சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 19,398 
 

புலத்தியனின் பேரனும் விஸ்ரவசுவின் மகனுமான ராவணன், சிவ பக்தியில் உயர்ந்தவனாகப் போற்றப்படுபவன். பிரம்மனின் வழிவந்த வேதநெறியாளனான ராவணன், தனது சீரிய தவத்தால் பரமேஸ்வரனை மகிழ்வித்து ஏராளமான வரங்களைப் பெற்றவன். இவனது வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சி, கயிலை மலையைப் பெயர்த்தெடுத்ததுதான்.

சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!சிவனுடைய திருவருள் பெற்று எட்டுத் திசை களையும் வென்று இலங்கையை ராவணன் ஆண்டு வந்த காலம் அது. குபேரன் ஆளும் வட திசையிலுள்ள அளகாபுரியின் மீது ஒரு முறை படையெடுத்துச் சென்றான் ராவணன். போரில் குபேரனை வென்று அவனது நவநிதிகளையும், புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

புஷ்பக விமானத்தில் ஏறித் திரும்பும்போது, சிவபெருமான் எழுந்தருளியுள்ள இமயமலையைக் கடக்க நேர்ந்தது. அங்கு காவல் நின்ற நந்திதேவர் அவனிடம், ‘‘ராவணா! பரமேஸ்வரன் கொலு வீற்றிருக்கும் இந்த இடத்தின் மீது பறந்து செல்வது நல்லதல்ல. எனவே, விலகிச் செல்!’’ என்றார்.

ராவணனுக்கு ஆத்திரம் வந்தது. கண்கள் சிவக்க நந்தி தேவரை நோக்கி, ‘‘ஏ குரங்கு முகமுடையவனே… நான் ஏன் விலகிச் செல்ல வேண்டும்? என் வழியைத்தான் இந்த மலை தடுக்கிறது. இதை வேரோடு பறித்து எறி வேன்!’’ என்று கர்ஜித்தான்.

உடனே நந்திதேவர், ‘‘ஏ மூடனே! உன் இஷ்டம் போல் நடந்துகொள். ஒன்று மட்டும் கூறுகிறேன்… குரங்கு முகமென்று என்னை இகழ்ந்தாய். உன் அரசு, குரங்குகளாலேயே அழியும்!’’ என்று சாபமிட்டார்.

ராவணன் புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி, தன் இருபது கரங்களாலும், கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான். இந்த தகாத செயலால் கயிலாயமே குலுங்கியது. தேவர்களும் பூதகணங்களும் நிலைதடுமாறி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். பரமேஸ்வரியான உமையவள் அச்சத்தால் நடுங்கி, சிவ பெருமானைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

சூழ்நிலையை உணர்ந்தார் எல்லாம் அறிந்த எம்பெருமான். ராவணனது செருக்கை அடக்க எண்ணி, தன் வலக் கால் கட்டைவிரலை கயிலை மீது ஊன்றினார் சிவபெருமான். அளவற்ற யானைகளின் பலம் நிறைந்த அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாத ராவணனின் விழிகள் பிதுங்கின. தோள்கள் நெரிபட்டன. அழுது அரற்றிய அவன் முன் வாகீசர் எனும் முனிவர் தோன்றினார். ‘‘அழுது பயனில்லை ராவணா. சிவனின் கோபம் தணிய சாமகீதம் பாடு!’’ என்று கூறி மறைந்தார்.

தவறை உணர்ந்த ராவணன், தன் பத்துத் தலைகளில் ஒன்றைப் பறித்துக் குடமாகவும், கையன்றைத் தண்டாகவும், நரம்புகளைத் தந்தியாகவும் அமைத்து ஒரு வீணை தயாரித்து சிவபெருமானின் உள்ளம் கனியுமாறு அதை மீட்டி சாமகானம் பாடினான் (ராவணன் காம்போதி ராகத்தில் சாமவேதம் பாட அவனது கானம் கேட்டு இறைவனும் மகிழ்ந்து, தனது உருத்திரவீணையை இசைத்துப் பாடினாராம்!).

அந்த இனிய இசை எங்கும் பரவியது. தேவர்கள் தங்களை இழந்தனர். சிவபெருமான் இசையில் நெகிழ்ந்து, தன் கால் கட்டைவிரலை எடுத்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ராவணன் மலையைக் கீழே வைத்துவிட்டு, இசையை முடித்துக் கொண்டான்.

சிவபெருமான் அவனுக்கு அருள் புரியும் வகையில் சந்திரகாசம் எனும் வாளையும், முப்பத்துமுக்கோடி கால ஆயுளையும் அளித்தார். எல்லாவற்றையும் விட, தமக்கு இணையாக அவனுக்கு ஈஸ்வரன் என்ற பட்டத்தையும் அளித்தார். (ஈஸ்வரன் பட்டம் பெற்ற மற்றொருவர் சண்டீசுவரர் எனும் சண்டிகேஸ்வரர்.)

எத்தனையோ பேர் பாடினாலும் இறைவனுக்கு ராவணன் பாடிய சாமகானமே பிடித்தமானது. இதை நினைவுகூரும் வகையில்தான், கோயில்களில் பெருந் திருவிழாவில் மலை போன்றதொரு வாகனத்தில் இறைவனை இருத்தி, திருவீதி உலா காண்பது வழக்கமானது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பிராகாரத் தில் ராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்கும் காட்சியையும், அதன் மீது சோமாஸ்கந்தர் சந்நிதி அமைந்துள்ள மண்டபத்தையும் காணலாம். இது ‘நெல்லைக் கயிலாயம்’ என்று போற்றப்படுகிறது.

இதேபோல் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயப் பிராகாரத்தில் கட்டுமலை ஒன்று அமைக்கப் பெற்று, அதன் மீது சோமாஸ்கந்தரின் திருமேனி நிறுவப்பட்டுள்ளது. ராவணன் தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த மலை மீது ஏறிச் செல்ல, குறுகலான படிகள் உள்ளன. இதை ‘மத்திய கயிலாயம்’ என்பர்.

சென்னை அரண்மனைக்காரத் தெருவிலுள்ள ஸ்ரீகச்சாலீஸ்வரர் ஆலய வாயிலில் நுழைந்ததும் தரிசிக்கத் தக்க வகையில் ராவணேஸ்வர கயிலாயப் பர்வதக் காட்சி பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர காஞ்சிபுரத்தில் உள்ள மதங்கேசர், அமரேசர், கயிலாயநாதர் கோயில்களிலும், மதுரை கம்பத்தடி மண்டபத்திலும், எல்லோரா கயிலாயநாதர் கோயிலிலும் ராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயல்வது, இறைவன் தன் வலக் கால் கட்டைவிரலை ஊன்றுவது, ராவணன் சாமவேதம் இசைத்து அருள்பெற்றது ஆகிய காட்சிகளைச் சிற்ப வடிவில் கண்டு இன்புறலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *