சி.சு.செல்லப்பா

 

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 – டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். “எழுத்து” என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

Sellapapicபல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

“சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது. “சரசாவின் பொம்மை” என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சிறுகதைத் தொகுதிகள்

  • ஸரஸாவின் பொம்மை
  • மணல் வீடு
  • சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்

குறும் புதினம்

  • வாடி வாசல்

புதினம்

  • ஜீவனாம்சம்
  • சுதந்திர தாகம்

நாடகம்

  • முறைப்பெண்

கவிதைத் தொகுதி

  • மாற்று இதயம்

குறுங்காப்பியம்

  • இன்று நீ இருந்தால்

சி.சு.செல்லப்பா… ஆழ் மனதில் தோன்றும் மின்னல்களை நிரந்தரப்படுத்தியவர்! கதை சொல்லிகளின் கதை பாகம்-11 – ச.தமிழ்ச்செல்வன் – www.vikatan.com

12 Feb 2018

இலக்கியத்துக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்த ஒருவர் உண்டெனில், அவர் அமரர் சி.சு.செல்லப்பாதான். அவரை ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். அந்த நாள்களில், அவருக்கு எதிரான மனநிலையுடன் ( கருத்து ரீதியாக) நான் வாழ்ந்துகொண்டிருந்ததால் ரொம்ப ஈர்ப்புடன் பேசிக்கொள்ளவில்லை. அதற்காகப் பின்னர் மிக வருந்தினேன். இன்றுவரை வருந்திக்கொண்டிருக்கிறேன். இப்போதும், அவர் கருத்துகளோடு மாறுபாடு இருக்கிறதென்றாலும், அத்தகைய மகத்தான ஓர் ஆளுமை வாழ்ந்த காலத்தில் வாய்ப்பிருந்தும் பழகாமல் விட்ட இழப்பு பெரிதல்லவா?

உண்மையான காந்தியவாதியான அவர், இலக்கியத்துறையில் தான் சரி என நம்பிய ஒன்றுக்காக எல்லாவற்றையும் தத்தம்செய்தார். அரசாங்கம் அவருக்கு அறிவித்த `ராஜராஜன் விருதை’க்கூட கொள்கை நிலை நின்று நிராகரித்தார். அதன் காரணமாக, குடும்பத்தாரின் வெறுப்புக்கும் ஆளானார். தானே அச்சிட்ட, விற்பனையாகாமல் தன் சின்னஞ்சிறிய ஒற்றை அறை வீடெங்கும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு நடுவே, காது கேளாத தன் துணைவியாருடன் தன் முதுமையைத் தனிமையில் கழித்தவர் செல்லப்பா. தன்னுடைய எழுத்துப் பிரசுராலயம் வெளியிட்ட நூல்களைத் தானே ஊர் ஊராகச் சுமந்துசென்று விற்றவர் அவர். 1998 டிசம்பர் 18 அன்று அவர் மறைந்தார்.

1912 செப்டம்பர் 29-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தவர் செல்லப்பா. வத்தலகுண்டு அவருடைய அம்மா ஊர். அவருடைய அப்பா ஊரான சின்னமனூரை முன்னொட்டாகக்கொண்டே அவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என அழைக்கப்பட்டார். இள வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற அனுபவம் அவருக்கு உண்டு.

அவருடைய `மூடி இருந்தது’ சிறுகதை சிறைவாழ்க்கையின் கடைசி நாளின் நினைவைப் பேசுவது.

“நாளை, நாளை எனக்கு விடுதலை, நான் எதிர்பார்க்காமல் அது என் அருகில் வந்துவிடவில்லை. வாஸ்தவமாக! மாதங்கள், வாரங்கள், நாள்கள், மணிகள், நிமிஷங்கள், ஏன் விநாடிகளும்கூட. அவைகள் ஒவ்வொன்றின் கால அளவையும், கணக்குப் போட்டுப் போட்டுப் பார்த்துவிட்ட பிறகுதான் என்னை நெருங்கி வந்தன. எப்படி அந்தக் கடைசி மின்வெட்டு நேரம். சாஸ்வதமான விடுதலையைத் தரும் கணப் பொழுது, சாவு என்பது உயிர் வாழ்க்கை முழுதும் கண் எதிரில் தோன்றித் தோன்றி ஒருநாள் உன்னிடம் வருவேன். தயாராக இரு’ என்று காதில் சம்மட்டி போட்டு அடிக்கிறதோ, அப்படி இருந்தது.’’

எதற்காக அவன் சிறை சென்றான். போராடியா? எனில், அது எந்தப் போராட்டம்? அதன் வெப்பம் என்ன? கொதிநிலை என்ன என்பதுபோன்ற முன்பின் விவரங்கள் ஏதும் இக்கதையில் பெரிய அளவுக்கு இருக்காது. ஏனெனில், சம்பவங்களை அடுக்கிச் செல்வது சிறுகதையின் வேலை அல்ல என்கிற புரிதலுடன் இயங்கியவர் செல்லப்பா. “நானோ ராஜீயக் கைதி; பகிரங்கமாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளே வந்தவன். இது எனக்குப் புதிதாக இருந்தது. சப்பென்று இதுவரையில் கழிந்த நாள்களிலிருந்து இது ஒரு மாறுதல். நான் இதை அனுபவித்தேன். விரும்பி நாள்களைப் போக்கியதாகத்தான் எனக்கு நினைவு.’’ இவ்வளவு விவரம் வாசகனுக்குப் போதும் என்று கருதுவார். சிறைக்குச் செல்லும் கொடுமையைக்கூட ஓர் அனுபவம் என்பதாகப் பார்க்கின்ற கலை மனம் அவருடையது.

அவருடைய முதல் தொகுப்பான ‘சரஸாவின் பொம்மை’, கலைமகள் காரியாலய வெளியீடாக 1942-ல் வெளியானது. அத்தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளர் ந.சிதம்பர சுப்பிரமணியன் குறிப்பிடுவது போல, “மேலெழுந்த வாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து, மனித ஹ்ருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தைப் பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல் போல விநாடிக்குவிநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை” என்கிற நம்பிக்கை உள்ளவர்தான் சி.சு.செல்லப்பா. ஆகவே, சிறைவாழ்க்கை பற்றிய கதையில், அந்தக் கடைசி நாளில் ஆழ் மனதில் தோன்றும் மின்னல்களை நிரந்தரப்படுத்தும் முயற்சியையே கைக்கொள்கிறார்.

“எப்படியும் நான் வெளியே போய்விடுவேன் சுதந்திர மனிதனாக. இந்த இரும்புக் கம்பிகளைப் பிடித்து நின்றுகொண்டிருப்பதற்குப் பதிலாக, எங்கோ ஒரு ரெயில்வே ஸ்டேஷன் கதவின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, டிக்கெட் பரிசோதகரை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பேன். பிறகு, என் மாடி ஜன்னல் கம்பிகள் வழியாக சாலையைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

இப்படியெல்லாம் நினைப்பில் ஆழ்ந்திருந்தபோது, திடீரென ஞாபகம் வந்தது. சிறையின் கடைசி சூரியாஸ்தமனத்தைப் பார்க்கத் தவறி விட்டேன். வெளியே இருட்டுக் கும்மிவிட்டது. எத்தனை தடவை அந்த இருட்டை மீறி ஊடுருவிப் பார்க்கக் கண்கள் முயன்றிருக்கின்றன! இருட்டு, தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் முன்னேற முடியாது’ என்பீர்கள். `பின் வாங்கவும் முடியாது’ என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும். அது எனக்குத் திருப்தி தரும்.

இன்று கடைசி நாள். அந்தக் கும்மிருட்டின் நடுவே புள்ளிகுத்திப்போகும் வெளிச்சம் அதோ தெரிகிறது. வார்டர் தன் கைவிளக்குடன் கடமையைச் செலுத்திக்கொண்டு போகிறான். இரண்டு மணி நேரம் இப்படி வளையவந்துகொண்டிருக்க வேண்டும்’ அவனை விடுவிக்க பதில் ஆள் வரும் வரையில். பின்பு மறுபடியும் தன் முறைக்கு தயாராக வேண்டும். அவன் வெளியே போகமுடியாது. நான் நாளை போய்விடுவேன். அவனோ முறையாக நடைபோட்டு, குளிருக்காக மப்ளர் ஒன்றால் முகத்தை மறைக்க, விளக்குடன் நாளையும் இப்படியேதான் இருப்பான். மறுநாள் அடுத்தநாள்… இப்படியே. அவன், விடுதலையை எதிர்பார்க்க வேண்டியவன் அல்ல.”

எல்லாம் முடிந்துவிட்டது. நான் அந்தக் கதவை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தேன். அந்தக் கதவு, ஒருநாள் என்னை விழுங்கிவிட்டது. இப்போது வெளியே கக்கிவிடப்போகிறது. பாவம், ஜீரணிக்கமுடியாத குடல்! நான் அவர்களிடம் விடைபெற்றுவிட்டேன். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது நடந்துகொண்ட விதம், `உங்களைவிட்டுப் பிரிவதற்கு வருந்துகிறேன்’- இதுதான் நான் சொன்னது. முட்டாள்! நான் சொல்லி இருக்கக் கூடாது. அளவுக்கு மீறிய அசட்டு உணர்ச்சி! வார்டர் என்னோடு வந்துகொண்டிருந்தான். கதவைத் திறந்து அனுப்பிவிட்டுத் திரும்பிப்போவான்; என் பிளாக்குக்கு அல்ல; அவன் பிளாக்குக்கு.

திடீரென்று அவன், `போய்விட்டுத் திரும்பி வருவீர்களா?’ என்று கேட்டான். நான் அதிர்ந்துபோனேன். அவன் என்னை அறிந்துகொண்டு விட்டானா? பின் ஏன் இந்தக் கேள்வி? அவன் முழுதும் தெரிந்து கேட்கவில்லை. கொஞ்சம் தெரியும். நான் அப்போது வந்ததுபோல் மறுபடியும் வரலாம். இது சகஜமாகத் தோன்றியிருக்கக்கூடும். கேள்வி சின்னதுதான். ஆனால், பதில் சொல்லத் தயங்கினேன்.

பின்பு, ‘எனக்கே தெரியாது. யார்தான் சொல்ல முடியும்?’ என்றேன்.

எல்லோருக்கும்போல எனக்கும் அவருடைய கதைகளில் மிகவும் பிடித்த கதைகள், `சரஸாவின் பொம்மையும் பந்தயமும்’தாம். ‘வாடிவாசல்’ குறுநாவல் அவருடைய மகத்தான படைப்பு. 19 பதிப்புகள் கண்டு இன்றும் விற்பனை (காலச்சுவடு பதிப்பில்) ஆகிக்கொண்டிருக்கும் குறுநாவல்.

“வழக்கம்போல கலாசாலை விட்டதும், ஸரஸாவைப் பார்த்துவிட்டுப் போவதற்காக மாமா வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பொழுது மாமி சமையலறைக்கு அடுத்தாற்போல் ஒரு வெள்ளிக்கும்பாவில் சாதம் பிசைந்துகொண்டிருந்தாள். ஆனால், யாருக்காக அதைப் பிசைந்துகொண்டிருந்தாளோ, அந்த நபர் மட்டும் அருகே காணப்படவில்லை.” ஸரஸா! சாப்பிடறாயா, இல்லையா? அப்புறம் நான் சாதத்தை வெள்ளைக்குப் போட்டுடுவேன் தெரியுமோ? பேசாம வந்துடு” என்று கோபக்குரலில் அந்த மாமி கூறிக்கொண்டிருந்தது மட்டும் என் காதில் விழுந்தது.”

ஸரஸா ஆறு வயதுப்பெண்குழந்தை. அவளிடம் பெரியவர்கள் விளையாட்டாகப் பேசிப்பேசி ஓர் எண்ணம் அழுத்தமாக அவள் மனசில் விழுந்துவிட்டது. கதை சொல்லுகிற இந்த மாமாவைத்தான் அவள் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறாள். பெரியவர்களுக்குச் சிரிப்பான ஒன்று, அக்குழந்தையைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.

“ஊரில் இருக்கும்வரை நாள் தவறாது நான் ஸரஸாவைப் போய்ப் பார்த்து வருவதுண்டு. அநேக சமயங்களில், அவளது முரணும் பிடிவாதமும் முன் வந்து வீட்டில் இருப்பவருக்கு வெகு சிரமத்தைக் கொடுத்துவிடும். ஆனால், அதற்கெல்லாம் ஒரே மருந்து என்னிடம் இருந்தது. அவசியமானபோதெல்லாம் அதைக்கொண்டு ஒரே விநாடியில் அவளைப் பழைய ஸரஸாவாக ஆக்கிவிடுவேன். “ஸரஸா, நீ இப்படி முரண்டு பண்ணினால், அப்புறம் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க…” என்று இழுத்து முடிப்பதற்குள் “ஆட்டும் ஆட்டும். இனிமே இல்லை’’ என்று பலத்து கூவித் தன்னைத் தேற்றிக்கொண்டு, கட்டின கன்றாகிவிடுவாள். இந்த மருந்தினால், நான் வீட்டிற்கு வராத சமயங்களிலும் குணம் ஏற்படுகிறது என்பதை அம்மாமியிடமிருந்து தெரிந்துகொண்டேன்.

நாளாக நாளாக, எங்கள் இருவரிடையே அன்பும் பாசமும் நட்பும் வளர்ந்துகொண்டே வந்தது. ஸரஸாவைக் காணாவிட்டால், எனக்குப் பொழுது போகாது. ஸரஸாவுக்கும் அப்படியே. என்னைக் கண்டுவிட்டால் இதர வேலைகள் எல்லாம் அவளுக்கு அலட்ஷியமாகப் போய் விடும். போட்டது போட்டவாக்கில்தான். குடும்பத்திலேயே எங்கள் நட்பைக்கண்டு வியப்புறாதவர்களும் பொறாமைப்படாதவர்களும் இல்லை.

அதே வருஷம் எனக்கு மணம் நடைபெற்றது… திடீரென்று, என் அருகில் ஒரு சிறு குரல் சிணுங்கி அழும் சப்தம் கேட்கவே, தலைநிமிர்ந்து பார்த்தேன். அம்மாமி இடுப்பில் ஸரஸாவுடன் எனக்குச் சமீபமாக நின்றுகொண்டிருந்தாள். ஸரஸாவின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.

“ஸரஸா, எதுக்கு அழறே? உனக்கு என்ன வேணும்” என்று கேட்டேன். விம்மல் – விக்கல் – தேம்புதல் – அழுகை. வேறு பதிலே இல்லை…பொறுமையை இழந்துவிடாமல் மறுபடியும் கேட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மந்த ஸ்தாயியிலேயே பதில் வந்தது. காதோடு காது வைத்துத்தான் கேட்க வேண்டியிருந்தது. “நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ…” என்று இழுத்து இழுத்து விக்கல் விம்மல்களுக்கு இடையே சொல்லிவிட்டு ஸரஸா கண்ணைக்கசக்கிக் கொண்டு தேப்பினாள். அவள் அதைச் சொல்லி முடிக்கும்வரை சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்த நாங்கள் எல்லோரும், சொல்லி முடிக்கவும் கொல்லென்று வாய்விட்டுச் சிரித்து விட்டோம்.

நான் மட்டும் சட்டென்று சிரிப்பை அடக்கிக்கொண்டு, “இதுக்குத்தானா… பிரமாதம். நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். அழாதே அழாதே” என்று தேறுதல் மொழிகள் பல கூறி என் மடியில் உட்காரவைத்துக்கொண்டேன். ஸரஸாவின் அழுகை நின்றுவிட்டது. அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. கூடி இருந்தவர் செய்யும் கேலியையெல்லாம் அவள் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை.பேதைக்குழந்தை! கல்யாணம் என்றால் இன்னதென்று தெரியாத குழந்தை! தான் விரும்பிய அத்தானைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டோம் என்ற ஆனந்த சாகரத்திலே மூழ்கிக்கிடந்தாள். கல்யாணம் ஐந்து தினங்களிலும் ஸரஸா என்னை விட்டு அப்புறம் இப்புறம் நகரவே இல்லை. மணப்பலகையில் என் புது மனைவியுடன் நான் உட்கார்ந்துகொண்டிருக்கும்போதெல்லாம் அவளும் அருகில் உட்கார்ந்துகொண்டிருப்பாள்…”

இப்படி இருந்த அப்பெண்குழந்தை, இன்னும் ஆறு ஆண்டுகள் கழிந்த பிறகு முற்றிலும் வேறு ஒருத்தியாக வளர்ந்துவிட்டிருந்தாள். இப்போது அத்தான் கல்யாணம் என்று யாரேனும் பேச்செடுத்தால், அப்படி ஒரு வெட்கம்,கூச்சம்,கோபம்.

“அம்மாமி… ஏது, ஸரஸா நான் கூப்பிட்டால் கூடப் பேச மாட்டேன் என்கிறாள்! யாரோ முன்பின் பார்த்திராத ஒருவனை விரட்டுவதுபோல விரட்டுகிறாளே” என்றேன் விளையாட்டாக.

“ஆமாம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாளோ இல்லையோ? அதனால்தான் இந்த வெட்கப்படறாள்” என்று கணீரெனச் சொல்லிச் சிரித்தாள் அம்மாமி. கூட இருந்தவர்களும் கொல்லென்று சிரித்தார்கள்.

ஸரஸாவுக்கு இந்தக் கேலி தாங்க முடியவில்லை. சரேலென்று எழுந்து நின்று, என்னையும் மாமியையும் ஒருதடவை வெருட்டிப் பார்த்து, உதட்டைச் சொடுக்கி வலிப்புக்காட்டிவிட்டு உள்ளே ஓடிபோய்விட்டாள்.

அப்பொழுதுதான் என் மனதில் ஒளி பிறந்தது என்றே சொல்ல வேண்டும். குழந்தை ஸரஸாவுக்கும் இந்த ஸரஸாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால், குழந்தை ஸரஸாவுக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவை உணர்ந்தவுடன்தான் என் மனதில் திக்கென்றது. அவ்வளவு வருஷங்களாக நான் ஸரஸாவின் ஒரு விளையாட்டு பொம்மையாகவே இருந்திருக்கிறேன்! அப்படித்தான் அவள் கருதி என்னிடம் நடந்துவந்திருக்கிறாள். எத்தனையோ பொம்மைகள் இல்லையா… யானை, குதிரை, வண்டி முதலியவை? அவற்றோடு நானும் ஒரு பொம்மை; ஆம்படையான் பொம்மை!

குழந்தை ஸரஸாவின் பொம்மையாக இருந்ததில் எனக்குப் பரம திருப்திதான். ஆனால், அதைப்பற்றி நினைக்கும்போது என் அந்தரங்கத்தில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த உணர்ச்சி எழாமல் இல்லை”என்று கதை முடியும்.

ஞாபகம், நொண்டிக்குழந்தை, குருவிக்குஞ்சு போல குழந்தைகள் மன உலகில் நுழைந்து செல்லப்பா எழுதிய இன்னும் சில கதைகளும் உண்டு. இலக்கியத்துக்கும் குழந்தை மனநிலைக்கும் நெருங்கிய பந்தம் எப்போதும் இருக்கும். எழுதுவதற்கேகூட ஒரு குழந்தை மனம் இருந்தால்தான் முடியும் என்று கூடச் சொல்லலாம். உலகத்தின் மிகச்சிறந்த படைப்பாளிகள் எல்லோருமே வெகு இயல்பாகக் குழந்தைகள் உலகத்துக்குள் சென்று புழங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். செல்லப்பாவும் அந்த வரிசையில் நிச்சயம் இடம் பெறுகிறார்.

சி.சு.செல்லப்பாவின் சிறுகதைகளில், மாடுகளும் அவற்றோடு பழகும் மனிதர்களும் இடம்பெற்ற அளவுக்கு, தமிழில் வேறு யாருடைய எழுத்திலும் இடம்பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிகழ்வை மையப்படுத்திய குறுநாவல் மட்டுமன்றி, ‘கள்ளர் மடம்’, ‘கூடுசாலை’, ‘பெண்டிழந்தான்’ போலப் பல சிறுகதைகளில், மாடுகள் பற்றிய அவரது பரந்த அறிவும் மனப்பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.

“பில்லை எப்படி எடுக்குது?” என்று வண்டிக்குள்ளிருந்து புதிதாக வாங்கிய காளையைப்பற்றி, அதன் கால் மிதிகளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்டார் அய்யர்.”

“அது, மயிலைக்காளை மாக்ஹிரி இல்லீங்க. திராட்டுக்கு எடுப்பிலேயே ஒத்துப்போகுது. `கால்ப்’ கொஞ்சம் மெதுவாத்தான் எடுக்குது. கொஞ்சம் சுதாரிப்பு மயிலை மாதிரி பத்தாதுங்க. ரெண்டு இளுவை இளுத்துப்புட்டா அப்புறம் சரியாப்போயிருது. நேக்காப் பூட்டுக்குச் சரியா முன்னே பின்னே தூக்கம், தணிவு, இல்லாம ஒத்து முன்னுக்கு வருதுங்க; வலத்துக்காளையைச் சும்மா சொல்றதுங்களா, கைவைக்க விடாதுங்களே. ஒருதரம் இழுத்துட்டா, வீடு போற வரைக்கும் கை அறைபட்டுப்போகுங்களே,” (கூடுசாலை – சிறுகதையிலிருந்து)

“அந்தக் காலத்தில் இங்கெல்லாம் எடைக்காடனோ, பூரணையன் ஜோடியோ கிடையாது. அதிகம் போனால், இந்த வடக்கத்தி மாடுகள்தான். நம்மூருக்கு வடக்கத்தி என்றால், கோயம்புத்தூர் பக்கம் என்று அர்த்தம். உங்க தாத்தாவுக்கு இதுகள் எல்லாம் வச்சு அடிச்சுப் புளிச்சுப்போச்சு. வடக்கே புறப்பட்டுப்போய், அப்படியே பெங்களூர் மைசூர் பக்கம் போய் நல்ல புது ஜாதி மாடாக, நம்ம பக்கத்திலே காணாததாக வாங்கி வந்துடணும் என்று ஆசை” (கள்ளர் மடம் கதையிலிருந்து)

சி.சு.செல்லப்பாவின் கதைகளில் நிலவும் காலம் என்பது தமிழகத்தில் பெரு நிலவுடமையாளர்களாகப் பார்ப்பனர்கள் இருந்த ஒரு காலம். இடைநிலைச் சாதிகள் நில உடமையாளர்களாக இன்னும் எழுந்து வந்திராத நேரம். ஆகவே, பெரும்பாலும் அவர் கதைகளில் பண்ணையார்களாக, மிராசுகளாகப் பிராமணர்களே இருப்பார்கள். அவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக மேய்ப்பவர்களாக பண்ணை பார்க்கிறவர்களாக இடைநிலைச் சாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். பண்ணையார்களின் முன், அவர்களின் பவ்யமும் அடங்கிப் பதில் பேசுவதும் அதைப் பண்ணையார்கள் அவர்களுக்கே உரிய மேதாவித்தனத்துடன் எதிர்கொள்வதுமான அன்றைய வாழ்வியல் கூறுகள் செல்லப்பாவின் கதைகளில் விரிவாகப் பதிவாகியிருப்பதைக் காணலாம். அவர், சாதிகளைக் கடந்த மனித சாரத்தைத்தான் எழுதினார். ஆனால், அன்றைய காலத்து வாழ்க்கையை அதன் யதார்த்தம் பிசகாமல் எழுதியதில் காலத்தின் சாதியக் கட்டுமானம்குறித்த பதிவாகவும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவருடைய ‘வாழ்க்கை’ சிறுகதை, இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நகரத்துக்கு வாழப்போய்விட்ட பிராமண மிராசுதார், அறுவடை நாளன்று மட்டும் கிராமத்துக்கு வந்து வயல் வெளியில் வெயிலில் நிற்பார். அவரோடு வேடிக்கைபார்க்க வந்த கல்லூரி மாணவனான மருமகன் மொழியில் இக்கதை சொல்லப்படுகிறது.

”மிராசுதாரர் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவிசெய்ததே தவிர, குளுமைக்கும் சுமுகத்துக்கும் அங்கே ஏதும் இல்லை.

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக்கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. அவன் இஷ்டப்படிதான் அங்கே, இருபது ஆட்கள் நாலைந்து நடை சும்மா கரைமேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து, கதிரடித்துச் சாற்றுப் பார்த்துப் பொலிவிட்டு, அளவு பிடித்துக் குறிபோட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடைசூழ ஊருக்குத் திரும்பப் பவனி போக வேண்டும்.

இருட்டிலே போகவேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை. புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி, மறுபக்கம் கொடிக்கள்ளி, இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்துபோனால்தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டைகளுக்கு இடுக்கிலும், இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்து கிடந்த மண் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்குக் கோயில்கட்டி வைத்துவிடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.

இந்த ரீதியில் பவனி வந்து இறங்கிய நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளித் தந்திரம், பொட்டலடி, காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தனவே. `களத்திலேதான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்’ என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடிதண்ணீருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கிய சலிப்புக் குரலில் கலந்தது.

அதற்குப் பதில் உடனே வந்தது. “சாமி சாமி! அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ! மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது? என்ன ஐயா கவுண்டரே! நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்றுகொண்டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.

“காளி முத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன்தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே? அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப்போனது போனதுதான், வந்தது வந்ததுதான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப சந்தர்ப்பத்தில் மிராசுதார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.

“ஆமாடா, எல்லாரும் மச்சுவீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க? பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை……”

“ஹூம். இந்தா சொல்றீங்களே. துரோகம் நினைச்ச நாய் அந்த பாருங்க. செட்டியாருக்கு அரைமா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”

“ஏன்? வீடு நிலைக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு” என்று சேர்வையும கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.

‘ஹூம்! நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத்தானே? கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம்? சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சுப் போடச் சொல்லு.”

“சரி, போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக்கிட்டாத்தான். உங்க கையை விட்டுமாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்தீங்க? ஹூம், ஏது?”

“அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே! சரி. சந்தணக்குடும்பா! நட. காளிமுத்தா, சும்மாத்தானே நிக்கிறே?”

“வாறேன், போங்க.”

மாமா புறப்பட்டவுடன் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக்கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப்பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக்குரலாக – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்துகொண்டது.

நீர் வறட்சி உண்டாக்கும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும். ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங்கழித்த உடலுக்கு என்னவோ நப்பாசை, ஒரு களத்துக்குப் போய் அறுவடை பூராவும் தெரிந்துகொண்டுவிட வேண்டுமென்று. அப்புறம் நானும் கிராமவாசி. ‘கிராமத்துக்கு போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா?

மேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப்போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதியையும் ஏச்சையுமே பரிமாறிக்கொண்டு பண்பட்டுப்போன தாக்குகளாக அத்தனையும் பட்டன எனக்கு. அங்கு நடந்துவரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் தொடர் சம்பாஷணைகள் இதை வலியுறுத்துவன.

அந்தரத்தில் கம்பி மேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டியிருந்தன.

சமாளித்து எட்டு வைப்பதற்கு தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும் மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறுமாறாக நிதானமில்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயாவுக்கு நடந்து பழக்கமில்லே போலிருக்கு. பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரசித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா?’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா?’ என்று ஏளனம் செய்கின்றன.”

பிற சாதியினரின் வாழ்க்கைமுறைகளையும் பண்பாட்டுக்கூறுகளையும் மிக நுட்பமாக அறிந்தவாரக சி.சு.செல்லப்பா பல கதைகளில் வெளிப்படுகிறார். குறிப்பாக குற்றப்பரம்பரையினராக அறியப்பட்ட கள்ளர், மறவர் சாதியினரைப்பற்றிய அவரது சித்தரிப்புகள் சில கதைகளில் துல்லியமாக இருக்கின்றன. ‘பந்தயம்’ கதையில் வரும் குண்டத்தேவன், குற்றப்பரம்பரை கதையில் வரும் கதாபாத்திரங்கள் மிகச்சிறந்த சான்றுகள்.

எந்தக் கதையிலும் சம்பவங்களின் மீதோ, கதையின் மீதோ அவரது அக்கறை குவிவதில்லை. அது, பின்புலமாகவே விரியும். அதனூடாக மனித மனத்தின் ஆழத்தில் நிகழும் சலனங்களே அவருக்கு முக்கியம்.

செல்லப்பா அவர்கள் துவக்கிய `எழுத்து’ பத்திரிகை தமிழ் நவீன இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. இடதுசாரி இலக்கியம், திராவிட இயக்க இலக்கியம் போன்றவற்றை நிராகரித்து, வேறொரு வகையான கலைப்பார்வையை முன் வைத்து வளர்த்தெடுத்த இயக்கமாக `எழுத்து’ பத்திரிகை எழுந்துநின்றது. அதில், சமரசத்துக்கு இடமின்றி வாழ்ந்தார் செல்லப்பா. கருத்துரீதியாக என்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிரான இயக்கமாக எழுத்து இயக்கம் இருந்தாலும், அது இலக்கியத்துக்குக்கு அளித்துள்ள பங்களிப்பை மறுக்க முடியாது.

“எழுத்து நடத்தியபின், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு விஷயங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தார். முதலில் 25 இதழோ 30 இதழோதான் நடத்துவேன். அதன்பின் இதழை நிறுத்திவிடுவேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால், அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தது. பெரிய அளவில் சந்தா இல்லாவிட்டாலும், சமூகத்தில் அத்தகைய முயற்சிகளின் பேரில் ஆர்வம் உள்ள ஆட்கள் நிறைய பேர் உருவாகியிருந்தார்கள். தொடர்ந்து நடத்தியாகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் அந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது, அவர் கையில் ஒரு நயா பைசாகூட கிடையாது. அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்து பத்திரிகையைத் தொடங்கினார். அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். ஏதோ கொஞ்சம் நகைகள்தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்று. அவர் வெளியே கொண்டுபோன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ‘சார் இப்படிச் செய்யணுமா. நகைகளை அடகுவைத்து பத்திரிகை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, ‘அடகுதானே வைச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டுவிடலாமே’ என்பார். ‘அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப்போயிடுமே’ என்றேன். அதுக்கு அவர், ‘இந்த எழுத்து இருக்கிறதில்லையா, அது தொடர்ந்து நடந்தாக வேண்டும். நீ அதுக்கு வேணா ஒரு வழி சொல்லேன். நீ இப்போ ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். அந்த நகைகளை மீட்டு அவளிடம் தந்துவிடுகிறேன்’ என்றார். ஆனால், ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்; அடுத்தவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் அவருக்கு இருந்தது.”

என்று தன்னுடைய சி.சு.செல்லப்பா – நினைவோடை நூலில் இதுபற்றி எழுத்தாளர் சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

இறுதி மூச்சு வரை இலக்கியம் இலக்கியம் என்றே வாழ்ந்த உள்ளம் அவருடையது.வேறு எதுவுமே வேண்டாம் அவருக்கு. இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையைச் சந்திக்க செல்லப்பாவும் வெங்கட்சாமிநாதனும் போன கதையை வெ.சா. எழுதுகிறார்,“போன உடனேயே நானும் அவரும் இலங்கைத் தமிழர் பிரச்னைகளையும் அரசியல் நிலவரத்தையும் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தோம். செல்லப்பா ரொம்ப நேரம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு இலக்கியம் தவிர வேறு எதிலும் அக்கறை இருந்ததில்லை. காந்தியோடு அவரது அரசியல் ஆரம்பித்து அதோடு முடிந்தும்விடும். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து,“என்னை அவரோடு பேச விடுங்களேன். வேண்டிய அரசியல் பேசியாயிற்று. அவரோடு எனக்கு இலக்கியம் பேசணும்” என்றார் கடுமை தொனிக்க…

விருதுகள், பரிசுத்தொகைகளைத் தொடர்ந்து மறுத்துவந்த அவர், ‘விளக்கு’ விருதினை ஏற்றார். ஆனாலும், அவர்கள் பணத்தை ஏற்காமல் அதை வைத்து பி.எஸ்.ராமையாவின் 300 கதைகளையும் தன்னுடைய குறிப்புகளோடு வெளியிட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டார். தன்னுடைய கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவருவதைவிட, தன் சக எழுத்தாளரான ராமையாவின் கதைகளைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய அக்கறையும் தள்ளாத அந்த வயதிலும் அவரே தன் கைப்பட ராமையாவின் கதைகளைப் பற்றிய குறிப்புகளை எழுதியும், புத்தகத்தின் மெய்ப்புத் திருத்தியும் அவர் செலுத்திய உழைப்பும் மெய்சிலிர்க்க வைப்பவை. அப்படி ஒன்றும் அந்த 300 கதைகளும் உன்னதமான கதைகள் என்று சொல்லிவிட முடியாது. ராமையாவே தவிர்க்க விரும்பிய கதைகளையும் செல்லப்பா கொண்டாடித்தான் எழுதினார். ஆனால், தான் சரி என்று நம்பியதற்காக சாகும்வரை எதையும் இழந்து அர்ப்பணிப்புடன் உழைப்பது என்கிற அவரது வாழ்க்கைமுறைதான் இங்கு நாம் வியப்புடன் நோக்கத்தக்கது.

பல நவீன இலக்கியப் படைப்பாளிகளை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளாதபோதும், அவர்களோடு உறவாடி இறுதிக் காலங்களில் உதவியாக இருந்து, அவர்களின் விருப்பங்களைக் கேட்டு ஆவண செய்யும் ஓர் உயர்ந்த உள்ளம் தமிழகத்தில் உண்டெனில், அது வெளி ரங்கராஜன்தான். சி.சு.செல்லப்பாவின் கடைசி ஆசைகளை நிறைவேற்ற முயன்றவரும் அவர்தான். சி.சு.செல்லப்பா பற்றிய அவரது வார்த்தைகளுடன் இக்கட்டுரையை நிறைவுசெய்வோம்.

”என் சிறுகதை பாணியிலிருந்து தொடங்கி, புத்தகங்கள் அச்சாக்கம் பெறுவதும் அடுத்த புத்தகத்தைப் பற்றி சிந்திப்பதுமாகவே அவர் இயக்கம்கொண்டிருந்தார். அதுவே அவருடைய வாழ்வை நீட்டித்தது. பலமுறை அவரை மரணம் நெருங்கி நெருங்கி விலகியபோது, புத்தகம் பதிப்பாவதைப் பற்றிய செய்தி அவரை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும். அவருடைய ‘சுதந்திரத்தாகம்’ நாவல், நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்தப் பணத்தில் அவருடைய செய்யுளியல், எழுத்துக்களம், விமர்சனத்தேட்டம், தமிழ்ப்படைப்பாளிகளின் விமர்சனங்களுக்குப் பதில்கள் ஆகிய பிரதிகளைப் பதிப்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். சாதாரண நாட்களில், நூலக ஆர்டர்களை அவர் நம்பியவர் அல்ல. தானே புத்தகங்களைச் சுமந்துகொண்டு அலைந்தவர்தான். ஆனால், இயலாத சூழலில், சுதந்திரத்தாகம் நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படாமல், சிறிய வீட்டில் வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருந்த காட்சி, செல்லப்பாவுக்கு பெரிய மனத்தளர்ச்சியை உண்டாக்கியது. மரணத்திலிருந்து மீள அவருக்கு வழி இல்லாதுபோயிற்று. உண்மையான இலக்கியவாதிகளை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாமல், `தமிழ் வாழ்க’ என்று முழங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம் நம்முடையது. புத்தகங்களின் மதிப்பு தெரியாத ஆட்கள், நூலகங்களுக்குப் பொறுப்பாளர்களாக இருப்பதும் இங்கேதான் இயலும்.
செல்லப்பா, எழுத்து இயங்கிய காலத்திலிருந்து வெளியே வரவே இல்லை. ஆனால், அதுவே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அவரை இந்தக் காலத்துக்குள் இழுக்க முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அது தேவையற்றது போலும் தோன்றியது. இனி, அந்தக் கால குழப்பத்துக்கு இடமில்லை. செல்லப்பா, நீண்ட தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாகிவிட்டார். நிறைவான இலக்கிய வாழ்க்கை அவருடையது.”

சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ – கே.எஸ். ராதாகிருஷ்ணன் (www.dinamani.com)

18 Dec 2020

அரசாங்கம் அவருக்கு அறிவித்த `ராஜராஜன் விருதை’க்கூட கொள்கை நிலை நின்று நிராகரித்தார் சி.சு. செல்லப்பா.”,”articleBody”:”தேனி மாவட்டம், சின்னமனுாரில், 1912 செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தார் சி.சு. செல்லப்பா. தந்தை அரசு அதிகாரி. தந்தையின் பணியிட மாற்றலுக்கேற்ப பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்புகளை முடித்தார். மதுரையில் மதுரைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார்.ஆங்கிலேய அரசு அதிகாரியான தந்தை ஒரு தேசியவாதி. தந்தையிடமிருந்து தேசிய ஊக்கம் பெற்ற இவர் சிறு வயதிலேயே ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது நூறு தேசியப் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்து வைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.மதுரைக் கல்லுாரியில் பி.ஏ. படித்த அவர், மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். சிறைவாசமும் அனுபவித்தார்.'சுதந்திரச் சங்கு, மார்கழி மலர்' உள்ளிட்ட இதழ்களில், இவர் எழுதிய சிறுகதைகள் தனிக் கவனம் பெற்றன. 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.சிறுகதை, புதினம், நாடகம், திறனாய்வு, கவிதை என மொத்தம் 29 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு பற்றிய அவரது 'வாடிவாசல்' குறுநாவல் பெரும் வரவேற்பு பெற்றது. இலக்கிய விமர்சனத்திற்காக, 'எழுத்து' என்ற மாதப் பத்திரிகையை துவக்கினார்.உண்மையான காந்தியவாதியான அவர், இலக்கியத் துறையில் தான் சரி என நம்பிய ஒன்றுக்காக எல்லாவற்றையும் தத்தம்செய்தார். அரசாங்கம் அவருக்கு அறிவித்த `ராஜராஜன் விருதை’க்கூட கொள்கை நிலை நின்று நிராகரித்தார். அதன் காரணமாக, குடும்பத்தாரின் வெறுப்புக்கும் ஆளானார்.தானே அச்சிட்ட, விற்பனையாகாமல் தன் சின்னஞ்சிறிய ஒற்றை அறை வீடெங்கும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு நடுவே, காது கேளாத தன் துணைவியாருடன் தன் முதுமையைத் தனிமையில் கழித்தவர் செல்லப்பா.  தன் 86-வது வயதில் 1998 டிசம்பர் 18 ஆம் தேதி இயற்கை எய்தினார்.செல்லப்பாவின் மரணத்துக்குப் பின், அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காக 2001-க்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது.சுதந்திர தாகம் நாவலில் வரும் சிவராமன் என்ற தலைமைப் பாத்திரம் வேறு யாருமல்ல, செல்லப்பாவேதான். அந்த நாவலுக்கு கதாநாயகன், கதாநாயகி என்றெல்லாம் யாரும் கிடையாது. மறைமுகக் கதாநாயகன் காந்தி என்று சொல்லலாம். அல்லது சுதந்திரப் போரே கதாநாயக அந்தஸ்தைப் பெற்றது.சி.சு. செல்லப்பா தம் கடைசி ஆண்டுகளில் முனைந்து முழுமூச்சாக ஈடுபட்டு எழுதிய பிரம்மாண்டமான மூன்று பாக நாவல் `சுதந்திர தாகம்`. சி.சு. செல்லப்பா என்றால் இலக்கிய அன்பர்கள் மனத்தில் முதலில் தோன்றுவது அந்த நாவலே. அதை அவர் தம் உணர்ச்சிகள் முழுவதையும் கொட்டி எழுதியுள்ளார் என்று சொல்ல வேண்டும். தம் இறுதிக் காலங்களில் அந்த நாவலை ஒரு வேகத்தோடு அவர் எழுதி முடித்தார். தம் மிக நெருங்கிய நண்பரான தீபம் நா. பார்த்தசாரதி, ஐம்பத்து நான்காம் வயதிலேயே மறைந்தது அவரைப் பெரிதும் வாட்டியது. பி.எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன் போன்ற அவரது பிற நண்பர்கள் காலமானபோதும் செல்லப்பா வேதனைப்பட்டார்.இலக்கியத்தில் தான் சரியென நம்பிய ஒன்றுக்காக எல்லாவற்றையும் தத்தம் செய்த செல்லப்பாவைப் போல இனியொருவர் பிறப்பாரோ. டிச. 18 – சி.சு. செல்லப்பா நினைவு நாள்.

முகவுரை – ந. சிதம்பர சுப்ரமண்யன் – 30- 6-42

“ஒரு பிராமணன் ஒரு வீட்டில் பிச்சை கேட்டான். அந்த வீட்டு ஸ்திரீ அவனுக்கு அன்னம் இட்டாள். அதைத் தொன்னையில் வாங்கிக்கொண்டு ஒரு மரத்தடியில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். அப்பொழுது மரத்தின் மேலிருந்த கருடன், ஒரு நாகத்தைப் பிடித்துக் கொத்திக் கொண்டிருந்தது. நாகம் வலி பொறுக்க முடியாமல் விஷத்தைக் கக்க, அது பிராமணன் அன்னத்தில் விழ, குளித்து வந்த பிராமணன் அதைச் சாப்பிட , அவன் உயிர் துறந்தான். இந்தப் பாவம் யாரைச் சாரும்?’ என்று வேதாளம் விக்ரமாதித்தனைக் கேட்டது.

தத்துவ ஞானியான வேதாளம் விக்ரமாதித்தனை இருபத்து நாலு கேள்விகளே கேட்டது. ஆனால். வாழ்க்கை இப்படிப் போடும் விடுகதைகள் அனந்தம். லக்ஷக்கணக்கான புதிர்களுக்கு விக்ரமாதித்தனைப் போலப் பதில் சொல்ல முயலுகிறது கலை. மயக்கம் தரும் மாயைகளைப் பிளந்து கொண்டு உண்மையைத் தேடிக் கொண்டு செல்கிறான் கலைஞனும் கவிஞனும். நிரந்தரமான பிரச்னைகள், நிரந்தரமான போராட்டங்கள். இவைகளை ஊடுருவிப் பார்ப்பதுவே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி, இவைகளை விஸ்தரிக்கும் பொழுது உயர்ந்த இலக்கியம் ஆகிவிடுகிறது. மேலெழுந்த வாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹ்ருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியன் வேலை. மின்னல் போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைக் கோடுகளாக இருக்கின்றன. விருப்பு வெறுப்புக்களும், ஆசாபாசங்களும் மனித உள்ளத்தில் புயலடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்குட்பட்ட வாழ்க்கையில் முக்குளித்து வரும் மனிதன் கதையை, ஆதிகாலந்தொட்டு எழுதிவந்திருக்கிறார்கள் அறிஞர்கள். ஆனால், மனிதன் கதை முடிவில்லாததொரு பழங்கதை. இந்தப் பழங்கதையைப் புது முறையில் சொல்லுவதே ஆசிரியன் திறனைக் காட்டுகிறது.

ஸ்ரீ செல்லப்பா எப்படி வாழ்க்கையின் வினோதங்களைப் பார்த்திருக்கிறார்? வாழ்வின் பலவித சூக்ஷமங்களுக்கு எவ்வித அர்த்தங்களைக் கண்டு பிடித்திருக்கிறார் ? பழமையான மனிதன் கதையில் என்ன புதுமையை அவர் கண்டார்?

வாழ்க்கையில் அவர் கண்ட் பல்வேறு அனுபவங்களும், அவர் கண்ட புதுமைகளுமே, ‘ஸரஸாவின் பொம்மை’ யாக உருப்பெற்றிருக்கின்றன.

சோகத்தையும் அதன் சோபையையும் கண்டு அனுபவிக்க ரஸனை வேண்டும்; துன்பத்தின் பல்வேறு சாயைகளிலும் இருக்கும் ஒருமையைக் கண்டு கொள்ள அன்பு பரந்த கவியுள்ளம் வேண்டும். ஸ்ரீ செல்லப்பாவிடம் குருவிக் குஞ்சு முதற்கொண்டு நொண்டிக் குழந்தை வரையில் சகல ஜீவராசிகளையும் பற்றிக்கொள்ளும் பரந்த அன்பு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து தப்ப முடியாதபடி, விதியின் விளையாட்டுக்களினால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு வேதனைப்படும் உள்ளக்கனிவு இருக்கிறது. வாழ்க்கையின் சில விபரீதங்களை எட்டி நின்று பார்க்கும் பற்றின்மை – இருக்கிறது. இக்குணங்கள் ஆசிரியனின் எழுத்தை உயர்ந்ததாகச் செய்கின்றன. பொதுவாக எல்லாக் கதைகளிலும், கதாபாத்திரங்களின் மனம் போகிற போக்கை நுட்பமாகப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். சம்பாஷணைகள் இயற்கையாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. சுற்றுணர்ச்சி நன்கு அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களும் தெளிவான உருவம் பெற்றிருக்கிறார்கள்.

ஸரஸாவைப் பொம்மையாக வைத்து விளையாடி வந்தான் அவன். ஆனால், அவன் தான் ஸரஸாவின் பொம்மையாக இருந்தான். அந்த உண்மை தெரிந்த போது ஏற்பட்ட திகைப்பும் திருப்தியும் ஏமாற்றமும் ‘ஸரஸாவின் பொம்மையில் வெகு அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன.

குழந்தை ராதா , சந்திரனுக்கு இறந்துபோன தங்கையின் ஞாபகார்த்தமாக இருக்கிறாள். ராதாவோ தனக்குக் கிடைத்திருக்கும் புதிய தாயாரைக் காட்டிப் பெருமை கொள்கிறாள். விளையாட்டுக் குழந்தைக்கு மாமாவின் மனத்தில் எழும் துன்ப அலைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்படியே தாயிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் ‘குருவிக்குஞ்சின் க்ஷேமத்திற்குத் தவிக்கும் நெஞ்சம் ; புக்ககத்திற்குத் தங்கையைக் கொண்டுவிடப்போகும் பொழுது அண்ணனுக்கு ஏற்படும் மனநிலை; தான் நொண்டியாக. இருந்தாலும் மாயக் கண்ணனைப் போலப் பல ரூபங்கள் பெற்று எல்லாக் குழந்தைகள் விளையாட்டிலும் ஈடுபட்டுக் கலந்து கொள்ளும் ‘நொண்டிக் குழந்தை’, உறவினர்கள் அழுதுவிட்டுத் திரும்பிப் போக மறுநாள் சாம்பலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்போகும், மயானம் காக்கும் இருஜீவன்களிடமிருந்து வரும் ஆனந்த கீதத்தின் மூலம் புலப் படும் வாழ்க்கை ‘யின் விசித்திரம் ; சிறியதொரு சிறையிலிருந்து வெளிப்பட்டாலும் பெரியதொரு சிறை ‘மூடியிருந்தது’ என்று ஏங்கும் உள்ளம் முதலிய உள்ள நெகிழ்ச்சிகள், சந்தர்ப்பங்கள் போன்றவைகளை ரஸம் குன்றாமல் அழகாகச் சித்திரித்திருக்கிறார்.

‘நான்’ என்று சொல்லி வருகிற கதைகளில் இவர் விசேஷமான வெற்றி பெற்றிருக்கிறார். சிறுகதை ஒரு ரஸத்துணுக்கு. அதை எவ்வளவு தீவிரமாகவும், எவ்வளவு சக்தியுள்ளதாகவும் எழுத முடிகிறதோ அதில்தான் வெற்றி இருக்கிறது. சொந்த அனுபவங்களைப்போல், நேருக்கு நேராகச் சொல்வதில் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உறவு நெருக்கமாக ஏற்படுகிறது; மனத்தை விண்டு காட்ட முடிகிறது. அவ்விதம் எழுதுவதில் ஒருவித நேர்மை ஏற்படுகிறது. சிறுகதைக்கு நேர்மையும் (honesty), அந்தரங்க சுத்தியுந் (sincerity) தான் அவசியம்.

இக் கதைகளில், சம்பவங்கள் அதிகம் இல்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத சம்பவக் குவியல்களில் பிறக்கும் கதைகள் அல்ல இவை. ஒரு சிறு ஞாபகம் எழுப்பும் சிந்தனை அலைகள், ஒரு நொடிப் பொழுதில் உதயமாகும் எண்ணம் போன்றவைகள் தாம் இவர் கதைகள் கட்டி எழுப்புவதற்கேற்பட்ட அஸ்திவாரங்கள். சிறுகதைக்கு ஏற்பட்ட விஷயங்களும் இத்தன்மை கொண்டனவாகத்தான் இருக்க வேண்டும். சிறிதைப் பெரிதாக்குவதும், நிமிஷத்தை நித்தியமாக்குவதுந் தான் சிறுகதையின் வேலை.

சிறுகதைக்கு முக்கியமாக வேண்டியது பாவம். பாவசித்திரம் நன்கு அமைந்திருப்பதே கதையின் சிறப்புக்கு அடிப்படை. குண சித்திரங்களுக்குச் சிறுகதைகளில் அதிகமான வேலை இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் குணவேறுபாடுகளைத் தீட்ட முயலும் போது சிறுகதையின் அளவை மீறி நாவலாகிவிடுகிறது. செல்லப்பா அறிமுகப்படுத்தும் சில குணசித்திரங்களும் நன்கு தீட்டப்பட்டிருக்கின்றன. கள் நாற்றத்தோடு கம்பீரமாக வரும் வீரன் குண்டான், அழுக்கேறிய பாவாடையுடன் தோன்றிக் குண்டான் வீரத்திற்குத் தன் காதலை அர்ப்பணம் செய்யும் காபூலிக்காரி, கஜப் போக்கிரி மகுடித்தேவன் போன்றவர்களையும் நமக்குக் காட்டுகிறார்.

குழந்தைகளின் போக்கு மிகவும் கவர்ச்சி நிறைந்தது. இனிமையும், அழகும் கலந்த கல்மிஷமற்ற அவர்கள் ஹ்ருதயம் ஆசிரியர் மனத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. குழந்தைகளின் மனோ தத்துவத்தையும், குழந்தைகளினால் பெரியவர்களுக்கு ஏற்படும் மனோபாவங்களையும் சில கதைகள் ஆராய்கின்றன.

வாழ்க்கை நமக்குப் போதிக்கும் நீதிகள் அனேகம். சிந்தித்துப் பார்க்கச் சிந்தனை மட்டும் இருந்தால், நாம் அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினைகள் ஏராளம். ‘வாழ்க்கையில் கண்ட விசித்திரம் மூளையைத் தூண்டுகிறது. இப்பொழுது தோன்றுகிறது : “காதலுக்கும் சாதலுக்கும், இயற்கை ஒரு விதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பிலதான் காதல் பிறக்கிறது. நிலவும், தென்றலும், மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும், காற்றுப் போக்கின் சக்தியின் ஓய்வும், சாதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந்தோப்பில், காதல் கூவும் பக்ஷி ; எதிர் மேட்டிலே சாதல் ஓலமிடுகிறது. எல்லாம் இயற்கையின் பகைப் புலத்திலே. ஆனால், சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை” என்கிறார்.

நடை இலக்கியத்தின் மூச்சு. அந்த அந்தக் கதைகளுக்கேற்ற நடையை இவர் கையாண்டிருக்கிறார்

ஆனால் சில கதைகளில், மேல் நாட்டு மோஸ்தரில் சொற்றொடர்களும், பாணிகளும் வந்து விழுந்திருக்கின்றன. மேல் நாட்டு இலக்கியத்திலே ஊறி வந்திருக்கிற தற்காலத் தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும்பாலும் இந்தக் குறை இருந்துதான் தீரும். ஆனால், இம்மாதிரி நடைகளெல்லாம், அனேக எண்ணங்களை வெளியிட முடியாமல் ஊமையாயிருக்கிற தமிழன் வாயைத் திறக்க ஹேதுவாயிருக்கலாம். எல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

ஸரஸாவிற்குப் பொம்மை தேவை. மனிதனுக்கு இலக்கியம் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முயலும் எந்த முயற்சியையும் உலகம் வரவேற்க வேண்டும்.

காரைக்குடி, 30- 6-42
ந. சிதம்பர சுப்ரமண்யன்

சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ரா
https://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_19.html

சாரு நிவேதிதா – சி.சு. செல்லப்பா பற்றி:
https://sites.google.com/site/rsrshares/home/charunivedhitha-on-ci-su-chellappaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *