சுந்தரிமணியன்

 

சுந்தரிமணியன் அவர்கள் மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரி. தமிழில் முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் பேராசிரியராக மூன்றரை ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர். தற்போது ஒரு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் பிறகு சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார்.

உலகத் தமிழ் என்ற இணைய இதழின் துணைஆசிரியராகவும் பணியாற்றியவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது எழுத்துகள் இலண்டனிலிருந்து வெளிவரும் காற்றுவெளி இதழிலும் அமெரிக்காவின் முத்தமிழ்நேசன் இதழிலும் வெளிவர ஆரம்பித்தன. இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இவர் தனது எழுத்துகள் வெளிவரக் காரணமாக இருந்தவராகத் தனது நண்பரும் பேராசிரியருமான செ.சு.நா.சந்திரசேகரன் அவர்களைக் குறிப்பிடுகிறார். தான் அதிகமாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் தூண்டுகோலாக இவர் விளங்கினார் எனில் மிகையாகாது என்கிறார். இவர் சுந்தரிமணியன், சுந்தரிசங்கர் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

இவரது நிறைவேறாத ஆசை என்ற முதல் சிறுகதை பற்றிய விமர்சனக் கட்டுரை காற்றுவெளி (2023) இதழில் ‘தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்’ என்ற தலைப்பில் வெளியானது. “எண்ணங்கள் அலைபாயும் போக்கில், அதை அப்படியே எழுதுவது எழுத்தாளனுக்கு பெரும் சவால். அதைவிட அந்த அனுபவ வெளிப்பாட்டை வெளிப்படுத்துவது வாசகனுக்குக் கடத்துவது அதைவிடப் பெரும் சவாலாக இருக்கும். ஆனால் இச்சிறுகதை அப்படியே சென்றுவிடாமல், அந்த உணர்வுகளை வாசகனுக்குக் கடத்துகிறது” என்ற பாரதிசந்திரன் அவர்களின் பாராட்டு தனது எழுத்துகளுக்கு புதுஉத்வேகம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.

இவர் தனது எழுத்துக்களை மேம்படுத்த உதவும் விமர்சனங்களை வரவேற்பதோடு தனது எழுத்துக்களை செம்மையாக்க, அவை துணைசெய்யும் எனவும் நம்புகிறார். இவர் தனது எழுத்துகளை மிகுதியாக வாசிப்புக்கு உள்ளாக்கவேண்டும் என்ற நம்பிக்கையோடு எழுதிவருகிறார்.

Email: somasundari1974@gmail.com

கதைகள்: https://www.sirukathaigal.com/tag/சுந்தரிமணியன்