கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 567 
 

‘மௌனங்கூட அறிவின் திறவுகோலாக அமையலாம்…….’ 

அநாதியும் அந்தமுமற்ற அத்தத்துவத்தின் படுமுடிச் சினை அவிழ்ப்பதில் அறிஞர் குழாம் ஒன்று ஈடுபட்டிருந்தது. தத்தமது அறிவுக்கும் அறிவின்மைக்கும், பக்குவத்திற்கும் பக்குவமின்மைக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு விதமான விளக்கக் கக்கல்! ஒருவரின் விளக்கம் ஏனையோருக்கு அறிவின்மையின் அலங்கோலமாகத் தோன்றியது. விவகாரம் லாட சங்கிலியாயிற்று. 

பழுத்த கிழவர் ஒருவர் மட்டும் மௌனம் ஓம்பினார். 

‘உங்களுடைய விளக்கம் என்ன?’ ஏனைய அறிஞர்கள் அவரைக் கேட்டார்கள். 

‘அறிஞரின் எண்ணிக்கை எத்தனையோ, விளக்கங்களும் அத்தனை! அனைத்தும் தவறானவை என்பது பெரும்பான்மை அபிப்பிராயம். மெய்யை யான் அறிவேன். அதனை விண்டேனல்லேன்…’ மீண்டும் மோனத்தில் ஐக்கியம். 

கிழவர் அறிந்து வைத்திருக்கும் உண்மையை அறியும் அவா ஒவ்வொரு அறிஞனையும் அலைக்கழித்தது. ‘பேரறிஞ! அந்த உண்மையை எனக்கு மட்டும் விண்டு காட்டுங்கள். நானோ பாதுகாப்பான இரும்புப் பெட்டகம்…’ என ஒவ்வொரு அறிஞனும் அவரை வளைய வலம் வந்தான். 

வேளை வரும். மெய் பிரகடனமாகும்’ என்ற ஒரே விடையைக் கிழவர் எல்லோருடனும் பங்கிட்டார். 

சிறிது காலத்தில் கிழவர் நோய்வசமானார். ‘மரணப் படுக்கையில் இருக்கிறார்’ என்ற செய்தி பரவியது. அறிஞர் குழாம் அவரைச் சூழ்ந்து கொண்டது. 

‘இனியும் தகுந்த வேளைக்குக் காத்திருத்தல் அறிவுடமை யாகாது. அரிய உண்மை ஒன்று தங்களுடன் மரித்தால், மனித குலத்திற்கு அது பயன்படாது போய்விடும். எங்களுக் காக அல்ல, வருங்கால மனித குலத்தின் இரட்சிப்பிற்காக அந்த மெய்யை விண்டு காட்டுங்கள்…..’ என அவர்கள் கெஞ்சினார்கள். 

கிழவரின் கட்டித்த மௌனம் கலைந்தது. 

‘அத்தத்துவத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் கொடுத்தீர்கள். உண்மை என்ன வென்றால் அத்தத்துவம் என்ன என்று எவருக்கும் புரியவில்லை. மற்றவர்கள் உங்களைப் பற்றி அறிஞர் என்று பெருமை யாகப் பேச வேண்டுமென்பதற்காக, விளங்காததைப் பற்றி விளங்கியதான பாவனையில் விளக்கந்தர முன் வந்தீர்கள்….’ 

‘பேரறிஞ! இந்தப் பாவிகளை மன்னித்தருளுங்கள்’ எனத் தண்டனிட்டார்கள். 

‘இதோ, மெய்யை விண்டேன். அத்தத்துவத்தின் ஓர் அட்சரந்தானும் எனக்கு அன்றும் விளங்கவில்லை; இன்றும் விளங்கவில்லை. இந்த உண்மையை நான் அன்றே அறிந்திருந்தேன்!’ என்றார் கிழவர் வெகு நிதானமாக. 

‘இதனை அன்றே சொல்லியிருக்கலாமே…’ ஏமாற்றத்துடனும், அது பிரசவித்த ஆத்திரத்துடனும் கத்தினார்கள். 

‘நான் இதனை அன்றே சொல்லியிருந்தால், நீங்கள் என்னை இன்றைவரை பேரறிஞர் எனக் கொண்டாடியிருப்பீர்களா?….மௌனங்கூட அறிவின் திறவுகோலாக அமையலாம். என்ற உண்மையை இப்பொழுது விண்டு காட்டினேனல்லவா?’ எனக் கூறிக் கொண்டே கிழவர் கண்களை நிம்மதியாக மூடினார்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *