கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 578 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘அதனுடன் சேர்த்து என்னுடைய பாவனையை உடைக்க முடியாது. பக்தியின் பாவனையினால், உடைத்த ஒவ்வொரு துணுக்கிலுமே என்னால் அரனைத் தரிசிக்க முடிகிறதே…..’ 

அறநெறி சார்ந்த பக்தன் சிவலிங்க பூஜையில் ஈடு பட்டிருந்தான். அவ்வழியாக வந்த சிந்தனாசீலனுக்கு அவனுடைய செயல் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகத் தோன்றியது. 

‘விக்கிரஹ வழிபாடு பகுத்தறிவுக்குப் புறம்பானது. எனவே, அது மூடத்தனம் சார்ந்தது’ என்றான் சிந்தனா சீலன். 

பகுத்தறிவு என நீ சொல்வது உன் அறிவின் தளத் தைப் பொறுத்ததுதானே? அதற்குள் விக்கிரஹ வழி பாட்டின் மகத்துவம் சிக்குப்படவில்லையென்றால், அஃது உன் அறிவின் எல்லைக் கட்டினையே காட்டுகின்றது. பக்தி மயமான பாவனையுடன் இச்சிலையை நோக்கு. அப்பொழுது என் வழிப்பாட்டின் மகத்துவம் விளங்கும்’ என்றான் பக்தன். 

‘அஞ்ஞான ஆசாரங்களிலும், சடங்குகளிலும் நம்பிக்கை வைத்திருக்கும் அறிவிலியாகிய நீ, என் அறிவு நிலையை எடை போடுதல் அடாது. இச்சிலையிலே வணக்கத்திற்கேற்ற கலைத் தன்மைதானும் கிடையாது. கோரமாகக் காட்சி தருகிறது….’ 

‘முதல்வன் கொண்ட திருமேனிகளிற் சில திருமேனி போக வடிவமும், சில திருமேனி கோரவடிவமும், சில திருமேனி யோக வடிவமும் கொண்டது, முறையே, உயிர் கட்குப் போகம் புரிதற் பொருட்டும், வினையினை வீட்டுதற் பொருட்டும், யோகமுக்தி உதவுதற் பொருட்டுமாம். இத்தத்துவத்தை நீ அறிவாயோ?’ 

‘நெட்டுருப்போட்டு வைத்திருக்கும் எதனையோ  சொல்லி என்னை மருட்டப் பார்க்கின்றாய். இஃது இந்த உருவில் வடித்தெடுக்கப்படுவதற்கு முன்னர் என்னவாக இருந்தது?’ 

‘வெறும் கல்லாக இருந்தது….’ 

‘சிற்பியின் கைவண்ணந்தானே இதனைச் சிலையாக்கியது? சிலையான இது வணக்கத்திற்குரிய தெய்வீகப் பொருளாகி விட்டது. அப்படியானால், நீ மனிதனுடைய கலையாற்றலைத் தானே தெய்வமென்று வணங்குகிறாய்?’ 

‘நீ பேசுவது உருவம் பற்றியது. இது கல்லாக இருந்தது. சிலையாக மாறிய பிறகும் கல்லேதான்! கல்லின் இன்னொரு வகை உருவம் என்று வைத்துக் கொள்ளலாம். தெய்வம் என்று வணங்கும் பாவனையை இதிலே இணைக்கும் பொழுதுதான் சிலையின் தெய்வத்தன்மை உயிர்ப்புப் பெற்றது. இதுவே பக்தியின் மகத்துவம்……..’ 

‘பக்தி என்றால் என்ன?’ 

‘உள்ளங் கலத்தல் என்னும் யுக்தி….’ 

‘யுக்தியா? உன் யுக்தியின் மூலமோ, அன்றேல் பக்தியின் மூலமோ இதிலுள்ள தெய்வத்தைக் காட்டேன்’ எனக்கூறிய சிந்தனாசீலன் சிவலிங்கத்தைக் கீழே போட்டுடைத்தான். 

‘உடைத்தது கல்லைத்தானே? அதனுடன் சேர்த்து என்னுடைய பாவனையை உன்னால் உடைக்க முடியாது. என பக்தியின் பாவனையினால், உடைந்த ஒவ்வொரு துணுக்கிலுமே என்னால் அரனைத் தரிசிக்க முடிகின்றதே….’ என்றான் பக்தன் மேலும் அழுத்தமான நம்பிக்கையுடன். சிந்தனாசீலன் மௌனியானான்!

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *