வேத முதல்வன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 28,165 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாப் பொரு ளாகவும் நிற்பவன். அவனுக்குள் எல்லாம் அடங்கி நிற்கின்றன. அவன் எல்லாவற்றிலும் கரந்து நிறைந்து நிற்கிறான். பூலில் மணம் போலவும் எள்ளுள் எண்ணெய் போலவும் நெருப்பில் வெப்பம் போலவும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகிறான் என்று நூல்கள் கூறும். வேதங்கள் எல்லாம் அக் கடவுளைத் துதிக் கின்றன. அந்த வேதத்தை உலகத்துக்குத் தந்த முதல்வன் அவன் தான்.

அவனுடைய தத்துவத்தையும் பெருமையையும் உலகம் உணர்வது எளிதன்று. உணர்ந்தாலன்றி அவனை அணுகி அருள் பெற்று இன்பமடையும் நெறி உலகத்தில் உள்ள உயிர்களுக்குப் புலப்படாது. சூரியன் தன்னைக் காட்டித் தன் ஒளியால் உலகத்தையும் காட்டுகிறான். கடவுள் தன்னை நேரே காட்டுவதில்லை. தன் உண்மையை அறிவுடையோர் உணரும் வண்ணம் அருள் நூலைக் காட்டினான். அதைத்தான் வேதம் என்று சொல்வார்கள். அறிய வேண்டியவற்றை அறியும்படி தன்னை ஓதுவாருக்கு உதவியாக இருப்பதனால் வேதம் என்ற பெயர் அதற்கு அமைந்தது.

அவனுடைய உருவம் எது? நமக்கு ஆதாரமாக இருக் கின்ற எல்லாம் அவனுடைய உருவமே. அவன் உருவத் துக்கு அளவு எது? நாம் எவற்றை மிக மிகப் பெரிய அளவுள்ளனவாக நினைக்கிறோமோ அவைகளெல்லாம் அவனுடைய திருமேனியின் அளவை அறிய ஒருவாறு பயன்படும். இந்த நிலம் விரிந்தது; மிக மிகப் பரந்தது.

கடலும் எல்லையற்றுப் பரந்தது. ஆகாயம் பின்னும் விரிந்தது. திசைகள் மிக மிக நீண்டன. இவைகளையே கடவுளின் திருமேனிப் பகுதிகளாகக் காணலாம்; கண்டு மகிழலாம்.

இறைவன் உலகமாக இருக்கிறான். உலகமே திருமேனியாக அழகு பூத்து நிற்கும் அவனுக்கு லோகசுந்தரன் என்ற திருநாமம் அமைந்திருக்கிறது.

நாம் பிறந்து வாழ்ந்து நடந்து அடங்குவதற்கு ஆதாரமாக நிற்பது பூமி. இந்த மாநிலம் நம்மைத் தாய் போலத் தாங்குகிறது. அகழ்ந்தாலும் உதைத்தாலும் பொறுத்துத் தாங்கும் அருள் தன்மையை உடையது மாநிலம். நமக்கு இருக்கையாகவும் உணவு தரும் களஞ்சியமாகவும் நமக்கென்று பல பொருள்களைத் தன் அகத்தே பொதிந்து வைத்திருக்கும் பெட்டியாகவும் இலங்குகிறது. பூமி இல்லையாயின் நாம் இல்லை; புல் பூண்டு, பயிர் பச்சை, ஆடு மாடு, புலி சிங்கம், மனிதர் யாருமே இல்லை. உலகம் என்றாலே உயிர்க் கூட்டத்தைக் குறிக்கும் பெயராகி விட்ட தல்லவா?

இப்படி நம் கண்முன் நமக்கு ஆதாரமாக விரிந்து கிடக்கும் இந்த மாநிலமே இறைவனுடைய சேவடி தாமரை போன்ற சிவந்ததிருவடி உடையவன் இறைவன் என்று போற்றுகிறோம். அந்தத் திருவடி எங்கோ திரு வைகுந்தத்தில் திருக் கோயிலில் மாத்திரமே நிற்பது என்று கருத வேண்டாம். நாம் உணர்ந்தாலும் உணரா விட்டாலும் நம்மைத் தாங்கும் ஆதாரப் பொருள் அது தான். உலகந்தான் அப்பெருமானது திருவடி.

பூமியைச் சூழ்ந்திருப்பது கடல். கடல் இல்லையானால் நமக்கு நீர் இல்லை. உலகத்தைச் சுற்றிக் கடல் இருப்ப தனால் பூமிக்கு அடியில் நீர் ஊறுகிறது. கடல் இருப்பதால் தான் மேகங்கள் அதனிடத்தே நீரை முகந்து மழை பெய் கின்றன. கடலின் நீர் ஆழத்தால் நீல நிறமாகத் தோன்றி னும் தூய வெள்ளை நிறமுடையது. அந்த நீர் நோயை உண்டாக்காத தூய்மையை உடையது; உலகத்து அழுக் கெல்லாம் ஆற்றின் வழியாகவும் கால்வாய் வழியாகவும் தன்பால் விழுந்தாலும் தன் தூய்மை கெடாமல் இருப்பது.

கடல் ஆழமாக இருப்பதனால் அதில் சங்குகள் உண் டாகின்றன; இப்பி, சங்கு, இடம்புரி , வலம்புரி முதலிய பல வகையான சங்கங்கள் உண்டாகின்றன. சங்குக்குத் தமிழில் வளை என்று பெயர். உயிர் உள்ள சங்கு முழங்கு மாம். கடலில் மேற் பரப்பில் வந்து மேயும்போது காற்று வீசினால் சங்கில் ஒலி எழும்பும் என்றும் சொல்வதுண்டு. வளைகள் நரலும் ஓசையைக் கடற்கரையில் உள்ள நம்மால் கேட்க இயலாது. ஆனாலும் பௌவத்தில் வளைகள் நரன்று கொண்டு தான் இருக்கின்றன. கண்ணால் காணும் தாய நீரையும் காதால் கேட்கும் வளைகள் நரலும் ஒலியையும் உடையது கடல்.

மாநிலத்தைச் சுற்றிக் கிடக்கும் இந்தத் தூநீரை யுடைய பௌவத்தை, வளை நரலும் பௌவத்தை, மாநில மடந்தையின் உடையாக வருணிப்பது புலவர் வழக்கம். மாநிலம் இறைவனுடைய திருவடிகளானால் அவற்றைச் சூழும் பௌவம் அவனுடைய உடையாகத் தோன்றுவது பொருத்தம் அல்லவா! மாநிலத்தைச் சேவடியாகக் கொண்ட இறைவன் தூநீர் வளை நரல் பௌவத்தை உடுக்கையாகக் கொண்டு நிற்கிறான்.

பாதமே இவ்வளவு விரிந்ததானால் அவனுடைய உடல் வண்ணம் முழுவதும் காண்பார் யார்? பூமியி லிருந்து மேலே ஓங்கி நிற்பது விசும்பு . அதன் உயரத் தையும் பரப்பையும் அளவிடுவார் யார்? மெய்யில் தாள் சிறியது. தாளைக் காட்டிலும் திருமேனிப் பரப்பு விரிவாக இருக்கும். இங்கே, மாநிலத்தையே சேவடியாகப் படைத்த பெருமானுக்கு எவ்லாவற்றையும் தன் அகத்தே அடக்கிய ஆகாயமே திருமேனியாக விளங்குகிறது. அந்த விசும்பு எல்லாப் பூதங்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்பது . விசும்பு தன் மெய்யாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியிருக்கிறான்.

தெய்வத் திருவுருவங்களுக்கு நான்கு கைகள் இருக்கும். எட்டுக் கைகளும் பதினாறு கைகளும் அதற்கு மேற்பட்ட கைகளும் இருப்பதுண்டு. இரண்டு கைகளைப் படைத்த மக்களைக் காட்டிலும் பெருஞ்செயலும் ஈகைத்திறனும் படைத்தவன் இறைவன் என்பதைக் காட்டும் அடையாளங்கள் அவை. மாநிலத்தைச் சேவடியாகவும், தூநீர் வளை நரலும் பௌவத்தை உடுக்கையாகவும், விசும்பை மெய்யாகவும் படைத்த பிரான் எத்தனை கைகளை உடையவன்? திசைகள் எத்தனை? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு என்று கூறலாம். இறைவனுக்கும் நான்கு திருக் கரங்கள்; அந்தத் திசைகளே கரங்கள். திக்குகள் நான்கு மட்டுமா? கோணத் திசைகளாகிய வட கிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்பவற்றையும் சேர்த்தால் எட்டாகிவிடுமே! அஷ்டதிக்கு என்பது அடிப் பட்ட வழக்கமாயிற்றே! அப்படியானால் இறைவனுக்கும் கைகள் எட்டென்று தானே சொல்ல வேண்டும்? அதோடு நிறுத்திவிடக் கூடாது. மேலும் கீழுமாகிய திசைகளையும்

சேர்த்துப் பத்துத் திக்கு என்று சொல்வதும் ஒரு வழக் கம். ஆழ் கடலில் ஒருவன் மூழ்குகிறான்; அவன் எந்தத் திக்கில் பிரயாணம் செய்கிறான்? கீழே. வான விமானத்தில் ஒருவன் ஏறுகிறான். அவன் எட்டுத் திக்குகளில் செல்ல வில்லை; மேலே செல்கிறான். ஆகவே, பத்துத் திசை என்று சொல்வது இந்தக் காலத்தில் நன்றாக விளங்கும். திசை பத்து என்றால் இறைவன் கைகளும் பத்துத்தான். இன்னும் நுணுக்கமாகத் திசையாராய்ச்சியைச் செய்தால் வட கிழக்குக்கும் கிழக்குக்கும் நடுவே பல பல கோணத் திசை கள் உண்டு. அவை அத்தனையுமே இறைவன் திருக்கரங் கள் தாம். இத்தனை கைகள் என்று கணக்கிட்டுச் சொல் வதில் சங்கடம் எழும். ஆனால் திசைகள் எத்தனையோ அத்தனை கைகள் என்று சொல்லிவிட்டால் ஒரு சங்கட மும் இல்லை. இறைவன் திசைகளைக் கையாகப் பெற்று விளங்குகிறான்.

சேவடியைக் கண்டோம்; உடுக்கையைத் தரிசித் தோம்; மெய்யை உணர்ந்தோம் ; கையையும் தெரிந்து கொண்டோம். நீண்டு உயர்ந்து விரிந்து படர்ந்து நிறைந்து விளங்கும் திருக்கோலத்தை ஒருவாறு நினைக்க முடிகிறது. என்ன உன்னதமான திருவுருவம் ! கம்பீரமான காட்சி! அளவு காண இயலாத திருக்கோலம் ! மாநிலம் சேவடியாக, தூநீர் வளை நரல் பௌவம் உடுக்கையாக, விசும்பு மெய்யாக , திசை கையாக நிற்கும் பெருந் திரு மேனி அழகியது; விரிந்தது ; ஆதாரமானது.

எம் பெருமானுடைய திருவிழிகளைக் காண வேண் டாமா? இறைவன் திருவிழிகள் அவன் பிறரைப் பார்க்க மாத்திரம் அமைந்தவை அல்ல நாமும் அவன் திருவிழி களாலே தான் பார்க்கிறோம். நமக்கு முகத்தில் இரண்டு விழிகள் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த விழிகள் தாமே காணும் திறம் படைத்தவை அல்ல இறைவன் தன் திருவிழிகளை விழித்து அருள் நோக்கம் பாலிக்காவிட்டால் நாம் கண் இருந்தும் குருடர்களாகவே கலங்கி நிற்போம். பகலில் செங்கதிரோன் உதயமாகாவிட்டால் உலகமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருட்டறைக்குள்ளே விட்டு விட்டால் கண் இல்லாத குருடனுக்கும் கண்ணுள்ளவனுக் கும் வேறுபாடு இல்லை. கண் உடையவனுக்கு அந்தக் கண் பயன்படவேண்டுமானால் ஒளி வேண்டும்; அந்த ஒளியை இரவில் சந்திரனும் பகலில் சூரியனும் எப்போதும் அக் கினியும் தருகின்றன. அந்த மூன்றையும் முச்சுடர்கள் என்று சொல்வார்கள். மூன்று சுடர்களும் இல்லாவிட் டால் உலகில் யாவரும் குருடர்களே ஆவார்கள்.

இறைவனுக்கு மூன்று கண்கள் உண்டு. காண்பதற்குக் சுமையாகக் குளிர்ச்சியாக நிலவு வீசும் மதியம் ஒருகண்; வெஞ்சுடர் வீசும் கதிரவன் ஒரு கண் ; தீச்சுடரும் ஒரு கண். இந்த மூன்று கண்களும் ஒளிப் பிழம்புகள். இவற்றால் உலகம் ஒளி பெறுகிறது. இறைவன் திருக்கண்ணால் நோக்கினால் தான் உயிர்கள் விழிப்படைகின்றன என்று சொல்வது எவ்வளவு பொருத்தமான செய்தி! சூரியன் இல்லாவிட்டால் பயிர் பச்சை இல்லை; அக்கினி இல்லா விட்டால் மனிதன் பல செயல்களைச் செய்ய முடியாது. இறைவன் திருவிழிகளை மலர்த்திப் பார்ப்பதனால் உலகம் ஒளி பெறுவதோடன்றி, எழுச்சி பெறுகிறது; மலர்ச்சி பெறுகிறது; வளர்ச்சி அடைகிறது; முறுக்குப் பெறுகிறது; கனிவடைகிறது. பயிர் பச்சைகள் செழிக்கின்றன; மலர் மலர்கிறது; கொடி படர்கிறது; தாமரையும் குவளையும் சிரிக்கின்றன; நாம் தூங்கி விழிக்கிறோம். உடம்பில் ரத்தம் ஓடுகிறது; இரும்பு உருகுகிறது; நமக்கு உணவு வேகிறது. – இப்படியே மூன்று சுடர்களால் நிகழும் காரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் அல்லவா? பசுங்கதிரை யுடைய மதியமும் பிற சுடர்களும் கண்ணாக அமைய இறை வன் எழுந்தருளியிருக்கிறான் என்பதில் எத்தனை உண்மை கள் பொதிந்து கிடக்கின்றன!

இப்போது அவனுடைய திருமேனிக் காட்சியைத் திருவடியில் தொடங்கி உடையைப் பற்றி மெய்யையும் கையையும் தொட்டுத் திரு விழியளவும் சென்று தரிசித் தோம். இறைவனுடைய சந்நிதானத்தில் முதலில் திரு வடியைக் காண்பது தான் முறை. நம் தலை அப்போதுதான் வணங்கும் அகங்காரமுடையவன் அடியைக் காணமாட்டான். இறைவன் திருமுன் ஆணவம் அடங்கி நிற்க, அவனை வணங்கிப் பணிய வேண்டும். பணியுங்கால் அவன் திருவடி ஒன்று தானே தெரியும்? அதைக் கண்டால் அன்பு டன் கண்டால், பிறகு மற்ற அங்கங்களைப் பார்க்க இய லும். கடவுளைத் துதி செய்கையில் திருவடி தொடங்கித் திருமுடி வரையில் வருணிப்பது மரபு – இதைப் பாதாதி கேசம் என்று சொல்லுவார்கள். இங்கே இறைவனுடைய திருமேனியைச் சேவடி தொடங்கிக் கண்டோம் அந்தச் சேவடி, மாநிலம். நாம் நிற்கும் நிலத்தை முதலில் பார்த் துத்தானே கடலையும் விசும்பையும் திரையையும் சுடரை யும் பார்க்க வேண்டும்? மாநிலப் பரப்பைக் கண்டோம்; அதில் இறைவன் சேவடியைக் கண்டோம்; கண்டோமோ இல்லையோ காணவேண்டும். தூநீர் வளை நரல் பௌவத் தைக் கண்டோம்; அதில் இறைவன் உடுக்கையைக் கண் டோம். விசும்பைப் பார்த்தோம்; திசையைக் கண்டோம்; அவன் மெய்யையும் கையையும் கண்டோம். பசுங்கதிர் மதியத்தையும் சுடரையும் பார்த்தோம்; அவற்றில் அவன் கண்களைக் கண்டோம். மாநிலத்தைச் சேவடியாகப் பார்க் கும்போது மாநிலம் என்ற நினைவு மறந்து இறைவன் நினைவு ஊன்றுகிறது. பௌவத்தை அவன் உடுக்கை யாகப் பார்க்கும் கண்ணுடையாருக்குக் கடல் மறை கிறது; அவன் நீலப்பேராடைய தோன்றுகிறது.விசும்பை மறந்து மெய்யைப் பார்க்கவும், திசையை மறந்து கை யைப் பார்க்கவும், சுடரை மறந்து கண்ணைப் பார்க்கவும் வன்மையுடையவர்கள் எங்கும் இறைவனைப் பார்க்கும் பேரறிவாளர்கள்.

நாம் அப்படிப் பார்ப்பதில்லை. நாம் பார்க்க முடிய வில்லை என்பதனால் உண்மை மாறாதே!

இறைவன் எங்கும் நிறைந்து பயின்று நிற்கிறான். இயற்கை முழுவதும் அவன் திருவுருவம் பல பல உருவங் களாக இயலும் எல்லாவற்றிலும் அவன் உறைகிறான்; அவற்றினூடே நிறைந்து பயின்று நிற்கிறான். அவற்றுக் குள்ளே அடங்கி நிற்கிறான். இயன்ற எல்லாவற்றிலும் பயின்று நிற்கும் இந்த நிலையைச் சர்வ வியாப்பியம் என்று சொல் வார்கள். பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரம்பொருள் அவன். நமக்குத் தெரியாமல் எல்லாப் பொருள்களுக்குள்ளும் பயின்று நிற்கும் அப்பெருமான் அந்தப் பொருள்களை விடச் சிறியவன் அல்ல. அடங்கின பொருளைக் காட்டிலும் அடக்கி வைத்திருக்கும் பொருள் பெரிது என்பது இயல்பு. இங்கே இயன்ற எல்லாப் பொருள்களிலும் இறைவன் அடங்கி நிற்கிறான் என்றால், அந்தப் பொருள்கள் அவனைவிடப் பெரியவை என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? ஒரு குடத்தைக் குளத் துக்குள் போடுகிறோம். அந்தக் குடம் முழுவதும் நீர் நிரம்பி இருக்கிறது. குடத்துக்குள்ளே நீர் இருக்கிறது. ஆனால் நீர் குடத்துக்குள் இருப்பதோடு நிற்கவில்லை. அது குடத்துக்கு உள்ளே அடங்கியிருக்கிறது; ஆயினும் அந்தக் குடம் நீருக்குள் இருப்பதனால், அந்த நீர் குடத்தைத் தனக்குள்ளே அடக்கியும் இருக்கிறது குடத்துக்கு உள் ளும் புறம்பும் நீர் இருப்பதனால் குடத்துக்குள் அடங்கியும் குடத்தைத் தனக்குள் அடக்கியும் நிற்கிறது நீர் என்று சொல்லுவதில் தவறு இல்லை. இறைவனும் அப்படித்தான் இருக்கிறான். இயன்ற எல்லாவற்றிலும் பயின்று நிறைந் திருக்கிறான்; அதே சமயத்தில் எல்லாவற்றையும் தன் அகத்தே அடக்கியும் வைத்திருக்கிறான். உள்ளும் புறம்பும் நிறைந்து விளங்குகிறான். அவன் சர்வாந்தரியாமி; சர்வ வியாபகன். எதற்குள்ளும் அடங்கியவன்; எதிலும் அடங்காதவன். எல்லாவற்றுள்ளும் இருக்கிறான்; எல்லாவற்றிற் கும் அப்பாலாய் இருக்கிறான்; கடவுள்.

இப்படி, இயன்ற எல்லாவற்றினோடும் பயின்றும், எல்லாவற்றையும் அகத்து அடக்கியும் விளங்கும் இறை வனே வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளினான். வேதத்தை அவன் சொன்னான்; அந்த வேதம் அவனைத் தான் சொல் கிறது. ஆகவே வேதத்தைத் தந்த முதல்வனும் அவனே ; வேதத்திற்குப் பொருளாகிய முதல்வனும் அவன் தான்.

உலகமே தன் உருவாக அமைய, எங்கும் பயின்று எவற்றையும் தன்னுள் அடக்கிய வேத முதல்வனைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? நாம் கோயிலில் விக்கிரகமாக வைத்து வழிபடுகிறோம். அந்த உருவந்தான் நமக்குத் தெரி யும். பலபல கோலங்களில் திருமால் கோலம் ஒன்று. சக்க ரம் தரித்ததிருக்கரத்தை உடைய சக்கரபாணியாக அவனை வணங்குகிறோம். அந்தச் சக்கரம், தீதெல்லாம் அறும்படி யாக அவன் கரத்தில் விளங்குகிறது; உயிர்க் கூட்டங் களுக்கு நலிவு நேர்ந்தால் அதைப் போக்கிப் பாதுகாக் கும் படை அது; தீது அறும் பொருட்டு விளங்கும் திகிரி; அந்தத் திகிரியை உடையவனாக நாம் இறைவனைக் காண் கிறோம். சக்கரக்கையோன், தீதற விளங்கிய திகிரியோன் என்று புகழ்கிறோம்.

திகிரியைத் திருக் கரத்தில் கொண்ட திருமாலாக நாம் காணும் இப்பெருமானை அருள் பெற்ற சான்றோர் கள் எப்படிச் சொல்கிறார்கள் தெரியுமா? வேத முதல்வன் என்று சொல்லுகிறார்கள். எங்கும் நிறைந்த பரம்பொருள், எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிய முதல்வன் என்று பாராட்டுகிறார்கள். இதுமட்டுமா? அவனருளே கண்ணாகக் கண்டவர்கள் அப்பெரியார்கள்; அவனுடைய திருமேனிக் கோலத்தைக் கண்டு இன்புற்று அந்த இன்பப் பூரிப்பிலே நமக்கும் எடுத்துச் சொல்கிறார் கள். நாம் பார்க்கும் ‘தீதற விளங்கிய திகிரியோனை யே அவர்கள் மாநிலஞ் சேவடியாகப் பெற்றவன் என்றும், தூநீர் வளை நரல் பௌவமே அவன் உடுக்கையாகும் என்றும், விசும்பு மெய்யாக விரிந்த திருமேனியன் அவன் என்றும், திசை கையாக நிற்பவன் என்றும், பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக அவனுக்கு ஒளிரும் என்றும் சொல்லி, அவன் விசுவ ரூபத்தைக் காட்டுகிறார்கள். அதோடு, அவன் இயன்றவெல்லாம் பயின்றவனென்றும் புகழ்கிறார்கள்.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *