கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 377 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘வெளியிலிருக்கும் பரந்த ஆகாயமே குடத்துள்ளும் இருக்கிறது. குடம் உடைந்ததும் அது பரந்த ஆகாயத்துடன் கலந்துவிடுகிறது….’ 

அச்சீடனை மந்த புத்திக்காரனாகவே குருதேவர் கணித்திருந்தார். எனினும், யாக்கை நிலையாமை பற்றி விளக்கவேண்டுமெனத் திருவுளங் கொண்டார். பாட உபகரணங்களாகத் தன் முன்னால் களிமண், குடம், உடைந்த ஓடுகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பாடத்தை ஆரம்பித்தார். 

‘இது களி மண். இது மண்ணின் ஒரு நிலை. இந்த மண்ணிலிருந்துதான் குடம் முதலியவான பலவற்றைப் பற்பல ரூபபேதங்களிலே உருவாக்குகின்றனர். குடம் முத லியனவும் மண்ணே. மண்ணின் பிறிதொரு நிலை. குடம் முதலியன உடைந்ததும் பெறப்படுவன ஓடுகள். அவை மண்ணின் இன்னொரு நிலை. மேலும், உன்னிப்பாகக் கேள். வெளியிலிருக்கும் பரந்த ஆகாசமே குடத்துள்ளும் இருக்கிறது. அது தனித்ததல்ல. குடம் உடைந்ததும் அது பரந்த ஆகாயத்துடன் கலந்துவிடும். எனவே, இந்தக் குடத்திற்கு ஒப்பான யாக்கையே எல்லாவற்றிற்கும் மேலானது எனக் கொண்டாடுவது பேதமை. புரிகிறதா?’ எனக் கூறிக் குருதேவர் நிறுத்தினார். 

குருதேவர் போதிப்பவை ஒரு சமயம் புரிவன போலவும், மறுசமயம் புரியாதன போலவும் தோன்றியது. 

‘ஓர் ஐயம்….’ என்றான் சீடன். 

‘என்ன?’ 

‘குயவன் ஒருவனை அழைத்து இக்களிமண்ணிலிருந்து, இங்கிருக்கும் இதே போன்ற குடம் ஒன்றினை வனைந்தெடுக்கலாமல்லவா?’ 

‘ஆம்; அது சாலும்!’ 

‘அதே குயவனிடம் உடைந்து கிடக்கும் இந்த ஓடுகளைக் கொடுத்து இதே போன்ற குடம் ஒன்றினை வனைந்தெடுக்க முடியுமா?’

‘அது சாலாது!’ 

‘ஏன் சாலாது? இதுவும் மண்; அதுவும் மண். குடம் உடைந்த பிறகு கிடைக்கும் ஓடான மண்ணிலிருந்து புதிய குடம் ஒன்றினை வனைதல் சாலாது என்றால், குடம் என்ற இந்த உருவமே மகத்தானது எனக் கொண்டாடுவதில் என்ன தப்பிதம்?’ 

குருதேவர் சிந்தனையுடன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். 

‘இன்னொரு வழியிலும் கேட்கலாம். களிமண் குய்வனுக்குப் பயன்படலாம்; எனக்குப் பயன்படமாட்டாது. உடைந்த ஓடுகளாற் குயவனுக்குப் பயனில்லை; எனக்கும் பயனில்லை. குடம் எனக்கும் பயன்படும்; குயவனுக்கும் பயன்படும். யாக்கை நிலையற்றது என்ற நினைப்பில், நிகழ் கால உருவமான குடத்தை உபயோகிக்காமல், இஃது உடைந்த பிறகு ஏற்படலாம் என்ற நிச்சயமற்ற வாழ்க்கை யைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்பது எவ்வாறு அறிவு சார்ந்ததாகும்?’ என்று சீடன் கேட்டான். 

‘உன் மனம் இகலோக இச்சைகளை நாடி நிற்கின்றன. நான் போதிப்பவற்றை புரிந்துகொள்ளும் பக்குவ நிலை உனக்கு ஏற்படவில்லை’ எனக் குருதேவர் வருத்தத்துடன் கூறினார். 

‘குருதேவரே! உண்மை இதுதான். நீங்கள் கூறுபவை எனக்கு எப்படி விளங்கவில்லையோ, அவ்வாறே நான் கூறுபவையும் உங்களுக்கு விளங்கவில்லை’ எனச் சீடன் தன் தளத்தில் நின்று வழக்குரைத்தான்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *