சொல்லிலே சாமர்த்தியம் என்பது சாதாரண செயல் அல்ல. சாதுரியமும் நுணுக்கமும் சந்தர்ப்பத்திற்கேற்ற சொற் பிரயோகமும் வேண்டும். வெளிப்படைக்குச் சிறிதும் இடமில்லாமலோ, சிறிது இடங்கொடுத்தோ சாமர்த்தியத்தை வார்த்தையிலே காட்ட முடியும். ஆனால் முதன்மை என்னவோ நுணுக்கமான மறைபொருளுக்குத்தான் . சாமர்த்திய வார்த்தை முற்றிலும் வெளிப்படையாக இருந்துவிடக்கூடாது. இருக்கவும் முடியாது. சாமர்த்திய வசனங்களில் சாமர்த்தியந்தான் முடிமணிபோல நின்று தன் பொருளைத் தருதல் வேண்டும்.
சாமர்த்தியத்தை நிலைநாட்டிக்காட்டுவதற்கு என்றே பாடப் பெற்ற தனிப்பாடல்களும் பல உள்ளன. அவை வினா உத்தரம், சீட்டுக்கவி, சிலேடை, விடுகதை முதலிய வகைகளாக விரியும். புலவர்கள் சொற்களைப் பொருள் நுணுக்கத்தோடு பாட்டில் தொடுத்திருக்கும் சாதுரியத்தை இவை தெய்வீகமான முறையில் கவிதை உணர்ச்சியை உண்டாக்கும் ஆற்றல் இவைகளுக்கு இல்லையே என்று பலர் குறைபட்டுக் கொள்வர். ஆயினும் மொழியிலுள்ள வார்த்தைகளின் பல்வேறு பொருள்களையும் நுண்மையான அமைப்பையும் அறிந்து கொள்ளத் துணை செய்வதில் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. அப்படிப் பயன்படும் முறையில் இவைகளுக்கும் நம் கவனத்தில் இடமளித்து அனுபவிக்க வேண்டிய அவசியம் – ஏற்படுகின்றது
‘வினா உத்தரம்’ என்பதற்குக் ‘கேள்வி பதில்’ என்று பொருள். இத்துறையில் பாடப்படும் பாடல்கள் கேள்வியையும் அதற்கு விடையையும் உட்கொண்டவைகளாக இருக்கும். கேள்விகளுக்கு வார்த்தைகளை விடையாக வகுத்திருக்கும் விதம் அழகு மிகுந்து விளங்கும் மாதிரிக்குத் திருவேங்கடநாத முதலியார் என்பவர் மேல் இராமச்சந்திர கவிராயர் பாடிய பாட்டு ஒன்றை இங்கே சந்தர்ப்பத்தோடு காண்போம்.
திருவேங்கடநாத முதலியார் பெருஞ்செல்வர். தமிழுக்கு இளகும் மலர் உள்ளம் கொண்டவர். தமிழ் படித்தவருக்கு உதவத் தயங்காத கற்பகக் கைகளைப் பெற்றவர். எனவே, தமிழ்ப் புலவர்கள் அவரை நாடித் தேடிச் சென்றது வியப்புக்கு உரிய செய்தி இல்லை. வருபவர்களை அன்போடு அளவளாவிக் குறைகளையும் வேண்டியவற்றையும் விசாரித்து உதுவுவார் அந்த வள்ளல்.
அவரை நாடி இராமச்சந்திர கவிராயரும் ஒருமுறை சென்றிருந்தார். வள்ளல்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதைப் போலப் புலவர்களுக்குத் தம் சொந்த சாமர்த்தியத்தைக் காட்டவேண்டுமென்ற ஆசை இருக்கத்தானே இருக்கும்? துன்பத்தை மற்றவர்களிடம் கூறிக் கேட்கும் போது கூட, அதைத் தம் திறமையைக் காட்டும் வார்த்தைகளால் அவர் கேட்கவே விரும்புகின்றார்கள்.
தம்மை அன்போடு வரவேற்று உபசரித்த திருவேங்கடநாதப் பிரபுவிடம் இராமச்சந்திர கவிராயரும் இதே சாமர்த்திய வார்த்தையைத்தான் கூறுவதற்கு விரும்பினார். அதையும் அந்த வள்ளலின் பெயரிலேயே அமைத்துக் கூறுவதற்கு விரும்பினார். நன்றாக யோசித்து சாமர்த்தியப் பேச்சிற்கு வேண்டியவற்றைத் தமக்குள் சிந்தனை செய்து வைத்துக்கொண்டார். வழக்கப்படி செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் செய்து முடித்தபின், புலவர் வந்த குறிப்பை அறிவதற்கு முற்பட்டார் திருவேங்கடநாதர்.
‘எது இல்லாத குறையை நீக்கிக் கொள்ளும் பொருட்டுப் புலவர் தம்மிடத்திலே வந்திருக்க வேண்டும்? அவருடைய இதயம் இப்போது எந்த நிலையில், எவ்வெண்ணத்தோடு இருக்கக்கூடும்? பாவம்! வேறு வருவாய் வசதிகள் குறைந்த இந்த ஏழைத் தமிழ்ப் புலவர் இப்போது எப்படிக் காலத்தைக் கடத்திக்கொண்டு வருகிறாரோ? பார்த்தால் இரசமற்ற வாழ்க்கையில் துன்புறுபவர் போலத் தோன்றுகின்றதே! இவருக்கு எதில், எதனால் சுவையற்றுப் போயிருக்க வேண்டும்? இவர் இப்போது நம்மிடம் என்ன சொல்லக் கருதியிருக்கிறார்?’ இம்மாதிரி எண்ணங்கள் தூண்டிட குறிப்பாகப் புலவர் மனம் புண்பட்டு விடாதபடி, நளினமான வார்த்தைகளால் அவரை விசாரித்தார் திருவேங்கட நாதர். திரும்பத் திரும்ப விசாரித்ததற்குப் புலவர் கூறிய பதில் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் அமைந்திருந்தது. மேலே கண்ட வினாக்களைச் சூசகமாக முதலியார். ஒவ்வொரு தடவையும் கேட்டு முடிக்கவும் புலவர் வேறொன்றும் பதில் கூறாமல் ‘திருவேங்கடநாதா’ என்று மட்டும் துயரம் நிறைந்த குரலில் சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார். மீண்டும் மீண்டும் முதலியார் கேட்டபோதும் புலவர், திருவேங்கடநாதர்’ என்ற அந்த ஒரே வார்த்தையைத் தவிர வேறெதுவுமே சொல்லவில்லை. ‘புலவர் தம்மிடம் விளையாடுகின்றாரா? அல்லது அவருக்கு ஏதாவது சித்தப் பிரமையா?’ என்று முதலியார் சந்தேகப்பட்டார்.
புலவருடைய குறை, இதயநிலை, வாழ்க்கை எவ்வாறு நடக்கிறது, சுவையற்றது என்ன சொல்ல விரும்புவது என்ன, இந்த ஐந்து வினாக்களுக்கு அவரிடம் குறிப்பாக விடை எதிர்பார்த்த முதலியார் வெகு நேரமாகியும் ‘திருவேங்கட நாதா’ என்ற தம் பெயரை அழைக்கும் ஒரே வார்த்தையைத் தவிர வேறு எதையும் பெற முடியவில்லை. அவர் சோர்வும் ஏமாற்றமும் கொண்டார். முடிவில் அவருக்கிருந்த பொறுமை முழுதும் அவரிடமிருந்து நழுவியது. புலவருக்கு ஏதோ சித்தப்பிரமை என்று அவர் முடிவு கட்டிவிட்டார். இப்போது புலவர் மேல் கொஞ்சம் வெறுப்புக்கூட அவருக்கு ஏற்பட்டு விட்டது. அயர்ந்து போய் உட்காருவதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் அவர் அயர்ந்து போய் உட்கார்ந்த பின்னும் புலவர் அவரைச் சும்மா விடவில்லை. திரும்பவும் தாமாகவே அதே பழைய திருவேங்கடநாதா’ என்ற ஒரே வார்த்தைப் பல்லவியைப் பாட ஆரம்பித்துவிட்டார். முதலியார் கேள்வி கேட்பதை நிறுத்திய பின்னும் முன் கூறியதைவிடப் பலத்த குரலில் திருவேங்கட நாதா’ என்று புலவர் விடாமல் அரற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு அவருக்கு ஒரேயடியாகக் கோபம் வந்துவிட்டது.
சினத்தில் திரும்பவும் அதே கேள்விகளைச் சீறி விழுந்து கொண்டே புலவருக்கு முன் வீசினார். இப்போது முதலியார் வாயிலிருந்து வந்த கேள்வியின் வார்த்தைகள் ஆத்திரமும் படபடப்பும் கலந்து விளங்கின. எவ்வளவோ சாந்த குணம் உடையவராகிய திருவேங்கடநாத முதலியாரே கோபம் கொள்ளவேண்டும் என்றால் இராமச்சந்திர கவிராயர் தம் ‘திருவேங்கட நாதா’ பல்லவியால் அவரை எவ்வளவு தூரம் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் கவிராயர் இப்போது புன்னகையுடனேயே ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தையைக் கூறினார். அவர் அவ்வாறு சிரிப்பதைக் கண்டு முதலியாருக்கு மேலும் பெருகியது ஆத்திரம். அதை வார்த்தைகளிற் கொட்டினார் முதலியார். அதன் பிறகு புலவருக்கும் முதலியாருக்கும் நிகழ்ந்த உரையாடல் கீழ்வருமாறு:
திருவேங்கட முதலியார்: உமக்கு இல்லாதது என்ன ஐயா? சொல்லித் தொலையும்! ஏன் விடாமல் ‘திருவேங்கட நாதா’ என்று பிதற்றி என் உயிரை வாங்குகிறீர்? இல்லாததைச் சொல்லுமே ஐயா!
புலவர்: (ஒரே வார்த்தையில்) திரு (= செல்வம்)
திருவேங்கட முதலியார் : அதனால் என்ன வந்தது உம் மனத்திற்கு?
புலவர் : வேம் (வேகும் = மனங்கொதித்து வருந்தும்)
திருவேங்கட முதலியார் : எப்படி ஐயா உண்டு காலந்தள்ளுகிறீர்?
புலவர் : கடம் (கடன் வாங்கி என்று பொருள்)
திருவேங்கட முதலியார் : எதனால், எங்கு உம்முடைய வாழ்க்கையில் ரஸமற்ற (சுவையற்ற நிலை ஏற்பட்டது?
புலவர் : நா ( நாவுக்கு ருசியாக உணவு உண்ண வசதி இல்லை என்று பொருள்)
திருவேங்கட முதலியார் : என்ன கேட்க இங்கு வந்தீர்? அதைச் சொல்லும்?.. உம்ம்ம் நீர் சொல்ல வந்தது என்ன?
புலவர் : தா (கொடு என்று பரிசில் கேட்க வந்தேன்) அதைத் தான் இவ்வளவு நேரம் உங்களிடம் திரும்பத் திரும்பத் திருவேம் – கடம் + நா +தா (திருவேங்கடநாதா) என்று கூறினேன்.
புலவர் சிரித்துக் கொண்டே கூறி முடித்தார்.
“இரவலனே! உனக்கு இல்லாத என்ன? இதயம் என்ன?
பரவு உணவேது? சுவையற்ற தென்ன? சொற்பான்மை என்ன?
தர உரை செய்திட என்றான் அதற்கு ஒன்றும் சாற்றிலன்யான்
வர திருவேங்கட நாதா என்றேன் பொன்வழங்கினானே”
என்ற பாட்டு, கவிராயரிடமிருந்து பிறந்தது. சமர்த்திய வார்த்தையைப் புரிந்து கொண்டபின், புலவர் திறத்தை வியந்த வள்ளல் முதலியார் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு புலவருக்கு அவர் விருப்பப்படி வேண்டிய பொன்னை வாரி வழங்கினார்.
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.