கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 72,400 
 
 

இருநூறு வருடங்களுக்கு முன்

மதுரை மாவட்டம் காட்டுப் புத்தூர் குளம்., அது ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தை தள்ளி, ஊருக்கு வெளியே இரண்டு கிலோ தூரத்தில் ஒரு ராமர் கோயில் சந்நிதி. மிக சாந்த சொருபீயாக , பத்து அடி ராமன் சிலை மண்ணால் ஆனது. அதனால், ராமருக்கு திருமஞ்சனம் எண்ணும் நீராபிஷேகம் கிடையாது. வெறும் பூ அலங்காரம் மட்டுமே. ராமன் அருளால், ஊர் செழித்து இருக்கிறது , சக்தி வாய்ந்த இறைவன் என ஊர் மக்கள் பூரணமாக நம்பியதால். பூஜை புனஸ்காரம் எல்லாம் நல்லபடி நடந்தது. வறண்ட குளம், வறண்ட ஏரி என்றில்லாமால், மழையும் குறைவில்லாமல் பொழிந்தது. ஊர் சுபிஷமாக இருந்தது..

இப்போது : நிகழ்காலம்

காட்டுப் புத்தூர் குள ஊருக்கு, மூன்று கிலோமீட்டர் தொலைவில், கட்டிகொண்டிருக்கும் பிரம்மாண்டமான அரசு ஆஸ்பத்திரிக்காக, ராமர் கோயில் இருந்த இடத்தில், அரசு குடியிருப்பு வரப்போகிராதாம். அரசு ஆணை. அதனால், கோயிலை இடித்தே ஆகவேண்டும். அதனால், கோயில் இருந்த நிலத்தை அரசு கையகப் படுத்தி, அதற்கு பதிலாக, ஊருக்குள்ளேயே, ஒரு நல்ல இடத்தை, அரசே கோயிலுக்கு கொடுத்து விட்டது. பேரூராட்சி செலவில், கோயிலும் கட்டிக் கொடுத்து விட்டது. ராமன் சிலையை பெயர்த்து , புதுக் கோயிலில் அமர்த்த வேண்டும். அது மட்டுமே பாக்கி. ஊர் மக்கள் மிக்க ஆவலுடன், அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ராமனை தங்கள் ஊரிலேயே வைத்துக் கொண்டாடலாம் தினமும் இனி. !!

ராமனை புதுக் கோயிலுக்கு குடி பெயர்க்க நாள் குறித்தாகி விட்டது. மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு, இரவு எட்டு மணிக்குள், புதுக் கோயிலில் இறக்கி விட்டு, அடுத்த நாள், காலை, பிரதிஷ்டை செய்வது என முடிவு.

அந்த நாளும் வந்து விட்டது. மாலை மணி ஆறு முப்பது. . பக்தர்கள், பத்து அடி மண் ராமரை பத்திரமாக பெயர்த்து, பெரிய வண்டியில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். ஊர் மக்கள், பக்கத்து ஊர் மக்கள் என ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் திரண்டு விட்டது. வான வேடிக்கை, மேள தாளம், மக்களின் உற்சாகத்திற்கு கேட்கவே வேண்டாம். “ராம! ராம! ஹர! ஹரே!” என்னும் ராம கோஷம் விண்ணைப் பிளந்தது.

பாதி வழி வருகையில்,. மழை பொழியத்துவங்கியது. பாதிக் கூட்டம், கலைந்தது. ஆனால், மீதி ஊர் மக்கள், இன்னும் உற்சாகத்துடன் “:ஜெய ஜெய ராம் “ என்று கோஷமிட்டுக்கொண்டே, ராமன் அனுமன் பின்னால் நடந்தனர்.

இன்னும் கொஞ்ச தூரம் செல்கையில், மழை வலுத்தது. இடி இடித்தது. வானம் பொத்துக் கொண்டது போல@ . கொஞ்சம் கொஞ்சமாக, மக்கள், ஊர்வலத்திலிருந்து ஒதுங்க துவங்கினர். ஆயிரம் பேரில் ஆரம்பித்த கூட்டம், இப்போது ஐம்பதாக குறைந்தனர்.

இன்னும் பலத்த இடி , மின்னலுடன் மழை ! ஐம்பது ஐந்தானது. ராமனை தள்ளிக் கொண்டும் வந்தவர், ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி வைத்து விட்டு, மழை விடும் வரை கொஞ்சம் தள்ளி காத்து நின்றிருந்தனர். ஆனால், கோயில் குருக்கள், அவர் ராமனை விட்டு ஒதுங்க முடியுமா? அவர் ராமனை ஒட்டியே நின்று கொண்டிருந்தார். சுற்றி இருள். திடீரென, ஒரு மின்னல். சட்டென்று, குருக்கள் முன் நின்றிருந்த ராமனின் பின் தலை முடிக்கு கீழே பளீரென்று ஒளி விட்டது போல தோன்றியது. குருக்களால் நம்ப முடியவில்லை. பிரமை என்று விட்டு விட்டார். சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு மின்னல். இப்போது ஊன்றி பார்த்தார். நம்பவே முடியவில்லை. இப்போது, ராமனின் அதே இடம் மீண்டும் பளிச்சிட்டது போல தோன்றியது. இது என்ன சமத்காரம் ! இது என்ன மாயை ? ராமனின் லீலா வினோதம் ? தன் பிரமையை யாரிடமும் சொல்ல வில்லை. யாரிடமாவது சொல்லலாமா ? இது உண்மையில் பிரமையாக இருந்தால் ? கோயிலுக்கு போய் பார்த்துக் கொள்ளலாம்.

அரை மணி நேர அடைமழைக்குப் பிறகு, மழை ஒருமாதிரி ஓய்ந்தது. மீண்டும், ஊர்வலம், ராமர் சிலையுடன், ஒரு சில பக்தர்கள் சூழ .புதுக் கோயிலுக்கு வந்து ராமனை அரை குறை இருட்டில், (மழையினால் மின் வெட்டு) பீடத்தில் ஏற்றி விட்டு, அவரவர் தங்கள் மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டனர். நாளைக் காலை, ராமனின் ப்ரிதிஷ்டை மற்றும் மற்ற பூஜைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமே? குருக்கள் மட்டும் கோயிலிலேயே அமர்ந்து விட்டார். அவரது மனதில் ஒரே எண்ணம் தான். இறைவன் தலை இருளில் பளிச்சிட காரணம் என்ன? சென்று பார்த்து விடலாமா? ராமன் சிலை அருகில் சென்றார். கை விளக்கை எடுத்து, ராமன் சிலை கழுத்தின் பின் புறம் தேடினார். ஒரு இடத்தில், பளிச் தெரிந்தது. கையால் அங்கே சுரண்டினார். பளிச் இன்னும் கொஞ்சம் பெரிதானானது. இன்னும் சுரண்ட சுரண்ட, மண் உதிர்ந்து, அங்கே தங்கம் மஞ்சள் நிறத்தில் பிரகாசித்தது. வேகமாக சுரண்ட, கழுத்து , மார்பு பகுதிகளில் தங்கம் மெதுவாக எட்டிப் பார்த்தது. குருக்களுக்கு புரிந்து விட்டது. பத்து அடி ராமன் சிலை தங்கத்தால் ஆனது. திருடர் பயம் காரணமாக, எதிரி நாட்டு கொள்ளையர்களிடமிருந்து ராமனை காக்க, மிகுந்த வருடங்களுக்கு முன்பு, தங்க விக்கிரகத்திற்கு, மண் பூசி, வைத்து இருக்கின்றனர். மழை காரணமாக, இன்று, மண் விலகி, உள்ளே இருந்த தங்கம் வெளிப்பட்டது. “

(நன்றி: பென் பிரபு அவர்களின் தியானம் பற்றிய ஹிந்தி உரையிலிருந்து)

***

கதையை சொல்லி முடித்தான் என் நண்பன் விஷ்வா. சிரித்துக் கொண்டே என்னைக் கேட்டான் “ இப்போ சொல்லு! ஏன் இது வரையில் யார் கண்ணுக்கும் தெரியாத தங்கம் இப்போ, தெரிந்தது ?”

எனக்கு தெரிந்ததை நான் செய்தேன்! விழித்தேன். அது தான் எனக்கு கை வந்த கலையாயிற்றே ! “ தெரியலையே?”

நண்பன் சொன்னான் “ ஏன்னா, சுந்தர், இது வரைக்கும் மக்கள் இறைவனை வெளிலே தேடிக் கொண்டிருந்தாங்க ! மண்ணு தான் தெரிந்தது ! இப்போ உள்ளே தேடினார் குருக்கள். ! தங்கம் தெரிந்தது. எங்கே இருக்கோ, அங்கே தேடினார், கிடைத்தது ! இப்போ தெரிஞ்சுக்கோ, இறைவனை, அது ராமனோ, , சிவனோ, ஏசுவோ, இல்லே அல்லாவோ, வெளிலே தேடாதே, கோயில்லே தேடாதே, உன் மனசிலே தேடு ! உண்மையாக தேடு ! அவரை பார்க்கலாம் ! அவர் கிடைப்பார். ! இறைவன் மந்திர்லே(கோயில்லே) இருக்காரோ இல்லேயோ, நிச்சயமாக நம்ம மன் கே அந்தர் ( மனத்தின் உள்ளே) இருக்கார். கோயில்னா, கோ ( இறைவன்) இல்லுன்னா, உள்ளே ! இறைவன் உள்ளே இருக்கிரான் ( மனதின் உள்ளே ) என்று கூட அர்த்தம் கொள்ளலாம்.”

எனக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்! “சரி, ஏன் இப்படி நம்ம கண்ணுக்கு தெரியாம மறைந்சுக்கணும்? அதுவும் மனசுக்குள்ளே ? சரிப்பட்டு வரலையே விஷ்வா ?“

விஷ்வா சிரித்தான் . “ நீ கேக்கறது ரொம்ப சரி, முன்னே, இறைவன் எல்லார் நடுவிலேயும் தான் இருந்தார். ஆனால், யுகம் மாற, யுகம் மாற, மனிதர்களின் குணங்களும் மாற ஆரம்பித்து விட்டது. மண் , பெண், பொன் இதிலே ஆசை. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற பேராசை, அதானால், பொறாமை, குரோதம், வருத்தம், இறைவனை “ எனக்கு இன்னும் கொடு, இன்னும் கொடு “ அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. பார்த்தார் இறைவன், இந்த கேடு கெட்ட மாந்தர்கள் கிட்டேருந்து எங்க தப்பிக்கலாம்? பேசாம, இமய மலைலே போய் ஒளிஞ்சிக்கிடலாமா? அவரது நண்பர் சொன்னார் “ அது முடியாது கடவுளே! இன்னிக்கு, மக்கள், எவரெஸ்ட், கஞ்சன்ஜுங் எல்லா இடத்துக்கும் ஹெலி காப்டர்லே வருவாங்க ! உன்னை தொல்லைப் படுத்துவாங்க !

இறைவன் யோசிச்சார் “ அப்படின்னா, கடலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிக்கிடலாமா?. நண்பர் சிரித்தார் ! “ இப்போ, புதுசு புதுசா கடலுக்கு அடியில் போற கப்பல் மூலமா அங்கேயும் வந்து உன்னை அரிப்பாங்க! அப்ப என்ன பண்ணுவீங்க ?”

ஓஹோ ! அப்படின்னா சரி, குகைக்குள்ளே போய் ஒழிஞ்சிக்கிறேன்!“ நண்பர் சிரித்தார் “ அதுவும் முடியாதே ! இப்போ ஜனங்க போகாத இடமே இல்லே!” இறைவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மதி கெட்ட மாந்தர்களை தவிர்க்க என்ன வழி ?

அதுக்கு அவர் பிரெண்ட் சொன்னார் “ “ இறைவா ! பேசாம மனுஷங்க மனசுக்குள்ளே போய் உக்காந்துக்கோ ! ஜனங்க சந்தோஷத்தையும், நிம்மதியையும் , உன்னையும் வெளிலே தான் தேடராங்களே தவிர, தங்களுக்குள்ளே தேடரதில்லை. அதுதான் உனக்கு ஒளிந்து கொள்ள சரியான இடம்” . இறைவனுக்கும் அதுதான் சரியான இடமாக பட்டது. பட்டென்று, மனிதனின் மனதிற்குள் மறைந்து விட்டார். இப்போ தெரிஞ்சுதா சுந்தர், ஏன் இறைவனை மனதுக்குள்ளே தேடனும்னுட்டு ?” விஷ்வா முறுவலித்தான் .

எனக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. சின்ன பசங்ககிட்டேயிருந்து மிட்டாயை மறைக்கணும்னா, அவங்க புத்தக அலமாரியில், பாட புத்தகத்துக்கு நடுவில் மறைச்சு வெக்கிறா மாதிரி ! அங்கே தானே தேட மாட்டாங்க ! உண்மையில், இறைவன் நமது மனதில் தான் குடியிருக்கிறான். அவனை வெளியே தேடும் நாம், ஏன் நமக்கு உள்ளே தேட மறுக்கிறோம் ?

அவனை நமக்கு உள்ளே மீண்டும் தேடுவோம், தியானத்தின் மூலமாக, அவன் கிடைக்கும் வரை ! (நன்றி: பென் பிரபு அவர்களின் தியானம் பற்றிய ஹிந்தி உரையிலிருந்து)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *