தேவர்கள் கண்ணிமையாதது

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 36 
 
 

  வேளூர் வேல் முருகன் கோவில், பிரபலமடைந்திருந்த முருகன் திருத்தலங்களுள் ஒன்றாக விளங்கியது அந்தக் காலத்தில். அங்குமிங்கும் சுற்றியலைந்து களைத்து வந்த காளமேகம், அதன் கோபுர வாசலிற் சற்று இளைப்பாரக் கருதி உட்கார்ந்தார். அவருக்கு இருந்த தளர்ச்சியில் கோவிலுக்குள்ளே போக வேண்டுமென்றுகூடத் தோன்றவில்லை. பால் காவடியும், அன்னக் காவடியும் தூக்கியவாறே நெருக்கியடித்துக் கொண்டே கோவிலுக்குள் நுழையும் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார். அன்று கார்த்திகை நாளாகையினால் கோவிலுக்கு விசேஷப் பிரார்த்தனைக்காரர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர்.

  கோயிலில் சங்கொலியும் மணிமுரசு, மேள, தாள முழக்கமும் பசியினால் அடைத்துப் போயிருந்த அவர் காதுகளையே செவிடாக்கிவிடும் போலக் கேட்டது. தூணில் சாய்ந்து உட்கார்ந்த வண்ணம் பசி மயக்கத்திலிருந்த அவரை, ‘ஐயா, ஒரு செய்தி! தயவு செய்து எனக்கு அதைக் கூறுவீர்களா?’ என்ற இளங்குரல் நிமிர்ந்து பார்க்கச் செய்தது. புலவர் நிமிர்ந்து பார்த்தார். எதிரே பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பவ்வியமாக நின்று கொண்டிருந்தான். வாரி முடிந்த குடுமியும், கைக் காப்புமாக விளங்கிய அந்தப் பையனின் அசாதாரணமான தேஜஸும் வனப்பும் காளமேகத்தை வியப்படைய வைத்தது. பையன் கையிலிருந்த பழம், பஞ்சாமிர்தம், தேங்காய் மூடிகள் இவைகளடங்கிய தட்டு, அவன் கோவிலுக்குள்ளிருந்து வருகிறான் என்பதைப் புலவருக்குக் கூறின. அவற்றைக் காணவும் அவர் உள் நாக்கில் நீர் சுரந்தது. பசி முன்னிலும் பெருகிவிட்டது போலத் தோன்றியது. இருந்தாலும் தம்மை அடக்கிக் கொண்டு பையனை முன்னே உட்காருமாறு சைகை செய்தபின், ‘என்ன தம்பீ? என்ன கேட்கவேண்டும்’ என்று வினாவினார். பையன் தட்டைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். புலவர் கண்கள் மீண்டும் தட்டை ஊடுருவி விட்டுத் திரும்பின.

  “ஏன் ஐயா? இந்தத் தேவர்கள் எல்லாம் கண்ணிமைக்க மாட்டார்களாமே? அது ஏன் என்று எனக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?” இப்படிக் கேட்டுக் கொண்டே வந்த பையன் திடீரென்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்து அதில் என்ன தெரிந்து கொண்டானோ? தெரியவில்லை!

  “ஆமாம். நீங்கள் சாப்பிட்டு வெகுநாள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே? பசிச் சோர்வு உங்கள் முகத்தில் நன்கு தெரிகிறதே! முதலில் இவற்றைச் சாப்பிடுங்கள்!” என்று தட்டை அவருக்கு முன் நகர்த்தினான் – அப்போது அந்த இளம் முகத்தின் வரி வரியான திருநீற்றுக் கோடுகளுக்கு நடுவே ஒளிர்ந்த அனுதாபம் புலவருக்கு நன்றாகத் தெரிந்தது. அதில் தெய்வீக வனப்பு இருந்ததை அவர் கண்டார்.

  தட்டுத் தீர்ந்தது. அவருடைய வயிற்றுத் தட்டும் தீர்ந்தது. தட்டை நகர்த்திவிட்டுப் புலவர் வாய் நிறைய ஏப்பத்தோடு நிமிர்ந்தபோது தேக்கிலைத் தொன்னை நிறையத் தண்ணீருடன் நின்று கொண்டிருந்தான் பையன். தொன்னையை நன்றியறி வோடுகையில் வாங்கிக் கொண்ட அவர், அவன் குறு இதழ்களில் ஓடி மறைந்த தெய்வீகச் சிரிப்பொன்றைக் கண்டார். வயிறு குளிர்ந்த கவிவாணர் பாட்டாகவே பையனுக்கு விடையைச் சொல்லிவிட்டார். அது பாதி குறும்பு கலந்த விடையாக இருந்தது.

  “மருகிருக்கும் வேளூரின் வயித்தி மகன்
  குறமகளை மணந்தான் என்றே
  உருகி அரன் நஞ்சு உண்டான் உமையவளும்
  தவம்புரிந்தான் உயர்மால்மேனி
  கருகிமிக மண் தின்றான் கமலன் முகம்
  நான் கானான் கடவுளோர்கள்
  இருவிழியும் இமையாமல் இரவுபகல்
  உறங்காமல் இருக்கின்றாரே!”

  மருகு = மருக்கொழுந்துச் செடிகள் மிக வளர்ந்த, வயித்திமகன் = முருகன், குறமகள் – வள்ளி, உயர்மால் = கண்ண ன், அரன் – சிவபெருமான், கருகி = மனம் வாடி, கடவுளர் = தேவர்கள்.

  முருகக் கடவுள் மேல் வஞ்சப் புகழ்ச்சியாக இப்படி அவர் பாடிய பாடலில் அந்தப் பையன் விடையைக் கண்டானோ, என்னவோ? அதே பழைய புன்னகையுடன் கோவிலை நோக்கி அவன் நடந்தபோது தொலைவில் ‘முருகா’ என்று அலறிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு பக்தர்.

  – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

  Print Friendly, PDF & Email

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *