ஆத்மாவை அபகரித்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 2, 2021
பார்வையிட்டோர்: 8,419 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இனிய மாலை வேளைகளிலே யாழ் நகர் வீதிகளில் அவன் வேகமாகச் சைக்கிள் ஓட்டிச் செல்லும் அழகை நான் ரசிப்பதுண்டு.

அது ஒரு இன்ப அனுபவம்.

அவன் முகத்திலே எப்போதும் சம்பூர்ண சௌந்தர்யம் குடி கொண்டிருக்கும்.

கரிய நீண்ட மயிர் பாதி நெற்றியை மறைக்க, அழகிய கண்கள் ஒளிவீச, கூர்மையான மூக்குத் தனிச் சிறப்பைக் கொடுக்க, உதடுகளோ பார்ப்பவர்களுக்கு அவன் எப்போதும் புன்னகைப்பவனோ என்னும் பிரமையை ஏற்படுத்த, சிவந்த ரோஜா மேனி இத்தனை அழகுகளையும் மேலும் மெருகிட்டுக் காட்ட உண்மையாகவே அவன் ஒரு அழகுத் தெய்வமாக மின்னினான்.

அந்த யௌவன ராஜ்யத்தின் மஹாராஜா ஒரு கலை ஞனின் ஆத்மாவை அபகரித்ததில் ஆச்சரியம் என்ன இருக்

சத்தியத்தைச் சாட்சிக்கிழுத்துப் பேசுவதானால் அவனின் சம்பூர்ண சௌந்தர்யம் என் ஆத்மாயை அநியாயமாக (ஆமாம் அது இன்பகரமான அநியாயம்) அபகரித்துத்தான் விட்டது.

அவனைக் காண்கின்றபோது உதய காலத்துப் பட்சியின் உல்லாஸம் என் ஆத்மாவிலே அலைமோதுகிறது.

கோடானுகோடி சந்திர சூரியர்களை ஒரே நேரத்தில் ஒரே உருவ அமைப்பில் சந்திப்பதனைப் போன்ற உணர்ச்சி, ஒரு ஆனந்தமான சொப்பனத்தைக் காண்பது போன்ற அநுபவம் அவனைக் காண்கின்ற போது எனக்கேற்படுகிறது.

அவன் என் நெஞ்சத்துப் பொற்கனவில் நின்றாடும் சுந்தர ரூபன்,

அவனோடு இனியும் பேசாமல் இருந்தால் என் ஆத்மா மோகப் பெரு நெருப்பில் வெந்து சாம்பலாகிவிடும்.

சூர்யக் கதிர்கள் வானிலே புன்னகைக்கும் அழகுகளில் நான் மயங்குவதுண்டு தான்.

ஆனால் –

அவை என் ஆத்மாவை அபகரிக்கவில்லை.

தென்றலிலே அசைந்தாடும் எழிலான புஷ்பங்கள் என்னை ஆனந்தத்தால் திக்குமுக்காடச் செய்வது உண்மைதான்.

ஆனால் –

அவை என் ஆத்மாயை அபகரிக்கவில்லை.

சுழன்றாடும் விழிகள் கதைபேச, வசீகர குறுநகை வாவென அழைக்க, நடையோ ஒரு தேவ நடனத்தைக் காண்கின்ற அனுபவத்தை ஏற்படுத்த சில தேவதைகளின் காதல்கள் என் வாழ்வில் கிடைத்தன.

இருந்தாலும் –

அந்தத் தேவதைகளால் என் ஆத்மாவை அபகரிக்க இய வவில்லை.

அந்த அழகனோ என் ஆத்மாவை அபகரித்து, நினைவில் கனவெழுப்பி, நெஞ்சில் சொப்பனக் கோலங்களைத் தீட்டி ஒரு விநோதமான சித்ரவதை செய்தான்.

***

அது ஓர் இன்ப நாள்.

யூகப் டெயிலர் கடையில் அவரோடு பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது –

வானத்து ராஜவிதியிலே அழகின் சக்ரவர்த்தியான மன்மதன் பவனிவருவதைப் போல என் கனவின் கர்த்தா வான, அந்த அழகன் யூசுப் டெயிலரிடம் வந்தான்.

இப்போது நான் அவன் அருகில்….மிக அருகில்,

“இவரைத் தெரியுமா? இவர்தான் எழுத்தாளர் வேனில் வேந்தன்.”

யூசுப் என்னை அந்த அழகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“இவர் நல்ல தமிழ் அன்பர், இப்ராஹீம் ஹாஜியாவின் மகன், பெயர் டீன்”

நான் ஒரு மகத்தான அறிமுகத்தைப் பெற்றேன். குதுகலத்தின் உச்சிக்கே போய்விட்டேன்.

நானும் டீனும் நண்பர்களானோம்.

ஆவேஷகீதம் பாடும் இன்பக்கடலிலே நீந்தி விளையாடினோம் பிறர் சொந்த விஷயங்களை விமர்சிக்கும் விந்தை மனிதர்கள் வராத வெட்ட வெளிகளிலே நாம் ஈடற்ற இன்ப அனுபவங்களைப் பெற்றோம்.

***

அது ஒரு டிசம்பர் மாத இரவு. அறையில் அவனும் நானும் ஆனந்தமயக்கத்தில் ஆழ்ந்திருந்தோம்.

டீன் பேசினான்.

“சொற்ப தாளில் நான் உங்கள் நண்பனானேன், அறிவிலும், அநுபவத்திலும், வயதிலும் வளர்ச்சி காணாத எனக்கு உங்களைப் போன்ற கலைஞரின் நட்புக் கிடைத்தது பெருமையான விஷயம்.

“அப்படி இல்லை என் ராஜா, உன் அன்பைப் பெற்ற நானே பாக்கியசாலி. உன் அழகு என் ஆத்ம பசிக்குத் தீனி; உன் நட்பு என் கலா நோக்கின் கலங்கரை விளக்கு.”

“கலைஞரே….”

“என்ன டீன்?”

பள்ளியிலே – உலவும் வீதிகளிலே – என் வீட்டின் அயல் வீடுகளிலே எத்தனையோ அழகுப் பெண்கள். ஆனால்,

“பேசு டீன்”

“அவர்களால் என்னை அடிமைப்படுத்த முடியவில்லை. என் வர்க்கத்தைச் சேர்ந்த நீங்களோ என்னைக் கொள்ளை கொண்டு விட்டீர்கள்.”

அவன் உணர்ச்சியோடு பேசினான்.

“டீன், சூன்ய மேடையான என் ஆத்மாவிலே நீ சுந்தர ஜோதியை விரித்தாய். பதினெட்டு வயது நிரம்பாத நீ என் நெஞ்சில் ஓராயிரம் சந்தோஷங்களைக் கொட்டிக் குவித்தாய்.”

அவனுடைய அழகிய கையில் நான் அன்போடு முத்த மிட்டேன்.

டீன் நேசத்தோடு என்னை ஆலிங்கனித்தான்.

– விஜயேந்திரன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1976, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *