ஆசைகொண்ட நெஞ்சிரண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 7,377 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரவிந்தன் 

“ஏன் எல்லாரும் அழுகிறியள்? நான் என்ன செத்தா போட்டன்!”

நான் அப்படிச் சொல்லியிருக்கப்படாது தான். ஆனாலும் என்னால் பாவிக்கக் கூடிய கடைசி ஆயுதம் அதைத் தவிர வேறொன்றும் இருந்ததாக எனக்குப் படவில்லை.

இறந்துவிட்ட ஒரு உடலிற்காக ‘பிணந்தின்னிக் கழுகுகள்’ போல சுற்றிச் சூழ நின்று ஒப்பாரி வைப்பதால் இழந்து விட்ட ஒன்றை மீண்டும் பெற முடியும் என்பதில் அசாத்திய நம்பிக்கையுடைய வேடிக்கை மனிதர்கள் போல, அவர்கள்.

தம்பி ஒரு கையைப் பிடித்திருக்கின்றான். மறு கையை அழுத்திப் பிடித்தபடி தங்கைச்சி அக்கா பக்கத்தில் நிற்கின்றாவாம். அண்ணா வரவில்லையாம். அம்மாதான் சொல்கின்றா.

கங்கைகள் மலைகளிலிருந்து தான் ஊற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றும் நியதியில்லையே! கண்களிலி ருந்தும் உதயமாகும் என்பதை அம்மா அறியமாட்டாளா?

அண்ணி நாளைக்கு வருவாவாம். இதையும் அம்மாதான் சொல்கின்றா.

வரட்டுமே! வந்து பார்த்து விட்டுத் தான் போகட்டுமே!! அண்ணனுக்கு மனைவியானதால் மட்டும், என்னை விட ஒன்றிரண்டு வயதில் குறைந்த அவள் அண்ணியாகிவிட முடியுமா என்ன?

போவோர் வருவோர் எல்லாம் என்னைப் பார்த்து ஏதோ கிசு கிசுக்கின்றார்கள். அவர்களின் அக்கினித்துளி வார்த்தைகள் நாளடைவில் என் மன ஓட்டத்தையும் மழுங்கடிக்கச் செய்து விடும் என்று தான் நினைக்கின்றேன்.

“தம்பி, விளக்கை அணைச்சிட்டுப் படுக்கட்டுமா?” அம்மா.

எல்லோரும் வீட்டிற்குப் போய் விட்டார்கள். அம்மா மாத்திரம் இப்போது எனக்குத் துணை.

“விளக்கை அணைச்சிட்டுப் படுக்கட்டுமா?” மீண்டும் அம்மா.

எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. விளக்கை அணைப்பத னாலோ ஏற்றுவதனாலோ என்னில் என்ன மாறுதலைச் செய்து விட முடியும்? நான் பதில் சொல்லவில்லை. ‘க்ளிக்’ என்ற ஒரு சத்தம். விளக்கு அணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உறக்கம் வரவில்லை. துன்பக் கேணியில் அழுந்துபவர்களிற் கெல்லாம் உறக்கம் ஏது, விழிப்பேது?

என் நினைவுகள் பின்னடிக்கப்படுகின்றன. நினைவே ஒரு சுகம் தான். அந்த சுகம் தரும் தூக்கத்தில் நான் லயித்துப் போகின்றேன்.

அனுஷா

இளமைக் காலத்தில் இருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். பக்கத்து வீட்டிலிருப்பவர் என்பதனால் மட்டுமன்றி, ஓரளவு தூரத்து உறவினரும் தான் நிர்வாண உலகத்திலிருந்து விடுபட்டு, பள்ளிக்கு முன்பின்னாகப் போனதும், மாலை நேரங்களில் விளையாடி மகிழ்ந்ததும், இடையிடையே போட்டி போட்டுக் கொண்டு ‘டா டீ’ சொன்னதும் மறக்க முடியாதவை. ஆனால் இயற்கையின் நிகழ்வுகள் இப்படிப் பட்ட சந்தோஷ சாம்ராச்சியத்தையே கலைத்து விடக் கூடியவை என்பதை அப்போது நான் உணரவில்லை.

நாங்கள் எல்லாம் குழந்தைகளாகவே இருந்திருக்கப் படாதா?

குழந்தைப் பருவத்தைக் கடந்து, ஆளாகிய பின் அவருடன் கதைப்பதை அடியோடு விட்டு விட்டேன். எப்போதாவது தேவை கருதிக் கதைத்தது முண்டு.

அதன் பிறகு ஆறு வருடங்கள் கழித்து அவருக்குப் பக்கத்தில் எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்து விட்டார்கள் என் பெற்றோர்கள். அதன் நிமித்தம் அவருக்கு முன்னால் நாலைந்து மாதமாக நாணிக்கோணி அமர்ந்திருக்கிறேன்.

தரப்பட்ட கணக்கு அப்படியே கடதாசியில் கண்மூடிக் கிடக்கின்றது. பேனா அசைய மறுத்து அப்படியே நிலைகுத்தி நிற்கின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அவர், இமைகள் இமைக்காமல் என்னையே பார்த்தபடி இருந்தார்.

“அனுஷா!”

“ம்ஹூம். என்ன?”

“நான் ஒன்று சொல்லட்டுமா?”

“…”

“உன் கண்கள் எவ்வளவு அழகாயிருக்கு!”

நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரிய வில்லை. அதன் பின்பு ஏதோ வெல்லாம் சொல்லித் தந்தார். என் மூளையில் அவை கிஞ்சித்தும் ஏறவில்லை.

உண்மையிலே என் கண்கள் அழகு தான் போலும். நான் பிறந்த போது எனக்கு ‘நீள்விழி’ என பெயர் வைக்க விரும்பியதாக ஆச்சி அடிக்கடி சொல்லுவா. அதற்கு காரணமும் இல்லாமலில்லைத்தான்.

பால் போன்ற முகம். சிரிக்கும் போது வலது கன்னத்தில் சுழித்து மறையும் சிறுகுழி. உதட்டிற்கு மேல் இப்போது தான் அங்கொன்று மிங்கொன்றுமாக துளிர் விடும் கிறுக்குகள். அவரும் அழகு தான்.

பிறகும் ஒருநாள், அதே செல்லமாக ‘அனு’ என்றார். அனுஷாவை ‘அனு’வாக்கிய பெருமை ஆச்சிக்குரியது. மரணம், துக்கம் இதெல்லாம் ஆச்சிக்குப் பிடிக்காது. அதனால் ‘சா’வை விட்டு ‘அனு’ என்று கூப்பிடத் தொடங்கி விட்டா. அதைப் பார்த்து அவரும் ‘அனு’ என்றார். எனக்குப் புரிந்து விட்டது. அடுத்ததாக அவர் என்ன சொல்லப் போகின்றார் என்று.

“ம்ஹூம், என்ன?”

“ஒன்று சொல்லட்டுமா?”

“…”

“நான் நாளை கொழும்புக்கு போகின்றேன். எனக்கு வேலை கிடைத்துள்ளது”

அண்ட சராசரங்கள் எல்லாம் இடிந்து, கவிழ்ந்து என் தலை மேல் வீழ்ந்தன போன்றிருந்தது எனக்கு.

அவர் கைகளை நீட்டினார். இருட்டுத் துன்பங்கள் என்னை முற்றுகையிட அவர் கைகளைப் பற்றியபடியே சிணுங்கினேன். ஒரு முறையாவது என்னை அழவைத்துப் பார்க்க வேண்டும் என்று முன்பெல்லாம் சொல்லுவார். என் ஜனிக்கும் நீர்த்தேக்கத் திலிருந்து, அதை அவர் அப்போது பெற்றுக் கொண்டார்.

அரவிந்தன்

அந்தக் கண்கள்! அதற்குள் அடங்கும் காவியம். ஆராய்ச்சி தொடங்கியது.

ஆச்சியின் கண்கள், புதை குழிக் கண்கள். அம்மா வினுடையது கோழிமுட்டை. அப்பாவினுடையது கல்லறைக்கே போய்விட்டவை. அவளின் கண்கள், நீச்சல் தடாகத்தில் நீச்சலடிக்கும் மீன்கள் உள்ளத்தின் கதவுகள் திறந்திட, கண்ணும் கண்ணும் கதை பேசியதும் இசை பாடியதும், பார்வைகள் சாமரம் வீசி நினைவுகளுக்கு ரகசியக் கட்டளை இட்டதும் அதன் பின்னர்தான்.

மூக்கின் நுனியிலும், உதட்டோரங்களிலும் துளிர்த்திருக் கும் அரும்பு வியர்வைத் துளிகளிலான அவள் முகத்தைப் பார்த்து நாளாகி விட்டன. கடைசியாக நான் புகையிரதத்தில் வரும்போது கூட, அவள் கைகளையும் அதிலே தொங்கும் வளையல்களையும் தான் கண்டு கொண்டேன். மர மொன்றிற்குப் பின்னால் ஒளித்திருந்து, கையசைத்து விடைகொடுத்தாள் அவள்.

காலிமுகக் கடற்கரையைக் கடக்கும்தோறும் ஆழப் பதிந்த அவள் நினைவுகள் எழும். வெண்மணற் பரப்பிலே நானும் அவளுமாக கைகோர்த்தபடி மிதந்து கொண்டு செல்வதாக மனம் நினைக்கும். வேலைக்குச் சென்று விட்டால் மனம் ஒரு நிலையில் இருக்காது. நானும் அவளுமாக சேர்ந்து செய்து கொண்ட சின்னச் சின்னத் தவறுகளை நினைத்து – அவளைக் கேளாமலே அவளின் மேற்சட்டைப் பொக்கற்றுக் குள்ளிருந்து சில்லறைகளை நான் எடுத்துக் கொண்டதும், என்னைக் கேளாமலே என் கண்களை அவள் பொத்தியதும் தவறுகளா?

இடையே ‘ஓணான்’ என்ற பெயரில் ஒரு கடிதமும், ‘பல்லி’ என்ற பெயரில் அவளின் பதில் கடிதமும் பரிமாறிக் கொண் டோம். பிறந்த நாள் வாழ்த்து ஒன்றும் அனுப்பியதுண்டு.

வேலைக்குச் செல்வதும், ‘புறாக்கூட்டு’ வீட்டிற்குள் வாழ்ந்து கொள்வதுமான, வட்டத்தின் வழியே திரும்பத் திரும்ப நிகழும் ஓரினப்பட்ட வாழ்க்கை.

எப்போதாவது விடுமுறை நாட்களில் வீடு சென்றாலும், அவளைக் காண்பது அரிதாகி விட்டது. வெறும் பாவாடை யுடன் திரிந்த அவள், தாவணிக்குள் புகுந்து கொண்டதும் அவளைக் காண்பது அரிதாகி விட்டது.

அவளிடம் எவ்வளவோ பேச வேண்டுமென்று விரும்பினேன். முடியவில்லை. அப்படித்தான் கண்டாலும் அவள் இதழ்கள் பிரிவதில்லை. ஒரு சிரிப்பு. பின் நாணம். பயபீதியினால் சுழிப்பு. அவ்வளவுந்தான்.

வருடமிருமுறை வந்து போக அஃறிணைகளிற்கிடையே இருந்து வந்த கடிதப் போக்குவரத்தும் தடைப்பட்டுக் கொண்டது. ஒருமுறை வீடு சென்று தனிமையில் சந்தித்த போது குதிரைக் குஞ்சத்தை இரட்டைப் பின்னலாக்கும் படியும், மூன்றாம் பிறை நெற்றிக்கு ஒரு பொட்டு வைக்கும் படியும் கூறினேன். அதை மாத்திரம் இப்பொழுதும் நாள் தவறாமல் செய்து வருவதாக நண்பன் ஒருவன் மூலமாக அறிந்து கொண்டேன்.

நான் இருக்கும் புறாக்கூட்டு வீட்டிற்கு வாசல் என்ற ஒன்றும், அந்த வாசலினூடே வரும் காற்று திக்குமுக்காடாமல் வெளியே போவதற்கு ஒரு ஜன்னலும் இருக்கின்றன. சாளரத்தைத் திறந்துவிட வானம் தெரிகிறது. வெள்ளி நிலா விளக்காகிறது. தொடுவானத்தில் ஒரு நட்சத்திரம் சிமிட்டுகின்றது. அது?

உறங்கப் போகும் நேரத்தில் தான் அந்தக்கடிதத்தை வீட்டுக்காரர் தந்தார். அம்மாதான் போட்டிருந்தா. அதில் அண்ணாவுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டதெனவும் புறப்பட்டு வரும்படியும் இருந்தது.

அண்ணைக்குக் கலியாணம். அது முடிய அக்காவிற்கு. அதன் பிற்பாடு?

உறக்கம் வரமறுத்தது. என்மனம் சிறகடித்துப் பறந்து ஊர் ஞாபகத்தை உண்டு பண்ணியது. அவள் ‘க்ளோஸ் அப்’பில் வந்து போனாள். நரம்புகள் ஆரோகணம் அவரோகணத்தில். குங்குமமாக சிவந்த உதடுகளுக்கும், விருந்துண்ண அழைக்கும் பௌர்ணமிக் கண்களிற்கும் ஈர ஒத்தடம் கொடுக்க உதடுகள் விழைகின்றன. எப்போதோ நடக்கப் போகின்ற ஒன்றிற்காக மனம் ஒத்திகைக் கனவுகள் பார்த்தன.

அனுஷா 

நாளொன்றின் உதயத்திற்காக இரவின் துகிலுரிப்படலம் நடந்து முடிந்திருந்தது. முற்றத்தில் நின்று குப்பை கூளங்களைக் கூட்டிக் கொண்டிருந்தேன். தினேஸ் தன் துவிச்சக்கரவண்டியை அவசரமாகத் தள்ளிக்கொண்டு வாசல்வரை சென்று திரும்பி என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு தாவி ஏறி மிதிக்கத் தொடங்கினான். அவனது அந்தப் பார்வையும், கபடமற்ற சிரிப்பும் எனக்கு அவன் அண்ணன் அரவிந்தனை நினைவூட்டியது.

ஒரு பெண்ணுடைய கஷ்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பெண்ணாகப் பிறந்து பார்த்தால் தான் தெரியும்.

எங்காவது தனிமையில் இருந்து ஓவென்று அழவேண்டும். போல் இருக்கின்றது.

அவர்கள் வீட்டின் அலரி மரங்களிலும் மா மரங்களிலுமாக மின்குமிழ்களை இணைத்து எரிய விட்டுக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்களில் ஒருவன் பலத்த குரலில் ‘உங்கள் வீட்டிற்கும் வருவோம்!’ என்றான்.

“அக்காவுக்கு தலைமயிர் பின்னப்போறன்” என்றபடியே தங்கை பாவாடையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள். தொடர்ந்து வந்த விசிலடிச் சத்தத்தைக் கேட்காதவாறு தப்பிக் கொண்டே வீட்டிற்குள் புகுந்து கொண்டேன்.

சற்று நேரத்தில் வெளியே எழுந்த சத்தத்தைக் கேட்டு ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்தேன். மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து அந்தரத்திலே தொங்கிக் கொண்டிருந்தது. முற்றத்திலே மயக்கம் போட்டு விழுந்து கிடந்தார் அரவிந்தன். உடனே அங்கு செல்வதற்காகப் புறப்பட்டேன். ஆனால் அம்மாதான் திருமணத்திற்கு முன்பு அங்கு போக வேண்டாமென்று சொல்லித் தடுத்து விட்டா. ஆனால் மனம் ஒரு நோக்கில்லாமல் அலைந்தது.

சுற்றி நின்றவர்களை விலக்கியபடியே ஒருவர் உள்ளே சென்று நீர் தெளிப்பதும், அரவிந்தன் எழுந்து கொள்வதும் தெரிகின்றது. முகமெல்லாம் கருகிப் போய், அரவிந்தன்!

“அரவிந்தன் அண்ணைக்குக் கண் தெரியேல்லை!” என்று அழுதபடியே தினேஷ் வந்து சொன்ன போதுதான், அம்மா என்னையும் கூட்டிக்கொண்டு அவர்கள் வீட்டிற்குப் புறப்பட்டா. அங்கே ஒரே ஒப்பாரி, அழுகை.

“அம்மா, நான் உங்க எல்லாரையும் தான் பார்த்து விட்டேனே! பிறகு ஏன் அழுகின்றீர்கள்? அண்ணியைத் தான் பார்க்க நான் கொடுத்து வைக்கவில்லை!” என்று அரவிந்தன் சொன்னபோது என் இதயமே நொறுங்குண்டது போன்றி ருந்தது.

“அம்மா, அண்ணி யாரம்மா? எந்த இடம்?” என்று குழந்தை போலக் கேட்கின்றார்.

“பக்கத்து வீட்டு அனுஷாதான்ரா!” என்று பார்வதி மாமி மிக இலகுவாகச் சொன்னபோது, மீண்டும் அவர் மயங்கி விழுந்து கொண்டார்.

அப்போது ஒரு சத்தம். எனக்கு மட்டும் கேட்டது. அந்த ஒலி என் இதயத்தின் துடிப்பை அடக்கு மளவிற்கு வலிமை பெற்றிருந்தது.ஆமாம், அப்போது தான் அவரது ‘விழிவானம்’ வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்.

அரவிந்தன் 

அவளின் கண்கள் எனக்கு குழப்பத்தை உண்டு பண்ணி வெறியைத் தந்தன. அந்த வெறியின் உக்கிரத்தினால் இப்போது நான் வெந்து மறுகி புழுப்போலத் துடிக்கின்றேன். என் மன வேதனைகளைக் கொட்டித் தீர்க்க இப்போது எனக்கு ஒரு வடிகால் வேண்டும். இல்லாவிடில் கானல் வெளியில் திரிந்த அந்த மானை என் கண்கள் சுட்டெரித்து விடும்.

“தம்பி, ஏன் அழுகின்றாய்? இன்னுமா நீ நித்திரை கொள்ளவில்லை?” அம்மா.

நான் அழுகின்றேன் தான். என் கண்களை இழந்ததற்காக வல்ல எனக்குரிய கண்களை இழந்து கொண்டமைக்காக.

என் கண்கள் சுடுநீரைச் சொரிகின்றன. அந்தக் கண்ணீருக்குப் பின்னால் ஏதாவது புதிய அத்தியாயம் காத்துக் கிடக்கின்றதா?

– உள்ளம் பங்குனி 1989

– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *