மூட்டை – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 2,755 
 
 

அந்தச் சிறிய குடிசை வீட்டில், தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து, பள்ளியில் தந்த வீட்டுப் பாடங்களை எல்லாம் எழுதி முடித்தான் அன்பரசன்.

பள்ளிக்குச் செல்லத் தயாரானான்.

புத்தகப் பையிலிருந்து அனைத்தையும் எடுத்து வெளியில் எடுத்தான்.

தமிழ்ப் புத்தகம், நோட்டு, கட்டுரை ஏடு, கையெழுத்து ஏடு அனைத்தையும் சரிபார்த்துவிட்டுப் பைக்குள் வைத்தான்.

அதே போல ஆங்கிலப் புத்தகத்துக்கான இணைப்புகள்;

கணிதத்திற்காக புத்தகம் நோட்டு தவிர, ஜியோமிதிப் பெட்டி, ஒரு அடி ஸ்கேல்;

அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் முறையே நோட்டுகள் தவிர, செய்முறை ஆல்பம், அட்லஸ்;

எல்லாவற்றையும் கருத்தாகப் பார்த்துப் பார்த்து எடுத்துப் பைக்குள் அதனதன் இடத்தில் வைத்தான் அன்பரசன்.

அன்பரசனின் இடுப்பு உயரம் நின்றது பை.

மூட்டை போல, முக்கித் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டான்.

குறிந்த நேரத்தில் பள்ளிக்குப் புறப்பட்டான்.

மகன் படிப்பில் காட்டும் அக்கரை கண்டு மகிழ்ந்தார் பெற்றவர்.

‘பள்ளிக்கூடத்துக்குப் போகவே அலுப்புப் பட்டு, மட்டம் போட்டுட்டு ஊர் சுத்தாம, படிக்கற காலத்துல இது போல நாமும் புத்தக மூட்டை தூக்கிக், கருத்தாப் படிக்காமப் போயிட்டமே!’

என்றும், கழிவிரக்கத்தில் கலங்கினார்;.

வயிற்றுப்பாட்டுக்கு, மூட்டை தூக்கும் அன்பரசனின் அப்பா.

– 2023 எழுத்தாளர் சந்திப்பில் அருணையில் பூத்த மலர்களில் பிரசுரமான சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *