
ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு 1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)
https://noolaham.net/project/1029/102876/102876.pdf
இவரது நூல்கள்
கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் – 1976)
பதிப்பு விபரம்
அலை வெளியீடு 6. மத்திய மேற்குத் தெரு. குருநகர் ,
யாழ்ப்பாணம். அலை வெளியீடு – 2
மார்கழி 1976
விலை : ரூபா 4- 50சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள் – 1982)
பதிப்பு விபரம்
சாதாரணங்களும் அசாதாரணங்களும். குப்பிழான் ஐ.சண்முகன். சென்னை 60001;
நர்மதா பதிப்பகம், 10, சோமசுந்தரம் தெரு, தி.நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1983. (சென்னை 600017: தமிழோசை அச்சகம்). 212 பக்கம்உதிரிகளும்…(சிறுகதைகள்)
முதலாம் பதிப்பு: ஆவணி 2006,
புதிய தரிசனம் வெளியீடு.- நூல்விபரம் இளைஞர்கள் பற்றிய ஓர் அழகியல்வாதியின் அகவயரீதியான பார்வையுடன் கூடிய கதைகளை எழுதியிருக்கும் ஆசிரியர் பெரும்பாலானவற்றில் இளைஞர்களின் மன அவலங்கள் அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக்காட்ட முடியாத சோகங்கள், எதிர்பார்ப்புகள் இவற்றினால் அவர்களிடையே எழும் நடைமுறைகளுக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை இவற்றை ஆழ்ந்த அழகுணர்ச்சியுடன் சித்திரித்துள்ளார். கோடுகளும் கோலங்களும் என்ற அலை வெளியீடான சிறுகதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகின் அவதானிப்புக்்கு உள்ளான சண்முகன், அலை ஆசிரியர் குழுவில் ஒருவருமாவார்.
- அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (2003)
- நிறைவில் …….

வாழ்வின் தேடல்களில், காத்திருப்பு களில் அவ்வப்போது என் சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின் – தவிப்புகளின் – தரிசனங்களின் கோலங்களே என் கதைகள். இந்தக் கதைகளை ஒருசேர உங்கள் முன் வைக்கும்போது, உங்கள் மனங்களில் எவ்வித முற்சார்புகளையும் ஏற்ற வேண்டாமென்று பட்டது. அதனால் தான் இந்த என் கதைகளை நீங்கள் அனுபவித்த பின், அந்த நிறைவில் உங்களைச் சந்திக்கலாம் என எண்ணினேன். எதுவித வழிகாட்டலுமின்றியே இந்தக் கதைகளின் ஆத்மாவை நீங்கள் தொட்டிருப்பீர்கள் தானே! புகைவண்டிகளில் பயணம் செய்திருப்பீர்கள் – மலைகளினதும், நதிகளி னதும், பூஞ்சோலைகளினதும் அழகை இரசித் திருப்பீர்கள். காலை, மாலை , இயற்கைக் காட்சி களில் மனதைப் பறி கொடுத்திருப்பீர்கள். மாறி வரும் உலகின், மனித மனங்களின் உணர்ச்சிக் கோலங்களைக் கண்டு வியந்திருப் பீர்கள். அழகு இலயிப்பு’த் தான் இந்தக்கதை களின் உள்ளார்த்தம் என்று நீங்கள் சொல்லக் கூடும். அப்படிச் சொன்னால், நான் அதை மறுக்கப் போவதில்லைத்தான்.
இந்த என் கதைகளை நூலுருவம் ஆக்கும் எண்ணம் அவை பிறந்த காலத்திலிருந்தே எனக்கு இருந்தாலும் – என் திருமணத்தின் பின் துணைவியினதும், உறவினர்களினதும். நண்பர்களினதும் இடையறாத் தூண்டுதலினாலேயே (உண்மையில் நான் சரியான சோம்பேறி ) இப்போது கைகூடிற்று. இந்தத் தொகுப்பை ‘இந்த அளவிலேயே ‘ கொண்டுவர வேண்டு மென்ற பொருளாதார நிர்ப்பந்தத்தினால், என் நல்ல கதை சிலவற்றை இதில் சேர்க்க முடியாதும் தவிர்க்க வேண்டியதாயிற்று.
இந்தச் சந்தர்ப்பத்தில், என் கதைகளை இனங்கண்டு அவற்றைப் பிரசுரித்த வீரகேசரி . மல்லிகை, ஈழநாடு, சிரித்திரன், அஞ்சலி , இளம் பிறை, கற்பகம் , மங்கை, அலை ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன். என் கதையொன்றின் ஆகாஷிப்பில் தொடர்பு கொண்டு, தொடர்ந்த என் கலை வாழ்வில் என்னை வளப்படுத்தியவரும், இந் நால் உருவாக்கத்தின் முழு உழைப்பாளனு மான நண்பன் அ. யேசுராசாவிற்கு சம்பிரதாய பூர்வமாக நன்றி சொல்லக் கூச்சப்படுகிறேன். மிகக் குறுகிய காலத்தில் நூலின் முகப்போவி யத்தை வரைந்து உதவிய ஓவிய நண்பருக்கும், அச்சுத் தொழிலாள நண்பர்க்கும் நன்றிகள்.
குப்பிழான் ஐ.சண்முகன்
“மாணிக்க வளவு’
கரணவாய் தெற்கு.
கரவெட்டி,
1969இல், ‘வீரகேசரி’யில் வெளிவந்த சண்முகனின் சிறுகதையொன்றின் ஈடுபாட்டினால் அவருடன் அறிமுகங்கொள்ள நேர்ந்தது; அவ்வேளை இருவரும் கொழும்பில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தோம். இன்றுவரை அத்தொடர்பு நட்பாக நீடிப்பது, மகிழ்வைத் தருகிறது!
‘கொழும்பு கலை, இலக்கிய நண்பர் கழகத்’தின் உருவாக்கத்தின் பின்னர் நெருக்கம் அதிகரித்தது. தீவிர இலக்கிய வாசிப்பு, சிறுசஞ்சிகைகள், திரைப்பட விழாக்கள், கலைத்துவமான சிங்களத் திரைப்படங்கள் நாடகங்கள், ஓவிய, நிழற்படக்காட்சிகள், தமிழ்விழாக்களின் கருத்தரங்குகள், கையெழுத்துப் பிரதிகளாயிருந்த ‘படைப்புகள்’ பற்றிய பூசி மெழுகாத பரஸ்பர விமர்சனங்கள் என அக்காலங்கள் அற்புதமாய்க் கழிந்தன; பின்னோக்கிப் பார்க்கையில், இளமையில் எமது கலை இலக்கிய ஆளுமைப் பண்புகள் கட்டமைக்கப்பட்ட காலங்களெனவும் சொல்லலாம்!
1975-1978 வரை ‘அலை’யின் ஆசிரியர் குழுவில் இணைந்திருந்தோம். சூத்திரப்பாங்கான வரண்ட பார்வைகள் கோலோச்சிய இலக்கியச் சூழலில், பல்துறை ஈடுபாட்டுடனும் நவீனத்துவம் பற்றிய தாகத்துடனும் போலிகளிற்கு எதிராக மாற்று இதழாகக் கலகம்புரிந்து வெளிவந்த ‘அலை’யில், அவரின் பங்களிப்புச் சேர்ந்தே உள்ளது.
புறச்சூழலையும் நிகழ்வுகளையும் தனது படைப்புகளில் நுட்பமாய்ப் பதிவுசெய்துள்ளாராயினும், அடிப்படையில் அவர் ஓர் அகவயவாதி; ஆன்மிக நம்பிக்கையும், மெல்லுணர்வுகளும், அழகியல் இரசனைத் திளைப்பும் கொண்டவர்.
இலக்கியவாதிகளிடை பரவலாய்க் காணப்படும் சுயநலன் கருதிய -தந்திர அணிசேரல்களோ, ‘ஹீரோத்தன’ மேட்டிமை யுணர்வோ இல்லாதவர்; அடக்கமும் ஒதுங்கிய தன்மையும் கொண்டவர் என்பதும் எனக்கு முக்கியமாய்ப்படுகிறது!
– அ.யேசுராசா, குருநகர், 19.07.2006, உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.
எனது சிறுகதைகளை பதிவிட்டமை அறிந்து மகிழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்,”கோடுகளும் கோலங்களில்”உள்ள கதைகளையும், எனது மற்ற கதைகளையும் நீங்கள் தளத்தில் இடம் பெறச் செய்யலாம். நன்றிகள்.
வணக்கம் ஐயா, உங்களுடைய கதைகளை சிறுகதைகள் தளத்தில் பதிவேற்ற அனுமதித்தற்கு மிக்க நன்றி.