ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,341 
 

முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து ‘திருமலை முருகன் மணங்கமழ் மாலை’ எனும் நூறு பாடல் களைப் பாடியவர்.

ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!1இவரை வணங்கி வாழ்த்துப் பெற வருவோர், பொன்னையும் பொருளையும் இவர் காலடியில் கொட்டி விட்டுப் போவார்கள். ஆனால், அவற்றை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விடுவார் ஆதவர். ஆதவரின் உறவினர்களுக்கு இது தெரிந்தது. ‘என்ன அக்கிரமம்! உதவாக்கரை என்று ஆதவனை ஒதுக்கி வைத்திருந்தோம். இன்று, அவன் ஒரு துறவி ஆனதுடன், தம்மிடம் சேரும் செல்வத்தை யார் யாருக்கெல்லாமோ வாரிக் கொடுக்கிறானே… விடக்கூடாது. நாம் போய் அள்ள வேண்டும்!’ என்று தீர்மானித்து, ஆதவரிடம் வந்து சூழ்ந்தார்கள்.

அவர்களது தொல்லை தாங்காத ஆதவர் மனம் அதிர்ந்தார். ‘இனி, நாம் இங்கு இருக்கக் கூடாது!’ என்று முடிவெடுத்தவர், ஒரு நாள் இரவு ஊரை விட்டே வெளியேறினார்.

நல்லவர்களுக்கு என்றும், எங்கும் வரவேற்பு இருக்கும். ஆதவருக்கும் அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு!

‘இவர் சொல்வது பலிக்கிறது. இவரிடம் ஆசி பெற்றால்; காசும் பணமும் கொட்டும்!’ என்ற எண்ணத்தில் மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்தது. ஆதவர் யோசித்தார். ‘இனி, ஒரு நாள் தங்கிய ஊரில் மறு நாள் தங்கக் கூடாது. எவர் கூப்பிட்டாலும் அவர்களது வீட்டுக் குச் சாப்பிடப் போகக் கூடாது!’ என்று முடிவெடுத்தார். அப்போது (தென்காசிக்கு அருகில் உள்ள) சுரண்டையில், பாடல் சுவையறிந்த பக்திமான்கள் பலர் இருந்தனர். எனவே, அந்த ஊருக்கு மட்டும் அடிக்கடி போய் வந்தார் ஆதவர். அங்கும் ஒரு நாளுக்கு மேல் தங்க மாட்டார்.

அங்கு, மந்திர வித்தைகளில் தேர்ந்த மந்திரவாதி ஒருவனும் இருந்தான். அவனது கொடுஞ்செயல் களைக் கண்டு அஞ்சி, ஊரில் எவரும் அவனது வீட்டுப் பக்கம் கூடப் போவது கிடையாது.

ஒரு நாள் மந்திரவாதி, கடுமையான மந்திர சாதனையில் ஈடுபட்டிருந்தான். உச்சி வேளை. சுரண்டையின் வீதியில் நடந்து கொண்டிருந்த ஆதவர், வெயிலின் கொடுமை தாளாது எதிரில் தெரிந்த குடிசைக்குள் நுழைந்தார். அது, மந்திரவாதியின் குடிசை என்பது அவருக்குத் தெரியாது. குடிசைக்குள் பலகை ஒன்று தென்பட, ‘முருகா!’ என்றபடி அதில் அமர்ந்தார். மந்திரவாதி பதைபதைத்தான். ”அடேய், யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்ட பலகையில் உட்கார்ந்திருக்கிறாயே… பாவி!” என்று அலறினான்.

ஆதவர் பலகையில் இருந்து பரபரப்பாக எழுந்தார். ”ஐயா, வெயிலின் கொடுமை தாங்காமல் நுழைந்து விட்டேன். மன்னியுங்கள்!” என்றார்.

மந்திரவாதி குதித்தான். ”மன்னிப்பதா? நானா? முட்டாள்! மந்திரப் பலகை மேல் உட்கார்ந்த நீ, இன்றே இறக்கப் போகிறாய்… போ வெளியே!” என்று ஆதவரைப் பிடித்து வெளியில் தள்ளினான்.

வீதியில் வந்து விழுந்த ஆதவர், ”வாழ வைக்கும் மந்திரங்களை இப்படி அழிவுக்குப் பயன்படுத்து கிறானே!” என்றபடி எழுந்து நடக்க ஆரம்பித்தார். கோயில் குளத்தில் தாகம் தீர தண்ணீர் அருந்தியவர், கோயில் வாசலில் வந்து அமர்ந்தார். மாலை வேளையில் கோயிலுக்கு வந்தவர்கள், ஆதவர் மூலம் நடந்ததை அறிந்து திடுக்கிட்டனர்.

”அவன் கொடூரன் ஆயிற்றே. நீங்கள் அங்கு போகலாமா? அவன் சொல்வது பலிக்குமே!” என்று ஆளாளுக்கு வார்த்தைகளை வீசினர்.

ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!2ஆதவர் மெள்ள வாய் திறந்தார்: ”இறப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. உங்களில் எவரா வது ஒருவர் எனது உடலை எரித்து விடுங்கள். யாருக்கும் தெரியக் கூடாது!” என்றார். இதைக் கேட்டு ஊராரின் முகங்கள் வாடிப் போயின.

ஆதவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்: ”வருந்தாதீர்கள்! இறைவனின் ஆணையை நம்மால் மீற முடியுமா? ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று சைவத் திருமுறைகள் முழங்குகின்றனவே! நாம், அதன்படி நடந்தோமா என்ன? கொஞ்ச நேரம் அவனை நினைத்தோம். அதுவும் ஏதாவது பலனை எண்ணிச் செய்தோம். மற்ற நேரம் எல்லாம் கூலிக்குத்தானே மாரடித்தோம். வாழ் வியல் சுகங்களை விரும்பிய அளவுக்கு வள்ளி மணாளனை விரும்பினோமா? ஆறுமுகனை நினையுங்கள்; அல்லல்கள் விலகும்!” என்றவர் எழுந்து நடந்தார்.

அந்தி சாயும் நேரம். ஊர்க் கோடியில் உள்ள மயானத்தை அடைந்தார் ஆதவர். அங்கிருந்த செடிகளின் இளந்தளிர்களைப் பறித்துத் தரையில் பரப்பி, அதன் மீது அமர்ந்தார். தொடர்ந்து, ”ஓம் சரவணபவாய நம:” என்று உருவேற்றினார்.

இருள் சூழ ஆரம்பித்தது. இரவு மணி பன்னிரண்டு. திடீரென்று ஒளி வட்டம் ஒன்று சுழன்று வந்தது. அதன் நடுவில் இருந்து வெளிப்பட்ட அழகு வேல் ஒன்று துள்ளிக் குதித்துக் கூத்தாடியது. அருகில் தோகை மயில் ஒன்றும் நடனம் புரிந்தது. ”முருகா… என்னைக் காக்க வேலும் மயிலும் வந்த னவா?” என கண்ணீர் மல்க வணங்கினார் ஆதவர்.

அதே நேரம் பனைமரம் போல ஒரு பேய், காடு அதிரக் கூவியபடி நெருங்கியது. அதன் கையில் ஒரு தண்டு; விகாரத் தோற்றம். கண்களை மூடிக் கொண்ட ஆதவர், ‘முருகா… முருகா!’ எனக் கூவினார்.

மறுகணம் பேயின் மேல் மோதியது வேல். இரு துண்டு களாகிக் கீழே விழுந்தது பேய். அந்தத் துண்டங்களை ஓடி வந்து விழுங்கியது மயில். தொடர்ந்து இன்னும் பல பேய்களும் ஆரவாரத்துடன் ஆதவரை கொல்ல பாய்ந்தன. ஆனால், அவற்றையும் அழித்தது வீர வேல்! சற்று நேரத்தில் சேவல் ஒன்று ‘கொக்கரக்கோ’ என்று கூவியது. வேலும் மயிலும் உடனே அங்கிருந்து மறைந்தன. ஆதவன் உதித்தான்.

ஆதவருக்கு உடலெல்லாம் வியர்த்தது. ‘முருகா!’ என்று ஆகாயத்தை நோக்கி வணங்கியவர், மயானத்தை விட்டு வெளியேறினார். சுரண்டையூரில் இருக்கும் அனுமந்தப் பொய்கையில் நீராடினார். காலை வழிபாட்டை முடித்து ஊருக்குள் நுழைந் தவர், எதிர்ப்பட்ட வீட்டுத் திண்ணை ஒன்றில் ஏறி உட்கார்ந்தார். வீதியில் சென்றவர்கள் பேசியது காதில் விழுந்தது.

”அறிவில்லாத மந்திரவாதி. ஆதவரை எதிர்க்க லாமா? அவர், சும்மாவா சுடுகாட்டுக்குப் போனார்! அங்கு போய் ஏதோ செய்திருக்கிறார். அதுதான் மந்திரவாதியை அழித்து விட்டது!”

இதைக் கேட்டு ஆதவர் நடுங்கினார். ”அடடா… மற்றவர்களை அழிக்கும் பாவத்தை நான் மனதால் கூட நினைத்தது இல்லையே! அடியேனைக் காக்க ஆறுமுகன் செய்த லீலையல்லவா இது!” என்று வாய் விட்டுச் சொன்னவர், திண்ணையில் இருந்து எழுந்தார். ‘ஓம்! ஓம்!’ என ஒலித்தது கோயில் மணி. மெய் சிலிர்த்தது ஆதவருக்கு.

முருகனை தொழுதபடி கோயிலுக்குள் புகுந்தார். ”வள்ளி மணாளா, மந்திரவாதியின் ஆன்மாவுக்கு அமைதியைக் கொடு!” என வேண்டினார். பிறகு எவரும் அறியாமல் சுரண்டையில் இருந்து வெளியேறினார் ஆதவர்.

‘இனி எங்கும் ஒரு நாள்கூட தங்கக் கூடாது. காலையில் ஓரிடம்; மதியம் ஓரிடம்; இரவு ஓரிடம்’ எனத் தீர்மானித்தார். அதன்படி காலையில் தென்காசி, நண்பகலில் சங்கரநாராயணர் கோயில், மாலையில் கரிவலம்வந்தநல்லூர் என்று பயணப்பட்டார். அன்று இரவு கோயிலில் புகுந்து குமரவேளை வழிபட்டார். இரவு மணி பத்தானது. பக்கத்து சத்திரத்தில் போய்ப் படுத்தார். பசி காதை அடைத்தது. அப்போது, ”யார் ஐயா அது? சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் இருக்கிறது. வேண்டுமா?” என்றபடி கையில் தட்டுடன் வந்தாள் ஒரு பெண்மணி.

பார்த்தார் ஆதவர். ”அம்மா, தாங்கள் யார்? என் அன்னை வள்ளி நாயகியா?” எனக் கேட்டார்.

”சரிதான்… பொங்கல் கொடுப்பவர்கள் எல்லாம் உமக்கு வள்ளி நாயகியாகத் தோன்றுமா? கோயிலில் உங்களைப் பார்த்தேன். கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. கொண்டு வந்தேன்” என்றபடி கையில் இருந்தவற்றை ஆதவரிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றாள். வயிறாரச் சாப்பிட்ட ஆதவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.

வேலும் மயிலும் துணைசெய்ய வேதனை போம்
ஆலும் பசிவந்தால் அன்னை- பாலுளாள்
என்றும் குறையில்லை ஏத்துமினோ தொண்டீர்!
பொன்னும் இருள் பிறவிபோம் – என்று

படபடத்துப் பாடினார் ஆதவர். இப்படியே அவர் போன இடங்களில் எல்லாம், யார் யார் மூலமாகவோ அன்னம் உதவினான் ஆறுமுகன். ஆதவரும் சென்ற இடமெல்லாம் அவனின் புகழைப் பாடினார்.

”இறைவன் திருவருள் நம்மிடம் என்றும் இருக் கிறது. வாழ்நாளை வீணாக்காதீர்கள். பரமனை நம்புங்கள்! வேலுண்டு வினை இல்லை! மயிலுண்டு பயமில்லை!” என்று விரிவுரைகள் சொல்லி, தனது அனுபவத்தையும் விவரித்து மக்களை நல்வழிப் படுத்தினார்.

தனது திருவடிகளிலேயே பக்தி செலுத்திய ஆதவரை, ஒரு விசாக புண்ணிய திருநாளன்று தன் னுடன் சேர்த்துக் கொண்டான் வடிவேலன்.

– ஏப்ரல் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *