எவராவது பெயருக்கு ஏற்ற மாதிரி இருப்பார்களா? இருப்பார்களே. ஆம் வசீகரன் பெயருக்கேற்ற மாதிரிதான் இருந்தான்.
கடந்த வாரம்தான் அந்த பெரிய ஐ.டி கம்பெனியில் டெலிவரி ஹெட்டாகச் சேர்ந்தான். அவனுக்கு கீழே நான்கு ப்ராஜெக்ட் மானேஜர்கள், பத்து டீம் லீடர்கள் அதற்கும் கீழே நிறைய இஞ்சினியர்கள்.
சுகன்யா அதே டீமில் சீனியர் இஞ்சினியர். வயது இருபத்தியெட்டு. இன்னமும் திருமணமாகவில்லை. அழகான, அமைதியான, நல்ல சாத்வீகமான பெண்தான். ஆனால் அவளுக்கு வசீகரனைப் பார்த்ததுமே அவன் மீது ஒரு தீராக் காதல். அடிக்கடி அவள் மனதில் வந்து கொண்டேயிருந்தான்.
சில பேரை நமக்கு பார்த்தவுடனே பிடித்துவிடும். காரணம் எதுவும் தெரியாது, தேவையுமில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும், திறமையாகவும் நமக்குத் தோன்றும். அதுவும் அவர்கள் பார்ப்பதற்கு சற்று ‘பளிச்’சென்று இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம். அப்படித்தான் சுகன்யாவின் மனசுக்கு வசீகரன்.
அவன் தன் வேலையில் எதைச் செய்தாலும் திருத்தமாக இருப்பதாக பேசிக் கொண்டார்கள். அதிர்ந்து பேசாத அமைதியான அவன் பண்பும், டெக்னிக்கல் விஷயங்களை சர்வ அலட்சியமாக எதிர் கொள்ளும் திறமையும், எல்லோரையும் மதிக்கும் மரியாதையும் – சுகன்யா அவனை நினைத்து நினைத்து காய்ந்தாள்.
அவனுடன் பேசுவதற்கும் அவனின் கடைக்கண் பார்வைக்கும் அதிகம் மெனக்கிட்டாள். ஒரே அலுவலகம் என்பதால் அந்த மாதிரி சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைந்தன.
ஒரு நாள் வசீகரன் டீம் லஞ்சுக்கு தன்னுடைய டீமில் வேலை செய்யும் அனைவரையும் கூட்டிச் சென்றான். லஞ்சின் போது சுகன்யா அவனருகில் அவனை உரசியபடி அமர்ந்து கொண்டாள். அவன் சாப்பிடும்போது போர்க், ஸ்பூன், கத்தி அனைத்தையும் மிக எளிதாகப் பயன் படுத்தியது, வாயைத் திறக்காமல் உதடுகளை ஓட்டியபடியே மென்றது, அடிக்கடி நாப்கின்னால் உதடுகளை ஒற்றிக் கொண்டது என வசீகரன் மீது அவளுக்கு பிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போனது.
லஞ்ச் முடிந்து அலுவலகம் திரும்பி வரும்போது அவனுடன் அவன் காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஹாரன் அடிக்காது லாவகமாக அவன் கார் ஓட்டிச் சென்ற அழகில் லயித்தாள். கியர் மாற்றும்போது அவனின் இடது கை, சுகன்யாவின் தொடையில் அடிக்கடி உரசியபோது தன் காலை சற்று அகட்டி வைத்துக் கொண்டாள்.
மறுநாள் வேண்டுமென்றே ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு அவன் கேபினுக்குச் சென்றாள்.
அவன் பக்கவாட்டு டேபிளின் மீதிருந்த புகைப் படத்தில் ஒரு அழகிய குழந்தையைப் பார்த்து, “இது யார் வசீ…?” என்றாள்.
“ஷி இஸ் மை டாட்டர் மஞ்சரி.”
“ஓ நைஸ் நேம்… ஸோ க்யூட்…”
அடுத்த வாரம், டீம் மீட்டிங்கில், அவன் பிரசன்டேஷன் கொடுத்தபோது, முன்னால் இடம் பிடித்து அமர்ந்து கொண்டு அவனையே கண் கொட்டாது ரசித்தாள்.
அவனது ஆறடி உயரமும், சிவந்த நிறமும், சிரித்த முகமும், ஆரோக்கியமான வரிசையான பற்களும், அடர்த்தியாக செப்பனிடப்பட்ட கரிய மீசையும், தினமும் ஷேவ் பண்ணிக் கொள்வதால் மழ மழ கன்னத்தில் தெரியும் பச்சை நிற நரம்புகளும், அழகிய அடர்த்தியான புருவங்களும், நீளமான சிவந்த விரல்களில் சீராக வெட்டப் பட்ட நகங்களும், தினமும் மேட்சிங்காக உடைகளை மாற்றி மிக நேர்த்தியாக உடையணியும் பாங்கும், நான்காக மடித்திருக்கும் வெள்ளை நிற கர்சீப்பை எடுத்து முகத்தை ஒற்றிக் கொள்ளும் ஆழகும், அணிந்திருக்கும் சட்டை நிறத்திலேயே சாக்ஸ் அணியும் கவனமும், தினமும் ஷூவிற்கு பாலீஷ் போடத் தெரிந்த அக்கறையும் என தலை வாரிக் கொள்வதில் இருந்து ஷூ போடுவது வரை ரசனை உணர்வுகள் தெறித்தன. ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? என்று எண்ணி வியந்தாள். அவனின் கம்பீரமே தனியானது என்று அவளுக்குப் பட்டது.
அவன் திருமணமானவன். மனைவி, குழந்தை இருக்கிறது. அதனாலென்ன? அவனோட ‘அந்த’ இன்னொருத்தியா நான் இருந்துட்டுப் போறேன்… சுகன்யா முடிவு செய்து விட்டாள். இனி அவன்தான் தனக்குத் தேவையான ஆதர்ஷ புருஷன். அவனை மெல்ல மெல்ல நெருங்கி தன் மனசும் உடம்பும் அவனுக்காகத்தான் என்பதை புரிய வைக்க வேண்டும். அவன் லெவலுக்கு இவளை அவன் ஞாபகம்கூட வைத்துக் கொள்ள மாட்டான். பரவாயில்லை ஒண்ணுல ரெண்டு பார்த்து விடுவது என்று உறுதி பூண்டாள். முதலில் அவனது மனைவியிடம் நட்பு பாராட்ட வேண்டும். அடுத்து குழந்தையை அன்பால் நெருங்க வேண்டும். மெதுவாக அவர்களின் குடும்பத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
ஹெச்.ஆரில் இருக்கும் அவளது நண்பியைப் பிடித்து வசீகரனின் பையோ டேட்டா முழுதையும் தெரிந்து கொண்டு, அவனது வீட்டின் முகவரியையும் குறித்துக் கொண்டாள்.
அன்று சனிக்கிழமை, விடுமுறை தினம்.
பதினோரு மணிக்கு நங்கநல்லூரில் வசீகரன் குடியிருக்கும் வீட்டை தேடிக் கண்டு பிடித்தாள். வெளியே தள்ளி இருந்துகொண்டு தன் மொபைலில் இருந்து வசீகரன் மொபைலுக்கு போன் செய்தாள்.
“ஹாய் வசீ.. திஸ் இஸ் சுகன்யா, சீனியர் இஞ்சினியர் இன் யுவர் டீம்..”
“எஸ்…எஸ். ஐ ரிமெம்பர் யு சுகன்யா, ப்ளீஸ் டெல் மீ.”
“நான் நங்கநல்லூர் ஹனுமார் கோவிலுக்கு வந்தேன்… நீங்க இங்கதான் எங்கயோ குடியிருக்கிறதா கேள்விப் பட்டேன்… அதான் ஜஸ்ட் போன் பண்ணேன். ஹவ் இஸ் மஞ்சரி?”
“ஓ ஷி இஸ் பைன்.. டாய்ஸ் வெச்சு விளையாடிகிட்டிருக்கா…”
“அவள பாக்க இப்ப வரலாமா?”
“ஓ ஷ்யூர், ப்ளீஸ் நோட் டவுன் மை அட்ரஸ்”
குறித்துக் கொள்வது போல் பாவித்தாள். காதல் என்றாலே கற்பனையான பொய்யும், அசட்டுத் தைரியமும் உடனே ஒட்டிக் கொண்டு விடுமே… அடுத்த பத்து நிமிடங்களில் வசீகரன் வீட்டில் இருந்தாள்.
வீட்டின் விஸ்தாரமான வரவேற்பறையில் அமர்ந்தாள். எதிரே வசீகரன் அமர்ந்தான். வெள்ளை நிற ஜிப்பா பைஜாமாவில் மிக அழகாகத் தெரிந்தான். கால் பாதங்கள் வெளுப்பாக சுத்தமாக இருந்தன.
“எங்க மஞ்சரிக் குட்டி?”
அடுத்த அறைக்கு கூட்டிச் சென்றான். ஏராளமான விளையாட்டுச் சாமான்களுடன் மஞ்சரி தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. நான்கு வயது இருக்கலாம். சுகன்யாவைப் பார்த்து அழகாகச் சிரித்தது.
சுவற்றின் மீது வசீகரனும் அவன் மனைவியும் இருக்கும் புகைப்படம் லாமினேட் செய்யப்பட்டு மாட்டியிருந்தது. அறையின் ஓரத்தில் ட்ரெட் மில் இருந்தது.
சுகன்யா குழந்தையை அள்ளி வாரிக் கொண்டாள். அது அழாமல் இவளிடம் ஒட்டிக் கொண்டது.
“எங்க வசீ… உங்க மனைவி?”
“ஷி இஸ் நோ மோர் சுகன்யா.”
“ஓ காட்… வாட் ஆர் யு டெல்லிங் வசீ?”
“எஸ் ஐ லாஸ்ட் ஹர் டூ இயர்ஸ் அகோ… ஷி ஹாட் த்ரோட் கான்சர்.”
“அப்ப மஞ்சரிய யார் பாத்துக்கறா?”
“வாரத்தில் ஐந்து நாட்கள் ஒரு ஆங்கிலோ இன்டியன் மெய்ட் வருவா.. அவ பாத்துப்பா… சனி, ஞாயிறுகளில் நான் பார்த்துப்பேன்.”
“……….”
“குழந்தையின் தற்போதைய படிப்பு, சாப்பாடு, பொழுதுபோக்கு எல்லாத்தையும் நானும் அந்த ஆங்கிலோ லேடியும் பார்த்துப்போம்…
அவளுக்கு ஐந்து வயசானப்புறம் ஒரு நல்ல போர்டிங் ஸ்கூல்ல அட்மிட் பண்ணிடுவேன்… கொஞ்ச நாளுக்கு ஓவர்லாப் பண்ணி கவனிச்சுண்டா சரியாயிடும்.”
சுகன்யா கரைந்து போனாள்.
அன்று இரவு தூக்கம் வராது படுக்கையில் புரண்டாள். தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவளாக தூங்கிப் போனாள்.
திங்கட்கிழமை வசீகரனுக்கு தமிழில் ஒரு மின்னஞ்சல் வந்தது.
“அன்பு வசீகரன், நான் சுகன்யா. கடந்த சில வாரங்களாக தங்கள் மீது பைத்தியமாக இருக்கிறேன். தங்களின் பண்பும், நாகரீகமும், கம்பீரமும் என்னை அடித்துப் போட்டது நிஜம். சென்ற சனிக்கிழமை தங்கள் வீட்டிற்கு வந்தபோதுதான் மஞ்சரியின் அம்மா தவறிய சோகம் எனக்குத் தெரிய வந்தது.
வசீ, நான் நேராக விஷயத்துக்கு வருகிறேன். நான் தங்களை மணந்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்கு ஒரு நல்ல மனைவியாகவும், மஞ்சரிக்கு சிறந்த தாயாகவும் என்னால் இருக்க முடியும். நான் தொடர்ந்து வேலைக்கு போவதும், அல்லது நின்று கொள்வதும் உங்கள் விருப்பம்.
தங்களின் சம்மதம் தெரிந்தால் நான் என் பெற்றோர்களிடம் பேசுவேன்.
ஆவலுடன் சுகன்யா.
அன்று மாலையே வசீகரனிடமிருந்து பதில் வந்தது.
சுகன்யா, மறைந்த என் அருமை மனைவி ஹேமாவின் இடத்தை எவருமே இட்டு நிரப்ப முடியாது. மஞ்சரிக்கு நானே ஒரு நல்ல தாயாகவும், தகப்பனாகவும் இருக்க முடியும். மஞ்சரிக்கென்று எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகம். ப்ளீஸ்… இது மாதிரி எண்ணங்களை தவிருங்கள். இதற்கு மேல் இந்த டாப்பிக்கை வளர்க்க நான் விரும்பவில்லை. வசீகரன்
உடனே சுகன்யாவிடமிருந்து ஒரு மெயில் சென்றது.
புரிகிறது வசீகரன். புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் நீங்கள் அழகுதான்.
ஒரு நல்ல தகப்பனான உங்களுக்கு சுமைகளும் அதிகம்தான். ஆனால் நான் உங்கள் கடமைகளும் பொறுப்புகளும் முடியும் வரை, எத்தனை வருடங்களானாலும் உங்களுக்காக காத்திருப்பேன் வசீகரன். என் மனதை தீண்டிய முதல் ஆண் மகனாகிய நீங்கள்தான் என் உடம்பையும் தீண்ட வேண்டும். எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும். என்னை உங்கள் டீமிலிருந்து உடனே வேறு டீமுக்கு மாற்றி விடுங்கள். செய்வீர்களா?
நானும் இதற்கு மேல் இந்த டாப்பிக்கை வளர்க்க விரும்பவில்லை.
சுகன்யா.