நான் சென்ற பொழுது கடவுள் தன் காலை உணவை முடித்து விட்டு ஆரஞ்சு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்.

பவ்யமாக ஒரு குட்மார்னிங் அடித்து விட்டு நான் கொண்டு போன மாடலை அங்கிருந்த மேசையில் கவனமாக வைத்து விட்டு சொன்னேன்.
“இது நான் ஆய்வகத்தில் உருவாக்கிய சூரிய குடும்பத்தின் நேரடி மாடல். நாம் செய்ய வேண்டியதெல்லாம், இதை எடுத்து விண்வெளியில் வைப்பதுதான். அது மிகப் பெரிய அளவில் தானே வளர்ந்து விடும்.”
கடவுள் சிறிது நேரம் என் மாடலை ஆய்வு செய்து விட்டு, “கங்கிராட்ஸ். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.
கடவுள் குடித்துக் கொண்டிருந்த ஆரஞ்சு ஜூஸ்சின் ஒரு துளி என் மாடலில் உள்ள ஒரு சிறிய கிரகத்தில் சிந்துவதை அப்போது கவனித்தேன்.
பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் முதல் உயிரினம் உருவானதைக் கேள்விப்பட்டபோது, அந்த சிதறல் நினைவுக்கு வந்தது.