1947 ல் யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்னும் கிராமத்தில் பிறந்த தில்லைநடராசா இலங்கை அரசில் 1967ல் பொது முகாமைத்துவ எழுதுவினைஞராக நியமனம் பெற்று,1978ல் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று 2007 வரை கடமையாற்றி ஓய்வு பெற்றார். பாடசாலை நாட்களிலேயே பத்திரிகைகள் வானொலிக்கு எழுதியதுடன் நடிப்பு, நாடகத்தயாரிப்பு,நிகழ்ச்சித்தொகுப்பு என மேடை நிகழ்வுகளிலும் ஈடுபட்டார்.
போராட்ட காலத்தில் வவுனியா கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்க அதிபராக ஆறுவருடம் பணியாற்றியதும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக பத்துவருடங்கள் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது. இளைப்பாறிய பின்னர் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு அரச சேவை ஆணைக்குழு உட்பட பல ஆணைக்குழுக்களில் கடமையாற்றியுள்ளார்.
1995 ல் யாழ்ப்பாணத்திலிருந்து 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் கிளாலியூடாக கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்த போது, அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை தொடர்ச்சியாக பல காலம் வழங்கி மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டார்.கல்வி அமைச்சில் பணியாற்றிய போது, உலக வங்கியின் உதவியுடன் இலங்கை எழுத்தாளரின் புத்தகங்கள் ஒவ்வான்றிலும் ஐஞ்நூறு பிரதிகள் கொள்வனவு செய்து பாடசாலை நூலகங்களுக்கு அனுப்பினார்.
200 க்கு மேற்பட்ட சிறு கதைகள், சிறுவர்களுக்கான ஏழு நூல்களை எழுதியுள்ளதுடன், மேடை வானொலி தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளளார். அவற்றுள் சில சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவரது சிறுகதைத்தொகுதியாகிய ”நிர்வாணம்” சர்தேச தரம் வாய்ந்தது என இந்தியாவில் பரிசில் பெற்றதுடன், ”அப்பா” என்னும் நூலுக்கு இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
கலை இலக்கிய பங்களிப்புக்காக அரச விருதுகளையும் கலை இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள இவர், கல்வி கலை இலக்கியம் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கும் பல தடவைகள் பயணம் செய்துள்ளளார்.