
ஆனந்த் ராகவ்,
பெங்களூரு, இந்தியா
சிறுகதை, நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவை ஆனந்த் ராகவ் இயங்கும் இலக்கியத்தளம். அறிமுகம் ஆனதும் பெரும்பாலான கதைகள் எழுதியதும் ஆனந்த விகடனில். தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, கலைமகள், வடக்கு வாசல், சூரியகதிர், தென்றல் போன்ற பத்திரிகைகளில் எழுதுகிறவர். 60 சிறுகதைகள், தென்கிழக்கு ஆசியாவில் இந்திய மற்றும் இந்துமதத் தொடர்பு குறித்து கல்கியில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியிருக்கிறார். ஐரோப்பா, வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என்று பல நாடுகளில் பணிபுரிந்து தற்போது பணி நிமித்தம் பெங்களூரில் வசிக்கிறார்.
பரிசுகள்:
- இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010 ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது இவரின் என் “சதுரங்கம்” கதைக்காக அளிக்கப்பட்டது.
- இலக்கியச் சிந்தனையின் சிறந்த கதைக்கான மாதாந்திரப் பரிசை மூன்று முறை வென்றுள்ளார்,
- ஆனந்த விகடன் முத்திரைக் கதை பரிசை மூன்று முறை வென்றுள்ளார்
அப்புசாமி சீதாப்பாட்டி டிரஸ்ட் மற்றும் அமுத சுரபி இதழ் இணைந்து நடத்திய நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் ,
ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர் - இதர பத்திரிகைகளின் சிறுகதைப் போட்டி உட்பட சிறுகதைகளுக்காக பதினான்கு முறை பரிசுகள் பெற்றிருக்கிறார்.
- விகடனில் வெளியான கடந்த நான்கு கதைகளும் “நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு” வரிசையில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
சிறுகதைத் தொகுப்பு ஒன்று; தவிர, இந்திய ராமாயணங்களைத் தாய்லாந்து, ஜப்பானிய, கம்போடிய, மலேசிய மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களோடு ஒப்பிடும் ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட தொகுப்பு ஒன்று என்று இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
நான்கு மேடை நாடகங்கள் எழுதியுள்ளார். இவை சென்னையிலும், அமெரிக்காவின் விரிகுடாப் பகுதியில் இயங்கும் ‘க்ரியா கிரியேஷன்ஸ்’ மூலமாக அமெரிக்காவில் மேடையேற்றப்பட்டுள்ளன. ‘சுருதி பேதம்’, ‘தனிமை’ என்ற இவரது இரு நாடகங்கள் அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அண்மையில் ‘ஷ்ரத்தா’ என்கிற அமைப்புக்காக எழுதி இயக்கிய, டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் பங்குபெற்ற, ‘தூஸ்ரா’ (கிரிக்கெட்டின் கதை) என்கிற நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றுகிறார்.
சமகாலத்தைக் கூர்ந்து நோக்கி அதைத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவரும் நேர்த்தியான எழுத்து நடை இவருடையது. இந்தப் பண்புகளைப் பரிசு பெற்றிருக்கும் ‘மடி நெருப்பு’ கதையிலும் பார்க்க முடியும்.