‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,586 
 
 

‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

நந்தகுமாரை ஏதாவது பத்திரிகையிலிருந்து அந்தரங்க சர்வேக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிடைத்தது? சிநேகிதிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை எத்தனை பேருடன் நெருக்கம்? போன்ற கேள்விகளுக்கு அவனால் ஆராய்ச்சியாளர்களைத் திடுக்கிடவைக்க முடியும்.

‘‘இன்பம், பரவசம், சந்தோஷம்… இந்த வார்த்தைகளுக்கெல்லாம் உதாரணம் காட்ட கடவுள் கஷ்டமே படலை. ஃபிகர்களைப் படைச்சுட்டு ஒதுங்கிட்டான். ஹார்மோன்கள் தங்கள் கடமையைச் செய்யும் போது தடுக்கிறதுக்கு நாம யாருடா?’’ என்பான்.

அப்படிப்பட்ட நந்து என்னிடம் அந்தரங்கமாகப் பேசியதில் அதிர்ச்சியடைந் தான். ‘‘என்னது, இந்த முப்பத்தி ரண்டு வயசுலயும் இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா? எப்பிடிரா?’’

‘‘இல்ல நந்து, இப்படியே இருந்துட்டேன்’’ – அவன் முன் பரிசுத்தமானவனாகக் காட்சி யளிக்க விரும்பினேன்.

‘‘அப்ப, உன்னை டாக்டர் கிட்டே காட்டிக் குணப் படுத்தணும். பெரிய பெரிய ரிஷிகளே தடுக்கி விழுந்த ஃபீல்டுடா இது!’’ என்றான் அந்த உல்லாசி. ‘‘நிஜத்தைச் சொல்லு. எந்தப் பொண்ணோட யும் உனக்குப் பழக வாய்ப்பு கிடைச்சதே இல்லியா?’’

அப்போதுதான் பவித்ரா வைப் பற்றி சொன்னேன்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. பவித்ரா வுக்கும் எனக்கும் ஏறக்குறைய ஒரே வயது. ப்ளஸ் டூ-விலிருந்து பழக்கம். அவள் கல்லூரியை முடித்தபோது என் வீட்டில் கிரிக்கெட்டையும் டி.வி-யையும் திட்டி, அவைதான் என் தோல் விக்குக் காரணம் என்றார்கள்.

‘‘உன்னோட நோட்ஸ் ஏதா வது கொடுத்து ஒப்பேத்தி விடேன்.’’

‘‘நானாச்சு’’ என்றாள் பவித்ரா. கொஞ்ச நேரம் கௌரவம் பார்த்துவிட்டு ஒப்புக் கொண்டேன்.

அவளது அப்பா, அம்மா பாங்க் ஊழியர்கள். அவர்களின் மதிய உணவு பாங்க்கில்.

பவித்ராவின் அறை. லுங்கி, நைட்டி, தனிமை.

‘‘அதே ரூம்ல சாத்தானும் ஒரு ஓரமா உக்காந் திருப்பானே…’’ என்றான் நந்து.

மெக்கானிக்ஸ், மாடர்ன் அல்ஜீப்ரா, லீனியர் புரொகிராமிங், போன வருடக் கேள்விகள், இந்த வருடம் கேள்வித் தாளில் இடம்பெறச் சாத்தியமுள்ள கேள்விகள், பல்வேறு கல்லூரிகளிலும் மாடல் டெஸ்ட்களில் கேட்கப் பட்ட கேள்விகள்… இவை தவிர, பேசுவதற்கு வேறு விஷயங்களும் இருக்கின்றன என்பது சீக்கிரமே இரண்டு பேருக்கும் புரிந்து போனது.

நான் பேசத் தயங்கிய பல விஷயங்களையும் பவித்ரா சகஜமாகப் பேசினாள். உதாரணம், ‘‘என் ஃப்ரெண்ட்ஸ்லாம் என்னை நாட்டுக்கட்டைனு சொல்றாங்க.’’

‘‘இப்ப நீ என்ன சொல்லியிருக்கணும்னா…’’ என்றான் நந்து. கடந்த காலத்துள் அழைத்துச் சென்றான்.

‘‘ஏன் இப்படி உன்னைத் தப்பா பேசறாங்க? ஃப்ரெண்ட்ஸா அவங்க? துரோகிங்க… சரியான நாட்டுக்கட்டைன்னுல்ல சொல்லியிருக்கணும்!’’

முல்தானியா மிட்டியை முகத்தில் அப்பிக்கொண்டு இருந்த தினத்தில், ‘‘பாலு’’ என்றாள் தேவதைத்தனமாக.

‘‘என்னைப் பத்தி என்ன நினைக்கிறே? என் அழகோட ப்ளஸ் பாயின்ட் எதுன்னு உனக்குத் தோணுது? கண்களா, மூக்கா, உதடா… இல்ல வேற எதுவுமா?’’

‘‘….’’

‘‘சொல்லேன் பாலு.’’

‘‘இப்ப அதுக்கென்ன? அழகு நிலையற்றது’’ என்றேன்.

‘‘அடப்பாவி!’’ என்றான் நந்து. ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க் அவுட் ஆயிட்டிருக்கும் போது தத்துவப் பாடம் நடத்தியிருக்கியே… நீ என்ன சொல்லியிருக்கணும்னா…’’

‘‘கண்ணைச் சொன்னா அப்புறம் உதட்டை யார் சமாதானப்படுத்துறது? உதடுன்னு சொன்னா மூக்கு ஃபீல் பண்ணும். கழுத்துன்னு சொன்னா மத்ததுங்க கோவிச்சுக்கும்…’’

‘‘மத்ததுங்களா… அப்படீன்னா…’’ பவித்ரா சிறிது வெட்கமுடன் ‘‘நீ மோசமான பையன்டா… அசிங்கமா என்னென்னவோ சொல்ற…’’

‘‘ஹேய், என்னாச்சு உனக்கு? நான் உன் விரல்களைச் சொல்ல வந்தேன்…’’

‘‘விரலா..?’’ என்றாள் ஏமாற்றமுடன்.

ஹாங், உக்கும், ச்சீ, …ப்பா, அச்சச்சோ… மொழி பெண்களுக்காகவே இவ்வார்த்தை களைத் தயாரித்து தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது போலும். பவித்ரா இவற்றைக் கையாள்வதில் நிகரற்று விளங்கினாள்.

‘‘ப்ச்… பாலு, நீ நேர்மை யானவன் இல்ல…’’ என்றாள். செயினைக் கடித்தவள், ‘‘நீ பேசறப்ப என் முகத்தைப் பாத்துப் பேசணும்.’’

‘‘ஐயோ…’’ கதறிவிட்டேன். ‘‘சத்தியம் பண்றேன் பவி. நான் வேற எதையும் பாக்கல…’’

‘‘சின்ன பப்பா, பாக்க லையாமில்ல..!’’

‘‘எந்தக் கோயில்ல வேணும்னாலும்…’’ என்று துவங்கும்போது போன் ஒலித்தது. ‘‘நல்லாயிருக்கேன். ஒரு ஃப்ரெண்ட்கூட பேசிட்டிருக்கேன். போடி… உனக்கு வேற வேலை இல்ல. நீ நினைக்கிற மாதிரில்லாம் இல்ல… அது ஒண்ணுதான் குறைச்சல். என்ன புண்ணியம், புரிஞ்சா சரி… லூசுடி…’’ என்று போனை வைத்தாள்.

‘‘சிக்ஸர் அடிச்சுக் கோன்னு அவளே பந்து போட்டு கொடுத்திருக்கறா… அதப்போய் கட்டை போட்டு ஆடியிருக்கியே…’’ என்றான் நந்து. ‘‘அடுத்த காட்சி எப்படி இருந்திருக்கணும்னா…’’

‘‘ஸாரி பவி… உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு. என்னால கன்ட்ரோல் பண்ணிக்க முடியல. உன் முகத்தைப் பாத்துப் பேசணும்னுதான் நினைக்கறேன்… தப்பு என்னோடது இல்ல. உன் அழகோட தப்பு…’’ கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டவாறு அவளை அணைத்து…

‘‘அப்புறம், அந்த போன்… என்ன நடந்திருக்கும்னா…’’

ஃப்ரெண்ட்: ‘‘பாய் ஃப்ரெண்டா? நடத்துடி…’’

பவித்ரா: ‘‘போடி, உனக்கு வேற வேலை இல்ல…’’

‘‘உன் ஆளு கைய வச்சுக் கிட்டு சும்மா இருக்கானா?’’

‘‘நீ நினைக்கிற மாதிரி இல்ல…’’

‘‘சும்மா சொல்லுப்பா. கிஸ்…?’’

‘‘அது ஒண்ணுதான் குறைச்சல்…’’

‘‘யாருமே இல்ல. ம்… கிளப்பு…’’

‘‘என்ன புண்ணியம். புரிஞ்சா சரி…’’

‘‘பையன் எப்படி? ஓ.கே-யா?’’

‘‘லூசுடி…’’

‘‘அநியாயம். இப்படித் தான் பேசியிருப்பாங் கன்னு எப்படிச் சொல்ல முடியும்?’’ என்றேன்.

‘‘கண்டிப்பா இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி பேசியிருக்க மாட் டாங்க…’’ என்றான் நந்து.

ப்யூட்டி பார்லரில் திருத்தப்பட்ட புருவத்தைக் காட்டி எப்படி இருக்கிறது என்றாள் பவித்ரா. ‘‘ஆமா, என்னைப் பாத்தா, உனக்கு என்ன தோணுது? எங்கிட்ட ஏதாவது கேட்க வேண்டியிருக்கா?’’ என்ற வாறு சோம்பல் முறித்தாள்.

‘‘இல்ல…’’

‘‘ப்ச்…’’ என்றாள் பவித்ரா. ‘‘பாடத்தையாவது படி…’’

‘‘ஐஸ்க்ரீமே என்னைச் சாப்பிட வான்னு கூப்பிடறப்ப ஜலதோஷம்னு சொல்லியிருக்கி யேடா…’’ என்றான் நந்து. ‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

சோம்பல் முறித்தாள். முன்னழ கைப் பார்த்தவாறு, ‘‘தோணதை யெல்லாம் சொல்லிர முடியுமா, பவி?’’

‘‘சொல்லேன்பா…’’

‘‘யார்கிட்டேயாவது சொல்லிட் டேன்னா..?’’

‘‘மாட்டேன்.’’

‘‘நமக்குள்ள மட்டும்தான் இருக்கணும்.’’

‘‘இதெல்லாம் போய் சொல்லுவாங் களாக்கும்?’’

‘‘டேய்…’’

‘‘கதவு?’’

‘‘பூட்டியிருக்கு.’’

‘‘இன்னும் பக்கத்துல வாயேன்…’’ அவள் வந்ததும் ‘‘ஒரு கப் காபி தருவி யான்னு கேக்கத் தோணிச்சு…’’

‘‘பாலு, உன்னை…’’ அடித்திருப் பாள். அவளை அப்படியே தூக்கி…

நந்து, ‘‘ஐம்புலன்களைப் பட்டினி போட்ட பாவி!’’ என்று திட்டினான். ‘‘இயற்கையானது, இயல்பானதுன்னும் இந்த விஷயத்தைச் சொல்லலாம். தப்புன்னும் சொல்லலாம். மனசைப் பொறுத்தது. ஆனா, ஏதாவது ஒரு நிலைல நிக்கணும்…’’

‘‘…….’’

‘‘என்னோட அனுபவங் களைச் சொல்லும்போது பெருமூச்சு விடற. பவித்ரா பற்றி சொல்லும்போது கண்ல ஏக்கம் தெரியுது. உன்னை மாதிரி கும்பலுக்கு ஆசையைவிட பயம் அதிகம்! உன்னை மாதிரி செயற்கை யோக்கியன்களுக்கு எந்தச் சந்தோஷமும் கிடைக்காது!’’

நான் அயோக்கியன் என்று தான் தோன்றுகிறது. இல்லை யென்றால், பவித்ராவின் ஷாம்பு வாசனையையும், மல்லிகைப் பூவையும் இன்னும் நுகர்ந்து கொண்டு இருக்க மாட்டேன். விலகிய தாவணியை மனதில் இன்னும் சரி செய்யாமல் வைத்திருக்க மாட்டேன்.

சினிமா, டென்னிஸ், டி.வி. சீரியல்கள், தெருவின் நிகழ்ச்சி கள், குருப்பெயர்ச்சி, குடும்பக் கதைகள், எரிச்சல்கள்… இப்படி அவளுடன் என்னவெல்லாமோ பேசியிருந்தாலும், மனதிலுள்ள சாத்தான் கிளுகிளுப்பான பேச்சுக்களையே ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறான்.

‘‘மிஸ் பண்ணிட்டியேடா…’’ என்றான் நந்து. உண்மையிலேயே நந்து விவரித்த காட்சிகள்தான் நடந்திருக்குமோ? சில நிமிடங் களை நழுவவிட்டு முட்டாளாகி விட்டேனா? இல்லை. நந்துவின் கற்பனைகள் மிகையானவை. நான் எசகுபிசகாக நடந்திருந்தால் அவள் நட்பை இழந்திருப்பேன். சாதாரணமாக அவள் பேசியவை! நட்பின் நடுவே படுக்கையைப் போட முடியாது. மடையா… நந்துவின் காட்சிகள்தான் நடந்திருக்கும். விளைவு களைப் பற்றி யோசிக்க தனிமைக்கும், இளம் வயசுக்கும் பிடிக்காது.

பதில் தெரியாத கேள்விகள்தானே வாழ்வை சுவாரஸ்யமாகவும், கொடுமையானதாகவும் வைத்திருக்கிறது! நான் நந்துவின் கற்பனைகளையே நம்ப விரும்பினேன். அதில் ஒருவித அல்ப திருப்தி.

நிதானமாக யோசிக்கும் போது எனக்கும் பவித்ரா வுக்கும் இடையில் நட்பு, வாஞ்சை, உரிமை, ஈர்ப்பு எல்லாம் இருந்தன. கொஞ்சம் திருட்டுக் காமமும் இருந்தது என்பது இப்போது புரிகிறது. காலம் கொடுத்த தைரியம், வயது தந்த அனுபவத்துடன் இன்றைய நான் அன்றைய பவித்ரா வைச் சந்தித்தால்…?

முடியாது. இன்றைய பவித்ராவைத்தான் சந்திக்க முடியும். அப்படிச் சந்தித் தால்…? ஒருவேளை பதில் கிடைக்கலாம். ஆனால், எங்கே இருக்கிறாளோ?

‘‘நம்பவே முடியலை’’ என்றாள் பவித்ரா. தற்செயலாக சந்தித்தது மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட்டில். ‘‘பாத்து எத்தனை வருசமாச்சு…!’’

வியப்புகளைப் பகிர்ந்து கொண்டோம். ‘‘வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு…’’ என்றாள். ஆட்டோ… வீடு.

பரவசம் அடைந்திருந்தேன்.

காபி கொடுத்தாள். ராட்சஸி, அழகாகத்தான் இருக்கிறாள்! வழக்கம் போல பேசிக் கொண்டே போனாள்.

‘‘அப்பப்ப உன்னை நினைச்சுப்பேன் பாலு. நீ என்னை நினைப்பியா? அதெல்லாம் ஒரு காலம்ல… ரொம்பவும் கூச்சப்படுவியே… இப்பவும் அப்படித்தானா? என் கணவர் நேத்துதான் டெல்லிக்குப் போயி ருக்கார். ஒரே பையன். தேர்ட் ஸ்டாண்டர்ட். பாட்டி வீட்டுக்குப் போயிருக்கான். கல்யாணம் பண்ணிக்கோ பாலு. தகவல் கொடு. இன்னும் உனக்குக் கல்யாணம் ஆகாதது ஷாக்கா இருக்கு. நான் ப்ரே பண்றேன். சாப்பிட்டுத்தான் போகணும். மீன் குழம்பு. உனக்குப் பிடிக்கும், இல்லியா… நான் அதே மாதிரிதானே பாலு இருக் கறேன்? ரொம்ப சதை போட்ரலியே… உனக்கு நினைவிருக்கா, நான் ஒரு ஜோக் சொன்னேன்… வெக்கத்தோட சிரிச்சியே… என்னதா..? சுத்த ட்யூப்லைட்டாவே வாழ்க்கையை முடிச்சுக்கப் போறியா… எந்த மாதிரி பொண்ணு வேணும் உனக்கு..? நான் பாக்கட்டுமா…’’

இவளையா தப்பாக நினைத்தேன்? கள்ளம்கபடமற்ற புன்னகையுடன் பேசும் இவளையா அடைந்திருக்கலாமே என்று நினைத்தேன்? நான் இப்படி எல்லாம் நினைப்பது தெரிந்தால் அழுதுவிடுவாள்.

இப்போது அவளது செழுமையான இடுப்பு என் கண்ணில் படவில்லை.

‘‘கிறுக்கா…’’ என்றான் நந்து. ‘‘இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமாடா..? எவ்வளவு குறிப்பு கொடுத்திருக்கா… யாரும் வர மாட்டாங்கன்னு சொல்லி யிருக்கா… நீ ட்யூப்லைட்டாவே இருக்கி யேன்னு சொல்லியிருக்கா… எந்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டப்ப, அடுத்து என்ன காட்சி நடந்திருக்கணும்னா… நீ என்ன சொல்லியிருக்கணும்னா…’’

‘‘நந்து, என்னை விட்டுரு…’’ என்று அலறிய படியே அறையைவிட்டு ஓடினேன்.

– மே 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *