பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தார். உள்ளூர் மிஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றார் ஜேக்கப். தந்தை வாங்கிக்கொடுத்த நூல்களோடு நூலகத்துக்குச் சென்று வாசிப்பதையும் வழக்கமாகக் கொண்டார். அருகிலுள்ள புதியம்புத்தூர் கிராமத்தில் உயர்நிலைக்கல்வி தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் காலமானார். அது இவரது வாழ்வின் மிகப்பெரிய சோகமானது. பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். கற்கும் ஆர்வம் அதிகரிக்கவே திருநெல்வேலியில் அரசு போதனாமுறை பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஈராண்டுகள் பயின்றார். தொடர்ந்து சிறுவர் ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகத்தில் சேர்ந்து பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்தவுடன் நைனாபுரம் கிராமத்தில் ஆசிரியப் பணி கிடைத்தது. “சமுதாயத்தைத் தனது நற்பணியால் முன்னேற்ற வேண்டும்” என்று கனவுகண்ட ஜேக்கபுக்கு, அப்பொறுப்பு மகிழ்வைத் தந்தது. அந்தக் கனவுகளுடன் அக்கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது. கிராமமே பணம்படைத்த பண்ணையார் ஒருவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. மாணவர்கள் கல்வி பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்த பண்ணையார், மாணவர்களையும், பெற்றோரையும் தன் பண்ணையில் வேலையாட்களாகக் கொத்தடிமைபோல் நடத்திவந்தார். அது கண்டு பொறுக்காத ஜேக்கப் பண்ணையாரை எதிர்த்தார். பண்ணையார் அதனை விரும்பவில்லை. மிகவும் செல்வாக்குப் படைத்திருந்த அவர் தனது அரசியல் தொடர்புகள் மூலம் ஜேக்கபுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார். அதையெல்லாம் சமாளித்துப் பணிகளைத் தொடர்ந்தார் ஜேக்கப்.
நூலகத்துக்குச் சென்று வாசிப்பதும் குறிப்புகள் எடுப்பதும் ஜேக்கபின் வழக்கம். வாசிப்பும் வாழ்க்கை அனுபங்களும் எழுதத் தூண்டின. இவர் எழுதிய முதல் சிறுகதையான ‘பாஞ்சைப்புலிகள்’, 1947ல் ‘தினசரி மடல்’ என்ற வார இதழில் வெளியானது. ‘ஆர்.எஸ். கோபு’ என்ற பெயரில் எழுதியிருந்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து எழுதக் காரணமானது. பல நாள், வார, மாத இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதினார். தமிழ் மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மோசம்போன மோதிரம்’ 1949ல் வெளியானது. இரண்டாவது தொகுப்பு ‘கிறிஸ்தவர்களும் ஜாதியும்’ 1952ல் வெளியானது. தொடர்ந்து ‘நூறு த்ருஷ்டாந்தக் கதைகள்’, ‘நூறு ஜீவனுள்ள கதைகள்’, ‘நூறு அருளுரைக் கதைகள்’ எனப் பல தொகுப்புகள் வெளியாகின.
இந்நிலையில் நெல்லையில் நிகழ்ந்த ரயில் கவிழ்ப்புச் சம்பவத்தால் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் ஜேக்கப். இயக்கம் சார்ந்த பலர் அவரது நண்பர்களாக இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த அவ்வியக்கத்தினர் ரகசியக்கூட்டம் நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார் ஜேக்கப். நாளடைவில் அவரும் சதி வழக்கில் உடந்தை என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக ஜேக்கப் எழுதியிருந்த நாட்குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஜேக்கப் சிறையில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை கொக்கிரகுளம், மதுரை சிறைச்சாலைகளில் கடும் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். பிரபல வழக்கறிஞர் என்.டி. வானமாமலை சதி வழக்கில் கைது செய்யப் பட்டவர்களுக்காக வாதாடினார்.
வழக்கை மிகக் கூர்மையாக விசாரித்து வந்த நீதிபதி வி சுப்ரமணிய நாடார், தீர்ப்பு வழங்கும் முன் கோடை விடுமுறைக்காகக் கொடைக்கானல் செல்லும்போது ஜேக்கப் எழுதிய டைரிகள் அனைத்தையும் உடன் எடுத்துச் சென்றார். கிடைத்த நேரத்தில் ஜேக்கபின் டைரிக் குறிப்புகளை வாசித்தார். ஜேக்கப் அதில், கிராமத்தில் மக்கள் கொத்தடிமைகளாக இருந்ததையும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தான் எடுத்த முயற்சிகளையும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதையும், இம்முயற்சிகளுக்குப் பண்ணையார் எதிராக இருந்ததையும், அதையும் மீறித் தான் அவர்களைப் பள்ளியில் சேர்த்துப் போதித்ததையும் பற்றி விரிவாக எழுதி இருந்தார். இறுதியில் இம்மாதிரியான பணிகளைச் செய்ய உதவிய கர்த்தருக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்ததும் மனம் நெகிழ்ந்தார் நீதிபதி. ஜேக்கப் தீவிரவாதியோ, குற்றவாளியோ, சதிகாரரோ அல்ல; இயேசுவின் வழி நின்று வறியவர்களுக்காக மனமிரங்கி உதவிய ‘ஏழை பங்காளன்’ என்பதாக உணர்ந்தார். விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியதும் ஜேக்கப் குற்றவாளியல்ல என்று அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
1952ல் சிறையிலிருந்து வெளிவந்தார் ஜேக்கப். நெல்லை சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 95 பேரில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். ஒருவர் ஆர். நல்லகண்ணு. மற்றொருவர் ஆர்.எஸ். ஜேக்கப். சிறைவாசத்தால் அரசு ஆசிரியர் பணியை ஜேக்கப் இழந்தார். உள்ளத்தை இறைப்பணியில் செலுத்தி அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டார். சிலகாலம் கிறிஸ்தவ இறையியல் தொண்டராகப் பணியாற்றியவர், பின் மீண்டும் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்துப் பணியைத் தொடர்ந்தார். 1956ல், வயலட் மேரி பிளாரன்சுடன் திருமணம் நிகழ்ந்தது. மனைவியும் ஆசிரியப் பணியாற்றினார்.
சதி வழக்கில் கைது செய்யப்படும்வரை உள்ள சம்பவங்களை, ‘வாத்தியார்’ நாவலிலும், சிறை சித்திரவதைகளைப் பற்றி ‘மரண வாயிலில்’ என்ற நாவலிலும் எழுதி இருக்கிறார். இவரது சிறுகதைளும் குறிப்பிடத் தக்கனவே. ‘ஒலிக்கவில்லை’, ‘சொல்லும் செயலும்’, ‘பட்டுப் பாவாடை’, ‘வரவேற்கப்படாத விருந்தாளி’, ‘யானை மெழுகுவர்த்தி’ போன்றவை வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்ற சிறுகதைகளாகும். ‘அக்கா வீட்டிற்குப் போனேன்’, ‘பட்டணப் பிரவேசம்’, ‘கிறுக்கன்’ போன்ற சிறுகதைகள் பரவலாகப் பாராட்டப்பட்டவை ஆகும்.
எளிய மாந்தர்களே ஜேக்கப்பின் கதை மாந்தராக உலவுகின்றனர். தமது மதத்தின் தத்துவங்களை, நம்பிக்கைகளைத் தனது படைப்புகளில் முன்வைத்தவர் என்றும் ஜேக்கபை மதிப்பிடலாம். இவரது படைப்புகளில் கிறிஸ்தவத்தின் தாக்கம் மேலோங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு, “எழுத்தாளன் சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. அவன் வாழும் சமூகச் சூழலுக்கேற்ப உருவாகிறான். நான் பழகும் இடமும் மக்களும் பெரும்பாலும் கிறிஸ்தவச் சூழல்களே. அவர்கள் யாவரும் சமூகப் பிரஜைகள்தானே. அவர்களின் கலாச்சாரங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பதும் சமூகச் சிறுகதைகள் தானே?” என்று பதில் கேள்வி எழுப்புகிறார் ஜேக்கப். கிறிஸ்தவ மதம் சார்பான சீர்திருத்தங்களையும் தன் படைப்பில் முன்வைத்திருக்கிறார். அதை விமர்சிக்கவும் தயங்கவில்லை. போலி சாட்சிகளை, போலிப் பிரசிங்கிகளைப் பற்றித் தன் கதைகளில் எழுதிச் சிந்திக்க வைத்திருக்கிறார்.
கதீட்ரல், தூய யோவான் பள்ளிகளில் பணியாற்றிய ஜேக்கப், 1985ல் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் முழுக்க இறையியல் பணியாளராகவும், எழுத்தாளராகவும், இதழாளராகவும் பணிகளைத் தொடர்ந்தார். தமிழில் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வெளிவரும் கிறிஸ்தவ சமய இதழான ‘நற்போதகம்’ இதழின் ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சிறுவர் சுடரொளி, பாலியர் நேசன், மனைமலர் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
‘நகைமொழிக் கதைகள் நானூறு’ (நான்கு பாகங்கள்), ‘ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள்’ (பல பாகங்கள்), ‘ஒரு வாத்தியாரின் டைரி’, ‘படைப்பாளியின் டைரி’, ‘சின்ன சின்ன கதைகள் பெரிய பெரிய உண்மைகள்’, ‘மணமும் குணமும்’, ‘பக்தியூட்டும் பல்சுவைக் கதைகள்’, ‘சான்றோரின் வாழ்வில் ஒரு நாள் நடந்த கதைகள்’, ‘அருமையான பிரசங்க ஆதாரக் கதைகள்’, ‘நெல்லைச் சரிதைக் கதைகள்’, ‘கரிசல்காட்டுக் கதைகள்’, ‘ஆர்வமூட்டும் அருட் கதைகள்’, ‘உயரிய உண்மைக் கதைகள்’, ‘உயிரூட்டும் உண்மைக் கதைகள்’, ‘சாட்சிக்கு ஒரு சாட்டை’, ‘சுவையான செய்திக் கதைகள் ஐநுாறு’, ‘உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள்’, ‘இளம் தம்பதிகளுக்கு இனிக்கும் செய்திகள்’, ‘திருச்சபைத் தொண்டர்கள்’, ‘நெல்லை அப்போஸ்தலம் ரேனியஸ்’ போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் சிலவாகும். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து பலர் எம்.ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
ஜேக்கப், சிறந்த சொற்பொழிவாளரும் கூட. கேட்பவரைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் மிக்கவர். இலக்கிய வட்டத்தின் சார்பாக, ‘இலக்கியச் செல்வர்’, உலகக் கிறிஸ்தவத் தமிழர் பேரவை வழங்கிய ‘அருட்கலைஞர்’, கிறிஸ்துவக் கலைக்கழகம் வழங்கிய ‘இலக்கியத் தென்றல்’ உள்ளிட்ட பல சிறப்புப் பட்டங்களும் பதக்கங்களும் பெற்றவர். எழுபதாண்டுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கி வரும் ஜேக்கப் தமிழ் இலக்கிய உலகின் மிகமூத்த படைப்பாளியாக மதிக்கத் தக்கவர்.
– அரவிந்த் (http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13032)
ஆர்.எஸ்.ஜே பெற்ற விருதுகள்
இலக்கியச் செல்வர் ஆர்.எஸ்.ஜேக்கப் நாடறிந்த நற்கதை ஆசிரியர். கடந்த 60 ஆண்டுகளாக எழுதிவரும் சிறுகதைச் சிற்பி.
அவர் எழுத ஆரம்பித்த முப்பது ஆண்டுகள் கழித்தே அன்னாரது எழுத்துத் திறனை அறிஞர் உலகம் தெரிய ஆரம்பித்தது. மபை மலும்
மலேசியா திருமுறை மன்றம்தான் முதன் முதலில் எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேயின் சிறுகதைகளைப் பாராட்டி ‘புதுமைப்பித்தனுக்கு அடுத்த திருமறைப்பித்தன்’ என்ற பட்டத்தினை 1975ல் வழங்கியது.
பாளை-வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம் 1978ல் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கின்போது புலவரின் முப்பதாண்டு காலச் சேவையைச் சிறப்பித்து பொன்னாடை போர்த்தி திருவிவிலியம் பரிசளித்து கௌரவித்தது.
சென்னைக்கிறிஸ்தவக் கலைக்கழகம் இவரின் இலக்கிய சாதனையை வியந்து 1980ஆம் ஆண்டில் ‘இலக்கியத் தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை கொண்டது.
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் அதன் 125 ஆவது ஆண்டு விழாவினை 1983ஆம் ஆண்டில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடிய நாளில் புலவரின் நூலாசிரிய நுண்மான் நுழை புலமையைப் போற்றி, ‘An Eminent Author’ என்ற பதக்கம் வழங்கியது. – உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை 1984ஆம் ஆண்டு வேலூரில் நடத்திய இரண்டாவது உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாட்டின்போது ஆர்.எஸ்.ஜே.யின் பத்திரிக்கைப் பணியினை மெச்சி ‘அருட்கலைஞர்’ என்ற விருதினை வழங்கி மகிழ்ந்தது.
கிறிஸ்தவ இலக்கியச் சங்க மாத இதழான பூக்கூடையின் 1986 நவம்பர் இதழ் ஆர்.எஸ்.ஜேக்கப் மணி விழா மலர் ஆக வெளியிட்ட போது ‘கருப்புத் தங்கம்’ என்று அட்டையில் அவர் தம் படம் போட்டு கௌரவித்தது.
தமிழ்நாடு கிறிஸ்தவக் கழகமும் – கிறிஸ்தவ இலக்கியச் சங்கமும் இணைந்து 1987ஆம் ஆண்டில் நடத்திய பதினான்காவது இலக்கிய நண்பர் வட்டக் கருத்தரங்கின் போது அவர்தம் கதைத் துறையைக்குறித்துப் பெருமை கொண்டு ‘இலக்கியச் செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கி இறும்பூதெய்தியது.
லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப்பரிசுத்திட்டத்தின் கீழ் பாராட்டுப் பெறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களாக நாரணதுரைக்கண்ணன், லா.ச. இராமாமிர்தம், தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.எஸ்.ஜேக்கப், டாக்டர் வாசவன் என்ற ஐவரையும் 24.5.1992 அன்று கோவையில் பாராட்டிப் பரிசளித்துக் கௌரவித்தனர்.
1990 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.ஜேயின் 14 தமிழ்ச் சிறுகதைகள் ‘ Ocean Drops என்ற தலைப்பில் எம்.சந்தோஷ்குமார் அவர்கள் ஆங்கில மொழியாக்கம் செய்து நூலாக வெளிவந்தது.
ஆர்.எஸ்.ஜே-யின் பத்துச் சிறுகதைகளை, செல்வி மேரிபாட்டர்சன் என்ற ஆங்கில சி.எம்.எஸ். மிஷனெரி அம்மையார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “Under the Palmyra Tree” என்ற தலைப்பில் உருவான நூல் 6.3.2005 அன்று நெல்லைப் பேராயரவர்களால் வெளியிடப்பட்டது.
ஆர்.எஸ்.ஜேயின் பன்னிரெண்டு தமிழ்ச்சிறுகதைகளை, திருமதி. வயலற் அழகையா அவர்கள் ஆங்கில மொழியாக்கம் செய்து Road Side Lozaruses என்ற தலைப்பில் 2000 ஆகஸ்டில் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்து உள்ளது.
ஆர். எஸ். ஜேயின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், வாத்தியார் புதினமும் பல கல்லூரிகளில் எம்.ஏ. தமிழ்மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளன. – இவ்வாண்டு (2005-2006) திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள் – மூன்றாம் பாகம்’ என்ற நூல் எம்.ஏ.தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது.
நெல்லை மாவட்டம் பரன்குன்றாபுரம் முதுபெரும்புலவர் மு.நல்லசுவாமி பண்டிதர் அவர்களின் பத்து சிற்றிலக்கியக் கவிதைகளைத் திரட்டிய ஆர்.எஸ்.ஜே. 1980 மார்ச்சில் ‘சிலுவைத்தியான மாலை’ என்ற மகுடமிட்டு வெளியிட்ட நூல் – பின்னாளில் பாளை-சாராள் டக்கர் கல்லூரி முதுகலை தமிழ்மாணவர்களுக்குப் பாடநூலாக இடம் பெற்றது. அந்நூலை ஆய்வாளர் சுவாமிதாஸ் அவர்கள் ஆய்வு செய்து 1992ல் எம் ஃபில் பட்டம் பெற்றுத் தேர்ந்துள்ளார்கள்.
சிறுகதைச் சித்தர் ஆர்.எஸ்.ஜே இன்னும் பன்னூறு கதைகளைப் படைத்து-சிறுகதைத் துறையில் மேலும் பலப்பல சாதனைகள் புரிய இறையருள் வேண்டி நிற்கிறோம்.
பதிப்பகத்தார், ஜெயா பப்ளிகேஷன்ஸ்
அருட்கலைஞர், முனைவர் ஆர்.எஸ்.ஜேக்கப் படைப்புகளின் பேரில் ஆய்வு செய்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற ஆய்வாளர்களும் – ஆய்வேடுகளும்
1. பாளை – எஸ்.டி.சி. பெண்கள் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திருமதி.ஜெசி விமலா எம்.ஏ., எம்.எட்., அவர்கள் – மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்து, புலவர் ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘மனைமலர்’ என்ற திங்கள் ஏட்டில் ‘1985 ஜனவரி முதல் 1985 டிசம்பர்’ வரையுள்ள பன்னிரு திங்கள் இதழ்களைச் சேர்த்து, ‘மனைமலர் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து – குறிப்பாக ஆசிரியர்களின் சமுதாய நோக்குள்ள தலையங்கங்களை அலசி ஆய்ந்து 1987 ஏப்ரல் திங்களில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்கள். அன்னார் தற்போது மேரிசார்ஜென்ட் மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
2. பாளை எஸ்.டி.சி. மேனிலைப்பள்ளி தமிழாசிரியர் திருமதி. மெற்றில்டா ஜோதிராணி எம்.ஏ. அவர்கள் – மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து, ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் என்ற முதல் தொகுதியிலுள்ள 25 சிறுகதைகளையும் 1986 இல் வெளியான ‘எங்கிருந்தோ வந்தான்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒன்பது சிறுகதைகளையும் சேர்த்து ‘ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1987 ஏப்ரல் திங்களில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்கள்.
3. பாளை-தூய யோவான் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் ஜோ. மோசஸ் செல்லராஜ் அவர்கள் – மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து ஆர்.எஸ்.ஜேக்கப் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மகளிர் நிலைபற்றிய செய்திகள் பெரும்பாலும் காணப்படுகின்ற 35 சிறுகதைகளை மட்டும் எல்லையாக எடுத்து ‘ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகளில் மகளிர் நிலை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1988 ஏப்ரல் திங்களில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்கள்.
4. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் முழுக்கு முனிவர் தூய யோவான் மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆய்வாளர் அ. எர்னஸ்ட் பாலசிங் எம்.ஏ.பி.எட்., அவர்கள் – மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து ஐசக் அருமைராசனின் கீறல்கள், ஆர். எஸ். ஜேக்கப்பின் வாத்தியார் என்னும் இரு நாவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு, கீறல்கள், வாத்தியார் நாவல்கள் – ஒரு சமுதாயவியல் பார்வை’ என்ற தலைப்பில் ஒப்பாய்வு செய்து 1988 ஏப்ரல் திங்களில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்கள். அன்னார் தற்போது, பாளை – பிஷப் சார்ஜென்ற் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர்.
5. பாளை – சாராள் தக்கர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் ஜே. ஜெயரதி பொன்மலர் எம்.ஏ.எம்ஃபில் அவர்கள் ‘ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் ஒரு திறனாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1997 இல் ஆய்வேடு அளிக்கப் பெற்று 1998 ஜுலை திங்களில் பிஎச்.டி பட்டம் பெற்றுள்ளார்கள்
6. திருமதி. கோ. பொன்ரூபி சுமங்கலா அவர்கள் ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டத்திற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகளில் மனிதநேயம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2003 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றுள்ளார்கள். திருவண்ணாமலை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர் வே.நெடுஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வினை முடித்துள்ளார்கள்.
7. திருமதி. தி. விஜயராணி அவர்கள், ‘ஆர்.எஸ்.ஜேக்கப் படைத்த, வாத்தியார் புதினத்தில் சமுதாய நோக்கு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2003-இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்கள்.
8. பாளை – சாராள் டக்கர் கல்லூரி விரிவுரையாளர் இ.அன்னத்தாய் அவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ‘புலவர் இராசயா (ஆர்.எஸ்.ஜே) சிறுகதைகளில் பெண்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து அக்டோபர் 2002ல் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளார்கள். அவர்களின் ஆய்வு மையம் ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி.
9. ஆய்வாளர் ஆ.வின்சென்ட் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வி நிறுவனத்தில் ‘மார்க்சிய நோக்கில் மரணவாயிலில்’ …. என்ற தலைப்பில் ஆர்.எஸ்.ஜேயின் நாவலை ஆய்வு செய்து 2004 இல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்கள். அவர்களின் நெறியாளர் க. இளமதி சானகிராமன், புதுவை பல்கலைக்கழகம்.
10. ஆய்வாளர் செல்வி ஹெலன் சோபியா அவர்கள் பாளை – தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்த்துறை ஆய்வு மையத்தில் ‘ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகளில் சமுதாயம்’ என்ற தலைப்பில் 2003-2004ல் ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார்கள்.
டாக்டர் பட்டம்
11. 12.4.04 அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை இறையியல் & கலைக் கல்லூரி (MTSC) வளாகத்தில் தலைவர், பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் தலைமையில், ஆர்.எஸ்.ஜேயின் அறுபது ஆண்டுகால தமிழ் இலக்கிய இறையியல் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்ட ம் (The Degree of Doctor of Divinity (Honoris Causa) அருளினார்கள்.
நாவலுக்குப் பரிசு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றமும், நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய 2004ஆம் ஆண்டிற்கான நாவல் பரிசுப் போட்டியில் முதல் தர நாவலாக ‘ஆர்.எஸ்.ஜேயின் வாத்தியார் மறுபிறவி மரண வாயிலில்’ என்ற புதினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசினை 12.09.2004 பாரதி விழாவன்று எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தில் விழா வைத்து விருதினை வழங்கினார்கள்.
ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள்-தொகுதி நான்கு என்றிருப்பினும், உண்மையில் இந்நூல் பதினைந்தாவது சிறுகதைத் தொகுதியாகும்
(விபரம் காண்க)
1. மோசம் போன மோதிரம் முதலிய சிறுகதைகள் (ஒன்பது சிறுகதைகள்) 1948
2. என் வகுப்பு – (ஒரு சிறுகதை நூல்) 1953
3. தேவராஜ்யம் – (ஒரு சிறுகதை நூல்) 1953
4. மணமும் குணமும் – (ஒரு சிறுகதைநூல்) 1953
5. குழந்தைப் பண்பு (ஏழு சிறுகதைகள்) 1956
6. மௌன தியாகி – தமிழாக்கம் (ஒன்பது சிறுகதைகள்) 1958
7. நவரத்னக் கதைக் கொத்து (ஒன்பது சிறுகதைகள்) 1958
8. எங்கிருந்தோ வந்தான்? (ஒன்பது சிறுகதைகள்) 1986
9. சாட்சிக்கு ஒரு சாட்டை (ஒன்பது சிறுகதைகள்) 1987
10. ஆர். எஸ். ஜேக்கப் சிறுகதைகள் – முதல் பாகம் (25 சிறுகதைகள்) 1985
11. ஆர். எஸ். ஜேக்கப் சிறுகதைகள் – இரண்டாம் பாகம் (25 சிறுகதைகள்) 1991
12. ஆர். எஸ். ஜேக்கப் சிறுகதைகள் – மூன்றாம் பாகம் (20 சிறுகதைகள்) 2000
13. ஆர். எஸ். ஜேக்கப் சிறுகதைகள் – தொகுதி நான்கு (25 சிறுகதைகள்) 2005
14. பாஞ்சைச் சிறுகதைகள் (10 சிறுகதைகள்)
(1946 முதல் 1950 வரை ‘தினசரி மடல்’ இதழில் வெளியான சரிதைச் சிறுகதைகள்)
நூல் வடிவு பெறாமலே காலம் கடந்துள்ளது. (மீண்டும் உயிர் பெறும், உலர்ந்த எலும்புகள் பேசும்)
15. கிராமீய மார்க்சீயச் சிறுகதைகள் பத்து (கைப்பிரதியிலேயே காவல் துறையிடம் சிக்கி 1950 மார்ச் மாதம் அழிந்து விட்ட நூல்)
குறிப்பு:
1. இவை தவிர எம் ஏராளமான எடுத்துக்காட்டுக் கதை வங்களில் ஆங்காங்கு சிறுகதைகள் பொதிந்துள்ளன.
2 1985 ஆம் ஆண்டில் சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ‘ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள்’ என்ற எம் பெயர் தலைப்பில் முதல் நூலை வெளியிட்டது. அதன் பின்பு அதே முத்திரைத் தலைப்பில் மூன்று தொகுதிகள் வெளிவரலாயிற்று.
3. 1971ல் வெளியான ‘நூறு ஜீவனுள்ள கதைகள்” என்ற நூலில் ஐம்பது விழுக்காடு சிறுகதைகளே.
ஆயிரக்கணக்கான பாராட்டுரைகளில் ஒரு சில துளிகள்
ஐயா
உங்கள் சிறுகதை ‘சர்வர் அப்பாத்துரை’ என்ற சிறுகதையைப் படித்து இன்பம் மட்டும் அடையவில்லை. மனதுக்குத் தெம்பாயும் தைரியமாயுமிருக்கிறது. சர்வர் அப்பாத்துரை சொல்லும் சேதியின் நம்பிக்கையும், கூடவே அதில் தொனிக்கும் விரக்தியும் உங்கள் எழுத்தின் சாதனை. உங்களைப் பாராட்டுகிறேன் என்பதைக் காட்டிலும், நான் தெரிவிக்க முயலும் நன்றியை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
ஈ.எஸ்.டி அவர்கள் நடத்திய (கோவை) முதல் பரிசளிப்பு விழாவில் உங்களைப் பார்த்தேனே தவிர உங்களைச் சந்தித்துப் பேசாதது ஒரு நல்ல வாய்ப்பின் இழப்பு என்று உங்கள் எழுத்தைப் படித்தபின் உணருகிறேன். அதைத் தெரிவிக்கவே இக்கடிதம் எழுதுகிறேன்.
வணக்கம் அம்பத்தூர், சென்னை, லா. ச. ராமாமிர்தம் 2.6.1994 (பல விருதுகள் பெற்ற பிரபலமான எழுத்தாளர்)
***
ஆர். எஸ். ஜேக்கப் சிறுகதைகள்மூன்றாம் பாகம் படித்தேன். கதைகள் யாவும் தங்கள் இயற்கைச் சூழலிலும், பட்டறிவிலுமிருந்து பூத்திருக்கும் வண்ண மலர்கள். இச்சிறு கதைகளினூடே ‘என் அக்கா’ எனும் கதை நெஞ்சை உலுக்குகிறது. தமிழ் இலக்கிய அன்னைக்கு மற்றுமொரு அணிகலன். முன்னாள், தமிழ்துறைத் தலைவர்,
பொ. ஆ. சத்திய சாட்சி 24.1.2001, கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை
***
ஆர். எஸ். ஜேயின் எழுத்துக்கள் சீராக ஓடும் நீரோடை போன்ற மொழி நடை. அமைதியான மேற்பரப்பினுள்ளே குமுறி வெடிக்கும் எண்ண அலைகள், கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளம்.
சமுதாய அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் வேகம், சமய நடைமுறைகளைச் சரிசெய்ய முயலும் தாகம். ஜன-பிப் – 2002, அருள்திரு. செல்லத்துரை கன்மலை இதழ் (குமரி மாவட்டம்)
“…நன்கு அறிமுகமாகியுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் திரு. ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். தமிழ்ப் பத்திரிக்கைகள் பலவற்றில் அவர்களுடைய எழுத்தோவியங்கள் இடம் பெற்று வருகின்றன. அவைகளுள் அவர்தம் சிறுகதைகள் மிகச் சிறப்பானவையாகும்.
முதல்வர், போப் கல்லூரி, சாயர்புரம், 29.09.1971, டி.எஸ்.ஜார்ஜ் முல்லர் (ஆர்.எஸ்.ஜே. நூலின் அணிந்துரையில்)
1926ல் பிறந்து,
பற்பல இலக்கிய சேவைகளும் இறைச் சேவைகளும் செய்து, பல்வேறு
பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்றாலும், குடத்திலிட்ட விளக்காய் இருந்த ஆர் எஸ் ஜே அவர்களைப் பற்றிய அருமையான விவரக் குறிப்புகளின் பெட்டகம் இது. ஆச்சரியம் ஊட்டக்கூடிய விவரக் குறிப்புகளை வாசகர்களுக்கு அளித்து குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்கச் செய்து, எழுத்தாளனுக்கு பெருமை சேர்க்கும் சிறுகதைகள் டாட் காம் க்கு என்றென்றும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜூனியர் தேஜ்