காவியம் கண்ட மாவிலித் தேவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 30,265 
 
 

KaviyamKanda-pic ஆசிரியர் குறிப்பு: ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. அழகிய ஈழமணித் திருநாட்டின் மத்திய பாகத்திலிருந்து ஆறுகள் நானாபக்கமும் பாய்கின்றன. இந்த ஆறுகளிற் பெரியதும் பெருமை மிக்கதும் மகாவலி நதிதான்.

மாவலி என்றதும் கிழக்கு மாகாணமும்- குறிப்பாக அந்நதி சங்கமமாகும் கொட்டியாபுரக் குடாவும், நதியின் சங்கமத்தில் ஆற்றிடை மேடாய் அமைந்த, மூதூர்ப் பகுதியும் ஞாபகத்திற்கு வருதல் இயல்பு. மூதூர்ப் பகுதி மக்களின் வாழ்வும் வளமுமே அந்நதியேதான்!

மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகி கீழ்க்கரையை நோக்கி ஓடிவரும் இந்நதியைச் சிங்கள மக்கள் மஹா வெலி’ என்று அழைக்கிறார்கள். ‘வெலி’ என்றாற் சிங்கள மொழியில் மணல் என்று அர்த்தம், தான் ஓடி, வளைந்து திரும்பும் இடங்களில் எல்லாம் வெண்மணலைப் பரப்பி வைப்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனாற் தமிழ் மக்கள் இந்நதியை மாவலி என்றே அழைக்கிறார்கள்.

தமக்கு அருமையான எல்லாவற்றையும் பெண்ணாக – தாயாகக் கற்பிப்பது தமிழரது மரபு. பூமித்தாய், கங்காதேவி, ஆகாசவாணி, மலைக்கன்னி – இப்படி எத்தனையோ சொல்லலாம்.

வாழி அவன்றன் வளநாடு
மவாய்ப் புரக்குந் தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி

என்று காவேரியை ‘மகவாய்ப் புரக்குந் தாயாகக்’ கண்டார் இளங்கோவடிகள், சிலப்பதிகார ஆசிரியர் செப்பியபடியே, நாங்களுய் மாவலித் தாய் என்றே சொல்கிறோம்.

ஆனாற் சிலப்பதிகார ஆசிரியரைப்போல நாங்களும் எங்கள் தாயைப் பாடியிருக்கிறோமா? தமிழ்க் கவிகளில் மாவலித்தேவி வளைந்து தெளிந்து ஓடுகிறாளா? சமீபத்தில், தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்கள் இருவர், தலைக்காவேரி என்ற அதன் உற்பத்தித் தாளத்திலிருந்து சங்கமிக்கும் இடம்வரை, பிரயாணஞ் செய்து ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற தலைப்பில் ஒரு வசன நூல் எழுதியுள்ளார்களாம் என்று நான் அறிகிறேன். மாவலித் தேவிக்கும் அப்படி ஏதாவது நூல் உண்டா?

“ஏன் இல்லை” எப்போதோ நான் எழுதி விட்டேனே. கங்காதேவியின் உற்பத்தியையும், ஓட்டத்தையும் பற்றி எழுதியதை நீ படிக்காதது என் குற்றமா? என்கிறார் திருக்கோணா சல வைபவத்தார். அவர் சொல்லும் அழகான கதையைப் படிப்போம். ஒன்று, அவர் சொல்லிய புராணக் கதைக்கு அல்ல அதன் நடைக்குச் சிறிது மெருகூட்டியிருக்கிறேன். நீங்கள் படிப்பதற்காக அந்தக் கதை…

***

தன்னை வாமபாகத்தில் வைத்தபடி, ‘அர்த்த நாரியாக இருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே நித்த நித்தம் தன்னை ஏமாற்றி வரும் ஈஸ்வர லீலையை உமாதேவியாற் பொறுக்கவே முடியவில்லை.

சக்தியின் உள்ளத்திற் கனன்று. அங்கயற் கண்வழி உமிழும் பொறாமைத்தீயில், கைலையங்கிரியின் வெண்பனி உருகி, யுகாந்த காலப் பிரளயமே ஏற்பட்டு விடாமற் சிவனாரது கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்புத்தான் உலகைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆயின் எத்தனை காலத்திற்கு?

கடைசியாய் உலக நாயகி துணிந்தே விட்டாள்; ‘இன்றைக்கு இரண்டிலொன்று பார்த்து விடுவ தென்று’.

அவளது மன ஓட்டங்களை அறிந்த சிவனாருக்குத் ‘திக்’ கென்றது. சக்தியின் சீற்றத்தை அறிந்தவர் அவர். தானே திருவிளையாடல் புரிந்த நான் மாடக்கூடல் என்று பார்க்காது, அந்நகரைப் பஸ்மீகரமாக்கிவிட்ட கண்ணகி அவதாரம் அவள், ‘துர்க்கை இன்று என்னதான் செய்யப் போகிறாளோ? என்று எண்ணிக்கொண்டே, கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பைச் சிந்திய வண்ணம் சக்தியைப் பார்த்தார்.

அந்தச் சிரிப்பில் மீண்டும் தன்னை இழந்து சீற்றந் தணிந்த சக்திதேவி “சுவாமி தங்கள் சடையில் ஏதோ சப்தம் கேட்கிறதே” என்று குழைந்து கொண்டு கேட்டாள்.

KaviyamKanda-pic2‘சாகஸாஸ்திரத்தைப் பிரயோகித்துத் தன்னை மடக்கப் பார்க்கிறாள்’ எனத் தெளிந்து கொண்ட கங்கை வேணியன், “ஒன்றுமில்லையே” என்று, உமையின் பேச்சிற் பித்தனாய் மயங்கிய பாவனையில் நெளிந்தார்.

“என்ன ஒன்றுமில்லையா?”

பார்வதியின் உறுமலிற் பனிமாலி மயப் பொருப்பே அதிர்ந்தது. அவள், அங்கயற் கண்கள் உமிழும் பக்கங்கிற் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளே எரிந்து விடுவாரோ எனத் தேவகணங்கள் தவித்தன.

உமையின் சீற்றத்தைக் கண்ட கங்காதேவி அந்தக் கணத்திலேயே தன்னைப் புல் நுனிப் பனித் துளியளவாய்ச் சுருக்கிக் கொண்டு. சிவபிரானின் கற்றைச் சடைக்குள் ஒளிந்து கொண்டாள்.

கணங்கள் மௌனத்திற் கரைகின்றன!

“நான் பார்க்கத்தான் வேண்டும்” என்று மோன நாடகத் திரையைக் களைந் தெறிந்து, ஆக்ரோஷத்துடன், தந்தத்திற் கடைந்த தன்ன தன் வலக்கரத்தைக் கற்றைச் சடையை நோக்கி உயர்த்தினாள் உமாதேவி.

அனர்த்தம் விளைவதைத் தடுக்க எண்ணிய அம்பலவாணர், சக்தி தேவியின் உயர்ந்த கரத்தைத் தம் இடக் கையாற் பிடித்து, வலக் கரத்தைத் தம் சடையில் வைத்து பனி முத்தாய் ஒளித்திருந்த கங்காதேவியைத் தம் சுட்டுவிரல் நகத்தால் நிமிண்டியெடுத்துத் தெறித்தார்.

அந்தத் தெறிப்பிற் கங்காதேவி பல காதங்களுக்கப்பாற் தெற்கே சமுத்திரத்தில் விழுந்தாள்.

கனலுமிழ்ந்த மீனாட்சியின் கண்களில் வெற்றியின் போதை நடமிட்டது.

***

வானுயர அயேயெழுப்பிக் கரையை நோக்கி நெட்டித் தள்ளி, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் மணற்றிட்டில் மோதி உடைக்கும் மஹாசமுத்திரத்தில் விழுத்த கங்காதேவி, கருநீல நீரிற் கலந்து தன் சுயத்தை இழந்து விடாமல், தாமரை இலை நீர் முத்தாய், அத்தனை கொந்தளிப்புகட் கிடையிலும் தனித்து நின்று கைலைநாதனை நோக்கித் தவமியற்றினாள்.

“ஹே, கைவேலாசா! உனது கற்றைச் சடை முடியில் வீற்றிருக்கப் பேறுபெற்ற நான், உள்ளுற தெறித்து எறியப்பட்டு இம் மஹா சமுத்திரத்திற் கிடந்து உமல் என்ன தவறிழைத்தேன்? உமையிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாத அத்தனை பலஹீனனா நீ?”.

கங்காதேவியின் ஓலம், கைவையங்கிரியிலே தோடுடைய செவிகளில் விழுந்தது.

ஆயினும் அச் செவிகட்குடையவன் அர்த்தநாரி! மீண்டும் கங்காதேவியைத் தன் சடையிலே வைத்துக்கொள்ள அவனது அர்த்தபாகம் சம்மதிக்குமா?

சிந்தித்துத் தன்னுள் மறுகிய உமையொரு பாகன், கங்காதேவியைத் தன் பாதபங்கயங்சுள் பதிந்த சமத்த கூடபர்வதத்திற்கு ஏகுமாறு அருளினான்.

தவப்பலிதத்தில், மஹாசமுத்திரத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைத்து விட்டதை உணர்ந்த கங்கா தேவி, நன்றிப் பெருக்கோடு பாதபங்கயத்தை வலம் வந்தாள்.

அப்படி வலம் வருகையில், பெருமானின் கற்றைச் சடையிலே வீற்றிருந்த அற்றை நாள் நினைவுகள், பெருமையும் இன்பமும் பயப்பதால் அவள் மனதிலே குமிழியிட்டன.

நினைவுக் குமிழிகளின் சேர்க்கையில் ‘இப்போது அவர் பாதங்களை மட்டும் தரிசிக்கும் பேறு தானா எனக்கு அருளப்பட்டிருக்கிறது?’ என்ற எண்ணம் வெறுப்பும் வேதனையுமாய்ப் பொங்கிற்று.

வேதனைப் பொங்கலிற் கங்காதேவி மலையுச்சியிலிருந்து வடக்கே நோக்கினாள்.

அவள் நோக்கில், அதோ கைலை! ஆம் தென்கைலை! திருக்கோணமலை!

கங்காதேவிக்கு மகிழ்ச்சி; ஆனந்தம். பரவசம்…

அடுத்த கணம் ஆத்திரம். கோபம். வன்மம்.

அவளுள்ளே உணர்ச்சிகள் மோதிக் கொந்தளிக்கின்றன.

அவ்வுணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கைலை நாதனின் சடாமுடியில் இதோ ஏறிக் குந்திக் கொள்கிறேன் பார்வதி என்னை என்ன தான் செய்து விடுவாள் பார்க்கலாம் என்ற ஆக்ரோஷத்தோடு மலைமுகட்டிலிருந்து அதல பாதாளத்திற் குதித்துக் கல்லிலே கலீரென மோதிச் சுளுக்கி நிமிர்ந்து, எதிர்ப்படுவன எல்லாவற்றையுமே நெட்டித் தள்ளும் ‘மாவலி’ யளாய்த் தலை தெறிக்கும் வேகத்தில் ஓடத் தொடங்கினாள்.

மாவலி கங்கா ஓடத் தொடங்கினாள்.

***

ஆனால் இக்கதையைக் கிழக்கு மாகாண மறுமலர்ச்சி இலக்கியத்தின் பிதாமகரான சுவாமி விபுலானந்தர் ஏற்கவில்லைப் போலும்! திருக்கோணமலை இந்துக் கல்லூரியின் ஆசிரியராக இருந்த மயில்வாகன னாருக்கு இக்கதை தெரியாமல் இருக்க நியாயமும் இல்லை, அப்படியிருந்தும் அவர் பாடுகிறார்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த
மாயவற்கு
மூவடிமண் ஈந்தளித்து மூவாப்பு
கழ்படைத்த
மாவலியின் பேரால் வழங்கு மணி
நதி

அவர் தாயார் பொன்னிறமாக இருந்தும் சுவாமி விபுலானந்தர் கரிய திருமேனியர். இளமையிலே தன் தாயார், தன்னை வேறு யாரிடமிருந்தும் வாங்கி வளர்த்தார்களோ என அவர் நினைத்ததுண்டாம். அப்படி இளமையிற் கவன்ற அடிகளாருக்குத் தம் திருமேனியின் கருமையில் ஒரு பற்று வயது வந்ததன் பின்னர் ஏற்பட்டிருக்கலாம். அப்பற்று தம்மைப்போலக் கரிய திருமேனியரான திருமாலிடமும் ஏற்பட்டிருக்கலாம்!

காத்தற் கடவுளான மாயவற்கு மூவடிமண் ஈந்த பெருமை மாவலிச் சக்கரவர்த்திக்கு உண்டு. (மலையாளத்தில் மாவலி மன்னனுக்கு இன்றைக்கும் ‘நடப்பு’ உண்டு) அவர் பெயராற் தான் ‘மாவலி’ என்று ஈழநாட்டின் பெருநதி அழைக்கப்படுகின்றது என்கிறார் அடிகளார். காத்தற் கடவுளோடு சம்பந்தமுடைய பெயர் நதிக்குப் பொருத்தமாக இருக்கும் என்பது அவர் எண்ணம் போலும்!

ஆனாலும் அவரும் சிலப்பதிகார ஆசிரியரைப் போல நதியைத் தாய் என்றேதான் பாடுகின்றார். தான் பிறந்த மணி நாட்டின் பெருநதிக்கு ஆண்மகனின் பேரைச் சூட்டினாலும் கங்கை அவருக்கும் தாயேதான்! கங்கையில் விடுத்த ஓலை என்ற பாடலில்

மாற்றுயர்ந்த பொன்மலைமேல்
வைத்த வெள்ளிக் கோல்போல்
ஏற்றியல் வோன் பொற்சடையை
எய்திநின்ற வானதியே
ஏற்றியல்வோன் பொற்சடைவிட்
டிங்கு வந்து மக்கள் பசி
ஆற்ற உணவளிக்கும்
அன்னாய் நினைத்தொழுதேன்.

என்றே பாடுகிறார்.

ஏற்றியல்வோன் பொற்சடைவிட்டிங்கு வந்தவள் – ஆம் இங்கு? வந்தவள்-மாவலித்தேவி தானே. அவளைத்தான் இப்படிப் பாடியிருக்கிறார் போலும்!

இவ்வளவு தானா?
மாணிக்க மள்ளிப் பிச்சை
கொடுத்திடும்
மாவலிகங்கை நாடெங்கள் நாடே

எனப் பள்ளுப் பிரபந்தம் பாடிய புலவன் பாடியதையும் யாம் அறிவோம். அதற்கும் மேலாக மாவலித்தேவி தமிழ்க் கவிதை களிற் தவழ்கிறாளா? எனக் கேட்கிறீர்கள்.

சற்றுப் பொறுங்கள். அதோ காற்றில் மிதந்து வரும் அந்தக் கவிதைக்குக் காது கொடுங்கள்!

பகல் முழுவதும் தன் வயலிலே மாடாய் உழைத்து, அலுத்துக் களைத்து வந்த கொட்டியாபுரத்து, உழவன் ஒருவன், தான் பொக்கிஷமாகக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கும் பழைய புத்தகம் ஒன்றை எடுத்துப் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் பாடுவதைக் கேட்போமா?

பன்றியாம் மாயன் பணிதாளினை
தேட
அன்று பிரமன் அன்னமாய் முடிதேட
நின்ற நெடுஞ்சுடரே நீலமிடற்றோனே
தென்றுலாந்தென் கரசைத் தேவே
அடிபோற்றி

விரிசடைக் கடவுளுக்குப் போற்றி இசைக்கும் இந்தப் பாடல் எந்தப்புராணத்திலுள்ளது? அந்தப் பாடலில் வரும் ‘தென்றுலாம் தென்கரசை’ என்ற திருப்பதி எங்கே இருக்கிறது? அதற்கும் மாவலி நதிக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்தப் பாடலைப் பாடிய புலவன் யார்? என்றெல்லாம் கேட் கிறீர்களா?

மன்னிக்கவேண்டும்! இந்தப் பாடல் எந்தப் புராணத்திலுள்ள தென்பது எனக்குத் தெரியும். அப்பாடலில் வரும் தென்றலாம் தென் கரசையும் அறிவேன். ஆனால் அப்பாடலைப் பாடிய புலவன் யாரென எனக்குத் தெரியாது. எவர்க்குந் தெரியாது.

ஆனால் இப்பாடல் உள்ள ‘புராணம்’ திருக்கோணமலைச் சைவ சந்தானப்புலவர் ஒருவராற் பாடப்பட்டது’ என்கிறார் தமிழறிஞர் மா.பீதாம்பரன் அவர்கள். பாடிய புலவன் தன்னை ஈசானச் சிவச்சாரியரின் சீடன் என்கிறான் தன் நூலில் அவன் சொல்கிறான்:

அண்டர் பிரான் நடமாடும் தில்லை
மணிமன்ற மதனில் அகலாதெங்கும்
விண்ட சிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள் விளக்கும் விளக்கமாகி
தொண்டறியா நாயேனுக் கருள்
புரிந்து கிளை முழுதும் தொழும்பு பூண்ட
எண்டகு சீரீசானச் சிவன் மலர்த்தாள்
மறவாதென்னி தயந்தானே.

அப்புலவன் யாராகவாவது இருக்கட்டும். அவனோடு சேர்ந்து சென்றால் மாவலியின் அழகைக் காட்டுவான், அதன் பெருமையைக் கூறுவான். ஆனால் அந்தப்பொல்லாத புலவன், தமிழ் முனிவன் அகத்தி யனையும் நம்மோடு கூட்டிக் கொண்டே வருவான். அவனைத் தடுக்க நாம் யார்?

அப்புலவன் நமக்குக் கதை சொல்லிக்கொண்டே வருகின்றான்.

***

கைலையங்கிரியிலே சிவபிரானுக்குக் கல்யாணம் நடக்கிறது. திருக்கல்யாணத்தைக் காணத் தேவர் களும் முனிவர்களும் கைலையிற் கூடுகிறார்கள். இதனால் வடக்குத் தாழ்ந்து தெற்கு உயர்ந்து உலகமே சம நிலை கெட்டுத் தவிக்கின்றது. தேவர்கள் பயந்து சிவபிரானிடம் முறையிடுகிறார்கள் சிவபிரான் அகத்திய முனிவனைத் தென்னாடு செல்லும்படி பணிக்கிறார். கைலாய நாதனுடைய கல்யாணக் கோலத்தைக் காணத் தனக்குக் கொடுத்து வைக்க வில்லையே என்று அகத்தியன் கவல்கிறான். அவன் கவலையை யுணர்ந்த சிவபிரான்

‘பெண்ணமுதனையாள் செங்கை
பிடித்தவக் கோலத்தோடும்
திண்ண மாய் வருவோம்.—-?’

என அகத்தியனுக்கு உறுதியளித்து அவனைத் தெற்கே அனுப்பி வைக்கின்றார்.

தெற்கே வந்த அகத்தியன் பொதிய மலையிற் சிலகாலம் தங்குகிறான். பின் பல சிவத்தலங்களையும் சந்திக்க விழைகிறான். அந்த ஆசையினால் ஆழியைக் கடந்து, கோணை நாயகரைத் தரிசிக்க இலங்கைக்கு வருகிறான். கைலையங்கிரியிலே திருமணக் கோலம் நிகழ்கையில், தென்கைலை யாம் திருக்கோணமலையிலும் அக்கொண்டாட்டம் உண்டுமே! என மறுகி திருக்கோணமலைக்குச் செல்லாது கழனி மலைக்குச் சென்று சிவபிரானை வழிபடுகின்றான். அப்போதுதான் மாவலிகங்கையைக் காண்கிறான், அம்மாவலி கங்கையானது நாளமைந்த பூங்கருங்குழற் பாகர் நண்ணி மீள வந்துயர் சமனையை வலங்கொண்டு மேவி வாளை சென்றுகள் மாவலி கங்கை நீர் வந்து காளகண்டன் தங்கிரியடி விளங்குதல் கண்டு,

அகத்தியன் மாவலிக் கரை வழியே நடக்கிறான். திருக்கரசைப் புராணம் மாவலி கங்கையை மேலும் பாடுகின்றது.

கங்கையின் அழகில் மயங்கி அகத்திய முனிவர் தன் தண்டு முதலானவைகளை ஓரிடத்தில் வைத்து விட்டுக் கங்கையில் இறங்கி நீராடுகிறார். ஓர் அசரீரி அப்போது கேட்கிறது.

இம்மாவலி கங்கைக்கு நிகரான தீர்த்தம் எங்குமே யில்லை. இத் தீர்த்தத்தில் மறையவர் ஆடினால் அவர்கள் நான்முகனோடு கலப்பர். இறையவர் ஆடினால் மறுமையிலும் அரசர்களாகவே இருப்பர். வணிகராடினாற் குபேரராவர். சூத்திரர் ஆடினால் முதற் குலத்தவராய் விடுவர். மங்கையராடினாற் பாவமெலாம் நீங்கி மறுமையில் ஆண்மையைப் பெறுவர். முனிவராடினாற் தேவர்களாவார்கள்.பசுக்கள் பறவைகள் ஆடில் மறுபிறவியில் அவையெல்லாம் மானிடராய்ப் பிறக்கும்.

இப்படியாகக் கரசைப் புராணத்தின் கங்கைச் சருக்கம் மாவலி கங்கையின் புகழைப் பாடிக்கொண்டே போகிறது.

***

தான் தீர்த்தமாடிய குளிர் புனற் கங்கைக் கரைக்கு அருகாமையில் அகத்தியன் சிவலிங்கத்தைத் தாபித்தான். அவ்விடமே கரசை என்றும், அகத்தியத்தாபனம் என்றும் வழங்கப்படுகின்றது. இத்தலம் மாவலிக்கரையில் மூதூரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் இருக்கின்றது?

இதுவும் புராணந்தானா? புதிதாக ஏதும் மாவலியைப் பற்றி இல்லையா என்று கேட்கிறீர்களா?

மூதூரில் வாழ்ந்த முஸ்லீம் புலவர் ஒருவர் ‘ கங்கைக் காவியம்’ என்று ஒரு காவியமே பாடியிருக்கின்றார். கங்காதேவி வளைந்து திரும்பும் இடங்களிற் கொட்டிப் பரப்பியிருக்கும் புதுமணல் மேடுகளில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்து மகிழச் செல்வது மூதூர் மக்களுக்கு ஆகிவந்த பழக்கங்களில் ஒன்று, பூம்புகாரின் இந்திர விழாத் தொடர்போ ! அப்படி ஓர் தடவை மணற் ‘தெத்தி’க்குச் சென்ற புலவர்,

சீராறு மாவலிகங்கை வியப்பும்
‘தெத்தி’ களமைத்திடும் விஸ்தார
விதமும்
சீரான காவியம் நாவாலிசைக்க
சித்தனே என் நாவிற் சத்தியருள்
வாயே

என்ற காப்போடு அவரது கங்கைக் காவியம் நாற்பது கண்ணிகளிற் தொடர்கிறது.

***

1964ம் ஆண்டு ஆவணித் திங்கட் கடைசி வாரத்தில் மூதூரிலே நடைபெற்ற பிரமாண்டமான தமிழ் விழாவின் கவியரங்கிலே கங்காதேவி, ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களான, நாவற்குழியூர் நடராஜன், அண்ணல், நவாலியூர் சு.சொக்கநாதன், சக்தி பாலையா, இ.நாகராசன், (காலஞ் சென்ற) கற்கையாளன் ஆகிய கவிஞர்களது நாவிலே நடமிட்டு ஓடினாள். உற்பத்தி, அருவி, சேர்க்கை, ஆறு, சங்கமம் என்ற நிலைகளில் மாவலித் தேவியின் ஓட்டத்தை முழுமையான காவியமாக அக்கவிஞர்கள் பாடினார்கள். ‘கங்கா தீரம்’ என்ற அக்கவிதைகள் நூலுருவில் வெளிவர இருக்கின்றன.

ஆம், ஜெர்மானியப் புலவன் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் என்ற நோபல் பரிசு பெற்ற நாவலில் வரும் கோவிந்தனுக்கு, ஆறு எவ்வளவோ ரகஸ்யங்களைச் சொல்கின்றது. ஆறுதான் அவனது குரு!

மாவலித் தேவியும் மூதூர்ப் பகுதி மக்கட்கு எத்தனையோ கதைகளை நித்த நித்தம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அவளது கதையைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டேயிருக்கும் நாங்கள், அவளிடம் கேட்ட கதைகளை உங்கட்கும் சொல்லியிருக்கிறோம். சொல்லிக் கொண்டே யிருப்போம்.

– அஞ்சலி மாத சஞ்சிகை – டிசம்பர் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *