அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார். [1] இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
எழுத்துப் பணி தொடக்கம்
தொடர்ந்து படிக்க முடியாததால் 1940 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். “ஆளுக்குப் பாதி” என்னும் தம் முதல் கதையை எழுதினார்.
சக்தியில் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.
1941 -ல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -நவம்பரில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.
செய்தித்தாள் ஆசிரியர்
வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
குழந்தை எழுத்தாளர் சங்கம்
குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.
அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.
பாராட்டும் விருதும்
1963 ஆம் ஆண்டில் இலக்னோ நடைபெற்ற அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்பட்டன.
குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் “தமிழ்ப் பேரவைச் செம்மல்” என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
1982ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
1970 நவம்பர் 22ஆம் நாள் “குழந்தைக்கவிஞர் இலக்கியப்பணி” வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது.
பூவண்ணன் தலைமையில் இயங்கிய பாலர் பண்பாட்டுக்கழகம் 1980ஆம் ஆண்டில் ‘வள்ளியப்பா வானொலி-தொலைக்காட்சிச் சிறுவர் சங்கம்’ என்னும் பிரிவைத் தொடங்கியது.
‘பிள்ளைக்கவியரசு’ என்னும் பட்டத்தை சென்னை பாரதி இளைஞர் சங்கம் வழங்கியது.
‘மழலைக்கவிச்செம்மல்’ என்னும் பட்டத்தை காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டுவிழாக்குழு வழங்கியது.