கமலப்பித்தன்

 

கமலப்பித்தன் – ஒரு சிறு அறிமுகம்

ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிபின் குறிப்புகளிலிருந்து…

கமலப்பித்தன், நாகூர் எழுத்தாளர்களுக்குள் முதன்மையானவர் இல்லை என்றாலும் முக்கியமானவர் என்பதில் ஐயமில்லை. அவரது இயற்பெயர் எஸ். செய்யது அலி சாஹிப். ‘எஸ்.எஸ்.அலி’ என்ற பெயரில் அறுபதுகளில் பிறை, முஸ்லிம் முரசு, மணிவிளக்கு ஆகிய சஞ்சிகைகளில் சிறுகதை எழுதத் துவங்கினார்.

ரா.கி.ரங்கராஜன், எஸ்.ஏ.பி, ஜ.ரா. சுந்தரராஜன், புனிதன் போன்ற சிறுகதை மன்னர்கள் குமுதத்திலும் ஜெயகாந்தன், வாசவன், பிலஹரி, அகிலன், தாமரை மணாளன் போன்ற ஜாம்பவான்கள் ஆனந்தவிகடனிலும் சிறுகதை இலக்கியத்திற்கு உயிரூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் குமுதம், விகடன், கலைமகள் ஆகிய பிரபல பத்திரிக்கைகளில் கமலப்பித்தனின் படைப்புகள் வெளிவரத் தொடங்கிற்று.

அது எழுத்தாளர் சுஜாதாவின் பிரவேசத்திற்கு முந்திய யுகம்.

‘கள்ளி’, இடிதாங்கி, மீன்குஞ்சு, தடுக்கு போன்ற எண்ணற்ற கதைகள். ‘புனிதக் கண்ணீர்’, ‘பூமி விளக்கம்’ போன்ற கதைகள் ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாக வெளிவந்தன.

துடிப்புள்ள நடை. ராணுவப் பயிற்சி நடைபெற்ற ஒரு மலையடிவாரத்தை வர்ணிக்கும்போது, ‘குன்றின் கழுத்தில் செந்நிறக் கொடி; பொது நடமாட்டம் கூடாதென்ற எச்சரிக்கை’ என்று புதுமையாகத் துவங்கியிருந்தார் ஒரு கதையில். இன்னொரு கதை, ‘வைகறைப் பனி, போர்வையின் ஓட்டைகளுக்குள் ஊடுருவி ஊசியென உடலைத் தாக்கிற்று. இமை மலர்த்தவே யோசனை. கண்ணன் கையால் அலைந்தான். அவனது கையில் மாட்டியது தலையனையல்ல; கட்டாரி’ என்று ஆரம்பம். கதை புனைவதில் பலவிதப் புதுமைகள் கையாண்டவர்.

அந்தக் காலத்தில் கலைமகளிலும் ஆனந்தவிகடனிலும் கதை எழுதுவது வானத்தைத் தொடுகிற வேலை. தமிழ் வாசகர்கள் வட்டாரத்தில் ஒரே இரவில் பிரபலமாக வேண்டுமானால் ஆனந்தவிகடனில் ஒரு முத்திரைக்கதை எழுதிவிட்டால் போதும். முத்திரக்கதைக் கர்த்தாக்களை தமிழ்த்திரையுலகம் கைநீட்டி வரவேற்ற காலத்தில் திரையுலகத்தைத் தீண்டாமல் தனித்து நின்றவர் எனக்குத் தெரிந்து கமலப்பித்தன்தான்

அவர் பிரசவித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன; அவர் மறைந்து விட்டார்.

***

நன்றி : ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிப், http://abedheen.wordpress.com/2008/06/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *