
மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பாவின் வாசிப்பு தத்துவம் சார்ந்தது. அம்மா இலக்கியம். எனது சகோதரி எனக்கு முன்பே கதைகள் எழுதும் ஆர்வம் பெற்றிருந்தார். லுனாஸில் இருக்கும் போதே பத்திரிகைகளுக்கும் இதழ்களுக்கும் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதினேன்.
16 வயதில் எம்.ஏ.இளஞ்செல்வன் நட்பு கிடைக்க வாசிக்கும் பழக்கம் உருவானது. என் இலக்கிய பயணத்துக்கு அவர்தான் தூண்டுகோளாக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் கோ.புண்ணியவான் வழிக்காட்டினார்.
17 வயதிலெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். அப்பாதான் கோலாலம்பூருக்கு அழைத்து வந்து ஒவ்வொரு பத்திரிகைக்கும் அழைத்துச் சென்றார். உடன் மாமா ஓவியர் ராஜா இருந்தார். எழுத்து, பத்திரிகை ஆசையால் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லாமல் 18 வயதில் கோலாலம்பூருகே வந்துவிட்டேன். ‘மன்னன்’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.பி.அருண் அவர்களின் நட்பாலும் வழிக்காட்டுதலாலும் இதழியல் துறையில் முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டேன். பின்னர் எதிர்க்காலம் மீதான கேள்விகளுடன் 20 வயதில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தேன்.
தொடர்ந்து பல கவிதை போட்டிகளில் முதல் பரிசு கிடைத்தது. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் இரண்டாவது பரிசு பெற்றதுண்டு. இன்றைய எழுத்தாளர் சங்க தலைவர் இராஜேந்திரன் அவர்களிடம் கிடைத்த நட்பால் நிர்வாகத்திறனை ஓரளவு பயின்றேன். மலேசிய பத்திரிகைச் சூழலும் அதன் மாய தோற்றமும் எனக்குப் புரிந்தது.
மா.சண்முகசிவாவை நான் சந்தித்தபோது எனக்கு வயது 22 என நினைவு. மிக நெருக்கமாக அவரிடம் பேசத்தொடங்கியதும் இலக்கியத்தின் எழுத்தின் மீதான பார்வை மாறியது. என்னை தீவிர இலக்கியம் நோக்கி கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் மா.சண்முகசிவா. விளைவு 2005 ல் ‘காதல்’ எனும் நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் இதழை பெரு.அ.தமிழ்மணி அவர்களின் ஆதரவுடன் உருவாக்கினேன். பொருளாதாரப் பிரச்சனையால் அது நின்று போக 2007 ல் எனது சொந்த நிறுவனத்தின் கீழ் ‘வல்லினம்’ இதழ் உருவானது. இன்று அது நண்பர் சிவா பெரியண்ணன் உதவியுடன் www.vallinam.com.my எனும் முகவரியில் அகப்பக்கமாக வருகிறது.
இதுவரை எனது ஒரு கவிதை புத்தகம் தமிழ் – ஆங்கிலம் என இருமொழியில் வெளிவந்துள்ளது. வல்லினம் பதிப்பகத்தின் மூலம் 4 புத்தகங்கள் பதிப்பித்துள்ளேன். அவை மஹாத்மன் சிறுகதைகள், மொழிப்பெயர்ப்பு கவிதை, சர்வம் பிரமாஸ்மி (கவிதை),மற்றும் மலேசியா – சிங்கப்பூர் 2010.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக (2009- 2010) கலை இலக்கிய விழா எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வருகிறேன். சந்துருவின் ஓவிய கண்காட்சி, ஸ்டார் கணேசனின் நிழல்படக் கண்காட்சி, மேடை நாடகம், புத்தக வெளியீடுகள் என அதில் அடங்கும். மேலும் காதல் மற்றும் வல்லினம் இதழ் சார்பாக மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், எம்.ஏ.நுஃமான், ஷோபா சக்தி, சேனன் போன்ற ஆளுமைகளுடனான சந்திப்புகளை ஏற்படுத்தியதுண்டு. இது போன்ற முயற்சிகளுக்கு நண்பர்கள் எப்போதும் துணை இருப்பதால் தொடர்ந்து உற்சாகமாக செயல்பட முடிகிறது. 2010 இளம் கவிஞருக்கான விருதினை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியது.
இப்போது மெலாவாத்தி எனும் தமிழ்ப்பள்ளியி ஆசிரியராக இருக்கிறேன். உற்சாகமான பணி. ஒரு மனிதனுக்கு அவனுக்கு நிறைவழிக்கும் வேலை கிடைப்பது சிரமம். எனக்குக் கிடைத்துள்ளது. அடித்தட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாகிவிட்ட தமிழ்ப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் மனங்களை ஆரோக்கியமாக உருவாக்கும் பணியாகவே அதை எண்ணிச் செய்கிறேன். மற்றெல்லாவற்றையும்விட இதில் என் பொறுப்பும் கடமையும் மிக முக்கியமாக இருக்கிறது. எப்படியும் ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று வாழ்வை உற்சாகமாகவே நகர்த்துகிறது