கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 325 
 
 

உடலுக்கும் நெஞ்சுக்கும் ஒருங்கே குளிர்ச்சியையும் மலர்ச்சியையும் கொடுக்கும் வைகறைப் போது. வைகை நதியின் கரையில் ஒரே கோலாகலக் காட்சிகள். ஆடிப்பெருக்கு நேரம், முதலில் நான்கு ஐந்து நாட்களில் கலங்கலாக ஓடிய தண்ணீர்கூட இப்போது நன்றாகத் தெளிவடைந்திருந்தது. குளிக்க வருவோரும் போவோருமாகப் படித்துறைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகையில் எல்லாச் சமயங்களிலும் அவ்வளவு வெள்ளம் வந்து காண முடியாது. எப்போது வைகையில் ஆழ நீர் ஓடுகிறதோ அப்போது, அந்த நாட்களில் மதுரைப் பெருமக்கள் அதனைப் பயன் கொள்ளாமல் விட்டுவிடுவதில்லை. இதனால் தான் அவ்வளவு கூட்டம்.

இப்படிப் புதுவெள்ளம் போய்க் கொண்டிருந்த நாட்களில் ஒன்றிலேதான் மதுரைக்குத் தற்செயலாக வந்திருந்தார் ஒப்பிலாமணிப் புலவர். ஆடிப்பெருக்கும் அதுவுமாக, வைகையில் நல்ல தண்ணீரும் ஓடும்போது வேறு எங்கேனும் குளித்துவிட அவருக்கு மனம் வரவில்லை. ‘அரை வேஷ்டியை நன்றாகத் துவைத்து, அலசி, உடற்சூடு தீர வைகையில் மூழ்கிக் குளிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு பல பலவென்று விடிய இருக்கும் நேரத்தில் வைகைக் கரைக்கு விரைந்து வந்து சேர்ந்தார் புலவர்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் ஒரு படித்துறையிலாவது சாவகாசமாக நின்று குளிப்பதற்கு இடம் கிடையாது. எல்லாத் துறைகளிலுமே அதிக நெருக்கடியாக இருந்தது. ஆடவரும் பெண்டிருமாகத் தத்தம் அவசரத்தில் விரைவாக நீராடிச் செல்லும் கருத்துடன் துறைகளிலுள்ள இடங்களைப் பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல் மக்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந் தனர். நெடுநேரம் காத்திருந்த பிறகு, பக்கத்திலிருந்த ஒரு படித்துறையில் சற்றே கூட்டம் குறைந்து காணப்பட்டது. வசதியாகக் குளிக்கலாம் என்ற அளவிற்கு அங்கே கூட்டம் குறைந்திருந்ததனைக் கண்டு ஒப்பிலாமணிப் புலவர், அந்தத் துறையில் போய் இறங்கினார்.

திருநீற்றுச் சம்புடத்தையும் ஏட்டுச்சுவடிக் கட்டையும் படிக்கு மேலே தண்ணீர் படாத ஓரிடத்தில், கண் பார்வைக்குத் தெரியும்படியாக வைத்துவிட்டு அரையில் துண்டு சகிதமாக வேஷ்டியைத் துவைப்பதற்காக நனைக்கத் தொடங்கினார் புலவர்.

முதல் நாளிரவு வெள்ளியம்பல மன்றத்தின் புழுதி படிந்த கல் தளத்தில் உறங்கியிருந்ததாலும், மீனாட்சி கோவில் திருமதிற் செம்மண் பட்டைகள் அவர் வேஷ்டியில் அங்கங்கே ‘முத்திரை வைத்து விட்டிருந்ததாலும், தண்ணீரில் நன்கு ஊறவைத்து அழுத்தித் தோய்த்து அலச வேண்டியிருந்தது. அந்த நோக்கத் துடனேதான் புலவரும் அரையில் மேல் துண்டைக் கட்டிக் கொண்டு வேஷ்டியைத் துவைத்து உலர்த்துவதற்கு எண்ணி அதை முதலில் துவைக்க ஆரம்பித்திருந்தார்.

புலவர் நான்காவது மடிப்பைத் திருப்பிப் பலமுறை அழுத்தித் துவைத்தபின் ஓய்ந்து தளர்ந்திருந்த கைகளால் அலசுவதற்காகத் தண்ணீரில் வீசிய வேஷ்டியை, நீரின் வேகம் அபகரித்து இழுத்துச் சென்றுவிட்டது. அதை எடுக்கவேண்டும் என்ற பரபரப்போடு அவர் கீழே இரண்டு படிகள் தள்ளி இறங்குவதற்குள் அது நீரில் அரை யோசனை தூரம் கடந்து போய்விட்டது. வைகையில் இழுத்துச் செல்லும் ‘ வேகத்திற்குக் குறைவா என்ன? வேறு என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் மலைத்தார் புலவர். பின்பு ஒருவழியாக மனந்தேறிச் சுவடிகள் கட்டி வைத்திருந்த வேஷ்டியை அதிக கவனமாகத் தோய்த்து உலர்த்தி நீராடிய பின் கட்டிக்கொண்டு, சொக்கலிங்கப் பெருமானைத் தரிசிக்கப் புறப்பட்டார். சுவடிகளை அவை சுற்றியிருந்த கயிற்றால் விபூதிச் சம்புடத்தோடு சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டார். மீனாட்சி கோவிலில் சொக்கநாதருக்கு முன்பு அவர் பாடிய பாட்டு என்னவென்று நினைக்கிறீர்கள்?

“அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ – இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்.”

அப்பு = கண்ணீர், தப்புதல் = துவைத்தல் – நீங்குதல், கலிங்கம் = ஆடை .

இதுதான் அவர் பாடிய பாட்டு, தாம் அடித்து அடித்துத் துவைப்பதற்காக ஆடைதம்மைப் பழி வாங்கி விட்டதாகக் கூறும் நயம் பாராட்டத்தக்கது.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *