார்த் தயங்கியபடி முரளியைக் கேட்டான்.

‘டெஸ்டா?’ முரளி ஆசசரியத்துடன் சித்தார்தைப் பார்த்தான்.’

‘சில பெண்கள் அவள் காதலிப்பவனுக்குத் தன் காதலைச் சொல்ல முடியாமல்,அவனின் சினேகிதனுடன் பழகுவதாகப் பாசாங்கு செய்வார்கள். அதன்மூலமாவது தனது காதலனின் உள்ளுணர்வை அசைக்கலாமா என்ற நப்பாசை அவர்களுக்கு..அதுதான,சமந்தாவும் உன்னிலுள்ள அன்பை உனக்கு நேரடியாகச் சொல்லாமல.;.’

முரளி சித்தார்ih ஏற இறங்கப் பார்த்தான்.’சித்தார்த், சமந்தா எந்த விடயத்தையும் நேரடியாகப் பேசுபவள்..’முரளியின் பேச்சை இடைமறித்தான் சித்தார்த்,

‘ முரளி, பெண்கள் மிகவும் சிக்கலான பேர்வளிகள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவே பல ஆண்கள் வாழ்க்கை முழுக்க மாரடிக்கிறார்கள்’ என்று சித்தார்த் சொன்னபோது,முரளி பதில் சொல்லவில்லை. சமந்தா தன்னைக் குற்றவாளியாக்கிய கோபம் அவனின் மனதில் சுவாலை விட்டெரிந்துகொண்டிருந்தது.

லண்டனிலிருந்தால் அவளை அடிக்கடிக் காண நேரலாம் என்ற தவிப்பில் மிகவிரைவில் லண்டனுக்கு வெளியில் வேலையெடுத்துக்கொண்டு போய்விட்டான்.

அது நடந்து இப்போது இரு வருடங்களாகி விட்டன.

.இப்போது பாதாள ட்ரெயினில் வைத்து முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறாள்!

இருவருடங்கள் அவளின் சுவாசத்தை, அணைப்பை, அடிக்கடி அவள் தரும் முத்தங்களை மறந்திருந்தவனுக்கு,(மறந்ததாக நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு) அவன் உணர்வுகளின் அக்கினிச் சுவாலையை எரியப் பண்ணிவிட்டுப் போய்விட்டாள்.

முரளிக்குத் திருமண நிச்சயார்த்தம் செய்யப் பட்டிருக்கிறது. அவனின் எதிர்கால மனைவி, ராதிகா முரளியின் குடும்பத்துக்கு நீண்டகாலமாகத் தெரிந்தவரின் பெண். பல போர்த்டேய் பார்ட்டிகளிலும் திருமண வைபவங்களிலும் பலவருடங்களாகப் பார்த்துப் பழகியவர்கள். நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்களாகின்றன. அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள். ராதிகா லண்டனிற் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பெண்.தனக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்களை இவனிடம் நேரடியாகச் சொல்கிறாள்.

ஓரு சினேகிதன் மாதிரி அவள் சொல்வதைக் கிரகிப்பான்.

முரளி தன்னைப்பற்றி ‘உண்மையாகவும் முழுமையாகவும்’ ராதிகாவிடம் சொல்லியிருக்கிறானா? இனியாவது சொல்வானா,?

அவர்களுக்கள்ள இந்த அளவு நெருக்கம் மட்டும் அவர்களின் எதிர்காலத்தைத் திடமாக அமைக்கப் போதுமா?

ஒருத்தியை மனமில் வைத்துக்கொண்டு இன்னொருத்தியுடன் உடலுறவு வைத்துப் பிள்ளைகுட்டிகள் பெற்றுக்கொள்வானா?

இதுவரை அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளாத- கேட்கப்பயந்த கேள்விகள் அவை.

இருவருட இடைவெளிக்குப் பின்னும் சமந்தாவின் முத்தம் அவனின் உணர்வுகளின் அடிமட்டத்தை அதிர வைத்ததை அவன் ராதிகாவிடம் ஒப்புக் கொள்வானா?

சமந்தாவின் நீண்டகாலத் தொடர்பின் ஆளுமையை அவன் என்னவென்று அவன் தனக்குள் புதைத்து வைத்திருந்தான்?

பல கேள்விகள் அவன் மனதைக் குடைந்தன.

இன்று அவன்i வைத்தியசாலையிலிருக்கும் உறவினர் ராதிகாவின் மிக நெருங்கிய சொந்தக்காரர் என்பதால் அவரைக் கட்டாயம் போய்ப் பார்க்கச் சொல்லி அம்மா வற்புறுத்தியபடியால் அவன் வந்திருக்கிறான். அந்த விசிட் முடிய இந்த வாரவிடுமுறையைச் அவன் சித்தார்த்துடன் சேர்ந்து திட்டம் போட்டிருக்கிறான்.

ராதிகாவின்; உறவினருடனான விசிட் ஒருமணித்தியாலத்துக்கு மேலெடுக்கவில்லை.அவருடன் என்ன பேசினான் என்பதும் அவனுக்கு ஞாபகமில்லை. அவர் தனது உறவுப் பெண்ணான ராதிகா பற்றி அவனிடம் கேட்டார்.ஆனால் அவன் அருகில் சமந்தா இணைந்து நிற்பதுபோல் உணர்ச்சி.அவன் தர்மசங்கடப்பட்டான்.

அவரைப்பார்த்து விட்டு வெளியில் வந்ததும் இரவு எட்டு மணியாகிவிட்டது.

அவனுடைய பழைய பிளாட்டுக்குப் போனதும் சித்தார்த் இவனுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. சித்தார்த் சைவச்சாப்பாட்டுக்காரன் சமைக்கத் தெரியாத பணக்கார இந்தியப்பையன். பக்கத்திலுள்ள இந்திக் கடையில் சாப்பாடு ஓர்டர் பண்ணியிருந்தான். அந்தச் சாப்பாடுகளைக் கண்டதும் இந்த பிளாட்டில் சமந்தாவுடன் சந்தோசமாகச் சாப்பிட்ட ஞாபகங்கள் முரளியைத் திண்டாடப்பண்ணியது.

அவனையறியாமல் முரளி பாதாள ட்ரெயினில் சமந்தாவைச் சந்தித்ததைச் சொன்னான்.

சித்தார்த் முரளியை ஏறிட்டுப்பார்த்தான். தன்னை நேரேபார்க்காமல் நிலம் பார்த்து நிற்கும் நண்பனைப் பரிதாபமாகப் பார்த்தான சித்தார்த்;.

‘உனக்குத் திருமண நிச்சயார்த்தம் செய்ததை அவளுக்குச் சொன்னாயா?’

இந்த விடயத்தை ஏன் எடுக்கிறான் சித்தார்த்?

அவளது தாய் செலினா மூலம் அவளுக்குத் தெரிந்திருக்கும் என்று சித்தார்த்துக்குத் தெரியும்.அப்படியிருந்தும் ஏன் கேட்கிறான்? முரளி தனது திருமண நிச்சயார்த்தம் பற்றிச் சொல்லவில்லை என்று சிதார்த்துக்குச் சொல்லியிருப்பாளா?

ஒன்றும் புரியாமல் சினேகிதனை ஏறிட்டுப்பார்த்தான் முரளி.

முரளியின் மனநிலை சரியில்லை என்று சித்தார்த்துக்கு விளங்கியது. ஏனென்றும் அவனுக்குத் தெரியும்

அவன் அதுபற்றி மேலெதுவும் பேசவில்லை.

சாப்பாடு முடிந்ததும் இருவரும் பக்கத்திலுள்ள ஜாஸ் கிளப்புக்குப் போனார்கள் சமந்தாவுக்கு ஜாஸ் இசை மிகவும் பிடிக்கும.; அந்தக் கிளப் அவர்கள் அடிக்கடி போன இடம்.அது சித்தார்த்துக்கும் தெரியும்.

ஓருசில நிமிடங்களில் முரளி கிளப்பை விட்டு வெளியேறினான்.

‘காலாற நடக்கவேண்டும்போலிருக்கிறது’முரளி சித்தார்தின் மறுமொழியை எதிர்பார்க்காமல் மிக மிக பரந்த லண்டன் நெருசலில்த்; தன்னைத் தொலைத்துக்கொண்டான்.

சமந்தாவுக்கு இன்னும் ஒரு காதலோ எந்தத் தொடர்போ இல்லையென்று செலினா சரளாவுக்கச் சொல்லியது முரளிக்குத் தெரியும்.

அழகிய தேவதை மாதிரி, அவளைக் கண்ட ஆண்களின் உணர்வுளை மழுங்கடிக்கும் பெண்ணான சமந்தாவுக்கு ஏன் இன்னும் ஒரு தொடர்பும் இல்லை?

இன்று கண்டதும் அவனை அணைத்து ‘உனது நிச்சயார்த்தத்துக்கு எனக்குச் சொல்லியிருக்கலாமே’ என்று முத்தமிட்டாளே,அதன் அர்த்தம் என்ன?

இவனுக்குக் கல்யாணம் வரும்வரைக்கும் அவள் எந்தவித் உறவுக்குள்ளும் தன்னைப் பிணைத்துக்கொள்ள மறுக்கிறாளா?

‘உனக்குத் திருமண நிச்சயார்த்தம் நடந்தததை அவளுக்குச் சொன்னாயா?’ என்று ஏன் சித்தார்த் கேட்டான்.?

அவனது கோர்ட் பாக்கெட்டில் சமந்தா தந்த அவளுடைய விசிட்டிங்கார்ட் இருக்கிறது.அவiளின் விசிட்டிங் கார்ட் மட்டுமல்ல அவளே அவன் இருதயத்தை அடைத்துக்கோண்டு அவனின் நினைவுகளைக் குழப்பினாள்.

போன்பண்ணலாமா?

வேண்டாம், நான் இன்னொருத்தியுடன் நிச்சயார்தம் செய்து கொண்டவன்.அவன் மனம் அழுதது.

அன்றிரவு அவன் நித்திரையின்றித் தவித்தான். சமந்தாவுடன் பழகிய பல ஆண்டுகளில் வராத உணர்வுகள் கனவாகவும் நனவாகவும் வந்து அவனைக் குழப்பின.அவள் அவன் கனவில் அவனை இறுக அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

சமந்தாவில் அவனுக்கிருந்த இத்தனை ஆழமான காதலை என்னவென்று அவனின் அடிமனதில் புதைத்து வைத்துக் கொண்டான்?;.

இருவருட இடைவெளியும், வாழக்கையின் அனுபவங்களின் முதிர்ச்சியும் அவனின் மனச் சாட்சியைக் கேள்விகள் கேட்டன.

அடுத்த நாள் சனிக்கிழமை. சித்தார்த்துடன் அந்த வாரவிடுமறையைக் கழிக்கவேண்டும் என்ற திட்டத்தைக்கைவிட்டான். லண்டனை விட்டு ஓடவேண்டும்போலிருந்தது.

‘மனம் சரியில்லையா?’ சித்தார்த் நேரடியாகக் கேட்டான்.காலைச் சாப்பாட்டுக்கு இருவரும் பக்கத்திலுள்ள றெஸ்டரோரண்டுக்குப் போயிருந்தபோது சித்தார்த் முரளியிடம் பல கேள்விகள் கேட்டான். அதிலொன்று,’நீ ஒரு நாளும் சமந்தாவைக் காதலிக்கவில்லையா?’

இது அநியாயமான கேள்வி!

அவனுக்கு அவளின் காதல் தவிர எதுவும் தெரியாது என்று சொல்லச் சொல்லி அவன் மனச்சாட்சி உறுத்தியது.

சித்தார்த் நேர்மையான கேள்வியைக் கேட்கிறான்

சித்தார்த்,’ மது மங்கை,மாமிசம் மூன்றையும் தொடமாடNடென்’ என்று மகாத்மா காந்தி லண்டன் வரமுதல் தனது தாய்க்குச் சதியவாக்குக் கொடுத்துவிட்டதுபோல்,சித்தார்த்தும் லண்டனுக்கு வந்தவனோ தெரியாது.

மது மாமிசம் ஒன்றும் தொடமாட்டான்.அவனுக்கு ஒருகாதலி இந்தியாவில் இருக்கிறாளாம். அவளுக்கு உண்மையானவனாக இருப்பதாகச் சொல்லிவிட்டு வந்தானாம். படிப்பு முடிந்தபின் தாய்தகப்பனுக்குத் தன் காதலைச் சொன்னானாம். இப்போது,தாய்தகப்பன் சம்மதிக்கும் வரையில் காத்திருக்கிறானாம்!.

‘பெரும்பாலான நாங்கள்-ஆண்கள்-இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்த நாங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளுக்காக எங்கள் ஆத்மாவையின் குரலை ஊமையாக்குகிறோம் என்று நினைக்கிறாயா?’ சித்தார்த் எதிரேயிருந்துகொண்டு கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தான்.

அவனின் கேள்விகள் முரளியின் மனச்சாட்சியை உறுத்துவது அவனுக்குத் தெரியும்.

குடும்பத்தின் எதிர்பார்ப்புக்கள்?

‘அம்மாவை ஒருதரம் பார்க்கவேண்டும்போலிருக்கிறது’

முரளி; அவசரமாகச்; சித்தார்துக்குச் சொல்லிவிட்டு;ப் புறப்பட்டான்.

சமந்தா தன்னிடமிருந்து பிரிந்து விட்டாள் என்ற ஏக்கத்தில் அம்மா பேசிய பெண்ணைத் திருமணம் செய்யச் சரியென்றது தன் மனச்சாட்சிக்கும் அவர்களின் அன்பான சினேகிதரின் மகளான ராதிகாவுக்கும்; அவன் செய்த துரோகம் என்று அவனுக்குப் பட்டது.

அம்மா ஏற்பாடு செய்த திருமண நிச்சயார்த்தத்திற்குச் சம்மதம் சொன்னது, சமந்தா தன்னிடமிருந்து போய்விட்டாள் என்ற அவனது விரக்தியின் வெளிப்படு என்பதை அம்மாவுக்குச் சொன்னால் என்ன நடக்கும்?

அம்மாவுக்கு இதைச் சொல்லவேண்டும்.அதை விட முக்கியமாக ராதிகாவுக்குச்; சொல்லவேண்டும். அவள் ஒரு நல்ல சினேகிதியாகத்தான் அவனது மனதில் நடமாடுகிறாள், அதைமீறி அவனுடன் அவள்; நெருங்கி வருவதை அவனாற் தாங்க முடியாதிருக்கிறது.

ராதிகா அவனுடைய எதிர்கால மனைவியாகப்போகிறவள். இருவரும் சினிமாவுக்கப் போயிருக்கிறார்கள். சாப்பாட்டுக்குப் போயிருக்கிறார்கள். தனியாகப் பார்க்குளில் நடந்திருக்கிறார்கள் ஆனால் இதுவரை அவளை நெருக்கமாக அணைத்து அவன் முத்தமிட்டது கிடையாது.

நேற்று சமந்தா தந்த முத்தம் இன்னும் வதைக்கிறது.

அம்மா இவன் வருகையை எதிர்பார்க்கவில்லை.ஆனால் தனது மூத்த மகனைக் கண்டதும் அந்தச் சந்தோசத்தில் ஒருமணித்தியாலத்தில் பல சாப்பாட்டுவகைகளைச் செய்தாள். அப்போது அவர்கள் வீட்டில் யாருமில்லை. இரண்டாவது தம்பி கேசவனுக்கு ஒரு கேர்ள் ப்ரண்ட் இருக்கிறாள்;.அவன் அவளைப் பார்க்கப் போய்விட்டான். கடைசித்தம்பி வேல்ஸ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.அப்பா லை;பரரிக்குப் போய்விட்டாh.

மத்தியான நேரம்,சரளா சாப்பாட்டு மேசையில் மகனுடன் உட்கார்ந்தாள்.

அவனாற் சாப்பிட முடியவில்லை.

‘அம்மா ..தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நான்..’

அவன் ஒருநிமிட தயக்கத்தின்பின் ;நான் ராதிகாவைக் கல்யாணம்; செய்யமுடியாது’என்று சொல்லி முடித்தான்.

அம்மா ஏன் இந்த முடிவை எடுத்தாய் என்று கேட்கவில்லை.

அவள் விம்பியழுதாள் யாருக்காக அழுகிறாள் என்று அவனுக்குத் தெரியாது. அம்மாவின் விம்மல் அவனைக் கண்கலங்கப் பண்ணியது. அவன் தாயை அணைத்துக் கொண்டான். ‘நான் ராதிகாவுக்;குச் சொல்கிறேன். அவள் திட்டுவதைத் தாங்கிக் கொள்வேன்’அவன் அழுத்தமாக நேர்மையாகப் பதில் சொன்னான்.

அப்பா வந்தபோது அவன் தனது அறையில் இருந்தான். அவனின் மூன்று வயதிலிருந்தே அவனுடையதானது அந்த அறை.அவனது ஐந்து வயதிலிருந்து இருவரும் பல்கலைக்கழகம் செல்லப் பிரியும்வரை,சமந்தாவுடன் பழகிய, பேசிய, விளையாடிய, சண்டைகள் பிடித்துக்கொண்ட அறையது.

அவரிடம் அம்மா விடயத்தைச் சொல்லியிருக்கவேண்டும்.

அவர் மகனின் அறைக் கதவைத் தட்டினார்.

நெடிந்துயர்ந்த தகப்பனின் உருவமும் நேர்மையான அவரின் பார்வையும் அவனைத் திக்குமுக்காடப் பண்ணின.

‘உனது முடிவுக்குக் காரணம் என்ன என்று நீ சொன்னால் மிகவும் சந்தோசப்படுவேன்’ தகப்பன் சினேகிதன் மாதிச் சொன்னார்

அவன் அவரின் மகன். நேர்மைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் அவரால் போதிக்கப்பட்டவன்.

; நான் ராதிகாவுக்கு ஏற்ற ஒரு நல்ல கணவனாக இருக்கமுடியாது என்ற நினைக்கிறேன்..ஏனெ;றால் அந்த அளவுக்கு அவளுடன் நெருக்கமாகப் பழக என்னை ஏதோ தடுக்கிறது” அவன் கண்கலங்கச் சொன்னான்.

‘சமந்தாவை விட இன்னொருத்திக்கு உன் மனதில் இடம் கிடைக்காது என்ற சொல்கிறாயா?’தகப்பன் மகனை அணைத்தபடி கேட்டார்.

அவன் தன் துயர் தீர அழுதான்.

அவனுக்கு பதின்மூன்று வயதானபின், வயதுக்கு வளரும் பெரும்பாலான இளவயதுஆண்கள் மாதிரி அவன் தன்னை அவரிடமிருந்து கொஞ்சம் விலக்கி வைத்துக்கொண்டான். அவர் இப்படி அணைத்து ஆறுதல் தந்தது கிடையாது. இன்று அவர் தந்த அந்த அணைப்பு அவனின் மன இறுக்கத்தை நெகிழப்பண்ணியது.

‘அப்பா,தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்…ராதிகாவுடன் திருமண ஒப்பந்தம் செய்யச் சரி என்று சொன்னது நான் செய்த பெரிய பிழை’

அவர் கேட்ட அடுத்த கேள்வி ‘இதையுணர ஏன் இவ்வளவு காலம் எடுத்தது?’.

அவனுக்கு மறுமொழி தெரியாது.

மிக நீண்டகாலத்துக்கு முன் அவனின் தாய் ‘சமந்தாவை உனது தம்பிகள் மாதிரிப் பார்த்துக்கொள்’ என்று சொல்லாமற் சொன்ன ஆணையை அவனால் மீற முடியாதிருந்ததா அல்லது ‘தனக்கு உண்மையாக நடந்து கொள்ளாதவன் உலகத்துக்கும் உண்மையாக நடக்கமாட்டான்’ என்று தகப்பன் சொல்லித்தந்த நேர்மையான வார்த்தைகளா இன்று அவனை இந்த முடிவு எடுக்கப் பண்ணியது?

நேற்று சமந்தாவைக் கண்டதும் தனக்குத் தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ளவிரும்பாத ‘உண்மையான முரளியை’ தனக்குள்ளிருந்து அடையாளம் கண்டானா? தனக்குத்; தானே நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று அவன் மனச்சாட்சி உறுத்தியதா?

அல்லது,சித்தார்த் தன் சிந்தனையின் குழப்பத்தின் சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கப் பண்ணினானா? முரளிக்கு அந்த நிமிடம் எந்த மறுமொழியும் தெரியாது.

ஆனால்,சமந்தாவின் அணைப்பால் வரும் அந்த ஆத்மீக நெருக்கம் நிறைந்த காதலை ‘இன்னுமொருகாதல்’ எங்கிருந்து வந்தாலும் ஈடுசெய்யமுடியாது என்பது மட்டும் அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

3 thoughts on “இன்னுமொரு காதல்?

  1. மிக சிறப்பாக உள்ளது.சமந்தாவுடன் திருமணம் வரை தொடர்திருத்தல் மிக சிறப்பாக இருக்கும்.

  2. என்னப்பா அவ்ளோதானா கல்யாணம்லாம் இல்லையா

    1. சூப்பர் ஸ்டோரி தொடர்ச்சி படிக்க ஆசையாக இருக்கு மெயில் பண்ண mudiyuma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *