கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 24 
 
 

  வைக்கோற் படைப்புப் பார்த்திருக்கிறீர்களா? நெல் அறுவடையாகிக் களத்தில் அடியுண்டபின் மீதமுள்ள பயிர்த் தாள்களை வெயிலில் காயச் செய்து சிறிய குன்றுபோல் படைப்பாக வேய்ந்துவிடுவார்கள். நாட்டுப்புறங்களிலும், தமிழகத்துச் சிற்றூர்களிலும் இத்தகைய படைப்புக்களைக் காணலாம். வீட்டுக் கொல்லைப்புறங்களிலும், பொதுக் களங்களிலும், சிற்றூர்களுக்கே அழகு தருவன போல் இத்தகைய வைக்கோற் குன்றுகள் தோன்றும். மஞ்சள் பொன் நிறத்துக்குச் சிறிது மங்கலாக இந்த வைக்கோலுக்கென்றே ஒரு நிறம் உண்டு.

  இவற்றை வைக்கோற் புரி’ என்றும் சில பகுதிகளில் வழங்குகிறார்கள். வைக்கோற் புரிகள் தீப்பற்றி எரிந்தாலும் சாம்பல் ஆன பின்பு சரிந்து தூளாகிச் சாய்வது இல்லை? எரிவதற்கு முன் தாம் எந்த வடிவத்தில் இருந்தனவோ அதே வடிவில் நிறம் மட்டுமே எரிந்து கருகித் தோன்றும். அவ்வாறு தோன்றும்போது உள்ளே அனல் இருப்பது வெளியில் தெரியாது. ஆனால் எதைக் கொண்டாவது தாக்கினால் பஞ்சு அமுங்குவது போல் அமுங்கித் தூளாகித் தரை மட்டத்தில் புழுதியாகக் குவிந்து விடும்.

  மரிந்த வைக்கோற் படைப்பின் இந்த நிலையைத் தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு உவமையாகச் சொல்லிக் கொள்கிறான் ஒரு தமிழ்ப் புலவன். துன்பங்கள் என்னும் தீக்கொழுந்துகள் பற்றி எரித்த பின்னும் தான் சரிந்து சாய்ந்துவிடாமல் நிற்பதை எரிந்து போன வைக்கோற் படைப்புக்கு ஒப்பிடுகிறான் புலவன். எரிந்து முடிந்த வைக்கோற் புரியை எங்கேயாவது எப்போதாவது அந்தப் புலவன் பார்த்திருக்க வேண்டும். அது நெருப்புக்கு இரையாகிக் கசிந்து வலுவிழந்த பின்னும் சரியாமல் உருவிழக்காது நிற்கும் காட்சி அவன் சிந்தனையைத் தூண்டியிருக்க வேண்டும். நினைவுகளும் தன்னம்பிக்கையும் அழிந்து, எரிந்து, மனமும் உடம்பும் வெறுங் கூடாகி என்ன பலத்தினால் நிற்கிறோமென்று தெரியாத ஏதோ ஒரு பலத்தினால் நிற்கும் அப்பாவி மனிதனுக்கு இந்த வைக்கோற் புரியின் எரிந்த நிலையை உவமை சொல்ல வேண்டும் என்று அப்போது அந்தத் தமிழ்ப் புலவன் நினைத்திருப்பான். ஆனால் தன் வாழ்விலேயே அப்படி ஒரு நிலை வருமென்று அவன் அன்று எதிர்பார்த்திருக்க முடியாது.

  உலகத்து வாழ்க்கையில் நினைத்தவர்க்கு நினைத்தபடியா எல்லாம் வருகிறது? சுகத்துக்கு ஆசைப்பட்டால் துக்கம் வருகிறது. ‘வேண்டாம்’ என்கிறவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. வேண்டுமென்று தவிப்பவனுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தால் உலகத்துக்கு உள்ளே இருக்கிற வேடிக்கைகளையெல்லாம் விட உலகமே ஒரு பெரிய வேடிக்கைதான்.

  ‘எரிந்த வைக்கோற்புரி’ உவமையை எதற்காவது கூறலா மென்று நினைத்து வைத்திருந்த புலவன் அதைத் தன் வாழ்வுக்கே கூறிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டின் கோடையில் அந்தப் புலவனுடைய ஊரில் கொடுமையாகத் தோன்றிப் பரவிய அம்மை நோயாலும், அதைப் போன்ற வேறு சில கொள்ளை நோய்களாலும் அந்தப் புலவனுடைய தாய், தந்தை இருவரும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். ஊரில் உள்ள அவனுடைய உறவினர்களிலும் பலர் இறந்து போனார்கள். மனிதர்களை மரணம் கொள்ளை அடித்தது. மனிதர்களைக் கொள்ளையடிப்பது போல் வாரிக்கொண்டு போவதனால்தான் அம்மைக்குக் கொள்ளை நோய் என்று பெயர் ஏற்பட்டது போலும் கொள்ளை நோயில் அவ்வூரும் சீரழிந்தது.

  ஊரில், கோவிலிலுள்ள சிலைகளைத் தவிர மனிதர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை அந்த நோய் நல்வினை வசமாகப் புலவன் நோயிலிருந்து பிழைத்துவிட்டான். ஆனால் பிழைத்து என்ன பயன்? தந்தை, தாய், சுற்றத்தார் எல்லோரும் மாண்டபின் ஊர் ஊராகவா இருக்கும்? சுடுகாடாகத் தோன்றியது. பொலி விழந்து போன ஊரில் தெருவுக்கு நேரே பொலிவிழக்காமல் இருந்த சிவன் கோவிலைப் பார்த்தான் புலவன். சுடலைக்குப் போய் ஆடி மகிழும் கடவுள், அங்கே போவதற்குச் சோம்பல் கொண்டு தான் இருக்குமிடத்தையே சுடலையாக்கிக் கொள்ள முயன்றது போலிருந்தது ஊர். எங்கும் அழிவு, எங்கும் அவலம். கோவிலிலிருக்கும் சிவபெருமானின் கண்பட்டுப் பட்டுத்தான் ஊர் அப்படியாகிவிட்டதோ என்று கடவுள் மேலேயே வெறுப்பு வந்தது புலவனுக்கு. அந்த ஊர்ச் சிவபெருமானுக்கு ஆபத்சகாயன் என்று பெயர். ஆனால் அவன் திருவருள் என்னவோ ஆபத்துக்குச் சகாயம் செய்யவில்லை. முன்பு கடல் நஞ்சைக் குடித்த சிவபெருமான் அவற்றை இப்போது நாட்டில் உமிழத் தொடங்கி விட்டானோ’ என்று சினம் கொண்ட புலவன் வஞ்சப் புகழ்ச்சியாக ஒரு பாட்டுப் பாடினான்.

  “தந்தைபோய்த் தாய் போய்த் தமர்போய் என் சுற்றமும் போய்
  வெந்த புரியாகி விட்டேன் – முந்தவே
  ஆழாழி நஞ்சுண்ட ஆபத் சகாயனெனும்
  பாழாவான் கண்ணேறு பட்டு.”

  துன்பம் எரித்து அழித்த பின்பும் தோற்றமழியாது தான் நிற்கும் நிலைக்கு எரிந்த வைக்கோற் படைப்பை உவமை கூறிய அழகுக்கு ஈடு ஏது? எத்தனை பொருத்தமான உவமை இது!

  – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

  Print Friendly, PDF & Email

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *