அவரைப் போய் ஏண்டா பார்த்தோம்னு ஆயிடுச்சு?! தன்னைத் தானே நொந்து கொண்டான் தனகோடி. ‘பூர்வீக வீட்டை மாத்துங்கறார்… ‘அதே காம்பவுண்டுக்குள் இருக்கும் இன்னொரு போர்ஷனுக்கு போகட்டுமா? என்றால், ‘கூடாது! உனக்கு சொந்த வீடு சுகப்படாடாதுங்கறார். வாடகை வீடுதான் உசித்தமாம். அந்த உசிதமணி சொல்றது உத்தமமாப்படலை!
‘இப்போ கங்காரு குட்டியிருக்கே அது அம்மா வயிற்றில் அதாவது, சொந்த வீட்டில் இருக்கிறது., பாதுகாப்பாக தலைநிமிர்ந்து ராஜாவாக குட்டிக் கங்காரு அம்மா வயிற்றுப் பைக்குள் பத்திரமாய்தானே இருக்கு?! அதே சமயம், பழுத்துக் கனிந்த பலவகை மரங்களில் இடம் விட்டு இடம் மாறீட்டே இருக்கு வெளவால்… ஆனா, என்ன பிரயோஜனம்?! தலைகீழாத் தொங்கறதுதான் மிச்சம்!. எதுக்கு பூர்வீக வீட்டை விட்டுட்டு வாடகைவீட்டுக்கு வவ்வால்மாதிரிக் குடிபெயர்ந்து தலைகீழாத் தொங்கணும்?! கேட்கத் தோன்றினாலும் தைரியம் வரலை. சில நம்பிக்கைகள் நம்மை அந்த அளவுக்கு நாத்திகனாக்கியிருக்கு!
குரங்கு தன் தாயின் முதுகைப் பற்றிட்டுத் திரியறா மாதிரி நாம், சில நம்பிக்கைகளைப் பற்றிட்டுத் திரியது உசத்தியா? பூனை தன் குஞ்சை வாஞ்சையோடு கவ்வீட்டுத் திரியற கம்பீரம் உசத்தியா?
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தன இல்லையோ?
சொந்த வீட்டில் சுதந்திரமனுஷனாய் இருப்பதே வாடகை வீட்டில் கை கட்டி வாழ்வதைவிட வசதியானது. என் வீட்டை எவனோ ஒருத்தனுக்கு உல்லாசமா இருக்க தாரை வார்த்துட்டு, நான் ஏன் வாடகை தாரரா இன்னொருத்தரிடம் அடிமையாய் இருப்பதாம்?
புலிக்கு வாலாய் இருப்பதைவிட எலிக்குத் தலையாய் இருப்பது எத்தனையோ மேல் இல்லையா?!