கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 397 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஞானத்திற்குத் தவணையிடலாம்; தருமத் திற்கு அப்படிச் செய்யலாகாது…’

அவர் ஒரு மகா மேதை. மகா லோபியுங்கூட. வித்துவத்திற்கு முதன்மை அளிப்பவர். அறிவை விலையாக்கிப் பொருளீட்டும் பேராசையினர். 

அறிவுப் பசியுள்வர்கள் அவரை நாடுவதுண்டு. அன்று அயலூரவன் ஒருவன் அவரிடம் பாடங்கேட்க வந்திருந்தான். வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார் மாமேதை. அப்பொழுது, மிடிமையின் பிடியில் அலைக் கழிவுற்ற பிச்சைக்காரன் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். 

‘ஐயா! கடிய பசி உயிர் போகிறதே மனம் இரங்குங்கள் உங்களுக்குக் கோடி புண்ணியம் கிட்டும்….”- குரல் கெஞ்சிற்று; உடல் தள்ளாடிற்று. 

‘பாவம், நல்லபசி….உணவு கொடுக்காவிடின் செத் தாலும்….’ அயலூரவனின் மனம் நெகிழ்ந்தது. 

‘உனக்கு அறிவின் பக்குவநிலை கைவரப் பெறவில்லை. பலவீன உணர்ச்சிகளின் விளைச்சலே இரக்கம். அஃது அறிவின் விரோதி….’ என்றார் மகாமேதை. அவருடைய குரலிலே தெறித்த அதிகாரம் அக்கூற்றிலே ஏதோ மகா தத்துவம் பொதிந்து கிடப்பதான மனமயக்கத்தை ஏற்படுத்தியது. 

‘சுவாமி! தங்கள் கூற்றினைத் தயைசெய்து சற்றே விளக்கி அருளுங்கள்….’ அயலூரவன் கேட்டான். 

‘நான் உணவளித்தால் பிச்சைக்காரன் உயிர் பிழைத்து விடுவான் என்பது உன் மனப்பிரமையாகும். பிரமையும் அறிவின் விரோதி! பசித்த வேளைக்குச் சாப்பிடுவதினாற் சாவைத் தடுக்க முடியுமென்றால், சாவு எப்படிச் சம்பவிக்கின்றது?’. 

‘சாவினைப் பற்றிய தத்துவம் நான் அறியாதது. பசித்த வேளைக்கு உணவு இடுதல் தர்மமானதல்லவா?’ 

‘சகல வேதங்களையும் கற்றுத்தேர்ந்த எனக்குத் தர்மத்தைப் பற்றிப் போதித்தல் அடாது…. நான் அவனுக்கு உணவளிக்கின்றேன் என வைத்துக் கொள். சாப்பிடும் பொழுது அவன் தொண்டை விக்கி இறந்துபோனால்?… அன்றேல், சாப்பிட்ட பின்னர் அவன் அஜீரணத்தால் இறந்துபோனால்? அவனுடைய சாவு என் அன்னத்தினாற் சம்பவித்தபடியால் பழியும் பாவமும் என்னையல்லவா வந்தடையும்? பழியும் பாவமும் சம்பாதித்தல் தர்மமானது என எந்தச் சாத்திரத்திற் கூறப்பட்டிருக்கின்றது? சாவு என்பது ஈசன் விதித்த நியதி. நான் உணவு அளித்து அவனுடைய சாவு வேளையைப் பிற்போடுவேனாகில், அந்த நிரீச்சுரச் செயல் யாரைச் சாரும்?’ என அறிவின் அகந்தை கொப்பளிக்க மாமேதை கேட்டார். 

அயலூரவன் திண்ணையிலிருந்து இறங்கினான். பிச்சைக் காரனைச் சமீபித்தான். ‘என்னுடன் சற்றுத் தூரம் வா! அயலில் யாசித்தாவது நான் உனது பசியை நீக்குகின் றேன்….’ என்று அவனை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். 

‘நீ மகா அறிவீனன்!’ என மாமேதை கத்தினார். 

‘இருக்கலாம். ஞானத்திற்குத் தவணையிடலாம்; தர்மத் திற்கு அப்படிச் செய்யலாகாது என்று மகான் ஒருவர் போதித்துள்ளதை நான் இன்னமும் மறக்கவில்லை….. எனக் கூறிய அயலூரவன் பிச்சைக்காரனை ஆதரவுடன் அணைத்தனன்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *