மறக்க முடியாத சாப்பாடு

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 27 
 
 

சீரங்கத்துக்கும் காளமேகப் புலவருடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவருடைய இளமைப் பருவத்து வாழ்வின் பெரும்பகுதி சீரங்கத்திலும் திருவானைக் காவிலும் கழிந்தது. இடைக் காலத்தில் மற்ற புலவர்கள் பாடிய தனிப்பாடல்களுக்கும் காளமேகப் புலவர் பாடிய பாடல்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது.

காளமேகப் புலவர் ஆசுகவி . அதாவது கவி எழுதுவதற்குரிய இலக்கணக் கட்டுப்பாடுகளை முறையாகப் படிக்காமலே பாடல்களைப் பாடித் தற்செயலாக அந்தக் கட்டுப்பாடுகளும் அமைந்து விடும்படி செய்கிறவர். இத்தகைய அசாதாரணத் திறமை வாய்ந்த கவிகளைத்தான் தமிழில் ‘ஆசுகவி’ என்பது வழக்கம். காளமேகப் புலவர் பாடியவற்றில் மற்றவர்களைத் தூற்றிப் பாடிய வசைப் பாடல்களே அதிகம். வஞ்சப் புகழ்ச்சி யாகவும் பழிப்பாகவுமே அவர் மிகுதியாகப் பாடியுள்ளார். பெரும்பாலும் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயத்தில் பாடியவை.

சீரங்கத்தில் ஆச்சாள் என்று ஓர் ஏழைப் பெண் ஒரு சாப்பாட்டுக் கடை மாதிரி வைத்துக் கொண்டு நாலைந்து பேருக்குச் சமையல் பண்ணிப் போட்டுப் பிழைத்து வந்தாள். ஆச்சாளுக்கு நடுத்தர வயது. அவ்வளவாகப் புத்தி கூர்மை கிடையாது. விவரம் தெரிந்தவளும் இல்லை. கொஞ்சம் அசட்டுத்தனமாக நடந்து கொள்கிற சுபாவமுள்ளவள். அவளிடத்தில் காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந் தவர்கள் வேறு வழி இல்லாததால்தான் அப்படிச் செய்தார்களே ஒழிய, அவள் சாப்பாட்டின் பேரிலுள்ள விருப்பத்தால் சாப்பிடவில்லை . சாப்பிடுகிறவர்களின் வசதி, பசி, ருசியறிந்து அவர்களுக்கேற்ப வகையாகச் சமைத்து நிதானமாகப் பரிமாறி உபசரிக்க ஆச்சாளுக்குத் தெரியாது. ஏதோ ஓடியாடிச் சாப்பாடு போட்டோமென்று பேர் பண்ணி விடுவாள். அவள் சமையலைவிட மோசமாக இருக்கும், இலையில் சமைத்ததைப் பரிமாறுகிற முறை. ஏதோ கடனுக்குச் செய்கிற காரியம் மாதிரிப் பரிமாறுவாள்.

இப்படிப்பட்டவளிடம் குறும்புத்தனமும் முன்கோபமும் நிறைந்த காளமேகப் புலவர் ஒருநாள் சாப்பிட வந்தார். வந்திருப்பவர் காளமேகப் புலவரென்று ஆச்சாளுக்குத் தெரியாது. தெரிந்தாலும் அதற்காகப் புது மரியாதைகள் எதையும் அவள் செய்யத் தயாராயில்லை. காளமேகப் புலவர் அவள் செயல்களையும் அவற்றிலிருந்த அலட்சியமான போக்கையும் அங்குச் சாப்பிடுவதற்காக உட்கார்ந்த விநாடியிலிருந்து கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்.

எல்லோரையும் போல் அவரையும் வரிசையில் உட்காரச் செய்து இலையைப் போட்டுப் பரிமாறினாள் ஆச்சாள். காளமேகப் புலவருடைய முகத்தையோ, கைகளையோ பார்த்து, அளவறிந்து, தேவையறிந்து பரிமாறவில்லை அவள். சோற்றைப் போட்டாள். சோற்றோடு சரிக்குச் சரி கல்லும் கலந்திருந்தது. கீரைக் கூட்டுப் பரிமாறும் போது காளமேகப் புலவர் போதும் போதுமென்று கையை நீட்டி மறித்தும் கவனிக்காமல் காவேரியாற்றின் வெள்ளத்தையே இலையிற் கொண்டு வந்து கவிழ்ப்பது போல் கொட்டி விட்டாள் ஆச்சாள். இலை தாங்க முடியாமல் நாற்புறமும் பெருகி ஓட்டமெடுத்தது கீரைக் கூட்டு காளமேகப் புலவருக்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்தது. பொறுத்துக் கொண்டார். அடுத்தபடியாக ஆச்சாள் புளிக் குழம்பை எடுத்துக் கொண்டுவந்து பரிமாறினாள். புளிக்குழம்பு நன்றாகக் காயவில்லை.

காளமேகப் புலவர் கையை உதறிவிட்டுத் துள்ளியெழுந்தார். எழுந்து நின்று ஆச்சாளை எரித்து விடுவது போல் பார்த்தார். சுற்றிலும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர் களையும் பார்த்தார். அவர் ஒரு பாட்டைப் பாடினார்.

” நீச்சாற் பெருத்திடு காவேரி யாற்றை நிலைநிறுத்திச்
சாய்ச்சாள் இலைக்கறிச் சாற்றையெலாம் அது தானுமன்றிக்
காய்ச்சாப் புளியும்நற் கல்லுடன் சோறும் கலந்து வைத்த
ஆய்ச்சாளை யான்மற வேன்மறந் தால்மனம் ஆற்றிடுமோ!”
இலைக்கறிச்சாறு = கீரைக்கூட்டு
ஆச்சாள் இலையில் கொட்டிய கீரைக் கூட்டுக்குக் காவேரியாற்றை உவமை கூறியது பெரிய குறும்பு நற்சோறுடன் கல்லும் சமைத்து என்று சொல்லாமல் ‘நற்கல்லுடன் சோறும்’ என்று கல்லுக்குப் பெருமை கொடுத்தது சோற்றை விடக் கல் நன்றாயிருந்தது என்று குத்திக் காட்டுவதற்காகவே! ஆச்சாளுடைய அவலட்சணச் சாப்பாட்டை எத்தனையோ பேர் எவ்வளவு காலமாகப் பொறுமையாகச் சாப்பிட்டுக் காலம் கடத்தி வந்தார்கள். கேலி செய்து குத்திக் காட்டி அதை ஒரு பாட்டாகப் பாடிவிட்டுப் போகக் காளமேகப் புலவர் ஒருவரால் மட்டும்தானே முடிந்தது!

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *