சத்திரத்துச் சாப்பாடு

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 857 
 
 

பகல் பன்னிரண்டு நாழிகை ஆகியிருக்கும். உச்சி வெயில் படை பதைக்கும் படி காய்ந்து கொண்டிருந்தது. ஓ வென்ற பேராரவாரத்துடன் முட்டி மோதும் கடல் அலைகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. அதைவிடப் பயங்கரமாக இருந்தது. காளமேகத்தின் வயிற்றுப் பசி. காதை அடைத்தது. கண்கள் பஞ்சடைந்து போய் ஒளி குன்றியிருந்தன. நாகப்பட்டினத்துக் கடற்கரை ஓரமாக நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தார் காளமேகப் புலவர். எதிரே கட்டு மரத்தை இழுத்துக்கொண்டிருந்த செம்படவர்கள் சிலர் எதிர்ப்பட்டனர்.

பசி, முகம் அறிந்து இடமறிந்தா விசாரிக்க விடுகிறது? அந்தச் செம்படவர்களிடம் “பக்கத்தில் ஏதாவது சாத்திரம் கித்திரம் இருக்கிறதா?” என்று விசாரித்தார் காளமேகப் புலவர். “காத்தான் சத்திரத்திற்குச் செல்லுங்கள் ஐயா, ஒரு வேளை உணவு கிடைக்கலாம்” என்று அவர்களில் ஒரு செம்படவன் மறுமொழி கூறினான். போகும் வழியை விவரமாக அறிந்து கொண்டு செல்லத் தொடங்கினார் புலவர். விரைவில் நடு நடுவே வழி கேட்டறிந்து கொண்டு காத்தான் சத்திரத்தை அடைந்தும் விட்டார்.

சாப்பாடு தயாராவதற்குச் சிறிது நேரமாகுமென்றும் அதுவரை காத்திருக்குமாறும் சத்திரத்தில் இருந்தவர் கூறினார். நடந்து வந்த களைப்பும் பசியும் ஒன்று சேர்ந்து கொண்டன. ஒரே ஓய்வாக வந்தது. திண்ணையில் காலை நீட்டிக்கொண்டு முடங்கியபடியே உறங்கி விட்டார் காளமேகம். எவ்வளவு நேரம் உறங்கினாரோ? அவருக்கு நினைவேயில்லை. தம்மை மறந்து தூங்கினார். சாப்பாட்டைப் பற்றிய நினைவுகூடத் தூக்கத்தில் ஐக்கியமாகிவிட்டது.

கண் விழித்தபோது புலவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. சுற்றி இருள் படர ஆரம்பித்திருந்தது. அந்திப் பொழுது வரை தூங்கியிருந்தார். அதே கடலலைகளின் ஓசை முன்னிலும் பன்மடங்கு தூரத்திலிருந்து பேரொலி செய்து கொண்டிருந்தது. ‘சத்திரத்தில் சாப்பாடு தீர்ந்து போய்விட்டதோ?’ என்ற பயத்துடன் சுருட்டி வாரிக்கொண்டு உள்ளே நுழைந்தார் காளமேகம். ஆனால் நுழைந்த வேகத்தில் திரும்பி வர வேண்டியதாகப் போயிற்று. இன்னும் உள்ளே அடுப்புகூட பற்றவைக்கவில்லை என்று தெரிந்தது. ஏமாற்றத்தோடு திண்ணைக்கு வந்தார். அப்போதுதான் கூடை நிறையக் கொழி அரிசியுடன் உள்ளே நுழைந்தான் சத்திரத்து வேலைக்காரன்.

காளமேகத்திற்குக் கொட்டாவி மேல் கொட்டாவியாக வந்தது. உள்ளிருந்து கொழியரிசி குத்தும் உலக்கை ஒலி கேட்டது. தூக்கம் மீண்டும் கண்ணைச் சொருகியது. சத்திரத்து வாசற்படியில் உட்கார்ந்தவாறே தூங்கிவிட்டார். இரண்டாம் முறையாக அவர் கண் விழித்தபோது ஊர் அரவம் அடங்கிப் போயிருந்தது. ஏறக்குறைய நள்ளிரவு என்று சொல்லும் அளவுக்கு இரவு வளர்ந்திருந்தது. உள்ளே போய்ப் பார்த்தார். அரிசியை அள்ளி உலையிலிட்டுக் கொண்டிருந்தான் சமையற்காரன். மறுபடியும் ஏமாற்றத்துடன் வாசலுக்குத் திரும்பி வந்தார்.

“ஏய்! யாரது வாசற்படியிலே கிடந்து உறங்குவது? எழுந்திருந்து வழியை விடு ஐயா!’ அதட்டலைக் கேட்டுக் கண் விழித்தார் காளமேகப் புலவர். இருள் மெல்ல விலகத் தொடங்கியிருந்தது. கிழக்கே வெள்ளி முளைக்கும் நேரம். பொழுது விடிய இன்னும் சில நாழிகைகளே இருந்தன. உள்ளே யிருந்து அழைப்பு என்ற பேரில் “சாப்பிடுகிறவர்கள் உடனே வரலாம். இலையில் சோறு இட்டாய் விட்டது” என்ற குரல் வந்தது. காளமேகமும் உள்ளே சென்றார். முதல் நாள் பன்னிரண்டு நாழிகைக்குப் பசியோடு வந்தவர், மறுநாள் விடிவெள்ளி எழுகின்ற போதிலே இரண்டு வாய் சோற்றை அள்ளி உண்டார். உடம்பிலே கொஞ்சம் தெம்பு பிறந்தது. தெம்பில் ஒரு பாட்டு உருவாயிற்று. எச்சில் கையும் தானுமாக இலைக்கு முன்னால் அமர்ந்து பாட ஆரம்பித்துவிட்டார் காளமேகப் புலவர் குறும்புச் சிரிப்பு அவர் முகத்தில் நெளிந்தது.

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்”

சத்திரத்துக்காரர் முகத்தில் விளக்கெண்ணெய் வழிந்தது.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *