அவர்களுக்குள் இருப்பது அது இல்லை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,999 
 
 

“நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே
உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே
அன்பு – கனன்றதடி பெண்ணே ஆயுளைப் பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே
உயிரில் – பூத்தாய் பெண்ணே
உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே
என் சகலமும் – ஆனாய் பெண்ணே
இல்லை யெனக் கொன்று – மீண்டும்
ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!”

கட்.. கட்.. கட்..

நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா அதுல ஒரு உயிர் இருக்கணும்.., பாடம் படிக்கிற மாதிரி படிக்கக் கூடாது. நூறு வருஷம் காத்திருந்த பொண்ணு ஒரு தேடல்ல கிடைச்சா எப்படி உருகுவ? அப்படி உருகனும். சிரிக்காம அந்த சந்தோசத்தை ஒரு பரிதவிப்பா சொல்லனும், சொல்லு பார்க்கலாம்…”

இயக்குனர் பகலில் சொன்னதெல்லாம் நினைவிற்கு வந்தது. உண்மையில் அது தான் சரியா.. “ஏன் அவளுக்காக நான் இத்தனை காத்திருக்கிறேன். ஏன் நான் அவளையே நினைத்திருக்கிறேன். என்னை விட பெரிய நடிகை. பெரிய நடிகை மட்டுமா வயதிலும் மூத்தவள் இல்லையா. வயதென்ன வயது விடு. என்ன அழகவள்..! மனதை இப்படி சுண்டி விட்டாளே..! அவளுக்கு இப்படி ஒரு கவிதை எழுதினால் என்ன..(?)”

தன் படத்தில் நடிக்கும் பிரபல தேவதை, கதாநாயகி வாணி. அவளைப் பற்றிக் கவிதை எழுத வேண்டுமென்றுதான் நினைத்தானே தவிர, “எப்படி எழுதுவதென்றெல்லாம் யோசிக்கவில்லை. அவளை நினைத்தாலே அவனுக்குள் கவிதையாக ஊறினாள் அவள். இரவின் வெப்ப நிமிடங்கள் முழுதையும், அவளைப் பற்றி நினைத்து நினைத்தேக் கவிதை வரிகளாய்க் கோர்த்தான் இந்த வடநாட்டு கதாநாயகன் மகதன்.

மகத் மிஸ்ராவை தமிழுக்காக மகதன் என்றாக்கிக் கொண்டார் அந்த நல்ல இயக்குனர். எங்கு சென்றாலும் மகதனுக்கு அவள் நினைவே இருந்தது. கட்டி பிடித்ததும், அவளோடு சேர்ந்து காதல் பாடியதும், முத்தமிட முகத்தருகில் சென்று இதழ் வருடி பேசியதும்.., நடிப்பதை மீறி அந்த பாத்திரமாகவே அவள் மாறி அவனுக்காய் அவள் தவிக்கும் தவிப்பும்.., உருகும் பார்வையும்.. அப்பப்பா… .சிலாகித்துப் போனான்.

ஒரு தாள் எடுத்துக் கொண்டான். கவிதைக்கு என்ன தலைப்பிடலாமென யோசித்தான்.., ஆங்.. “பெண்னெனில் தேவதையோ” என்று எழுதிக் கொண்டான்.. அவளை எண்ணி எண்ணி உருகிய காதல்; எழுத்துக்களாகப் பிறந்து, காகிதத்தில் கவிதையானது. கவிதைகளில் ஊறிய இரவு மெல்ல மெல்ல வெளுத்து விடிகாலை பொழுதுமானது.

மறுநாள் காலை சூட்டிங் ஆரம்பம். அவள் வந்தாள். நிஜ தேவதை போல் காற்றில் அசைந்து அசைந்து வரும் ஒரு மலரைப் போலவே நடந்து வந்தாள், எத்தனையோ பேரின் கனவு நாயகி வாணி.

அவள் வருவதைப் பார்த்ததும்.., மனது துடித்தது மகதனுக்கு. கையில் வேர்க்க ஆரம்பித்ததை துடைத்துக் கொண்டான். தான் ஒரு பெருமைக்குரிய கதாநாயகன் என்பதையே மறந்தான் மகதன். அவள்.. ஒரு மெல்லிய வாசனை தன் நாசி தொட்டுக் கடந்து.. அதோ எங்கோ காற்றில் நகர்ந்து கடந்ததை போல்; அவனருகே வந்து, லேசாக அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு, அதோ நடந்து போகிறாள்.

மகதனின் மனசு அவளைக் காதலால் மென்று விழுங்கியது. மல்லிகையின் மணம் உள் நுழைந்து இயற்கையின் கை பரப்பி எதையோ செய்வது போல்; அவளும் அவனுள் நுழைந்து என்னென்னமோ செய்தாள்.

ஒரு ரம்யாமான இசையின் கூச்சலாக இல்லாத ஓசையும், சன்னமாக மிளிரும் விளக்கொளியும் அகன்று விரிந்து, பணத்தினால் பளீரிட்ட ஐந்து நட்சத்திர மாளிகையின் ஒரு வளாகம் அது. அவனை கடந்து அவள் சற்று தூரமிருந்த இருக்கையில் அமரப் போக.

அவனுக்குச் சட்டை பையிலிருந்த நேற்றிரவு எழுதிய கவிதையின் நினைவு வர.. அதை எடுத்து வாசித்தான். வெளியில் கேட்காத அவனின் மனதின் சப்தம், “அவளின் பார்வையை தொட்டிருக்க வேண்டும். அவள் திரும்பி அவனை பார்த்தாள். அவன் அவளை கவனித்திட வில்லையென்றாலும், அவளை ஏதோ ஒன்று அவனிடமிருந்து ஈர்த்ததாக உணர்ந்த வாணி எழுந்து அவனருகில் வருகிறாள். அவள் வருவதைக் கவனத்தில் கொண்டிடாத மகதன், தான் எழுதிய கவிதையின் மடலை பிரித்து படிக்கத் துவங்கினான்.

பெண்னெனில் தேவதையோ!!

“பொன்னிறக் காட்டில்
வெண்ணிறம் உடையாள் இவள்,

சங்க காலம் சூட மறந்த
இந்த கால –
செஞ்சூட்டு ஒளியாளிவள்..,

இவளின்,
வளைத்துப் போட்ட துப்பட்டா – ஒளித்து வைத்துள்ள
இன்பத் தேர் அதிசயமும்,

கடித்து இழுக்க; மதுரம் தெறிக்கும்
சிலிர்ப்பூட்டும் செவ்விதழும்,

ஈரம் படிந்த இதழ்களிலே
ஒத்தியெடுக்க மிகுந்த முத்தங்களும்..,

கன்னம் முழுக்க கதகதப்பில் – குவிந்த
வர்ண – காதல் ரேகையும்,

ஆசைகளில் புதைந்து போன
நளினத்தின்;
வாலிப்பு குறையாத வளைவு சித்திரமும்,

மேனி அழகைக் கூட்டிக் காட்டும்
கழுத்தாய்ப் பூத்த –
சங்கு மலரும்..,

அகன்று விரிந்த மார்பின்
கவர்ச்சி மறைத்தும்; மலர்ந்தும்;
தொடும் – உணர்வில் பூக்கும் மேனி – இரண்டெழிலும்,

மூச்சுக் காற்றில் மேனி பரவி
இடைகொடி வளைத்து நடனமாட
அழகு கொஞ்சும் அவளின் – சிணுங்கல் ஜாலமும்,

இன்னும் தேடி கிடைக்கும் வர்ணனையில்
சொல்ல மிகாமல் உள் புதைத்த –
பெண்- மயிலின்; பெண்மை சுகந்தமும்,

அப்பப்பா!! பெண்ணிவளே; பெண்ணிவளே;
ஓ’ பெண்ணென்றால் தேவதையோ –
என்னவளே; அடி என்னவளே…. இதயம் தட்டி உள்புகும்
வெப்ப நெருப்பே;

பஞ்சு பூட்டிய மேனியினால் – நெஞ்சு பூரித்தவளே
வா..
வாசல் திறக்காத வழிக்குள் புகுந்து
காமம் சொட்டாத காதல் தேரிழுப்போம்! வா..!!”

அவன் படித்து முடித்த கடைசி புள்ளிக்கு முன்னரே, அவள் வந்தாள். காகிதத்தில் பட்ட அவள் நிழல், மெல்ல அருகே வந்து அவனுள் புகுந்து கொண்டதாய் உணர, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். லேசாக படபடத்தான். காதல் சொக்கும் பார்வையில் அவனுக்குள் லயித்துப் போயிருந்தாள் வாணி.

“என்ன மகத் இது” புன்னகையில் வெட்டிய மின்னலாய்க் கேட்டாள்.

“ஒன்னுமில்லையே.. சும்மா..” உதடு குவித்து, பார்வையினால் படபடப்பை மறைத்துச் சிரித்தான் மகதன்.

“இல்லையே ஏதோ என்னைப் பற்றிய கவிதை போல் தெரிந்ததே..”

“இல்லை இல்லை”

“ஏதோ ‘வாணி” என்று இருந்ததைப் பார்த்தேனே”

“ஐயோ.. பார்த்தீங்களா…?”அவனுக்கு உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது. “இல்லை இல்லை.. சரியா பார்த்திருக்க மாட்டீங்க..”

அவள் வானம் போல இமை விரித்து, காதல் பொங்கி வழிய அவனைப் பார்த்து, அழகான ஒரு புன்னகையை உதிர்த்தாள். அவன் மறுத்ததிலிருந்து படித்தது வரை அவள் அவனை மொத்தமும் ரசித்திருந்தாள் போல்.

அனைத்தையும் மறைத்துக் கொண்டவளாய்; ஒன்றுமே அறியாதவளை போல் அவனிடம் “என்னை பிடிச்சிருக்கா மகத்..?”

சிரித்தான் மகதன். வடநாட்டு நாயகன். அவளையே பார்த்தான். ஒரு உலகம் தனக்காய் கைகளில் மலர்ந்து என்னை உனக்கு வேண்டுமா என்பது போலிருந்தது மகதனுக்கு.

“சிரிக்காதீங்க.. சொல்லுங்க, என்னை பிடிச்சிருக்கா…?” மீண்டும் கேட்டாள்.

அவன் அவளின் விழிகளைப் படித்துக் கொண்டான்.., மறுக்க இம்முறை இயலவில்லை மகதனால்.

“சொல்ல வார்த்தைகளில்லாத அளவு புடிச்சிருக்கு வாணி”

“காதலிக்கிறீங்களா???”

“சொல்லத் தெரியவில்லை; அதிகபட்சம் அப்படித்தான்.”

“என் வயசு தெரியுமா?”

“அழகில் மறைந்து கொண்டது வயசு”

“நான் ஏற்கனவே திருமணமாகி டிவோஸ் ஆனவள்; தெரியுமா?”

“தெறிந்து கொள்ள மனசு மறுக்கிறது வாணி”

“உங்கள் மனைவிக்குத் தெரிந்தால் என்னாகும் யோசித்தீர்களா?”

“என்னென்னமோ, ஆகும்; ஆனால் என்னை அவளுக்குப் புரியும்”

“என்ன புரியும்? நீங்கள் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம்… அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்கிறீர்களா?”

“அப்படியில்லை..”

“நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு மகத். அது நம்மோடுள்ள அவர்களுக்கு நன்றாகவேப் புரியும்”

“அதனால் மனதை மறைத்துக் கொள்ள நீங்கள் தயாரா?”

“தயாரில்லை என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை மகத். ஒரு பரப்பாக பேசப்படுற ஹீரோ நீங்க. இப்படி எல்லாம் இருந்தா கேரியர் போய்டும் மகத். அழகை யார் ரசிக்க மறுப்பார். எனக்கும் உங்களை மிக மிக பிடித்ததுதான். பார்த்த முதல் நாளே மனசு உங்களை ரசிக்கக் கேட்டது தான். உடனே இடம் கொடுக்க மறுத்து விட்டேன். தன் தேவைக்கு மிஞ்சிய ஒரு பொருள் ஈர்க்கிறது எனில் அது தேவையா, அதை ஏற்கனுமான்னு யோசிக்கனும்.”

“நீங்க யோசிச்சீங்களா?”

“நிறைய….. யோசிச்சேன் மகத்”

அவன் தன் கண்களை ஆச்சரியமாக விரித்து அவளைப் பார்த்தான். எதையோ பெறாமலே, பெற்றதாய் நிறைந்து போனான். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது என்ற ஒற்றை வரியில், மனது சமாதானம் ஆகிக் கொண்டதை மீறி..

“என் தேவை உடம்பு இல்லை வாணி. ஏதோ ஒன்று உங்களிடம் ஈர்த்துவிட்டது, அதிலிருந்து வெளியேறுவதை வலிப்பதை உணர்கிறேன் வாணி, எதையோ சொல்லித் தேற்றிக் கொள்ள இன்னும் பக்குவப் படவேண்டும் போல், சரி..,உண்மையிலேயே நானும் உங்களுக்கு அவ்வளவு பிடித்திருந்தேனா வாணி?”

“ஆம் மகத். நிறைய பிடித்திருந்தது. உதடு ஒட்ட நடிக்கிறோமே. மனசு நினைக்காமலா இருக்கும். எங்கெங்கோ போறோம்.. யார் யார் கூடவோ பழகுறோம்.. எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். எல்லோரையும் மனசு விரும்புவதில்லை. ஆனால், சிலரை மட்டும் அள்ளி உயிர் வரை நிறைத்துக் கொள்கிறது மனசு; என்றாலும், உடனே அதை பிடுங்கி எரிந்து விட வேண்டுமென்றுதான், இக்காலம் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது மகத்”

“அது எல்லோராலும் முடிவதில்லை வாணி”

“முடியனும். முடியலன்னா வாழ்க்கை கடினம் மகத். இன்னைக்கு என்னைப் பிடிக்கும். நாளைக்கு என்னை விட அழகா ஒருத்தி வந்தா அவளையும் பிடிக்கும். எல்லோரையும் அடைந்திட முடியுமா?”

“எல்லோருக்காகவும் மனசு இப்படி தவிக்கிறதில்லையே..”

“இப்போ அப்படி தோணும். காலம் எல்லாத்தையும் மறைத்து, சற்று தூரம் கடந்த பின், வேறு ஒரு அழகான பெண்ணைக் காட்டினால் அவளுக்காகவும் மனசு உருகும்.

நாம் கூட தான் கடைக்கு போகிறோம், ஒரு பொருள் பார்க்க மிக பிடித்து போகிறது. எடுத்து விலையென்ன என்று பார்க்கிறோம். விலை பத்துருவான்னா உடனே வாங்கி விடுவோம். விலை கோடி ரூபா என்று வைத்துக் கொள்ளுங்கள். வாங்குவோமா? அப்பப்பா இது ரொம்ப அதிகமென சொல்லி உடனே வைத்து விடுவதில்லை? அப்படி ஆசைகளையும் அங்கங்கே அடக்கி வைத்துவிட வேண்டும் மகத்”

மகதிற்கு கையில் வேர்த்திருந்த ஈரம் சற்று காய்ந்தது போல் உணர்ந்தான். உள்ளுக்குள்ளே தன்னை யாரோ ஆட்கொண்டு சடாரென விட்டுவிட்டதை போல் உணர்ந்தான்.

மனசு, பேசிவிடுகையில் லேசானது போல் இருந்தது. யாரோ உள்ளே புகுந்து எதையோ தெளிய வைத்து, தூக்கி தன்னை நிறுத்திவிட்டதை போல ஒரு உணர்வில் பூரித்தான். கையை மேலே தூக்கி நெட்டை முறித்து… ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டு லேசான புன்னகையோடு அவளைப் பார்த்தான்.

“என்னடா இவ, எதனா ஆசையா பேசுவாளேன்னு பார்த்தா, இப்படி எல்லாம் சொல்றாளேன்னு பார்க்கிறீங்களா மகத். ”

“இல்லை வாணி. இப்போ தான் மனதில் இன்னும் ஆழமா நிறையறீங்க. காதல் உணர்வில்; காமமில்லாத அன்பா, நட்பா, உடம்பெல்லாம் ஊர்கிறது உங்களின் வார்த்தைகள். ஒருவேளை நான் எதிபார்த்தது கூட, இந்த மாதிரி வார்த்தைகள் அளவிலான ஒரு நெருக்கத்தை தானோ? என்றொரு நிறைவு ஏற்படுகிறது வாணி.

மனசு விட்டு சொல்லனும்னா.. எதையோ விழுங்கி விட்டதாய் சொல்வார்களே, அப்படித் தான் தவிக்கிறேன் நானும் உங்களை கண்டதிலிருந்து. ஏற்றுக் கொள்ள இயலாத சமூகத்தில், இதயம் துளைத்து நுழைந்து விட்டாய் உள்ளே. அதை எப்படி சொல்வதெனக் காத்திருந்தேன். ஆனால் நீங்களோ, என் உணர்வையும் மிக அழகாய் புரிந்து, உங்களின் ஆசையையும் சொல்லி, காதலை; வலியின்றி ஏற்றும் மறுக்கவும் செய்கிறீர்களே…., உங்களைத் தவறாக அப்படி என்ன நினைத்து விடுவேன் வாணி. இன்னும் சற்றுக் கூடுதலாக நேசிக்கவே செய்கிறேன்…?”

“அப்படியா…” என்பதைப் போலவள் புருவம் உயர்த்தி, அவனை பார்த்து மானசீகமான ஒரு பார்வையில் சிரித்துக் கொள்ள.

“வாணி அழகானவள். வாணியை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, என்று சொல்வதில் என்ன தவறிருந்து விடும் வாணி..?”

“தவறில்லை, நாலு பேர்கிட்ட சொன்னீங்கன்னா. செய்தில போட்டு, நீங்களும் நானும் காதலர்கள், கட்டிப் பிடித்தோம், முத்தம் கொடுத்துக் கொண்டோம் என்றெல்லாம் எழுதி, இந்த படத்தோட ஸ்டில்ஸை எல்லாம் போட்டு கிழி கிழின்னு கிழிச்சுடுவாங்க. ஜாக்கிரதை” அவள் சொல்லி சிரித்தாள். அந்த சிரிப்பு கூட அவனுக்குள் ரசனையாய் பரவி காதலாகவே மின்னியது.

“அவள் மீண்டும் அவனிடம் சிரித்துக் கொண்டே, பார்க்கலாம்.. பேசலாம்.. தவறில்லை. ஆசை வளராமல் பேசும் பக்குவத்தில் பழகலாம், தவறில்லை. எதையும் உடலால் பகிர்ந்துக் கொள்ள அவசியம் ஏற்படாத, மனதால், மானசீகமாய் அன்பு செய்யலாம், தவறில்லை”

கட்.. கட்.. கட்.. வெரிகுட் ஷாட். வாணி வந்தாச்சா..” எங்கோ பக்கத்து அறையில் வேறு பாத்திரங்களின் காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வளாகத்திற்கருகில் கேட்டுக் கொண்டே வர…

ஆம்.. நாங்க இருக்கிறோம்.. டைரக்டர். ” அவள் மயில் போல் துள்ளி எழுந்து, அவனிடம் பார்வையில் விடைபெறுகிறேன் என்பதை சொல்லி, மனதால் கட்டி அணைத்துக் கொண்ட உணர்வின் இறுக்கமாக கையை அழுத்திக் கொடுத்துவிட்டு, சரிந்த துப்பட்டாவை எடுத்து பின்னே வீசி, நெற்றிமுடி சரி செய்து அழகாக் சுற்றிவிட்டுக் கொண்டு, மீண்டும் திரும்பி மகதை பார்த்து ஒரு புன்னகையை வீசிவிட்டு, இயக்குனரை நோக்கிப் போகிறாள். மகதின் மனதிற்குள் வாணி என்றொரு பெயர் நட்பின்; அன்பின்; ஆழப் பதிந்த அடையாமாக பதியத் துவங்கியது.

காமம், எல்லா(ம்) இடத்திலும் அவசியப் படுவதில்லை. அது ஒரு பசி. அன்பு கலந்த பசி. அதை பகிர்ந்து கொள்ள ஒருத்தி போதுமானதாகவே இருக்கிறது. ஆனல், காதல் அவ்வபொழுதல்ல எப்பொழுதிற்குமாய் தேவைப்பட்டது. காமம் இருப்பினும் மறைத்துக் கொண்டு அல்லது அகற்றி விட்டு வெறும் அன்பை வெளிப்படுத்தும் மனசு நிறைய பேருக்கு தேவையாக இருக்கிறது.

மனது விரும்பும் அத்தனையையும் ஒரே இடத்தில் பெற்றிடாத மனதின் ஏக்கத்திற்கு தீனி போட, வாணி போலவும் மகத் போலவும் ஆங்காங்கே சிலரின் தேவைகள் இருந்தாலும்; காமமின்றி கடக்கும் தருணங்கள் அன்பால் நிறைக்கப்பட்டு, மேலும் நம்மை மின்னிடவே செய்கின்றன. அந்த மின்னலில் தோழிகளும் சகோதரிகளும் ஏன் குருவாக கூட நிறைய பேர் கிடைக்கலாமென்று ஒரு எண்ணம் ஊறியது மகதிற்கு.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் இடைவெளியில் மகதனும் வாணியும் சிரித்து சிரித்துப் பேசி நட்பில் காதலைக் கடந்தார்கள்.

ஆனால்… செய்திகள் அவர்களுக்குள் இருப்பது நட்பில்லை காதலென்றும், வெறும் காதல்கூட இல்லை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்களென்றும், ரகசியமாய் திருமணமே ஆகிவிட்டதென்றும் என்னென்னவோ கதைகதையாய் எழுதிக் கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *