‘விரும்பியதைச்செய்ய முடியவில்லை. விரும்பியவரோடு வாழ முடியவில்லை. விரும்பாத நிகழ்வுகளே வாழ்வில் அதிகம் நடக்கின்றன’ என கவலை சூழ்ந்த மனதோடு எதிர்காலம் பற்றி நினைத்தவளாய் நடை முறை வாழ்வைப்பற்றிய புரிதலில் குழப்பமடைந்து அதற்கு தீர்வு தேட முயன்றாள் மேனகா.
‘படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, வீடு, கார், சொத்து பின் செத்துப்போவது இவ்வளவு தானா வாழ்க்கை…? இதற்காகத்தான் பூமியில் பிறந்தோமா….? வேறு யாரோ ஒருவர் தங்களது விருப்பப்படி வாழ்ந்து விட்டு, அவர் உருவாக்கிய ஜாதி, மத கோட்பாடுகளைப்பின்பற்றி, அவர் போன வழியில் நாமும் போக வேண்டுமென சொல்வது சரியா? ஆராயாமல் நமக்கு ஒத்துப்போகுமா? பிடிக்குமா? எனக்கூடத்தெரிந்து கொள்ளாமல் செம்மறி ஆடுகள் தலை கவிழ்ந்தபடி ஒன்றைப்பின்பற்றி மற்றவை செல்வதைப்போல் சென்று வாழும் நிலை சரிதானா?’ என தனக்கு மட்டுமில்லாமல் தற்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காகவும், வருங்கால சந்ததிகளுக்காகவும் யோசித்தாள்.
மனைவி மேனகா மற்ற பெண்களை விட வித்தியாசமாக யோசிப்பதும், நடை முறை வாழ்க்கை முறைகளை ஏற்காமலும், குடும்பத்தினருடனும், உறவுகளுடனும் நெருங்கி சகஜமாகப்பழகாமலும், ‘என் வழி தனி வழி’ என சித்தாந்தம் பேசிக்கொண்டு இருந்ததால் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டிற்கு வரப்பிடிக்காதவனாக ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து தனது அறையில் தனியாகத்தூங்கினாலும் கண்டு கொள்ளாமல் அலைபேசியிலேயே கவனம் செலுத்திவந்தளை மாற்ற வழி தெரியாமல் வருந்தினான் ராகவன்.
“பைத்தியம் புடிச்சு அலையத்தான் போறே… அழகா வேற இருக்கே. பணக்காரக்குடும்பத்துல பொறந்திருக்கே. படிச்சிருக்கே. கல்யாணம் பண்ணி சந்தோசமான தாம்பத்திய வாழ்க்கைல ரெண்டு குழந்தைகளைப்பெத்திருக்கே. நல்லா வித விதமா சமைச்சு சாப்புட்டுப்போட்டு ஏஸில படுத்து தூங்கறத உட்டுப்போட்டு எப்பப்பாரு அதுல சொத்த, இதுல சொத்தைன்னு புலம்பிட்டு” என பேசிய தோழி மாலாவை ஒன்றும் தெரியாத வெகுளிப்பெண்ணாகப்பார்த்தாள்.
“நாஞ்செரியாப்படிக்கிலே. படிப்பு வரலே, அதனால படிக்கலே. படிச்சாத்தான் உண்ட சோறு ஜீரணமாகுமா என்ன? பக்கத்துல ஒரு துணிக்கடைல வேலை பார்க்கறேன். வேளா வேளைக்கு நல்லாத்தான் சாப்பிடறேன். என்ன மாதர ஜாலியா வாழப்பழகுவியா… எப்பப்பாரு வேற ஒலகத்துலயே வாழப்பழகியிருக்கறே…. இப்படியே கனவு வாழ்க்கைல மொதந்துட்டு போனீன்னா உன்ற வீட்டுக்காரர் வேற ஒரு பொண்ணோட வாழ ஆரம்பிச்சிடப்போறாரு” எனும் வார்த்தையைக்கேட்டதும் சகஜ நிலைக்கு வந்தவளாய்” என்னடி சொல்லறே….? அப்படியேதாச்சும் நடக்குமா?” கவலையோடு கேட்டாள் மேனகா.
“நடக்காதுன்னு நம்புவோம். நடக்காம நாமதான் பாத்துக்கோணும். இப்பெல்லாம் போன்ல வீடியோ பார்த்து பழகுன பொம்பளைங்க, ஊட்ல ஒருத்தரு கூடயும் பேச விரும்பாம தனி ரூம்ல போய் படுக்க ஆரம்பிச்சுக்கறாங்க. புருசன் வந்தானா? சாப்பிட்டானா? கொழந்தைங்க படிச்சுதா? அடுத்த நாள் என்ன பண்ணோனும்னு கூட சுயமா யோசிக்காம வீடியோவா பார்த்து காலத்தக்கடத்தராளுக. புடிச்சவங்களோட மணிக்கணக்கா போன்ல பேசறதுனால ஊட்ல இருக்கறவங்களப்புடிக்காமப்போயி பல எடத்துல டைவர்ல வந்து நிக்குதுன்னா பார்த்துக்குவே. இப்பெல்லாம் பையனூட்டுக்காரங்க நல்லா படிச்ச பொண்ணு, வேலைக்கு போயி சம்பாறிக்கிற பொண்ணு வேணும்னு கேக்கிறதில்ல. குடும்பத்துக்கேத்த பொண்ணா இருந்தா போதுங்கறாங்க. எழுதப்படிக்கத்தெரிஞ்சிருந்தாலே போதுங்கறாங்க. ரொம்பப்படிச்சவங்க குடும்பத்தோட ஒட்ட மாட்டீங்கறாங்க. அதனாலதான்” என நடை முறை வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை பலரிடம் பேசி அறிந்தவளாய் மாலா பேசிய போது மேனகா கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்குள் வந்தாள்.
திருமணமாகி ஐந்து வருடங்களில் அதிகபட்சமாக கணவன் ராகவனே சாப்பாடு போட்டுச்சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது அவன் வரவுக்காக காத்திருந்து, வந்ததும் அன்பாகப்பேசியதோடு உணவைப்பரிமாறவும் செய்தாள்.
தனது மனைவியின் இந்த திடீர் மன நிலை மாற்றம் மனதை மகிழச்செய்தது. இன்னும் கடினமாக உழைத்து சிறப்பாக வாழ வேண்டும் எனும் மனநிலைக்கு வந்தவனாய், அணையில் தேக்கி வைத்த நீர் அணை உடைந்தால் சீறிப்பாய்வது போல் இதுவரை வெளிப்படுத்த முடியாமல், அதற்கான சந்தர்ப்பம் வருமென காத்திருந்து, தற்போது அதற்கான நிலை உருவானதால் மனைவி மீது இதுவரை தேக்கி வைத்திருந்த காதலை, வெள்ளமாக மாற்றி ஓட விட்டதில் அந்த காதலெனும் வெள்ளத்தில் நன்றாக மூழ்கிக்குளித்தாள் மேனகா.