முத்துத் தாண்டவர் சீர்காழியில் இசைவேளார் குலத்தில் தோன்றியவர்.
இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் தமது தொழிலைச் செய்ய முடியாமல் எப்போதும் சீர்காழி சிவாலயம் சென்றுவிடுவார்.
அங்கு அருள் பாலிக்கும் ஈஸ்வரர் தோணியப்பருக்கு முன் நின்று தேவாரம், திருவாசகம் பாடி வந்தார். எனவே, வருவாய் இல்லாததால் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை வாங்கி உண்டு வந்தார்.
ஒரு நாள் இரவு முத்துத் தாண்டவருக்கு உணவு கிடைக்கவில்லை. அதனால் அவர் பசி மிகுதியினால் களைத்துக் கோயில் பிராகாரத்திலேயே படுத்துத் தூங்கி விட்டார்.
பூஜைகள் முடிந்தவுடன் அவரைக் கவனிக்காமல் கோயிலைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்கள்.
நள்ளிரவில் தோணியப்பரும், அம்பிகையும் வந்து இவரை எழுப்பி ஞானப் பாலன்னம் கொடுத்தனர். மேலும், ‘‘நீ தில்லைக்க்குச் சென்று அங்குள்ள இறைவனைப் பாடு. உன் உடல் நோயும் அக நோயும் நீங்கும்!’’ என்று ஆசீர்வதித்தனர்.
இறைவன் தன் முன் வந்து கூறியதை எண்ணி எண்ணி முத்துத் தாண்டவர் ஆனந்தக் கூத்தாடினார்.
மறு நாள் காலை… கோயில் கதவு திறந்தவுடன் பூஜை செய்யும் குருக்களிடம் விவரம் கூறினார். பின்னர் நீராடி நித்தியக் கடன்களை முடித்துக் கொண்டு, ‘தில்லை நடராஜரைப் பாட எனக்கு ஒன்றும் தெரியாதே!’ என்று தோணியப்பரிடம் சொல்லிவிட்டு தில்லையை அடைந்தார்.
தில்லை சிவகங்கையில் நீராடிவிட்டு திருமூலநாதரைக் கண்டு வழிபட்டார். அப்போது அங்கிருந்த பக்தர்களில் ஒருவர், ‘பூலோகக் கயிலாயம்’ என்று உரக்கச் சொன்னார். அதைக் கேட்ட இவர், ‘‘பூலோகக் கயிலாசகிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறுமுண்டோ?’’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.
இதை முத்துத் தாண்டவர் பாடியதும் இவரது உணவுக்கான படிக்காசு, சுவாமி சந்நிதியில் கிடைத்தது.முத்துத் தாண்டவர் பெரிதும் மகிழ்ந்தார். பாடும்படி செய்து, முதல் நாளிலேயே படிக்காசு அளித்த பெருமான் மீது பேரன்பு கொண்டார். அதன் பிறகு நாள்தோறும் சிதம்பரம் கோயிலுக்கு வந்து முதலில் என்ன வார்த்தை அவர் காதில் விழுகிறதோ அதையே பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடி வந்தார்.
நடராஜரைப் போற்றிப் பாடுவதையே தமது அன்றாடக் கடமையாக கொண்டு தடங்கல்களை பொருட்படுத்தாமல் பொன்னம்பலவாணரைப் போற்றிப் பாடினார். ஒரு நாள் அவர் நடராஜரைப் போற்றிப் பாடும்போதே ஜோதியான பரவொளியில் கலந்தார்.
இவ்வாறு முக்தியடைந்த முத்துத் தாண்டவர் எவ்வளவு பாட்டுகள் பாடினார் என்று தெரியவில்லை. ஆயினும் இவருடைய பாட்டுகள் சில அச்சு வடிவம் பெற்று ‘முத்துத் தாண்டவர் கீர்த்தனைகள்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளன. இவை நடனத்துக்குப் பெரிதும் பயன் படுகின்றன.
– மணிமேகலை நெடுஞ்செழியன், சிதம்பரம்-1 – மே 2006