கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 73,187 
 
 

அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம் நீக்கி நியாயத்தின் மீது நிலையாக காலூன்றிய கணங்கள். அசோகவனத்திற்கு அன்னை சீதையை அடிமைப்படுத்தி வைத்திருந்த பூமி என்கின்ற பாதகச் செயலில் இருந்து இனி நிரந்தர விடுதலை. அசுர மாதாவிற்கும் அந்தண முனியிற்கும் பிறந்த இரமபக்தனான இலங்காபுரியின் புதிய வேந்தன் அன்னையை இராமபிரானிடம் அழைத்துவரும் பணியைச் செயற்படுத்தினான். அன்னை பல்லக்கில் அழைத்து வரப்பட்டாள். ஆனந்தம். ஆனந்தம். உலகின் அனைத்து உயிர்களுக்கும் அளப்பரிய பரமானந்தம். பாரைப் பரமானந்தம் பிணைத்த இனிய கணங்கள். அது குமுழிகளா அல்லது நீருற்றா? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா என்கின்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும்.

அஞ்சனை மைந்தன் கண்களில் அருவியான ஆனந்தக் கண்ணீர். அருவியெனப் பாய்ந்த கண்ணீரில் அமிழ்ந்துபோன அவன் அவஸ்தை. அஞ்சனை மாதாமீது அவன் வைத்த அன்பு துளியாக அன்னை சீதா மீதுவைத்த அன்பு சமுத்திரமாகியது. ஜனகன் மகளைக் கண்ட அனைவருக்குமே தம் அன்னையைக் கண்டதான அகம் பொங்கும் ஆனந்தப் பரவசம். அடக்க முடியாத ஆனந்தக் கண்ணீரில் இராமஜானகியின் அழகைத் திரிசனம் பெறமுடியாத பரிதவிப்பு. அதனால் மேலிடும் அவஸ்தையின் துடிப்பு.

இராமன் அங்கே. அவன் செவிகள் எங்கோ சென்றதற்கான வினையின் விளைவு. அவமதிப்புக்களை, அவதூறுகளை அறியாதவரை ஆனந்தம். அறிந்தால் அவமானம், அவஸ்தை. அந்த அஞ்ஞானிகளின் வார்த்தைகளுக்கு ஏன் இராமன் தனது செவியில் இடம் கொடுத்தான்? செவிகளால் கேட்ட வார்த்தையைச் செவிகளால் திருப்பிவிட முடியாது. திருப்ப முடியாத வார்த்தைகள் இராமபிரானின் மனதில் முட்களாய்த் தைத்தன. நரர்களின் நரம்பில்லாத நா இறைவனையும் வதைக்கும் வலுக்கொண்டது. இராமபிரான் வெகுண்டான். துவண்டான். அசோகவனத்தில் நித்தமும் தீக்குளித்து ஆருயிரை மீண்டும் தீக்குளிக்க வைப்பதா என்று மருவினான். எரிந்த இலங்கை மீண்டும் எழுந்துவிட்டது. எரிந்த மனது? பௌத்திரம் நிருபிக்கப்பட வேண்டும். உலகத்திற்கு அவள் தூய்மைபற்றிப் புடம் போட்டுக் காட்ட வேண்டும். அன்னை அண்ணலைத் திகைப்போடு நோக்கினாள். அண்ணல் அகிலத்தை மறந்து அண்டத்தை வெறித்தான். இதயத்தின் ஊற்றான இரத்தத்தின் பிரதிநிதியான செந்நீர் வெண்ணீராக மாறி அவள் கண்களில் நீராகச் சொரிந்தது. இராமபிரான் முடிவுக்கு வந்தார். சோதனை என்பது ஒரு உடலுக்கு மட்டும் அல்ல என்பதாக எண்ணினார். இராமன் பார்க்கத் துடித்த தனது சீதையை இப்போது பார்த்தும் பார்க்க முடியாது முகத்தைத் திருப்பினான். முடிவு ஒன்று எடுத்தாகிற்று. அதன் பின்பு சுபம் என்பது அவனுக்குத் தெரியும். நரனாலும் நராயணனின் சக்தி அவனிடம் இருந்தது.

அந்த முடிவு உலகை உலுக்கும் முடிவாக இராமபிரானால் எடுத்தாகிற்று. இனி அதைச் செயற்படுத்த வேண்டியதுதான் என்பதாக அவன் எண்ணினான்.

அன்னியன் வசத்தில் வாழ்ந்ததால் தானே அக்கினி பிரவேசிப்பேன் என்றாள் ஜானகி. அவள்; மணவாளன் அவளைப் பார்த்து கையை உயர்த்தினான்.

‘நீ கற்புடையவளாய் இருந்தால்;ஈருடல் ஏகமனதாகிய எங்களின் வாழ்வு சத்தியமென்றால், இந்த உடல்களில் எந்த உடல் இந்த அகிலத்தில் எந்தத் தீயில் புகுந்தாலும், அது பௌத்திர மனதைக் கொண்டு, எழுந்த ஐயங்களை அக்கினிக்கு ஆகுதியாக்கி, தன் புனிதம் காத்து மீழும்.’ என்றான்.

அன்னை புனிதத்தின் சிகரம் என்றாலும் இரகுநாதன் தீயில் இறங்கப் போவதை எண்ணி தலையில் கதைவைத்தாள். கண்களில் நீர்வைத்தாள். மனதில் சுமை வைத்தாள். மருகி மருகி அழுது வேண்டாம் என்று கை கூப்பினாள். அன்னைக்குத் தெரியும். அவளுக்கு அதன் முடிவு புரியும். இருந்தும் மன்னவன் தீக்குளிக்க அவள் பார்த்திருக்க முடியாது தவித்தாள். கலையிளந்து கண்ணீர் உகுத்தாள்.

ஆதவகுலத்தவனால் அதைப் பொருட்படுத்த முடியவில்லை. மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பது மகேசனின் சந்தேகத்தையே தீர்த்து வைப்பதாகும் என்றது அவனது அரச தர்மம். இளையவனுக்கும் புரியவில்லை. இவர் துணைவந்த அஞ்சனை மந்தனுக்கோ, வனரத்துக்கோ எதுவும் புரியவில்லை. விபூசனன் விந்தை புரியாது திகைத்தான். சுக்ரீவன் இது என்ன கொடும் சோதனை என்று மனதில் வாடினான்.

வானம் கர்ச்சித்தது. மின்னல் ஆயிரமாயிரமாய் ஜனக மகளின் அன்னைமேல் இப்பிறப்பைக் கொடுத்து இம்மசித்தாயோ என்று ஆவேசத்தோடு பாய்ந்தது. கடல் கரைதாண்டி அக்கினிக்குச் சவால்விட வருவதாக உறுமியது. வைகுந்த வாசன் அக்கினியில் பிரவேசிப்பதா? பாற்கடல் வாசனை நரர் பரிசோதிப்பதா? நரர் பரிசோதிக்கவில்லை. அவர்களுக்கு அந்தத் துணிவு எங்கே? நரருக்குத் தமது பௌத்திரம் புரிய நராயணன் அக்கினிப் பரீட்சைக்குத் தயாரானான். வைகுந்த வாசன் அன்னைமேற் கொண்ட காதலால் மருகினான். நரரின் செய்கை புரியாது அவனும் தவித்தான். அக்கினி அவன் தாசன். இருந்தும் நரனாகப் பிறந்து நரனாக வாழ்ந்ததில் அவன் இல்லாள் வினை தெரிந்தும் அதற்குள் போகாது தடுக்க எண்ணினாள். எனினும் சோதனை நடக்க வேண்டும். நரர்களின் சந்தேகம் தணிய வேண்டும். இராஜ தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதில் தசரத மைந்தன் உறுதியாக இருந்தான்.

இராமன் இளையோனைப் பார்த்தான். இளையோன் இக்கொடுஞ் செயலுக்கும் தானே உதவ வேண்டும் என்கின்ற விதியை நொந்தவாறு, அண்ணல் வார்த்தையை மீறமுடியாத அவன் விதியை மீண்டும் நொந்தவண்ணம், ஆம்புறாத்தோழியில் இருந்து அம்பொன்றை எடுத்து, மந்திரம் சொல்லி, பூமாதா மீது ஏவினான். பூமாதேவியின் மடியில் தீபற்றியது. அது நாவை வானுயற்றி நாலாபுறமும் இரை தேடியது.

சீதாபிராட்டி முன்னே வந்தாள். தன்னை தான் சோதிப்பதே நியாயம் என்றாள். பெண்ணைச் சோதித்தாலே இந்தப் பார் திருப்தி அடையும் என்றாள். அதுவே விதியும், முறையும், பாரம்பரியமும் என்றாள்.

இராமபிரான் அவளைப் பார்த்து மீண்டும் கை உயர்த்தினான். சீதையை விலத்தி அக்கினியின் முன்பு வந்து நின்றான். அக்கினியை ஒருமுறை பார்த்தான். புதுவிதி சமைக்கிறேன் என்றுவிட்டு அவன் சிரித்தான். மானிடர்கள் என்கின்ற சொல் அவன் உதட்டில். கடவுள் மானிடனாக அவதாரம் எடுத்தால் பின் மானிடனாக வாழ்வதில் இருந்து தப்பிக்க முடியாது என்பது பரந்தாமனுக்குப் புரிந்தது. மானிட வேஷ்சம் தரித்த கடவுள் இந்த மானிடருக்குச் சம்பூரண உயர்வைக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

கோவிந்தன் கைகளைக் கூப்பினான். அக்கினியை நெருங்கி நின்றான். அவன் முன்னே நின்ற வானரங்களைப் பரிவாகப் பார்த்தான். எந்த வானரம் அந்தச் சொல்லை உகித்தது என்கின்ற நிந்தனைத் தேடல் அவனிடம் இல்லை. மக்கள் சொல் மகேசன் சொல். இராஜ தர்மம் அவன் முதற் கருமம். பாற்கடல் துயில்வோனின் பாதங்கள் பணிவோருக்கும் இப்பூவுலகில் சோதனை வரும் என்பதை அவனும் சுவீகரித்தான்.

அண்ணல் முன்னே வந்தார். அனைவரையும் கருணையுடன் பார்த்தார். தீ புகப் போவது பற்றி அவர் பதைக்கவில்லை. அன்பிற்கினிய சீதை மீது அளப்பரிய நம்பிக்கை இருந்தது. கைகளைக் கூப்பிய இராமன் மீண்டும் கூடியவர்களைப் பார்த்தார்.

‘நானும் எனது இல்லாளும் ஈருடலும் ஓருளமுமாய்க் கற்பு நெறி வழுவாது இந்தப் பூவுலகில் எங்கு சஞ்சரித்தபோதும் வாழ்ந்தது உண்மை என்றால் மட்டும் இந்த ஆவேசம் கொண்ட தீ என்னைத் தீண்டாது இருக்கட்டும். நானோ அன்றி எனது இல்லாளோ மனதில் தவறினாலும் அது என்னைப் பஸ்பமாக்க, அவள் அந்த வேதனையில் துடித்துத் துடித்து இறக்கக் கடவாள். ‘ என்று கூறிய இராமபிரான் கைகள் கூப்பியவண்ணம் அக்கினியில் இறங்கினார்.

வானரங்கள் இரஞ்சினர். தேவர்கள் இரஞ்சினர். கையிலாயநாதன் தனது இருக்கைவிட்டு எழுந்தார். நரனான நராயணனை நோக்க அவசரமாகத் தன்தலை குனிந்தார். பெரும் அனர்த்தங்கள் ஆகுமா? அண்டங்கள் அழியுமா? பிரளையங்கள் உருவாகுமா? எனப் பல விடை புரியதா வினாக்கள் விடையெறியோன் மனதை அலைக்கழித்தது. இந்தக் கணங்களை விதி என்றே கூறவேண்டும் என்று முக்கண்ணனுக்குப் புரிந்தது. அப்படி என்றால் தானும் விதிக்கு உட்பட்டவனோ என்கின்ற சந்தேகம் எழுந்தது. மீனே தனக்கு வலைபோட்டு மாட்டிக்கொள்ளும் நிலையா நரனாகும் இறைவனுக்கு? சிவன் சிந்தை கலங்கினான். சுதர்சனச்சக்கரம் எந்தியோன் சுடும் தீக்குள் நராயணனாய்ப் புகுந்தால் எதுவும் நடந்துவிடாது. நரனாய்ப் புகுவது நஞ்சுண்ட கண்டனையும் நடுநடுங்க வைத்தது. அரன் அருகே அன்னை மகாதேவி வந்தாள். அப்படி வந்த அன்னை மகேஸ்வரி என்ன கொடுமை இதுவென்று மறபுறம் கண்களைத் திருப்பிக்கொண்டாள்.

பூமாதேவியின் மடியில் உதித்த மிதுலைநகராள் பதைத்தாள். ஆருயிர் போவதாய்த் துடித்தாள். ஈருடலில் ஒர் உடல் மாண்டாலோ, அல்லது அரும்பின் முனைக்கொப்ப தீ தீண்டினாலோ மற்ற உடல் வாழாது என்று முடிவெடுத்தாள். இராமன் தீயில் புகுந்தான். அன்னை தீப்பட்டதாய்த் துடித்தாள். கண்கள் குளமாக, பார்வைக்கு அது பெரும் அணையாகப், பார்க்கும் திறன் அற்று மனிடனாய்ப் பரிதவித்து மயங்கினாள்.

நரனாலும் நராயணன் நராயணனே. அவனைத் தீ தீண்டுமா? அவனுக்கு சேவை செய்யும் அக்கினித் தேவன் துணிவு எம்மட்டும்? தாசனே எசமானை வதைப்பானா? ஆனால் தசரத மைந்தன் முன் அக்கினிக்கும் இராஜதர்மம் உண்டு. அக்கினி பேதத்தை மறந்தது, கருமத்தை வேதமாக எடுத்து, சங்கு சக்கரமும் சாமானியனும் ஒன்றே என்றது.

இருந்தும் இராமஜானகியின் பௌத்திரத்தால் அக்கினி ஆலமாய்க் குளிர, அதனுள் இராமபிரான் அமைதியாய்ப் புகுந்து புன்னகையோடு வெளியே வந்தான்.

அன்னை மூச்சை தெளிந்தாள். கண்ணுருக கைகூப்பிக் காதலால் கசிந்துருகினாள். பிறவுலகை மறந்தாள். தசரத மைந்தனின் நம்பிக்கையையும், பாசத்தையும், நேசத்தையும், காதலையும் மெச்சி தமது தாம்பத்தியத்தில் கர்வம்கொண்டாள். அண்ணல் தன் இதயத்தை மீண்டும் வென்றான் என்று அகமகிழ்ந்தாள்.

ஆனால் விதி அண்ணலை மீண்டும் ஆரண்ணியம் அனுப்பத் திட்டம் தீட்டியது. கடவுள் நரனான். விதியின் வசமானான். அதில் பாற்கடல் துயில்வோன் பாலின் விதியை மாற்றி வைத்தானா? பாலைக்கடந்த? பாற்கடலானுக்கு பரிதவிக்கும் நரர் பற்றிப் புரிந்ததா?

– செப்ரெம்பர் 28, 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *