கர்த்தரின் கருணை

0
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 29,735 
 

மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி.

ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில் மயங்கித் திகட்டாத இன்பத்துடன் தொடங்கிய வாழ்வு கசந்தவுடன், கணவன் ஜோசப் சுரேஷ், இன்னொரு பெண்ணின்மேல் மையல் கொண்டு ஓடிவிட்டான். இரண்டு வயது ஜான் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை பண்ணியிருப்பாள். அவனுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.

கல் உடைத்து சலித்து ஐந்து கிலோ வரை கொடுத்து, கிடைக்கும் கூலிப் பணம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாகிவிடுகிறது. பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் முதுகு ஓடிய வேலை செய்வாள். கூடுதலாக கிடைக்கும் பணத்தில் தேவையானவற்றை வாங்கும் போது நிஜார், சட்டை ஜானுக்குத் தவறாமல் வாங்கிவிடுவாள். ‘அம்மா உனக்கு ஒண்ணுமே வாங்கலியே’ என்று கேட்டால், ‘நான் நன்றாக அனுபவித்துவிட்டேன். அப்பறம் வாங்கிக்கலாம்’ என்று கூறுவாள்.

அவளுக்கு ஜோஸப்பின் நினைவு வந்தது. பண்டிகை நாட்களில் மேரி அலங்கரித்து அவன் முன் வந்து நின்றால் தன்னையே மறந்து விடுவான். இயற்கையிலேயே அழகு. மேலும் மெருகு சேர்த்தால் கேட்க வேண்டுமா? ஜான் பிறந்தவுடன் உடல் பெருத்துவிட்டது. கணவனின் அன்பும் குறைந்தது.

மகனிடம் கொள்ளை ஆசை வைத்திருந்தான். விளையாடும் பொருட்களை வாங்கிக் கொடுத்து, கூடவே அவனும் களிப்பூட்டுவான். முட்டிகள் கரையக் கரைய உப்பு மூட்டை தூக்கி ஓடும்போது ஜான் சலங்கை மணிபோல் குலுங்கிச் சிரிப்பதைப் பார்த்து மகிழ்வான். விதவிதமான புது உடைகள் போட்டுப் பார்த்து ரசிப்பான். எப்போதும் மகனை கொஞ்சுவதைப் பார்த்து, கொஞ்சம் பொறாமைகூட வந்தது மேரிக்கு. தன்னை அசட்டை செய்கிறானோ என்று நினைத்தாள்.

எல்லாமே மாறியது. கொஞ்ச நாட்களாக நேரத்திற்கு வீடு திரும்பவில்லை ஜோசப். பிறகு இரவானவுடன் வருவதில்லை. அப்புறம் வீட்டிற்கு வருவதையே நிறுத்தி விட்டான். சிலநாட்களில், வேறு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதாக முதலில் தகவல் வந்தது. பின் அவளுடன் ஊரைவிட்டு ஓடிப் போய்விட்டான் என்ற சேதி கேள்விப்பட்டவுடன் அதிர்ந்து விட்டாள். பாவம் மேரி! கணவனேதான் எல்லாமும் என்று திடமாக நினைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தாள். எத்தனை அன்பாக இருந்தான், எல்லாம் பொய்யா? மகனிடம் உயிரையே வைத்திருந்தானே? வெறும் வேஷம்தானா? ‘இனிக் குடும்பம் நடத்தமுடியாதே, கர்த்தரே!’ என்று நினைத்து மருகினாள்.

தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுக் கொஞ்ச நாட்களை சமாளித்தாள். இனி விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வந்தபோது மனதைத் திடப்படுத்திக் கொண்டு செயலில் இறங்கினாள். விடாமுயற்சியுடன் அலைந்து, கற்கள் உடைத்துப் பொடி பண்ணும் ஒரு தொழிற்சாலையில் தினக்கூலி கிடைக்கும் வேலையைத் தேடிக்கொண்டாள். மகனை நல்லபடியாக கவனித்துக் கொள்வதற்கு கர்த்தர்தான் வழிகாட்டியுள்ளார் என்று துதித்தாள்.

ஐந்து வருடங்களில் உழைத்து உடம்பு ஓடாகிவிட்டது. கல் உடைக்கும் போது வரும் பொடி மூச்சுக்காற்றில் கலந்து நெஞ்சை அடைத்தது. சில சமயம் மூச்சுவிடக் கஷ்டமாக இருக்கும். ‘நம்பினோரைக் கைவிடமாட்டார் கர்த்தர்’ என்று குறிக்கோளுடன் வாழ்ந்தாள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவருகிறது. காலை வெகுசீக்கிரம் தொழிற்சாலைக்குப் போய், அந்திசாயத் திரும்பி வந்து, மறுநாளைக்குத் தேவையான உணவைத் தயாரித்து வைத்துவிட்டுப் படுக்கையில் விழும்போது ‘அப்பாடா’ என்றிருக்கும். பக்கத்தில் உறங்கும் மகனை அணைத்துக் கொண்டு ‘கர்த்தரே! காத்து அருள்வீர்’ என்று கண்களை மூடித் தியானம் செய்தபடி உறங்கிப் போனாள்.

அசந்து தூங்கிக்கொண்டிருக்கையில், யாரோ தன்னைத் தூக்கி உட்கார வைத்து நெஞ்சைத் தடவி கொடுத்தபடி, ‘சீக்கிரமே குணமாகி சுகமாக வாழ்வாய்’ என்று கூறியது போல் உணர்ந்தாள். தூக்கம் கலைந்து விட்டது. சட்டென்று மேரி எழுந்துவிட்டாள். கண்டதுகனவு தானா!

மறுநாள் காலை எழுந்தவுடன் உடம்பு மிகவும் தெம்பாக இருப்பது போல் தோன்றியது. வேலைக்கும் போகவில்லை. ஜானை அழைத்துக் கொண்டு தேவாலயத்திற்குப் போய் பாதிரியார் வழங்கிய பரமபிதாவின் பொன்மொழிகளைக் கேட்டு உள்ளம் குளிர்ந்து, மண்டியிட்டு வணங்கி விட்டுத் திரும்புகையில், பெரியவர் ஒருவர் ‘நீங்கள்தான் மேரியா?’ என்று விசாரித்தார். ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“பெற்ற மகனுக்காக உடலை வருத்திக் கடுமையாக உழைக்கிறீர் என்று தலைமைப் பாதிரியார் மிகவும் பாராட்டினார். தங்களைப் போன்றவர்தான் எங்கள் அநாதை குழந்தைகள் காப்பகத்திற்கு ஏற்றவர் என்று பலத்த சிபாரிசு செய்தார். பொறுப்பு மிகுந்த ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறோம் எங்கள் காப்பகத்திற்கு இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டபோது ஒரு கணம் ஸ்தம்பித்தது நின்று விட்டாள்.

‘கர்த்தரே! உங்கள் கருணையேதான். எள்ளளவும் சந்தேகமில்லை’ என்று உள்ளம் உருக நினைத்தபடி “ஆகட்டும் ஐயா” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

– காமிதி (டிசம்பர் 2003)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *